Advertisement

“ பத்து, அப்பா ஒன்னு கேக்குறேன் நீ மனசு விட்டு சொல்லனும் . “
தந்தையின் மடியில் சாய்ந்தவரே சரி என தலையாட்டினாள் பத்மா. 
“ நீ அப்பா கிட்ட ஒன்றரை வருஷம் முன்ன என்ன சொன்ன. 
அப்பா இப்போ பார்த்துருக்க மாப்பிள்ளை வேணாம். வேற ஒருத்தர விரும்புறேன். இப்போ அவருக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்சனை. எல்லாம் சரியயானதும் நானே சொல்றேனு சொன்னேன். அவர் யாரு, எங்க இருக்காரு, அவர் பேர் கூட நீ சொல்லல. சரி உங்களுக்குள்ள ஏதோ சரி இல்லை. எல்லாம் சரியாகி நீயே சொல்லுவனு பார்த்தேன்.
நானும் அப்போ வந்த வரன வேணாம் சொல்லிட்டேன்.
அப்புறமா கொஞ்சம் மாசம் கழிச்சு அவரும் நானும் பிரிச்சுட்டோம்னு சொன்ன. 
அப்பா உன்ன புரிஞ்சுக்கிட்டேன்.
நீ அதுல இருந்து வெளி வருட்டும்னு கிட்ட தட்ட ஒரு வருஷமா காத்திருந்தேன் மா. நீயும் பழச எதுவும் பேசல. 
அதான் உனக்கு ஏத்த வரனா நான் பார்த்துருக்கேன். 
உன்னோட முடிஞ்சு போன விருப்பத்த பத்தி இவர் கிட்ட சொன்னா கூட புரிஞ்சுக்க கூடிய தன்மையான ஆளு தான் மா இந்த வரன். 
இப்போ அப்பா ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லு. 
இப்போ நீ ஏன் மா இப்படி தனியா உட்கார்ந்திருக்க. ஏதோ பழச நினைக்கிறனு தெரியுது. ஆனா என்னனு சரியா எனக்கு தெரில.
இப்போவும் உனக்கு நீ விரும்புன பையன் கூட பழக்கம் இருக்கா. 
அவர தான் விருபுறியா. அவர் தான் உனக்குனு தோனுதா மா “ என பொறுமையாக கேட்க, பத்மா மெல்லிய நீர் திரையிட தலையை நிமிர்த்தி அவரை பார்த்தாள். 
“ எனக்கு தெரில பா. 
அவர பத்தி எந்த முடிவும் இது வரை எடுக்கல பா. 
ஆனா அவர விட்டு இப்போ வேற ஒரு வாழ்க்கைனு நினைக்கிறப்போ…என்னால இப்போ டிசைட் பண்ண முடிலப்பா.
நான் யோசிக்கணும். “ என குரல் உடைய சொல்ல, அவளுக்கு கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்கியது. அதை துடைத்தவர்,   
“ என் பத்து எதுக்கும் ஆழ கூடாது. 
ஏன் மா தயங்குற. அப்பா உன்ன ஒன்னும் சொல்ல மாட்டேன். 
உங்களுக்குள் என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது. 
அவரு வீட்ல ஒத்துக்க மாட்டாங்களா. அப்படி இருந்தா சொல்லு மா. நான் போய் அவங்க வீட்ல பேசுறேன். 
ஒரு வேல அவருக்கு வேல சரியா அமையலையா. நம்ப தனியா ஒரு தொழில் வச்சிக்கொடுப்போம் அவருக்கு. 
இல்லை அவருக்கு குடும்ப பிரச்சனையா. நம்பளால முடிஞ்ச அளவு அத தீர அவருக்காக பேசலாம்.
நீ என்ன மா சொல்ற. 
வாழ்க்கையில ஏதாவது ஒரு சூழ்நிலையில ஒரு முடிவு எடுத்து தான் ஆகணும். அவர் வேணும் இல்லை வேணாம்னு நீ தான் முடிவு எடுக்கணும். 
அப்பா உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். நல்ல யோசிச்சு சொல்லு. 
நீ என்ன முடிவு எடுத்தாலும் அப்பா உன்கூட தான் மா இருப்பேன். “ என அவளது தலையை வருடி கொடுக்க, பத்மா அவரது மடியில் இன்னும் அழுந்த முகத்தை புதைத்து கொண்டாள். 
சுந்தரம், அவளது அப்பா. அவரிடம் கூட வாசுவின் பெயரை இன்னும் இவள் சொல்லவில்லை. எங்கே சொன்னால் அவன் மீது இவருக்கு வருத்தம் வந்து இருக்குடும்பத்திற்கும் பிரச்சனை வந்து விடுமோ என ஒரு எண்ணம். இவர்கள் இருவரும் சேர்ந்தாலும் பிரிந்தாலும் இரண்டு குடும்ப ஒற்றுமை இவளுக்கு மிக முக்கியம். அவளுக்கு எல்லோரும் வேண்டும். ஆனால் வாசு வேண்டுமா என இன்னும் தெரியவில்லை. 
சுந்தரம் அவளை அழைத்து சென்று அவளது அறையில் விட்டு இப்போது எதையும் நினைக்காமல் தூங்குமாறு சொல்லி அவளுக்கு போர்வை போர்த்திவிட்டு, அவரது அறைக்கு செல்ல, பத்மாவிற்கு மனம் முழுவதும் இலகுவான ஒரு உணர்வு. 
அவளது பிரச்சனையை வீட்டில் ஒருவரிடம், அப்பாவிடம் பகிர்ந்து விட்டோம் என ஒரு ஆசுவாசம். முதலிலும் வாசுவை விட்டு விலகி இருந்த போது அவரிடம் மனம் விட்டு பகிர்ந்தாள். அவரும் இவளை புரிந்துகொள்ள அதுவே அவளுக்கு பெரும் ஆறுதலாய் அவளது பிரச்சனைகளிலிருந்து மீண்டு வர அத்தனை உதவிற்று. 
இல்லையேல் வீட்டில் யாரிடமும் சொல்லமுடியாமல் மிகவும் தவித்திருப்பாள், தனித்திருப்பாள். ஆனால் சுந்தரத்தின் தாய்மை கொண்ட அணுகுமுறை அவளை திசையறியாமல் தவிக்கவிடவில்லை, வழிநடத்தியிருக்கிறது. 
அவள் சூழ்நிலை அவளுக்கு நன்றாக புரிந்தது. இத்தனை நாட்களாக அவள் தள்ளிவைத்திருந்ததை, வாழ்க்கை அவளை ஒரு முடிவெடுக்கும் நிலைக்கு நகர்த்தியிருந்தது. எப்படியும் அவள் யோசிக்க வேண்டிய கட்டாயம். 
அவன் மேல் நிறைய கோபம் இருக்கிறது, ஆனால் அவனை பற்றி நினைக்கையில் இதெல்லாம் அவன் ஏன் அப்படி செய்தான் என யோசிக்கையில், அவளுக்கு புரியவில்லை. 
எப்போதோ அவனிடம் நன்றாக பேசியது என யோசிக்க, வாசு அடிபட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சமயம், இரண்டு நாள் கழித்து அவனை பார்த்த போது வரை தான் இவர்களுக்குள் சீராக எல்லாம் இருந்தது.
     அன்று மருத்தவமனையில் இருந்து சொல்லாமல் சென்றவன் எங்கே என தேடியவள், இறுதியாக அவன் இருக்கும் இடம் தெரிந்து அவன் முன் பட்டுபுடவையில் மென் அலங்காரத்தில் நின்றிருந்தாள், அவனின் பதிலை  எதிர்பார்த்து. 

Advertisement