Advertisement

       ஸ்ரீபத்மா இரண்டு வாரங்களாக அவனிடம் பேச எண்ணி அவனுக்கு அழைப்பு போகாமல்,  எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தனித்து நின்றாள். அடுத்த மாதம் அவள் இங்கே வந்த போது, ஆச்சியின் வீட்டிற்கு செல்ல, அங்கே அவள் கண்டது கேட்டது எல்லாம் புதிதாக இருந்தது.
      வாசு வீட்டை விட்டு முழுதாக வெளியேறி விட்டான், அருகிலே புது கொட்டகை வேறு எழுப்பியிருந்தது. அங்கே சென்றால் ஆச்சி அமர்ந்திருந்தார் ஏதோ கை வேலை பார்த்துக்கொண்டு. வாசு தூரத்தில் ஏதோ செடிகளை நட்டுக்கொண்டிருந்தான். கேங்ஸ்டெர்ஸ் யாரையும் காணவில்லை. அவனது அருகில் யாரோ இருவர் மட்டும் அவனிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர் . 
இவன் நிலை என்னவோ ஏதோ என தவித்து வந்தவளுக்கு இதெல்லாம் பார்க்க அவன் மேல் கொள்ளை கோபம் வந்தது. அதை கண்களில் மட்டும் காட்டி, தன்னை கட்டுப்படுத்தி நின்றாள். 
இவள் சற்று அவன் இருக்கும் இடம் அருகில் சென்று, 
“ மாமா “
அவளை திரும்பி பார்த்தவன், இவள் அருகிலே வராமல், 
“ வா ஸ்ரீ. எப்படி இருக்க “ யாரையோ மூன்றாம் நபரை விசாரிப்பது போல் விசாரித்தான்.  
இவளுக்கு சிறு அதிர்வு. ஏதோ வித்யாசமாக பட்டது. அவன் பேசும் தொனி, முக மாற்றம் எல்லாம் ஏதோ என்னவென்று தெரியாத ஒரு வேற்றுமை. கூடவே இரண்டு பேர் அவனுடன் நிற்க, அவர்கள் முன் இவள் என்ன கேட்க முடியும். அவர்களை தனியாக விட்டு இவன் வருவதாக இல்லை போலும். 
‘ ஏன் மொபைல் எடுக்கல. 
ஏர்போர்ட்க்கு ஏன் வரல. என்ன தான் டா நினச்சிக்கிட்டு இருக்க மனசுல ‘
என கேட்க உந்துதல் இருந்தும், மற்றவர் முன்னே அப்படி கேட்க முடியா சூழல். இந்நேரம் கிருபாவோ இல்லை மணி இருந்தால், இவள் அவனை நன்கு கேட்டிருப்பாள். ஆனால் புதியவர்கள் இவர்களேயே எதார்த்தமாக  பார்த்துக்கொண்டிருந்தனரே தவிர ஒரு மரியாதைக்காக வேண்டி கூட நகரவில்லை. 
“ உங்க ஹெல்த் இப்போ எப்படி இருக்கு. ஓகே தான இப்போ. “ அவன் கேட்டதுக்கு பதில் சொல்லாமல், கோபத்தை அடக்கி இவள் பொதுவாக விசாரித்தாள்.  
“ இப்போ பரவால. என்ன விஷயம் இவ்ளோ தூரம் வந்துருக்க “ என்றதும்  இவளுக்கு சுர்ரென உணர்வுகள் கிளம்ப, அப்படியே அவனது சட்டையை பிடிக்கும் எண்ணம்.
அவர்கள் முன் இவள் அவனை தனியாக பேச அழைக்கமுடியவில்லை. இவனும் அவர்களை இவளுக்கு அறிமுக படுத்தவில்லை. 
 “ எப்போ பாரு ஊர் சுத்திக்கிட்டு இருக்க. முதல வீட்டுக்கு போ. “ புன்னகையுடன் சொன்னாலும் அதில் உள்ள காரல் ஸ்ரீபத்மாவிற்கு நன்கு புரிந்தது. அவனது சொற்கள் அனைத்தும் அதிர்ச்சி தான். முகம் தொங்கிவிட்டது இவளுக்கு. 
அவனுக்கு வீட்டில் பிரச்சனை அதான் தன்னிடம் காய்கிறான். இதை இப்போது கண்டு கொள்ளாமல் இப்போதே வீட்டில் பேசினால் தான் ஆயிற்று எனபது அவள் நிலைமை. இவன் எந்த பிரச்சனைகளையும் இவளிடம் மனம் விட்டு பகிர்வது கிடையாது என இவளுக்கு முதலிலே தெரியும் என்பதால் இப்போது இதை பேசியே ஆக வேண்டியே சூழ்நிலை. 
அவனை சிறிது நிமிடங்கள் தனிமையில் சந்தித்தால் கூட அவள் மனம் விட்டு பேசிவிடுவாள், ஆனால் இதற்கு இங்கே வழியே காணவில்லை. அமைதியாக ஆச்சி அமர்ந்திருந்த இடதிற்கு திரும்பி விட்டாள்.
இவள் அவனிடம் பேசாமல் ஆச்சியிடம் வந்தவள், அவர் வீட்டின் நிலவரம் சொல்லி விசும்ப, அவரை தேற்றுவதே இவளுக்கு வேலையாய் இருந்தது. 
ஆனால் அவள் அங்கே இருந்த நான்கு நாட்களுமே இவள் எப்படி எல்லாமோ அவனை சந்திக்க நினைத்து முயற்சி செய்ய, அவன் இவள் முகம் கூட சரியாக பார்க்க மறுத்தான். வீட்டிலே அவன் இல்லை. எப்போதும் கொட்டகையோ, அல்லது தோட்ட வீடு, இல்லை என்றால் உணவகம். அதுவும் அவனது புதிய நண்பர்கள் வேறு கூடவே இருந்தனர். 
ஸ்ரீபத்மா வீட்டில் சுந்தரம் அவளது பதிலுக்காக கார்த்திருந்தார். அந்த வரன் வீட்டில் கால அவகாசம் கேட்டு வைத்திருந்தார். எல்லாம் இவளுக்காக. 
அதுவே அவளுக்கு ஒரு வித குற்ற உணர்வை கொடுதிருக்க, அவளால் இயல்பாக வீட்டில் நடமாட முடியவில்லை. அப்போது குழந்தை சுற்றியே மற்றவர் கவனம் இருந்ததால். இவளது நிலை சுந்தரத்தை தவிர யாரும் ஊகிக்கவில்லை. நான்காவது நாள் ஊருக்கு கிளம்பும் முன்பாவது அவனை தனிமையில் எப்படியும் பார்க்க வேண்டியே கட்டாயம், அப்போது தான் சுந்தரதிற்கு இவள் பதில் சொல்ல முடியும்.
வாசுவை நினைக்க நினைக்க அவளுக்கு பி‌பி ஏறியது தான் மிச்சம். தன்னை தவிர்க்கிறான் என தெளிவாக தெரிந்தது. அதுவும் இவளை பார்த்தாலே எங்காவது சென்றுவிடுகிறான். அப்படியே எல்லோர் முன்னிலையிலும் பேச வேண்டி வந்தாலும் பொதுவாக ஓரிரு வார்தைகள், அவ்வளவே. 
அவன் முகத்தில் இவளை கண்டாலே ஒரு விலகல். அதை நினைக்க ஸ்ரீபத்மாவால் அந்த விலகலை நம்பவே முடியவில்லை. கிருபா அல்லது மணியாவது ஏதாவது விவரம் கூறுவார்கள் என அவர்களை பார்க்க சென்றாள். கிருபாவின் மாமா உடல் சுகம் இல்லாமல் இருந்தார், அவரை கவனிக்க அவனும் மணியும் அவருடன் இருந்தனர். அதனால் அவர்களை சிரமப்படுத்த விரும்பாமல் வந்துவிட்டாள். இப்படி அவளின் ஒவ்வொரு முயற்சியாக ஏதாவதில் ஒன்றில் மாட்டிக்கொண்டது.  
வாசுவை இன்று பார்த்து அவனை கேட்டுவிடும் வேகம், அவனது உணவகதிற்கு சென்றாள். 
உள்ளே அதே உஞ்சல், அருகில் சில மக்கள். வாசுவின் புதிய நண்பர்கள் பரிமாறிக்கொண்டிருந்தனர். அதனை பார்த்தவளுக்கு, எல்லாம் புதிதாய் இருந்தது. இவள் வந்ததை பார்த்தாலும், வாசு பில்லிங்கில்  அமர்ந்திருந்தானே தவிர இவள் டேபிளுக்கே வரவில்லை. உள்ளே வந்தபோதே வரவேற்பாய் இவள் முகத்தை  கூட பார்க்கவில்லை. இவள் எத்தனை நேரம் தான் பொறுமையாய் இருப்பது. பெயருக்கு பார்சல் ஒன்றை வாங்கி விட்டு, அவனிடம் பில் கொடுக்க சென்றாள். 
அருகில் யாரும் இல்லாமல் இருக்க, “ மாமா உங்க கூட தனியா பேசணும். “ உறுதியாக இவனை பார்த்துக் கேட்க, 
“ எதுக்கு. “ முகம் பார்க்காமல் பதில் வந்தது அவனிடமிருந்து. 
கோபம் கிளர்ந்தது அவளுக்கு, “ எதுக்கா…இது கடைனு பார்க்குறேன். “ கொஞ்சம் மூச்சை உள்ளிழுத்தவள், கொஞ்சம் நிதானித்து, 
“ என்னைய அவாய்ட் பண்றிங்கன்னு தெரியுது. 
பட் உங்களுக்கு உங்க வேல விஷயமா எந்த டென்ஷன் இருந்தாலும் சரி. தூக்கி தூர போடுங்க. அத என்னைய அவாய்ட் பண்றதுல காட்டாதிங்க.  
எனக்கு வீட்ல ரொம்ப பிரஷர் மாமா. வீட்ல சொல்லணும்.” உறுதியாக சொன்னாள். 
“ நீ என்ன பேசுறனே எனக்கு புரில. 
உன்கிட்ட தனியா பேச எனக்கு எதுவுமே இல்லை ஸ்ரீ. 
டோன்ட் டிஸ்டர்ப் மீ. “ என எங்கோ பார்த்து சொன்னான். 
     ஸ்ரீபத்மா இதை சற்றும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை. சிறு அதிர்வில்  அப்படியே அங்கே சில நொடிகள் நின்றாள். அவன் சொல்லிய சொல்லின் ஒவ்வொரு வார்த்தையும் எதை சொல்லிற்று என உடனே பிரித்து பார்க்கமுடியவில்லை என்றாலும், அவனின் ஒதுக்கத்தை சரியாக சொல்லிற்று.
இதற்கு என்ன அர்த்தம். தவிர்க்கிறான் என தெரிந்தாலும், ஏதோ அவன் சொந்த வாழ்வின் சறுக்கல்களை இப்படி வெளிபடுத்திக்கிறான் போலும் என இது வரை எண்ணியவளுக்கு, இப்போது சொல்லிய வார்த்தைகளுக்கு இவள் என்ன எடுத்துக்கொள்வது. 
இவளது நிலைமை தெரிந்தும் இவ்வாறு பேசினால், நடந்துகொண்டால், என்னவென்று நினைப்பது. உண்மையில் இவள் நிலைமை தான் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அத்தனை அவரசகதியில் வாழ்வின் முக்கிய கட்டத்தில் இருக்கிறாள். ஆனால் வாசுவின் பொறுப்பற்ற பேச்சும், நடவடிக்கையும், நிச்சயமாக அவள் எதிர் பார்க்கவே இல்லை. 
இவள் சுந்தரத்திடம் அரையும் குறையுமாக சொல்லிவிட்டு, இவன் வாய் மொழிக்காக நிற்கிறாள், ஆனால் இவன் மொழி எதுவும் உவப்பானதாக இல்லை. தெளிவாய் ஒரு விலகல் அவனிடம். 
விலகல் மட்டுமா இது. இனி அவர்கள் உறவின் நிலையை தலை கீழாக்கும் செயல். 
இவள் வீட்டில் விஷயத்தை சொல்லும் போது இவனும் ஆம் என ஆமோதிக்க உடன் இருக்க வேண்டிய சூழலில், இப்படி விலகி நின்றால், என்ன அர்த்தம் என தெரியாதவள் இல்லை ஸ்ரீபத்மா. ஆனால் இதை வாசுவிடம் எதிர்பார்க்கவே இல்லை.
இதுவே மூன்றாவது நபர் யாரேனும் இப்படி இவளிடம் நடந்திருந்தால், இவளின் பதிலே வேறாய் இருக்கும். ஆனால் வாசு…
அவளின் வாசுதேவன் அப்படி இல்லையே என மனம் அடித்து சொன்னது. அதை விட அவன் வார்த்தைகள் அவனது நிலைப்பாட்டை மேலும் அடித்துச் சொல்ல, காயப்பட்டு விட்டாள்.  
ஒரு மாதமாக இவன் அழைப்பை ஏற்கவில்லை என்ற தவிப்பு. நான்கு நாட்களாக அலைச்சல், மன உளைச்சல் என சோர்ந்து போயிருந்தவளுக்கு, கண் முன்னே காதல் கானல் நீர் ஆவது பிடிக்காது, பார்சலை அப்படியே அவன் டேபிள் மேல் வைத்துவிட்டு, விடு விடு என வெளியே வந்துவிட்டாள். 
ஓடைக்கு சென்று அமர்ந்தவளுக்கு, இன்னும் கூட வாசுவின் வார்த்தையை உள்வாங்க நேரம் எடுத்தது. வந்ததிலிருந்து பார்க்கிறாள் அவனது நடவடிக்கையில் ஒரு வேற்றுமை, இவளை கண்டால் ஒரு மூன்றாவது ஆளை பார்ப்பது போல் ஒரு பேச்சு, இவளை அவன் பக்கம் நெருங்கவிடாத செயல்கள். 
இதுவே அவனுக்கு இவள் இப்படி செய்தால் எப்படியோ ஆனால் வாசு ஸ்ரீபத்மாவிற்கு இதெல்லாம் செய்ய இவளுக்கு எதிலோ தோற்ற உணர்வு.
 அவனிடம் விருப்பம் தெரிவித்து, காத்திருந்து, நன்றாக புரிதல் ஏற்பட்டு இப்போது தன்னை கண்டும் காணாமல் விலகும் அவனின் மன எண்ணம் புரியாதவாளா ஸ்ரீபத்மா. 
தன்னிடம் இப்படி நடந்து கொள்வபனை ‘திருமணம் செய்’ என அவனை  அவசரபடுத்துவது போல் ஒரு பிம்பம் ஏற்பட ஒரு அவமான உணர்ச்சி. அவள் பக்கம் அதற்கு காரணம் இருக்கிறது என தெரிந்தாலும், அதற்கு எதுவும் சொல்லாமல் விலகும் அவன் பின்னே இத்தனை நாள் தானாய் பேச சென்றிருக்கிறோமே என்ற உணர்வு. 
இவளை மிக மிக தெளிவாக தவிர்க்கிறான். காரணம் தான் புரியவில்லையே தவிர, அவனின் செயலினால் சொல்ல வருவது என்ன என நன்கு விளங்கியது. 
விலகல். ஏதற்கென்றே தெரியாத அவனது சூசக செய்தி.
பெரிதாக இதுவரை அவள் அழும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. வெகு சில சமயம் நெகிழ்ச்சியான தருணங்களில் கண்ணீர் துளிகள் எட்டிபார்த்திருக்கின்றன. ஆனால் இன்று கண்ணீர் நிற்காமல் வழிய, ஒரு கட்டத்தில் தன்னையே தேற்றியவள், மெதுவாக வீட்டுக்கு சென்றாள். 
சுந்தரத்திடம் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், 
“ அப்பா நானும் ஒருத்தரும் விருப்பினோம். இப்போ எனக்கும் அவருக்கும் கொஞ்சம் ப்ராப்ளம். பிளீஸ் இந்த வரன் வேணாம்ப்பா. ஒரு சிக்ஸ் மன்த் டைம் வேணும் பா. “ 
என அவள் கூற, அவளது சோர்ந்த முகத்தை கொண்டு அவர் தோண்டி துருவி எதையும் கேட்கவில்லை. அவளது நிலைமை புரிந்தது, சரி என சொல்லி சில ஆறுதல் மொழி கூற, ஸ்ரீபத்மாவும் இதற்கு மேல் ஊரில் இருக்க முடியாமல் கொச்சின் பறந்துவிட்டாள். 
அப்படி பறந்தவள் அங்கே சுய ஆலோசனை செய்து, எங்கே தவறினோம் என சிந்தித்து, தன் மேல் தவறில்லை, எல்லாம் அவன் முடித்து வைத்தது தானே என தெளிவு பெற்று, மெல்ல மெல்ல மீண்டு வர முயற்சி செய்தாள். நூற்றில் ஒரு பங்காக அவன் சூழ்நிலை என்னவோ என அப்போதும் மனம் சொல்ல, அந்த நினைப்பே பிடிக்க வில்லை. இரண்டு மாதங்கள் அவள் கொச்சின்னில் தான் வாசம். ஊரின் பக்கமே வரவில்லை.
  அவள் ஊர் திரும்ப, அவள் பார்த்தது வாசுவின் தோட்ட மரங்களால் அவன் பெற போகும் வளர்ச்சி என ஊரில் அவனை பற்றி சொல்ல, இவள்  இதெல்லாம் எதிர்பார்த்தாள். ஆனால் இப்போது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவன் எப்படி பட்டவனாக இருப்பினும் அவன் உழைப்பின் மீது இவளுக்கு இருந்த மரியாதை என கூட சொல்லலாம். 
  அவளுக்கு ப்ரபோஸ் செய்த போது நடந்த செகண்ட் அட்டெம்ப்ட் போல் இப்போது எதுவும் எதற்காகவும் விளக்கம் கேட்கும் எண்ணம் பத்மாவிற்கு இல்லை. 
அதன் பின்பு எப்போதும் போல் கொச்சின்னில் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்க, வாசு வந்தான். 
முகம் தெரியாமல் மறைத்த தாடியும், கண்களில் ஏக்கமுமாக அவள் பேங்க்கில் அவளை பார்க்க வந்தான். அவள் இவனை பேசவே விடவில்லை. 
அதன் பின் ஹாஸ்டல் அருகில் இவள் வந்து செல்லும் பாதை முன் இவன் காரிலே தவம் கிடக்க, அவள் இளகவே இல்லை. ஊரில் இவனை நம்பி அத்தனை பேரின் வாழ்வாதாரம் கிடக்க, பத்மாவிடம் பேச முயற்சி செய்து போராடி, தோல்வியுற்று தனித்து ஊர்திரும்பினான்.
இதெல்லாம் கடந்து சுந்தரம் அவளுக்கு நிறையவே நேரம் கொடுத்தார். அவள் நன்றாக தேறி வரவேண்டும் என அவருக்கு உள்ளம் முழுவதும் பிராத்தனை இருந்தது. இப்போது ஒன்றரை வருடம் கடந்திருக்க, மகள் நல்ல மனநிலையில் இருக்க, புதிதாக வரன் பார்த்தார்.அதன் பின் நடந்தது எல்லாம் தன்னை போல் நடக்க, இன்று திருமண பேச்சில் வந்து நிற்கிறது. இதையெல்லாம் நினைத்து பார்த்தவள், வாசு இதற்கெல்லாம் நாளை என்ன சொல்லுவான் என நினைத்து உறங்கி போனாள்.   

Advertisement