Advertisement

         திருக்கடையூர் வந்து சேர்ந்த பொழுது இரவு நேரம் ஆகியிருந்தது. மிக இனிமையான பயணம். நிறைய மாதங்கள் கழித்து குடும்பமும் நண்பர்களுமாய் இந்த பயணம் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அனைவரும் நேராக தங்க பதிவு செய்திருந்த விடுதிக்கு சென்றுவிட்டனர். எல்லோரும் அங்கே சாப்பிட்டு தங்க, பெரியவர்கள் விரைவாக உறங்க சென்றாலும், சிரியவர்கள் அரட்டை அடிக்க, ஒருவழியாக நள்ளிரவுக்கு மேல் உறங்க சென்றனர். 

         ஸ்ரீயும் வாசுவும் சில மணி நேரமே உறங்கி எழ, இருவரும் விடியலில் செய்யவேண்டிய வேலைகளை கார்த்தி தேனுவுடன் சேர்ந்து செய்ய, எல்லாம் எளிதாய் முடிந்திற்று. 

        காலையில் விரைவாக கோவிலுக்கு சென்றவர்கள் சிவசு தாத்தா விரும்பியபடியே மாலை மட்டும் மாற்றி திருமணம் முடித்தார்கள். இளைய பட்டாளம் நிறைய இருக்க, சிவசு தாத்தாவினால் புகைபடுத்துக்கு கூட கூச்சமில்லாமல் போஸ் கொடுக்க சிரம்மபட்டு போனார். ஆனால் ஆச்சியோ டிசைன் டிசைனாக போஸ் கொடுக்க, தாத்தாவிற்கு வெட்கம் சூழ்ந்து கொண்டது. 

     அதை பார்த்து அதிகமாக மகிழ்ச்சியானது சீதாலக்ஷ்மி. இன்னும் சில ஆண்டுகளில் அவருக்கும் கோதண்டத்துக்கும் அங்கே அறுபதாம் திருமணம் என வாசு ஏற்கனவு வீட்டில் கலந்து பேசியிருந்தான். அதனால் அவருக்கு இந்த திருமணம் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஐம்பதுகளில் இருந்தாலும் திருமண கனவை தாண்டி ஒரு நிறைவு அவருள். 

     சீதாவின் முகத்தை பார்த்த கோதண்டம் என்ன நினைத்தாரோ, அவரும் அருகில் வந்து யாரும் அறியா வண்ணம் சீதாவின் கையை மறைவாக பற்றிக்கொண்டார். சீதாவினால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சி, ஆச்சர்யம் என எல்லாம் கலந்து அவர் முகத்தில் பூரிப்பை கொடுக்க, நெகிழ்சியாய் கோதண்டத்தை திரும்பி பார்த்தார். அவர்களுக்கு ஆத்மார்த்தமான தருணம் அது.    

        காலையில் திருமணம் முடிந்ததும் அங்கே சாப்பிட்டு கிளம்பி திருச்சிக்கு மதியதிற்குள் வந்துவிட்டார்கள். நேராக அவர்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கியவர்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து நேராக வாசுவின் மண்டபம் வந்து சேர்ந்தனர். 

       என்பதாம் திருமணம் என்பதால் நண்பர்கள் உறவினார்கள் என நெருங்கியவர்களுடன் மட்டும் திருமணம் முடித்ததால், வாசு, திருமண விருந்துக்கு ஊருக்குள் இருக்கும் உறவினர்களுக்கு அழைத்திருந்தான். உறவினார்கள், நண்பர்கள், தன்னிடம் வேலை பார்பவர்கள் என வாசுவின் மண்டபம் நிறைந்து போனது. கூட்டம் குறைந்தபாடில்லை, ஆட்கள் வருவதும் போவதுமாய் இருக்க, சிவசு தாத்தாவையும், ஆச்சியையும் தனியாக ஒரு அறையில் இளைப்பாற சொன்ன வாசு, கார்த்தியுடன் சேர்ந்து அத்தைனையும் கவனிக்க, நேரம் சென்றதே தெரியவில்லை. 

      மாலை நெருங்கிய வேளையில் எல்லாம் நிறைவு பெற, எல்லாரும் குடும்பமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். இறுதியாக சிவசு தாத்தாவுடனும் சுந்தரி ஆச்சியுடனும் குடும்பம், நண்பர்கள் என அனைவரும் நிற்க, மிக தயங்கி தயங்கி ஸ்ரீதர் அருகில் சென்று ஜெயா நிற்க, மற்றவர் கவனம் அதில் இல்லையென்றாலும், அதை கவனித்த சுந்தரி ஆச்சியும், சிவசு தாத்தாவும் அர்த்தமாய் புன்னகைத்துக்கொண்டனர். சுந்தரி ஆச்சி ஒரு நிமிடம் கண் மூடி இறைவனுக்கு மனதில் நன்றி சொல்ல, தாத்தா ஆதூரமாய் அவர் கையை அழுத்தி கொடுத்தார். அவர்கள் மிகவும் எதிர்பார்த்த ஒன்றும் இப்போது நிறைவேறிவிட, மிகவும் நிறைவாய் உணர்ந்தனர். 

    ஸ்ரீதர் முகத்தில் புதிதாக ஒரு மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது. அவன் மிகவும் எதிர்பார்த்திருந்தான். வாசுவின் வேலைக்காக சில சமயம் அவன் வீட்டில் ஜெயாவை பார்க்க, முதலில் ஒன்றும் தோன்றவில்லை, ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சில அழகிய தருணங்கள் இயல்பாய் பூத்தன இருவருக்கும். அதை ஜெயா கவனிக்கவில்லை, ஆனால் ஸ்ரீதர் கவனித்தான். முதலில் அவள் ஒத்துக்கொள்வாளோ என பெரும் தயக்கம். ஆனால் தயக்கம் விட்டு தீர்க்கமாய் வாசுவிடம் சொல்லிவிட்டான். குழந்தையுடன் தான் ஜெயாவும் அவன் வாழ்வில் வேண்டுமென்று முடிவாய் சொல்லிவிட்டான். தவமாய் சென்ற சில மாதங்ளுக்கு இப்போது வரம் கிடைக்க, மனம் முழுவதும் மகிழ்ச்சி, ஒரு பொக்கிஷமான தருணம் அவனுக்கு. எல்லோரும் மகிழ்ச்சியாய் புன்னகைக்க, புகைப்படம் அழகாய் வரையப்பட்டது..           

        ராகவ், சந்தியா, சத்யா, சத்யாவின் கணவர் ஹரி, அஜய், அஜயின் மனைவி நித்யா, விமல், ஆகாஷ், கிருபா, மணி, ஷங்கர், ருத்து, அபிதா என அவரவர் குழந்தைகளுடன் நின்றதில் புகைப்படம் இன்னும் வண்ணம் தீட்டிக்கொண்டது. 

       எல்லாம் நன்றாய் நடந்தேற மாலை எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். வாசு வீட்டில் அனைவரும் இரவு உணவு முடிந்து அவரவர் வீடு செல்ல, நண்பர்களும் அவர்கள் குடும்பமும் வாசு வீட்டிலே தங்கினர். படுக்கும் முன் ராகவ், 

” மச்சான் வர வர நீ அழகா ஆயிட்ட போறியே, இதெல்லாம் சரி இல்லையே. என்ன முல்தானி மிட்டி ஃபேஷயில் சிஸ்டெர் கையாள டெய்லி நடக்குதோ ” என வாசுவின் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி ஆராய, வாசு அவனை பிடித்து முதுகில் இரண்டு போட, நழுவி ஓடி விட்டான்.

    வாசு புன்னகையுடன் அறைக்குள் வந்து கதவை சாற்ற, குழந்தை நன்கு உறங்கியிருந்தது, ஸ்ரீ பால்கனியில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாள். இரவு உடைக்கு மாறியவன், சத்தம் செய்யாமல் ந்தவன் குழந்தை அருகில் அமர்ந்து அதனின் நெற்றியில் முத்தமிட, தூக்கத்திலே கையால் தள்ளிவிட்டது. அருகில் இருந்த போர்வையை எடுத்து போர்த்த, அதையும் தள்ளி விட்டது. சிரித்துக்கொண்ட வாசு அருகில் இருந்த ஸ்ரீயின் மெல்லிய புடவையை எடுத்து போர்த்த, அமைதியாய் திரும்பி படுத்து தூங்கிவிட்டது. குழந்தையின் கால்களில் முத்தமிட்டவன், சத்தமிடாமல் எழுந்து ஊஞ்சலுக்கு வர, ஸ்ரீ இத்தனை நேரம் புன்னகையுடன் அனைத்தையும் பார்த்திருந்தாள்.

    அவன் அருகில் வந்து ஸ்ரீயின் புத்தகத்தை பொறுப்பாய் வாங்கி உள்ளே சென்று வைத்துவிட்டு வந்தவன், ஸ்ரீயின் அருகில் அமர்ந்து, அவள் மடியில் அசுவாசமாய் படுத்துக்கொண்டான். 

      சில வருடங்கள் முன்பு யாராவது நீ இப்படி இருப்பாய் என சொல்லியிருந்தால், வாசு நிச்சயம் நம்பியிருக்க மாட்டான். வாழ்கையின் இத்தனை மாற்றங்களை எதிர்கொள்வான் என நினைக்கவில்லை. 

     அவன் தேர்ந்தெடுத்த வழியில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது, தெளிவிருந்தது. ஆனால் மற்றதை அவன் எதிர்பார்க்கவில்லை. வாழ்வில் தாய் உற்ற துணையாய் இருந்தாலும் தந்தையிடம் ஒதுக்கம் விட்டு ஒட்டுதல் வேண்டும் என ஆசை இருந்தது, தொழிலில் முன்னேற வேண்டும் என எண்ணம் இருந்தது. அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என கனவு இருந்தது. 

    ஆனால் வாழ்க்கை அவன் எதிர்பார்த்ததும் எதிர்பாரததும் என எல்லாம் சேர்ந்து அவனுக்கு சாத்தியமாக்கியிருந்தது. அவன் நினைத்தது இல்லாமல்  அவனுக்கு ஒன்று நடந்திருந்தால், அது ஸ்ரீபத்மா. 

    ஸ்ரீபத்மா அவன் வாழ்வில் வருவாள் என ஒரு பொழுது கூட நினைத்ததில்லை. ஆனால் எல்லாம் நடந்தது. அவனை அவனுக்காக மட்டும் ஏற்றவள். வாசு, ஸ்ரீபத்மாவின் மடியில் படுத்துகொண்டே அவளை பார்க்க, அவள் என்னவென்று கண்களில் வினவ, 

“ நீ எப்படி என் லைஃப்ல வந்த ? “ என வாசு அவள் கண்களை பார்த்து கேட்க, 

 “ என் வீட்டுல இருந்து ஒரு லெஃப்ட் எடுத்து அப்புறம் ஒரு பதினஞ்சு நிமிஷம் நடந்து அப்புறம் ரெண்டு தடவ ரைட் எடுக்கணும், அப்புறம் நம்ப வீட்டு கதவு திறந்து உள்ள வந்துட வேண்டியது தான். இப்படி தான் நானும் வந்தேன்.  

வந்து கேக்குறாங்க பாரு கேள்விய “ என சொல்லி ஸ்ரீ சிரிக்க,

“ ப்ச் ஏ‌ ராங்கி எவ்ளோ சீரியஸா கேக்குறேன். எப்படி பதில் சொல்ற பாரு நீ.“ என வாசு அவளை லேசாக அடிக்க, 

“ பின்ன என்ன மாம்ஸ், என்னமோ நான் ப்ரபோஸ் பண்ண உடனே ஒத்துகிட்ட மாதிரி கேக்குறிங்க, என்னைய எவ்ளோ வைட் பண்ணா வச்ச, என்னமோ நான் பேச வந்தாலே விறைப்பா பேசுன, இப்போ வந்து லைஃப்ல எப்படி வந்தனு கேட்ட, அப்படியே நாங்க உருகி போயிடணுமோ. “ என ஸ்ரீ அவன் முடியை பிடித்து ஆடிக்கொண்டே சொல்ல, 

“ ஏ கைய எடு, உன்னால தான் என் முடியே கொட்டி போச்சு, இவ்ளோ பேசுற, உனக்காக எவ்ளோ வைட் பண்ணேன் தெரியுமா. பேச வந்துட்டா. “ என சொல்லி உர்ரென எழ போக, அவனை அப்படியே  அமுக்கி படுக்க வைத்தவள், 

“ மத்துக்கெல்லாம் முத்தம் கொடுத்து சுத்திட்டு இருந்த ஆள் தான நீங்க. ஃப்ளைட்க்கு டிக்கெட் போட்டுட்டு என்னைய பார்க்க வராம இருந்த ஆள் தான நீங்க. ஃபர்ஸ்ட் ஸ்டெப் நான் எடுத்து வைக்கலைனா நீங்க சிங்கிளா தான் இருந்துருபிங்க. ஏதோ பாவமேனு உங்கள விட்டு வச்சா, இப்போ வந்து எப்படி வந்த, எங்க வந்தனு கேட்டுகிட்டு. “என சொல்லி அவள் முகத்தை திருப்ப, அவள் மடியில் இருந்து எழுந்து, அவளை தோளோடு அனைத்தவன்,       

“ ஐஞ்சு வருஷம் முன்ன நான் இப்படி எல்லாம் இருப்பேன்னு யாராவது சொல்லியிருந்தா கண்டிப்பா நம்பியிருக்க மாட்டேன் ஸ்ரீ. ஆனா இப்படி இருக்கறது கனவு மாதிரி இருக்கு ஸ்ரீ. எல்லாம் நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான். 

         இப்போ அப்பா என்கூட சமாதானமா பேசுறாங்க, ஆச்சிக்கும் தாத்தாவுக்கும் என்னைய நினச்ச ஒரு சந்தோஷம், அம்மாவுக்கு நிம்மதி, இப்படி எல்லோரையும் நல்லா பார்த்துருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு, ஆனா இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. எல்லாம் நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் ஸ்ரீ, அவங்கள இவ்ளோ சந்தோஷமா பார்க்குறேன். 

    இப்போலாம் யோசிக்கறப்போ தோணுது, நிம்மதிய வாழ்றது மட்டும் இல்ல, நிம்மதியா கடைசி மூச்சு விடும் போது  உன் கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு. “ என உள்ளார்ந்து சொல்ல, ஸ்ரீக்கு கண்கள் கலங்கி விட்டது, அவன் மீது நன்றாய் சாய்ந்து கொண்டவள், அவன் வாய் மேல அடித்தாள்,

“ இப்படி எல்லாம் பேசாத மாம்ஸ், வாழ்றது பத்தி பேசு, மத்த வேற எதுவும் வேணாம்.” என சொல்லியவள்  அவன் சட்டையில்லா மார்பில் கண்ணீரை துடைக்க, 

“ ஏ கூசுது ஸ்ரீ. “ என தள்ளி உட்கார, அவனை இறுக்கி அனைத்து அருகே இழுத்தவள், 

“ ஹா…ஹா…இப்படியே தான் பாப்பாவும் பண்றா. “  என ஸ்ரீ சிறிது தெளிந்து சொல்ல,

“ என்ன பண்றா ? “ என வாசு ஆர்வமாய் கேட்க, 

“ பாப்பா காலைல எழுந்ததும் உங்க மேல உட்காந்துட்டு இப்படி முகத்தை வச்சு தேய்க்கும், ‘ப்பா, ப்பா’ கூப்பிடும், நீங்க நல்லா தூங்க்கிட்டு இருப்பிங்க, அப்போலாம் ஒன்னும் செய்ய மாட்டிங்க, இப்போ நான் பண்ணதும், தள்ளி உட்காருறிங்க “ என சொல்ல, 

“ அது பாப்பா, குட்டியா இருக்கு வெயிட் தெரில, நீ அப்படியா… “ என வேண்டுமென்றே வம்பிழுக்க, வேகமாக அவனிடம்மிருந்து விலகிய ஸ்ரீ,

“ பைசன், உங்கள சிங்கிளாவே விட்டுருக்கணும், உங்க கூட மிங்கில் ஆனது என் தப்பு தான். ” என சொல்லி ஸ்ரீ வாசுவை சரமாரியாக அடிக்க, அதை ஒற்றை கையால் தடுத்து,

“ இப்போ நான் என்ன சொல்லிட்டேன், எதுக்கு இப்போ என்னைய அடிக்குற, இப்படினு தெரிஞ்சா என் ஹெல்மெட்ட கையோட ரூம்க்கு எடுத்துட்டு வந்துருப்பேன். “ என வாசு புன்னகையுடன் சொல்லி சிரித்தவன்,   

“ என்னைய என் பொண்டாட்டி அடிக்குறா….யாராவது காப்பாதுங்க.” என வேண்டுமென்றே முதல் பாதியை மெல்லமாக இரண்டாவது பாதியை சத்தமாக கத்தினான். ஸ்ரீ அவசரமாக வாசுவின் மீது சாய்ந்து அவன் வாயை மூட, அவள் கைக்கு முத்தமிட்டவன், அவளை அப்படியே அவன் மீது சுகமாய் சாய்த்துக்கொண்டான்.

“ இப்போ மட்டும் நான் வைட்டா இல்லையா. “ என ஸ்ரீ முறைத்துக்கொண்டு கேட்க, அவளை சுற்றி இன்னும் அனைத்து பிடித்துக்கொண்டவன், 

“ நீ என் செல்ல யானகுட்டி ஸ்ரீ. “ என பாவனையாய் புன்னகையுடன் அவளை கொஞ்ச, அவன் பாவனையில் ஸ்ரீக்கும் புன்னகை வர, “ அப்படியா பைசன். “ என அவளும் கொஞ்ச, 

“ மாம்ஸ் உன் புருவம் சூப்பரா இருக்கு, எப்படி உனக்கு இவ்ளோ அழகா இருக்கு. “ என ரசித்து சொல்லி அவன் மீசையை பிடித்து விளையாட, 

“ ராங்கி இப்பவும் என்னைய சைட் அடிக்கற நீ. பாரு எனக்கு முடி கூட அங்கங்க சால்ட் ஆயிடுச்சு “ என சொல்லி அவள் மூக்குடன் மூக்கு உரச, 

“ நீ சால்ட்டா இருந்தா என்ன பெப்பரா இருந்தா என்ன மாம்ஸ், இப்போ லாஸ்ட் வீக் வந்த உன் வீடியோக்கு ஒரு பொண்ணு, ‘ You are aging like wine‘  போட்டுருக்கு ” என மூக்கு விடைக்க சொல்ல, 

“ ஹா ஹா…ஹா ஹா…பொறாம. “ என வாசு அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய, அவனை அசால்ட்டாக பார்த்தவள்,

“ பைசன் உங்கள பார்த்து பொறாம பட ஒன்னும் இல்ல. அப்படியே யாராவது உங்கள  ப்ரபோஸ் பண்ணாலும்  நீங்க எடுக்குற அக்ரிகல்சர் கிளாஸ்ல அந்த பொண்ணு ஓடி போயிடும். “ என ஸ்ரீ அவனை வார, 

“ என்னது ஓடி போயிடுமா, அப்போ நீ மட்டும் ஓடல, மத்தவங்க பாக்குறதுலாம் ஒன்னும் இல்லை, நீ இப்போவும் என்னைய பாக்குறயா “ என ஆர்வமாய் கேட்க, அவன் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவள் , 

“ நானே என்னைய சில டைம் கேட்டுக்குறேன். ஏன் உன்னைய எனக்கு பிடிச்சதுனு, ஆனால் பதில் கிடைக்கல.

உன்ன விட்டு தள்ளி போயிடணும், உன் கூட பேச கூடாது, உன்ன பார்க்க கூடாதுனு, அப்படினு ஒரே ஒரு தடவ லைஃப்ல நினச்சேன்.  

ஆனா இப்போ உன்ன மட்டும் தான் பார்த்துட்ட இருக்கேன். 

இப்போ சொன்ன தான, யாராவது உன்ன ஐஞ்சு வருஷம் முன்ன நீ இப்படி இருக்கப்போறனு கேட்டா, இப்படி இருப்பேன்னு நினச்சிருக்க மாட்டேன்னு. 

பட் என்னைய யாராவது ஐஞ்சு வருஷம் முன்ன யாராவது இப்படி கேட்டுருந்தா, நான் கண்டிப்பா உன்கூட இப்படி சந்தோஷமா வாழ்வேன்னு நிச்சயமா சொல்லிருப்பேன். காரணம் தெரியாது, ஆனா நம்பிக்கை இருந்துச்சு. இப்போவும் இருக்கு. ”  என அவன் கண்களில் ஆழ்ந்து பார்த்து சொல்ல, வாசு இரு கைகளாலும் அவள் கன்னங்களை ஏந்தி நெற்றியில் முத்தமிட, அருகில் இருந்த தென்னை கீற்று  தென்றலாய் கீபோர்ட் வாசித்தது. 

    வாசுவிற்கு தெரியும் ஸ்ரீயினுள் எத்தனை தூரம் ஆழமாய் வாசிக்கிறோம் என, இருந்தாலும் பொம்மையை அடிக்கடி தொட்டு பார்க்கும் குழந்தையாய், அவள் வாய்மொழி நேசம் கேட்கும் காதலன் இவன்.   

    ஸ்ரீபத்மாவிற்கும் எண்ணங்கள் பின்னே செல்ல, அலையலையாய் அவன் மீதான பிடித்தங்கள் மேலே எழ, அவள் அதில் மூழ்கி தான் போனாள். திருமணம் முன் அவள் எத்தனை வம்பு செய்தாலும் அதனை புன்னகையுடன்   கடந்து செல்லும் அன்பான வாசு, எத்தனை சண்டையிட்டாலும் அவளை விடாது விலகாத வாசு, எத்தனை செய்தாலும் அவளை செல்லம் கொஞ்சும் வாசு என அவனின் அத்தனை பரிமாணங்களும் அவளுள் இன்னும் கன்னாபின்னாவென அவன் மீதான காதலை ஊறச் செய்தது. 

   அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் அவன் முகத்தை நோக்கி பார்க்க, அவன் என்னவென்று இவளை பார்க்க, அவன் அமர்ந்த உயரம் எம்பியவள் அவன் கன்னத்தில் நேசமாய் ஆழ்ந்து முத்தமிட, கரைந்து போனான் கணவன். 

      கரைந்த நொடிகள் தான் மட்டும் வைத்துக்கொள்வது நியமில்லை என நினைத்தவன் வாங்கிய முத்தத்தை அவளிடம் ஆர்பரிப்பாய் தொடங்கி மென்மையாய் முடிக்க, மழை சாரல் முகத்தில் வீசி இருவரையும் நிதானிக்கவைத்தது, இருவரும் ஆதூரமாய் அனைத்து ஊஞ்சலில் சாய்ந்து மின்னும் நட்சத்திரங்களை ரசித்திருந்தனர். 

    அதிகாலை வேளையில் சாளரத்தை ஊடறுத்துச் செல்லும் வெய்யோனின் செங்கதிராய் அவள் அவன் அகதினுள். 

    வாழ்கையின் மிச்சங்கள் யாவும் அவளுடன் என நினைக்கும் தருணங்களிலெல்லாம் உள்ளே புதிதாய் செல்கள் பூக்கிறன அவனுள்.  பாசமும் பிணைப்பும் இருவருக்குள்ளும் அடிவேராய் ஊன்றி நிற்க, உறவு பூத்து செழித்திருந்தது. வாழ்க்கை முழுவதும் இன்னும் அன்பு விரிந்து படர இருவரின் நெஞ்சமும் நிறைவாய் நேசத்தை இன்னமும் சுகமாய் சுவாசிக்கிறது மழை சாரலுடன். 

                        

Advertisement