Advertisement

அத்தியாயம் 12
இடதுபுறம் கை, கால்கள் நெஞ்சோரம் எல்லாம் சுளீரென்று நரப்புகள் இழுப்பது போன்ற வலி, உடலெல்லாம் வியர்த்து வர, கண்கள் சொருகுவது போலிருந்தது முத்துக்குமாருக்கு. 
முழுதாய் மயங்கும் முன், தன்னால் சமாளிக்க முடியாது என்றறியவுமே பிள்ளைகளின் எண்ணிற்கு அழைத்தார், ஆனால் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. அடுத்ததாக கார்த்திக்கின் எண்ணிற்கு அழைத்து விட்டார். 
அப்போது தான் தன் வீட்டிற்கு வந்த கார்த்திக் மாமாவிடமிருந்து அழைப்பு வர, பேசுவதா வேண்டாமா? முதலில் ஜனனியிடம் தான் பேச வேண்டும் என்ற யோசனையுடனே ஏற்றான். அவரோ முடியவில்லை, அவசரம் என்றதுமே மற்ற அனைத்தையும் மறந்து சட்டென கார் எடுத்து, அவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று விட்டான். 
ஜனனி ஊண் உறக்கமின்றி ஓய்ந்திருப்பதைக் காணத் தாங்கவில்லை ரோகிணிக்கு. இரண்டு தினங்களில் சென்னை கிளம்புகிறாய் தானே, வா ஷாப்பிங்க செல்வோம் என விடாப்பிடியாக வெளியில் அழைத்து வந்திருந்தாள். வேணியும் அவர்கள் தொழில் இடத்திலிருக்க, முத்துக்குமாரைத் தவிர வீட்டில் யாருமில்லாத நேரமது! 
பரிசோதித்த மருத்துவர், இரத்தம் அழுத்தம் கூடியதாலும் இரு தினங்கள் அவர் உட்கொள்ள வேண்டிய மருத்துகளை எடுக்காததாலும் வந்தது தான், பயப்படும்படி ஒன்றுமில்லை என சிகிச்சை அளித்தார். 
சற்று பயந்திருந்த கார்த்திக்கும் அப்போது தான் தெளிந்தான். சிகிச்சை முடித்து வரவும் காரில் தளர்வாக அமர, அவனும் உடன் அமர்ந்தான். என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை, அத்தனை பேரின் முன் மனைவியிடம் சின்ன விஷயத்திற்கு சண்டையிட்டது அவனுக்கே அவமானமாகத் தோன்றியது. 
அவர் வீட்டில் வைத்து, அவர் முன்னே பெண்களிடம் சண்டையிட்டிருக்கிறான், மாமாவின் மனது எத்தனை வேதனைப்படுமென இப்போது தான் யோசித்தான். 
“கார்த்திக் உனக்கு ஜனனியைப் பிடிக்கவில்லையா? உன் விருப்பமில்லாம தான் உங்கள் கல்யாணம் நிகழ்ந்ததா?” என்றார் கேள்வியாக. கார்த்திக் மீதான ஜனனியின் விருப்பம் நன்கு அறிவார் அவர். 
சட்டென மறுத்தவன், “ச்சே.. அப்படியெல்லாம் இல்லை மாமா.. எனக்கு சின்ன வயசுல இருந்தே ஜனனியைப் பிடிக்கும் தானே..?” என்றான். 
“அப்போ கல்யாணம் உங்க அம்மா சொன்னதால தான் செய்துகிட்டீயா..?”
ஒரு நொடி மௌனித்து, “உங்களுக்கு யார் அப்படிச் சொன்னா..?” என எதிர்க்கேள்வி கேட்டவன், “அதுவும் என் விருப்பத்தோட நிகழ்ந்தது தான்..” என்றான் ஆறுதலாக. 
“அப்போ உங்க அம்மாவுக்கு விருப்பமில்லையா..?” 
அவன் யோசித்தான். முழுக்க முழுக்க திலகவதி முன்னின்றி பேசி அவர் விருப்பத்தில் நிகழ்ந்த திருமணம் தானே இப்போது என்னாயிற்று? 
அவன் மௌனமாக இருக்க, “இங்குப் பார் கார்த்திக், என் பெண்ணிற்குச் சீர் செய்யவில்லை என்பது என்னோட இயலாமை தான், அதற்காக என் பெண்ணைக் குறைவாகப் பார்க்காதீர்கள்..” என்னும் போதே, அவளை எங்குக் குறைவாகப் பார்த்தேன், என்னைவிட அனைத்திலும் சிறப்பாக இருப்பது தானே என் பிரச்சனை! என நினைத்தான். 
“இப்போது இல்லை என்றாலும் விரைவில் செய்துவிடுவேன். அதுவும் போக, இப்போதிருக்கும் வீடு முழுவதுமாக ஜனனிக்குத் தான். ரோகிணிக்கு அதற்கு ஈடாகச் செய்துவிடுவேன்..” என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “இப்போது எதற்கு மாமா இந்த தகவல் எல்லாம்..” என இடையிட்டான் கார்த்திக். 
அதன் பின் தான் அன்னையோ சிவகாமியோ ஏதேனும் குறைவாகச் சொல்லியிருப்பார்களோ என்ற சந்தேகம் வந்தது.  
வண்டியை இயக்கியவன், “இதெல்லாம் ஒரு விஷயமா? ஜனனியைப் பற்றித் தெரியாததா? அவள் திறமைகள் அறியாததா? இப்போது பாருங்கள் மாமா, அவள் கடின உழைப்பில் வங்கி வேலை பெற்றுவிட்டாள். காலம் முழுவதும் கூட என்னை வைத்துக் காப்பாற்ற அவள் தயார்..” என்றான் புன்சிரிப்போடு பெருமையாக. 
முதல் முறையாக மனைவியின் சாதனையில் வயிற்றேரிச்சலை அல்லாது பெருமையை உணர்ந்தான். 
அவன் எண்ணம் அறியும் அவாவில் முத்துக்குமார் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க, “ஜனனி சீர் கொண்டு வந்து தான் நாங்கள் வாழும் நிலமையில்லை மாமா. இருவருமே வேலைக்குச் செல்கிறோம், எங்கள் வாழ்கையை நாங்களே அமைத்துக் கொள்வோம்.. யார் என்ன சொன்னாலும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டாம், உங்களுக்கு இனி கவலையும் வேண்டாம்..” என்றான் மேலும் நம்பிக்கையாக. 
அவன் ஆறுதலில், அவன் மீது நன்மதிப்பும் நம்பிக்கையும் தோன்ற, நிம்மதியுற்றார் முத்துக்குமார். அக்காக்கள் பேசியதில் அதிகம் ரணப்பட்டு, நொந்து போயிருக்க, ஜனனி இருக்கும் நிலையும் மேலும் அவரை வருத்த, அதன் தாக்கமே உடல் நலப் பாதிப்பு! 
நல்ல பிள்ளையாக மாமா நிம்மதியுற, ஆறுதல் சொல்லிய போதும் அவனுக்கு உள்ளுக்குள் ஜனனியின் மீது கோபம் தான். என்ன தான் கோபம் என்றாலும் எதிர்காலம் அவளோடு தான் என்பதில் உறுதியாக இருந்தான். 
அப்படியென்ன சொல்லிவிட்டேன் என அவள் வீட்டில் அமர்ந்து கொண்டாள்? ரோகிணியின் குற்றச்சாட்டை இவள் மெய்ப்பிக்கிறாளோ? அவளைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளத் தவறியவன் என அனைவருக்கும் காட்டுகிறாள்! இப்படித் தானே அவள் செயல்களால் என்னைக் கீழிறக்கி விடுகிறாள்! என்ற கொதிப்பிலிருந்தான். 
உண்மையில் அவளைப் பார்க்கும் ஏக்கமிருந்தது. அதற்குத் தான் காலையிலிருந்து ஒவ்வொரு வீடாக அலைகிறான். 
ஒளி மங்கி, இருள் சூழ்ந்த நேரம், இருவருமே வீட்டிற்கு வந்தனர். முத்துக்குமார் அவனையும் உள்ளே அழைத்தார். அவர் முன்னே செல்ல, நிரஞ்சனுக்கு அழைத்தவன் அன்று தான் சென்ற பின் நிகழ்ந்த அனைத்தையும் கேட்டறிந்து கொண்டான். 
தங்கள் பிரச்சனைக்குள் ஏன் இருபுறமும் இத்தனை பேர் தலையிடுகின்றனர் என ஏக கடுப்பில் கொதித்தான்.
இறங்கி உள்ளே வர, எதிரே வந்த வேணி வரவேற்க, உள்ளே வந்தமர்ந்தான். பெற்றோர்களை விசாரிக்க, அவன் பார்வையோ வீடெங்கும் சுழன்றது. 
பெற்றோர்கள் வீட்டிலில்லை எனப் பதில் சொல்ல, “ஜனனி..” என மகளை அழைத்தார் வேணி. 
சட்டென கார்த்திக் எழுந்துவிட, அறைநோக்கிக் கை நீட்ட, அதற்குள் அவனும் நகர்ந்திருந்தான். வீடு முழுக்க அவன் வலம் வந்த இடங்களே! 
முதல் நாள் மட்டுமே ஜனனி தனியாக இருக்க, அதற்குப் பின் அவளைத் தனியாக விடாது, ரோகிணியும் உடன் தங்கிக் கொண்டாள். 
அவன் உள்ளே வர, அன்னை அழைத்த குரலுக்குச் சரியாக அவளும் வெளியே வர, அந்த சிறு வாசலில் இருவரும் நேர் எதிரே நின்றிருந்தனர். 
தன் முன்னிருக்கும் கார்த்திக்கின் பிம்பத்தை நம்ப இயலாது வெறிக்கப் பார்த்தாள் ஜனனி. அவன் வருகை எதிர்பாராத நல்வரவு! அவன் பிடிவாதம், ஆணவம் விடுத்து தனக்காக வருவானெனக் கற்பனையிலும் கனவிலும் கூட நினைக்கவில்லை அவள்! அவன் முகம் கண்டதுமே நெஞ்சம் விம்பித் தணிய, கண்ணிரண்டிலும் விழிநீர் தேங்கியது. 
சற்றே புகைச்சலும் புன்முறுவலுமாகப் பார்த்திருந்தவன் உள் நோக்கி, “ரோகி இங்குப் பார், உன் அக்காளை என்ன செய்தேன் நான்? வந்ததிற்கே அழுது கரைகிறாள்..” என்றான் சீண்டலாக. 
என்னவோ தன்னைக் கண்டு பயந்தது போன்ற அவள் தோற்றமும் கண்ணீரும், பிறர் பார்வையில் எவ்வாறாகத் தெரியும் என்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்படித் தான் ஏதாவது செய்து தன்னை கீழிறக்கி விடுகிறாள் என மனதிற்குள் கனன்றான்! அதைத் தான் கேலியாகச் சுட்டிக்காட்டிவிட்டான். 
அதற்குள் விறுவிறுவென வந்திருந்த ரோகிணி, அவள் கரத்திற்கும் கதவிற்குமான இடைவெளியில் புகுந்து இருவருக்கும் இடையில் வந்து நின்றாள். ஜனனியின் முகத்தை ஒரு நொடி ஆராய்ந்தவள், “ச்சே.. இது ஆனந்தக் கண்ணீரப்பா..!” என அவளும் கேலியாக ராகமிழுக்க. 
“சந்தோஷம் என்றால் சிரிப்பு தானே வரணும்? இதென்ன கண்ணீர்?” என ஜனனியின் முகம் பார்த்தபடி அதட்டலாகக் கேட்க, “அவ அப்படித் தான்.. சோகம் என்றாலும் கண்ணீர், சந்தோஷம் என்றாலும் கண்ணீர்! ரொம்பவும் மாறிப் போய்விட்டாள்..” என்றாள் ரோகிணி. 
“இல்லையே, நம்ம ஜனனி, முன் எல்லாம் இப்படி இல்லையே..?” கேட்டபடியே அவளைக் குற்றமாகப் பார்க்க, அவள் பார்வையும் அவன் விழியோடு பின்னியிருந்தது. விழி நிறைந்த நீரோடு இப்போது இதழும் சின்னதாய் ஒருங்கே முறுவலித்தது. 
“ஆமாம் ஆமாம், முன்னே அவள் ஜனனி இப்போது அவள் திருமதி.கார்த்திக் அல்லவோ..” என்ற ரோகிணி, குரலிலே ஒரு ஏற்றம் கொடுத்தாள். 
“அப்படியா..? என்னக்குத் தெரியலையே..!” என கார்த்திக் மேலும் சீண்ட, “தெரியலைன்னா அவளைத் தனியா கூட்டிச் சென்று விசாரி..” என்றாள். 
“அப்போ நீ கரடியா நிற்காதே.. போ..” என்றபடி, ரோகிணியின் தோள்களைப் பற்றி தனக்குப் பின்னே தள்ளி விட்டு, அவன் முன்னேறி அறைக்குள் சென்றான். ஜனனி நின்ற இடம் விட்டு நகரவில்லை, கிட்டத்தட்ட அவளை உரசியபடி அவள் முன் நின்றிருந்தான். 
“கதவை சாத்திக்கோங்கப்பா.. இந்த கரடியால் காவல் காக்கும் வேலையெல்லாம் செய்ய இயலாது..” என்ற குரலோடு ரோகிணி சென்றுவிட்டாள். 
சட்டென ஒரு கையால் முதுகின் பின்னிருக்கும் கதவை சாற்ற, “ஜனனி…” என மீண்டும் வெளியே கேட்டது வேணியின் குரல். 
சட்டென ஏமாற்றமடைந்த கார்த்திக் பற்களைக் கடிக்க, அதில் மெல்லிய கீதமாய் சிரித்த ஜனனி அவனிடமிருந்து விடுபட்டு வெளியே சென்றாள். கோபத்தில் வந்ததென்ன இப்போது அவளிடம் நிற்கும் நிலை என்ன? அவனுக்கே அவனை எண்ணி வியப்புத் தான்! 
கார்த்திக்கும் பின்னே செல்ல, அனைவரையும் அமர வைத்து உணவு பரிமாறினார் வேணி. எந்த வித முகத்திருப்பலுமில்லாமல் ரோகிணியோடு சகஜமாகப் பேசியது, தந்தைக்கு உதவியது என அனைத்தும் அவளை நெகிழ, வைத்திருந்தது. இதை எதிர்பார்த்துத் தானே அவனை திருமணமும் செய்து கொண்டாள். 
கார்த்திக் எப்போதும் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பவன் இல்லை என அவள் நன்கறிவாள்.
“எனக்கு என்ன விஷயம்னு தெரியலை.. பெரியம்மாவும், அம்மாவும் என் மேல உள்ள பாசத்துல கொஞ்சம் ஏதாவது அதிகப்படியா பேசியிருப்பாங்க.. நீங்க அது எதையும் மனசுல வைத்துக்கொள்ள வேண்டாம்..” என பொதுவில் உரைத்தான். 
வேணி மௌனமாகி விட, முத்துக்குமாருக்கு அவர்கள் வார்த்தைகள் நினைவில் வர, முகமே வாடிவிட்டது. 
“உங்களுக்கே தெரியும், எங்கம்மாவுக்கு ஜனனியை எவ்வளவு பிடிக்கும்னு! அந்த நேரம் என்னை விட்டுக்கொடுக்காம பேசிட்டாங்களே தவிர, மனசுல இருந்து எதுவும் பேசியிருக்க மாட்டாங்க..” என மேலும் அவர்கள் சார்பாக அவன் பேச, “இப்போது எதுக்குடா அதெல்லாம்? பேச வேண்டாம், விடு. நீ கொடுத்த நம்பிக்கையே எனக்கு போதும்..” என இடையிட்டார் மாமனார். 
அவனுக்குமே மீண்டும் மீண்டும் நிகழ்ந்ததைப் பேசுவதில் விருப்பமில்லை, ஆகையால் சிறு தலையசைப்போடு விட்டுவிட்டான். 

Advertisement