Advertisement

வாசுவிடமும் கார்த்தியிமும் யாரையோ அறிமுக படுத்த வந்தாள். அப்போது அவளை பார்த்தவன் பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன். அவனது சுவாசம் கூட உள்ளே சீராக இல்லை. சொல்ல முடியா உணர்வுகள் உள்ளே எழ, சுற்றி இருக்கும் சூழல் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.   
    அங்கே எல்லாம் வாசு, கார்த்தி, கிருபா, மணி, ஸ்ரீதர், விமல், அஜய், இன்னும் தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் என ஒரு இளம் படையே இருக்க, இவளுக்கு தெரிந்ததை வைத்து எதனும் செய்யலாம் என அவளுடன் அவளது நண்பர் ஒருவரை அவரின் குழந்தையுடன் அழைத்து வந்திருந்தாள், வந்தவள் வாசுவையும் கார்த்தியையும் பார்த்து  
“ இந்த அண்ணா என் ஃப்ரெண்ட், பிரஸ்ல இருக்காங்க. 
அண்ணாவோட பாப்பாவ நம்ப வீட்ல விட்டுடு வந்துறேன். நீங்க பேசிக்கோங்க “ என பொதுவாய் பார்த்துச் சொல்லிவிட்டு அந்த குழந்தையை அழைத்து கொண்டு சென்று விட்டாள்.
அந்த குழந்தைக்கு ஒரு காலில் வித்தியாசமாக ஷூ போட்டிருந்தது, கொஞ்சம் தாங்கி தாங்கி நடக்க, ஸ்ரீ, குழந்தையை தூக்கி கொண்டு சென்று விட்டாள். 
அத்தனை நேரமும் செல்லும் ஸ்ரீபத்மாவை தான் பார்த்திருந்தான் வாசு தேவன். அதே பேச்சு, அதே தெளிவு, எல்லாம் அப்படியே, ஆனால் இத்தனை மாதங்கள் கழித்து பார்த்தும் இவனுக்கான ஒரு வேறுபாடும் அவளிடம் தெரியவில்லை. அவள் செல்வதை தான் கண் இமைக்காமல் பார்த்திருந்தான்.
அவர்களுக்குள் ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம். ஆனால் இப்படி ஊருக்கு இக்கட்டான சூழ்நிலையில், அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவனுடன் ஒரே நிமிடம் ஆயினும் பேசியிருக்கிறாளே என உள்ளே அவளை பாராட்டினான். அது தான் அவள், அவனுக்கு தெரியும். ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தவன், எப்படியோ இயல்புக்கு வந்தான்.   
   பிறகு வாசு, கார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீயின் நண்பரை வரவேற்றவன், என்ன விஷயம் என விசாரிக்க, 
“ நான் *** மேகஸின் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். இங்க புயல் சமயத்துல போட்டோஸ் எடுத்து மக்களுக்கு தெரிவிச்சா உங்க ஊருக்கு நிறைய உதவி கிடைக்கும். “ என சொல்லி அவரின் அடையாள அட்டையை கட்ட, அது ஒரு புகழ் பெற்ற, மாநிலம் மட்டும் அல்லாமல், தேசம் கடந்து பயணிக்கும்  பத்திரிக்கை. 
  அவர் சொன்ன படியே அந்த ஒரு வாரமும் ஊரிலே இருந்து அனைத்தையும் படம் பிடித்தவர் செல்லும் போது வாசுவின் முயற்சிகளை பார்த்து ஊரில் அவனை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். 
அவனுடன் பழகிய அந்த ஒரு வாரமும் வாசுவுடன் ஒரு நெருக்கம் ஏற்பட்டிருக்க, அவர் திரும்பி அவரது ஊருக்கு செல்லும் போது அவர் சொன்ன தகவல் வாசுவிற்கு ஆச்சர்யத்தை அவர் மேல் மதிப்பையும் இன்னும் அதிகமாய் கொடுத்திருந்தது.
   அவர் ஒரு திருநங்கை. ஆனால் சாமுகத்திற்காக ஆணின் உடையில் இருக்கிறார். சமூகம் அவரை எப்படி நடத்தினாலும், அவர் வாழும் இந்த சமூகத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என ஊடகத்துறைக்கு வந்து விட்டார். இந்த அளவுக்கு முன்னேறியும் விட்டார். 
  அவர் ஒரு குழந்தைக்கு பெற்றவராய் இருக்க ஆசைப்பட குழந்தையை தத்தெடுத்துக் முடியவில்லையாம். பிறகு அவரின் சகோதரியின் குழந்தைக்கு  அம்மாவாய் இருக்கிறாராம். இதெல்லாம் சொல்லி அவர் விடை பெற்ற போது வாசுவால் அவரை வியக்காமல் இருக்க முடியவில்லை.  
    இப்படி எல்லாம் ஒரு புறம் போயிக்கொண்டிருக்க, அந்த புயலின் கண் பகுதி கரையை கடந்திருந்தது. சேதாரம் இருந்தாலும் பெரிய சேதாரம் எதுவும் இல்லாமல் கடந்து விட்டது. ஆனால் பலத்த மழை பொழிய, உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், அவர்களுக்கான பிரத்யேக உணவு, டயபர், பெண்களுக்கு நாப்கின்ஸ்,‌ டார்ச் லைட், மக்களுக்கு தரமான கழிபிட வசதி என எல்லாம் பார்த்து பார்த்து செய்திருந்தனர் வாசுவின் குழு. மழை நீர் சரியான வழி செல்ல வாசுவினது நீர் மேலாண்மை அமைப்பு அத்தனை கை கொடுத்தது. 
   எல்லாம் ஒரு வழியாக முடிய, மக்கள் வெளியில் வந்த போது சில சேதாரங்கள் மட்டும். பொருளராத ரீதியாக சிலருக்கு அது ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை, ஆனால் சிலருக்கு அது விரைவாக சீர் அமைக்க முடியா நிலைமை. வாசு அவனது கட்டுமான தொழிலாளர்களை வைத்து சீர்ப்படுத்தி தர, வாசுதேவன் என்ற பெயர் அந்த ஊரில் ஒவ்வோருவரும் மகிழ்ச்சியாக  ஊச்சரிக்கும் பெயராய் இருந்தது.
இரட்டைவால் குருவியாய் அவனது ஊரை காத்துவிட்டான் வாசுதேவன்.
   இதெல்லாம் பார்த்து தான் முன் சொன்ன அந்த புகழ் பெற்ற பத்திரிக்கை வழியாக அவர்கள் ஊருக்கு நிறைய உதவிகள் வர, மக்களுக்கு அது மிகவும் உதவியாக இருந்தது. 
    அதே பத்திரிக்கை வாசு தேவனுக்கு விருதும் வழங்கியிருக்க, அவனது முயற்சியும் அவனால் அவர்கள் ஊரின் பொருளாதார வளர்ச்சியும் மீடியாவில் பேட்டிகளில் வர, 
வாசுதேவன் என்றவன் அவன் ஊரின் அடையாளமாகி போனான். இன்னும் ஐந்து மாதம் போனால் அவன் இந்த வளர்ச்சியை அடைந்து இரண்டு ஆண்டுகள் ஆக போகிறது. 
    அவனது கல்லூரி இவனை சீஃப் கெஸ்ட்டாக அழைத்து மரியாதை செய்ய, அதை முடித்து திருச்சியில் இருந்து அவனது ஊருக்கு பயணமானான். போகும் வழியில் அவனது உணவக கிளைகளை பார்வையிட்டு, அவனது ஊருக்கு வர பின் மதிய வேலையானது. வந்தவன் நேராக சென்றது சிவசு தாத்தா வீட்டின் பின் பகுதியில் இவன் கட்டி முடித்திருக்கும் புதிய வீட்டிற்கு. 
அங்கே புது வீட்டின் வெளி திண்ணையில் ஆச்சியும் தாத்தாவும் அமர்ந்து புதுமனை புகு விழாவிற்கு தேவையான வேலைகலெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். 
    சுந்தரி ஆச்சியை கையில் பிடிக்க முடியவில்லை. இவர் நலமுடன் இருக்கும் போதே பேரன் இத்தனை வளர்ந்திருப்பது அவருக்கு பத்து வயது குறைந்தாற்போல் ஆகிவிட்டது. அவரிடத்தில் அத்தனை உள்ள பூரிப்பு. சிவசு தாத்தாவிற்கு உடம்பில் இரண்டு லிட்டர் ரத்தமே ஊறி விட்டது. அவரின் மனதில் ஒரு நிறைவு. 
இவர்கள் இப்படியிருக்க, அருகிலே இருக்கும் சிவசு தாத்தாவின் வீட்டில் சீதாவும், கோதண்டமும் ஏதோ கோயிலுக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் சுந்தரமும், சிவகாமியும் சென்றிருக்கின்றனர். இன்னும் வீடு திரும்பவில்லை, இரண்டு நாள் கழித்து  தான் வருவார்களாம். 
தாத்தாவுடனும் ஆச்சியுடனும் அளவளாவியவன், இரவாகியதும் புது வீட்டின் திண்ணையிலே உண்டுவிட்டு, அவனது தோட்டத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். 
அவர்களிடம் அப்படி சொல்லிவிட்டு கிளம்பியவன், வேட்டி பனியனுக்கு மாறினான், போகும் போது பாதி வழியில் முகத்தையும் தலையையும் சுற்றி ஒரு துண்டை கட்டியவன் அடையாளம் தெரியாத படி, நேராக சுந்தரத்தின் தோட்டத்திற்கு சென்றான். அங்கே இருந்த பேனரை பார்வையிட்டான். அங்கே அவரது தோட்டதில் பேனர் இருந்தது. அதில் ஆறு படங்கள்.  
    எல்லாம் ஸ்ரீயின் வேலை தான் போல, அருகே இருந்த ஊரில் முதலில் புயல் ஏற்பட்ட போது, வீழ்ந்த பயிர்கள், பாதித்த மரங்கள், இடிந்து போன தெருக்கள் என எல்லாம் ஒன்றிரண்டு வருடத்தில் மீண்டும் தழைத்து, செழித்து, சீரான காட்சி, ஒன்றன் கீழ் ஒன்றாக என மூன்று வரிசையாக வைத்து அவளது அப்பாவின் நிலத்தில் பேனர் வைத்திருந்தாள். 
வாசுவை போல் ஒரு பத்து பேராவது தினமும் நின்று அதை பார்த்துச்செல்வர், அத்தனை நேர்தியான காட்சிப்படுத்துதல். பார்ப்பவரின்   உள்ளத்திற்கு ‘ நாம் மீண்டு வருவோம் ’ என ஒரு நம்பிக்கை தரும். இவனும் அதை சிறிது நேரம் நின்று பார்த்தவன், பிறகு அமைதியாக அவனது தோட்டத்திற்கு வந்தான். வெளியில் கயிற்று கட்டிலில் படுத்தவன் தூக்கம் வராமல், எழுந்து நடந்தவன் அப்படியே அவனின் வயலுக்கு சென்றான்.
    ஸ்ரீபத்மா சோளத்தோப்பில் அவனிடம் நின்று அவளது விருப்பத்தை தெரிவித்த இடம். அவள் நின்ற மண்ணில் அப்படியே படுத்தவன், செல்லில் பாடல் போட்டு உறங்க முயன்றவனின் மூடிய இமைக்குள் அத்தனை நினைவுகள்,
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் 
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
என அவனது செல் பாட, அவனது நினைவுகள் எங்கோ சென்றது.
        ஒன்றரை வருடம் முன் ஸ்ரீபத்மா அவன் அடிபட்ட சமயத்தில் சந்தித்த போது, இருவரும் திருமணம் செய்யத்தான் முடிவு தான் செய்திருந்தனர். பிறகு விதி வேறு விதமாய் அவர்களின் இருவரின் பயணத்தை தீர்மானித்திருந்தது. 
மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி…
என பாடலுடன் அடை மழை பொழிய அப்படியே மழையிலே படுத்திருந்தான். எதுவும் பாதிக்கவில்லை அவனின் இந்த நிலையை. சில நேரங்கள் அவனுக்கு சில நினைவுகள். அப்போதெல்லாம் இப்படி தான் இருப்பான்.
எல்லாம் இவன் செயல்படுத்திய முடிவு தான். எல்லாம் அவள் நன்மைக்காக என்று தான் செய்தான். ஆனால் அதன் பிறகு இவன் செயலே இவனை தாக்க, அதை எப்படி சரி செய்வதெனே இவனுக்கே தெரியவில்லை. அதற்கு ஸ்ரீபத்மா வாய்ப்பும் தரவில்லை.  
  எத்தனை நேரம் அப்படியே கிடந்தானோ, காலையில் அவன் தோட்டத்து பிள்ளையாரின் முன் அமர்ந்தபோது, மனதில் ஒரு அமைதி. 
பிறகு தோட்டத்திற்கு வந்தவன், வயலில் இருந்த போது, வாசுவிற்கு ஒரு அழைப்பு. 
கார்த்தி தான் அழைத்திருந்தான், 
“ மச்சான், இன்னைக்கு பத்மாக்கு ஆஃப்டர்னூன் ஃப்ளைட். மதியம் தேனுவும்  போய் கூட்டிட்டு வந்துடுங்க டா.  எனக்கு இங்க பேங்க்ல கொஞ்சம் ஹெவி வொர்க்.” என வைத்து விட்டான்.  
       வாசு இந்த செய்தியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் கார்த்தி தான் ஏர்போர்ட் சென்று அவளை அழைத்து வருவான். இன்று இவனிடம் சொல்லவும், ஒரு உற்சாக அலை உடல் முழுவதும் பரவ, அப்படியே அது அவன் முகத்தில் பிரதிபலித்தது.    
அவளை பார்க்க போகிறோம். அதுவும் ஒன்றரை ஆண்டுகளாய் அவளை நன்றாக கூட நேரில் பார்க்க முடியவில்லை. அவள் அதற்கு இடம் கொடுக்கவும் இல்லை.  
   அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த சமயம் அவளை பார்த்தது தான், அதன் பிறகு அவளை ஒன்பது மாதங்கள் கழித்து தான் பார்த்தான். அதன் பின் அவளை புயல் சமயத்தில் பார்த்தது தான், அந்த ஒருவாரம். பிறகு இப்போது மீண்டும் எட்டு மாதங்கள் கழித்து பார்க்க போகிறான். 
   ஆனால் இந்த முறை மனதில் ஒரு தெளிவு வந்தது. 
“ என்ன எப்படி ஒன்றர வருஷம் இப்படி தனியா விட்டடி ராங்கி. 
அப்போ என் நிலைமை அப்படி, அதான் அப்படி பண்ணிட்டேன். அதுக்குனு என்ன இப்படி தனியா விடுவியா. 
இந்த தடவ வரேன் உன்ன பாக்க, இதுக்கு ஒரு முடிவு பண்ணிடுவோம். “ 
என நினைத்தவனின் உதடு சிறு முறுவல் கூட பூத்தது. நேற்று இரவு இவன் இருந்த இருப்பு என்ன இப்போது இருக்கும் நிலை என்ன, 
    ஆனால் அவனது ராங்கி இவன் நினைக்கும் அளவு அத்தனை எளிதாக இவனை எல்லாம் செய்ய விடுவாளா என்ன, நாம் செய்ததெல்லாம் முடிந்தது இனி என்ன என பார்ப்போம் என்று விதி பார்வையாளராய் மாறிவிட்டது.   

Advertisement