Advertisement

எல்லாம் இன்ப மயம் 
எல்லாம் இன்ப மயம் – புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் 
எல்லாம் இன்ப மயம்
     சிவசு தாத்தாவை சோபாவின் இருக்கையில் அமர்ந்து தொடையில் கை தட்டிக்கொண்டே ஸ்பீக்கரில் போட்ட பாட்டோடு தானும் பாட, ஆச்சி அங்கும் இங்கும் பொருட்களை ஆள் வைத்து நகர்த்தி அப்போது தான் தாத்தாவின் பக்கத்தில் அமர, உற்சாகமான தாத்தா,
“ சுண்டெலி நீ வர வர அழகா ஆயிட்டே வர.”
என ஆசையாக சொல்ல, சுந்தரி ஆச்சிக்கு முகத்தில் அப்படி ஒரு வெட்கச் சிரிப்பு. இத்தனை நாட்களாக ஆச்சியை கையிலே பிடிக்க முடியவில்லை. என்று பத்மாவை பற்றி வாசு வீட்டில் சொன்னனோ, அன்றிலிருந்து அவருக்கு ரத்தத்தில் சக்கரை அளவே கூடி போயிருந்தது, அந்த அளவு தினமும் இனிப்பு செய்து கொண்டிருந்தார். 
“ பேரனுக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் வச்சிக்கிட்டு, நான் அழகாயிட்டு வரேன்னு சொல்றிங்களே மாமா, யாராவது கேட்ட என்னைய என்ன நினைப்பாங்க. “
“ என்ன நினைப்பாங்க பத்து குட்டி உனக்கு முகத்துக்கு ஏதோ களிம்பு போட்டுச்சுனு நினைப்பாங்க. “
“ ஆமா குட்டியம் குட்டி, கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வரட்டும், நல்ல அதோட கொழுப்ப குறைக்கிறேன். “ என அவளை தாளித்தவர்,
“ பத்து கொடுத்தது ஒன்னு களிம்பு இல்ல, ஏதோ மாவு எல்லாம் அரைச்சு எனக்கு பூசுச்சு. அதுவும் நான் தூங்கிக்கிட்டு இருக்கப்ப. “ என நொடித்தார்.
“ ஹா….ஹா… என்ன புள்ள, நம்ப பத்துவ இப்படி சொல்ற, சின்ன புள்ள ஏதோ தெரியாம பண்ணிடுச்சு. “ தாத்தா பத்மாவிற்கு பரிந்துக்கொண்டு வந்தார். 
“ என்னது சின்ன புள்ளையா…நீங்க தான் கொஞ்சிக்கணும், என்ன நெஞ்சழுத்தம் இத்தன நாள பேசாம இருந்துட்டு, இங்க வந்து போய்ட்டு என்கிட்ட ஒரு வார்த்தை கூட இவங்கள பத்தி சொல்லல, ஒரு வார்த்த சொல்லியிருந்தா இந்நேரம் கல்யாணமே முடிஞ்சு ஒரு வருஷம் போயிருக்கும். 
சரியான அடங்காத கழுத.” 
என ஆச்சி தன் ஆதங்கத்தை சேர்த்து ஸ்ரீயை வசைபாட, தாத்தாவிற்கு பொறுக்க வில்லை,
“ என்ன சுண்டெலி இப்படி சொல்ற, நம்ப ராசாவும் வாய திறக்காம இருந்துருக்கு, அதுவும் நம்ப கூட இருந்துகிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லல. “ என பேரனையும் இதில் இழுத்து விட்டார். 
      ஆம், இரண்டு குடும்பதிற்குமே அந்த ஆதங்கம் இருந்தது. இருவருக்கும் திருமணம் வேண்டி இரு குடும்பமும் தனி தனியாக கோவில் குளம் என சுற்ற, இப்பொழுது இருவரும் இரண்டு வருடங்களுக்கு பின் விஷயத்தை சொல்கின்றனரே என உள்ளே ஆதங்கம் இருக்கவே செய்தது. 
     ஆரம்பத்திலே பத்மாவோ இல்லை வாசுவோ விரும்பி பழக்கும் பொழுதே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், திருமணம் இத்தனை தள்ளி போயிருக்காதே என எண்ணம் இருக்குடும்பத்திலும் இருந்தது. 
அன்று வாசு பத்மாவிடம் பேசிய பின்னர், வீட்டில் ஆச்சியிடமும், சீதலக்ஷ்மியிடமும் சொல்லி பெண் கேட்க சொல்ல, இருவரும் இவனை பிடித்துக்கொண்டனர். என்ன இப்படி, எப்போதிருந்து பழக்கம், பத்மாவிற்கும் இதில் சம்மதமா என குடைந்து குடைந்து கேட்க, அல்லாடிபோனான் வாசு. 
பத்மா தானும் விரும்பியதாகவும், தான் தொழிலில் நிற்க வேண்டி பத்மாவை சொல்லாவிடாமல் தடுத்தாகவும், இப்போது தான் எல்லாம் சரி வர இரண்டு ஆண்டுகள் காத்திருந்து சொன்னதாகவும் ஏதோ சொல்லி சமாளித்தான். வேறு இவர்களுக்குள் நடந்தது எதையும் அவன் சொல்லவில்லை. அவர்கள் எது கேட்டாலும் தன் மேல் காரணத்தை போட்டுக்கொண்டான். 
சுந்தரி ஆச்சியும் சீதலக்ஷ்மியும் சேர்ந்துக்கொண்டு அப்படி இப்படி என்று இல்லை, அப்படி ஒரு திட்டு வாசுதேவனுக்கு. அவர்கள் என்ன திட்டினாலும் தலையை நாலாபுறமும் ஆடி வைத்தான். அவன் வீட்டில் நிலைமை இப்படி இருக்க, பத்மா வீட்டிலோ சுந்தரம் இந்த விஷயத்தை கேள்விபட்டதும், இவனை நேரில் பார்க்க அடுத்த நாளே டவுன்னில் இவனது உணவகம் ஒன்றிருக்கு வந்தார். அவன் கண்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் இருந்து அடித்து பிடித்து இவரை பார்க்க வந்தான். என்ன சொல்ல போகிறாரோ என ஒரு பயம் வேறு அவனது நெஞ்சில் ஒரு ஓரத்தில் இருந்தது உண்மை. ஸ்ரீபத்மா தான் இத்தனை நாட்களாக வாசு என்ற பெயரை சொல்லாமலே சுந்தரத்திடம் இவனுக்கும் அவளுக்கும் பிரச்சனை என வேறு ஆரம்பத்திலே  சொல்லிவைத்திருக்கிறாளே. அதனால் அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என வாசுவால் கணிக்க முடியவில்லை. 
வாசு நினைத்தது போலே ஸ்ரீபத்மா இத்தனை நாள் சொல்லாமல் இப்போது வாசு பற்றி சொல்லவும். அவருக்கு சில எண்ணங்கள். 
அரக்க பறக்க வந்தவன் இவரை பார்த்ததும் நிதானத்துடன் வரவேற்று உபசரித்த போது, இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர், இவனை பார்த்து தயங்கியவரே, 
“ பத்துக்கும் உங்களுக்கும் முன்னே ஏதோ சரி வரலனு தெரியும்.” என சற்று தயங்கியவர்,
“ பத்து சின்ன பொண்ணு, தெரியாம ஏதாவது செஞ்சுருக்கும். நீங்க அதெல்லாம் மனசுல வச்சு தான் இத்தன நாள் வெளியே சொல்லலயா. “ என அவர் மனதின் எண்ணத்தை கேட்டார். 
சுந்தரத்தை பொறுத்தவரையில் அவர் வாசு ஸ்ரீயை விட விஷயங்களை பக்குமாக கையாள கூடியவன், அப்படி பட்டவன் இத்தனை நாட்களாக வாய திறக்காமல் இருந்தது, அவருக்கு யோசனையை தந்திருந்தது. ஒரு வேலை அவனுக்கு முழு மனம் இல்லாமல் கார்த்திக்கு தெரிந்ததால், இப்போது சம்மத்திருக்கிறானோ என அவருக்கு தோன்றியது. 
கார்த்தி வாசுவின் விஷயம் தெரிந்த அடுத்த நாள் வீட்டில் அப்பாவிடம் இவர்கள் விஷயத்தை பற்றி மேலோட்டமாக சொல்லிவைத்தான். சுந்தரத்திற்கு சிறிது அதிர்ச்சி தான். இவர்கள் இருவர் நடுவில் இப்படி எண்ணம் இருக்கும் என கற்பனையில் கூட இவர் நினைத்ததில்லை. அதை விட கார்த்தி வாசுவை தாங்கி பேச, இவருக்கு சில விஷயங்களை ஸ்ரீயிடம் கேட்டால் தான் ஆயிற்று என்று இருந்தார். அன்று தான் ஸ்ரீயும் வங்கிக்கு விடுப்பு எடுத்து வெளியே சென்றிருக்க, சுந்தரம் மிகவும் சிந்தனைக்குள்ளானார். பத்மாவும் வாசுவும் அரியலூரில் இருந்து அன்று மதியமே திரும்பியிருந்தனர். வீட்டிற்கு வந்த ஸ்ரீ அப்பாவிடம் தனியாக வாசுவை பற்றி சொல்ல, சுந்தரம் அப்போது தான் கார்த்தி சொன்னதையே எற்றுக்கொண்டார். அவருக்கு எதுவாயினும் மகள் தன் வாய்மொழியில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம். அதை விட தேனுவை இங்கே திருமண முடித்ததால், கார்த்தியின் நட்பிற்காக, பத்மாவிடம் பிணக்கு இருந்தாலும் தங்கைகாக வாசு இதற்கு சம்மதித்து விட்டானோ என தோன்றியது.
சுந்தரத்தை பொறுத்தவரை மகள் எத்தனை முக்கியமோ, அதே அளவு மருமகனின் விருப்பமும் முக்கியம். 
வாசு அவர் பார்த்து வளர்ந்தவன், அவன் மீதான பாசம் அவருக்கு எப்போதும் உண்டு. அவன் விரும்பி பத்மாவை மணந்தால் சரி, வேறு எதற்காகவும் எந்த கட்டாயதிற்காகவும் அவன் இதில் உடன் படக்கூடாது என அவர் உறுதியாக இருந்தார். அதுவும் இப்போது அவன் மீது மதிப்பு கூடி போயிருக்க, அவருக்கு வாசுவிடம் இதை பேச ஒரு தயக்கம். 
“ ஸ்ரீ எதுவும் செய்யல மாமா. எல்லாம் நான் தான் பத்துவ வெளிய சொல்லக்கூடாதுனு சொல்லிட்டேன். தொழில கொஞ்சம் நல்ல வரணும்னு, நான் தான் வைட் பண்ண சொன்னேன். அதான் மாமா எங்களுக்குள்ள பிரச்சனையே. எல்லாம் தப்பும் என் மேல இருக்கு, 
இதுல ஸ்ரீ எதுவும் பண்ணல. நீங்க வீட்ல அவள எதுவும் சொல்லவேண்டாம் மாமா, நீங்கனா அவளுக்கு ரொம்ப புடிக்கும். நீங்க ஏதாவது சொன்னா ரொம்ப ஃபீல் பண்ணுவா. “ 
என வாசு அவளுக்காக சொல்ல, சுந்தரம் எப்படி உணர்ந்தார் என அவருக்கு தெரியவில்லை. எங்கே பத்மாவை ஏதாவது இவர் சொல்லிவிடுவாரோ என ஒரு அடக்கப்பட்ட தவிப்பு அப்பட்டமாய் அவன் முகத்தில் தெரிய அவருக்கு உள்ளே ஒரு ஆச்சர்யம். எப்போதிலிருந்து இவர்களுக்குள் இப்படி ஒரு நேசம் என ஒரு சிறு வியப்பு. மனதில் ஏதோ ஒரு நிறைவு.  
     வாசு அவள் மேல் எதுவும் சொல்லாமல், எல்லாவற்றிருக்கும் தன்னை பொறுப்பாக்கி அவளுக்காக தன்னிடம் பேச, அதற்கு மேல் அவருக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. அவனிடம் பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்தவர், அவன் எழவும் அவன் தோளை தட்டிக்கொடுத்தவர், அவனிடம் மேல எதுவும் கேட்காமல் ஒரு மன நிறைந்த புன்னகையோடு வீடு திரும்பினார். அவர் வீடு வந்து சேரும் வரை அவர் புன்னகை வாடாமல் இருந்தது.
     இந்த பேச்சு வார்த்தை எல்லாம் ஒரு பக்கம் நடந்த போது நண்பர்கள் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியிருந்தனர். 
  வாசுதேவன் வீட்டில் சுந்தரி ஆச்சி, தாத்தாவிடம், கோதண்டத்திடம் வாசுவின் விருப்பம் பற்றி சொல்ல, அவர்களுக்கு முதலில் நம்ப முடியாத ஆச்சர்யம். பின் வாசுவிற்கு ஒரு விசாரணையை போட, அவன் ஒருவாறு சிலது எடிட் செய்து சொன்னான்.  
அதற்கு அடுத்த வாரமே சாந்தலக்ஷ்மிக்கு முதல் மொட்டை கார்த்தியின் குல தெய்வ கோயிலில் நடக்க, அப்போதே ஆச்சி பெண் கேட்கும் பேச்சை சொந்தங்கள் மத்தியில் துவங்கி விட்டார். வாசு, பத்மா இருவர் நடுவில் நேசம் போல் காட்டிக்கொள்ளாமல் ஏதோ இவர்களாக பெண் கேட்பது போல் பார்த்துக்கொண்டார், இல்லையேல் வாசு வீட்டு சொந்தங்கள் மத்தியில் நிறைய கேள்விகள் வரும். 
   அதற்கு அடுத்த இரண்டாம் நாளே சொந்தங்களுடன் பத்மாவை பெண் கேட்டு வாசு வீட்டினார் போக, அடுதடுத்து எல்லாம் விரைவாக நடந்தேறியது. அடுத்த ஒரே மாதத்தில் திருமணம் என பேசி முடிக்க, வாசுவின் மண்டபத்திலே திருமணம் என்பதால், பத்திரிக்கை கொடுக்கும் வேலை மட்டும் இருவீட்டாருக்கும் நெட்டி முறித்தது. இப்போது இன்னும் மூன்று நாட்களில் திருமணம். 
     ஸ்ரீபத்மா வாசுவுடன் ராசி ஆனதிலிருந்து அவனிடம் பேச முயற்சிக்க, இவனை கையிலே பிடிக்க முடியவில்லை. காரணம் ஊரில் யாராவது பார்த்தால் ஏதாவது பேசிவிடுவார் என அவன் ஒதுங்கி ஒதுங்கி போனான். மொபைலில் பேசலாம் என்றால் குடும்பமே வாசுவுடன் சேர்ந்து பத்மாவிடம் கடலை போட்டு இவளை அவித்து எடுக்க, நொந்து போனாள். அதுவும் தேனுவிற்கும் கார்த்திக்கும் இவர்களிடம் சண்டை. அது எப்படி இத்தனை நாட்களாக எங்களிடம் சொல்லவில்லை என அவரவர் நண்பர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர். இப்போது தான் சமாதான பட்டர் ஃப்ளைகள் இரண்டு பக்கமும் பறந்து சண்டையை ஒருவாறு முடித்து வைத்திருந்தது.  
இப்போது மூன்று நாட்கள் மட்டும் தான் திருமணத்திற்கு இருக்கிறது என்னும் போது ஸ்ரீபத்மா கல்யாண ஷாப்பிங்கில் படு பிசி. 
எல்லா அலங்கார வேலைகளும் வாசுவின் புது வீட்டில் கோதண்டம் சீதலக்ஷ்மியின் பார்வையில் நடக்க, தாத்தாவின் வீட்டில் அலங்கார வேலைகளும் முன்னமே முடிந்திருக்க, இப்போது உள்ளே ஆச்சி, தாத்தா, வாசு மூவர் மட்டுமே. 
     புது வீடு பிசியாக இருப்பதால் இங்கே குளிக்கலாம் என வந்திருந்தான். அவன் பின்னால் குளித்துக்கொண்டிருக்க, இவர்கள் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
     அதுவும் மாலை முடிந்துக்கொண்டிருக்கும் நேரம், இருள் கவ்வ ஆரம்பித்திருந்தது. தேனுவுடனும் குழந்தையுடனும் பார்லர் வரை சென்றிருந்தவள், வரும் வழியில் வாசுவின் வீட்டு அலங்காரத்தை பார்த்ததால் துணிந்து ஆச்சி வீட்டின் முன் வந்துவிட்டாள் பத்மா. ஆச்சியின் வீட்டின் வெளியே முகத்தையும் தலையையும் துப்பட்டாவில் சுற்றி மறைத்து எட்டி எட்டி புது வீட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். கூடவே அவளை கொட்டு வைத்துக்கொண்டிருந்தாள் தேனு.  
      ஸ்ரீ பத்மா தலையை தேய்த்துக்கொண்டே முகத்தை சுருக்கி தேனுவையும் குழந்தையையும் உள்ளே போக சொன்னவள், தான் போட்டோ எடுத்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டாள். இப்போதெல்லாம் ஆச்சி ஸ்ட்ரிக்ட்டாக பத்மாவை திருமணம் முடியும் வரை வீட்டின் பக்கம் வரக்கூடாது என ஹால்ட் போட்டு வைத்திருந்தார். 
      பத்மா மெல்ல சுற்றி முற்றி பார்க்க, சொந்தங்கள் எல்லாம் வாசு வீட்டில் வருவதும் போவதுமாக இருந்தனர். ரோட்டில் இருந்து இரண்டு வீட்டு வாசல் வரை பந்தல் முழு நீளத்தில் போட்டு, வரிசையாக பனங்குருத்து, மாவிலை, ஜிகு ஜிகு என காகித தோரணம் எல்லாம் தொங்கவிட்டு, சின்ன சின்ன சீரியல் பல்பு எல்லாம் வெவ்வேறு வண்ணங்களில் போட்டு, ஸ்பீக்கரை அலற விட்டு அமர்க்களமாய் இருந்தது. அதை போட்டோ எடுக்க வேண்டும் என ஆசை உந்த, தேனுவும் குழந்தையும் உள்ளே சென்றுவிட்டதை உறுதி படுத்தியவள், இவள் பின் தோட்ட வழியாக வாசுவின் பழைய மாடி அறைக்கு சென்றாள். அவன் இங்கே வீட்டில் இருக்க கூடும் என்ற எண்ணம் எல்லாம் தோன்றவே இல்லை.
    அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தால் வீட்டின் அலங்காரம் ரம்மியமாக இருந்தது. அதன் வழியே மொபைலில் வித விதமாக போட்டோ கிளிக்கிக்கொண்டிருந்தாள். அங்கே கிளிக்கி முடித்து அறையின் வெளிவரும் நேரம் அறையை சுற்றி பார்த்தாள், புதிதாக வெள்ளை அடித்து, புதிதாக லைட் போட்டு உள்ளே ஏதோ வண்ண காகிதங்கள் எல்லாம் ஒட்டி நன்றாக அலங்கரித்திருந்தனர். அதையும் ஒரு கிளிக் செய்யலாம் என ஆரம்பித்தாள். 
      வாசு கீழே குளித்துக்கொண்டிருந்தவன், ஸ்பீக்கர் சத்ததில் தேனு, பத்மாவின் வரவை அறியாமல் இருந்தான். அவன் குளித்து முடித்து,
ஏ லல்ல லல்ல லல்ல லல்லா…
லல்ல லல்ல லல்லா…
ஏ லல்ல லல்ல லல்லா…
என ஏற்ற இறக்கங்களுடன் ரஜினி போல் சவுண்ட் விட்டுக்கொண்டு உற்சாகமாக துண்டை கையில் சுற்றிக்கொண்டே பாடியபடி மாடி ஏறினான். இப்போதெல்லாம் அவன் இப்படி தான் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
கதவு திறக்க…
ஆஆஆஆஆஆஆ 

Advertisement