Advertisement

அத்தியாயம் 06
காலை ஏழு மணியளவில் கண் விழித்த ஜனனி முதலில் சென்று குளித்து வந்து, பின் கார்த்திக்கை எழுப்பி விட்டாள். படுக்கையைச் சீர் படுத்தியவள், அதன் பின் சமையலறை நோக்கிச் சென்றாள். 
எதிரே வந்த சுகந்தி இருவருக்குமான காபியைத் தர, மலர்ந்த முகமாக வாங்கிக் கொண்டவள் மீண்டும் அறைக்குள் வந்தாள். சற்று முன்பாகவே விழித்திருக்க வேண்டுமோ? பொறுப்பும் கடமையும் கூடியிருப்பதாக உணர்ந்திருந்தாள். 
உள்ளே செல்ல, கார்த்திக் இடையில் கண்டிய துண்டோடு குளியலறையிலிருந்து வெளியே வந்தான். அவனை அவ்வாறு காண, ஒரு நொடி பழைய நிகழ்வில், குறும்புச் சிரிப்பு பூத்தது. 
உத்தரவின்றி உள்ளே வந்தாலோ, உடை மாற்றும் நேரம் வந்தாலோ.. யாராக இருந்தாலும் சிடுசிடுத்து வெளியே அனுப்பிவிடுவான். இப்போது என்ன செய்வானாம்? என்ற எண்ணத்தில் அவன் முன் வந்து நின்றாள். 
உடை அணிந்து கொண்டிருந்தவன் என்ன என்பது போல் பார்த்தான். அவன் தோளில் மாலையாக கரம் கோர்த்தவள், முத்தமிடுவது போல் நெருங்கி வந்து, கன்னங்களில் அழுத்தக் கடித்தாள். அவன் சிவந்த கன்னம் தக்காளியாய் மேலும் சிவக்க, தொட்டுக் கொஞ்சியவள், “அமூல் பேபி..” என்றாள் கிசுகிசுப்பாக. 
என்னவோ நினைத்திருந்தவன் அவள் தன்னை கேலி செய்யவுமே, மூக்கு விடைக்க முறைத்தான். தற்போது அவன் வயிற்றை அணைத்திருந்தவள், “பிள்ளையார் தொந்தி..” என மேலும் சீண்ட, சட்டென அவன் முறைப்பை விடுத்து, மூச்சை உள்ளிழுக்க, அதில் மேலும் கலகலவென சிரித்தாள். 
“அடிக் கழுதை..” எனச் சீறி வர, அவள் சிட்டாய் பறந்திருக்க, அவளைத் துரத்தியபடி வெளியிலும் விரட்டி வந்திருந்தான். 
பெரியவர்கள் மட்டுமே விழித்திருக்க, அங்குமிங்கும் ஓடியவள் இறுதியாக அத்தையின் பின் மறைத்தாள். சோபாவில் அமர்த்திருந்த திவ்யா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, சுகந்தி சத்தமாகச் சிரித்துவிட்டாள். 
அவன் பார்வை ஜனனியை முறைக்க, “டேய்.. என்னடா இது..? சட்டை கூட போடாம..” என திலகவதி திட்டி, அறை நோக்கிச் செல்லுமாறு கை காட்டினார். 
சமையலறையிலிருந்து வந்த காயத்திரி, “என்ன புது மாப்பிள்ளை..!” எனக் கேலியாகக் கேட்க, “நல்ல வேளை பிள்ளைகள் எழலை.. உள்ள போய் ட்ரெஸ் பண்ணுடா..” என்றாள் சுகந்தி சிரிப்போடு. 
கார்த்திக் அப்போது தன் செயலுக்கான அவர்கள் கேலி புரிய, விளக்கெண்ணெய் குடித்தது போலே ஒரு நொடி விழித்தவன் குடுகுடுவென அறை நோக்கிச் சென்றுவிட்டான். 
அறைக்குள் வந்த கார்த்திக் ஏற்கனவே ஜீன் அணிந்திருக்க, மேலே ஒரு டீசர்ட்டை எடுத்து அணிந்தான். மனதில் ஜனனியைத் தான் கருவிக் கொண்டிருந்தான். சும்மாவே தன்னை சீண்டுவாள், இப்போது கணவன் என்ற கூடுதல் உரிமையும் உறவும் வந்துவிட, வால்தனம் நீண்டு விட்டது போலும்! 
“என்னக்கா இதுக இன்னும் சின்னப்பிள்ளைகளாகவே இருக்குதுங்க..” எனத் திலகவதி சிவகாமியிடம் வருத்தம் தெரிவிக்க, “அதெல்லாம் ஜனனி பொறுப்பான பிள்ளை, புரிந்து நடந்து கொள்வாள்..” என்றார் ஆறுதலாக. 
ஜனனியும் அங்கு தானிருந்தாள். பக்குவமாக நடந்து கொள் என அறிவுரை அவளுக்குச் சொல்வது புரிந்தது. விளையாட்டுத்தனங்களை தங்கள் அறையோடு நிறுத்தியிருக்க வேண்டும், வரவேற்பறை வரை வந்தது தவறு என்பது அப்போது தான் அவளுக்கு உரைத்தது. 
பெரியவர்கள் சென்றுவிட, திவ்யா, காயத்திரி, சுகந்தி என மூவரும் அவளைப் பிடித்துக் கொண்டு சிரிப்போடு கேலியாக, துருவி துருவி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். ஜனனியும் பிரகாஷித்த முகமே பதில் சொல்லும் தான், தெரிந்தும் அவர்கள் கேள்விகளை அடுக்க, பதில் சொல்ல முடியாது திணறியவள் தப்பித்து அறைக்குள் சென்று விட்டாள். 
அவர்கள் கேலியை தன்னாலே தாங்க இயலவில்லை, இதைக் கார்த்திக் கேட்டிருந்தால் அவ்வளவு தான்! நல்லவேளையாக கார்த்திக் அங்கில்லை, என்ற ஆசுவாசம்!
உள்ளே வந்தால் கார்த்திக் முறைத்து நின்றான். வேடுவனுக்கு பயந்து சிங்கத்தின் குகையிலே மாட்டிய நிலை தான்! 
“அடிக்காத கார்த்திக், நீ அடிச்சே.. அப்புறம் நான் கடிப்பேன்..” என அவன் நெருங்கும் போதே மிரட்டல் விட, “அதையும் பார்ப்போம்..” என சவால் விட்டவன், எட்டிப் பிடித்தான். 
ஒரு கையால் வலிக்கக் கன்னத்தைக் கிள்ளியவன், மறு கையால் நங்.. நங்கென்று தலையில் கொட்டினான். பல்லைக் கடித்தவள், “போதும் வலிக்குது.. கார்த்திக்.. விடுடா..” என முனங்கினாள். 
அவன் விடுவதாய் தெரியவில்லை, ஒரு நொடியில் யோசித்தவள், அவன் அசந்த நேரம் கிச்சு கிச்சு மூட்டினாள். நெளிந்தவன், கையெடுத்ததுமே நழுவி வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள். 
வெளிப்படையாய் முகம் சுளித்தவன், “என்ன ஜனனி இது? சிறுபிள்ளைப் போன்ற விளையாட்டுத்தனங்கள்..?” என்றான் சிடுசிடுப்போடு. 
அவன் முகம் காட்டிய பாவனையிலே, அவன் ரசிக்கவில்லை என நன்கறிந்து கொண்டாள். சிவகாமி எடுத்துச் சொல்லிய போதே அவள் தவறும் புரிந்திருந்தது, இப்போது இவனும் சிடுசிடுக்க, “சா..சாரி..” என வாய்க்குள்ளே முனங்கினாள். 
“இனியொரு போதும் இது போலே செய்யாதே..!” என அறிவுரையோ கட்டளையோ கடினமான குரலில் அவன் உரைக்க, அதற்கு மட்டும் வேகவேகமாக தலையாட்டி வைத்தாள். 
அதில் முகம் இலகியவன், “குட், சீக்கிரம் தயாராகி வா.. வெளியே போகலாம்..” என்க, அதற்கும் தலையாட்டினாள். 
திருமணத்திற்கு முன்னரும் பிள்ளைகளோடு இது போலே ஒருவருக்கு ஒருவர் சீண்டி விளையாடுவர் தான். ஆனால் அப்போதெல்லாம் ரசித்தவனுக்கு மனைவி என்றான பின்  இப்போது எரிச்சலாக இருந்தது. 
தன் உருவ அமைப்புகளை வைத்து அவள் செய்யும் கேலி, கிண்டல் மனைவி அவனைக் குறையாக நினைப்பதாகத் தோன்றியது. அதையும் சொல்லிச் சிரித்ததை, அவனால் அனுமதிக்க முடியவில்லை. ஒருவித எரிச்சல்.. அமிலமாய் அவனை அரித்தது. 
கார்த்திக் சென்று விட, சிவகாமி போலே பொறுப்பாக நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறுவதாக நினைத்தாள் ஜனனி. 
உண்மையில் அவன் உருவ அமைப்புகளை அவள் குறையாக நினைத்ததில்லை, மாறாக ரசித்திருக்கிறாள். ஆசையோடு அணைத்திருந்தாள். 
நேற்றைய இரவெல்லாம் கொண்டாடித் தீர்த்தவன் காலையில் எழுந்ததும் கண்டுகொள்ளாதது ஏமாற்றமே! சற்று நெருங்கிச் சீண்டினால் அள்ளி அணைப்பான், ஆசையாகக் கொஞ்சுவான் என எதிர்பார்த்தால், ஆனால் அவனோ எட்டி வைத்துக் கொட்டி விட்டுச் சென்றிருக்கிறான். 
கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி நின்றாள். நேற்று இரவு தன்னை அழகென்றானே காலையில் அழகாய் இல்லையோ? கண்ணாடியில் அப்படியும் இப்படியுமாய் தன்னைப் பார்த்தாள். ஒருவேளை உறக்கத்தில் நான் கொண்ட கனவா? அத்தனையும் கனவு தானா? இல்லை உண்மையாக உணர்ந்த ஓர் உயிரான உறவு! ஒருவேளை இரவு மட்டும் தான் நெருங்குவானோ? குழம்பிப் போனாள். 
அவள் ஒன்றை எதிர்பார்த்துச் செய்ய, அது பிசறி ஏமாற்றமாகியது.
அவன் கிளம்பி வரச் சொன்னது வேறு நினைவில் வர, வேகவேகமாக காய்ந்த குழலை அள்ளிப் பின்னலிட்டுக் கொண்டு ஓடி வந்தாள். 
“என்ன ஜனனி நீ? சின்ன பையன் அஜய் கூட கிளம்பி வந்துட்டான், நீ இப்போது தான் எழுந்து வார?” என தர்ஷினி குறைபட்டுக் கொள்ள, சுற்றிலும் விழியை சுழற்றினால் மொத்த குடும்பமும் கிளம்பி நிற்பது தெரிந்தது. 
அவள் என்னவோ, தான் முகம் வாடியதால், சமாதானம் செய்ய வெளியில் அழைத்துச் செல்வதாக நினைத்து வர, இங்கு உடன் அத்தனை பேரும் என்பது அதிர்ச்சி தான்!
“என்ன ஜனனி அப்படியே நிக்கிற? சாப்பிட வா..” என திலகவதி அழைக்கவும், கார்த்திக்கைக் கண்கள் தேட, அவனோ குனிந்த தலை நிமிராது உணவே முக்கியம் என உண்டு கொண்டிருந்தான். 
சிவகாமி பரிமாற, எதுவும் பேசாது எதிரே சென்று அமர்ந்தவள், உண்டாள். 
கார்த்திக் உண்டு முடித்திருக்க, தெரு முக்கிலிருக்கும் பூக்கடையில் ஐநூறு பூ வாங்கி வா என அனுப்பி வைத்தார் திலகவதி. 
சரியென்று சென்றவன் சில நிமிடங்களில் திரும்பி வருகையில் கையில் ஒரு பெரிய பை நிறைய மல்லிகைச் சரங்களோடு வந்தான். 
“என்ன புது மாப்பிள்ளை? பூக்கடையையே சுருட்டிட்டி வந்துட்டீங்க போல?” என காயத்திரி கேலியுரைக்க, ஜனனி திருதிருவென முழித்தபடி அவனைப் பார்த்திருந்தாள். 
அதற்குள் கவனித்துவிட்ட திலகவதி, “என்னடா இது? ஒரு பெரிய கவர் நிறைய வாங்கி வந்திருக்கே? ஐநூறு பூ தானே வாங்கி வரச் சொன்னேன்?” என்றார் விசாரணையாக. 
“அதாம்மா ஐநூறு ரூபாய்க்குத் தான் வாங்கினேன். இன்னைக்கு பூ விலை வேறு சல்லிசா இருக்கவும் இவ்வளவு கொடுத்துட்டாங்க..” என்றான் அறியாப்பிள்ளையாக.  
ஜனனிக்குச் சிரிப்பு பொங்கியது, வாய் மூடி அடக்கினாள். மற்றவர்கள் சிரித்தே விட, திலகவதி தலையில் அடித்துக் கொண்டார். 
“உன்னைப் போய் அனுப்பினேனே..” அவர் நொந்து கொள்ள, அவனுக்கு ஏதோ சொதப்பிவிட்டோம் என்பது புரிய, “ஒன்னும் வீணாகாது..” என்றான் வீம்பாக, பார்வையோ ஜனனியிடம். 
அவளுக்குக் கொடுக்கும் எண்ணம்! அவளே வைத்தாலும் இவ்வளவு வைக்க முடியாது என்ற அளவெல்லாம் அவனுக்குத் தெரியாது. 
“அதான் வீணாகாதுன்னு சொல்லுறானே, விடுங்க அத்தை..” எனக் காயத்திரி கேலி போல சமாதானம் உரைக்க, “அத்தை, மச்சான் விவரமா தான் வாங்கிட்டு வந்திருக்காப்ல..” என சுகந்தியின் கணவன் ராஜனும் கேலி செய்தான். 
எப்படியோ போ என்பது போலே திலவதி சென்றுவிட, “நீங்க கொண்டாடுங்க.. கொண்டாடுங்க..” என ஜனனியின் தோளில் இடித்துக் கிண்டல் செய்தாள் சுகந்தி. 
ஜனனிக்கு ஐயோ என்றாகிப் போக, கன்னங்கள் சிவக்க, தலை குனிந்துக் கொண்டாள். 
அதே நேரம் வேணியும் ரோகிணியும் வர, என்னவோ வெகு நாட்கள் பின் காண்பது போல் முகம் மலர்ந்தாள். அதன் பின் அனைவரும் பேசிக் கொள்வதிலே கோவிலுக்குச் செல்கிறோம் என்ற தகவல் உணர்ந்து கொண்டாள். 
அத்தனை பேரில் அவன் எங்கே அவளைக் கண்டு கொள்ள? வெகுநேரமாக அவன் நிரஞ்சனுடன் அதி முக்கியமாய் விவாதித்துக் கொண்டிருக்க, ஜனனியும் வேணியின் விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லியபடி ஒட்டிக் கொண்டாள். 
திலகவதி சிறப்பு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருக்க, அனைவருமாக கிளம்பி கோவிலுக்குச் சென்றனர். நின்று அபிஷேகம் முடிய, அம்மனை தரிசித்தனர். பின் அவர்கள் கையாலே பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்குமாறு திலகவதி ஏற்பாடு செய்திருந்தார். 
ஜனனிக்குத் தெய்வத்தின் அருளைப் பெற்ற உணர்வு, உள்ளம் நிறைந்து போனது! அதில் மன சுணக்கம் எல்லாம் மறைந்தும் போனது. 
கோவிலிலிருந்து திவ்யாவுடன் பெரியவர்கள் அனைவரும் வீடு திரும்பினர். 
கார்த்திக் பிள்ளைகளோடு ஜனனியையும் திரையரங்கிற்கு அழைத்துச் சென்றான். வெகு நாட்களுக்குப் பின் இவ்வாறு வந்ததில், ஏக குஷி! கார்த்திக் ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து கவனித்தான். 
ஜனனிக்குத் தோன்றியது இவன் ஏன் இவ்வளவு செலவு செய்கிறான் என்றது தான். பிள்ளைக்குச் செய்வதில் பிரச்சனையில்லை, ஆனால் தனித்தனியாகச் செய்கிறேன் என கணக்குப் பாராது செலவு செய்வது அவளுக்கு முரண்டியது.  
படம் பார்த்து முடிய, ஒருவருக்கொருவர் அளாவிக் கொண்டும், பாட்டுப் பாடிக் கொண்டும், கொண்டாட்டமாக வீடு வந்தனர். 
திலகவதி தான் அத்தனை பேருக்கும் சமைத்து வைத்திருந்தார். திவ்யாவை தவிர, மற்றவர்கள் யாருமில்லாது போக, “எங்கேம்மா, அண்ணன், அக்கா, பெரியம்மா.. எல்லாரும்..” என விசாரித்தான். 
“என்னைக்கு அவங்க எல்லாம் தங்குனாங்க? அவங்க அவங்களுக்கு அவங்க வேலை தான் பெருசு..” என திலகவதி குறைபட்டுக் கொள்ள, “எல்லாம் கிளம்பிட்டாங்க, கார்த்திக்..” என்றாள் திவ்யா. 
ஜனனி திரும்பி, கிஷோர், அஜய் எனப் பார்க்க, “எங்களுக்குத் தான் எக்ஸாம் முடிந்து விட்டதே..! இது ஹாலிடேஸ்..” என்றனர். 
“எங்களுக்கும் ஸ்டடி ஹாலிடேஸ்..” என ஒரே குரலில் நிரஞ்சன், தர்ஷினியும் உரைக்க, “ஹே..ஹோ..” எனக் கூவலோடு அத்தனை பேரையும் ஒன்றாக அணைத்துக் கொண்டாள். 
சிவகாமியின் பிள்ளைகள் சுரேஷ், சுகந்தி படிக்கும் போதே விடுமுறை நாட்கள் என்றால் அவர்களுக்கு இங்கு தான், அதே போல் இப்போது அவர்கள் பிள்ளைகளுக்கும்! 
அனைவரும் வேலைக்குச் செல்ல, சிவகாமிக்கு உணவகத்தைக் கவனிப்பதே பெரும் வேலையாக இருக்க, இங்கே திலகவதி தான் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வார். 
கடந்த வருடம் கார்த்திக் வேலைக்குச் செல்லும் முன் வரை, இவர்கள் விடுமுறைக்கு வந்தால் ஏற்காடு, ஊட்டு, கேரளா என எங்கேயாவது சுற்றுலாத் தளங்களுக்கு அவன் தான் அழைத்துச் சென்றிடுவான். ஜனனி வேலைக்குச் சென்றிடுவதால் அவர்களோடு இருக்கும் நேரங்களே குறைவு. 
இப்போது அந்த வாய்ப்புக் கிடைத்ததில் தான் அவளுக்கு அத்தனை சந்தோஷம்!  
“சரி, சரி போதும் போய் படுங்க.. மிச்சத்தை எல்லாம் நாளைக்கு கொண்டாடிக்கிடலாம்..” என திலகவதி அதட்டவுமே சற்று அடங்கினர். 
ரோகிணி அவள் வீட்டிற்குக் கிளம்ப, தர்ஷினி, திவ்யாவோடு சென்றுவிட்டாள். நிரஞ்சன், அஜய், கிஷோர் அனைவரும் ஒரே அறையில் படுக்க, பால் ஆற்றிக் கொடுத்து விட்டு, அவர்கள் அறைக்குள் வந்தாள் ஜனனி. 
கார்த்திக்கிடம் பால் டம்ளரைக் கொடுக்க, அவள் கைகளைப் பற்ற முயல, நழுவிக் கொண்டாள். 
மாற்றுடையை எடுத்தவள், “கசகசன்னு இருக்கு குளித்துவிட்டு வருகிறேன்..” என ஓடியும் விட, கார்த்திக் பார்வை தான் அவளைச் சுற்றிக் கொண்டிருந்தது. அர்த்தமறிந்த பார்வை தான், இருந்தும் அறியாதது போலே போக்குக் காட்டினாள்.
“எங்குச் செல்வாய் எப்படியும் இங்கு தானே வர வேண்டும்..” என குரல் கொடுத்தவனும் காத்திருந்தான். 
ஜனனிக்கு கார்த்திக்கை ஏற்கனவே பிடிக்கும். இப்போது அந்த பிடித்தம் இன்னும் இன்னும் அதிகமாகி இருந்தது. கார்த்திக் என்றால் தன்னுயிரின் பாதி என்பாள்! 
கார்த்திக்கு ஜனனியைப் பிடிக்கும் தான் ஆனால் அது மற்ற அனைவரையும் போலே,  கார்த்திக்கு இப்போது அவளிடம் ஒரு மயக்கமிருந்தது அவ்வளவே! யாரையாவது திருமணம் செய்வது தானே? அது ஜனனியாகவே இருக்கட்டுமே என்றெண்ணியே சம்மதம் உரைத்தான். 
குளித்து முடித்தவள் மெல்லத் தலையை நீட்டி, எட்டிப்பார்க்க, கட்டிலில் கார்த்திக்கைக் காணும்! இன்னும் சற்று வெளியில் வந்தவள் அறை முழுவதும் பார்வையைச் சுழற்ற, கதவின் மறைவில் ஒளித்திருந்தவன் அவள் எதிர்பாராத நொடி, சட்டென கைகளில் தூக்கி இருந்தான். 
முதலில் திடுக்கிட்டவள் அவன் என்றறியவும் அமைதியானாள். இதென்ன? இவன் செய்வது மட்டும் விளையாட்டுத்தனங்கள் இல்லையோ? அவள் மனம் எடுத்துரைக்க, கார்த்திக் கன்னத்தில் கிள்ளினாள். 
அவள் கிள்ளுவதன் காரணமே உணராதவன், வலியோடு அவளைக் கட்டிலில் விட்டு, தண்டனையாய் செவிதழ்களை சிறையெடுத்தான். ஒரு நொடியிலே அத்தனையும் மறக்க, மயங்கிப் போனாள் ஜனனி! நேற்றைய பாடத்தை இன்றும் வல்லினமாய் தொடர்ந்தனர் இருவரும்! 

Advertisement