Advertisement

நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! –மித்ரா
அத்தியாயம் 01
படைத்தவன் கண்ணீருக்கு நிறம் கொடுத்திருந்தால் அவள் கண்ணீர் இந்த நேரம் ஒரு காவியத்தையே ஓவியமாகத் தீட்டியிருக்கும். ஆனாலும் இல்லாதது நல்லது தான். யாருமறியாத, கறைபடியாத, மௌனமான கண்ணீராய் போயிற்று! 
தலையணையில் ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் கண்ணீர் துடைக்க துடைக்க ஊற்றாக வந்து கொண்டே இருந்தது. எதற்கும் இப்படி உடைந்து அழுபவள் அல்ல ஜனனி! வாழ்வில் பெரும் இன்னல்களை எல்லாம் தனியாய், கலங்காது தாங்கிக் கடந்து வந்திருக்கிறாள். ஆனாலும் அப்போதெல்லாம் சிதையாத மனம் இப்போது சிதைந்திருந்தது. 
திருமணம் முடிந்த பத்தே நாட்களில் அவனோடு வந்த பிரிவை அவளால் தாங்க இயலவில்லை. இந்த பிரிவு உறவின் முறிவா? தெரியாது! இந்த பிரிவும் எத்தனை நாள்? தெரியாது! இனி எதிர்காலம் என்ன? தெரியாது! அவனின் மனநிலை இப்போதென்ன? தெரியாது! 
இது தான் அவளைச் சிதைத்திருந்தது. அவன் விட்டுச் சென்று முழுதாக ஒரு நாள் முடிந்து போயிற்று. அவன் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பில்லை, ஏன் கோபத்தை கூட என்னிடம் காட்டாமல் போனான்? அது அல்லவே அவன் சுபாவம் என்ற ஆற்றாமை தான் அவளை அழுது, கரைய வைத்தது. 
பத்து நாட்கள் முன் வரை பட்டாம்பூச்சியாகச் சுற்றியவள் தான், இந்த பத்து நாட்களில் இன்பம் துன்பம் இரண்டின் உச்சநிலைகளையும் பார்த்தே விட்டாள். பத்தே நாளில் அவன் மீது பைத்தியமான காதல்! ஆனால் அவனுக்கு? நினைக்கையில் அவள் இதழோரம் கசந்த புன்னகை!
சிறு வயதிலிருந்து பார்த்துப் பேசி, நன்கு பழகிய அத்தை மகன் தான், ஆனால் கணவன் என்றாகிய பின் புதிதாகிப் போனான். உறவும் மனமும் இப்படி நொடியில் மாறும் என்றால் அதை ஏற்கும் பக்குவம் தனக்குத் தான் இல்லையோ? என்ற எண்ணம்! 
முன்பே இப்படி நிற்போம் என தெரிந்திருந்தால் இந்த திருமணப் பந்தத்தில் நுழைந்திருக்க மாட்டேனே! தன் மனதையும் அவனிடம் வெளிப்படுத்தாது, அவனையும் அறியாது, அர்த்தம் மாற வாழ்க்கை இலக்கணப் பிழையாகிப் போக, யாரை நோவது? 
“எல்லாத்துக்கும் நீ தாண்டி காரணம்! இப்படி உன் அக்கா வாழ்க்கைக்கே எமனாகி வந்து நிற்கிறாயே?”
உச்சஸ்தானில் அன்னை வேணியின் குரல் வெளியே கேட்க, உடன் பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டது. 
“நான் என்னம்மா செய்தேன்? உண்மையைத் தானே சொன்னேன்!” நியாயம் பேசினாள் தங்கை ரோகிணி. 
எங்கே கோபத்தில் தங்கையைத் தாக்கி விடுவாரோ? எனப் பதறி எழுந்து ஓடி வந்தாள் ஜனனி. நலுங்கிய தோற்றமும் அழுது, வீங்கிச் சிவந்த கண்களும் உயிர்ப்பற்ற விழியும் அவளைக் காணச் சகிக்காத, பரிதாபநிலை! எப்போதும் புதுப்பூவாய், புன்னகை முகமாக இருப்பவள், ஒரே நாளில் ஒடுங்கிப் போய்விட்டாள்! 
அவள் தோற்றம் பார்க்கவே ரோகிணியின் மீதான சினம் மேலும் அதிகரித்தது வேணிக்கு. 
“இந்த குடும்பத்துக்கு அவள் எவ்வளவு செய்திருக்கிறாள்? உன்னை இந்த அளவிற்குப் படிக்க வைத்ததே அவள் தானே? அந்த நன்றி இல்லாது அவள் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது இப்படிச் செய்து விட்டாயே?” 
மேலும் ரோகிணியைச் சாட, அவளுக்கோ மூக்கு விடைக்கக் கோபமும் இமை தடுக்க கண்ணீரும் கோர்த்து நின்றது. அதைப் பார்க்க, ஜனனிக்கு மனம் தாங்கவில்லை. 
மனம் குமுறிய ரோகிணி, “நான் உண்மை தானே சொல்லினேன்? ஏதோ கொலை குற்றம் செய்தது போல் நிற்க வைத்து என்னைப் பேசுகிறீர்களே? எப்போதுமே உங்களுக்கு அக்கா தானே உசத்தி? எப்போதும் அவளையே கொண்டாடுகிறீர்கள், அவளே போதாதா? பின் ஏன் என்னைப் பெற்றுக் கொண்டீர்கள்?” என வெடித்தாள். அக்காவின் மீது கோபமில்லை ஆனால் குற்றம்சாட்டும் அன்னையின் மீது உண்டு. 
என்ன பேசுகிறாள்? கொதித்த வேணி, “வாயை மூடுடி, இப்படி எல்லாம் கேட்பாய் எனத் தெரிந்திருந்தால் உன்னை பெற்றுக்கவே மாட்டேன். உன் வாயாலே தான் இத்தனை பிரச்சனையும், வயதுக்கு தக அடக்கிப் பேசிப் பழகு. என்ன வளர்த்திருக்கிறாள் பிள்ளையை? என உன்னால் தான் எனக்கு உறவுகளுள் தலைகுனிவு!” என்ற அதட்டல். 
ரோகிணிக்கு மேலும் சினமேற, பார்த்திருந்த ஜனனி, “அம்மா..” மெல்லிய குரலில் கண்டிப்போடு அழைத்தாள். கோகில குரல், நலுங்கிப் போய் கரகரத்திருந்தது. 
“அவளிடம் ஏன்மா கோபம் காட்டுகிறீர்கள்? அவள் மீது என்ன தவறு? விடுங்கள், அவள் சொல்லியதும் உண்மை தானே?” என்றவளுக்கு நெஞ்சில் சுருக்கென்ற வலி! 
தங்கைக்காகப் பேசினால் தான், ஆனால் கணவனின் மீதான குற்றத்தை இவளும் ஆமோதிப்பதாகத் தான் அர்த்தமாகி இருந்தது. அது தான் மேலும் வலியைக் கொடுத்திருந்தது. 
அதற்குள் படுக்கையறையிலிருந்து மெல்ல நடந்து வந்தார் தந்தை முத்துக்குமார். பிள்ளைகளின் சந்தோஷச் சிரிப்பில் நிறைத்திருந்த வீடு இப்படி கசகசக்க, கேட்க இயலவில்லை. அவர் பலவீனமான இதயம் மேலும் பலவீனமடைந்து வலிப்பது போன்ற உணர்வு! 
“வேணி, ஏன் இவ்வளவு சத்தம்?” என்ற குரலே, அடக்கிப் பேசு என்ற அறிவுரையோடு வந்தது. 
வேணி எதிர்த்துப் பேசிவிடுவார் தான் ஆனால் இப்போது கணவரின் உடல் நிலை மட்டுமே கருத்தில் உள்ளதால் அடங்கினார். 
“இப்படி நீங்கள் கொடுக்கும் செல்லம் தான் இவளுக்கு வாய் கொழுப்பு அதிகரிக்கக் காரணம். இவரும் கண்டிப்பதில்லை நான் கண்டித்தால் அதுவும் குற்றம்! சரி தான்” என்ற மெல்லிய குரலில் முனங்கினார். ஒரு முறைப்பான பார்வையை கணவர் மீது வீசியவர் சமையலறைக்குள் சென்று விட்டார். 
முத்துக்குமார் தளர்வாக சோபாவில் அமர, ஓடி வந்து அவரின் மறுபுறம் அமர்ந்தாள் ரோகிணி. அன்னை மட்டுமல்ல அத்தனை பேரும் இதைச் சொல்லித் தான் தந்தையை சாடிச் சென்றிருந்தனர். தன்னைப் பேசுவதற்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் எனக் காத்திருந்தார்கள் போலும் மனதில் குமுறினாள். 
ஜனனியையும் தன்னை நோக்கி வருமாறு கையசைக்க, அதே நேரம், “நான் பேசியது தவறாப்பா?” என்றாள் ரோகிணி. அக்காளின் தோற்றமும் அத்தனை பேரின் குற்றச்சாட்டும் அவளை யோசிக்க வைக்க, தந்தையிடம் கேட்டாள். 
ஜனனி அருகே வந்து அமர, அவள் தலை தடவியவர், “ஜனனிக்காக நீ பேசியது தான் தவறு” என்றார் ரோகிணிக்குப் பதிலாக. 
தானே பேசியிருக்க வேண்டும் அல்லது தங்கையைப் பேச விடாது தடுத்திருக்க வேண்டும் என்ற தவறு அப்போது தான் ஜனனிக்குப் புரிந்தது. 
உண்மையை தானே சொன்னேன் என்ற பிடியில் நிலையாக நின்ற ரோகிணி, “நீங்கள் யாராவது பேசியிருந்தால் நான் ஏன் பேசப் போகிறேன்?” என வினவினாள். 
அவர்கள் பிரச்சனையில் நீ தலையிட்டது தான் தவறு என்றவர் சொல்ல வருவதை அவள் புரிந்து கொள்வதாகவே இல்லை. 
“இப்படி பொதுவுல உங்க அக்காவுக்காகப் பேசினது கார்த்திக்கை நீ குற்றம் சாட்டுவதாகத் தான் அர்த்தம், ஒருத்தவுங்க தவறை தனியா எடுத்துச் சொல்லலாம் அதை விட்டு இப்படி அவங்களை குறைவா பேசுறதுக்கு அவங்க தவறை பொதுவுல எடுத்துச் சொல்லக்கூடாது. அதுவும் ஜனனி இருக்கும் போது நீ சொல்லிருக்கவே கூடாது. நீ கொஞ்சம் யோசிச்சிருக்காலம் குட்டிம்மா” 
கடிந்து கொள்ளவில்லை, மென்மையான அறிவுரையாகத் தான் உரைத்தார். அதன் பின்னே ரோகிணியின் மனக்குமுறல் சற்று அடங்க, யோசிக்கலானாள்!
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொள்ளும்! அதை நாம் பயன்படுத்தும் விதம் பொறுத்து.
முத்துக்குமாருக்கும் பெரும் வருத்தம் தான்! அது, பேசாது மகளை விட்டுச் சென்ற அவனின் மீதில்லை, பேசியே தன்னை நோகடித்துச் சென்ற அக்காள்களின் மீதே! 
“நான் போய் கார்த்திக்கிட்ட சாரி கேட்கட்டுமாப்பா?” என ரோகிணி வினவ, “இல்லை வேண்டாம், நீ எதுவும் தவறு செய்யவில்லை. இனி நீ பேச வேண்டிய அவசியமுமில்லை. இந்நிகழ்வை இப்படியே விட்டுவிடு” என்றாள் ஜனனி. 
“அதற்கில்லை ஜனனி, நான் ஒரு முறை பேசுறேனே?” ரோகிணி மீண்டும் வினவ, ஜனனி பிடிவாதமாக மறுத்தே விட்டாள்.
தீர்க்க முடியாத பிரச்சனை என எதுவுமில்லை, அதைத் தீர்க்கும் முயற்சிகள் எடுக்காத வரை! 
இனி தான் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை என முத்துக்குமார் அமைதியாக இருந்தார். தன் இரு பிள்ளைகளின் பண்பும், அறிவும் நன்கறிந்தவர். எப்போதும் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமென்ற நம்பிக்கை! அவர்களை எண்ணி சிறிது பெருமையும் கர்வமும் கூட! 
பெண்பிள்ளைகளை பெறுவதே வரமென நினைப்பவருக்கு, தன் பிள்ளைகள் இருவரும் தேவைதைகளே! 
எழுந்த ஜனனி மீண்டும் தன் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள, மனம் கனக்கப் பார்த்திருந்தார் முத்துக்குமார். 
ஜனனியை இப்படி வாடிய சித்திரமாகக் காண அவருக்கும் மனம் விம்மியது. எத்தனை அருமை பெருமையாய் வளர்த்த அன்பு மகள்! 
ஜனனி மட்டுமல்ல ரோகிணியும் சிறுவயதிலிருந்தே அன்போடும் பண்போடும் வளர்த்திருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் குடும்பம் மொத்தமும் சென்னையிலிருந்த காலம். முத்துக்குமாருக்குத் தொழிலும் அங்கு தான். தொழில் சிறிது சிறிது சறுக்க, அந்த கவலையில் உடல் நலமும் குன்றியது. 
ஆனால் இதை எதையுமே வீட்டில் சொல்லாமல் முடிந்த அளவிற்கு சமாளிக்க, இறுதியில் தொழில் மொத்தமும் பெரும் கடன் சுமையோடு கை நழுவியிருந்தது. அதே நேரம் அவரும் நிலை குழையச் சரிந்து விழுந்தார். எதுவும் தெரியாமல் மூன்று பேருமே நிலை தடுமாறி நிற்க, ஜனனி மட்டும் தைரியமாக நின்றாள். 
தொழிலைத் தான் எடுத்து நடத்துவதாகக் கேட்க, மறுத்த முத்துக்குமார் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்று ஆசையோடு கேட்டார். அங்கிருக்கும் வீட்டை விற்று கடனை அடைந்து, தங்கள் நகையை வைத்து முத்துக்குமாரின் மருத்துவச் செலவுகளை கவனித்தனர். உயிர் பிழைத்தாலும் இனி காலம் மீதியும் மருந்து மாத்திரையின் தயவால் என்றாகிப் போனது. 
அவர் சற்றே உடல் தேற, சென்னையிலிருந்து சொந்த ஊரான திருச்சிக்கு குடும்பமாக வந்தனர். பரம்பரை வீடு மட்டுமிருக்க, வேலை, வருமானம் என எதுவுமில்லாத நிலை. ஜனனி அப்போது தான் பட்டப்படிப்பு முடித்திருக்க, ரோகிணி இரண்டாமாண்டில் இருந்தாள். 
உறவுகளின் ஆதரவு இருந்த போதும், அது எத்தனை நாளைக்கு என்ற நிதர்சனம் புரிய, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளமாயினும் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். உடனடியாக உறவுகளின் சிபாரிசில் வங்கிக்கடன் பெற்று தங்கையையும் படிக்க வைத்தாள். அதே நேரம் அவளும் வங்கித் தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டுமிருந்தாள். 
வேணி, தான் ஏதாவது வேலைக்குச் செல்வதாக உரைக்க, மறுத்தவள் அவர் திறமை அறிந்து அவருக்கான சிறு தொழிலையும் வைத்துக்கொடுத்தாள். இப்படியாக இந்த மொத்த குடும்பத்தையும் கட்டமைத்து தாங்கி நிற்கும் தூணாக இன்றளவும் நிற்கிறாளே!

Advertisement