Advertisement

       வாணி, “ இங்க வீட்ல பெரியவங்க எல்லாம் ரெஸ்ட் எடுப்பாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. “ என விஜியை அழைத்தார். வாணிக்கு ஜெயாவின் விஷயம் பொருட்டு இங்கே இவர்கள் மகிழ்ச்சி மனநிலை மாறக்கூடாது என எண்ணம். அதனால் அவர் வீட்டிற்கு மனமே இல்லாமல் அழைத்தார். 
       சிவசு தாத்தாவிற்கும் இப்போது இந்த விஷயத்தை பேச விருப்பமில்லை, இன்று தான் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது, இப்போது இவர் இப்படி வம்படியாய் பேசுவது பிடித்தமில்லை, அதற்கென்று வாணியை தனியாக விட மனமில்லை. தாத்தா எழுந்தவர், 
“ ஆமாங்க இங்க எல்லாரும் ரெஸ்ட் எடுக்கட்டும், வாங்க வாணி வீட்டுக்கு போலாம். “ என சொல்ல, அவருடன் வாசு, கோதண்டம், சீதாவும் உடன் சென்றனர். வீட்டில் சுந்தரம், ஸ்ரீபத்மா, சிவகாமி, சுந்தரி ஆச்சி, தேனு என வீட்டில் இருக்க, ஜெயாவும் வாணியுடன் சென்றாள்.  
        வாணி வீட்டின், உள்ளே அமர்ந்தனர் அனைவரும், விஜி அவரின் வீட்டிற்கு போகும் முன் அவரின் கணவரையும் தம்பியையும் வரச்செய்திருந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரும் உள்ளே விஜியுடன் அமர, விஜியின் கண்கள் அவர்கள் வீட்டை தான் சுற்றி பார்த்தது. 
வாணியின் வீடு அளவான வீடு, ஆனால் நன்றாக பரமரித்திருந்தனர். ஜெயாவின் அப்பாவின் போட்டோ ஹாலில் இருக்க, அதற்கு பூச்சரம் அணிவித்திருந்தது. எல்லாவற்றையும் பார்வையிட்டார். 
   வாணி காஃபி போட, சீதா அனைவருக்கும் எடுத்து வந்து கொடுத்தார்.  சிவசு தாத்தா குடும்பத்தையும் பார்த்தவர், பேச ஆரம்பித்தார்,
“ எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க ரெண்டு பசங்க, தேவ ராஜ் கடைசி பையன். ராஜ் அப்பா சொந்தமா லாரி வச்சிருக்காரு. மத்தவங்களுக்கு எல்லாம் கல்யாணம் முடிஞ்சிடுச்சு, ராஜு இன்னும் காலேஜ்ஜ ஆறு மாசத்துல முடிச்சு எங்க தொழிலுக்கே வந்துடுவான். 
இவரு என் தம்பி, *** கட்சியில மாவட்ட செயலாளரா இருக்காரு. இவங்க பொண்ணே இருக்கு, நாங்க எங்க பையனுக்கு எடுக்கலாம் தான், 
ஆனா எங்க பையன் கட்டுனா உங்க பொண்ணு தான் காட்டுவேன்னு சொல்லிட்டான். 
அதிர்ஷ்டகாரி உங்க பொண்ணு, என் பையன் நல்லா பார்த்துக்குவான். நம்பி கல்யாணம் பண்ணி கொடுங்க, நாங்க நல்லா பார்தூக்குவோம். “ என முடித்தார். 
சிவசு தாத்தாவிற்கு முதலில் இவர் வம்படியாய் பேசியதே பிடிக்கவில்லை,
“ எங்க பொண்ணு சின்ன பொண்ணுங்க இன்னும் 21 வயசு  கூட முடியல. அதுக்குள்ள கல்யாணம் இப்போ சரி வராது. 
எங்க பொண்ணு படிப்பு முடியட்டும், அதுக்கு அப்புறம் பொறுமையா பேசலாம்ங்க. உங்க பையனும் படிப்பு முடிக்கட்டும். அப்புறம் பேசுவோம். உங்க பையன் இன்னும் தொழிலுக்குள்ள வரல, அவர் அதுக்கு வந்து கொஞ்ச நாள் பழகட்டும். அவருக்கும் அனுபவம் வரும். 
கல்யாணம்னு பேசரப்போ மாப்பிள்ளை தொழில நல்லா பழகியிருந்தா நல்லா  இருக்கும் தானுங்களே. 
நல்லா விஷயம் பேசுறோம் அதான் அவசர பட வேண்டாமே பாக்குறேன். நீங்களும் வீட்ல கலந்து பேசி வைங்க. புள்ளைங்க படிப்பு முடிஞ்சதும் பார்ப்போம். “ என சிவசு தாத்தா பொறுமையாக தன்மையாக பேசினார். 
“ அதெல்லாம் சரிங்க. எப்படியும் எங்க பையன் தொழிலுக்கு வந்துடுவான். அப்போ நீங்க பொண்ணு தரதும் இப்போ தரதும் ஒன்னு தாங்க.  நல்ல விஷயத்த எதுக்கு தள்ளி போடணும். 
கல்யாணம் முடிஞ்சா நாங்க பொண்ண படிக்க வச்சிக்கிறோம்ங்க. 
நல்லா பார்தூக்குவோம்ங்க. நீங்க இப்போவே உங்க முடிவ சொல்லலாம். “ என விஜி தாத்தாவை கார்னர் செய்தார். ஆனால் அவர் கணவருக்கு இதில் உடன் பாடில்லை என அவர் முகத்திலே தெரிந்தது. அவரும் அவரது மகன் படிப்பை முடிக்கட்டும் என்று தான் எதிர்பார்த்தார் போல, ஆனால் மனைவி இப்படி எல்லோர் முன்னும் பேச, அவருக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவருக்கு விஜி மேல் அவ்வளவு கோபம் வந்தது, இருந்தும் வீட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம் இங்கே எல்லோர் முன்னும் எதுவும் வேண்டாம் என அமைதி காத்தார்.
      விஜிக்கு தெரியும் வீட்டிற்கு சென்றாள் கணவருடன் விவாதம் வரும் என்று இருந்தாலும் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என விடாமல் பேசினார். 
அவரது ஹேண்ட் பேக்கிலிருந்து இன்ஸ்டண்ட்டாக வெற்றிலை பாக்கு பூ எல்லாம் எடுத்தவர், சிவசு தாத்தாவிடம் சென்று, 
“ எங்க பையனுக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ண சம்மதம். இந்தாங்க வாங்கிக்கோங்க. “ என கொடுத்தார். ஆனால் தாத்தாவிற்கு இது சங்கடமான நிலைமை. இவர் இத்தனை அவசரபடுவதில் அவருக்கு உடன் பாடில்லை. 
தாத்தா வெற்றிலை பாக்கை வாங்காமல் இரு கை கூப்பி கும்பிட்டவர்,
“ உங்க முடிவுல எங்களுக்கு சந்தோஷம், ஆனா எங்க சாமிக்கிட்ட பூ போட்டு கேட்டுட்டு ஒரே முடிவா சொல்லிடறோம். அதுக்கு அப்புறம் வெத்தல பாக்கு மாதிக்கலாம். “ என அவரை சமாளிக்க காரணத்தை தேடி பிடித்து பேசி முடித்தார். 
விஜிக்கு பொறுக்கவில்லை, தான் இத்தனை பேசியும் இப்படி பேசுகிறார்களே, எதன் பொருட்டும் தன் மகனை அவர்கள் நிராகரிக்க கூடாது என்று, 
“ அய்யா நீங்க சொல்றது சரி தான். 
இந்தா உங்க பேரன் வாசு இருக்காரு. 
அவரும் சொந்த தொழில் தான பாக்குறாரு. 
இப்போ தான் அவர் தொழிலும் வளந்து வருதுனு கேள்விபட்டோம், அதுக்குனு அவருக்கு பொண்ணு பாக்காமையா இருக்கிங்க. நாளைக்கு அவரும் நல்ல நிலைமையில வருவாருனு ஒரு நம்பிக்கையில தான நீங்களும் அவருக்கு பொண்ணு பாக்குறிங்க. 
அந்த மாதிரி எங்க பையனையும் நினச்சுகோங்க. இப்போ இல்லைனாலும் நாளைக்கு எங்க பையனும் நல்லா வருவான். அதயும் மனசுல வச்சு முடிவெடுங்க. வரேங்க “ என சொல்லி மற்றவர் பேச இடம் கொடாமல் அவர் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார். 
புயல் ஓய்ந்தது போல் இருக்க, சிவசு தாத்தாவிற்கு வாசுவை இதில் இழுத்து அவர் பேசியது பிடிக்கவே இல்லை. அவர் அப்படியே அமர, சீதாவை பார்த்து கோதண்டம் ஆரம்பித்துவிட்டார். 
“ பார்த்திய அவங்க என்ன பேசிட்டு போறாங்கன்னு. 
என் புள்ள என் புள்ளனு தலைல தூக்கி வச்சிகுவா, இப்போ பாரு வரவங்க போறவங்க எல்லாம் பேசுறாங்க. இதுக்கு தான் அப்போவே சொன்னேன்.
வேலைய விடாதனு, உன் புள்ள கேட்டானா என் பேச்ச, 
என்னமோ இவன் தான் இங்க விவசாயம் பண்ணி இந்த ஊரையே காப்பத்த போற மாதிரி வந்தான். இப்போ எப்படி பேச்சு வாங்குறான் பாரு.
வருஷ கணக்கா இங்க விவசாயம் பண்ற நாங்களே அடி பட்டு மிதி பட்டுட்டு  இருக்கோம். வந்துட்டான் பெரிய இவன் மாதிரி. “ அப்படி இப்படி என எல்லோர் முன்னிலையிலும் பேச ஆரம்பித்து விட்டார். 
      அங்கே வாணி வாசுவை பரிதாபமா பார்க்க, வாசுவால் அந்த பரிதாப பார்வையை பொறுக்க முடியவில்லை, இருந்தும் ஜெயாவின் வாழ்வை முன்னிட்டு அங்கே பொறுமையுடன் நின்றிருந்தான். சீதாவும், தாத்தாவும் கோதண்டத்தை சமாதானம் செய்ய முடியாமல் ஏதேதோ சொல்லி பார்த்தனர். அவர் பேசியதை நிறுத்திய போது,  
ஜெயா இடம் பொருள் தெரியாமல்,
“ மாமாவ திட்டதிங்க, அதெல்லாம் பின்னாடி நல்லா வருவாங்க.
 தேவ்ராஜ்ஜும், வாசு மாமா மாதிரி தான் இப்போ இல்லைனாலும் அவர் பிசினஸ் பண்றப்போ நல்லா வருவாரு. 
நான் அவர தான் தாத்தா கல்யாணம் பண்ணிக்குவேன். அவரு என்னை நல்லா பார்த்தக்குவாரு, நீங்க சரினு சொல்லுங்க தாத்தா.
எப்படியும் ஆறு மாசம் கழிச்சு அம்மா எனக்கு அவரு கூடாதான கல்யாணம் பண்ணலாம்னு சொன்னாங்க தான, அது இப்போவே பண்ணலாம் தாத்தா. 
இப்போ வந்தாருல ராஜ்ஜோட மாமா, அவங்க பொண்ணே தரேன்னு சொல்லி அவங்கள ரொம்ப பிரஷர் பண்றாங்களாம். 
ஆனா தேவராஜ் தான் கல்யாணம் பண்ணா என்னை தான்னு சொல்லிடாங்களாம்  “ என்று தாத்தாவின் காலடியில் அமர்ந்து கோதண்டதின் பேச்சு கூட எதுவும் அவளை பாதிக்காது அவரின் முகத்தை ஆவலுடன் பார்க்க, அவள் இன்னும் உலகம் தெரியா சிறு பெண் என நிருப்பித்தாள். 
வாணிக்கு இதை கேட்டு இவளுக்கு எப்படி புரியவைப்பது என தெரியவே இல்லை. அவர்கள் வந்து பேசியதும் இப்படி பேசிக்கிறாளே இந்த பெண். அவர்களை எப்படி இப்படி நம்புகிறாள் என அவருக்கு புரியவே இல்லை. 
ஆனால் ஜெயா பேசியதை கேட்ட சீதா எங்கே கோதண்டம் வாசுவை இன்னொருவர் வீட்டில் வைத்து இன்னும் கடுமையாக பேசிவிடுவாரோ என நினைத்து வாசுவை கையை பிடித்து வற்புறுத்தி இழுத்துக்கொண்டு 
“ எனக்கு கொஞ்சம் உடம்பு முடியல நான் வீட்டுக்கு கிளம்புறேன். அத்தைய இங்க வர சொல்றேன். “ என எல்லோரிடமும் பொதுவாய் சொல்லிவிட்டு விடு விடு என கண்ணில் கோபத்துடன் வெளியே நடந்து விட்டார். இதையெல்லாம் பார்த்தா வாணிக்கு ஜெயாவின் மேல் அத்தனை ஆற்றாமை வந்தது. 
ஆனால் கோதண்டத்திற்கு சீதா கோபமாக செல்வது புரியாமல் ஏதோ சீதாவிற்கு உண்மையிலே  உடம்பு முடியவில்லை போலும், அதுவும் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க, தான் பேசி ஏதோ ஆகிவிட்டதோ என நினைத்து பதறி பின்னே நடந்து போக, தாத்தா அமைதியாக சோபாவில் சாய்ந்து விட்டார்.  
சீதா வாசுவின் கையை பிடித்து நடந்து சென்றவரை, 
வாசு,  
“ ம்மா எதுக்குமா இவ்ளோ கோபம். 
 நம்ப அப்பா தான. பேசட்டும் எனக்கு ஒன்னும் இல்லை. “ என அவன் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க, அவனது கையை உதறினார் போல் விட்டவர், கோபமாக அவனை பார்த்து, 
“ இவ்ளோ பேச்சு வாங்கியும் உனக்கு பத்தல. உங்க அப்பானு அப்படியே விட சொல்ற. 
உங்க அப்பா மட்டும் தான் பேசுறாரா. ஊருக்குள்ள எத்தன பேரு ஜாடையா உன்ன பேசுறாங்க தெரியுமா. 
புள்ளைய ஒழுங்கா வளக்கல, வேலைய விட்டுட்டு வந்து கடைனு சொல்லி உட்காந்துருக்கான், உருபடா மாட்டான். இவன கூடவே இன்னொரு பையன பெத்திருந்தா பெத்தவங்களா நல்லா பார்திருபான்னு எப்படி பேசுறாங்க தெரியுமா உனக்கு. 
இதெல்லாம் ஏன் கேட்டு நான் அமைதியா இருக்கேன் தெரியுமா, இன்னைக்கு இல்லைனாலும் எப்படியும் நாள பின்ன நீ நல்லா வருவன்ற நம்பிக்கைல தான். 
ஆனா இன்னைக்கு இன்னொருதர் வீடுனு கூட பார்க்காம அங்க உன்ன பேசுனாரு பாரு, என்னால பாக்கவே முடில டா. “ என உணர்ச்சி பொங்க கூறினார். 
வாசு,
 “ அம்மா விடுங்கமா…
  இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகாதிங்க…எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிகலாம் “ என சமாதானபடுத்த முயல, சீதா சற்று அமைதியாகிய பின்,  
“ இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, தேனுக்கு குழந்தை பொறந்த அப்புறம் நீ தோட்ட வீட்லையே தங்கிக்கோ, உன்ன அவரு பேசறது இனிமே நான் கேட்க விரும்பல. “ என அவர் உணர்ச்சி அடக்கிய குரலில் சொல்லி முடித்தார். 
இதையெல்லாம் பின்னால் சற்று தொலைவில் நின்று பார்துக்கொண்டிருந்தார் கோதண்டம் சிறிது அதிர்ச்சியாகி விட்டார். அவரால் சீதா சொன்னதை எளிதாக நம்ப முடியவில்லை. எப்போதும் சீதா வாசுவை விட்டுக்கொடுத்து பேசாதவர், அப்படி பட்டவர் இப்படி பேசுவதால், அவர் நம்ப முடியாமல் அனைத்தையும் கேட்டிருந்தார்.
கடுமையான குரலுக்கு மாறிய சீதா, 
“ அப்புறம் இன்னொரு விஷயம், இனிமே நீ ஜெயா விஷயதுல தலையிடாத, பெரியவங்க நாங்க பார்த்துக்குறோம். அவ நம்ப வீட்டு பொண்ணு. நிச்சயமா அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நானும் நினைக்கிறேன். 
அதுக்குனு உன்ன இதுல இழுத்து பேச விஜி யாரு. உன்ன மாதிரி அவங்க புள்ளைய நினச்சுகிறதாம். உன்ன பத்தி அவங்களுக்கு என்ன தெரியும். நான் நல்லா அவங்கள பேசிருப்பேன், உன் தாத்தா பெரியவங்க அங்க இருந்தாங்களேன்னு அமைதியா இருந்தேன். 
ஆனால் உங்க ஆச்சி மட்டும் அங்கே இருந்திருந்தாங்க, நிச்சயமா இத சும்மா விட்டுருக்க மாட்டாங்க. மத்தவங்க வாய்க்கு வந்த படி பேச நீ தான் கிடைச்சியா. “ என ஆதங்கமாக கேட்க, 
“ அம்மா இங்க பாருங்களேன். “ சீதா அவனை பார்க்காமல் வேறு புறம் பார்க்க, அவருக்கு கண்ணில் அத்தனை உணர்ச்சிகள். 
     வாசுவிற்கு அவரது உணர்ச்சிகள் நன்றாக புரிந்தது, ஆனால் இவன் சீதாவை விட அதிக பேச்சுகளை கேட்டுருக்கிறான், அதை எல்லாம் வீட்டில் சொல்வதில்லை, அதை எல்லாம் கடந்தது தான் அவனது இந்த வாழ்க்கை. அதனால் அவனை இவரின் பேச்சுக்கள் பாதிக்கவில்லை, ஆனால் அவரின் உணர்வுகள் புரிந்தது. 
அதுவும் விசேஷ நாள் அதுவுமாக இவர் உணர்ச்சிவசப்படுவது வாசுவுக்கு பிடிக்கவில்லை.
அவர் கொஞ்சம் நிதானம் அடையும் வரை பொறுத்திருந்தவன், அவரின் இரு கைகளையும் பிடித்து அவனது நெஞ்சில் மெதுவாக வைத்தவன், 
 “ சீதா இங்க பாரு புள்ள. “ என கோதண்டத்தின் வாய்ஸ்ஸில் அவரை அழைக்க, சீதா இவனை மிகவும் முறைத்து பார்க்க, 
“ ம்மா…இந்த சின்ன விஷயதுக்கெல்லாம் உன் பையன் வெளிய போ மாட்டான். இது என் வீடு. நான் எல்லாம் எங்கயும் போ மாட்டேன். 
வேணா அப்பாவ போ சொல்லிடலாம். அவர் வேணா அவரோட வயல ஒரு வீடு கட்டி இருந்துகட்டும். “ 
“ அடி ராஸ்கல்…என் புருஷன வெளிய போ சொல்லுவியா நீ. “ என கையை உருவியவர் பக்கத்தில் அவனை அடிக்க குச்சியை தேட, 
“ பின்ன என்ன மா.
இதுக்கெல்லாம் என்னை வெளிய போய் சொல்லுவிங்களா. 
அவர கொஞ்ச நாள் நீங்க கண்டுக்காம விடுங்க. அப்பையும் நம்பள புரிஞ்சிக்கலைனா உங்களுக்கு வேற மாப்பிளைய நான் பாக்குறேன் மா. “
“ பார்ப்ப டா பார்ப்பா… உன்னையெல்லாம் என் புருஷன் திட்டுறதுல தப்பே இல்லை. போ டா “ என இத்தனை நேரம் வாசுவின் அம்மாவாய் பேசியவர், இப்போது கோதண்டத்தின் மனைவியாய் மாறி  இவனிடம் காய்ந்து முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டார். அவரை தொடர்ந்து வாசுவும் அவரின் வால் பிடித்து அவரிடம் சிரிக்க சிரிக்க பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
       இதை அனைத்தையும் பார்த்த கோதண்டதிற்கு பல உணர்ச்சிகள், முதலில் மனைவின் உணர்வுகள் சிறிது புரிந்தது, பிறகு வாசுவின் பேச்சில் கோபம் கொண்டாலும், அதற்கு மனைவின் பதிலில் கொஞ்சம் புன்னகை கூட எட்டி பார்த்தது. ஆனால் வீட்டிற்கு செல்லும் வழியில் கோதண்டம் வாசுவை பற்றி சில முடிவுகளை உறுதியாக எடுத்து விட்டார்.                  

Advertisement