Advertisement

        வாசு வீட்டின் பூஜை முடிந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. வீட்டின் அலங்கார பளபளப்பு ரிப்பன், பலூங்கள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்க, பூஜை முடிந்த அடுத்த நாளிலிருந்து காட்சில்லா கேங் ஊர் சுற்றி ஆரம்பித்திருந்தனர்.
    ஸ்ரீரங்கம், உச்சி பிள்ளையார் கோயில், செயிண்ட் ஜான்ஸ்‌ சர்ச், கல்லணை, பட்டர் ஃப்ளை பார்க் என இந்த இரண்டு நாட்கள் நன்றாக செல்ல, இன்று இரண்டாவது நாள் இரவு, வாசுவின் வீடு குதூகலமாய் இருந்தது. 
   நடு முற்றத்தின் அருகில் கீழே அமர்ந்து ஸ்ரீயும், சந்தியாவும் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருக்க, அவர்கள் அருகில் தேனுவும், சத்யாவும் மருதாணி வைத்து அதை காய விட்டிருந்தனர் . அருகில் புதிதாக மாட்டபட்ட பெரிய மர ஊஞ்சலின் நடுவில் ஆச்சி உட்கார்ந்திருக்க அவரின் அருகில் குழந்தைகள் அமர்ந்து விளையாடிகிக்கொண்டிருந்தனர். 
சிவசு தாத்தா வெளி சிட் அவுட்டில் காற்றாட அமர்ந்து அவரது நண்பர் முத்துவிடம் பேசிக்கொண்டிருந்தார். 
   “ ஹேய் நான் தான் வின்னு “ 
ஸ்ரீ உற்சாகமாக கத்தி கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா. பல்லாங்குழியின் ஒரு குழியை துடைத்து சோழிகளை அள்ளியிருந்தாள் ஸ்ரீ. அதை பார்த்த சந்தியா ஸ்ரீபத்மாவின் பக்கதிலிருந்த சோழிகளை விளையாட்டாக அள்ள பார்க்க, பத்மா வேகமாக அதையும் துப்பட்டாவில் வைத்து எழுந்து ஓட, அவளை துரத்தி சந்தியா ஓட ஆரம்பித்தார் அவருக்கு உதவ தேனுவும் எழுந்து ஓட, வெளியில் சென்றுவிட்டு வாசு, ராகவ், அகாஷ், அஜய், கார்த்தி எல்லோரும் அப்போது தான் உள்ளே வந்துக்கொண்டிருந்தனர்.
“ கார்த்தி உன் தங்கசிய பிடி. என்னைய அவுட் ஆகிட்டா. “ என சந்தியா சொல்லிக்கொண்டே ஹால்ட்டாக, கார்த்தி பத்மாவை பிடித்துக்கொண்டான். தேனுவும் வந்து பத்மாவை பிடித்துக்கொள்ள, அவள் துப்பட்டாவில் இருந்த சோழிகள் சிதற, அவற்றை ஒவ்வொன்றாக அள்ளிக்கொண்டிருந்தான் வாசு. அதனை பார்த்த ஸ்ரீ, 
“ அண்ணா கைய விடு. “ என சொல்லியவள், கீழே அமர்ந்து சோழிகளை எடுக்க, சந்தியாவும் அமர்ந்து எடுக்க ஆரம்பித்தார். அதை பார்த்த ராகவ், 
“ சந்தியா எனக்கு பசிக்குது, வந்து சாப்பிட எதாவது தா “ என சந்தியா உள்ளே அழைத்துப்போக, தேனுவின் பின்னால் தத்தி தத்தி ஓடி வந்த பாப்பா கார்த்தியை பார்த்ததும் அவனிடம் வந்தது. 
குழந்தையை கொஞ்சிக்கொண்டு தூக்கி கார்த்தி உள்ளேச்செல்ல, தேனுவும், மற்ற அனைவரும் அவர்களை தொடர்ந்து அப்படியே முற்றத்தின் உள் செல்ல, வாசுவும், ஸ்ரீ மட்டும் நடுக்கட்டின் தரையில் விழுந்த சோழிகளை எடுத்துக்கொண்டிருந்தனர்.
எல்லோரும் உள்ளே போகவும் வாசு மிக பொறுமையாக அள்ள, அதனை பார்த்தவள், 
“ மாமா அது எல்லாம் தாங்க. “
அவளை பார்க்காமல் சோழிகளை மட்டும் பார்த்தவன், அவள் முகம் பாராமல், 
“ தர முடியாது. “
“ மாமா பிளீஸ் சின்ன புள்ள மாதிரி இதெல்லாம் அடம் பிடிக்காதிங்க. உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் உள்ள இருக்காங்க “ என இவள் முறைத்துக்கொண்டு சோழிகளுக்காக கையை நீட்ட, இவன் முற்றதின் உள்ளே பார்த்தான். 
எல்லாரும் சாப்பிட்ட டைனிங் ஹாலிற்கு சென்றிருந்தனர். 
பின் அவள் புறம் நிதானமாக பார்த்து, 
“ என் பொருள் உன்கிட்ட ஒன்னு இருக்கு. அத ஃபர்ஸ்ட் தா, நான் அப்புறம் இத தரேன். “ இவன் பேரம் பேசினான்.
“ மாமா தயவு செஞ்சு என் இதயம் உன்கிட்ட இருக்கு, அத தா அப்படினு எல்லாம் கேட்டுடாதிங்க. 
மொக்க தாங்காம இப்படி வீட்டுக்கு போயிடுவேன்.“ என முகத்தில் சலிப்பை காட்டினாள்.
அவள் சொன்ன தினுசில் சிரித்தவன் மெல்ல அவள் அருகில் வந்து அவளின் முகத்தை பார்த்தான். பிரிஞ்சஸ் எல்லாம் சேர்த்து பின் செய்திருந்தாலும், சிலது காதின் ஓரம் கன்னம் தாண்டி அழகாய் வழிய, முகத்தில் பொட்டு மட்டும் வைத்து கண்களில் மெல்லிய மை தெரிய இவனை பார்த்துக்கொண்டிருந்தாள். 
அத்தனை அருகில் அவள் கண்களை பார்த்ததும் பார்த்தபடியே ரசிக்க, அவனது முகபாவம் புரிய இவள் அவனை பார்த்து விழி விரித்து முறைத்தாள்.
அவள் முறைப்பை கண்டு கொஞ்சம் நிதானித்தவன்,  “ நான் ஏன் ஸ்ரீ அப்படியெல்லாம் சொல்ல போறேன். என் இதயம் உங்கிட்டயே பத்திரமா இருக்கட்டும். நீயே அத நல்ல பார்த்துக்குவ. 
நான் அத கேக்குல, என் துண்டு ஒன்னு உன்கிட்ட இருக்கு, அத தா. போதும்.” 
புரியாமல் அவனை பார்த்தவள், “ உங்களோடது என்கிட்ட ஒன்னுமே இல்ல. “ என எல்லாவற்றையும் சேர்த்து அவள் சொன்னாள்.
“ என் காளைய என் துண்ட வச்சு தான அடக்குன, அத தா. என் துண்டு எனக்கு வேணும். “ என அடமாய் இவன் கேட்டு நின்றான்.
பத்மா விழி விழி யென விழித்தாள். அவளுக்கு அந்த சம்பவங்கள் எல்லாம் மறந்து மாதங்கள் சென்றுவிட்டன, இப்போது வந்து துண்டை தா, துணியை தா என்றால் இவள் எங்கே செல்வாள். 
“ மாமா அதெல்லாம் எங்க இருக்குனே தெரில, சும்மா எதாவது பேசாதிங்க.” என இவள் சிடு சிடுத்து திரும்பி நடக்க தொடங்கிவிட்டாள்.  
அடர் காஃபி நிறத்தில் டாப்ஸ்சும், வெள்ளை லாங் ஸ்கர்ட்டும் அணிந்து கழுத்தை சுற்றி ஒரு பிங்க் துப்பட்டா போட்டு தங் தங் என அவள் உள்ளே செல்ல, அவளை இவனுடன் சாதாரணமாக எப்படி பேச வைப்பது என புரியாமல் அவளை பார்த்து நின்றான். 
தினமும் இங்கே வருகிறாள், அதுவும் சந்தியா, சத்யா, தேனு, இவள் என தனியாக ஒரு கேங்காக உருவாக, வாசுவை தவிர மற்ற எல்லோருடனும் நன்றாகவே பேசுவாள், ஆனால் இவனை பார்த்தால் மட்டும் அளவோடு பேசிக்கொள்வாள். இவனும் எப்படி எல்லாமோ முயன்று விட்டான், அவள் இவனை கண்டுக்கொள்வதே இல்லை. இவனை எப்படியெல்லாம் தவிர்க்கலாமோ அப்படியெல்லாம் தவிர்க்க ஆரம்பித்து விட்டாள். 
ஸ்ரீபத்மா பேங்க் விட்டு வந்ததும் தேனு அவளை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிடுவாள். அதுவும் சந்தியாவும் சத்யாவும் நன்றாக பழக, அவர்களை பத்மாவால் தவிர்க்க முடியவில்லை. தேனுவிற்காகவும் அவர்களுக்காகவும் தான் தொடர்ந்து தினமும் வந்துக்கொண்டு இருக்கிறாள். இன்னும் நான்கு நாட்களே அவர்கள் இங்கே இருப்பது எனும் போது, பத்மாவால் அவர்களை ஒதுக்க முடியவில்லை.
இதே தான் வாசுவின் பிரச்சனையும். இன்னும் நான்கு நாட்களே அவளை இவ்வாறு சந்திக்க முடியும் என்பதால் எப்படியாவது அவளிடம் தனியாக பேச முயர்ச்சித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் அவள் பிடி கொடுப்பதாக இல்லை. 
அவள் முற்றத்தில் வாயில் அடையும் முன் அவள் முன் சென்று வழியை மறைத்தவன்,   
“ சரி எனக்கு துண்டு வேண்டாம். அது மறுபிடியும் நான் அந்த மாதிரி துண்டு வாங்கணும் காசு தா “ இவன் விடா பிடியாய் நின்றான்.
இவளுக்கு கோபம் வந்து விட்டது, “ என்ன நினச்சு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கிங்க. உங்களுக்கு எதாவது என்கூட பேசணும். 
அதுக்குனு விஷயமே இல்லாம ஒரு துண்ட பத்தி பேசி என் பொறுமைய சோதிக்காதிங்க.”
“ ஹேய் என்ன. என் துண்ட வாங்கி தொலைச்சது நீ. இப்போ கேட்டா தர மாட்டிங்குற. சரி அது வாங்க காசு கொடுனா அதுவும் கொடுக்க மாட்டிங்குற. 
நீ தானா தொலைச்ச நீ தான் காசு தரணும். “ இவன் ரூல்ஸ் பேசினான்.
அவனை ‘ அட அல்பமே ’ என்பதை போல் பார்த்தவள், தொல்லை விட்டால் போதும் என
“ உங்களுக்கு காசு தான வேணும் எவ்ளோ சொல்லுங்க நாளைக்கு எடுத்து வந்து தரேன். இல்லைனா இப்போவே பேமண்ட் ஆப்ல சென்ட் பண்றேன். “ என சொல்லி இவள் மொபைலை கண்காளால் தேட, 
அதனை பார்த்தவன், “ ஸ்ரீ எனக்கு கேஷ் தான் வேணும். நாளைக்கு வாங்கிக்குறேன். பட் நாளைக்கு கண்டிப்பா கொடுத்துடு. என்கிட்ட இப்போ அந்த துண்டு மாதிரி ஒன்னு கூட இல்ல தெரியுமா. “ என இவன் சோகமாக முடிக்க, இவள் காண்டாகி விட்டாள்.
அவனை முழுதாக மேலிருந்து கீழே பார்த்தாள். இரண்டு நாட்களாக நண்பர்களுடன் ஊர் சுற்றுவதால் பார்மல்ஸ்ஸில் நேர்த்தியாக இருந்தான். யாராவது இவனை பார்த்தால் ஒரு துண்டிற்காக காத்திருப்பான் என நம்பமுடியுமா. எங்கே இன்னும் நின்றால் இவனை திட்டி விடுவோமோ என தோன்ற உள்ளே செல்ல பார்க்க, 
“ ஸ்ரீ அப்புறம் இன்னொரு விஷயம். “ அவசரமாக தடுத்தான் அவளை. 
“ என்ன மாம்ம்மா. “ பல்லை கடிக்காத குறையாக கேட்டாள் ஸ்ரீபத்மா. 
வாசுவின் புன்னகையுடன், வலது கையால் தலையை கோதியபடி இவள் அருகில் வந்தான். 
“ ஸ்ரீ அப்புறம் இன்னொரு விஷயம். “ இவன் மெதுவாய் குரலில் சொல்ல,
“ என்ன ? “ இவள் ஸ்ட்ரிக்ட்டாக கேட்டாள்.
 “ ரெண்டு நாள் முன்ன நீ என்னைய கீழ விழாம பிடிச்சல, ஏன்  ? “ என கண்களில் ஆர்வமாக வினவ, 
அவனை சாதாரணமாக பார்த்தவள், 
“ இப்படி வாங்களேன். இந்த பக்கம் நில்லுங்க. “ என அவனுக்கு ஒரு டைரக்ஷனைக்காட்ட, வாசுவும் அவள் ஏதோ நம்மிடம் இயல்பாக பேச வருகிறாள் என நினைத்து அவள் கை காட்டிய இடத்தில் விரைவாக சென்று  நிற்க, 
“ மாமா இப்போ ஒன்னு சொல்றேன் அத நல்ல கேட்டுக்கோங்க. “
“ சொல்லு ஸ்ரீ. “
“ நீங்க இப்படி நடந்து வாங்களேன். “ 
வாசுவும் அவள் சொல்லியபடி நடந்து வர, இவள் அவன் எதிர்புறமாக நடந்து வருவது போல் இயல்பாக நடந்து வந்தாள். சரி அன்று நடந்ததை இவள் டெமோ காட்டுகிறாள் போல என நினைத்தவன் அவள் சொல்லியபடியே செய்தான்.   
“ ஒரு நாள் நான் ரோட்ல போய்ட்டிருந்தேனா, அப்போ ஒரு சின்ன பையன் எனக்கு முன்னாடி உங்கள மாதிரி தான் வந்துட்டு இருந்தான். “
“ சரி. “
“ அப்போ எங்கள பார்த்து ஒரு நாய் குட்டி கழுத்துல பெல்ட்டோட ஓடி வந்துச்சு, அதனால அந்த சின்ன பையன் பயந்துட்டான். சோ அந்த நாய் குட்டி பெல்ட்ட நான் பிடிச்சிக்கிட்டேன். அதனால அங்க வேற யாரும் பாதிக்க பட மாட்டாங்கள்ள. 
அந்த மாதிரி அன்னைக்கு நீங்க விழுறப்போ அங்க பள்ளம் விழுந்துட்டா, வேற யாராவது அங்க வந்தா அந்த பள்ளத்துல விழுத்துடுவாங்கள்ள. 
அதுக்காக தான் உங்கள பிடிசிக்கிட்டேன். 
அப்புறம் தான் நியாபகம் வந்துச்சு, நம்ப வீட்ல தான் எல்லாருக்குமே நல்லா கண்ணு தெரியுமே, சோ யாரும் பாதிக்க பட மாட்டாங்கள்ள. 
அதனால உங்கள அப்படியே விட்டுட்டேன். “ என உதட்டை ‘ ஈஈஈஈ ‘ என வைத்து விளக்கம் சொன்னவள் பிறகு அவனை முறைத்துவிட்டு திரும்பி சென்றே விட்டாள். செல்லும் அவளேயே ‘ அம்மாடி ‘ என பார்த்து நின்றிருந்தான் வாசு. 
அவனை வறுத்தவள் டைனிங் ஹால் உள்ளே வர எல்லோரும் சாப்பிட்டு எழும் சமயம், 
“ பத்து எங்க போன. போய் நம்ப தாத்தா, முத்து தாத்தா, மேல ரூம்ல உன் அத்தையும் மாமாவும் இருக்காங்க எல்லாத்தையும் சாப்பிட கூட்டிட்டு வா. “ என ஆச்சி ஆர்டர் போட, பத்மாவும் அவர் சொல்லியபடியே செய்தவள், அவளும் உண்ண அமர, அவளுக்கு அருகில் தேனு அமர, எதிரில் பத்மாவை முறைத்துக்கொண்டே வாசு அமர்ந்தான். அவனை பார்த்தாலும் கண் முன் இருந்த தோசை மேல் கவனம் செல்ல, பத்மாவின் கண்கள் பின் வாசுவை பார்க்கவில்லை. 
எல்லோரும் சாப்பிட்ட, அவரவர் தனி தனி அறைக்கு செல்ல, பத்மாவை கார்த்தி வீட்டிற்கு அழைத்து செல்ல, பைக்கை வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். 
தேனு கார்த்தி அங்கே தான் ஒரு வாரம் தங்குகிறார்கள், ஆனால் பத்மா அங்கே தங்க சுந்தரம் அனுமதிக்கவில்லை. இதுவே சிவசு தாத்தா வீடு என்றால் அது வேறு விஷயம், ஆனால் இது வாசுவின் வீடு என்பதால் அவர் அனுமதிக்கவில்லை. இதுவே நாளைக்கு ஒரு பேச்சாக வரும் என யோசித்து அவளை அங்கே தங்க அனுமதிக்கவில்லை. ஒரே குடும்பமாயினும் பத்மா விஷயத்தில் எங்கேயும் அவளுக்கு ஒரு சொல் வரக்கூடாது என ஒவொன்றையும் பார்த்து செய்தார்.    
கார்த்தி பத்மாவை அழைத்துக்கொண்டு வீட்டில் சென்று விட்டு வந்தான். வீட்டிற்கு வந்ததும் ஒரு குளியல் போட்டு இரவு உடைக்கு மாறியவள் அவளது கட்டிலில் வந்து படுத்ததும் மனதில் ஒரு உற்சாகம்.
‘ டேய் நேத்து என்னைய என்னென்ன சொல்ல, நான் பெட்ல இருந்து உருண்டு விழுந்தா ஃபுளோர் உடைய கூடாதாம், ரூம்க்குள்ள வந்தா எனக்கு இடம் இருக்கணுமா, 
அப்புறம் என்னமோ சொன்னனே…
ஊஞ்சல்ல நின்னு நான் குதிச்சா கூட உடஞ்ச்சிட கூடாதாம். 
இவனே ஒரு பைசன் நம்பள எப்படி சொல்லிட்டான். அதான் இன்னைக்கு சிக்கினதும் கொடுத்தோம்ல. 
பையன் நைட்டெல்லாம் தூங்க கூடாது. ‘ என உறங்க முற்பட, அந்த நேரத்தில் அவள் கதவு தட்டபட்டது.  எழுந்து பார்த்தால் மணி இரவு ஒன்பதரை நெருங்கி கொண்டிருந்தது.
கதவை திறந்தவள் முன் சுந்தரம் நின்றிருந்தார். 
“ பத்து உன்கூட நானும் அம்மாவும் கொஞ்சம் பேசணும். “ என அவர் சொன்னதும் ஸ்ரீபத்மா கீழே வர, சிவகாமி சோபாவில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் ஏதோ ஒரு மகிழ்ச்சி தெரிய, ஸ்ரீபத்மாவிற்கு இது எல்லாம் புதியதாய் இருந்தது.   
“ என்னம்மா இப்படி நைட் ப்ரைட்டா உட்கார்ந்திருக்க ? “ என இவளும் அவர் அருகில் மகிழ்ச்சியாக சென்று அவர் தோளை சுற்றி கை போட்டு அமர, சுந்தரம் எதிர் சோபாவில் அமர்ந்தவர், பத்மாவின் கையில் ஒரு புகைபடத்தை கொடுத்தார். யாரோ ஒருவன் சிரித்த முகமாய் அழகாய் நின்றிருந்தான்.
“ இவர் உனக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை மா. நல்ல குடும்பம், நமக்கு தெரிஞ்சவங்க தான். தூரத்து சொந்தம். நல்ல குணமான ஆளுங்க. நல்லா படிச்சிருக்காரு. சென்னைல நல்ல வேலைல இருக்காரு.
உனக்கு இவர பார்க்கலாம்னு இருக்கோம் டா. உனக்கு பிடிச்சிருக்கா. 
நீ ரெண்டு நாள் டைம் எடுத்துகோ யோசிச்சு சொல்லு மா. உன்கிட்ட காலைல சொல்லணும்னு நினச்சேன், அப்போ வேலய இருந்தேன் டா. அதான் இப்போ சொன்னேன் மா ” என சொல்ல, ஸ்ரீபத்மா எந்த நிலையில் இருந்தாள் என அவளுக்கு தெரியா நிலையில் அமர்ந்த்திருந்தாள். பின் சிவகாமி ஒரு அரைமணி நேரம் மாப்பிள்ளை வீட்டார் பற்றி தெரிந்ததை சொல்ல, பத்மா வாய் திறக்கவில்லை. 
“ பத்து நீ யோசிச்சு சொல்லு டா. “ என சொல்லியவர் சுந்தரத்துடன் அவர்களது அறைக்கு செல்ல, பத்மா மட்டும் பின் தங்கினாள்.
பத்மா சோபாவில் இருந்து அப்படியே கீழே அமர்ந்தவள் அவள் கையிலிருந்த புகைபடத்தை அப்படியே முடி கீழே வைத்தவள், அப்படியே அமர்ந்திருந்தாள். ஒரு மணி நேரம் சென்றிருக்கும், ஹாலில் வெளிச்சம் தெரிய சுந்தரம் மட்டும் வெளி வந்தார். 
பத்மா அப்படியே கீழே உட்கார்ந்திருப்பதை பார்த்தவர், அவளின் அருகில் சோபாவில் அமர்ந்தார். பத்மா தலையை நிமிர்த்தி அவரை பார்க்கவும்,
“ பத்து நீ யார பத்தி யோசிக்கிறனு எனக்கு தெரியும். 
நீ விரும்பினவர் பத்தி இப்போ என்கிட்ட சொல்ல ஏதாவது இருக்கா மா ? “ என இவளை நேராக பார்த்து கேட்டிருந்தார். 
பத்மாவிற்கு இந்த கேள்வி வரும் என தெரியும் ஆனால் இப்போது எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வது என தெரியாமல் சுந்தரத்தை மௌனமாக பார்த்தவள் அப்படியே அவரது மடியில் தலை சாய்த்துக்கொண்டாள். கீழே அமர்ந்திருந்த அவளது தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தார் சுந்தரம். 
        
           
 

Advertisement