Advertisement

        வாசுவும் பத்மாவும் ஊருக்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. பத்மாவிற்கு தான் பார்த்ததை தான் இன்னும் நம்ப முடியாவில்லை. உண்மையா இல்லை தான் ஏதாவது தவறாக எண்ணிவிட்டோமா என ஒன்றும் புரியவில்லை. வாசுவிடம் தான் பார்த்ததை சொல்லிவிட வேண்டும் என எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் உறுதிபடாமல் சொல்ல யோசனையாக இருந்தது. 

ஸ்ரீபத்மாவின் சின்ன பேக்கரியில், பின் காலை பொழுதில் வேலைகள் எல்லாம் ஓரளவு முடித்துவிட்டு அவளின் அறையில் அமர்ந்து தான் எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு இருந்தாள். மொபைலில் வாசுவை அழைக்க, 

“ ஹாய் ராங்கி….. 

என்ன பண்ணிட்டு இருக்க. என்ன இப்போ கால் பண்ணிருக்க. ஏதாவது இம்பார்டண்ட்டா பேசணுமா. “ அவசரமாய் வந்து விழுந்தது வாசுவின் குரல். ஏதோ முக்கியமான வேளைகளில் இருப்பான் என பத்மாவினால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் ஸ்ரீயால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ மாம்ஸ் உன்ன பார்க்கணும். நான் உன்ன ஒருத்தர் பார்க்க கூட்டிட்டு போறேன். நீ இப்போ வரணும். “ 

“ஸ்ரீ ஏதுவா இருந்தாலும் இப்படியே சொல்லு மா. அவ்ளோ இம்பார்டண்ட்டா?“

“ இம்பார்டண்ட் தான். இப்போ நீ என்கூட வரியா இல்லயா ?“ கொஞ்சம் கட்டளையாய் வந்து விழுந்தது ஸ்ரீயின் குரல். 

“ ஐஞ்சு நிமிஷதுல வரேன் இரு.“ என சொன்னவன் அதே போல் வந்து பேக்கரியில் இருந்து சற்று தள்ளி காரில் அமர்ந்தவாரு ஸ்ரீபத்மாவிற்கு அழைக்க, பத்மா வந்தாள். அவளுடன் கிளம்பினான். 

      ஒரு பதினைந்து நிமிடம் கடந்திருக்கும், வாசுவும் ஸ்ரீயும் எங்கோ ஒரு சிறிய கிராமத்தை நோக்கி பயணிந்துக்கொண்டிருந்தனர். 

“ ஸ்ரீ சட்டுனு வானு சொல்ற, என்ன தான் விஷயம் சொல்லு. யார பார்க்க போறோம். “

“ போறோம்ல, அங்க பார்த்துக்கோங்க.“ என பொதுவாய் சொல்லி அழைத்து சென்றாள்.

சற்று நேரத்தில் ஓரிடத்தில் கார் நிறுத்த சொல்ல, அது இவர்கள் மூன்று நாள் முன் சாப்பிட வந்த தாபா,. 

“ உள்ள வாங்க. “ 

“ இங்க சாப்பிட்டது நல்லா இருந்துச்சா. அதான் இன்னைக்கு சாப்பிட கூட்டிட்டு வந்துட்டியா ? “  

அந்த தாபாவின் உள்ளே இருந்து பாதி முகத்தில் துண்டை கட்டியவாரு ஒரு ஆண் வெளியே வர, 

“ ஹலோ ஒரு நிமிஷம். ? “ என அவனை பார்த்து ஸ்ரீ கூப்பிட, அவன் இவர்களை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து, பின்பு வேகமாக உள்ளே திரும்பி சென்றுவிட்டான்.

“ ஸ்ரீ யாரது, ஏன் இப்படி ஒடுறான். “

“ அத நீங்க தான் மாம்ஸ் கேட்கணும். போய் கூட்டிட்டு வாங்க. ” என ஸ்ரீ உறுதியாக குரலில் சொல்லி நின்றாள்.

வாசுதேவன் உள்ளே சென்று அந்த ஆண் உடன் வெளி வர, ஸ்ரீ அசையாது அவனை தான் பார்த்திருந்தாள். 

“ யார் ஸ்ரீ இது உனக்கு தெரிஞ்சவங்களா. “ என வாசு கேட்க, 

“ இல்ல மாம்ஸ் உனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க. “ என ஸ்ரீ சொல்ல, எதிரே நின்றவன் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. 

“ ஏ தம்பி யார் நீ, என்ன இப்படி பண்ற. “ என வாசு அவனை நெருங்கி நின்று கேட்க, அவன் தலை நிமிரவே இல்லை, ஆனால் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. 

ஸ்ரீ வாசுவின் அருகில் வந்தவள், அந்த ஆணின் பாதி முகத்தை மூடியிருந்த  துண்டை இழுத்து விட, அங்கே நின்றிருந்த நபரை வாசுவினால் நம்ப முடியவில்லை. 

ஏன் என்றால் எதிரே இருந்தது ஒரு ஆடவனே இல்லை, ஒரு பெண். 

அந்த பெண் ஜெயா. 

வாசுவின் அத்தை மகள். 

   வாசுவின் அதிர்த்தான் என்று சொல்வதெல்லாம் சிறிய வார்த்தை, அவனுள் ஏற்பட்ட பதைப்பு இப்போது கூடி போனது. இத்தனை நேரம் அசட்டையாய் இருந்த வாசு முழுதாக மாறி போனான். ஒரு நம்ப முடியாத பாவனை அவன் முகத்தில். 

“ மாமா சாரி மாமா. என்னைய மன்னிச்சிடுங்க மாமா.” என ஜெயா அங்கேயே காலில் விழ, அவளை தூக்கி நிறுத்திய ஸ்ரீ, அவளை தர தர வென இழுத்துக்கொண்டு கார் அருகே சென்றாள். வாசுவும் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன், அவர்கள் பின்னால் வந்து வண்டியில் ஏற, யாரும் ஒன்றும் பேசாமல் இருக்க, வாசு வண்டியை உடனே அங்கே இருந்து கிளம்பி ஒரு ஐந்து நிமிட தூரத்தில் பெரிதாக ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்த ஒரு மரத்தடியில் நிறுத்த, கார் உள்ளே மெலிதாக ஜெயாவின் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. 

மூவரும் கீழே இறங்க, ஜெயா தோய்ந்து போய் அங்கே இருந்த மரத்தடியில் அமர்ந்தாள். வாசு ஜெயவின் முன்னால் இருந்த கல்லில் அமர, ஸ்ரீபத்மா ஜெயாவின் அருகில் அமர்ந்தாள். 

      ஜெயா தேற சில நிமிடங்கள் பிடிக்க, வாசு அவளை பார்த்தவாரே அமர்ந்திருந்தான். எத்தனை மாற்றங்கள் அவள் முகத்தில். தலை முடி வெட்டி, முகத்தில் சோர்வு தெரிய, ஒரு ஓய்ந்த தோற்றம். 

வாசுவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. முன்பு ஒரு முறை அவளை காணவில்லை என தேடிய பொழுதில், இதே போல் ஒரு மரத்தடியில் அழகாய் தூங்கிய அந்த முகம் இல்லை இப்போது அவளிடம். ஆளே அடையாளம் தெரியாதது போல் ஒரு தோற்றம். 

“ மாமா என்னய மன்னிச்சிடுங்க மாமா. 

நான் உங்க பேச்ச கொஞ்சம் கேட்டு வைட் பண்ணிருக்கலாம். 

ரொம்ப சாரி மாமா. நான் ரொம்ப தப்பான ஒரு முடிவே எடுத்திட்டேன். “ தேம்பிக்கொண்டே சொல்ல, 

“ என்ன ஆச்சு ஜெயா ? “ என வாசு  அவளை ஆற்றும் விதமாக கேட்டான்.

“ தேவராஜ் வேணாம்னு நீங்க எவ்ளோவோ சொன்னிங்க. நான் தான் உங்க எல்லார் கிட்டவும் அடம் புடிச்சு கல்யாணம் பண்ணேன். அம்மா காலுல  விழுந்து கெஞ்சி, நம்ப தாத்தாகிட்ட பேசினு ரொம்ப அடம் புடிச்சு நம்பிக்கையா கல்யாணம் பண்ணேன் மாமா நான். 

அதெல்லாம் வெறும் ரெண்டு வருஷம் தான் மாமா. 

குழந்தை பொறந்து ஒரு வருஷம் எல்லாம் நல்லா தான் இருந்துச்சு.

ராஜ் வெளி வேலைக்கும் போகல, அவங்க அப்பா கூட லாரிக்கு ட்ரிப் தான் போனான். முதல இருந்தே அவங்க அப்பா தர சம்பளம் பத்தல நிறைய வெளில கடன். நாள் போக போக அவருக்கும் இவனுக்கும் வேலைல .ஒத்துவரல. வீட்ல சண்ட, சொத்த பிரிச்சு குடுனு ஒரே பேச்சு. 

என் மாமனார் அதுக்கு ஒத்துக்கல. அதனால என்கிட்ட சண்ட, அம்மா வீட்ல ஏதாவது ஹெல்ப் கேளுனு சொல்லிட்டே இருந்தான். 

அம்மாக்கு அவ்ளோ வசதி இல்லை. நம்பளே எப்படியாவது சமாளிச்சுக்கலாம்னு சொன்னேன். அவன் கேட்கவே இல்லை. இதுல அவங்க மாமா ஒருத்தர் கட்சில இருக்காருல, அவர் இடையில வந்து இவனுக்காக சொத்து கொடுக்க சொல்லி பஞ்சாயத்துக்கு வந்தாரு. ஆனா மாமனார் ஒன்னும் முடியாதுனு சொல்லிட்டாரு. 

அதனால என் கூட சண்டை, என் கூட பேசறது இல்ல. குடுபத்தை கவனிக்கறதே இல்ல. குழந்தைய தொடறது கூட இல்ல. 

ஃபர்ஸ்ட் காலேஜ் படிக்கறப்போ எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணான், நான் வீட்ல அம்மா கூட ஏதாவது சின்னதா சண்ட போட்டா கூட ரொம்ப ஆறுதலா பேசுவான். அப்படியே பேசி பேசி ரொம்ப குளோஸ் ஆயிட்டான். 

என் கூட அவ்ளோ பேசி, அவன ரொம்ப தேடுற அளவுக்கு என்னைய நினைக்கவச்சுட்டான் மாமா. அவன மிஸ் பண்ண கூடாதுனு நான் நினைக்கற அளவு நடந்துக்கிட்டான் மாமா. “

என சொல்லி ஜெயா இன்னும் அழ, பார்த்துக்கொண்டு இருந்த வாசுவினால் இதெல்லாம் எளிதில் எடுக்க முடியவில்லை. அத்தனை கோபம் வந்தது தேவராஜ்ஜின் மேல், அவனின் செயல் எளிதானது அல்லவே.

      சிவசு தாத்தாவிடம் கையெழுத்து வாங்கி வாசுவிற்கு எத்தனை பெரிய பிரச்சனை கொடுத்து, அதெல்லாம் போதாது என்று ஜெயவை இப்படி செய்திருக்க, வாசுவினால் கோபத்தை அடக்க முடியவில்லை, அது அப்படியே அவன் கண்ணில் தெரிய, ஸ்ரீ அவனின் கையை அழுத்தி ஆறுதலாய் தலையசைக்க, வாசு கண்கள் மூடி திறந்து நிதானித்தான். 

“ ஜெயா நீ அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல. “ வாசு ஆதங்கமாய் கேட்க, 

“ முடில மாமா. என்னால முடில. உங்க எல்லார்கிட்டவும் அடம் பிடிச்சு  கல்யாணம் பண்ணேன். அது இப்படி ஆகவும் உங்கள எல்லாம் எப்படி பாக்கறதுனு உள்ளே ஒரே குற்றவுணர்ச்சி. 

அதுமட்டும் இல்லாம அங்க வந்து இத சொன்னா. எல்லாரும் என்னைய என்ன சொல்லுவாங்கனு ஒரு பயம். எங்க பேச்ச கேட்கம கல்யாணம் பண்ண, இப்படி அவன் இன்னொரு கல்யாணம் பண்ற அளவு போயிட்டான்னு என்னைய கேட்டா, நான் என்ன மாமா பதில் சொல்லுவேன்.   

இதெல்லாம் கேட்டா அம்மா தாங்கவே மாட்டாங்க மாமா. அம்மாவ என் வீட்டுக்கு வரவேண்டாம்னு வேணும்னே சண்ட போடுற மாதிரி சொல்லிட்டேன். அவங்க கிட்ட இது எதுவுமே சொன்னதில்ல நான்.  

கல்யாணம் பேசனப்போ என் மாமியார் என்னைய படிக்க வைக்கிறேன்னு சொன்னாங்க மாமா. ஆனா கல்யாணம் முடிஞ்சதும், என்னைய மேல படிக்க வைக்க கூடாது, அப்படி படிக்க வச்சா நான் அங்க யாரையும் மதிச்சு நடக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால் ராஜு என்னைய படிக்க அனுப்புல. 

அட்லீஸ்ட் நான் அப்போவே  இன்னும் ஆறு மாசம் அந்த டிகிரி முடிச்சிருந்த எனக்கு ஏதாவது ஜாப் ட்ரை பண்ணிருப்பேன். ஆனா டிகிரி முடிக்கலனு சரியான வேலை எதுவும் கிடைக்கல. கடைசில இந்த ஹோட்டல்ல தான் வேலை கிடச்சது. 

அதுவும் இங்க காலைல அப்புறோம் நைட் ரெண்டு டைமும் வேலை பார்க்கணும். 

என் குழந்தைக்கு உடம்பு முடியலைனா கூட ஹாஸ்பிடல் போக வர ஏதாவது நான் பண்ண முடியும். குழந்தைக்கு ஏதாவதுனா கூட எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்றான் மாமா. 

இங்க வேலை பார்க்கறதால என் பாதுகாப்புக்கு முடி வெட்டிக்கிட்டேன். ஷர்ட் பாண்ட் எல்லாம் போட்டு பார்க்க அவ்ளோ சீக்கிரம் பொண்ணு மாதிரி தெரியக்கூடாதுனு டிரஸ் பண்ணிக்கிறேன்.” என அவள் சொல்லி முடிக்க கூட முடியவில்லை குரல் மிகவும் தடுமாறியது. 

வாசுவினால் இதெல்லாம் கேட்க முடியவில்லை, 

“ நீ வா, நான் வந்து உன் வீட்ல பேசுறேன். ஏன் நீ முன்னயே இதெல்லாம் என்கிட்ட சொல்லல. அப்போவே இதுக்கு ஒரு வழி பண்ணிருப்பேன்ல. “ ஆத்திரமாக முடித்தான் 

“ இல்ல மாமா, வேணாம். “ என இன்னும் ஆழ, வாசு விடவில்லை.  “இதெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. “  என வாசு வண்டியில் ஏற போக, ஜெயா வாசுவின் காலிலே விழுந்து விட்டாள். 

“ மாமா வேணாம். அங்கேலாம் போக வேணாம். “ 

“ ஏன். “ புருவம் சுருக்கி வாசு சந்தேகமாய் வினவ, 

“ அவனுக்கும் அவங்க மாமா பொண்ணுக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க மாமா. “ ஜெயவின் குரல் அழுகையின் ஊடே சுரத்தயே இல்லாமல் திக்கி திக்கி வந்தது. உச்ச பச்ச அதிர்ச்சியில் வாசுவிற்கும் பத்மாவிற்கும் வார்த்தையே வரவில்லை.

“ அரசியல இருக்காரே அவங்க மாமா, அவரோட பொண்ணு தான். அந்த பொண்ணுக்கு தேவ்ராஜ்னா ரொம்ப இஷ்டமாம். என்னய ஃபர்ஸ்ட் மேரேஜ் பண்ணதே அந்த பொண்ணுக்கு பிடிக்கலையாம். இப்போ எங்களுக்குள்ள பிரசன்னைனு தெரிஞ்சதும் அந்த பொண்ணு அவங்க அப்பா கிட்ட சொல்லி இப்படி ஒரு ஏற்பாடு நடக்குது. “

வாசு கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான். இப்படி ஒரு பதிலை நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை. 

“ இவ்ளோ நடந்துருக்கு. ஒரு வார்த்த கூட என்கிட்ட சொல்லல. “ ஒட்டு மொத்த கோபத்தையும் அவளிடம் காட்ட, கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள் ஜெயா.

“ இல்ல மாமா உங்க பேச்ச கேட்காம கல்யாணம் பண்ணிட்டேன். அதுல ரொம்ப அடிபட்டு உங்க முன்னாடி வந்து ஹெல்ப் கேட்க முடில. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருந்துச்சு மாமா. என்னால மனசு விட்டு யார்கிட்டவும் சொல்ல முடில மாமா. 

நான் தேடிகிட்ட வாழ்க்கை தான, அத நான் தான் அனுபவிக்கணும்னு உள்ளுக்குள்ள ஒரு பிடிவாதம். “ 

வாசுதேவனால் இதை ஏற்க முடியவில்லை,

 “ இது பேரு பிடிவாதம் இல்ல ஜெயா. முட்டாள் தனம்.

 நீ உன்னோட வாழ்க்கைய தேர்ந்தெடுத்தது உன்னோட விருப்பம், அது சரி. 

ஆனா நம்ப முடிவு சரியாவும் இருக்கலாம் இல்ல தப்பாவும் இருக்கலாம். அது பிரச்சனை இல்லை. 

உன்னோட லைஃப்ல  நீ அடிபடுறப்போ சரியான நேரத்துல சரியான ஆள் கிட்ட நீ ஹெல்ப் கேட்டுருக்கலாம்ல. 

உன் சின்ன வயசுல இருந்து உங்ககூட இருக்க உங்க அம்மா, நம்ப தாத்தா, ஆச்சி, உன்ன வளர்த்த நான், எங்க யார் கிட்டாயாவது நீ வந்து ஹெல்ப் கேட்டுருக்கலாம். நாங்க எல்லாரும் நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க.

ஏன் நீ எங்க கிட்ட சொல்லல. “ தாள முடியாமல் வாசு கேட்க,

“ சாரி மாமா, என்னால உங்க முன்னாடி வந்து இப்படி நிக்க முடில, நான் லவ் பண்ணிருக்கவே கூடாது. கல்யாணம் பண்ணிருக்கவே கூடாது. “ என முகத்தை மூடி ஜெயா அழுதாள்.  

 அவள் முன் ஸ்திரமாய் நின்ற வாசு 

 “ இங்க பாரு ஜெயா லவ் பண்றதாலயோ கல்யாணம் பண்றதாலயோ தப்பு இல்ல. 

ஒன்னு புரிஞ்சிக்கோ. 

பொண்ணோ பையனோ அவங்கவங்க வாழ்க்கைய டிசைட் பண்ண எல்லா உரிமையும் அவங்கவங்களுக்கு இருக்கு. 

ஒருத்தர் மேல விருப்பம்கிறது மழை துளி மாதிரி. 

அது பூ மேல விழுதா இல்ல முள் மேல விழுதான்றது தான் இங்க விஷயம். 

நீ ஒரு டிசிஷன் எடுத்த. உன்னோட விருப்பத்துக்கு நீ உண்மையா இருந்த. உன்னோட மேரேஜ் லைஃப்ல நேர்மையா இருந்த. அது தான் நீ. 

எல்லாரும் லைஃப்ல ஏதோ ஒரு இடதுல தப்பான டிசிஷன் எடுப்பாங்க. அது ரொம்ப இயல்பான ஒரு விஷயம். அதுல இருந்து மீண்டு வரணும், அது தான் லைஃப்ல அடுத்து படி. 

அது தான் உன்ன இன்னும் லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டு போகும்.

நீ உன் லைஃப்ல கீழ விழறது இங்க பிரச்சனை இல்ல. நீ எழுந்து நிக்கறது தான் இங்க முக்கியம். அப்படி நின்னவங்க தான் வாழ்க்கைய நல்லா வாழ்ந்துருக்காங்க. 

இப்போ சொல்லு உன் லைஃப் பத்தி உன் முடிவு என்ன. “ என சொல்லி அவள் யோசிக்க சில நிமிடம் அவகாசம் கொடுத்து சற்று தள்ளி அவர்கள் நின்ற மரத்தை தாண்டி வேறு ஒரு மரத்தடியில் சென்று சாய்ந்து நின்றான் வாசு. 

ஸ்ரீபத்மாவும் ஜெயாவிற்கு தனிமை கொடுத்து வாசுவின் பக்கம் சென்றாள். 

“ என்ன மாம்ஸ் பண்ண போறிங்க. தேவராஜ என்ன பண்றது. “

“ ஜெயா அவன் வேண்டாம்னு டிசைட் பண்ண அதுக்கு என்ன பண்ணனுமோ அத செய்யணும். 

நீ என்ன சொல்ற ஸ்ரீ. “ அவன் ஒரு முடிவோடு தான் ஸ்ரீயை பார்த்தான்.

“ ஜெயாவுக்கு இப்படி ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப் வேண்டாம் மாமா. ஒரு கல்யாண உறவுள நம்பிக்கை தான மாம்ஸ் முக்கியம். 

ஜெயா அவன் மனைவியா அவன் கூட ஒரே வீட்ல இருகறப்போவே, அவன் ஜெயாவ வேணாம் சொல்லி இன்னொரு கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டான்.  

ஜெயா மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு அவன் யோசிக்க கூட இல்ல. 

இப்படி ஒருதனுக்காக அவ லைஃப் வீணாக கூடாது மாம்ஸ், “

“ எல்லாம் சரி ஸ்ரீ. ஆனா எந்த டிசிஷன்னா இருந்தாலும் அது ஜெயா தான் எடுக்கணும். “ என சொல்லி இருவரும் ஜெயாவின் அருகில் வர, 

ஜெயா ஒரே முடிவாக சொல்லிவிட்டாள், தேவராஜ் அவளுக்கு வேண்டாம் என்று. 

இத்தனை நாள் மனதில் இருந்ததை யாருடனும் பகிராமல் இருக்க, இப்போது ஜெயாவின் மேல் உண்மையான அக்கறை உள்ள இவர்கள் இருவருடனும் பேசவும் ஜெயாவிற்கு ஒரு தெளிவு கிடைத்தது. இத்தனை நாள் யாரிடம் சொல்ல என தவித்து நிற்க, இப்போது இவர்கள் வரவும் மனதில் ஒரு நம்பிக்கை கீற்று. 

அதனால் உறுதியாய் முடிவெடுத்து விட்டாள். 

    ஜெயா தீர்க்கமாக சொல்லிவிட வாசு என்ன செய்வது என அப்போதே முடிவெடுத்து விட்டான். அவன் களத்தில் இறங்க, காட்சிகள் அனைத்தும் மாறின என்பதை விட அனைத்தையும் மாற்றி அமைத்தான் வாசுதேவன். 

    

   

    

Advertisement