தோட்டத்தின் வாயில் அருகே நின்று தங்கையை கையை காட்டி அவன் அழைக்க, “அண்ணா வந்துட்டாங்க. நான் போயிட்டு வரேண்டா. வர்றேன் அண்ணி” என்று வேல்விழி விடைபெற, ஆவலுடன் கூடவே வாசல் வரை வந்தனர் வெற்றியும், தேனருவியும்.

“உள்ளே வாங்கண்ணா” என்று தேனருவி அழைக்க,

“எப்படி இருக்கம்மா? கால் காயம் பரவாயில்லையா? எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க? ” என்று அக்கறையாக விசாரித்தான் சக்தி.

“காயம் ஆறிடுச்சு அண்ணா. இப்ப நடக்க முடியுது”

“பரவாயில்ல. கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று அவன் கூறவும், அழகாக தலையசைத்துக் கொண்டாள் தேனருவி.

என்னவோ, சக்திக்கு வேல்விழிக்கும், அவளுக்கும் பெரிதாக வித்யாசம் தோன்றவே இல்லை.

“இன்னொருநாள் உள்ளே வரேன். அம்மா தேடிட்டு இருப்பாங்க. இப்போ கிளம்புறோம்” என்று சக்தி கூறியதற்கும் தேனருவி தலையசைக்க, சிரிப்புடன் தான் கிளம்பினான் சக்தி.

இருவரும் அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை அடைய, “எங்கே போனீங்க அண்ணனும், தங்கையும்” என்று மனோன்மணி கேட்க, சக்தி பதில் கொடுக்காமல் படிகளில் ஏறிவிட, வேல்விழி மாட்டிக்கொண்டாள்.

அவள் திருதிருவென விழித்தபடி நிற்க, “என்னடி முழிக்கிற” என்று மனோன்மணி அதட்ட,

“வெற்றியைப் பார்க்க போனோம் பாட்டி” என்று பேத்தி மென்று விழுங்கியவளாக கூறி முடிக்க, நெஞ்சை பிடித்துவிட்டார் மனோ.

“சக்தியா கூட்டிட்டு போனான்?” என்று அதிசயமாக அவர் வாயைப் பிளக்க,

“நாந்தான் கேட்டேன் பாட்டி. அண்ணா வெற்றி வீட்டுக்கு எல்லாம் வரல. என்னை கூட்டிட்டுப் போய் விட்டுச்சு. அவ்ளோதான்” என்றாள் வேல்விழி.

“அவனுக்கும் வலி இருக்கும்ல. அந்தப்பைய பண்ணிட்டு போனது என்ன சின்ன விஷயமா? அவன் இறங்கி வர்றதே பெருசு. கல்லுளிமங்கன்… எதையும் வெளியே காட்ட மாட்டான்” என்று பேரனைப் பற்றி செல்லமாக அலுத்துக் கொண்டார் அவர்.

இப்போது அவருக்குமே வெற்றியைப் பார்க்க வேண்டும் போல் இருக்க, அவனைத் திருமணத்திற்கு கூட அழைக்கவில்லை என்பதும் இப்போது உறுத்தியது.

அன்றிரவே, சொக்கநாதரிடம் அவர் விஷயத்தை தெரிவிக்க, “உன் பொண்ணு இப்போதான் ஒருவழியா சாமி ஆட்டத்தை முடிச்சு இருக்கா. இப்போ நீ எதையாவது பேசி, எதையாச்சும் இழுத்து விட்டுடாத. பெரியவன் கல்யாணம் நல்லபடியா முடியட்டும். மத்தது எதுவா இருந்தாலும், பிறகு பேசிக்கலாம். என்ன இப்போ? நம்ம தோட்டத்துல தான இருக்கான். அவனுக்கும் இதெல்லாம் புரிஞ்சு தான் இருக்கு மனோ. அவன் கஷ்டப்படமாட்டான். நீ சக்தி கல்யாணத்தை மட்டும் பாரு” என்று முடித்துவிட்டார் சொக்கநாதர்.

மனோன்மணிக்கு மனது கிடந்து அடித்துக் கொண்டாலும், சொக்கநாதர் சொல்வதுபோல் வள்ளியம்மை என்ன செய்து வைப்பாரோ என்ற நினைவு அவரை அடக்கி வைத்தது.

சுந்தவடிவுக்கும், தங்கவேலுவுக்கும் இளைய மகனைப் பற்றி இப்போதைக்கு கவலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சக்தியின் திருமணத்திற்கு இரண்டாவது முறையும் இடையூறு வந்துவிட்டதில் இருவருமே கொஞ்சம் கலக்கத்தில் தான் இருந்தனர்.

ஆகையால், அவர்கள் இருவருமே வெற்றியின் விஷயத்தை அப்போதைக்கு

தள்ளி வைத்து, மூத்தவனின் திருமணத்தில் தான் கவனம் செலுத்தினர்.

சக்தி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே அவன் மீது இருந்த கோபத்துடன், அவன் வீட்டிற்கு அழைத்தபோது மறுத்ததும் சேர்ந்து கொண்டிருக்க, அவன் வாய் திறந்து அழைப்பதாக இல்லை.

அவனுக்கு மீனாட்சியிடம் நம்பிக்கை இருந்தது. நிச்சயத்திற்கே அவனிடம் வந்து நின்றவள். திருமணத்திற்கு அழைக்காமல் விட்டுவிட மாட்டாள் என்று நிரம்பவே நம்பிக்கை கொண்டிருந்தான் சக்தி.

வெற்றி எப்படியும் திருமணத்திற்கு வந்து விடுவான் என்று தெரிந்தவன் போல், அவன் தன் போக்கில் மற்ற வேலைகளை கவனிக்க, திருமண நாளும் அழகாக விடிந்தது.

காலையில் சக்தியின் குலதெய்வ கோவிலில் திருமணம் முடித்து மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர் பெரியவர்கள்.

சொக்கநாதரின் குலதெய்வ கோவில் மதுரையில் இருந்து சற்றே தள்ளி, ஒரு கிராமத்தின் எல்லையில் அடர்ந்த காடு போன்ற இடத்தில் அமைந்திருக்க, திருமணத்தன்று காலையில் மொத்த குடும்பமும் காரில் வந்து அங்கே இறங்கியிருந்தது.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெகு நேர்த்தியாக செய்து வைத்திருக்க, காரில் இருந்து இறங்கிய சக்தி முதலில் தேடியது மீனாட்சியைத் தான்.

அழகான தாமரைவண்ண பட்டில் அந்த மீனாட்சியைப் போலவே ஜொலித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவளது பார்வையும் பட்டு வேட்டி சட்டையில் நின்றவனை காதலாக தழுவிக்கொள்ள, அதுவரை வேண்டுமென்ற ஆர்வமில்லாதது போல் காட்டிக்கொண்டவனின் முகத்தில் அந்த நிமிடம் காதல் அமுதமாக ஊறியது.

சக்திக்கு அவ்வபோது அழைப்பு வந்தபடியே இருக்க, “என்கிட்டே கொடுண்ணா” என்று அவன் அலைபேசியை வேல்விழி வாங்கி வைத்துக் கொண்டாள்.

அந்த வேலையும் இல்லாமல் போனதின் விளைவாக, அங்கு நடக்கும் நிகழ்வுகளில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கினான் சக்தி.

அடுத்தடுத்து திருமண நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்க, மீனாட்சியின் விழிகளில் இருந்த தேடலை அவதானித்து விட்டவன், “வந்துடுவான்” என்றான் அவள் தேடலை அறிந்தவனாக.

மீனாட்சி சிறு கோபத்துடன், “நீங்க கூப்பிட்டிங்களா” என்றுவிட,

“நீ கூப்பிட்டா நான் கூப்பிட்டது போலத்தான்” என்று அமர்த்தலாக கூறியவன், மீனாட்சியின் முறைப்படி கண்டுகொள்ளவில்லை.

அவளது முகமாற்றத்தை கவனித்த வள்ளியம்மை, “அப்புறம் பேசு மீனு. தலையை குனிஞ்சு உட்கார்” என்று அவள் அருகில் வந்து அதட்ட, மீனுவும் வாயை மூடிக் கொண்டாள்.

அத்தனை பேரும் எதிர்பார்த்திருந்த அந்த அழகான தருணமும் நெருங்கிவிட, அதுவரையும் வெற்றி வந்து சேரவில்லை.

வேத மந்திரங்கள் ஓதி, ஐயர் தாலியை எடுத்து சக்தியின் கைகளில் கொடுக்க, கையில் வாங்கியவன் மீனுவின் முகம் பார்த்த நிமிடம், அவளும் கண்ணிமைக்காமல் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தாலியை கையில் வாங்கியவன் கட்ட மறந்தவனாக, பெண்ணவளை பார்த்திருக்க, முத்தையன் அவன் தோளில் தட்டவும், சிரிப்புடன் மீனுவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக்கிக் கொண்டான் சக்தி.

சக்தி தாலி கட்டி முடிக்கவும், வெற்றி அங்கே வந்து நிற்கவும் சரியாக இருக்க, சக்திதான் முதலில் கவனித்து மீனாட்சிக்கு கண் காட்டினான்.

மீனு அவனைக் கண்டு பெரிதாக புன்னகைத்து, “வெற்றி” என்று வாய்விட்டு கூறிட, வள்ளியம்மை தொடங்கிவிட்டார்.

“நீ ஏன்டா இங்கே வந்த? உன்னை யார் இங்கே கூப்பிட்டது? போடா வெளியே” என்று யாரையும் கவனத்தில் கொள்ளாமல் ஆவேசம் வந்தவராக அவர் முன்னேற, சொக்கநாதரும், முத்தையனும் அவரின் பின்னோடு ஓடினர்.

இதற்குள் வெற்றியை நெருங்கியிருந்த வள்ளியம்மை அவன் சட்டையைப் பிடித்திருக்க, சொக்கநாதர் தடுக்கவும், “இவனை யார் இங்கே கூப்பிட்டது?” என்று அவரிடமும் குதித்தார் வள்ளி.

இதற்குள் சக்தியும், மீனுவும் கூட இவர்களை நெருங்கியிருக்க, “ம்மா… நாந்தான் கூப்பிட்டேன் அவனை. அவன் என்னோட மாமா பையன். எனக்கு பிரெண்ட். இவருக்கு தம்பி. அவன் வராம எப்படி கல்யாணம் நடக்கும்.” என்று மீனு பதில் கொடுத்து விட்டாள்.

“இவனை இங்கே இருந்து போக சொல்லு மீனு. இவன் இங்கே இருக்கக்கூடாது” என்று வள்ளியம்மை அப்போதும் கத்த,

“சும்மா இரும்மா. அவன் ஏன் போகணும்?” என்று மீனு வெற்றிக்கு பரிந்து கொண்டு வர,

“டேய்… நீ வெளியே போடா” என்று தங்கவேல் தங்கைக்கு துணை வர,

“சும்மா இருங்க மாமா. அவன் எங்கேயும் போகமாட்டான்” என்று மீனு முன்னே வந்ததில், வள்ளிய்யம்மை சட்டென முடிவெடுத்தவராக அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

“வள்ளி… வள்ளி…” என்று முத்தையனும், தங்கவேலுவும் அவரின் பின்னே ஓட, “இதற்குத்தான் சொன்னேன். கேட்டியா நீ” என்று மீனுவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் வெற்றி.

வள்ளியை தொடரப் போன சக்தியை, மனோன்மணி பிடித்து நிறுத்தியிருக்க, பெரியவர்களாக சொக்கநாதரும், மனோன்மணியும் மீதமிருந்த சடங்குகளை முடித்து மணமக்களை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.