Advertisement

         வாசு, தேவரஜ்ஜை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, ஆனால் முன்பு வாசுவின் புறம் தேவராஜ் திருப்பிய விஷயத்தை இப்போது வாசு அவன் புறமே திருப்பினான். முன்பு சிவசு தாத்தாவிடம் கையெழுத்து வாங்கி வாசுவை சிக்கவைத்த அந்த கடன் கொடுத்தவரிடமே வாசு சென்று நின்றான். 

      “ நான் அப்போ அவனுக்காக தந்த பணம், எங்க வீட்டு பொண்ணு அங்க வாழுது தான். இப்போ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இப்போ அவன் ஊருக்குள்ள தான் இருக்கான். நான் அவனுக்காக கொடுத்த பணம் எனக்கு திரும்ப வேணும். நீங்க என்ன செய்விங்களோ, நான் அவன் விஷயதுல தலையிட மாட்டேன். உங்களுக்கு நான் கொடுத்ததுக்கு எல்லாம் டாகுமெண்ட்ஸ்ஸும் என்கிட்ட இருக்கு. என் பணம் எனக்கு வரணும். “ என உறுதியாக  சொல்லிவிட, அவர் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். 

அவர் பெரிய ஆள் தான் ஆனால் இப்போது வாசுவின் நிலைமை வேறு என்பதால், முன்பு போல் அவனை அடிபணிய வைக்க முடியாதே. ஊரே அவனுக்கு துணை நிற்கும் அளவுக்கு அவன் நியாயமாய் வளர்ந்திருக்க, அவருக்கு வேறு வழி இல்ல, வாசு கொடுத்த பணத்தை வாசுவிடம் மனமே இல்லாமல் திரும்பிக்கொடுத்தவர், அத்தனை கோபத்தையும் தேவராஜ் மேல் காட்ட, களத்தில் இறங்கிவிட்டார். 

     வாசுவிற்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுத்தாரோ அதில் கொஞ்சம் கூட குறையாமல் தேவரஜ்ஜைக்கும் கொடுத்தார். அவனை சுற்றி எப்போதும் கண்காணிக்கும் ஆட்கள். தேவராஜ் வீட்டில் இருக்க, அவன் வீட்டிலிருந்து அவன் அண்ணியோ இல்லை அம்மாவோ கடைக்கு சென்றால் கூட ஒரு கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்க, தேவராஜ்ஜிற்கும் அவன் தந்தைக்கும் பெரிய வாக்குவாதம். அவனது மாமனும் இவனுக்காக பேச வர, சொத்தை பிரித்துக்கொடுப்பதாய் சொல்லிவிட்டார். ஆனால் அப்படி பிரித்து கொடுத்தும் இவன் கடன் அடைத்த பாடில்லை. இன்னும் கண்காணிப்பு தொடர, அவன் எதிர் நின்று பிரச்சனையை எதிர்கொள்ளாமல் வீட்டு பெண்களை பதில் சொல்ல வைத்தான்.  

      இதுவே அவன் வீட்டின் நலனுக்காக அல்லது தன் குடும்பத்திற்காக என கடன் வாங்கியிருந்தால், வீட்டு பெண்கள் தைரியமாக துணை நின்றிருப்பர். இவனுக்காக அவர்களிடம் பேசியிருப்பார், சொந்தங்களிடம் உதவி கேட்டிருப்பர். ஆனால் இவன் அநியாயமாக இத்தனை கடன்களை யாருக்கும் சொல்லாமல் வாங்கி வைத்திருந்தது தெரிய வர, வீட்டின் பெண்களின் மதிப்பை இழந்தான். அவன் திருமண விஷயத்தில் உறவுக்குள்ளும் இவன் பெயர் மோசமாய் அடிபட்டிருக்க, யாரும் உதவ முன் வரவில்லை. 

இத்தனை நாள் அவனுக்கு துணை நின்ற தாயே கடன்காரருக்கு பதில் சொல்ல முடியாமல் அவனிடம் சண்டையிட்டு அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அண்ணனும் அண்ணியும் இவனது செய்கை பிடிக்காமல் தனி  வீட்டிற்கு சென்றுவிட்டனர். அவனது தந்தையும் லாரி வேலையாக சென்றுவிடுவதால், தேவரஜ்ஜை சுற்றி ஒரே தனிமை. 

இதில் அவன் திருமண ஏற்பாடும் தள்ளி போனது. அவனது மாமன் மகள் இவனை விரும்பியிருந்தாலும், இப்போது அவளுக்கும் சில நெருடல். அவன் கடன் வாங்கியது கூட அவளுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அதை எதிர்கொள்ளாமல் வீட்டு பெண்களை முன்னிறுத்தி அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளாமல் தவிர்பது அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதனால் யோசிக்க வேண்டும் இப்போ திருமண ஏற்பாடு வேண்டாம் என தள்ளி வைக்க சொல்லிவிட்டாள். 

       இதே தான் அப்போது வாசுவின் நிலைமை, ஆனால் அவன் எதிர்கொண்ட விதமும் இப்போது இவன் எதிர்கொண்ட விதமும் முற்றிலும் வேறு. வாசு தன்னை தனிமை படுத்தி இவர்கள் நிழல் கூட தன் குடும்பத்தை பாதிக்காத பார்த்துக்கொண்டான். அவன் வீட்டின் பெண்கள் மட்டும் அல்லாமல் அப்போது ஸ்ரீயையும் அவன் ஒதுக்கி வைத்து இவனே அனைத்தையும் எதிர்கொண்டான், ஆனால் இப்போது தேவராஜ் இதற்கெல்லாம் நேர்மாறாய் இப்பிரச்சனையை எதிர்கொண்டான். 

     இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தேவராஜ்ஜின் மாமன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தலாம் என நினைத்து முயற்சி மேற்கொள்ள, அந்த கடன் கொடுத்தவரோ பிற அரசியல் பிரமுகருகளுக்கும் கடன் கொடுப்பவர், அதனால் தேவராஜ்ஜின் மாமனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவரும் விலகி விட்டார். லச்சங்களில் மிச்ச தொகை கொடுக்க பாக்கி இருக்க, தேவராஜ்ஜால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வெளியே இலகுவாக செல்ல முடியவில்லை. யாராவது பின் தொடர்ந்து கொண்டு வருகிறார்களோ என்ற எண்ணம் ஆட்டி படைக்க, ஒரு கட்டத்தில் அவனால் இந்த சூழ்நிலையை தாங்கவே முடியவில்லை. அவனது மாமன் மகள் முற்றிலுமாக திருமணத்தை நிறுத்த சொல்லிவிட்டாள். இனிமேல் அவன் வாழ்கையில் அவள் இல்லை எனும் நிலை. 

வாழ்கையில் அடுத்து இனி என்ன செய்யபோகிறோம், தன்னுடன் யாரும் இல்லையே என்ற தவிப்பு, அவனை ஆளே உருமாற செய்தது. கடும் காய்ச்சல் வந்து வீட்டில் இருக்க, அவனை அவன் தந்தை மருத்தவமனையில் சேர்த்துவிட்டு மனைவிக்கு தகவல் கொடுக்க, அவர் வந்துவிட்டார். மகனின் நிலை வேதனையை கொடுக்க, நேராக சென்று வாசுவின் முன் அவனது உணவாக கிளை ஒன்றில் அவனுக்காக காத்துக்கிடந்தார்.

     இவரே தான் வாசுவை முன்பு எத்தனை இடித்து பேசியிருக்க, இன்று அவனது நிலை பெரிதாய் தாக்கியது. அதுவும் இப்போது போன மாதம் காவல் நிலையத்தில் அவனிடம் மகனுக்காக பேசியிருக்க, உள்ளே இன்னும் குறுகி போனார். அவன் அனுமதி கொடுத்ததாக சொல்லி அவர் உள்ளே செல்ல, அவனது அலுவலக அறையில் யாரிடமோ முக்கியமாக பேசிக்கொண்டிருக்க, வாசு கை செய்கையிலே அமர சொன்னான். அவன் முன் அமர்ந்தவர், அவனுடன் பேச தனிமை கிடைத்ததும்,  

 “ என் புள்ள எனக்கு வேணும். “ என வாசுவை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். 

“ அதுக்கு நான் என்ன செய்யறது. “ வாசு அவரை நேர்கொண்டு பார்த்து கேட்க 

“ நீங்க ஒரு வார்த்தை சொன்னா, அவன் பிரச்கனை முடிஞ்கிடும். “ 

“ நான் எதுங்குங்க சொல்லணும். “ கோபமாக திரும்பி கேட்க,

“ அவன் செஞ்சது தப்பு தான், ஏதோ கிறுக்கு புத்தி, இப்படி செஞ்சுட்டான். அவன மறுபிடியும் ஜெயா கூட நான் சேர்த்து வைக்குறேன். நீங்க அவன பிரச்சனையில இருந்து வெளில கொண்டு வாங்க. “ 

“ அது எப்படிங்க ஒரு பிரச்சனைனு வந்ததும் எங்க வீட்டு பொண்ணு உங்க கண்ணுக்கு தெரியறா. இப்போ இந்த பிரச்சனை வரலனா, இந்நேரம் உங்க பையன் புது மாப்பிள்ளை ஆகிருப்பான். 

அவன நம்பி ஜெயாவ மறுபிடியும் அவன் கூட வாழ அனுப்புவோம்னு உங்களுக்கு எப்படி நம்பிக்க வந்தது. 

அன்னைக்கு என்னமோ சொன்னிங்க, அவன் ஆம்பள அதான் நினச்ச படி இன்னொரு கல்யாணம் பண்றான்னு சொன்னிங்க. இப்போவும் அவன் ஆம்பள தான, அவன் பிரச்சனைய எப்படி பார்க்கணும்னு அவனுக்கு தெரியும். அப்புறம் ஏன் இங்க வந்து நிக்குறிங்க. 

அவனுக்கு வந்துருக்க பிரச்சனை என்னால இல்லை. அவனால தான். 

அவன் வாங்குன கடனுக்கு நான் ஏங்க பணம் தரணும். ஆனா அப்போ தந்தேன். காரணம் எங்க வீட்டு பொண்ணு அங்க வாழ்றதால. நம்ப பொண்ணு நல்லா வாழனும்றதுக்காக விட்டு கொடுத்து போனேன்.  இப்போ அவளே அங்க இல்லைனுரப்போ, நான் ஏன் அவனுக்கு சப்போர்ட் பண்ணனும்.  

இப்போ இவ்ளோ பேசுறிங்களே. இத்தன நாள் உங்க மருமக என்ன பண்ணானு தெரியுமா. எங்க வேலை பார்த்தானு தெரியுமா. நிறையா நாள் உங்க வீட்ல சாப்பாடு கூட அவள் சாப்பிட்டதே இல்லையாம். 

இதெல்லாம் கேட்க சின்ன விஷயமா இருக்கலாம். ஆனா ஒரு பொண்ணுக்கு அவ வாழ்ற வீட்ல உணவுல கூட இவ்ளோ பாரபட்சம்னா, இன்னும் அங்க வெளிய சொல்ல முடியாம எவ்ளோ நடந்துருக்கும். 

ஊருக்கே எங்க ஹோட்டல் சாப்பாடு போட்டாலும், எங்க வீட்டு பொண்ணு சரியான சாப்பாடு கூட இல்லாம இருந்திருக்கா, இவ்ளோ ஏன் குழந்தைக்கு காய்ச்சல் வந்தா கூட வந்து  பார்க்கமாட்டானாம் உங்க புள்ள.

இப்படி பட்ட புள்ளைக்கு நீங்க சப்போர்ட் பண்றிங்க. 

இதுல நான் தலையிட மாட்டேன். உங்க பையன வச்சே இதெல்லாம் பார்த்துகோங்க. “ என கறாராய் சொல்லிவிட்டான். அவனிடம் பேசியபின் தலை கவிழ்ந்து அவர் வெளியே சென்று விட்டார். 

     தேவராஜ்ஜின் நிலை அப்படியே தான் தொடர்ந்தது. அவன் வாழ்க்கை இனி அவன் எதிர்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது என அவனது தாய் சொல்லிவிட, அவனுக்கு வேறு வழி இல்லாமல் அவன் தந்தையிடமே வேலைக்கு சென்று கடனை அடைப்பதாக சொல்லி கடன்காரரிடம் அவன் தந்தையை எழுத்தி கொடுக்க கெஞ்சியவன், அவரிடமே வேலைக்கு சேர்ந்து விட்டான். அவனது தந்தைக்கும் இந்த பிரச்சனைகளால் மன அமைதி போக, வீட்டை விட்டு வெளியில் தங்கி வேலைக்கு வருவாதாக இருந்தால் மட்டும் சரி என்று சொல்ல, அவனும் ஒத்துக்கொண்டான். அவனை ஆதரிக்கும் எண்ணம் எல்லாம் அவரிடத்தில் இல்லை, அவர் வீட்டு பெண்களின் அமைதிக்காக இதெல்லாம் செய்தார்.  

இதிலிருந்து அவன் மீண்டு வர நிச்சயமாக வருடங்கள் ஆகும் என அவனுக்கே புரிந்தது. ஆனால் இப்போது குடும்பமும் இல்லாமல், மனைவி குழந்தையும் இல்லாமல் தனியான வாழ்வு என ஆகிவிட்டது. தன்னை மகன் என்று புதியவர்களிடம் அடையாளம் காட்ட கூட தந்தை தயங்க, மனதில் பெரிதாக அடிவாங்கினான். அவனது ஆகங்காரம் ஆட்டம் கண்டது.  

     அடுத்த மாதத்தில் ஜெயாவும் தேவரஜ்ஜை சட்டப்படி பிரிந்து விட, அவள் மேற்கொண்டு படிக்க கல்லூரியில் சேர்ந்து விட்டாள். குழந்தையை வாணியும் ஆச்சியும் பார்த்துக்கொள்வதாய் சொல்ல, எல்லாம் பிரச்ச்னையும் ஓரளவு இங்கே முடிவுக்கு வந்தது.

     இதெல்லாம் இப்படியிருக்க, ஸ்ரீபத்மா வாசுவிடம் இருந்து கொஞ்சம் விலகி நின்றாள். ஆனால் அதை வாசு கவனிக்கும் நிலைமையில் இல்லை. அவன் உணவக வேலை, வீட்டு பிரச்சனை என இத்தனை நாள் ஓடியிருக்க, அவனால் அவளது மாற்றத்தை இத்தனை நாட்களில் கவனிக்க முடியவில்லை. அவனுக்கே தெரியாமல் ஸ்ரீயிடம் ஒரு பிரச்சனையை உருவாகி வைத்திருந்தான். அதை யோசிக்கும் நேரம் கூட இத்தனை நாட்கள் இல்லாமல் இருந்தவன் இப்போது தான் முதன் முதலில் கவனித்தான். 

     வாசு ஏதாவது சொன்னால் சரி என சொல்லி வைக்கிறாள், அவள் கருத்துகளை சொல்வதில்லை, காலை வேளைகளில் இவன் சமைத்தாலும், அவள் தனியாக ஏதாவது செய்து உண்கிறாள். முகம் கொடுத்து பெரிதாக பேசுவதில்லை, அதற்கு இருவருக்கும் நேரமும் இல்லை. இப்போது வீட்டில் அமைதி நிலவ, இப்போது தான் அவளை கவனிக்கிறான். கொஞ்சம் இளைத்து போய் விட்டாள். தினமும் ஸ்ரீ உடல் பயிற்சி வேறு செய்ய, அதனால் இருக்குமோ என அவனுக்கு தோன்றியது. ஆனால் அது மட்டும் இல்லை என அவனுக்கு உள்ளே தோன்றிக்கொண்டே இருந்தது. 

     இரண்டு நாள் இப்படியே செல்ல, மூன்றாவது நாள் ஸ்ரீபத்மாவிற்கும் அவனுக்கும் வாக்குவாதம். ஸ்ரீ வாசுவை விட்டு அவள் வீட்டிற்கு செல்லும் அளவுக்கு சென்றுவிட்டது. அவள் தனியே சென்றது அவன் செய்த தவறை அவனுக்கு வெட்ட வெளிச்சமாக்க, தற்போது சுந்தரம் வீட்டில் அவள் அறையில் தனிமையில் முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஸ்ரீயின் முன் பூனை போல் அமர்ந்திருக்கிறான் வாசுதேவன். 

நூலினால் ஆடும் பொம்மையாக…

நீயும் நானும்… 

ஆடுவோம் சாடுவோம்… 

மீழுவோம்… 

       

       

          

Advertisement