Advertisement

ஆஆஆஆஆஆஆ 
சத்தியமாக கத்தியது ஸ்ரீ இல்லை, அவளது பைசன் வாசுதேவன். 
அவன் இடுப்பிலும் கையிலும் துண்டோடு இருக்க, அவன் உள்ளே வந்ததை இவள் எதிர்பார்க்கவில்லை தான், இவள் சிறு அதிர்ச்சி அடைந்தாலும், அதற்காக கத்தவெல்லாம் இல்லை. ஆனால் கையை கட்டிக்கொண்டு அவனை கீழே இருந்து மேலாக இன்ச் பை இன்ச்சாக குறு குறு வென பார்த்திருந்தாள்.
ஸ்பீக்கர் சத்ததில் கீழே எதுவும் கேட்கவில்லை. 
கட்டில் பக்கம் பாய்ந்து சென்றவன், அங்கே இருந்து போர்வையை எடுத்து அவசரமாக வெற்று நெஞ்சின் மேல கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டவன், ஸ்ரீயை பார்த்து, 
“ ஏய் நீ எப்படி உள்ள வந்த. வெளிய போ. “ 
என கையில் இருக்கும் துண்டால் காற்றில் அடித்து அவளை விரட்டுவது போல் மெலிதாக சத்தமிட்டு அதிர்ச்சி பார்வையுடன் சொல்ல, ஸ்ரீ அடி மேல் அடி எடுத்து வைத்து அவனை பார்த்து உதட்டை கடித்தவாரே சிறு புன்னகையுடன் பின்னால் கையை கட்டிக்கொண்டே அவனை நோக்கி சென்றாள். 
” ஏய் கிட்ட வராத. 
இப்படி தான் கல்யாணமாகாத கன்னி பையன் இருக்குற ரூம்க்கு யாருமில்லாத நேரம பார்த்து வர்றதா.  
வெளிய போ ஸ்ரீ. “
என சொல்லிக்கொண்டே அறையின் இன்னொரு ஜன்னலை நோக்கி பின்னால் சிறு பதட்டத்துடன் அடியெடுத்து வைத்தான்.
ஸ்ரீபத்மா அவனை ‘ அடேய் ‘ என்பது போல் பார்த்தவள், விடாமல் அவனை நோக்கி சென்றவள், மிக அருகில் செல்ல, அவன் தலையில் இருந்து நீர் சொட்ட சொட்ட மெலிதாக இருந்த துணி போர்வை நனைந்து அவனை நெஞ்சோடு ஒட்டிக்கொள்ள, அவனை ரசனையாக பார்த்து, 
” மாம்ஸ் நீங்க ஆம்பள நாட்டுக்கட்டனு தெரியும்..
ஆனா இவ்ளோ கிளு கிளுனு இருப்பிங்கனு தெரியாது. ” என கையை தேய்த்து, ஐஸ் கிரீமை  பார்க்கும் பார்வையில் ரசித்து சொல்ல, கலவரமாகி போனவன், 
“ என்னைய யாராவது காப்பாத்துங்கனு நான் கத்திடுவேன் ஸ்ரீ. “ மெதுவாக மிரட்டினான். 
“ ஓஹ் அப்டியா.
கத்துங்க கத்துங்க…” என ஒரு தினுசாக சொல்லியவள், குறும்பு புன்னகையுடன் அவனை நெருங்கி கொண்டே 
“ தங்கிட தினக்கு தினா 
தா தினக்கு தினா 
தங்கிட தினக்கு தினா
தா தினக்கு தினா ”
என குஷி விஜய்யாய் அவள் ஏற்ற இறங்கங்களுடன் பாட, நாக்கு உலர்ந்து  போனவன்,
“ அடிபாவி தள்ளி போ…
தள்ளி போனு சொல்றேன்ல…” 
என கண்கள் விரிய வேகமாக சொன்னவன், அவளை தாண்டி செல்ல பார்த்து, சைட்டில் நகர, இப்போது இவள் அவன் வழியை மறித்தவாறு டக்கென அதே சைட்டில் நகர்ந்து அவனை நோக்கி இன்னும் முன்னேறியவள், கைகளை பின்னந்தலையில் தடவியவாரே,  
“ ஒரு ஸ்பூன் பியர் அடிச்சும்… போதை இல்லை…
அடுத்த ஸ்பூன் ரெட் வைன் அடிச்சும்… கிக் இல்லை…
பூரி சாப்பிட்டும்… தூக்கம் இல்லை…
கண்ண மூடுன…
கனவுல நீ தான…” 
என பருதி வீரியாய் எக்ஸ்பிரஷனோடு இவள் கவிதை வாசிக்க, வாசு அவளை முறைத்தவாரே ஒரு கையால் அவளை பிடித்து தள்ளி நிறுத்தியவன், அவளை தாண்டி செல்ல, அவன் தோளில் இருந்து போர்வை நழுவியது. இவள் தான் இழுத்தாளோ என நினைத்தவன், திரும்பி அவளை பார்த்து ஏகத்துக்கும் முறைக்க, 
“ என்ன மாம்ஸ் முறைப்ஸ்ஸா… 
அட அட அட 
இந்த முறப்ப பார்த்து எத்தன நாள் ஆச்சு.
அசத்துரிங்க மாம்ஸ்.” 
என ரசகுலாவாய் அவன் முகத்தை ரசித்து சொல்ல, காண்டாகி போனவன்,
“ ஸ்ரீ விளையாடாத.
வெளிய யாராவது பார்த்தா ஏதாவது சொல்லுவாங்க. கிளம்பு வீட்டுக்கு. ” என ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சொல்ல, 
 “ ஜும் ஜூ ஜும் தா 
சிக் தா சிக் தா 
 ஜும் ஜூ ஜும் தா 
 சிக் தா சிக் தா “ 
என இன்னும் சத்தம் கூட்டி குஷி விஜயாய் உற்சாகமாக பாடியபடி அவன் அருகே ஸ்ரீ நெருங்க, அவளது ரியாக்சனை பார்த்தவன் பதறி அவசராமாக கீழே இறங்கினான்,  
ஸ்ரீபத்மா படிகளில் அவனை விட முன்னே தட தட என இறங்கியவள் அவனை மறைத்து நின்றுகொண்டாள். 
வாசு பதட்டமாக ஸ்ரீ பின்னால் யாராவது வந்துவிடுவாரோ என திக் திக் என பார்த்து வைக்க, 
“ மாம்ஸ் “ என அழைத்து தன் கையையும் அவன் முன்னால் நீட்டி காட்டினாள். 
பார்லர் சென்று வந்தவள் மருதாணியை மெஹந்தி டிசைன்னில் போட்டிருந்தாள். அவன் முன்னால் அதை காட்ட, அப்போது தான் அதை பார்த்தவன், அதில் என்ன இருக்கிறது என பார்க்க, அவன் பெயரை குறிப்பது போல் வாட்ச் வடிவில் ஒரு கையில் டிசைன் போட்டு, மறு கையில் பத்து என எண் போட்டபடி ஒரு டிசைன் என அவள் இரு கரங்களும் மருதானியால் சிவந்திருந்தது. 
அதை பார்த்தவன் உள்ளே உருகி போக மெல்லிய புன்னகையுடன் அவள் முகத்தை ஏறிட, அவள் காட்டன் கேண்டி கன்னங்கள் இன்னும் பொழிவாய் மின்ன, அவன் அவளையே பார்த்திருந்தான். 
” இப்படியே இங்கயே இருந்துடு ஸ்ரீ. ” என தேன் தடவிய குரலில் இளக்கமாக சொன்னவன், அப்படியே கைகளை கட்டிச் சுவற்றில் சாய,
” பார்ரா…
இப்போ தான் வெளிய போ… வெளிய போனு சொன்னிங்க. இப்போ இங்கயே இருக்க சொல்றிங்க.” 
என ஸ்ரீ புருவம் உயர்த்தி புன்னகையுடன் கேட்க, அப்போது தான் ஆச்சியின் நியாபகம் வந்தவன், அவளை தள்ளி கொண்டு முன்னே சீக்கிரமாக இறங்கி பின் பக்கம் வழியாக உள்ளே நுழைய, அவனின் பின்னால் முயலாய் துள்ளிக்கொண்டே உள்ளே சென்றாள்.
கீழே ஒருவர் பின்னால் மற்றவர் வந்து நிற்க, ஆச்சி இதை எதிர்பார்க்காதவர், தேனுவை முறைக்க, அவளோ எனக்கும் பத்துவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பார்வையை ஆச்சியிடம் திருப்பமல் தாத்தாவிடம் சின்சியராக கல்யாண விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாள்.    
” சரியான கூட்டு இதுங்க ரெண்டும். ” என கண்களை உருட்டிக்கொண்டே ஸ்ரீபத்மாவின் அருகில் ஆச்சி வர, வாசுவோ, பத்மாவிற்கும் ஆச்சிக்கும் இடையில் நின்றவன் பரபரப்பாக “ ஆச்சி சும்மா பேசிட்டு தான் இருந்தோம். “ என உளறி வைக்க, ஆச்சி அவனை ஒரே கையால் இழுத்து அவரின் பின்னால் விட்டார், ஸ்ரீயை முறைத்து பார்க்க, அசராமல் அவரை பார்த்து சிரித்து வைத்தாள். 
“ அடங்காத கழுத. “
“ ஆமா ஆமா ஆச்சி….நான் உங்க வீட்டு ராசாவ கட்டிக்க போறேன்ல, நான் கழுத தான். “ என ஆச்சியின் பின்னால் நின்ற வாசுவை பார்த்து கண்கள் சிரிக்க சொல்ல, கடுப்பாகி போனவன் வாயிலிருந்து ஓசை வராமல் வாயை மட்டும் அசைத்து அவளை திட்ட, 
“ ஹான் என்ன மாமா சொல்றிங்க…
நான் அழகா இருக்கேன்னா…
தாங்க்ஸ் மாமா. “  என இவள் அவனுக்கு டப்பிங் கொடுக்க, ஆச்சி அபௌட் டர்ன் அடித்து வாசுவை இப்போது முறைத்தார். 
“ ஆச்சி நான் ஒன்னும் பண்ணல. பத்துவே சொல்லுது. “ என அவசராமாய் தன்னிலை விளக்கம் கொடுத்தான். இப்போது ஆச்சி அவனை இன்னும் முறைத்தார்.      
ஆச்சி சுதாரிக்கும் முன் பின்னால் இருந்து அவர் கழுத்தை சுற்றி கைகளை போட்டு கோர்த்துக்கொண்டவள், வாசுவை பார்த்து,
” ஏன் மாமா, உண்மைய தான சொன்னேன். 
ஆச்சி… மாமா நான் பாக்க வரேன்றதுக்காகவே குளிச்சி ஃபிரெஷ்ஷாஆஆ  ரெடி ஆனாரு. “ என பாவனையாய் கதை சொல்ல, இப்போது தான் மார்பிலும் இடுப்பிலும் துண்டோடு இருப்பதை உணர்ந்தவன், 
‘ அய்யய்யோ ‘ என்ற ரியாக்சனனோடு ஆச்சியை பார்க்க, அவர் கண்கள் இன்னும் முறைப்பில் விரிய, அவன் கையில் இருந்த துண்டை எடுத்து  மார்பில் போர்த்திக்கொண்டான். 
ஆச்சி, அவர் தோளில் இருந்து ஸ்ரீயின் கரத்தை எடுத்தவர், அவள் புறம் திரும்பி, 
“ இன்னும் மூனு நாள கல்யாணம் வச்சிக்கிட்டு இப்படி தான் வந்து நிக்குறதா. பொம்பள புள்ள இப்படி தான் பண்ணுவிய நீ “ என அவனை விட்டு இவள் மேல் பாய, அசராமல் அவரை பார்த்தவள்,
“ அதான் ஆச்சி நானும் சொல்றேன். இன்னும் மூனு நாள கல்யாணம்.
 நம்ப வீடு எப்படி அலங்காரம் பண்ணிருக்காங்கனு நான் பார்க்க வேணாமா, அதான் வந்தேன். அப்படியே மாமாவ பார்த்தேன்.
இது தப்பா. 
தாத்தா…பாருங்க தாத்தா ஆச்சிய, என்னைய வீட்டுக்கு வர கூடாதுனு சொல்றாங்க. “ என அவரிடம் போய் கம்ப்ளைண்ட் வாசித்தாள். அதை பார்த்து ஃபீல் ஆனா சிவசு தாத்தா,
“ ஏ சுண்டெலி நம்ப கண்ணாலம் அப்போ நீ இப்படி தான என்னைய ரெண்டு தடவ மறைஞ்சு பார்த்த, நான் ஏதாவது சொன்னேனா. இப்போ ஏன் பத்துவ  மட்டும் சொல்ற. “ என வரிந்துக்கட்டி கொண்டு சொல்ல, ஆச்சிக்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என தெரியாமல் ஒற்றை கையால் மூடிக்கொண்டவர்,. கூடவே, “ இந்த மனுசருக்கு எப்போ எத பேசணும்ன்னே தெரில” என தாத்தவை முறைத்துக்கொண்டே வெட்கத்துடன் முனுமுனுத்தார். 
அதை கேட்ட தேனுவும் பத்மாவும் உற்சாகமாக, “ ஓஓஓஓஓ ஓஹ்ஓஹ் ஓஓஓஓ ஓஹ்ஓஹ் “ என ஒன்றாய் சத்தமிட்டு ராகம் பாட, குழந்தையும் சிரியதாய் பாடியது. எத்தனை நாட்களாய் இப்படி ஒரு சூழலில் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என நினைத்தான். அது கண் முன் நிறைவேற, அந்த கணம் அவன் நெஞ்சில் ஓவியமாய் வரையப்பட்டது.          
“ தேங்க் யு தாத்தா. “ என அவர் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சியவள், திரும்பி அச்சியை பார்த்து , 
“ பை ஆச்சி. 
வீட்ல எல்லோரும் கல்யாணத்துக்கு வந்துடுங்க. “ என ஆச்சியை பல்லை கடிக்க வைத்தவள், வாசுவை பார்த்து, 
“ மாமா நீங்களும் தான். மறக்காம வந்துடுங்க. 
வரட்ட்ட்டா மாமா. “ என கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அவனை பார்க்க, அவனோ உதட்டை மடித்து மிரட்டும் தொனியில் முறைத்துக்கொண்டிருந்தான். அவன் ரியாக்சனை பார்த்தவள் விரிந்த சிரிப்புடன்  வெளியே விரைந்து விட்டாள். அவள் பின்னே தேனுவும் குழந்தையும் வந்தவர்கள் ஸ்கூட்டியில் ஏறி அமர, ஆச்சி விரைவாக வெளியே வந்தவர், 
“ ஏ கண்ணுங்களா ரெண்டு பேரும் பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க, சேர்ந்ததும் ஃபோன் பண்ணுங்க. “ என சொல்லியவர், பின்னால் தாத்தாவும் வந்து நிற்க, கடைசியாக வாசு வெளியே வந்து தள்ளி நின்றான். 
அனைவரையும் பார்த்து மண்டையை ஆட்டியவள், தாதாவிற்கு கையசைத்தவள், வாசுவை பார்த்து வினாடிக்கு குறைவான நேரத்தில் கண்களை சிமிட்டிவிட்டு வண்டியை கிளப்பி சென்றாள். அதை தாத்தா கவனிக்க வில்லை என்றாலும் ஆச்சி கட்சிதமாக பார்த்துவிட்டார். 
சுந்தரி ஆச்சி வாசுவை திரும்பி கண்களை உருட்டி பார்க்க, வாசுவோ ஸ்ரீபத்மா சென்ற திசையை பார்த்து புன்னகையுடன் ‘டா டா’ காட்டிக்கொண்டிருந்தவன், ஆச்சியின் எக்ஸ்பிரஷனை பார்த்து உள்ளே ஜெர்க் ஆனாலும் ஒன்றுமே நடவாததை போல் மெலிதாக விசிலடித்த படி அவரை கண்டும் காணாமல் உள்ளே சென்றவன், 
ஏ லல்ல லல்ல லல்ல லா 
லல்ல லல்ல லல்ல லா 
என குதூகலமாய் பாடிக்கொண்டே துண்டை வைத்து தலைக்கு மேல் சுற்ற, வெளியே நின்று பார்த்த ஆச்சியின் உதட புன்னகையை பூசிக்கொண்டது. 
“ என்ன புள்ள தனியா சிரிசிக்கிட்டு இருகறவ. 
என்னைய மறைஞ்சு பார்த்த நினைப்பு வந்துருச்சா. “ என தாத்தா அவர் அருகில் வந்து புன்னகையுடன் கிசுகிசுக்க, ஆச்சி அவரை பார்த்து முறைப்பில், 
எல்லாம் இன்ப மயம் – புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் 
எல்லாம் இன்ப மயம்…
என உற்சாகமாக பாடிக்கொண்டே சிவசு தாத்தா உள்ளே சென்றார். ஆச்சி சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தவர் மெதுவாக குடு குடு என ஓடி உள்ளே வந்து தாத்தாவின் முதுகை அடித்தவர் சிரித்து கொண்டே மெல்ல உள்ளே ஓட, தாத்தா இன்பமாய் அதிர்ந்தவர், ஆச்சியின் பின்னால் சிரித்துக்கொண்டே 
“ ஏ சுண்டெலி நில்லு புள்ள. “ மெல்ல ஓடினார்.
“ நான் நின்னா என்னைய புடிச்சிகுவிங்க…நான் நிக்க மாட்டேன் மாமோய். “ என பதிலளித்தபடி ஆச்சி தொடர்ந்து மெல்ல ஓட, தாத்தா 
“ அம்மா… அப்பா… சுண்டெலி முடில புள்ள “ என சொல்லி முட்டியை பிடித்து குனிந்து மூச்சு வாங்கி நிற்க, 
“ மாமா என்னாச்சு. “ என பதறி சிவசு தாத்தாவின் அருகில் வர, 
“ ஐ ஐ உன்ன புடிச்சு புட்டேனே. “ என குழந்தையாய் அவர் குதூகலிக்க, அதை பார்த்த ஆச்சி வெட்கத்தால் ஒரு கையை வைத்து முகத்தை மூடி சிரித்து தாத்தாவை தோளிலே அடிக்க, வெள்ளை மீசை ஊடே வாய்விட்டு சிரித்தார் தாத்தா. அதை பின்கட்டிலிருந்து உடை மாற்றியபடியே பார்த்திருந்த வாசுவின் மனம் ஏகாதிற்கும் நிறைந்து போனது. 
அன்றிலிருந்து மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த அந்த விடியல் மிக அழகாய் விடிந்தது.     

Advertisement