Advertisement

      எல்லோரும் கீழே உறங்க, ராகவும் வாசுவும் மட்டும் மொட்டை மாடியில்  வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தனர். வாசு கீழே விரிப்பு விரித்துப் படுத்திருக்க, அவனின் கையின் மேல் படுத்திருந்தான் ராகவ். வாசுவை அங்கே இங்கே நகர விடவில்லை. 
      இத்தனை நாட்களாக வாசு, ராகவிடம் தனியாக சிக்காமல் கூட்டமாகவே திரிந்துக்கொண்டிருந்தான். ராகவ் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வாசுவை தனியாக கடத்திகொண்டு போய் பேச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அது எதுவும் நடக்காததால், இன்று எப்படியும் கேட்டுவிடுவது என பிடித்து வைத்துக்கொண்டான்.
 “ டேய் நீ இன்னைக்கு ரொம்ப நேரம் சாப்பிட வராம என்னடா பண்ண ? “
“ ம்‌ம்‌ம் கடைல இருந்து கால், அதான் பேசிட்டு வர லேட் ஆயிடுச்சு. “
“ உன் காலும் பத்மா காலும் தான டா தெரிஞ்சது. உனக்கு ஃபோன் கால் வந்த மாதிரி தெரிலையே ? “ என ராகவ் இழுக்க, அவனை திரும்பி பார்த்து வாசு முறைக்க, 
“ என்ன முறப்பு, என் முகத்தல சாணி ஃபேஷியல் நடத்திட்டு, நீங்க ரெண்டு பேரும் பார்க்குற இடமெல்லாம் பேசிக்கிட்டு நிக்கிறிங்க. கார்த்திக்கு தெரியுமா டா ? “ என வாசுவை பார்த்து ராகவ் கேட்க, இல்லை என்பது போல் வாசு தலையாட்டினான். 
“ என்ன டா பண்ணிவச்சிருக்க, நீ அந்த பொண்ணு பின்னாடியே சுத்துற, ஆனா அந்த பொண்ணு உன்ன திரும்பிக்கூட பார்க்கமட்டிங்குது. 
அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லைனா விட்டடுணும் டா.
நீங்க எல்லாரும் ஒரே ஃபேமிலி, நீ இப்படி பண்றது கார்த்திக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டான்னா டா. “ என ராகவ் சொல்லியவுடன், அவனை ஒரே புரட்டாக புரட்டி தள்ளிவிட்டு வேகமாக எழுந்தவன், நன்றாக சம்மனமிட்டு அமர்ந்து, ஆவேசமாக ராகவை பார்த்தான். 
“ என்னைய என்ன டா நினச்சுக்கிட்டு இருக்க. விருப்பமில்லாத பொண்ண கம்பெல் பண்ணிட்டு இருக்கேன்னு நினைப்பா. “ என சொல்ல ஆரம்பித்தவன் இவர்களின் கதையை ஓரளவு சொல்ல, ராகவ் நிதானமாக எழுந்து அமர்ந்தவன், 
“ நீ செஞ்சசது தப்பு. நீ என்ன வேணா சொல்லு கல்யாணம் பண்ணலாம்னு அப்போ முடிவு பண்ணிருக்கிங்க. அப்போவே வீட்ல சொல்ல வேண்டியது தான டா. பாவம் அந்த பொண்ணு. உனக்காக அது எவ்ளோ யோச்சிருக்கு.  அது விட்டுடடு நீ என்னென்மோ செஞ்சு வச்சு, அந்த பொண்ண உன்ன விட்டு போக வச்சிருக்க. 
நீ பார்த்தவச்ச வேலைக்கு பத்மா இடத்துல நான் இருந்தா உன் வாச படிக்கூட மிதக்க மாட்டேன். ஆனா அந்த பொண்ணு எதுவும் வெளிய சொல்லாம வந்துட்டு போகுது. 
இப்போ நீ என்ன பண்ண போற ?”
“ ஸ்ரீ கூட தனியா பேசணும். நாளைக்கு பார்க்கலாம்னு இருக்கேன். “
“ நீ என்னமோ பண்ணு. ஆனா வீட்ல சீக்கிரம் வீட்ல சொல்லு டா நன்னாரி பயலே. “ என ராகவ் பேசி முடிக்க,
“ இதுக்கு மேல என்ன சொல்லணும்.” என இவர்கள் பின்னால் கடினமான குரலில் கேட்டபடி நின்றான் கார்த்தி. 
ராகவ் முகத்தில் டென்ஷன் படர ஸ்லோ மோஷன்னில் எழுந்து நிற்க, வாசு அசையாமல் கார்த்தியை இந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத பாவனையில்   அமர்ந்திருந்தான். 
கார்த்தி வேகமாக வந்தவன் வாசுவின் சட்டை காலரை பற்றி கோபமாக எழுப்பி நிறுத்தி, அவனை உலுக்கி பிடித்து தள்ளி விட வாசு சிறிது தடுமாறினாலும் பின்னே சென்று விழாதவாறு சமாளித்து நின்றுக்கொண்டான். 
ராகவ் இவர்களின் ஊடே வர, அவனையும் தள்ளிவிட்ட கார்த்தி, வாசுவின் சட்டையை பிடிக்க, ராகவ் இடையில் வந்து கார்த்தியை தடுத்து கட்டி பிடித்துக்கொண்டான். வாசு எதுவும் சொல்லாமல் அப்படியே அங்கேயே தலையை குனிந்தவாறு நிற்க, 
“ டேய் கார்த்தி, பொறுமையா இருடா. ஏன் டா அவன் மேல கை வைக்குற. அவன் சொல்றத ஒரு நிமிஷம் கேளுடா. “ என ராகவ் எடுத்து சொல்ல, அவானிடமிருந்து திமிறி விடுப்பட்ட கார்த்தி, வாசுவை நோக்கி சென்றவன் சீற்றமாக,
“ மனசாட்சி இருக்கா டா உனக்கெல்லாம். 
உனக்கு பொண்ணு பார்க்க ஆச்சிகூடவும் தேனுகூடவும் நான் எத்தன பேர பார்த்தேன். அப்போ எல்லாத்தையும் தட்டி விட்ட, அப்போ கூட உனக்கு இன்னும் எதுவும் அமையலனு நான் எவ்ளோ நினச்சுருப்பேன் தெரியுமா. 
நான் தேனுவ கல்யாணம் பண்ணனும்னு நினச்சப்போ உன்கிட்ட தான டா முதல சொன்னேன். நீ தான எல்லாம் பேசி முடிச்ச. 
உன் மச்சான்னா வேணாம் ஒரு ஃப்ரெண்ட்டா கூட நீ என்கிட்ட உங்க விஷயத்த சொல்லல இல்ல. ஏன் டா இப்படி பண்ண.
அங்க வீட்ல, அம்மா பத்துவுக்கு இன்னும் எதுவும் அமையலனு எவ்ளோ கவலப்பட்டங்க தெரியுமா, சாமிக்கு எத்தன வேண்டுத்தல். 
அதெல்லாம் உங்களுக்கு எங்க டா தெரிய போகுது. நீ உன் வேலனு திருச்சிக்கு போயிடுவா. பத்து கொச்சின்ல பேங்க்ல இருந்துச்சு. கூட இருந்த எனக்கும் தேனுவும் தான் டா இதெல்லாம் தெரியும். “ என கோபம் தனியாமல் கார்த்தி பேச, வாசு ஒன்றும் சொல்லாமல் அமைதிக் காத்தான். ஒரு பக்கம் நண்பன் இன்னொரு பக்கம் தங்கை என இருவரின் திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என நிறைய நிறைய எண்ணம் இருக்க, இப்போது இதை கேள்விபட்டதும், அவனால் இதைம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
பத்மாவோ இல்லை வாசுவோ முன்னமே ஒரு வார்த்தை கார்த்தியிடம் பகிர்ந்திருந்தால், இந்நேரம் இருவருக்கும் திருமணம் முடிந்திருக்கும். ஆனால் இவ்வளவு தூரம் வந்து நிறுத்திவிட்டார்களே என்ற ஆற்றாமை அத்தனையும் அவன் வார்த்தைகளாய் செயல்களாய் வெளிவந்துக்கொண்டிருந்தது.     
இன்னும் கார்த்தி இவனை ஏதேதோ சொல்லி திட்ட, அத்தனையும் துடைத்து போட்டவன், கார்த்தியின் முகம் பார்த்தே நின்றிருந்தான். 
“ நீயாவது இப்போ உளறுன ஆனா அவ வாய தெரிக்காம ஒன்றரை வருஷமா அமைதியா இருந்திருக்கா. நாளைக்கு வீட்டுக்கு போய் அவளுக்கு இருக்கு. “ என கார்த்தி கோபம் காட்ட, வாசு இத்தனை நேரம் அமைதியாக எல்லாம் கேட்டவன், பத்மாவை இவன் எதாவது சொல்லிவிடுவானோ என தோன்ற, வேகமாக கார்த்தியின் அருகே வந்து,  
“ ஸ்ரீய நீ ஒன்னும் சொல்லக்கூடாது. எல்லாத்தையும் நான் தான் பண்ணேன். அவள நீ எதுவும் கேட்க கூடாது. “ என வாசு அடமாய் சொல்லி நிற்க, 
“ அவ என் தங்கச்சி டா. நான் கேட்பேன். நீ என்ன என்னைய கேட்க கூடாது சொல்ற. நான் கேட்பேன். இவ்ளோ நாள ஒரு வார்த்த என்கிட்ட சொல்லாம இருந்துருக்கா..” என கார்த்தி விடைத்துக்கொண்டு எகிற, 
“ ஓஹ் கேட்பிய. நாளைக்கு நீ அவள கேட்டு தான் பாரு. அப்புறம் இருக்கு உனக்கு. இவ்ளோ சொல்றேன் மறுபிடியும் பத்மாவ சொல்ற. “ என கார்த்திக்கு குறையாமல் வாசுவும் விறைத்துக்கொண்டு எகிற, இருவரும் சட்டை பிடித்து கட்டி உருளாத குறையாக ஒருவரை ஒருவர் இன்னும் பேச, பீதியாகி போன ராகவ்,
“ டேய் ரெண்டு பேரும் ஷோல்டர இறக்குங்க டா. 
அடிச்சிக்காதிங்க டா. 
ஏன் டா இப்படி வாண்டெட்ட சண்ட போடுறிங்க. கொஞ்சம் அமைதியா பேசுங்களேன் டா. “ என ராகவ் நடுவில் புகுந்து கலைக்க முயற்சிக்க, கார்த்தி ராகவை கழுத்தை பிடித்து வாசுவின் முன்னே விட்டவன், 
“ இவன காலேஜ் டைம்லயே எனக்கு தெரியும். இவன உனக்கு எப்போ இருந்து டா தெரியும். நீ சிங்கப்பூர் போனதுக்கு அப்புறமா தான் தெரியும்.  
இவன் கிட்ட நீ ஷேர் பண்ற அந்த ஸ்பேஸ் கூட உனக்கு என்கிட்ட இல்லையா டா. இவன் கிட்ட உன்னால சொல்ல முடியுது. ஆனா நீ ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல. ஒரு வேல தேனுவ நான் கல்யாணம் பண்ணாதால என்கிட்ட சொல்ல முடிலையா. 
ச்சச போடா. இனிமே என் கூட பேசாத. “ 
என அவனது ஆற்றல் வடிய சொன்னவன் அமைதியாய் அங்கே இருந்த அமரும் திண்டில் கைகள் இரண்டையும் கால் மூட்டுகளில் தாங்கி சோர்ந்து போய் உட்கார, அவனை அப்படி பார்க்கவே ராகவிற்கும் வாசுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.  
கார்த்தி வருத்தப்பட்டது ஒரு நண்பனாக. அவனுக்கும் வாசுவின் திருமண வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் நிறைய இருக்க, அவனிடம் இவர்கள் விஷயம் மறைக்கபட்டதை இவனால் எளிதாக ஏற்க முடியவில்லை. ஒரு அண்ணனாகவும் நண்பனாகவும் தோற்ற உணர்வு அவனை சோர்ந்து போகச் செய்தது.    
ராகவும் வாசுவும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் மெதுவாக இவன் புறம் வர, ராகவ் கார்த்தியின் ஒருபுறம் அமர்ந்து, 
“ டேய் மச்சான் என்ன டா இப்படி பேசாதுனு சொல்ற. அவன் ஏதோ பண்ணிட்டான். விடேன் டா. நீ அவன எவ்ளோ வேணா அடி, நான் உள்ள வரல, ஆனா அவன தள்ளி நிறுத்ததா. நம்ப அவன அப்படி விடலாமா டா.“
கார்த்தி அமைதியாகவே தலையை நிமிர்த்தமல் அமர்ந்திருக்க, வாசு மெல்ல அவனிடம் நடந்து வந்தவன் அவனின் தோளை தொட, அவன் தொட்டவுடன் இவன் தோளை சிலுப்ப, வாசு ஒரே வினாடி தயங்கி நின்றவன், பின் உடனே கார்த்தியின் அருகில் அமர்ந்து கட்டி பிடித்து சிறப்படுத்த, அந்த கட்டிற்குள் கார்த்தி திமிறிக்கொண்டு இருந்தான். 
“ ஏன் டா இப்படி எல்லாம் பேசுற. உன் கிட்ட ஸ்பேஸ் இல்லனு நான் இது வரைக்கும் நினச்சதில்ல டா. 
உன் கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல மச்சான். ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லோர்கிட்டவும் சொல்லணும்னு இருந்தோம். இந்த விஷயம் தெரிஞ்சா  முதல சந்தோஷ படுற ஆளு நீயா தான் இருப்பனு எனக்கும் தெரியும். 
ஆனா நான் அப்போ ஸ்ரீக்கிட்ட கூட என்னோட விருப்பத்த  சொல்லாத சமயம். நானே அவ கிட்ட டைம் கேட்டுருந்தேன்.
கல்யாணம் வரைக்கும் பேசுனோம். வீட்ல சொல்ல தான் டிசைட் பண்ணோம், ஆனா நான் கேட்ட டைம் முடிறப்போ என் நிலைமை நான் எதிர்பார்க்காத மாதிரி கொஞ்சம் சரியில்லாம போச்சு. உனக்கு கூட அது தெரியாது. 
எல்லாம் மாறி போச்சு. நான் ஸ்ரீய கொஞ்சம் ஹர்ட் பண்ணிட்டேன் டா. ஸ்ரீயும் என்னை விட்டு தள்ளி போயிட்டா. நாங்க ஒன்றரை வருஷமா சரியா பேசிக்க கூட இல்லை.
இந்த நிமிஷம் வர அவக்கிட்ட என்னை பத்தி பேச ட்ரை பண்ணிட்டு இருக்கேன் டா. ஆனா இன்னும் நேரம் அமையல. 
ஸ்ரீ மனசு தெரியாம உன்கிட்ட என்னால எப்படி டா சொல்ல முடியும். “ என வாசு உணர்ந்து சொல்லி கைகளை தளர்த்த, கார்த்தி அவனை பார்த்தவன்,
“ ஒன்றரை வருஷமாவ டா உனக்கு நேரம் அமையல ? “ என கூர்மையாக கேட்க,
“ ஸ்ரீயை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் டா. ஸ்ரீ கொஞ்சம் அதெல்லாம் மறந்து வர டைம் வேணும். அதுக்காக தான் வைட் பண்ணேன். அவ நம்ப ஊருக்கு வந்ததும் இப்போ தான் பேசவே ஆரம்பிச்சிருக்கேன். “
“ டேய் இவன நம்பாத டா. இவன் பேச ஆரம்பிச்சு அதுக்கு அப்புறம் சமாதானமாகி கல்யாணம் நடக்கணும்னா, அதுக்குள்ள நீ உன் பாப்பாவுக்கே கல்யாணம் பண்ணிடுவா டா கார்த்தி. “ என உஷாராய் ராகவ் சொல்ல, வாசு அவனை ஏகத்திற்கும் முறைக்க, கார்த்தி அமைதியாய் வாசுவின் முகத்தை பார்த்திருந்தான். 
“ டேய் மச்சான் பிளீஸ் டா, நாளைக்கு ஒரு நாள் பொறுத்துகோ, எப்படியும் நாளைக்கு ஸ்ரீ கிட்ட பேசிடுறேன். அப்புறம் வீட்ல பேசலாம். “ என வாசு கார்த்தியின் கை பிடித்து கேட்க, சிறிது நிமிடங்கள் யோசித்தவன் பொறுமையாக எழுந்து நின்றான்.
“ நீ ஃபர்ஸ்ட் என்கிட்ட உங்கள பத்தி எதுவுமே சொல்லல. சரி அப்போ உன் சிட்சுவேஷன் அப்படினு விட்டா கூட, ஸ்ரீய எதுக்காக ஹர்ட் பண்ண.
இத அவ அண்ணான கேட்கல. உன் ஃப்ரெண்ட்டா கேக்குறேன். என்ன தான் டா உங்களுக்குள்ள பிரச்சன ? “ நிதானமாக கார்த்தி வாசுவை பார்த்து கேட்க,
சில நிமிடங்கள் மௌனம் சாதித்தவன்  “ சாரி மச்சான். அது எங்க பெர்சனல் டா. “ என வாசு உள்ளே போன குரலில் சொல்ல, கொலை வெறியாகி போனான் கார்த்தி, 
“ சரி அது உங்க பெர்சனல்னு வச்சிகங்க டா, இனிமே உங்களுக்கு டைம் கொடுக்க முடியாது.
வீட்ல அப்பா பத்துவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாரு. இன்னைக்கு காலைல  அவ கிட்ட சொல்றத இருந்தாரு. இந்நேரம் நிச்சயமா சொல்லிருப்பாரு.   
நான் நாளைக்கு பத்துக்கிட்ட உன்ன பத்தி பேச போறேன் 
அவ சரி சொன்னா மட்டும் உங்க கல்யாண பத்தி அப்பா கிட்ட பேச போறேன். ”  என கட்டளையாக சொல்ல, ராகவ் கார்த்தியை கட்டிப்பிடித்துக்கொண்டான். 
கார்த்தியின் வார்த்தையில் திக்கு முக்காடி போய்விட்டான் வாசு. மகிழ்ச்சி, பயம் எல்லாம் ஒரு சேர ஒரு உணர்வு. திருமணம் குறித்து மகிழ்ச்சி, ஸ்ரீபத்மா என்ன சொல்லிவிடுவாளோ என்ற பயம்.
“ கார்த்தி நாளைக்கு ஒரு ஹாஃப் டே டைம் தா டா, நான் ஒரு தடவ ஸ்ரீ கிட்ட பேசிக்கிறேன். “ என வாசு கொஞ்சம் இறங்கி சொல்ல, 
இப்போது காண்டாவது ராகவ்வின் முறையாயிற்று. “ மச்சான் இவன நம்பாத, இவன் பேசுறனு சொல்லி, பேசிய புள்ளைய ஒரு வழியாக்கிடுவான். “ 
“ ராகவ் சொன்னத கேட்டல்ல. கல்யாணம் முடிஞ்சு நீ என்ன வேணா பேசு. ஆனா இப்போ உனக்கு வேற ஆப்ஷனே இல்லை. “
“ டேய்…ஸ்ரீ வேணாம் சொன்னா. “ என வாசு பாவமாய் முகத்தை வைத்து கேட்க,
“ நீ என்ன செஞ்சனு எனக்கு தெரியாது. ஒரு வேல பத்துக்கு இப்போ இந்த கல்யாணத்துல விரும்பம் இல்லைனா, நான் அவள கம்பெல் பண்ண மாட்டேன். 
இது அவ லைஃப், நாளைக்கு வாழ போறது அவ தான். அவ தான் முடிவு பண்ணனும்.” என ஸ்திரமாய் சொன்னான் கார்த்தி.
வாசு இதை கேட்டு அமைதியாக அங்கே இருந்த திண்டில் அமர, ராகவ் கார்த்தியை அணைப்பில் இருந்து விடுவித்தவன், 
“ ஏன் டா கார்த்தி இப்படி சொல்ற. வாசு பக்கம் கொஞ்சம் யோசி டா. கோப படாத “
“ டேய் இதுல நான் கோப பட ஒன்னும் இல்ல. 
இவன பத்தி யோசிக்க சொல்ற. ஆனா பத்து இவன ஒன்றரை வருஷம் பார்க்காம இருந்துருக்கா, இவன அவாய்ட் பண்ணிருக்கா. இவன் என்ன செஞ்சு வச்சான்னு தெரில. அதனால் இவன பிடிக்கமா கூட இருக்கலாம்.
ஒரு வேல இந்த டைம்ல அவளுக்கு இவன பிடிக்கமா வேற யாரயாவது பிடிச்சிருந்தா. 
அது தப்பா டா. “ என கார்த்தி கேட்க, 
அவனின் பேச்சை கேட்ட ராகவிற்கு அவனது நியாயம் புரிந்தது. ஆனால் வாசு நொந்து போய் உட்கார்ந்திருந்தான்.
“ பத்துவுக்கு அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய தேர்ந்தெடுக்குற உரிமை அவளுக்கு இருக்கு டா. 
அது இவனா இருந்தாலும் சரி வேற யார இருந்தாலும் சரி. அவளோட முடிவு தான் டா முக்கியம்.” என கோபம் இல்லாமல் கார்த்தி சொன்னான். 
இது அனைத்தையும் கேட்டிருந்தான் வாசு. 
ஸ்ரீபத்மா இவனை முதலில் விரும்பியது உண்மை தான். ஆனால் இவன் அவளை காயப்படுத்துவது போல் சிலது செய்து வைத்திருக்க, அவள் இவனை விட்டு பிரியும் எண்ணம் இருந்தால், வாசு என்ன செய்ய முடியும். இந்த இடைவேளையில் அவளுக்கு இவனை விட்டு முழுதாய் பிரியும் எண்ணம் கூட இருக்கலாம். வேறு ஒருவரை கூட திருமணம் செய்ய பிடித்திருக்கலாம். அது அவளது உரிமை. அவளது வாழ்க்கை.  
அவள் பக்கம் நியாயம் புரிந்தது. ஆனால் அவளை விட்டு பிரிந்து விடுவோமோ என தோன்ற நெஞ்சம் வலித்தது. ஆனால் நியாயமான அவளது முடிவை இவன் கட்டாய படுத்த முடியாதே. 
பத்மா பட்டாம்பூச்சி தான், ஆனால் அவளை கட்டுப்படுத்தி அவளது சிறகுகளை சிறையெடுக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. பட்டாம்பூச்சி அதுவாய் அவனது விரலில் அமர்ந்தால் தானே அவனால் அதனை ரசிக்க முடியும், காதலிக்கமுடியும். 
இத்தனை வருட வாழ்க்கையில் எத்தனை சோதனைகளை கடந்து வந்துவிட்டான். இங்கே வந்ததிலிருந்து இவனிடம் அவள் நன்றாக முகம் கொடுத்து கூட எதுவும் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் ஒரு ஒதுக்கம் தெரிகிறது. அப்படியும் இல்லையென்றால் இயல்பாய் இருக்கிறாள், சண்டையிடுகிறாள் ஆனால் உரிமையோடு எதுவும் இல்லை. ஏன் இவனுக்கான ஒரு பார்வை கூட அவளிடம் இருந்து இல்லை. என்ன தான் அவள் விளையாட்டாக சிலது பேசினாலும் இவனால் அவளது மனதை கணிக்க முடியவில்லை.     
அவள் வேண்டாம் என சொன்னால் அதை ஏற்று தான் ஆக வேண்டும் என்று அவனது நியாய மனம் எடுத்து சொன்னது. 
அதை நினைக்கையில் உள்ளே மிக மிக வலித்தது. 
முதலில் அவனது வாழ்க்கைக்கான ஓட்டம் சீரானதாய் இருந்தது. ஆனால் ஸ்ரீ அவனது வாழ்கையில் வந்த பின் தான் வேகம் எடுத்தது. எல்லாம் ஒரு நாள் அவளை பார்த்து புரிய வைத்து விடும் எண்ணம் தீவிரமாய் இருந்ததால் மற்ற எல்லாவற்றையும் கடந்து வந்தான். 
ஆனால் இப்போது என்ன செய்ய முடியும் இவனால். இது இவன் மட்டும் சம்பந்தபட்ட முடிவு அல்லவே. மிகவும் யோசித்து ஒரு முடிவெடுத்து விட்டான். பொறுமையாக எழுந்தவன் கார்த்தியிடம் வந்தான். 
“ சரி டா. நான் நாளைக்கு ஒரு தடவ அவ கிட்ட பேசிக்கிறேன். அதான் ஃபைனல்.
இன் கேஸ் அவ இந்த ரிலேஷன்சிப் வேண்டாம்னு டிசைட் பண்ணா, 
அத…” சற்று இடைவெளிவிட்டவன், 
“ அத நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். “ என குரலில் சுரத்தையே இல்லாமல்  சொல்லிமுடித்து யாரையும் பாராமல் மட மடவென கீழே சென்று விட்டான். 
ராகவிற்கு இதெல்லாம் பார்க்க என்ன சொல்வது என்றே தெரியாமல் அப்படியே நின்றிருந்தான். 
இங்கே இதெல்லாம் நடக்க, சுந்தரம் வீட்டில் இதே நேரம் பத்மாவும் அவரும்  பேச ஆயத்தமாகி இருந்தனர்.

Advertisement