Advertisement

“ பசுவும் கன்னும் உள்ள கூட்டிட்டு வாங்க. “
என வாசுவின் ஊர் கோவில் அர்ச்சகர் சொல்ல, வாசு அதே போல் புது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான். 
வீட்டின் உள்ளே சுந்தரி ஆச்சி, சிவசு தாத்தா இருக்கையில் கழுத்தில் பூமாலையுடன் அமர்ந்திருக்க, கோதண்டம், சீதா, வாசு பூமாலை அணித்து எல்லாம் பூஜையும் செய்து முடித்திருந்தனர். 
புது வீட்டுக்குள் கன்றுக்குட்டியுடன் பசுவையும் அழைத்துகொண்டு வந்த வாசு. பூஜை முடிந்ததும் வீட்டின் பின் நிழலில் கட்டிவிட்டு பார்த்து கொள்ள ஆள் வைத்து உள்ளே வந்தான். மனம் முழுக்க ஒரு நிறைவு. 
   காலையில் கோதண்டம் முதல் ஆளாய் வந்து பூஜைக்கு உரிய அனைத்து வேலைகளையும் சரிபார்க்க, வாசுவிற்கு மனதில் அத்தனை மகிழ்ச்சி. எங்கே இதிலும் ஒதுங்கியே இருந்துவிடுவாரோ என இந்தனை நாட்களாய் மனதில் ஒரு கவலை இருந்துகொண்டே இருக்க, இன்று தான் அது முடிவு பெற்றது. 
பின் கட்டிலிருந்து முன் வரவேற்பறைக்கு வரவே அவனுக்கு முழுதாய் அரை நிமிடம் பிடித்தது. அத்தனை பெரிதாக தான் கட்டியிருந்தான். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துக் கட்டியிருந்தான்.
நுழைவு வாயிலில் காற்றோட்டமான தூண் வைத்த சிட்-அவுட், அதை தாண்டி உள்ளே நுழைந்தால் மிக பெரிய ஹால். அதற்கு அடுத்த கட்டில் நான்கு பெரிய விசாலமான அறைகள், அதன் பின் நீண்ட விஸ்திரமான திறந்தவெளி குடை நவீன கம்பியிட்ட முற்றம், அதில் ஒரு பக்கம் இரண்டு அறைகள், இன்னொரு பக்கம் ஒரு பூஜை அறை, டைனிங் ஹால்லுடன் கூடிய பெரிய சமையல் அறை, அதை தாண்டி பின் பக்கம் சென்றால் நெல் மூட்டைகள், காய்கறிகள், பயிர் வகை மூட்டைகள், இளநீர் வைக்க என தனியாக ஒரு மிக விஸ்திரமான அறை, இன்னொரு பக்கம் சிட்-அவுட் போல ஒரு அமைப்பு. இது அல்லாமல் மேல் தளத்திலும் ஏழு பெரிய அறைகள் என மொத்தம் பதிமூன்று  தனி அறைகள் என நவீனமாகவும் பாரம்பரிய முறையும் கலந்து கட்டியிருந்தான். 
இந்த வீடை கட்ட ஆரம்பிக்கும் போதே ஆச்சி கூட கேட்டிருந்தார், அளவாக வீடு கட்டலாமே என, வாசு, “ புயல் வந்தப்போ நம்ப ஊர்ல நிறைய பேரு தங்க இடம் கிடைக்க கஷ்டபட்டாங்க ஆச்சி. இனிமே அப்படி ஏதாவது நிலைமை வந்துச்சுனா ஒரு நூறு பேருக்காவது நம்ப வீட்ல உட்காரவாவது இடம் இருக்கணும். அதுக்கு தான் வீடு பெருசா ப்ளான் பன்னேன்.” என சொன்னவனை கண்களில் வாஞ்சையுடன் அவனது தலையை தடவி கொடுத்திருந்தார்.         
இதெல்லாம் நினைத்து கொண்டே முன் அறைக்கு வந்தவன் சீதாவிற்கு பின்னே உட்கார, பூஜை முடியும் தருவாயில் இருந்தது. உட்கார்ந்தவன் பக்கவாட்டில் பார்வையை விட, ஆச்சியும் தாத்தாவும் முகத்தில் ஒரு பூரிப்புடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் தேனு, கார்த்தி, சுந்தரம், சிவகாமி அனைவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாணி அத்தை, மகேஸ்வரி அத்தை, மகேஸ்வரி அத்தையின் கணவர் தனராஜ். 
வாசுவின் எதிரே கீழே விரிப்பு விரித்து சத்யா, ராகவ், சந்தியா, அகாஷ், அஜய், விமல் என அனைவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் கிருபா, மணி, ஸ்ரீதர் என ஒரு பட்டாளமே அமர்ந்திருந்தது. அப்படியே இன்னும் ஐம்பது பேர் சிவசு தாத்தாவின் மற்ற சொந்த பந்தங்கள் அமர்ந்திருந்தனர். 
     அந்த கூட்டதில் ஹாலில் ஆச்சி இருக்கையின் கீழே சத்யாவின் ஒரு வயது மகள் ஹரிணி, சந்தியாவின் கிண்டர் கார்டன் செல்லும் மகன் சந்தோஷ், தேனுவின் பாப்பா சாந்தலக்ஷ்மி என மூன்று குழந்தைகளும் புடை சூழ கீழே விரிப்பில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீபத்மா. 
      சந்தனமும், அடர் சிவப்பு நிற பட்டு புடவை அணிந்து அமர்ந்திருந்தாள். தலையில் ஹாஃப் போனி போட்டு அதில் மல்லிச்சரம், காதில் சிவப்பு நிற டிசைனர் ஜிமிக்கி, கழுத்திலும், கைகளிலும் பொருத்தமான மெலிதான நகைகள் அவ்வளவே. அதுவே அவளை சௌந்தர்யமாய் காட்ட, வாசுவிற்கு கண்களை திருப்புவதே கடினமாயிருந்தது. 
குழந்தைகளிடம் எதையோ புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி வாசு  பார்பதால், தேனுவின் பாப்பா சிரிப்புடன் இவனை நோக்கி ஸ்ரீயின் மடியில் இருந்து எழுந்து தத்தி தத்தி வந்தது. ஸ்ரீயின் மடியில் இப்போது இடம் கிடைத்து விட்டது என சந்தோஷும் ஹரிணியும் எழுந்து அமர்ந்துக்கொண்டனர். சந்தோஷிர்க்கும் ஹரிணிக்கும் யாருக்கு அதிக இடம் என விளையாட்டு வேறு. 
வாசுவின் மடியில் அமர்ந்த சாந்தலக்ஷ்மி, வாசுவின் மாலையை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தது. 
ஆச்சியை நிமிர்ந்து பார்த்தவள்,  
“ ஆச்சி இன்னைக்கு நீங்க செம்ம ப்யூடியா இருக்கிங்க. உங்கள பார்க்கவே ப்ரைட்டா இருக்கிங்க. ஒரு வேல பார்லர் போயிட்டு வந்திங்களோ ? “ என அடிக்குரலில் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். 
“ நான் எதுக்கு புள்ள பார்லர் போறேன், பார்லர் ஆளுங்கள வீட்டுக்கே வர சொல்லலாம்னு இருக்கேன் ? “ என அவரும் லேசாக குனிந்து மெதுவான குரலில் இவளிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“ ஏன் ஆச்சி “ 
“ இங்கயே நல்ல பொண்ணா யாராவது கிடச்சா, நம்ப ராசாவுக்கு பார்க்கலாம்னு இருக்கேன். அந்த பொண்ணுக்கு மேக் அப் போடணும்ல அதுக்கு. “
“ அட பார்ரா மாமாவுக்கு இங்கே பொண்ணு பிக்ஸ் பண்ண போறிங்களா ?  வாவ் சொல்லவே இல்லை. “ 
“ ஏன் சொல்லணும். இந்த பையன் எதுக்கும் பிடி கொடுக்க மாட்டேன்குறான். அதான் அவனுக்கு சொல்லாமலே யாரையாவது புடுச்சு கட்டி வைக்க போறேன். “   
“ அப்போ இன்னைக்கு கல்யாண சாப்பாடும் உண்டா ? “
“ ஏ புள்ள நானே என் பேரனுக்கு பொண்ணு தேடுறேன். நீ என்னடானா கல்யாண சாப்பாடு பத்தி கேட்டுகிட்டு இருக்க. உன் கண்ணுல யாராவது நல்ல பொண்ணா படுறாங்களா பார்த்துச் சொல்லு ? ”
“ ஆச்சி அங்க ஒரு பொண்ணு உட்காந்துருக்கு. பாருங்களேன், மாமாவுக்கு பொருத்தமா இருக்கும். “
“ கழுத அந்த புள்ளைக்கு போன மாசம் தான் கல்யாணம் முடிஞ்சது. வேற புள்ளய பாரு. “
“ ஓகே ஓகே…தோ அங்க ஒரு அக்கா இருக்காங்களே, அவங்க எப்படி இருக்காங்கள்ளா ? “
“ அந்த புள்ளக்கு ரெண்டு மாசம் முன்ன தான் குழந்த பிறந்துச்சு. 
நீ யாரையும் பார்க்கவே வேணாம். நானே பொண்ணு பார்த்துக்குறேன்.“ 
என சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியவள் மெல்ல திரும்பி இயல்பான பொசிஷன்ல அமர, வாசு அவள் பேசியதை லைட்டாக கேட்டவன், அவளை பார்த்துகொண்டே அவனது பூ மாலையை ‘ இது உனக்கு தான் ‘ என்பது சரி செய்தான். அதை கண்டும் கருத்தில் கொள்ளாமல் இவள் வேறு புறம் திரும்பிக்கொண்டாள். 
இதை யார் கவனித்தார்களோ இல்லையோ ராகவ் கவனித்திருந்தான். 
‘ நம்ப பையன் ஏன் கார்த்தி தங்கச்சிய இப்படி பாக்குறான். இவன் அப்படியெல்லாம் இல்லையே. ஆனாலும் பாக்குறாப்ள இருக்கே. ஒரு வேல நமக்கு தான் கண்ணு அப்படி தெரியுதோ. 
இருக்கும் இருக்கும். 
ஆனா காலைல இருந்து அந்த புள்ள மா இலை கட்டுனா இவன் பின்னாடியே ஸ்டூல் கொண்டு போய் தரான். 
கோலம் போட்டா கலர் பொடி தரான். 
அந்த பொண்ணு வாங்குன மல்லிக பூவுக்கு இவன் காசு தரான். 
ஒரு வேல தூக்க கலக்கத்துல நம்பளா நினச்சுக்குறோமோ. எதுக்கும் நம்ப பையனா வாட்ச் பண்ணுவோம். ‘ என நினைத்து அமர்ந்திருந்தான் ராகவ். 
பின்பு பூஜை முடிய, சீதா அரக்க பறக்க ஸ்ரீபத்மாவிடம் வந்தவர்,
“ கன்னுகுட்டி ஆச்சி, தாத்தாவ, வாசு கூட்டிட்டு போய் பரிமாற போறான். அதுக்கு அப்புறம் நானும் அவனும் தான் வந்துருக்கறவங்கள விருந்துக்கு கவனிக்கணும். 
தேனுவும் நீயும் போய் ரெண்டு பேரையும் பார்த்துகோங்க. ஆச்சியையும் தாத்தாவையும் தனியா விட கூடாது. நீங்க ரெண்டு பேரும் அவங்க கூடவே இருக்கணும். இந்தா இந்த மாத்திரை டப்பாவ பிடி. ரெண்டு பேரும் சாப்பிட்டதும், இந்த பாக்ஸ்ல தனி தனியா பேர் போட்டு இருக்க கவர்ல இருக்குற டாப்லெட்ஸ் கொடு.“ என மாத்திரைகளை ஸ்ரீபத்மாவிடம் கொடுத்தவர் வெளியில் பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார். 
வாசு முதலில் ஆச்சிக்கும் தாத்தாவிற்கும் பரிமாறியவன், பிறகு மற்றவர்களை பார்க்க செல்ல தேனுவும் பத்மாவும் தான் கூடவே இருந்தனர். விருந்து முடிந்து அவரவர் கிளம்ப, சொந்ததில் உள்ள ஊர் பெண்கள் சிலர் வந்து தனி தனியாக ஆச்சியின் கை பிடித்து, 
” உங்க பேரன்னால எங்க குடும்பம் நல்லா இருக்கு ஆத்தா. ” என நெகிழ்ந்து சொல்லிவிட்டு போக ஆச்சிக்கு உள்ளத்தின் பூரிப்பு கண்ணில் கண்ணீராய் தேங்க, தாத்தவோ, ” சுந்தரி புது வீட்டு பூஜ இன்னைக்கு, நீ ஆழ கூடாது. ” என அவரை சமாதானபடுத்த முடியாமல் அதட்டிக்கொண்டிருந்தார். கண்ணீரை உள்ளிழுத்தவர் அவரிடம் பேசியவர்களை அனுப்பி விட்டு பின் புது வீட்டினில் அவர்கள் தனி அறையில் தாத்தா, தேனு, பத்மா, பாப்பா மட்டும் இருக்க,   
” நான் எங்க மாமா அழுகுறேன். கண்ணுல தண்ணி அதுவா வருது. 
இன்னைக்கு நல்ல நாள் நான் ஆழமாட்டேன். ” என கண்களை உடனே துடைத்தவர், 
” ராசா இங்க வந்ததுல இருந்து நம்ப மகன் கிட்ட எத்தன பேச்சு வாங்கிருப்பான். எத்தன நாள் ஒரு வாய் சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிடமா தோட்டதுக்கு போயிருக்கு. அவன் அப்பா முன்னாடி இருக்க தயக்கப்பட்டுகிட்டு பின்கட்டுல அந்த ஒத்த கட்டலயே படுத்து, சொந்த வீட்லயே அவன் அப்பா கிட்ட சரியா பேசமுடியாம எத்தன நாள் இருந்திருப்பான். கடசில வீட்ட விட்டு வெளிய வந்து தனியா இருந்து இதெல்லாம் பண்ணிருக்கான். அதெல்லாம் முடிஞ்சு இப்போ அவனுக்கு இப்படி மனசார வாழ்த்து வர்த பாக்குறப்போ மனசுக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு மாமா. ” என சுந்தரி ஆச்சி அவர் மனதில் இருபதை தாத்தாவிடம் பகிர, அருகில் சாந்தலஷ்மியை மடியில் அமர்ந்திருந்த ஸ்ரீபத்மாவிற்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. அவளிடம் இது ஒன்றை கூட வாசு பகிர்ந்ததில்லை. அவளுக்கு முதலில் அவன் இத்தனை சந்தித்திருக்கிறான என தோன்றினாலும் பின்பு வாசுவின் மீது சிறு கோபம் வந்தது, பிறகு அவள் மீதே அவளுக்கு கோபம் வந்தது. 
‘ என்கிட்ட ஒன்னு கூட சொன்னது இல்ல. நான் தான் அவன் கிட்ட நிறைய ஷேர் பண்ணிருக்கேன் போல. அது சரி நான் தான் அவன் கிட்ட பேசுனாலே ஸ்ட்ரிக்ட் ஆகிடுவானே. ஒன்னா முறைப்பான் இல்ல திட்டுவான். எப்போவாவது தான் நல்லா பேசுவான். எவ்ளோ தள்ளி நிறுத்திட்டான் என்னைய. இது தெரியாம அவன் கிட்ட என்னலாம் கேட்டுட்டேன். நான் அவன் கிட்ட என்னோட ப்ரோபோசல் சொல்லும் முன்னாடி இன்னும் யோசிச்சிருக்கணுமோ ‘  என காலம் கடந்து யோசித்தாள். ஆனால் என்ன செய்ய எல்லாம் நடந்து விட்டது. 
    பிறகு கடைசி பந்தியில் வீட்டினரும் நண்பர்களும் அவர்களின் குடும்பம் மட்டுமே இருக்க, வாசுவும் கார்த்தியும் ஆட்களோடு சேர்ந்து பரிமாற ஆரம்பித்தனர். 
கார்த்தியாவது பரவாயில்லை ஒரு நியாயமாக எல்லோருக்கும் பரிமாறினான். ஆனால் இந்த கிராதகன் வாசுவோ, ஸ்ரீபத்மா இலையில் இனிப்பு வகைகள் ஒவொன்றையும் இரண்டிரண்டாக பரிமாறினான். அதுவும் மற்றவர் அறியாமல். ஆனால் ராகவ் கண்ணிற்கு இதெல்லாம் பட்டுவிட்டது.
இத்தனை நாட்களாக கார்த்தியும் தேனுவும் அருகில் இருந்தும் கூட கண்டுகொள்ளமுடியாத ஒன்றை தூரத்து ஊரிலிருந்து வந்த ராகவ் கட்சிதாமாக கண்களால் கவர் செய்து விட்டான். 
‘ ஆஹா…இவன் போக்கே சரியில்லையே…’
‘ ஒரு வேல நம்ப பையன் சிக்கிட்டான… இது இத்தன நாள தெரியாம போச்சே…
ஆன்லைன்ல வரப்போ சிங்கிள் மாதிரியேஏஏஏ பேசுவானேய்யா. திருட்டு பையன் கமிட்டட்னு இம்மி கூட சொன்னதில்லையே. என்ன வேல பார்த்து வச்சிருக்கான். 
அதுவும் இத்தன பேரு முன்னாடி எவ்ளோ நேக்காஆஆ யாருக்கும் தெரியாம பரிமாருறான் பக்கி பய. 
இவன போயி நல்லவன்னு நினச்சிட்டேன்னேய்யா… ச்சை…
என்ன செய்யறது நம்பல்லாம் கள்ள கபடம் தெரியாம வளந்த பச்ச மண்ணு. இவன தனியா பார்த்துக்குவோம். ‘ என எண்ணியவன் காதில் புகை வர உன்ன தொடர்ந்தான்.
வாசு மூன்று பூரியை ஒன்றின் மேல் ஒன்று அழுத்தி ஸ்ரீபத்மா இலையில் வைத்தவன், மற்ற நபர்களுக்கு பரிமாறிக்கொண்டே வந்தான். 
ராகவ் இலை வந்ததும், மற்ற எல்லோருக்கும் போல் ஒற்றை பூரியை அவனுக்கு பரிமாற, 
“ மச்சான் டேய் இது என்ன டா ? “ முறைத்தன் ராகவ்,
“ பூரி டா. “ கூலாக பதிலளித்தான் வாசு.
“ அந்த வெங்காயம் எல்லாம் தெரியுது, இது என்ன ? “ காண்டாகி விட்டான் ராகவ் 
“ டேய் இதுல வெங்காயம் இல்ல, மசால் தான் டா வெங்காயம் இருக்கும். பூரி இஸ் மேட் அவுட் ஆஃப் வீட் மச்சான். “ சின்சியராக பதில் சொன்னான்.
“ ஷ்ஷப்பா டேய்…. இது என்ன டா ஒன்னே ஒன்னு 
மத்தவங்களுக்கு மூனு வச்ச மாதிரி இருந்துச்சு. “ என சந்தேக பார்வையை வீச,
வாசு அவசரகமாக இன்னும் இரண்டு பூரியை எடுத்தவன் அதை அப்படியே ராகவ் வாயில் திணித்து அடுத்த நபருக்கு நகர்ந்து விட்டான். 
‘ இவன்லாம் எப்படி கமிட்டட் ஆனா. ஒரு பூரிக்கே எக்ஸ்ப்லைன் பண்ண வேண்டி இருக்கே, அந்த பொண்ணு ரொம்ப பாவம். 
ஆனா அந்த பொண்ணு இவன கண்டுக்க மாட்டிங்குது. ஒரு வேல சண்டையோ. 

Advertisement