Advertisement

வாடா மலரே தமிழ் தேனே 
என் வாழ்வின் சுவையே 
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே 
   சிவசு தாத்தா சுந்தரி ஆச்சியை பார்த்துப் இந்த வரிகளை லயித்து  பாடிக்கொண்டிருந்தார். வீட்டில் வரிசையாய் விசேஷம் இருக்க, சுந்தரி ஆச்சி வீட்டை ஆள் வைத்து சுத்தம் செய்து முடித்து அப்போது தான் சாவகாசமாய் உட்கார்ந்திருந்தார். அவரை பார்த்து தாத்தா இப்படி பாடியதும், ஆச்சிக்கு மூக்கு சிவந்து விட்டது.
“ என்ன மாமா, வீட்ல ஆளு இல்லனு குளிர் விட்டுப்போச்சா. 
இன்னும் மூனு நாளுல புதுவீடுக்கு பூஜ இருக்கு. 
அங்கே ரெண்டு வாரம் தள்ளி பாப்பாவுக்கு காது குத்து இருக்கு. 
உங்களுக்கு பாட்டு கேக்குதோ. கூட மாட ஒத்தாச செய்யலாம்ல.“
“ சுண்டெலி, நீ சொல்லிட்ட இல்ல, அடுத்த வேல என்னனு சொல்லு, நான் முன்ன நிக்குறேன். “ என சொல்லி சிவசு தாத்தா எழுந்து சுந்தரி ஆச்சியின்  பக்கத்தில் உட்கார, 
“ தள்ளி உக்காருங்க மாமா. பேரனுக்கு கல்யாணம் பண்ற வயசாச்சு. இன்னும் என் பின்னாடியே சுத்தறது. தள்ளி உட்காருங்க. “ 
“ அதெல்லாம் முடியாது உன் கூட தான் உட்காருவேன். ராசாவுக்கு என்ன பொண்ணு பாக்கமயா இருக்கோம். எந்த பொண்ண காட்டுனாலும் அது ஒத்துவரல இது ஒத்துவரலனு அவன் தான் தள்ளி விடுறான். 
இப்போ பொண்ணு கிடைக்கலனு நாம குதிச்சா என்ன செய்யறது. 
நம்ப பத்துக்கும் இன்னும் எதுவும் கூடி வரல, 
இப்போ ரெண்டு வீட்டு ஆளுங்களும் கோயிலுக்கு போயிருக்காங்க. எல்லாம் பிள்ளைகளுக்காக தானா. பார்ப்போம். ஏதாவது நல்லாதா நடந்தா சரிதான். “
“ என்ன மாமா பார்போம்னு சொல்லிட்டிங்க. இந்த வருஷதுக்குள்ள எப்படியும் ரெண்டு பேருக்கும் முடிச்சிபுடனும். “
“ சரி முடிச்சிடலாம் விடு. “
   இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த சமயம் வெளியே வாசு கூப்பிடும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்தனர், 
“ இன்னும் மூனு நாளுள விசேஷம் வச்சிக்கிட்டு, இன்னும் உள்ள வராம இருக்கிய ராசா. உள்ள வாயா. “
“ இருக்கட்டும் ஆச்சி, அப்பா புது வீட்டுக்கு வரட்டும் அப்புறோம் உள்ள வரேன்.
இன்னைக்கு ஸ்ரீ ஃப்ளைட்ல இங்க மதியம் வருதாம். கார்த்திக்கு ஏதோ முக்கியமான வேலையாம், நான் தேனு கூட போய் கூட்டிட்டு வந்துறேன். “ என அவர்களிடம் சொல்லிவிட்டு கார்த்தியின் வீட்டிற்கு சென்றான். 
வாசுவின் வண்டியின் சத்தம் கேட்டதும், உள்ளேயிருந்து கொழு கொழுவென்று ஒரு குழந்தை, தலையில் ஒரு குட்டி தென்னை மரம் வைத்து வாசலுக்கு ஓடி வந்தது. வாசுவை பார்த்ததும் வாய் நிறைய சிரிப்பு. 
ஸ்ரீயின் மினி வெர்ஷன், சாந்தலக்ஷ்மி. கொழு கொழு பிங்க் கன்னங்களில் மிதமாய் பவுடர் போட்டு, துரு துரு விழிகளில் லேசாக மையிட்டு, சிறிய நெற்றியில் மிகச்சிறிய பொட்டு வைத்து வெளியில் செல்ல தயாராய் இருந்தது அந்த தேன்சிட்டு.   
அப்பத்தாவின் பெயரைக்கொண்டு கார்த்தி குழந்தைக்கு பெயர் சூட்டியிருக்க, சாந்தலக்ஷ்மியோ அமைதியாக இல்லாமல் அவள் அத்தை போல் குறும்பு.   
வாசு அருகில் வந்த குழந்தையை தூக்கியதும், அதனின் பிஞ்சு விரலால் அவன் தலைமுடி, தாடி என எல்லாம் இழுத்து அவனை ஒரு வழி ஆக்கியது. அவனது ஷர்ட்டை கசக்கி, அவன் நெஞ்சில் முட்டி மோதி, சிரித்துக்கொண்டு அப்படி ஒரு விளையாட்டு இருவருக்கும். 
வீட்டின் உள்ளே இருந்து தேனு வெளியே வரும் போதே இந்த கலாட்டாக்களை பார்த்தவள், ஹேண்ட்பேக்குடன் வெளியே வந்ததும், பொறுப்பாக வீட்டை பூட்டி, வாசுவுடன் கிளம்ப தயாராய் நின்றாள்.
கார்த்தியுடனான வாழ்வு தேனுவிற்கு தனி பூரிப்பை தர, இந்த ஒன்றரை ஆண்டுகளும் அவளது வாழ்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்திருந்தன. கொஞ்சம் சதை பிடித்து பார்க்க இன்னும் பொலிவாக தெரிந்தாள். 
தேனு இவர்களின் அருகில் வந்ததும்,
“ வாச்சு… 
ம்மா அச்சு. “ 
என பாவமாய் முகத்தை வைத்து வலது கையால் கன்னத்தை தட்டி காண்பித்து தேனுவை பற்றி வாசுவிடம் கம்ப்ளைண்ட் செய்தது குழந்தை. 
 “ ஏ தேனு, ஏன் பாப்பாவ அடிக்குற, பிச்சிடுவேன் பார்த்துகோ. பாப்பாவ என் கூடவே தூக்கிடு போய்டுவேன். “ என இவன் தேனுவை மிரட்ட, 
குழந்தைக்கு தேனுவை பார்த்து ஒரே சிரிப்பு. 
“ தூக்கிட்டு போய் நீங்கள வச்சிக்கோங்க. என் ஃப்ரெண்ட் வரா நான் அவ கூட இருந்துப்பேன். “ என தேனு உற்சாகமாக சொல்லி கார் நோக்கி சென்று விட்டாள்.  
“ என்ன குட்டி நம்ப அத்தைய பாக்க போலாமா. “ என வாசு குழந்தையைப் பார்த்து கேட்டதும், புன்னகையுடன் இரண்டு பக்கமும் தலையை ஆட்டியது. வாசுவும் அதே புன்னகையுடன் காரை நோக்கி சென்றான். 
தேனு பள்ளிக்கு செல்வதால், சிவகாமி தான் குழந்தையை பார்த்துக்கொள்வார். பெரும்பான்மையான நாட்கள் மதிய வேளையில் குழந்தையை தன்னுடன் தோட்ட வீட்டிற்கு அழைத்து வந்து விடுவான் வாசு. வார விடுமுறையின் போது கார்த்தி வீட்டில் இருப்பதால், அந்த இரண்டு நாட்கள் மட்டும் தான் குழந்தையை பார்க்காமல் இருப்பது.
   வாசு, அவன் நினைவுகளால் சூழப்படும் போதெல்லாம், குழந்தையிடம் தான் மனதில் இருப்பதை பகிர்வான். 
அந்த ஒற்றை அறை கொண்ட தோட்ட வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருக்க, கயிற்று கட்டிலில் அமர்ந்து இவன் குழந்தையிடம் பேச பேச, அதுவும் மாமன் ஏதோ தன்னிடம் பேசுகிறான் என என்னவென்றே புரியாமல் விளையாடிக் கொண்டே இவனை அப்பாவியாய் பார்த்து வைக்கும். 
அவனின் சோளத்தோப்பு கிளிகள் குருவிகள் யாவும் குழந்தையின் நண்பர்கள். வாசுவின் தோளில் அவனின் தலையை சுற்றி இரண்டு பக்கமும் கால்களை போட்டு அமர்ந்து பறவைகளை பார்ப்பது குழந்தையின் அலாதியான வேலை.  
இவனது வயல், தோப்பு, உள்ளூரில் இருக்கும் உணவகம் அல்லது திருச்சியில் இருக்கும் ஏதாவது ஒரு உணவகக் கிளை என எங்காவது குழந்தையை அழைத்துச் செல்வான். அதனால் அவனுடன் சுற்றும் பொழுதுகள் குழந்தைக்கு அதிகம். வாசு கார்த்தியின் வீட்டிற்கு சாதாரணமாக வந்தாலே அவனுடன் வெளியில் செல்ல தயாராய் நிற்கும் குழந்தை. 
வாசுவிடம் இப்படி என்றால், ஸ்ரீபத்மா ஊருக்கு வரும் வாரங்கள் எல்லாம் குழந்தை அவளுடன் தான் இருக்கும். அவள் வீட்டிற்குள் குழந்தையை தன்னுடனே வைத்து சுற்றுவாள். குழந்தை வந்த பிறகு அவள் ஊருக்கு வந்தாலும் வெளியில் வரும் நேரங்கள் மிகவும் குறைவு. அப்படியே வெளியே வந்தாலும் சிவசு தாத்தா வீட்டிற்கு சென்று வாசுவை தவிர அங்கே எல்லாரையும் பார்த்துவிட்டு வருவாள், அவ்வளவே. 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிவசு தாத்தா வீட்டில் வாசு இல்லை, அதனால் இவளுக்கு தாத்தா வீட்டிற்கு போக வர எந்த வேறுபாடும் தெரியவில்லை, எப்போதும் போலவே சென்று வருவாள். வாசுவிற்கு இது எல்லாம் தெரியும் ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவள் செய்ய விடவுமில்லை. அப்படி இருக்கையில் இன்று ஸ்ரீபத்மாவை தானே அழைத்து வரும் வாய்ப்பு கிட்ட, உள்ளுக்குள் தித்திப்பாய் ஒரு உணர்வு. 
   இனி வரும் நாட்கள் அவளே மறுத்தாலும் அவளை அப்படியே விட மனமில்லை. உறுதியாய் ஒரு முடிவெடுத்து விட்டான். எதுவாயினும் சரி அவளிடம் பேசி விடுவது. 
வீட்டில் இவன் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல, கடந்த மூன்று மாதங்களாய்  வரும் பெண்களின் விவரங்களையெல்லாம் வேண்டாம் என சொல்வது இவனுக்கு பெரும் வேலையாக போய் விட்டது. அதுவும் சுந்தரி ஆச்சியும் சீதாவும் இவனை ஒரு வழியாகிக்கொண்டிருந்தனர். 
முதலில் ஒரு வருடம் தொழில் விஸ்தரிப்பு இன்னும் பல வேலைகள் என காரணம் சொல்லியிருந்ததால், அவனை வீட்டில் வற்புறுத்தவில்லை, அதன் பிறகு புயல் சம்பந்தமான வேலைகள் என சில மாதங்கள் தள்ளி வைத்தான். அதன் பிறகு இப்போது கடந்த சில மாதங்களாக சுந்தரி ஆச்சியும் சீதாவும் ஷிப்ட் போட்டு இவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இவன் ஏதாவது காரணம் சொல்லி தவிர்ப்பதும், அதன் பிறகு சீதாவிற்கும் இவனுக்கும் நடக்கும் சண்டைகளும் தனி ரகம். எல்லாம் இவனது தோட்ட வீட்டில் தான் நடக்கும். 
    வாசுவிடம் மல்லு கட்ட முடியாமல் இப்போது சீதா பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு  இவனின் திருமணத்திற்காக வேண்ட சென்றிருக்கிறார். சீதாவுடன் கோதண்டமும் தான் உடன் சென்றிருக்கிறார். 
        வாசு அடிபட்ட நாட்களில், இவனை இரண்டு நாட்கள் காணவில்லை, பிறகு மூன்றாவது நாள் அவனை பார்த்த போது அவனுக்கும் இவருக்கும் வாக்குவாதம். அந்த சமயத்தில் செய்தி தாளில் விவசாய போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கைதான படம் வந்திருக்க, அதில் இவனை கைது செய்யும் படம் வந்திருந்தது. 
அதை பார்த்தவர் தான் இவன் இருக்கும் வீட்டில் நான் இருக்க மாட்டேன் என அவருக்கு சொந்தமான வயலிலே தங்கி கொள்வதாக சொல்ல, இவன் அதெல்லாம் வேண்டாம், நான் தோட்ட வீட்டில் தங்கி கொள்கிறேன் என வீட்டை விட்டு வெளியேறி விட்டான். 
சீதா வாயே திறக்கவில்லை, அவருக்கு மகன் மீது நம்பிக்கை. அவன் எங்கே இருந்தாலும் சமாளித்துக்கொள்வான் என அவர் மட்டும் தான் அந்த வீட்டில் திடமாக இருந்தார். ஆனால் சுந்தரி ஆச்சி வாசுவிடமும் கோதண்டத்திடமும் போராட, இருவரும் அவரவர்களது முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர். அதனால் ஆச்சி வீட்டையே இரண்டாக்கி விட்டார். 
உண்மையில் இரண்டாக்கி விட்டார். 
அவரது வீட்டின் நிலத்தை பிரித்துவிட்டார். முன் பாதி கோதண்டத்திற்கு பின் கட்டு முடிந்து, அதை தாண்டிய செடி கொடிகள் இருந்த பகுதி வாசுவிற்கு என்று தாத்தாவை பிரித்து தர சொல்லிவிட்டார். அப்படியே பின் பகுதியில் பெயருக்கு என்று ஒரு கொட்டகை போட்டு வாசுவை தினமும் பகலிலாவது அங்கு வந்து சிறிது நேரம் இருந்து செல்லும் படி சொல்லிவிட்டார். அவருக்கு பேரன் தன் கண் முன்னே இருக்க வேண்டும் .
மகனை தடுக்க முடியவில்லை, பேரனையும் விட முடியவில்லை, ஆச்சியும் தாத்தாவும் தான் அங்கேயும் இங்கேயும் சென்று வந்துகொண்டிருந்தனர்.
அந்நாட்களில் வாசு தோட்ட வீட்டில் தான் தங்குவது. பகலில் மட்டும் கொட்டைக்கு வந்து சுற்றி உள்ள வயலை சீர்படுத்துவது என ஏதாவது செய்து கொண்டிருப்பான். அவர்கள் வீட்டை சுற்றியும் சில ஏக்கர் சிவசு தாத்தாவின் வயல் தானே, அதனால் அவனுக்கு அது ஏதுவாய் போய் விட்டது.  இரண்டு மாதங்கள் தான் அப்படி, அதன் பிறகு அவனின் தொகை கைக்கு வர மிகவும் பிசியாகிவிட்டான். ஆனால் அந்த இரண்டு மாதமும் அவன் வாழ்க்கையை மாற்றி அமைத்த மாதங்கள். இப்போது அந்த கொட்டகை இருந்த இடத்தில் தான் பெரிதாக புது வீடு கட்டியிருக்கிறான். 
    இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோதண்டத்தை தனியாக விட சீதாவிற்கு மனமில்லை. சீதா மட்டும் சில மாதங்கள் வாசுவின் இடத்திற்கு செல்லாமல் கோதண்டத்தின் மனமாற்றத்திற்காக காத்திருந்தார். கோதண்டத்தின் மாற்றங்கள் அவர் சொல்லாமலே சீதாவிற்கு புரிய, இவரும் வாசுவிடம் சென்று வர ஆரம்பித்தார். இப்போது கோதண்டத்தை தவிர வீட்டில் அனைவரும் வாசுவின் தோட்ட வீட்டிற்கு சென்று வருவர்.
கோதண்டம் இப்போது மிகவும் அமைதியாகி விட்டார். ஆம், எல்லாம் வாசுவை நினைத்து தான். வாசு முதலில் சந்தன மரம் வழியாக வரவு பெற்றது கூட அவருக்கு பெரிதாக தெரியவில்லை. அவனை திட்டுவதை மட்டும் நிறுத்தியிருந்தார், அவ்வளவே. ஆனால் அவன் ஊரில் உள்ள விவசாயிகளுடன் சேர்ந்து எடுத்த முயற்சி, இவனது அயராத உழைப்பு, புயலுக்கு பின்னான இவனது செயல்பாடுகள் அனைத்தும் கோதண்டத்தின் மனதில் ஒரு மாற்றத்தை விதைத்திருந்தது. 
தான் நினைத்தது போல் பிள்ளை தவறான பாதையில் போகவில்லை, அவனும் முட்டாள் இல்லை, ஏதோ செய்திருக்கிறான் என உணரும் நாட்களாய் அவருக்கு இந்த ஒன்றரை ஆண்டுகள் ஓடியிருந்தது. 
ஆனால் நாளுக்கு நாள் அந்த மாற்றம் அவருக்கு ஒரு குற்றவுணர்வையும்  அவன் மீது மரியாதையையும் தர, கோதண்டத்திற்கு அதை கையாள தெரியவில்லை, அதை கொண்டு அவனிடமிருந்து ஒரு விலகல். வாசுவின் மீது சிறிதேனும் நம்பிக்கை வைத்து அவனிடம் உரையாடியிருந்தால் அவனின் சிந்தனைகள் புரிந்திருக்கும். ஆனால் அவருள் இருந்த ‘அப்பா ’ என்ற உணர்வு அவனின் வளர்ச்சி பொருட்டு கவலைக்கொண்டேதே தவிர, அவனுக்கும் ஒரு தனி சிந்தனையுண்டு, அதில் என்றேனும் வளர்ச்சி அடைவான் என்ற எண்ணம் வரவில்லை. 
சிறு வயதில் அவனை கோயிலுக்கு அழைத்து செல்லும் போது அவனது சின்னஞ்சிறு கால்களை வைத்து சுவர்களில் ஏறுவான். அப்போதெல்லாம் எங்க வாசு விழுந்து விடுவானோ என அவனின் முதுகில் கையை அழுத்தமாக வைத்து பாதுகாப்பாக பிடித்திருப்பார். அவன் பத்திரமாக இறங்கும் வரை விடமாட்டார்.
அன்று அவனை காப்பது போல் அப்படியே அவனிடம் இத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டார். அவனை செடியென நினைத்து சொற்களை உரமாக இட்டு வளர்க்கப் பார்த்தார். அவனுக்கு என ஒரு தனி சிந்தனையுண்டு அதனை செவி கொடுத்து கேட்போம், உரையாடுவோம் என்ற எண்ணம் கோதண்டத்திற்கு அப்போது வரவில்லை.
ஆனால் வாசுவோ நான் செடி அல்ல, எண்ணற்ற பறவைகளை அரவனைக்கும் அரசமரம் என அவர் முன் நின்றுவிட்டான். 
கோதண்டம் ஒரு அப்பாவாக அவனின் வாழ்கையின் பாதுகாப்பை நினைத்து அவனை வறுக்க, அவனோ அத்தனை வெப்பத்தையும் தன் உள்ளிழுத்து  பிராண வாயுவை வெளியிடும் அரசமரமாய் வளர்ந்திருந்தான். இப்போது தான் அதை அவர் உணர, அவரால் அவனிடம் சட்டென ஒட்ட முடியவில்லை.   
ஆனால் வெளியில் பார்போரிடம் எல்லாம் அவனை கொண்டு ஒரு பெருமை பேச்சு. ஏதோ அவரே வெற்றி பெற்றது போல ஒரு உணர்வு. 
ஆனால் அவனை நேரில் கண்டால் மட்டும் அவருக்கு உள்ளே ஒரு போராட்டம். அவனுடன் சரியாக பேசியே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்போதெல்லாம் வாசு அவரின் முகத்தை பார்த்து பார்த்து நிற்பான். ஆனால் கோதண்டத்தால் அப்படி சட்டென பேச முடியவில்லை, அவரால் இயலவில்லை. சீதாவின் உடல் நிலை முன்னேற்ற விவரம் என ஒன்றிரண்டு வார்த்தைகள் எப்போதாவது இவனிடம் பேசுவார். அப்படி அவர் பேசும் வார்த்தைகளை உள்ளத்தில் சேகரித்து வைப்பான் வாசு. 
   கோதண்டம் இவனிடம் நன்றாக பேசாவிட்டாலும் உரிமையாக இரண்டு வார்த்தைகள் திட்டவாவது செய்தால் பரவாயில்லை என்றிருந்தது அவனுக்கு. அவரது விலகலை இவன் அப்படியே விட விரும்பவில்லை. எத்தனை சாதித்து என்ன, அவனுக்கு அவனை உரிமையாய் பேசும் அப்பா தான் வேண்டும். அதற்காக தான் இன்னும் சிவசு தாத்தா வீட்டினுள் செல்லாமல் இருக்கிறான். ஒரு மகனின் அடம்.
இவனது புது வீட்டின் பூஜைக்கு கோதண்டத்தின் பெயரை போட்டு தான் ஊரில் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்திருக்கிறான். வாசுவிற்கு கோதண்டத்தை இதற்கு முன்னிறுத்தி இவனின் மீதான அவரின் உரிமையை பந்தத்தை அவரை உணரவைக்கும் எண்ணம்.
      ஸ்ரீபத்மா வீட்டில் சுந்தரத்திற்கு சிவகாமிக்கும் வாசுவால் அத்தனை மகிழ்ச்சி. முன்னமே சுந்தரத்திற்கு வாசு மேல் மிகவும் மரியாதையுண்டு இப்போது அது குவிண்டால் கணக்கில் கூடி போயிருக்க, சுந்தரம் தன் நண்பர்களை பார்த்தால் எங்கள் வீட்டு பிள்ளை இப்படி செய்திருக்கிறான் அப்படி செய்திருக்கிறான் என ஊருக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறார். கார்த்தி எதையும் வெளியில் காண்பித்துக்கொள்ளவில்லை, அவனுக்கு தான் அவனது நண்பனை பற்றி முன்னமே தெரியுமே. வாசுவின் முயற்சிகளில் தளராமல் தோள் கொடுத்தவன். அதனால் வாசுவின் வளர்ச்சி அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. வாசுவின் நண்பர்கள் எல்லோருக்கும் வாசுவின் முன்னேற்றதை பற்றி மகிழ்ச்சி தான். மணியும் ஸ்ரீதருமாவது அடக்கி வாசிப்பார், ஆனால் இந்த கிருபா செய்யும் அலப்பறை தான் அதகளபடும்.  
சுந்தரம் முதலில் கொண்டு வந்த வரன் வீட்டினர் வேறு ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க, அந்த விஷயம் அப்படியே முடிந்து போனது. பிறகு ஸ்ரீபத்மா சுந்தரத்திடம் என்ன பேசினாளோ அவர் ஒரு வருடதிற்கு வரன் தேடுவதை தள்ளி வைத்து விட்டார். பிறகு புயல் வர, அதன் பிறகு சில மாதங்கள் கழித்து தான் சுற்று வட்டாரத்தில் நிலைமை சீராகியது. அதன் பின் ஸ்ரீபத்மாவிற்கு வரன் வர, சிலது இவர்களுக்கு சரி வரவில்லை சிலது வரன் வீட்டினருக்கு சரியாக வரவில்லை. 
இவ்வாறே இழுபரியாக இருக்க, சிவகாமிக்கு மனது கேட்கவில்லை, அதனால் அவரும் சுந்தரமும் ஸ்ரீபத்மாவின் திருமணம் நடந்தேற சீதாவுடனும் கோதண்டத்துடனும் கோவிலுக்கு சென்றுள்ளனர். 
குடும்பத்தினர் யாருக்கும் இவர்களின் இடையில் இருந்த நேசம் இன்றளவும் தெரியாது. முதலில் நேசம், பின்பு விலகல் என எல்லாம் இவர்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே. நிலைமை இவ்வாறு இருக்க, இன்று இருவரும் சந்திக்க இருக்கின்றனர். 
ஏர்போர்ட் வரும் வழியில் தேனு சிலது ஷாப்பிங் செய்ய, வாசுவும் குழந்தைக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு என வாங்கினான். பிறகு ஏர்போர்ட்டிற்கு வர, நுழைவாயிலில் கார் நின்றதும் தேனு குழந்தையுடன் இறங்கி முன்னே செல்ல, வாசு ஒரு நிமிடம் கீழே இறங்கி ஏர்போர்ட்டை பார்த்தவனுக்கு ஏதேதோ எண்ணங்கள். 
   இவன் ஒன்றரை வருடம் முன் ஒரு அரைமணி நேரம் இங்கே வந்திருந்தால் இந்நேரம் ஸ்ரீக்கும் வாசுவிற்கும் இந்த நிலைமை வந்திருக்காது. இப்போது இருவரும் முதல் திருமண தினத்தை கொண்டாடியிருப்பர். இது எல்லாம் அவனுள் ஓட சொல்லமுடியா எண்ணங்கள். அதையெல்லாம் எப்படியோ ஒதுக்கினான். அதன் பிறகு இன்று அவளை பார்க்கபோகிறோம் எனும் நினைப்பே அவனுக்கு உற்சாகம் கொடுத்தது. 
 
     
  
  
           
      
            
  
             
            

Advertisement