Advertisement

     ஜெயாவிடம் பேசிய வாசு அவளை அன்றே குழந்தையுடன் சிவசு தாத்தா வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். வாசு, ஜெயாவின் அன்னை வாணியை அழைத்து பேச அவரால் ஜெயாவிற்கு நடந்ததை ஏற்கவே முடியவில்லை. ஜெயாவிடம் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இங்கே நிலைமை இப்படி இருக்க, அங்கே தேவராஜ்ஜின் மாமா வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு அமைதியாக நடந்து கொண்டிருந்தது.  

      அடுத்த நாள் காலையில் வாசு, ஜெயா, கோதண்டம், சுந்தரம், மணி, கிருபா, விமல் என ஒரு தரப்பு காவல் நிலையத்தில் இருந்தனர். வாசு தேவராஜ் மேல் ஜெயாவை புகார் கொடுக்க வைத்திருந்தான். காவல் துறை விசாரணைக்காக தேவராஜ்ஜை அழைத்திருக்க, அவன் ஒரு பட்டாளத்துடன் வந்து சேர்ந்தான். 

   தேவராஜ், அவன் அம்மா, மாமா, மாமாவின் கட்சி ஆட்கள் என ஒரு பத்து பேர் வந்திருந்தனர். பெண் புகார் அளித்திருப்பதால் பெண் காவலரும் அங்கே இருக்க, விசாரணை தொடங்கியது. 

தேவராஜ், ஜெயா இப்படி திடுமென புகார் அளிப்பாள் என எண்ணவில்லை. ஜெயா அவள் வீட்டினரின் விருப்பத்திற்கு மாறாக தன்னை திருமணம் செய்திருப்பதால் அவர்களிடம் எதுவும் உதவி கேட்க மாட்டாள், அவர்களும் எதுவும் தன்னை கேட்க மாட்டார்கள், அப்படியே அவர்கள் குறை சொன்னாலும் ஜெயாவை தான் சொல்வர், தன்னிடம் அவர்கள் எதுவும் அழுத்தி பேச முடியாது என எண்ணம். 

அது மட்டும் இல்லாமல் வாசுதேவன் இவனது வீட்டிற்கு பெரிதாக வந்து போகவில்லை என்பதால் அவன் இதில் தலையிட மாட்டான், வாசு தொழிலில் இத்தனை வளர்ந்திருப்பதால் இது போல் விஷயங்களில் தலையிட்டு அவன் பெயர் அடிபடுவதை விரும்பமாட்டான் என்றே எண்ணியிருக்க, இப்போது அத்தனையும் மாறியிருந்தது. வாசுவின் உயரம் இப்போது வேறாய் இருக்க, அது அவனுக்கு கொஞ்சம் பயத்தை தந்தது, அதனால் ஒரு படையுடனே வந்துவிட்டான். மாமா அரசியலில் இருக்கிறாரே என இன்னொரு பக்கம் தைரியம் இருக்க, துணிந்து வந்துவிட்டான். 

      தேவராஜ்ஜின் தாயாருக்கு முக்கியம் அவன் நலம் மட்டுமே. மகன் ஆசைபட்டான், அதை நிறைவேற்றி தர வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாய் இருக்க அப்போது ஜெயாவை திருமணம் முடித்திருக்க, இப்போது இருவருக்கும் பிரிவு என வந்தவுடன், அவரின் சகோதரரின் மகளே இப்போது வீட்டிற்கு மருமகளாய் வர விரும்பம் தெரிவிக்க, தலை கால் புரியவில்லை. அதனால் ஜெயாவை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. ஆனால் தேவராஜ்ஜின் தந்தைக்கு இவனது செய்கை பிடிக்காததால் அவர் காவல் நிலையம்  வரவில்லை.    

அனைவரும் குழுமியிருக்க,    

      “ யார் பா இங்க தேவராஜ்ஜூ ? “ என தலைமை காவலர் கேட்க, முன்னாள் வந்து தெனாவெட்டாய் வந்து நின்றான். 

 ” உனக்கு கல்யாணம் ஆச்சா. உன் மனைவி யாரு ? ” 

 ” எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா நான் பிரிஞ்சுட்டேன். “

” அதான் யாருனு கேக்குறேன் ? “

” தா இங்க நிக்குதுல இந்த பொண்ணு தான். ” ஏதோ அவனுக்கும் ஜெயாவிற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஒரு பேச்சு. 

வாசுவின் கண்களில் கனல் தெறிக்க தன்னையே அடக்கி அமர்ந்திருந்தான். விட்டால் எழுந்து அடித்துவிடும் வேகம். ஆனால் இது இன்னும் எத்தனை தூரம் போகிறது என பார்க்கும் எண்ணத்தில் அமர்ந்திருந்தான்.

” எப்படி கல்யாணமாச்சு, நீங்க சட்டப்படி பிரிஞ்ச்சிட்டிங்களா ? ” 

” அவ என்னைய லவ் பண்ணா. நான் தான் வேணும்னு கல்யாணம் பண்ணா. ஆனா எங்களுக்குள்ள செட் ஆகல, அவளே புரிஞ்சுகிட்ட. அதான் இப்போ இன்னொரு கல்யாணம் பண்ண ஏற்பாடு போகிட்டு இருக்கு. இத்தனை நாள் பேசாம தான் இருந்தா. 

இப்போ என்ன ஆச்சுனு தெரில தீடிர்னு பூச்சிக்கு கொடுக்கு முலைச்ச மாதிரி போலீஸ் ஸ்டேஷன் வந்துட்டா.  ” என வாசுவை மனதில் வைத்து காவலர் முன்னால் பேச, அவருக்கு ரத்தம் கொத்திது போனது. இதுவே வேற யாராவது இருந்தால் நடக்கும் விசாரணையே வேறாக இருந்திருக்கும், ஆனால் கட்சி ஆட்கள் எல்லாம் இருக்க, வேறு வழி இல்லாமல் அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். 

“ அப்போ நீ ஒன்னும் பண்ணல, அந்த பொண்ணு மட்டும் தான் உன்ன லவ் பண்ணுச்சு, உன்ன கல்யாணம் பண்ணிச்சு, உனக்கு இதுல சம்பந்தமில்ல, அப்படி தான ? “ அவர் கோபத்தை அடக்கிய குரலில் கேட்க,

“ ஆமா…அவ ஆசபட்டுட்டா…அதான் நானும் சரி சொன்னேன். மத்தபடி எனக்கு ஒன்னும் இல்ல. நான் அப்போவே சொன்னேன் எங்க மாமா பொண்ணு கூட எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்றாங்கன்னு, ஆனா ஜெயா தான் நான் தான் வேணும்னு சொல்லி அடம் பிடிச்சு கல்யாணம் செஞ்சது. இது எல்லாம் அவ முடிவு தான். “ என மிக சாதாரணமாக சொன்னான். 

இப்போது தேவராஜ்ஜின் தாயிடம் திரும்பினார் தலைமை காவலர், 

” ஏன் மா நீங்க என்ன சொல்றிங்க ? “

” நான் சொல்ல ஒன்னும் இல்லங்க, அவன் ஆம்பள. அவனுக்கு பிடிச்ச கல்யாணம் எப்போனாலும் பண்ணுவான். அத போய் நான் என்னங்க சொல்றது. ” என மனசாட்சியே இல்லாமல் சொல்ல, ஜெயாவினால் தாளவே முடியவில்லை. வேகமாக வந்து அவனது சட்டையை பிடித்து, 

“ அப்புறம் எதுக்கு என்னைய நம்ப வச்சு ஏமாத்துன. என்னைய கல்யாணம் பண்ண சொல்லி உங்க அம்மா வந்து எதுக்கு என்கிட்ட பேசுனாங்க. அப்புறம் எதுக்கு என் பின்னாடியே சுத்துன, கல்யாணம் பண்ண சொல்லி அவசரப்படுத்துன. 

நம்ப குழந்தைக்கு இதுவரைக்கும் நீ என்ன செஞ்ச, அவள தொட்டு தூக்கியிருக்கியா நீ “ என ஆத்திரமாக கேட்க,

“ ப்ச் நடந்தது நடந்து போச்சு, உனக்கு என்ன வேணும் சொல்லு செட்டில் பண்ணிடுறேன். “ என்றது தான் தாமதும், வாசு சடார் என கோபமாக எழுந்தவன் இடியாக ஒரு அடியை தேவராஜ் மேல இறக்க, அவனது தாயும் மாமனும் வாசுவை தடுத்து நின்று மல்லுக்கட்ட, அங்கே இருந்த கட்சி ஆட்களுக்கும் வாசுவின் நண்பர்களுக்கும் கைகலப்பு வர, காவலர்கள் தலையிட்டு தடுத்து இரு தரப்பையும் நிறுத்தினர்.    

 “ நீங்க இப்படி எல்லாம் பண்ண, போலீஸ் ஸ்டேஷன் எதுக்கு வரிங்க. எதுவா இருந்தாலும் வெளியே பார்துக்கோங்க. “ என தலைமை காவலர் கோபமாக சொல்ல, எல்லாரும் அப்படியே நின்றிருந்தனர், அமர கூட இல்லை.

தலைமை காவலர் எல்லாரையும் சற்று தனியாக விசாரிக்க வேண்டும் என கலைந்து செல்ல சொல்ல, தனியாக இருதரப்பையும் விசாரிக்க தொடங்கினர்.   சில மணி நேரம் கழித்து வெளிய வந்த காவலர் வாசுவை தனியாக அழைத்து, 

“ சர் உங்களுக்காக தான் இவ்ளோ பொறுமையா விசாரணை நடக்குது. நீங்க ஏன் சர் அவன் மேல எல்லாம் கை வைக்குரிங்க. வெளிய தெரிஞ்சா உங்க மதிப்பு தான் பாதிக்கும். பெரிய ஆள்னா மத்தவங்க மேல வாசு கை வைப்பாரானு பேசுவாங்க. அதுக்கு பின்னாடி இருக்க காரணம் எல்லாம் யோசிக்கமாட்டாங்க. 

அவன் அம்மா எப்படி பேசுனாங்க பாத்திங்களா. தப்பு அவன் மேல இருந்தும் அவனுக்கு சப்போர்ட் பண்றாங்க. இப்படி மகன் பண்ற தப்புக்கு பெத்தவங்களே துணை போனா, இதுக்கு என்ன சர் பண்றது. பத்தாதுக்கு அவன் அம்பள ஒரு காரணம்.

ச்சை…இவங்க மாதிரி ஆளுங்க கிட்ட எல்லாம் நியாயம் எதிர்பார்க்க முடியாது சர். 

அவன் மாமன் வேற ஏதோ ஒரு கட்சில இருக்காங்க. எவ்ளோ பணம் நீங்க செலவு பண்ணாலும் அவனுக்கு தண்டனையே கிடச்சாலும் கட்சி இன்ஃப்ளூயென்ஸ் வச்சே இத பார்த்துக்குவாங்க. இதெல்லாம் சரி பட்டு வராது. 

நீங்க அந்த பொண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கிடுங்க. ம்யூச்சுவலா ரெண்டு பேருக்கும் வாங்கிடுங்க. அட்லீஸ்ட் அந்த பொண்ணாவது நிம்மதியா இருக்கும். இது என்னோட பெர்சனல் ஒபினியன் அவ்ளோ தான் சர். 

நான் கேஸ் எடுக்க யோசிக்கல. ஆனா அதோட விளைவ சொல்றேன். நீங்க பிரோசீட் பண்ண சொன்னா பண்றேன். நீங்க யோசிச்சு சொல்லுங்க சர். “  என்று அவர் உள்ளே சென்று விட்டார். 

அன்று விசாரணை முடித்து எல்லாரும் வீட்டுக்கு வர, யார் முகத்தை யாரும் பார்க்கும் நிலையில் இல்லை. வீட்டில் வந்து நடந்ததை வாசு சொல்ல, வாணிக்கு ஜெயாவை பார்க்க பார்க்க உள்ளே கோபம் அதிகமாக, ஜெயாவை அடிக்க ஆரம்பித்து விட்டார். இரண்டு கைகளிலும் அடிக்க, அதை பார்த்த சுந்தரி ஆச்சி மடியில் இருந்த ஜெயாவின் குழந்தை ஆழ, சீதலக்ஷ்மி குழந்தையை தூக்கிக்கொண்டு பின்பக்கம் சென்று விட்டார். வாசு வாணி அத்தையை இடைபுகுந்து தடுத்தான். 

“ நீ தள்ளு வாசு, இவள கண்டிக்கற அப்போ இப்படி நடுவுல நடுத்து நடுத்து தான் இவ இப்படி ஒரு நிலையில வந்து நிக்குற. “ என ஆற்றாமையாக பேச, கேட்டிருந்த ஆச்சிக்கு கோபம் வந்துவிட்டது. 

“ ஜெயா பண்ணதுக்கு எதுக்கு நீ வாசுவ சொல்ற ? “ 

“ பின்ன நான் என் மகள கண்டிக்கும் போதெலாம் நடுவுல வந்து தடுத்துட்டுச்சு, அதான் இவ இப்போ வாழ்க்கைய தொலைச்சிட்டு வந்து நிக்குறா. “ என வாணி இயலமையில் வாசுவை பேச, 

“ ஜெயா செய்யுற சின்ன சின்ன தப்புக்கெல்லாம் நீங்க அவள அடிக்க போய் தான் ஜெயா இந்த நிலைமைக்கு வந்துருக்கு. “ என வாசு அழுத்தமாக சொல்ல, வாணி புரியாமல் வாசுவை பார்த்தார்.

“ ஆமா அத்தை நீங்க ஏன் அவ சின்ன விஷயம் பண்ண கூட கை ஓங்குறிங்க. “

“ அவ அப்பா இல்லாத பொண்ணு வாசு கண்டிச்சு வளர்த்தா தான அவளுக்கு நல்லது. இல்லைனா அவ சின்ன தப்பு பண்ணா கூட நாள பின்ன ஊரு என்ன சொல்லும். அதான் கண்டிச்சேன். இதுல என்ன தப்பு. “

“ அது தான் அத்தை தப்பு, இப்படி நீங்க சின்ன சின்ன விஷயதுக்கு எல்லாம் அடிச்சு கண்டிக்க போயி தான், அந்த தேவராஜ் ஆறுதல் சொல்லவும் அவன ஜெயா நம்பியிருக்கு.

அவ காலேஜ் போய்கிட்டு இருந்த பொண்ணு அத்த, நீங்க பொறுமையா உட்கார வச்சு எடுத்து சொல்லிருந்தா கூட அவ புரிஞ்சுருந்துருப்பா.

ஒரு மனுசனுக்கு கிடைக்குற பெரிய விஷயம் என்ன தெரியுமா. 

ஆறுதல் வார்த்தைகள் தான். 

இன்னைக்கு நிறையா மனுஷங்களுக்கு அது வீட்ல கிடைக்கறது இல்ல, தன்னை சுத்தி இருக்குற மனுஷங்க கிட்ட கிடைக்கறது இல்ல, எப்போ பார்த்தாலும் அவங்கள சுத்தி ஒரு பிரஷர் தான். 

படிச்சியா, நல்ல மார்க் வாங்கலயா, ஏன் நல்ல மார்க் வாங்கல, வேலை கிடச்சுதா, ஏன் இன்னும் கிடைக்கல, இன்னும் கல்யாணம் ஆகலயா, ஏன் ஆகல, வீடு வாங்கலாயா, குழந்தை பிறக்கலையா, ஏன் ட்ரீட்மெண்ட் எடுக்கலையானு எத்தன கேள்வி.  

இத்தன கேள்வி கேக்குற மனுஷங்க ஒரு கேள்விக்காகவாது பதிலா இருக்காங்களா ?

சுத்தி இருக்குற எல்லாரும் கேள்வி தான் கேட்பாங்க, அப்படி கேக்குற கேள்விக்கு யாராவது ஒருதர் வந்து ஆறுதல் சொன்னா, அது மனுஷகளுக்கு நம்பிக்கைய தருது. 

அப்படி ஆறுதல் சொல்றவங்க யாருனு இங்க ஆராய்ஞ்சு பார்க்க கூட நேரம் இல்ல. நம்ப மேல உண்மையான அக்கறை உள்ளவங்களும் ஆறுதல் சொல்லுவாங்க, அது உண்மையா இருக்கும். 

சில பேரு நம்பள நம்பவைக்கறதுக்காக ஆறுதல் சொல்லுவாங்க. அது பொய்யா இருக்கும். 

வெளியே போய் கேளுங்க அத்தை எத்தன பொண்ணுங்க சோசியல் மீடியால இந்த மாதிரி பொய்யா ஆறுதல் சொல்றவங்க கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டபடுறாங்க. அவங்க பேசுன பேசெல்லாம் ரெகார்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவோம்னு பயப்படுத்துறாங்க. 

அதனால சில பேரு லச்ச கணக்குல பணம் பறிகொடுக்குறாங்க, நிம்மதிய பறிகொடுக்குறாங்க. வாழ்க்கைய பறிகொடுக்குறாங்க. 

இதுக்கெல்லாம் ஆரம்பம் எது தெரியுமா, சொன்னா நம்ப மாட்டிங்க, 

ஆறுதலான பேச்சு.

ஆனா இதுவும் உண்மை தான் அத்தை. 

தயவு செஞ்சு உங்க புள்ளைய அடிச்சே வளர்க்கலாம்னு நினைக்காதிங்க. எதுவா இருந்தாலும் பொறுமையா உட்காந்து பேசுங்க. 

இப்போ ஏதோ சொன்னிங்களே, வாழ்க்கைய தொலைச்சுட்டானு. அந்த தேவராஜ்ஜா அவ வாழ்க்கை ?

இல்ல அத்தை. ஜெயாவோட வாழ்க்கை இன்னும் பெருசு. அவ இன்னும் மேல படிக்கட்டும். அவ படிச்சு அவளுக்கு பிடிச்ச வேலைக்கு போகட்டும். அப்புறம் அவ வாழ்க்கைய பத்தி ஜெயாவே முடிவு பண்ணுவா. அதுக்கு நம்ப துணையா நிக்கணும். “ என வாசு முடிக்க, ஜெயா அனைவரையும் மறந்து ஓடி வந்து வாசுவை கட்டிக்கொண்டாள். 

 “ சாரி மாமா, நீங்க எவ்வளவோ சொன்னிங்க நான் தான் அப்போ கேக்கல. ஆனா இப்போ நீங்க தான் என் கூட இருக்கிங்க. “ என தேம்பி தேம்பி ஆழ, 

“ யாரு வேணா தப்பான முடிவு எடுக்கலாம், ஆனா அதுல இருந்து வெளிய வரணும். அதான் முக்கியம். நீ இனிமே படிகற வழிய மட்டும் பாரு. “ என அவன் அவளை தேற்ற, வாணி அத்தைக்கு அத்தனை வேதனையாக இருந்தது. ஒரு பக்கம் வாசுவை பேசியது இன்னொரு பக்கம் தானும் ஜெயாவை சரியாக கையாள வில்லையோ என மனம் பாரமாய் மாறிபோனது. தாயின் பரிதவித்த நிலை தான். 

  சுந்தரி ஆச்சி, “ வாணி, நீ மனச போட்டு அலட்டாத. நீ வேணும்னு எதுவும் பண்ணல, உண்மையில உன் மேல எந்த தப்பும் இல்ல. கண்டிக்கறதால தான் புள்ளைக இப்படி போறாங்கனு இல்ல. 

நம்ப புள்ளைகளுக்கு சில நேரம் யார நம்பறதுனு தெரியாது. நீ எவ்ளோ எடுத்து சொன்னாலும் ஏமாத்துறவங்க அவ்ளோ நம்ப வச்சிருப்பாங்க.  

எல்லா தப்பையும் உன் மேல போட்டுக்காத. ஜெயா மேலவும் போடாத, அவ சின்ன பொண்ணு, 

ஜெயா புதுசா பொறந்ததா நினச்சிக்கோ. இனிமே அவ வாழ்க்கை புதுசா ஆரம்பிக்கட்டும். “ 

என சொல்லி வாணியை சுந்தரி ஆச்சி அரவணைத்துக்கொண்டார்.                        அன்று அவ்வப்போது இதே பேச்சாகவே செல்ல, பத்மாவிற்கு இது போல் சூழ்நிலை எல்லாம் பார்த்து பழக்கமில்லை. தேவராஜ்ஜும் அவன் தாயாரும் பேசியதை அவள் கேட்டபோது நிச்சயமாக அவளால் நம்ப முடியவில்லை. இந்த காலத்திலும் இப்படியெல்லாம் பேசுவார்களா என தோன்றியது. ஆனால் கண் முன் ஜெயா என்னும் சாட்சி இருக்க, பத்மாவிற்கு இப்போது தான் நம்ப முடிந்தது. எல்லாரும் இரவு அவரவர் வீடு செல்ல, பத்மாவும் வாசுவும் அவர்கள் வீடுக்கு வந்தனர். ஆனால் அடுத்த நாள் அவன் ஆரம்பித்த காரியம் அடுத்து ஒரு மாதத்தில் தேவராஜ் என்னும் மனிதனின் வாழ்க்கையை முழுதாக மாற்றியது. 

     

   

Advertisement