Advertisement

அத்தியாயம் 10
இருவருக்கும் இடையில் ஏதோ திரை மறைத்த உணர்வு! இருவரும் பொதுவான பேச்சுக்கள், நிழல் தொடும் நெருக்கங்கள் என விலகியே இருந்தனர்.
மாலை நேரம், வேலை முடிந்து வந்திருந்தான். தன் அறைக்குள் வர, ஜனனி ஏதோ மடிக்கணினியின் முன் விரல் நுனியைக் கடித்தபடி அமர்ந்திருப்பதைக் கவனித்தான்.  
“என்னாயிற்று ஜனனி..?” என்றவன் அருகே செல்ல, விலகி மடிக்கணினியின் திரையைக் காட்டினாள். மேலோட்டமாக வாசிக்க, வங்கிப் பயிற்சிக்கான அழைப்பு மின்னஞ்சல் வந்திருப்பது புரிந்தது. 
நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவள் பார்வையும் அவனிடம் தானிருந்தது. 
“ட்ரைனிங் எப்போது ஜனனி..?” என்க, “அடுத்த வாரம்..” என்றவள் அவனையே கேள்வியாகப் பார்த்தாள். அவன் என்ன சொல்வான் என்ற எதிர்பார்ப்பு! தன்னை பிரிந்திருக்க இயலுமா? 
“என்ன செய்யட்டும் கார்த்திக்?” அவனிடமே கேட்க, என்னிடம் ஏன் அனுமதி கேட்கிறாய்? நீ தான் அத்தனை பேருக்கும் ஆலோசனை சொல்லும் பெரிய மனுஷியாயிற்றே! உனக்கு யார் அனுமதி தேவை? என மனதில் பொறுமிக்கொண்டான். 
காரணமே இன்றி அவள் மனம் படபடக்க, “உன் விருப்பம்..” என்றவன், சட்டையின் மேல் பட்டனைக் கழட்டியபடி நகர்ந்தான். 
உடை மாற்றவென குளியலறைக்குள் சென்றுவிட, குழப்பமாக நின்றாள் ஜனனி. 
என்னதிது விட்டேர்த்தியான பதில்! தன் பிரிவுக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை என்பது போன்று. அன்றும் இதே பதில் தான், ஆனால் அப்போது இப்படித் தோன்றவில்லை! 
என்னவோ தன் விருப்பங்களை மதிப்பவன் என்றெல்லாம் கொண்டாடியதே மனம், இன்று என்னவோ அவளுக்கு வித்தியாசமாகத் தோன்றியது. உன் விருப்பம் என்கிறானே, செல்வதில் அவனுக்குச் சம்மதமா? தன் பிரிவில் அவனுக்கு வருத்தமில்லையா? எனக் குமுறினாள். 
தற்காலிக பிரிவு தான், சில மாதங்கள் தான்! ஆனாலும் அதை ஏற்கும் அளவிற்கு அவன் பக்குவப்பட்டிருக்கிறானா? நான் தான் பலவீனமாக உள்ளேனா? எதனால்? பெரும் யோசனை!
உள்ளே கார்த்திக்கும் புகைந்து கொண்டிருந்தான். சில மாதங்கள் பயிற்சி, அதன் பின் வேலை! ஏற்கனவே தன்னை மதிக்கமாட்டாள் இப்போது வேலை வேறு கிடைத்து விட்டது இனி அவளுக்கு ஏற்றம் தான்! 
அரசியல் சிபாரில் வேலை வாங்கியவன் என உறவுகள் அத்தனை பேருக்கும் தெரியும், அவன் தந்தையை தவிர! ஜனனியோ தனக்கு முன்பே வேலைக்குச் சென்று, இப்போது நிரந்தர வேலையும் பெற்றுவிட்டாள். இனி உறவினர்கள் முன் தன் மதிப்பு இன்னும் கீழாய் குறைந்து விடுமே என பொறுமினான். 
அதே நேரம் அவள் தன்னை விட்டுச் செல்கிறாளே? என்றும் இருந்தது. எப்படியும் தன்னை விட, கிடைக்கவிருக்கும் வேலை தான் முக்கியம், ஆக சென்றிடுவாள் என நினைத்தான். 
வெளியே வந்தவன் ஜனனி இன்னும் அதே நிலையில் நிற்பதைக் கவனித்துவிட்டு, “என்ன ஜனனி? பேமிலி பார்ட்டி அரேஜ் செய்வோமா? கொண்டாடுறதுக்கு..?” என்றான். 
அவன் குரல் தொனியே வேறுபட, எங்கே நக்கலாகக் கேட்கிறானோ என ஆராய்ந்தபடி, “ஏன் கார்த்திக் உனக்குச் சந்தோஷமில்லையா?” என்றாள். 
உண்மையில் மனைவியின் வெற்றியில் மகிழ வேண்டும் தானே ஆனால் அவனுக்கோ அப்படித் தோன்றவில்லையே! அவன் பங்கீடு இல்லாத அவள் வெற்றியை, அவனைச் சாராத வெற்றியாக நினைக்க, மகிழ்ச்சி வரவில்லை. 
அதற்குள் அஜய், கிஷோர் அவனை அழைக்க வந்திருக்க, “டேய்! ஜனனிக்கு வேலை கிடைச்சிருக்கு, ட்ரைனிங் கிளம்புகிறாள். அவள் சார்பா இன்னைக்கு என் ட்ரீட் என்ன வேணுமோ ஆர்டர் சொல்லுங்க..” என்றபடி அவர்களைத் தள்ளிக் கொண்டு சென்றான் கார்த்திக். 
இப்போது என்ன சொல்கிறான் சந்தோஷாமா? இல்லையா? அவள் இன்னும் குழம்பிப்போனாள். 
இடையில் ஒரு நாள், கார்த்திக்கை அலைபேசியில் அழைத்திருந்தாள் திவ்யா. பெற்றோர்களே தன் சீமந்தத்திற்கு சம்மதித்த பின் நீயேன் தடுக்கிறாய்? சீமந்தம் தானே கேட்டேன், சிறப்பாக வேண்டுமென்றா கேட்டேன்? அவ்வீட்டில் உன் போலே எனக்கும் உரிமை உண்டு என உரிமையான சண்டையில் துவங்கி அழுகையில் முடித்தாள். 
தன் மீது பாசமில்லையா, என்னை விடவுமா உனக்கு பணம் முக்கியமாய் போயிற்று? அதுவும் நீயா செய்யப் போகிறாய்? இல்லையே, பெற்றோர்கள் செய்வதையும் ஏன் தடுக்கிறாய்? 
திருமணம் முடித்துக் கொடுத்தால் அவ்வளவு தானா? அன்னை வீட்டிற்கு வரக் கூடாதா? இந்த ஒரு ஆண்டில் உன் திருமணத்தைத் தவிர, எப்போது நான் வீட்டிற்கு வந்தேன்? இல்லை நீங்கள் இங்கு தங்கியிருக்கிறீர்களா? கணவனும் வேலைக்குச் சென்றிட, நாள் முழுதும் தனித்திருக்கும் என் நிலையை நீ யோசிக்கவே இல்லையா? 
என்றெல்லாம் கேட்டவள் அழவே துவங்கிட, கார்த்திக்கு மனம் பொறுக்கவில்லை! பெரும் தனிமையை உணர்கிறாள், தங்களுக்காக எல்லாம் அவள் ஏங்குகிறாள் என்பதையெல்லாம் இப்போது தான் அவனுக்குப் புரிந்தது. அது வரையிலும் சீமந்தம் செய்வதை ஒரு சடங்காக தான் நினைத்திருந்தான். 
தங்கை கலங்குவது தாங்காது, ஏதேதோ சமாதானம் சொல்லியவன் அவள் விருப்பம் போலே செய்வதாகவும் உறுதி உரைத்தான், அன்புடன். 
“ஆமாம், உனக்கு யார் இது பற்றிச் சொன்னது? ஜனனியா?” இறுதியாக கேட்டான். நேற்று தங்கள் வீட்டில் விவாதித்தது அவள் வரைக்கும் தகவல் சென்றிருக்கிறதே என்ற சந்தேகம்! 
“இல்லையே..! அம்மா தான் சொன்னாங்க..” என மூக்கை உறுஞ்சியவள், “ஜனனி அளவிற்கு கூட நீ என்னை புரிந்து கொள்ளவில்லை, உன்னை விடவும் அவளுக்குத் என் மீது அக்கறையும் பாசமும் அதிகமிருக்கிறது..!” என்றவள் குறைப்பட்டுக் கொண்டாள். 
அவள் எங்கே அண்ணன் மனம் அறிய! ஆனால் அவன் மேலும் நொந்து போனான். தன் தங்கை மீதான பாசத்தில் கூட போட்டியிட்டு மனைவியே தன்னைவிடவும் மேலாக இருக்கிறாள் என்பதை ஏற்க முடியவில்லை.
குறை கொண்ட மனம் அனைத்திலும் குற்றம் மட்டுமே காணும்! 
அந்த வார இறுதியில் திவ்யாவின் சீமந்தத்தைப் பற்றிப் பேச, அவளின் மாமியார் நேரில் வந்திருந்தார், அதே நேரம் அனைவருக்கும் அசைவ விருந்து வைக்கிறேன் என மொத்த குடும்பத்தையும் அழைத்திருந்தார் வேணி. 
சிவகாமி, பழனிவேல் தம்பதியினரும் அவர்கள் பிள்ளைகள், மருமக்கள் என அனைவரும் வந்திருந்தனர். வேணி, ஒரு வேலையாள் வைத்து அவரோடு சமைத்துக் கொண்டிருக்க, ஜனனி சின்ன சின்ன உதவிகள் செய்து கொண்டு அங்கே இருந்தாள். 
பிள்ளைகள் வரவேற்பறையின் முன்புறம் விளையாடிக்கொண்டிருக்க, பெரியவர்கள் அவனைவரும் உட்புறம் அமர்ந்து ஆலோசித்துக்கொண்டனர். திவ்யாவின் மாமியார் அவள் சீமந்தத்தைச் சிறப்பாக எடுத்துச் செய்யக் கேட்க, அங்காங்கு அனைவரும் அவரவர் கருத்தைச் சொல்லி இறுதியாக, அதற்கு ஏற்றுக்கொண்டனர். 
முன்புறம் இருந்த கார்த்திக்கின் செவிகளையும் அவர்கள் விவாதங்கள் நிறைக்க, இவர்களும் ஜனனி சொல்வதை தானே கேட்கிறாங்க, என்ற காந்தல்! ஆனால் திவ்யாவின் மாமியார் கேட்டதாலே ஏற்றனர், ஜனனி இவ்விடம் பேசவில்லை என்பதெல்லாம் அவன் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை. 
சமையலறையிலிருந்து வந்த ஜனனி அங்கே நிற்க, அவள் அனுப்பியிருந்ததால் கடைக்குச் சென்றிருந்த கிஷோர் சரியாக உள்ளே வந்தான். 
“இந்தா ஜனனி, எல்லா ஃபிளேவரும் இருந்தது, வாங்கிட்டேன். எனக்கும் மட்டும் இரண்டு கப் வேண்டும்..” என ஒரு பெரிய ஐஸ்கீரிம் பெட்டியையே அவளிடம் நீட்டினான். 
“ம்ம்..” தலையாட்டியபடியே வாங்கியவள், விலைப்பட்டியலையும் அவன் தந்த மீதி சில்லறையும் கணக்கிட்டாள். 
குறைவாக இருக்க, “என்னடா குறைவா இருக்கு..?” எனக் கேட்க, அவன் செலவு செய்தானோ என்ற அர்த்தத்தில் கேட்பதாக நினைத்தவன், “நான் வேற எதுவும் வாங்கலை ஜனனி, ஷாப்ல இவ்வளவு தான் பேலன்ஸ் கொடுத்தாங்க..” என்றான், தனது சட்டைப்பைகளைத் தடவியபடி. 
சிறுவன் என்றெல்லாம் சொல்லிவிட இயலாது, பத்தாவது படிக்கிறான், இந்த அளவிற்குக் கூட விவரமில்லாமல் இருந்தால் எப்படி? 
“கிஷோர், ஒரு ரூபாயா இருந்தாலும் கணக்கு விஷத்தில சரியா இருக்கணும். இப்படி கார்த்திக் மாதிரி காசு கணக்குல அசால்டா இருக்கக் கூடாது, புரியுதா?” என்றவள் அறிவுரை கூற, கேட்டிருந்த கார்த்திக்கு சுர்ரெனத் தீயாய் ஏறியது கோபம்! ஏற்கனவே அவள் மீது புகைச்சலிருந்தவனுக்கு அவள் உதிர்த்த ஒரு வார்த்தை தீப்பொறியாகிப் போனது. 
தன் கவனக்குறைவே என்பது புரிய, கிஷோர் அவள் அறிவுரையை ஏற்க, சட்டென எழுந்த கார்த்திக் அவள் முன் வந்து நின்றான். 
“அப்படியென்ன நான் கணக்கு விஷயத்தில தப்பாகிப் போயிட்டேன்? நான் எங்க ஏமாந்து நீ பார்த்த? ஒரு சின்ன பையனுக்கு அறிவுரை சொல்கையில் என்னை ஒரு தவறான உதாரணமாக எடுத்துச் சொல்லும் அளவிற்கு அப்படி என்ன நான் குறைந்து போய் விட்டேன்? எதனால் உன் பார்வைக்கு அப்படித் தோன்றியது? நான் என்ன வீண் செலவா செய்கிறேன்? சொல் ஜனனி” 
அவள் முன் நின்றவன், சற்றே உரத்த குரலில் உக்கிரமாக மூச்சுவிடாது கேள்வி கேட்க, சற்றும் எதிர்பாராத ஜனனி மிரண்டு சட்டென பின் நகர்ந்தாள். 
அப்போதே அவளுக்கும் அவள் தவறு புரிந்தது. வீட்டில் அறிவுரைக்கு எல்லாரும் சகஜமாக அவனை உதாரணமாக எடுப்பதைத் தான் அவளும் பழகத் தோஷத்தில் செய்துவிட்டாள். இவன் கேட்கையில் தானே அது தவறாகத் திரிகிறது. அத்தனை பேரின் முன் கேட்காது இவனாவது பொறுமையாகப் போகலாமே என்ற பரிதவிப்போடு நின்றாள். 
“சொல் ஜனனி, என்னை பேச வேண்டுமென்கிறதுக்காகப் பேசுகிறாயா? நான் எதுவுமே செய்யாத நிலையில் இப்படி எல்லார் முன்பும் என்னைப் பொறுப்பற்றவன் எனக் காட்ட வேண்டுமென்று நினைக்கிறாயா? சரி தான், அப்போது தான் உன்னை உயர்வாக நினைப்பார்கள்! சிறு பையனிடம் கூட என்னைத் தவறாகச் சொல்கிறாயே..! இப்படி தான் எல்லா விஷயத்துலையும் மூக்கை நுழைத்து நீ மிகவும் பொறுப்பு போலும் என்னை மட்டமாகவும் அர்த்தப்படுத்துகிறாய்? இப்போது சந்தோஷமா?” 
அவள் சொன்ன ஒருவார்த்தைக்கு கார்த்திக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்க, அவள் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இப்படியான எந்த வித உள் அர்த்தத்திலும் சொல்லவில்லையே! ஏன் இப்படி எடுத்து வைத்துப் பேசுகிறான்? அனைவருக்கும் கேட்குமே..! எனத் தவித்தவளுக்கு விழி இரண்டிலும் கண்ணீர் சுரந்து நின்றது.  
பார்த்திருந்த ரோகிணிக்குப் பொறுக்கவே முடியவில்லை. காரணமே இன்றி சிறு சிறு விஷத்திற்குக் கூட எப்போதும் தன் அக்காளைக் கொத்திக் கொண்டே இருக்கிறானே! எனச் சீறினாள். 
சட்டென எழுந்தவள் இடையில் வந்து, “போதும் கார்த்திக், நிறுத்து.. அவள் ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லை, நிகழ்வதைத் தான் சொல்லினாள். உன் தவறை மறைக்க, என் அக்காவை இப்படியெல்லாம் பேசுகிற உரிமை உனக்கில்லை” என்றாள் ஆத்திரம் பொங்க. 
அவன் வீண் செலவு செய்கிறான் என அவன் அன்னை முதல் அனைவரும் புலம்புவது தானே! அதில் ஜனனி ஒரு வார்த்தை உதாரணம் சொல்லினால் மட்டும் குறைந்தா போய்விடுவான்? என்றெண்ணம்! 
இவர்கள் விவாதங்கள் சற்றே தொலைவிலிருந்த அனைவரின் செவிக்கும் பார்வைக்கும் நன்கு காட்சியாகியது. 
ஜனனி கைகளைப் பின்னிப் பிசைந்தபடி, “சாரி..” என கார்த்திக்கின் முகம் பார்த்து முணுமுணுத்தாள், ஆனாலும் அவளை இருவரும் கவனிப்பதாக இல்லை.
ரோகிணி நீண்ட மூச்சை இழுக்க, கார்த்திக்கு நுனி மூக்கு வரை சிவக்கத் துவங்கியது.
“என்ன உரிமை இல்லைன்னு சொல்லுற? அவள் என் மனைவி! உங்க எல்லாரை விடவும் எனக்கு தான் அவளிடம் எல்லா உரிமையும் இருக்கு..” என கார்த்திக் பொங்க, “அதுக்குன்னு என்ன வேணாலும் பேசிடுவியா நீ..?” என்றாள் அவளும் ஆத்திரமாக. 
கார்த்திக் மனைவியைக் குற்றமாய் பார்க்க, “மனைவின்னு பெருசா பேச வந்துட்டான். உன்னைக் கல்யாணம் செய்த நாளிலிருந்தே என் அக்கா சந்தோஷமாக இல்லை. நீ அவளைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை..” என பெரும் குற்றச்சாட்டை வைத்தாள் ரோகிணி. 
சொல்லும் ஆயுதமே! ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்! 
பெரியவள், “ரோகி..” என அதட்டலாக அழைக்க, நீ சொல்லாமலா அவள் சொல்கிறாள்! என குமுறினான். 
அனைவரின் முன்பும் அதுவும் திவ்யாவின் மாமியார் முன்வரை இப்படிச் சொல்லி விட்டாளே! இவளும் தடுக்கவில்லை! என நினைக்க, அவன் தன்மானம் பெரிதாய் அடிபட்டுப் போக, தலை குனிவாய் உணர்ந்தான்! 
திருமணம் முடிந்த பத்தே நாளில் புதுமனைவியை மகிழ்வாக வைத்துக் கொள்ளவில்லை, அந்த அளவிற்கு திறனற்றுப் போனவன் என்றே தானே அர்த்தமாகியது. 
கார்த்திக்கின் பார்வை அழுத்தமாக அவளைப் பார்க்க, ஜனனி தவிப்போடு பார்க்க, அதற்கு மேலும் அவனால் நொடி கூடத் தாமதிக்க முடியவில்லை, விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
“என்ன குமார், சின்னப்பிள்ளைய பேச விட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க?” எனச் சிவகாமி அதட்டலாகப் பாய, “அப்படியென்ன என் வீட்டுல அவளுக்குக் குறை வைத்தேன்? கல்யாணம் முடிந்த பத்தே நாள்ல அவன் சந்தோஷமா இல்லைன்னு சொல்லுற நீ.?.” என ரோகிணியிடமே சீறினார் திலகவதி. 
கார்த்திக்கைப் பேசியதை அவர்களால் தாங்கமுடியவில்லை.
உள்ளிருந்த வந்த வேணி, “ரோகி.. சின்னப்பிள்ளை நீ, உனக்கு என்ன தெரியும்? பேசாமல் இருடி..” என அதட்டினார். 
“யார் இவளால சின்னப்பெண்? ரொம்பவும் விவரம் தான்! சரியான வினை, பெரியவர்கள் என்ற மரியாதை இல்லாமல் சபையில் எதிர்த்துப் பேசுவதைப் பார்!” எனச் சுகந்தி நொடிந்து கொண்டாள். 
தங்கள் வளர்ப்பு விமர்சிக்கப்படுவதில் பெற்றோருக்கு பெரும் வருத்தம்! அன்னையின் வார்த்தைக்கு ரோகிணி அடங்க, அப்போதும் அவர்களுக்கு ஆறவில்லை. 
“அவள் தகுதிக்குத் தராதரம் பார்க்காமல் உன் வீட்டில் பெண் எடுத்ததே உன் உறவு வேண்டுமென்று தான், ஆனால் நீ என்னடா என்றால் பிள்ளையைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாய்? உன் மகள் என்ன சீரோடும் சிறப்போடும் வந்தாளா? வீட்டு வேலைகள் செய்கிறாளா? இல்லை சமைக்கத் தான் தெரியுமா? இத்தனை நாளும் உன் மகளை எப்படி கவனித்துக் கொண்டாள்? ஆனால் இவள் என்ன சொல்கிறாள் கேள்?” என சிவகாமி தங்கை சார்ப்பாய், தம்பியிடம் இடிந்து கொண்டிருந்தார். 
“ஆமாம் மாமா, ஜனனி வேற வீட்டுக்குப் போயிருந்தால் கூட, இப்படியெல்லாம் யாரும் தாங்கியிருக்க மாட்டார்கள். சித்தி அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை என்பதெல்லாம் பெரிய பொய்!” என்றாள் சுகந்தியும், அன்னையை வால் பிடித்துக் கொண்டு. 
“என்னைச் சொன்னாலும் சரி, என் பிள்ளை நீ எப்படிச் சொல்லலாம்? நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக மறுப்பேதுமில்லாமல் ஜனனியைக் கல்யாணம் செய்து கொண்டான் தெரியுமா? திருமணம் முடிந்த பத்தே நாளில் என்ன தெரியுமென அவள் சந்தோஷமாக இல்லை என இவள் சொல்கிறாள்?” 
திலகவதி முத்துக்குமாரிடம் கேட்டு நிற்க, “சரி தான் அக்கா, அவள் அறியாமையில் பேசி விட்டாள், சிறு பெண் என விட்டுவிடேன்..” என்றார் மெல்லிய குரலில். 
ரோகிணி சீறி வர, வேணியும் தர்ஷினியும் அடக்கினர். ஆற்றாமையில் பேசுவதாய் நினைக்க, அக்காக்களின் மனதிலிருக்கும் குறைகள் எல்லாம் வெடித்துச் சிதறுவதை அவரால் கேட்கச் சகிக்கவில்லை. இப்படியும் நினைத்தார்களா? அவர் மனம் வெதும்பியது! 
“எங்க அப்பாவை ஏன் கேட்குறீங்க? நான் தானே பேசினேன், எங்கிட்ட பேசுங்க..” ரோகிணி துள்ளி வந்து முன்னே நின்றாள். அவளால் தந்தையைப் பேசுவதை அனுமதிக்க இயலவில்லை!  
“பார்! இவள் சிறு பெண்ணா? வளர்த்து வைத்திருக்கிறாள் பார்..” திலகவதி நொடிந்து கொள்ள, “இல்லை தான். ஒரு பெண் கொஞ்சம் குரல் உயர்த்தினால் உடனே அவள் வளர்ப்பைக் குறை பேசி அமுக்கி விடுவீர்களா? இதென்ன நியாயம்?” என அழுத்தமாகக் கேட்டாள் ரோகிணி. 
“அம்மாடி, உன் அப்பன் கொண்டாடுவது போல் எல்லாம் உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு எங்களால் அமைதியாகப் போக முடியாது..” என திலகவதி உரைக்க, “உண்மையைச் சொன்னதால் தானே உங்களுக்கு உறுத்துகிறது..” என அவளும் வெடித்தாள். 
அன்னை அதட்ட, தந்தை அழைக்க, எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. மனதில் உள்ளதை பேசியவள், நான் சரியாகப் பேசுகிறேன் என்ற நிலையிலும் பிடிவாதமாக நின்றாள். 
“எது உண்மை..?”
“கார்த்திக் ஜனனியைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது தான்..”
“அப்படியா? அப்போ அவள் எங்கு சந்தோஷமாக இருப்பாளே அங்கே இருக்கச் சொல்..” என்ற திலவதி, அவ்வளவு தான் உறவு என்பது போல் சென்று விட்டார். 
அவர் செல்ல, அவர் பின்னே மொத்த குடும்பமும் கிளம்பியிருந்தது. பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் வீடே பெரும் அமைதியில் ஆழ்ந்தது. அப்போதும் முத்துக்குமாரால் பிள்ளைகளை எதுவும் சொல்ல இயலவில்லை, ஜனனி கலக்கத்தோடு தன்னறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள். 

Advertisement