Advertisement

அத்தியாயம் 11
ஆயிற்று! இரு பகலும் மூன்று இரவுமாய் முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்தும், கார்த்திக் சென்றதும்! 
யார் யாரோ ஏதேதோ வார்த்தைகளில் எல்லாம் தங்களை வாழ்க்கையை விமர்சித்தது ஜனனியை மிகவும் துவளச் செய்தது. அதைத் தாண்டியும் நினைவெல்லாம் கார்த்திக் தான்! 
எப்போதும் கோபம் என்றாலும் மன வருத்தம் என்றாலும் அந்த நொடி, அந்த இடத்திலே காட்டி விடுவான். இத்தனை நாட்களிலே அவனை நன்கு அறிந்திருந்தாள். ஆனால் இன்று மௌனமாய் சென்றுவிட்டானே என்ற ஆற்றாமையே அவளை அரித்தது. பேசியிருந்தால் கூட தாங்கியிருப்பாள் போலும் பேசாமல் சென்றது தான் வலியிலும் வருந்த வைத்தது. 
பெற்றோர்களின் எதிர்காலம் யோசித்து திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டு இப்போது அவனிடம் ஏங்கியிருப்பது தன் முட்டாள்தனமே! எனத் தன்னை நினைத்து தன் மீதே கழிவிரக்கம் சுரந்தது. 
இறுதி வரைக்கும் தன் பெற்றோருக்கு ஆதரவாகத் தான் இருக்க வேண்டும் என்ற சுயநலத்திலும் எதிர்பார்ப்பிலும் தானே கார்த்திக்கைத் திருமணம் செய்தாய் என மனம் வேறு சரியாக அந்த நேரத்தில் அவளை இடித்துரைத்தது. 
ரோகிணி சொல்லியதை தான் சொல்லித் தந்ததாக நினைத்து விட்டானோ? தன் மீது கோபமாக இருக்கிறானோ? என்ன செய்கிறான்? ஒரு அலைப்பேசி அழைப்போ, குறுஞ்செய்தியோ கூட இல்லை. தன்னை தவிர்கிறானோ? சரி தான், ஏற்கனவே அவனுக்கு தன் மீது கசிந்துருகும் காதலில்லை என அறிந்தது தானே, தங்கள் உறவென்பது அவ்வளவு தானா? என்ற பயத்திலிருந்தாள். 
அதுவே அவளை உறுக்கி, நலிவுற வைத்திருந்தது. ஜனனியின் இந்நிலை அவள் வீட்டையே அழகிழக்கச் செய்திருந்தது. 
ஜனனியின் நிலை பார்க்க பார்க்க, வேணிக்கு ரோகிணியின் மீதான ஆத்திரம் அதிகமாகியது. பொறுக்கமாட்டாமல் அவ்வப்போது இளையவளை வசைபாட, அவளோ தன் சொல்லியது சரி தான் என்பதிலே பிடிவாதமாக இருந்தாள். 
கார்த்திக் ஜனனியைச் சந்தோஷமாக வைத்திருக்கவில்லை, அப்படி தான் தோன்றியது ரோகிணிக்கு. திருமணத்திற்கு முன்பே அவள் சின்ன சின்ன ஆசைகளை மறுத்தவன் இப்போதும் அப்படித் தான் இருக்கிறான் போலும். இதில் அவ்வப்போது ஜனனியிடம் வேறு சண்டையிடுகிறான்! கார்த்திக்கு தன் அக்காளின் அருமை தெரியவில்லை. 
ஜனனியே சொல்லினால் தானே இந்த திருமணம் நிகழாமலே இருந்திருக்கலாமென. அவள் எவ்வளவு பொறுமைசாலி அவளே இப்படிக் கூறுகிறாள் என்றால் இந்த திருமணத்தால் எவ்வளவு நொந்து போயிருப்பாள்? என்றே நினைத்திருந்தாள் ரோகிணி. 
அன்றைய சச்சரவுக்குப் பின் கலைந்த கூட்டம் அவரவர் வீடு நோக்கிச் சென்றிருந்தது. சிவகாமி பேரப்பிள்ளைகளை தன்னோடு அழைத்துச் சென்றிருக்க, மகளும் அவள் வீடு சென்றிருந்தாள். 
திவ்யாவின் மாமியார் ஒன்பதாவது மாதம் அவளுக்குச் சீமந்தம் வைத்தாலும் சரி, சிறப்பாக வைக்க வேண்டுமென்றே சொல்லிச் சென்றுவிட்டார். அதான் அவனைவரும் சென்றுவிட்டனரே பிறகென்ன? என திலகவதியும் அதையே ஏற்றுக்கொண்டார். 
இந்த இரண்டு நாட்களில் கார்த்திக் வீட்டிற்கும் வரவில்லை, நண்பர்களோடு வெளியிலே தங்கிவிட்டான். எப்போதும் பிள்ளைகள் சூழ இருக்கும் திலகவதிக்கு அவர்கள் இல்லாத வெறுமை அதிகமாகத் தாக்கியது. 
“இருந்தாலும் நீங்கள் இருவரும் இவ்வளவு பேசியிருக்கக் கூடாது திலகா, உன் தம்பி வீட்டின் நிலை தெரிந்து, நீயே விரும்பி தானே பெண்ணெடுத்தாய்? பின் நீயே அவர்களைக் குறைவாகப் பேசினால் நியாயமா?” என சிவநாதன் மனைவியை கடிந்து கொண்டார். 
அவர் கேட்கவுமே திலகவதிக்கு சுருக்கென்று குத்தியது. தவறு தானே? ஆனாலும் மனம் இறங்கி வர மறுத்தது. 
“அதற்கென்று அந்த சிறு பெண் ரோகிணி கூறுவதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா? இங்கென்ன ஜனனியை கொடுமைப் படுத்துகிறோமா? என் மகனை குறைவாகச் சொல்கிறாள்?”
“ஒன்றைப் புரிந்து கொள் திலகா, அவன் உனக்கு மட்டும் மகனல்ல, ஜனனிக்கும் கணவன் தான்! அவளொரு குற்றச்சாட்டைக் கூறினால் அப்படியா என ஜனனியை அழைத்து விசாரித்திருந்தால் சரி, அதை விடுத்து அவர்களையே குறைவாகப் பேசினால் என்ன அர்த்தம்? புரிகிறதா? உங்கள் மனதிலிருக்கும் அழுக்கை எல்லாம் நீங்கள் தான் கொட்டிவிட்டு வந்திருக்கிறீர்கள்..!” என்க, திலகவதி வாயடைத்துப் போனார். 
மனைவியோடு மட்டுமின்றி அண்ணி சிவகாமியின் தவறையும் சேர்த்தே தான் எடுத்துக் கூறினார். 
“அதை விடு, கார்த்திக்கும் ஜனனியும் இங்கு எப்படியிருந்தார்கள் என நாம் அறியாததா? உன் மகன் இலட்சணம் தெரியும் தானே? ஜனனி எவ்வளவு பொறுத்துப் போனாள்? உண்மை தானே? இதை ரோகிணி பொதுவில் சொன்னால் மட்டும் தவறா?” என்றவர் மேலும் கேட்டார். 
திலகவதிக்கு வாய்மட்டுமல்ல, நெஞ்சே அடைத்துவிட்ட உணர்வு! செய்த செயலை பிறர் எடுத்துக் கூறுகையில் தான் தவறு உரைக்கிறது! 
“என்னவோ போங்கள், ஆனால் அனைவரும் செய்து விட்ட தவறு, நீங்களாக உங்கள் விருப்பத்திற்கு ஜனனி, கார்த்திக்கின் வாழ்கையை விமர்சித்தது! அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை அவர்களே தீர்த்துக்கொள்ளட்டுமென விட்டிருந்தால் அவர்களுக்குள் இந்த பிரிவு வந்திருக்காது..” என மேலும் வருத்தம் தெரிவிக்க, திலகாவால் பேச இயலவில்லை. 
கோவையில் நண்பன் மகளுக்குத் திருமணம் திரும்பி வர, சில தினங்களாகும் என சிவநாதன் கிளம்பி விட்டார். 
ஏற்கனவே குற்றவுணர்வில் குறுகி இருந்த திலகவதியும் தனிமையில் இருக்க விரும்பாது அக்காள் வீட்டிற்குக் கிளம்பி விட்டார். திலகவதி எப்போதும் தனியாக யோசிப்பதில்லை, சிறுவயதிலிருந்தே சிவகாமியைச் சார்ந்தே அவர் முடிவுகள் இருக்கும்! 
அடுத்த நாள் வீட்டிற்கு வந்தான் கார்த்திக். ரோகிணி சொல்லியதற்கு ஜனனியின் மீது கோபம் ஏன்? ஒரு மனம் கேட்க, இவள் சொல்லாமலா அவள் சொல்லப் போகிறாள்? என வாதிட்டது மறுமனம்! 
இரண்டு நாட்களாக ஜனனியின் மீதிருந்த கோபம் சற்று மட்டுப்பட்டிருக்க, உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லையா என அவளை பற்றி உலுக்கிக் கேள்வி கேட்கும் வேகம் அவனிடம்! 
வீடு மூடியிருப்பதைப் கவனித்துவிட்டு நேராகப் பெரியம்மாவின் வீட்டிற்குச் சென்றான். அத்தனை பேரும் அங்கு தான், இவனைக் கண்டதுமே வரவேற்க, உள்ளே சென்றான். 
வந்தவனை திலகாவும் சிவகாமியும் விசாரிக்க, ஜனனியைத் தேடியவனின் விழிகள் ஓய, வாய்க்கு வந்த பதிலை அவர்களுக்குச் சொல்லினான். யார் முகத்தையும் பார்க்கவில்லை, யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. 
அவன் சென்ற பின் ஜனனி வீட்டில் நடந்த வாக்குவாதங்கள் எதுவும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. 
உணவு வைக்க, உண்டு முடித்தவன் அன்னையிடம் வீட்டுச் சாவியை வாங்கிவிட்டுக் கிளம்ப, இடையில் வந்த சிவகாமி, “இதுல கொஞ்சம் மசாலா பொடி இருக்கு, போற வழியில அக்கா வீட்டுல கொடுத்துட்டுப் போ கார்த்திக்..” என்க, வாங்கிக் கொண்டான். 
ஏதோ நடமாடினானே தவிர, உள்ளுக்குள் எதையோ தொலைத்த உணர்வு! அவன் ஓய்ந்த தோற்றம் அனைவருக்கும் வித்தியாசமாகத் தெரிந்தது. அவனுக்குமே அவன் இயல்பு இதில்லை என நன்கு தெரியும், ஏதோ வெறுமை உணர்வு! 
ஜனனியின் நியாபகம் அதிகமிருந்தது, அவளுக்காக ஏங்கினான். இரு வீட்டிலும் அவள் இல்லை என்றதும் அவள் வீட்டில் தான் இருப்பாள் என புரிந்து கொண்டான். இறங்கிய கோபம் மேலும் ஏறியது! 
தன்னை விட்டுச் சென்று சென்றவளிடம், சென்று நிற்க, அவன் ஆணவம் தடுத்தது. அத்தனை பெரிய குற்றச்சாட்டைச் சொல்லியதற்குப் பின் அவளிடம் செல்வதா என்றிருந்தது. தன்னிடம் குறையாக நினைத்தால் தன்னிடம் தானே சொல்லியிருக்க வேண்டும்? தங்கையிடம் ஏன் சொன்னாள்? அதுவும் அவள் சபையில் சொல்லும் போது இவள் ஏன் தடுக்கவில்லை? என்ற கோபம். 
இத்தனை நாட்களில் தன்னோடு அவள் சந்தோஷமாக இல்லையா? அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லையா? என முதல் முறையாக அவள் உணர்வுகளைப் பற்றி நினைத்தான். 
அவ்வளவு தானா? அவளைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்குக் கூட நான் தகுதியற்றுப் போய்விட்டானா? என விம்மினான். ஏற்கனவே அவளை விடத் தான் குறைவோ என்ற தாழ்வுமனப்பான்மையில் இருந்தவன் மேலும் குறுகிப்போனான். 
சுகந்தியின் வீட்டிற்குள் நுழைகையிலே ஏதோ இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்க, பதறியவன் உள்ளே விரைந்தான். பிள்ளைகள் சிவகாமி வீட்டிலிருப்பதால் இங்கு இவர்கள் இருவர் மட்டும் தான்! 
“இப்படி அத்தனையும் தொலைத்து விட்டு நீ மட்டும் ஏன் வந்து நிற்கிறாய்? நீ  இல்லாவிடினும் என் பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொள்வேன். நீ இருப்பதில் தான் எனக்கு மேலும் மேலும் கஷ்டம்..” எனச் சுகந்தி கத்திக் கொண்டிருக்க, “கவனமாகப் பேசு சுகந்தி, எனக்கும் அவர்கள் பிள்ளைகள் தான்..” என்றான் கடினமான குரலில் ராஜன். 
“பொண்டாட்டியிடம் ஈகோ பார்ப்பவனுக்குப் பிள்ளைகளிடம் மட்டும் என்ன உரிமை? ஏன் அவர்களையும் விற்று விளையாடவா? அதற்குத் தான் நான் சுமந்து பெற்று வைத்தேனா?” என ஆத்திரமிகுதியில் அவள் கதற, சுடுசொல் தாங்காது, சட்டென அவளை நோக்கி கையுயர்த்தி இருந்தான் ராஜன். 
அதே நேரம், “மாமா..” என்ற கண்டிப்போடு கார்த்திக் இடையில் வர, இருவருமே அவனை எதிர்பார்க்கவில்லை!
கைகளை உதறிய ராஜன், விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறிவிட, சுகந்தி அவ்விடத்திலே மடங்கி அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். சிறிது தண்ணீர் புகட்டி, அழுகிறவளை தேற்றிய பின் என்னவென்று விசாரித்தான் கார்த்திக். 
“எல்லாமே போய்விட்டது, என் வாழ்வும், என் பிள்ளைகள் வாழ்வும் மொத்தமாக வீணாகிவிட்டது கார்த்திக்..” எனப் புலம்ப, அதட்டி, “என்னன்னு சொல் அக்கா..” என்றான். 
“எல்லாம் என் தவறு, முட்டாள்தனம் தான். திருமணமான ஆரம்பத்திலிருந்தே அவர் சம்பளக் கணக்குகளை நான் கேட்டதில்லை, இத்தனை ஆண்டுகளாகச் சேமிப்பாகச் சேர்த்து வைத்திருந்தோம். என் ஊதியத்திலிருந்தே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டேன். கடந்த ஆண்டு ஆகாத நண்பர்களின் சவவாசம், ஆன்லைன்னில் சீட்டாடி இருக்கிறார், அதுவும் பணம் செலுத்தி! அப்படி சிறிது சிறிதாக அவர் கையில் இருப்பது அத்தனையும் இழந்து விட்டு, நண்பர்களிடம் கடன் வாங்கியும் விளையாடியிருக்கிறார். அவரோடு விளையாடிக் கொண்டு அவருக்குக் கடனும் கொடுத்து, அக்கடனுக்கு வட்டிக் கணக்கும் எழுதி வைத்திருக்கிறார்கள் அவர்கள்! 
ஒரு அளவிற்கு மேல் சென்றதும் தாங்க முடியாது, சேமிப்பிலிருந்து சிறிது சிறிதாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து இப்போது வங்கிக் கணக்கிலிருந்த, பெரிய தொகை அத்தனையும் கரைத்து விட்டார். இனி நான் என்ன செய்வேன்? பிள்ளைகளின் எதிர்காலமே அதில் தானே?”
அவள் பிதற்ற, “அப்படியெல்லாம் இருக்காதுக்கா, நீயாக தெரியாமல் பேசாதே..” என்றான் வார்த்தைக்கு ஆறுதலாக. 
மறுப்பாய் தலையசைத்தவள், “மூன்று மாதம் முன் தர்ஷினியின் பிறந்தநாளுக்கு நகை எடுக்க நினைத்து வங்கிக் கணக்கைப் பரிசோதிக்கையில் தான் எனக்கு விஷயமே தெரிய வந்தது. அப்போதும் நண்பர்களின் அவசர மருத்துவச் செலவிற்கு உதவியதாக மழுப்பினாரே தவிர, உண்மையைச் சொல்லவில்லை. 
அன்றிலிருந்தே இருவருக்கும் பிரச்சனை தான்! அதனாலே பிள்ளைகளை உன் வீட்டிலும் அம்மா வீட்டிலும் விட்டிருந்தேன். அலட்சியத்தில் எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறார்? இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன் இப்படிப் பொறுப்பில்லாமல் இருக்கலாமா?” என்றாள் அழுகையுடன். 
ஏமாற்றம் தாங்கமுடிவில்லை, விம்மி விம்மி அழுதாள் சுகந்தி. இன்னும் வீட்டில் யாருக்கும் தெரியாது என்பது கார்த்திக்குப் புரிந்தது. எவ்வாறு ஆறுதல் சொல்வது எனத் தெரியாது வார்த்தைகளற்று இருந்தான். 
“எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்? இனி நாங்கள் தானே கஷ்டப்பட வேண்டும்? முதல்முறை கடனாக வாங்குகையிலே அந்த தொகையை என்னிடம் வாங்கியிருந்தால் இத்தனை தூரம் வந்திருக்காதே? எவனிடமோ வாங்குவதற்குப் பதில் என்னிடம் வாங்க, அவருக்கு என்ன கௌரவக்குறைச்சல்? பொண்டாட்டியிடம் ஈகோ பார்த்து இப்படி மொத்த குடும்பத்தின் எதிர்காலத்தையும் அழித்துத் விட்டாரே..”
மேலும் அவள் புலம்பி கண்ணீர் விட, கார்த்திக்கு ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சுருக்கென்று தைத்தது. என்னவோ அந்த கேள்விகள் அவனிடம் கேட்பது போன்றும், முகத்தில் அறைவது போன்றுமிருந்தது. வார்த்தையற்று துடிதுடித்துப் போனான். 
“எல்லாம் என் தவறு தான் ஆரம்பத்திலே கவனித்திருக்க வேண்டும். கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஏமாளியாக விட்டுவிட்டேனே..” எனச் சுகந்தி தலையில் அடித்துக் கொள்ள, அவள் கரத்தைப் பற்றித் தடுத்தான். 
சிறிது நேரம் ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றி, பின் அழைத்து வந்து சிவகாமியின் வீட்டில் விட்டான். அவர்களும் விஷயம் அறிய, ஆளாளுக்கு ராஜனை பழித்தனர். அனைத்தையும் கேட்க முடியாது கேட்ட கார்த்திக் கனத்த மனதுடன் வீடு திரும்பினான். 

Advertisement