Advertisement

                “ இந்தா புள்ள நான் இதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்…ஆமா சொல்லிபுட்டேன்…ஒழுங்கா மாலை மாத்தறது மட்டும் போதும். மத்ததெல்லாம் எதுவும் வேணாம். “ என சிவசு தாத்தா அடம் பிடித்துக் கொண்டிருந்தார். 

     நாளை சிவசு தாத்தாவிற்கும் சுந்தரி ஆச்சிக்கும் என்பதாம் ஆண்டு  திருமணம். வாசுவிற்கும் ஸ்ரீபத்மாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு  ஆண்டுகள் கடந்திருந்திருக்க, சிவசு தாத்தாவிற்கு என்பது வயது முடிந்து நான்கு வருடங்கள் பக்கம் முடிந்திருந்தது. 

      முன்பெல்லாம் வாசு முயற்சி எடுத்தும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் இப்போது சுந்தரி ஆச்சிக்கும் மனதினுள் ஆசை இருக்கிறது என தெரிந்ததும் இப்போது இப்படி பேச்சு வார்த்தை நடந்திக்கொண்டிருக்கிறார். 

வீட்டில் மற்றவர்கள் எல்லாரும் சிவசு தாத்தாவிற்கும் சுந்தரி ஆச்சிக்கும் தாலி, புது கல்யாண பட்டு எடுக்கலாம் என யோசித்திருக்க, சிவசு தாத்தா சுந்தரி ஆச்சியிடம் அடம் பிடித்துக்கொண்டிருந்தார். 

“ இந்தா புள்ள…ஒழுங்கா கோவில் போறோம்…மாலை மாத்துறோம்..அவ்ளோ தான்… அத விட்டுபுட்டு தாலி கட்டனும், அப்படி இப்படினு சொல்லக்கூடாது…அங்கே எல்லாரும் இருப்பாங்க…நான் எல்லார் முன்னாடியும் எதுவும் செய்ய மாட்டேன். “ என கறாராக ஆச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். 

“ உங்களுக்கும் வெட்கமாயிருக்குனு சொல்லி, நான் ராசா கிட்ட சொல்லிறேன். அவன் பார்த்துபான்.” என ஆச்சி அறையில் இருந்து வெளியில் செல்ல பார்க்க, அருகே வந்து ஆச்சியின் கை பிடித்துக்கொண்டார்.

“ எது ராசா கிட்ட சொல்ரியா…நான் சொன்னேன்னு சொல்லாத…நீயா சொன்ன மாதிரி சொல்லிடு. “ என வெட்கம் வந்து ஆச்சியின் கை பிடித்து தடவி மென் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார்.

     

“ என்னமோ சொன்ன கதையில…

 எலி ரவுக்க கேட்டுச்சாம் சபையில…” என ஆச்சி அடக்கிய புன்னகையுடன் சிவசு தாத்தாவிடம் சொல்ல, 

“ இந்தா புள்ள இந்த சொலவடை போடுறதெல்லாம் என்கிட்ட வேண்டாம். இப்போ நான் சொன்னது போய் மெதுவா ராசா கிட்ட சொல்லு. எல்லார் முன்னவும் சொல்லாத. “ என அதே பிடியில் நின்றிருந்தார். 

சிவசு தாத்தாவிற்கு இந்த திருமண பேச்செல்லாம் ஒரு வெட்கத்தை கொடுத்திருந்தது.   

    சுந்தரி ஆச்சி, “ ரொம்ப வெட்கபடாதீக மாமா. “ என தாத்தாவின் கன்னத்தை கிள்ளிவிட்டு சிட்டாய் அறையை விட்டு பறந்திருந்தார். சிவசு தாத்தாவோ ஆச்சி கிள்ளி சென்ற கன்னத்தையே தொட்டு  புன்னகைத்துக்கொண்டிருந்தார்.. 

ஆச்சி பின்கட்டு வழியே வாசு வீட்டிற்கு வந்து உள்ளே நுழையே, அங்கே அழகாய் ஒரு பெண் குழந்தை வெண்பஞ்சு துண்டை சுற்றிக்கொண்டு நின்றிருந்தது. 

“ இந்தா பட்டு, இந்த டிரஸ் போட்டுக்கோ. அப்போ தான் கடைக்கு கூடிட்டு போவேன்.” என பேசிக்கொண்டே ஸ்ரீ ஒரு இளம் ரோஜா பூ போல் அலங்கரித்த ஆடையை குழந்தைக்கு போட்டுவிட்டு கொண்டிருந்தாள். அதுவும் சமத்தாய் போட்டுக்கொண்டது. 

“ அடியே சின்ன குட்டி இப்போ என்ன சொல்ற….பட்டு பட்டுனு கூப்பிடுற…என்னைய மட்டும் சுண்டெலினு கூப்பிட்ட…” என சுந்தரி ஆச்சி நமட்டு சிரிப்புடன் ஸ்ரீயை வம்பிழுக்க, 

“ ஏதோ போன போகுது, நம்ப சுண்டெலி ஆச்சேனு உங்க பேர வச்சா, ரொம்ப தான் பண்றிங்க. “ என ஸ்ரீ தோளில் இடித்து காண்பிக்க,

“ போதும் பத்து, அப்புறம் கழுத்து திரும்பிக்க போகுது. அப்புறம் என் ராசா தான் வந்து அதுக்கும் தைலம் தேக்கணும். “ என ஆச்சியும் விடாது பேச, 

“ ஏன் தேச்சு விட்டா என்ன, உங்க ராசா அப்படியே கரஞ்சிடுவாரோ ? “

” என்னது கரஞ்சிடுவாரோவா… ஏன் பேச மாட்ட, புள்ளைக்கு உன் பேரையும் சேர்த்துள்ள வச்சிருக்கான், அந்த பவுசு பேசுது. ” என ஆச்சியும் தோளில் இடிக்க, புன்னகையுடன் ஸ்ரீ குழந்தையை தூக்கி அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே பெட்டியை அடுக்க சென்றாள்.  

    வாசு ஸ்ரீயின் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தனர். இப்போது வாசு, ஸ்ரீயின் குழந்தைக்கு பத்து மாதங்கள் முடிந்திருந்தது. சுந்தரலக்ஷ்மி என ஆச்சியின் பெயரையும், சீதாலக்ஷ்மியின் பெயரையும் கொண்டு குழந்தைக்கு பெயர் சூட்டியிருக்க, சுந்தரி ஆச்சியிடம் ஸ்ரீ வசமாக சிக்கிக்கொண்டாள். குழந்தையின் அருகில் ஸ்ரீ இல்லாத பொழுது கண்ணு, பட்டு, செல்லம் என கொஞ்சுபவர், ஸ்ரீ வந்துவிட்டால் சின்ன சுண்டெலி என வேண்டுமென்றே குழந்தையை கொஞ்சுவார். 

ஸ்ரீயின் பெயரையும் வாசு பெயருடன் சேர்த்து இனிஷியலாக குழந்தைக்கு வைத்திருக்க, ஆச்சிக்கு இது ஒரு தொக்காய் போய் விட்டது. இப்போதெல்லாம் இப்பழக்கம் சாதாரணமாய் இருக்க, அவரின் காலத்தில் இந்த பழக்கம் இல்லாததால் அவருக்கு இது ஏதோ பெரிய விஷயமாக தெரிய, அவர் வேண்டுமென்றே ஸ்ரீயை வம்பிழுக்க இதை சொல்லிக்காட்டுவார். ஸ்ரீயும் இதை பெரிதாக எடுப்பதில்லை, ஆச்சியை பற்றி தெரியுமாதலால், ஸ்ரீ புன்னகையுடன் கடந்துவிடுவாள். 

இந்த இரண்டு வருடங்களில் எல்லோர் வாழ்விழும் நிறைய மாற்றங்கள். சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சியின் அட்ராசிட்டிஸ் கூடி போய் விட்டது. கோதண்டம் வாசுவின் அப்பா என்பதை காட்டிலும் இப்போது அப்படியே சுந்தரலக்ஷ்மியின் தாத்தாவாகி போனார். குழந்தையை பாதி நேரம் வைத்திருபவர் அவரே. வாசுவிடம் வெளிக்காட்ட முடியா அத்தனை அன்பையும் குழந்தையிடம் காட்டிக்கொண்டிருந்தார். 

    வீட்டில் குழந்தை விளையாடி முடித்து விளையாட்டு பொருள்களை கட்டி வைத்தால், சுந்தரலஷ்மி கேட்டால் மறுமுறையும் கொடுப்பது. அத்தனை விளையாட்டு பொருட்கள் இறைந்துக் கிடந்தாலும், சுவற்றில் வரைய என தனியாக பென்சில் கொடுப்பது, குழந்தைக்கு சாக்லேட் கொடுக்க கூடாதென்றால் யாருக்கும் தெரியாமல் கொடுப்பது என்பதாய் கோதண்டம் இருக்க, இப்பொழுது வீட்டில் அழகு கிறுக்கலாய் மிளிரும் ஓவியங்களை துடைக்காமல் பாதுகாப்பது சீதாலக்ஷ்மியின் வேலையாக போனது. முன்பெல்லாம் கோதண்டத்திடம் இருந்து வாசுவை காப்பாற்ற சீதா முயன்றிருக்க, இப்போது கோதண்டத்தின் பேரன்பு மழையில் இருந்து சுந்தரலக்ஷ்மியை குடைபிடித்து காப்பாற்றிக்கொண்டிருந்தார் சீதா.

    இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கார்த்தி தேனுவின் குழந்தை சாந்தலக்ஷ்மி இப்பொழுது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டது. கிருபா, மணி, ஸ்ரீதர் எல்லாம் வாசுவின் உணவக கிளைகளை ஆளுக்கு ஒன்றாய் பார்த்து வர, அவர்களும் தனியாக வீடு அமைத்துக்கொண்டனர். 

    ஜெயா அவளது படிப்பு முடித்த கையோடு அரசாங்க வேலைக்கு எழுத்தி சேர்ந்து விட்டாள். சிறிய பதவி தான், ஆனால் தன் முதல் அடியை எடுத்து வைத்திருந்தாள். வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. திருமணம் என்னும் பேச்சே அவள் ரசிப்பதில்லை. ஆனால் அவள் உள்ளத்தை ரசித்திருந்தான் ஸ்ரீதர். அவன் சொந்த ஊரில் இருந்து முற்றிலுமாய் இங்கேயே வந்துவிட்டான். காதல், திருமணம் என்றெல்லாம் சொல்லி ஜெயாவின் முன் நிற்க அவனிற்கு மனமில்லை. எங்கே அவள் மறுத்து விடுவாளோ என ஒரு எண்ணம். அதனால் வாசுவிடம் நேராக பேசியிருந்தான். 

     வாசு, சிவசு தாத்தாவிடம் வீட்டில் பேசியிருக்க, வீட்டில் அனைவருக்கும் சம்மதம். ஆனால் ஜெயா இன்னும் பிடிகொடுக்கவில்லை. முதல் திருமண வாழ்க்கையின் தாக்கத்திலிருந்து கடந்து இரண்டு ஆண்டுகளாய் விடுப்பட்டிருந்தாள். மறுமுறையும் அப்படி ஒன்றை எண்ண நினைக்கவில்லை. ஆனால் இப்போது வீட்டில் அனைவரும் சொல்ல, சரி என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை, யோசிக்க நேரம் எடுத்திருந்தாள். இன்னும் எதுவும் சொல்லவில்லை. 

    இவர்கள் இப்படி இருக்க, வாசுவின் வீட்டில் ஒரு விழா என்றால் காட்ஃசில்லா கேங் குடும்பமாய் படையெடுத்து விடுவார்கள். இப்போது சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சிக்காகவும் படையெடுக்கயிருக்கிறார்கள்.                   

     சிவசு தாத்தாவிற்கும் சுந்தரி ஆச்சிக்கும் நாளை திருக்கடையூரில் திருமணம், அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். வாசுவிற்கும் சேர்த்து ஸ்ரீ துணியை அடுக்கிக் கொண்டிருக்கிறாள், அவன் வீட்டிற்கு வந்து முழுதாக இரண்டு நாள் ஆகிருந்தது. 

     இப்போது வாசுவின் உணவக கிளைகள் திருச்சியையும் தாண்டி அருகே மற்ற ஊர்களிலும் பரவியிருக்க, அவனுக்கு வீட்டுக்கு வரும் நேரம் மிகவும் குறைந்து போனது, ஆனால் ஸ்ரீ எதுவும் சொல்வதில்லை, அவனின் வேலை சுமை அவளுக்கு நன்று தெரியும். 

        அவன் விவசாயத்தை விடாமல் பார்க்க, எல்லாவற்றையும் இடைவிடாமல் நன்றாக பராமரித்து வந்தான். அவன் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அவளும் வீட்டில் இருப்பது போல் பார்த்துக்கொள்வாள். வீட்டில் ஆச்சி, தாத்தா, கோதண்டம், சீதா என எல்லோரையும் வாசுவும், ஸ்ரீபத்மாவும் நன்றாக பார்த்துக்கொள்ள, அவர்களுக்கு மனதில் இளமை திரும்பிவிட்டது, அத்தனை மகிழ்ச்சியாக இருந்தனர்.     

      ஸ்ரீபத்மாவின் பேக்கரியும் இன்னும் இரண்டு கிளைகள் திறந்திருக்க, அவளுக்கும் வீடு, வேலை எல்லாவற்றிருக்கும் நேரம் சரியாக இருக்கும். இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் ஓடிக்கொண்டிருக்க, சிறிது நேரம் சேர்ந்திருந்தாலும் அத்தனை நிம்மதி இருவருக்கும். ஆனால் வாசுவிற்கு வீட்டை விட்டு அதிக நேரம் வேளையில் இருப்பது ஏதோ போல் இருக்க, இப்போது சில மாதங்களாய் ஸ்ரீயையும் குழந்தையையும் அதிகம் உணவகத்திற்கு உடன் அழைத்து சென்றுவிடுவான். உணவகத்தில் இவன் அறைக்கு அருகிலே தனி அறை ஒதுக்கி இருக்க, சில சமயம் ஸ்ரீயுடன் ஆச்சியும் தாத்தாவையும் அழைத்து சென்றுவிடுவான். அவர்களுக்கும் அது ஒரு மாறுதலாய் இருக்க, இருவருக்கும் இப்போதெல்லாம் உணவகத்திற்கு பேரனுடன் வருவதென்றலே ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டு விடுகிறது. 

         இன்று தாத்தா ஆச்சியின் திருமண வேலைகாக வெளியில் இருந்தவன், ஸ்ரீக்கு அழைத்தான். 

“ ஹலோ ஸ்ரீ. பாப்பாக்கு மூனு டிரஸ் செலக்ட் பண்ணிருக்கேன். எத சூஸ் பண்றதுனு தெரில. போட்டோஸ் அனுப்புறேன், பார்த்து சொல்றியா ? “

“ அனுப்புங்க. “ என ஸ்ரீ வைக்க, வரிசையாக வந்து விழுந்தது புகைபடங்கள், அதை பார்த்து ஸ்ரீ யோசித்து வாசுவிற்கு அழைக்க, 

“ மாம்ஸ் அந்த பீச் கலர் டிரஸ் நல்லா இருக்கு, அத எடுங்க. “

“ இல்ல வேண்டாம், நான் ரெட் கலர் டிரஸ் சூஸ் பண்றேன், அது நல்லா இருக்கு. “ என வாசு சொல்ல, 

“ அப்புறம் ஏன் மாம்ஸ் எனக்கு போட்டோஸ் அனுப்புனிங்க, நீங்களே செலக்ட் பண்ண வேண்டியது தானா. “ என ஸ்ரீ உர்ரென கேட்க, 

“ இல்ல ஸ்ரீ, அந்த பீச் கலர் நல்லா தான் இருந்தது, ஆனா டிரஸ் மெடீரியல் சரியா கவனிக்கல, அது கொஞ்சம் மொர மொரப்பா, அப்புறம் அதோட வொர்க்ஸ் எல்லாம் பாப்பா கை பட்டா குத்துற மாதிரி இருக்கு, ஆனா இந்த ரெட் கலர் சாஃப்ட்டா இருக்கு, பாப்பா கை பட்டா கூட ஒன்னும் பண்ணாது. “ என வாசு சொல்ல, ஸ்ரீ இங்கே புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

     வாசுவிடம் தான் எத்தனை மாற்றங்கள். அவனை முதலில் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அவன் காட்டும் பரிமாணங்கள் எல்லாம் அவளுள் அவனை இன்னும் ஊற்றாய் ஊறச் செய்தது. 

“ ஓகே மாம்ஸ், வாங்கிட்டு வந்துடுங்க. “ என புன்னகையுடன் சொல்லி வைத்தவள், அவர்களின் உடைமைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள். எல்லாம் முடித்தவள், மற்ற அறைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து ஒவ்வொன்றாக பூட்டிக்கொண்டு கீழே வந்தாள். 

     கீழே கார்த்தி, தேனு, சாந்தலக்ஷ்மி என மூவரும் வந்திருக்க, ஆச்சி அவர்களிடம் வரவேற்று பேசிக்கொண்டிருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாட, அவர்களை  கையில் பிடிக்க முடியவில்லை. ஸ்ரீ கீழே இறங்கி வர  சாந்தலக்ஷ்மி ‘அத்த‘ என அவளை நோக்கி ஆசையாய் ஓட, குழந்தையை தூக்கி கொஞ்சி கையில் வைத்துக்கொண்டாள். 

      வாசு உள்ளே நுழைய, கார்த்தி சென்று அவன் கைகளில் இருந்த பைகளை எல்லாம் வாங்கி கொண்டான். குடும்பத்தில் எல்லாருக்கும் புது உடைகள் வாங்கி இருக்க, வாசுவும் கார்த்தியும் எல்லாம் தனி தனியாக பிரித்து வைத்தனர். பிறகு வாசு ஆச்சியையும் அழைத்துக்கொண்டு தாத்தா வீட்டிற்கு சென்றான். அவனுடன் மற்ற அனைவரும் செல்ல, அங்கே சிவசு  தாத்தா, கோதண்டம், சீதாலக்ஷ்மி எல்லோரும் இருந்தனர். 

     அங்கே தாத்தாவிற்கும் ஆச்சிக்கும் எடுத்த உடையை ஒரு தாம்பூலத்தில் வைத்து சாமி அறைக்கு சென்று அங்கே வணங்கியவன், அதை ஸ்ரீயுடன் இனைந்து சிவசு தாத்தாவிற்கும் சுந்தரி ஆச்சிக்கும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினான். 

     சீதலக்ஷ்மிக்கு கோதண்டத்திற்கும் மனம் நிறைந்திருந்தது. சிவசு தாத்தாவிற்கு கூட உள்ளே உவகை தான். அவர் இந்த திருமணதிற்காக இதெல்லாம் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவரின் மொத்த குடும்பம் ஒற்றுமையை இணைந்து இதை நடத்திவைக்க, அது தான் அவருக்கு ஒரு நிறைவை தந்தது. 

    அனைவருக்கும் அவரவர்களுக்கு எடுத்து வந்த உடையை கொடுத்தவன், மதியம் இத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என சொல்லி, கிளம்பி வர சொன்னான். பிறகு கார்த்தி தேனுவுடன் ஸ்ரீ, வாசு இருவரும் கிளம்பி அங்கே சென்று சிவகாமிக்கும் சுந்தரத்திற்கும் உடைகள் கொடுத்து திருமணதிற்கு முறையாக அழைத்தவர்கள், தங்கள் வீட்டிற்கு கிளம்பினர். 

      வீட்டிற்கு வந்ததும் ஸ்ரீக்கு வாங்கி வந்ததை மட்டும் கொடுக்காமல் குழந்தைக்கு எடுத்து வந்ததை மட்டும் கொடுத்தவன். புடவையை வேண்டுமென்றே பெட்டிக்குள் பூட்டி வைக்க போனான். 

“ மாம்ஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்….ஏன் என் டிரஸ் மட்டும் கொடுக்க மாட்டேன்றிங்க.” என  ஸ்ரீ வாசுவின் சட்டையை பின்பக்கம் பிடித்து கிழிப்பது போல் இழுக்க, 

“ நீ என் ஷர்ட் என்ன வேணா பண்ணிக்கோ, இந்தா. “ என அவன் சட்டையை கழட்டி அவள் கையோடு கொடுக்க, குழத்தை இருவரையும் பார்த்து சிரித்தது. 

“ பாப்பா சிரிகாத. “ என குழந்தையை பார்த்து மெலிதாக மிரட்டியவள், வாசுவின் பக்கம் திரும்பி, அடிப்பது போல் வர, குழந்தை தத்தி தத்தி வந்து வாசுவின் காலை பிடித்து “ ப்பா அதிக்க கூதாது…ப்பா பாவம். “ என சொல்லி ஸ்ரீயை முறைத்து நின்றுக்கொண்டது. வாசு இதை  பார்த்தவன் சிரித்துக்கொண்டே குழந்தையை தூக்கி கொஞ்ச, ஸ்ரீ வாசுவின் கையில் இருந்த புது புடவையை உருவிக்கொண்டாள். 

“ ஒரு நாள் என்னைய வந்து காப்பத்திருக்கா இந்த குட்டி, அப்படியே உங்கள அடிக்க வந்ததும் ஓடி வர்ரத பாரு. சரியான கூட்டு களவாணிங்க ரெண்டு பேரும்.”

“ ஆமா நாங்க கூட்டு களவாணி தான், உனக்கு வேணும்னா நீயும் வந்து சேர்ந்துக்கு மூனு பேரும் கூட்டு களவாணி ஆயிடலாம். “ என  குழந்தையை தூக்கி கொண்டே நில்லாமல் வேறு அறைக்கு செல்ல, அவன் பின்னே வால் பிடித்து வந்தவள், 

“ கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா, டிரஸ் அரேஞ்ச் பண்ணாம்மா ஊர் சுத்திட்டு வரிங்க.” 

குழந்தையை கீழே விட்டவன், ஸ்ரீயிடம் திரும்பி “ பொறுப்பா…அப்படினா கிலோ என்ன விலைனு கேக்குற ஆள் நீ. என்ன பார்த்து ஊர் சுத்துரியானு கேக்குற. “ என சொல்லி ஸ்ரீயை இரு கையால் அப்படியே தூக்க, இதை பார்த்த குழந்தை வாசுவிடம் தாவ பார்க்க, அப்படியே கீழே முழங்காலிட்டான், குழந்தை அவன் அருகில் வர, இப்போது ஸ்ரீ தூக்கி தன் மேல் வைத்து கொண்டாள். 

    இப்போது வாசு ஸ்ரீயை படுத்த வாக்கில் தூக்கி கொண்டு நிற்க, அவள் மேல் குழந்தை உட்கார்ந்திருந்தது. குழந்தைக்கு ஏதோ விளையாட்டு என்பது   போல் இருக்க, அது உற்சாகமாய் சிரித்து கொண்டிருந்தது. ஸ்ரீ வாசுவின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து மொபைல் எடுத்தவள், இந்த காட்சியை அப்படியே செல்ஃபி எடுக்க, அதில் மூவரும் அழகாய் தெரிய, அது அப்படியே  புகைபடமானது.

“ ஆமா எனக்கு பொறுப்பு இல்ல தான். ஆனா உங்களுக்கு தான் டன் கணக்குல இருக்குல அப்புறம் என்ன…நீங்களே பொறுப்பு பருப்பா எல்லாத்தையும் எடுத்து வைங்க. “ என சொல்லி அவன் கையிலிருந்து குழந்தையுடன் இறங்கியவள், செல்ல பார்க்க, வாசு அவள் பின்னே வந்தவன் குழந்தையை கீழே இறக்கி விளையாட விட்டு, அவள் கன்னத்தை இருபுறமும் பிடித்து ஆட்டி, 

“ ரொம்ப பேசுன உன் கன்னத்த பிச்சு பரோட்டா போட்டுடுவேன். “ என மிரட்ட, 

ஸ்ரீ அவன் கழுத்தை சுற்றி கை போட்டு கோர்த்தவள், “ அப்படி மட்டும் நீ பரோட்டா போட்டனு வையென், உன் கழுத்துல இருந்து குருமா கிண்டி எடுத்துடுவேன் மாம்ஸ். “ என பதிலுக்கு மிரட்ட, 

“ அப்படியா எங்க செய் பார்போம் ” என நெருங்கி வர, ஸ்ரீயும் ஆவாலாய் எதிர்நோக்க, அந்த நேரம் காட்சில்லா கேங் சரியாக வாசுவிற்கு மொபைலில் அழைக்க, வாசுவிற்கு பி‌பி ஏறிவிட்டது. 

‘ இவனுங்களுக்கு எப்படி மூக்குல வேர்த்துச்சு ‘ என்ற ரியாக்சனுடன் பெரு  மூச்சு விட்டு கண்களை மூடி திறக்க, ஸ்ரீ புன்னகையுடன் தள்ளி நின்றுகொண்டாள். வாசு அழைப்பை ஏற்று பேச, ஸ்ரீ குழந்தையுடன் கீழே வந்துவிட்டாள். இப்படி அழைப்பு வந்தாலே அவர்கள் சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுவார்கள் என அவளுக்கு தெரியும். கீழே வந்தவள் அவர்களை உபசரிக்க எல்லாம் எடுத்து வைக்க, வாசு அவர்களிடம் பேசிய பத்தாவது நிமிடம் காட்சில்லா கேங் வாசு வீட்டிற்கு வர, ஒரே ஆரவாரம் தான்.  

    ஸ்ரீபத்மா அவள் சார்பாய் ஷங்கர், ருத்து, அபிதாவையும் அழைக்க அவர்கள் எல்லாம் நாளை நேராக கோவிலுக்கு வருவதாக சொல்லிவிட்டனர். 

    வாசு வீட்டில் மதிய விருந்து முடிந்து மூன்று வேன்களில் அனைவரும் புறப்பட்டனர். தாத்தாவிற்கும் ஆச்சிக்கும் மட்டும் வசதியாக ஒரு வேன்னில் சில இருகைக்கைகளை அகற்றி எடுத்துவிட்டு மெத்தை போல் தயார் செய்தவன், அவர்களுடன் புறப்பட, மற்றவர்கள் மீதம் இரண்டு வேன்களில் புறப்பட்டனர். அனைவருக்கும் பயணம் உற்சாகமாய் அமைய, மகிழ்ச்சியாக திருக்கடையூர் வந்து சேர்ந்தனர்.   .           

            

                    

        

    

       

Advertisement