நீ மட்டும் நிஜமாக 18

அன்று காலையில் எப்போதும் போல் தனது வழக்கமான நேரத்திற்கு சக்திவேல் கடைக்கு வர, அவனுக்கு முன்னே வந்து காத்திருந்தார் முத்தையன். சக்தியைப் பார்க்கவும் எழுந்து நின்றபடி, “வாங்க மருமகனே” என, அவர் வார்த்தையில் கொஞ்சம் குளிர்ச்சியாக உணர்ந்தான் சக்தி.

“வரேன் மாமா. வாங்க நீங்களும்” என்று அவரை அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான் சக்தி.

அவர் இருக்கையில் அமரவும், “சொல்லுங்க மாமா” என்று சக்தி தொடங்கி வைக்க,

“மன்னிச்சிடுய்யா” என்றார் உணர்ந்து.

“அட என்ன மாமா நீங்க. எதுக்கு இப்போ மன்னிப்பு?”

“உன் அத்தை உன்கிட்ட என்ன சொன்னான்னு எனக்கு தெரியல. ஆனா, நிச்சயமா நீ சங்கடப்படும்படி எதையோ பேசியிருக்கா. நிஜம் தான? என்றவரிடம் என்ன பேசுவான் அவன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. நீங்க விட்டுட்டு வேலையைப் பாருங்க” என்றான் தவிர்ப்பவனாக.

“ஒன்னும் இல்லாத சங்கதிக்காக கல்யாணத்தை நிறுத்த பார்த்தியாய்யா?

“அது ஏதோ அந்த நேர கோபத்துல பேசிட்டேன் மாமா. விட்டுடுங்களேன்”

“அப்போ நான் கல்யாண வேலையை பார்க்கவா?”

“இப்போ வேண்டாம் மாமா. நான் ஏற்கனவே சொன்னது போல, ஒரு ஆறுமாசம் போகட்டுமே”

“அதெப்படி சக்தி. நாள் குறிச்ச கல்யாணத்தை எப்படி தள்ளி வைக்க?”

“அப்படி ஏன் மாமா யோசிக்கிறீங்க? மீனாட்சி உடம்பு குணமாகனும் இல்ல. அதை யோசிங்க”

“மீனாட்சியே இதுக்கு ஒத்துக்கமாட்டா சக்தி. ஊர்ல கேக்குறவங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?”

“என்னை என்னதான் செய்ய சொல்றிங்க மாமா? ஆளுக்கு ஒன்னா சொன்னா நானும் என்னதான் செய்ய?” என்றுவிட்டான் சக்தி. அவன் குரலில் அலுப்பும், சலிப்பும் வெளிப்படையாகவே தெரிய, அவனும் சோர்ந்து தான் போயிருந்தான்.

“உன்னை யார் என்ன சொன்னாங்க சக்தி. என் வீட்டு மருமகன் நீ. நீங்க ரெண்டு பேருமே எங்க வீட்டு பிள்ளைங்க. உங்களுக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்னு நினைக்கிறது தப்பா? உன் அத்தைக்கு ஏதோ கிறுக்கு பிடிச்சு இருக்கு. உனக்கு அவளைத் தெரியாதா. அப்படியே அவ ஏதாவது கூறில்லாம பேசி வச்சாலும், என் மாமன் பொண்ணு. நான் தூக்கிட்டு போவேன்னு சொல்ல வேண்டாமய்யா. நான் உன்கூட நிற்கமாட்டேனா?” என்று முத்தையன் கேட்க, சக்தி வாயைத் திறக்கவில்லை.

“உன் அத்தையை நான் பார்த்துக்கறேன் சக்தி. குறிச்ச முகூர்த்தத்துல நீ தாலியைக் கட்டியாகணும். மேல என்ன வந்தாலும் நான் உன்கூட நிற்கிறேன்.” என்று வாக்குறுதி கொடுப்பது போல் கூறினார் முத்தையன்.

“எனக்கு உங்களை தெரியும் மாமா.”

“அப்போ என் பேச்சை கேளுங்க மருமகனே. உன் கல்யாணத்துக்கு நான் பொறுப்பு. நீங்க இனி இது விஷயமா வாயைத் திறக்கக்கூடாது. உன் அத்தையை நான்  கூட்டி வந்து உன் முன்ன நிறுத்துறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் முத்தையன்.

——-

அதே நேரம் சோகப்பதுமையாக தனது அறையில் படுத்திருந்தாள் மீனாட்சி. நேற்று சக்தி அவளை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு விட்டு செல்ல, அவன் கிளம்பிய மறுநொடி வெளிப்பட்டார் வள்ளியம்மை. மீனாட்சி தனது முகத்தில் பூத்திருந்த புன்னகையுடன் ஒரு அடி எடுத்து வைக்க, மகளை எல்லையில்லாத கோபத்துடன் உறுத்து விழித்தார் அவர்.

“என்னம்மா?” என்று மகள் சாதாரணமாக கேட்க,

“எங்கே போன மீனு?”

“சக்தி மாமா கடைக்கு”

“யார்கிட்ட கேட்டு போன?”

“யாரை கேட்கணும்? என் மாமா கடைதானே”

“சரி… நீ போகிறதா யார்கிட்ட சொல்லிட்டுப் போன?”

“அது தப்புதாம்மா சொல்ல மறந்துட்டேன். ஆனா, அப்பா என்னைப் பார்த்துட்டாங்களே. அவங்க உங்ககிட்ட சொல்லலையா?” என்று மீனாட்சி விளையாட்டுப் பிள்ளை போல் பேசி வைக்க, வள்ளியம்மைக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

“என்னடி எகத்தாளம் பண்ணிட்டு இருக்கியா? அப்பனும் மகளும் சேர்ந்து ஆட்டம் ஆடி காட்டுறிங்களா எனக்கு?” என்று கோபத்துடன் அவர் கத்த,

“இப்போ எதுக்காக இப்படி கத்துறீங்க?

“என்ன தப்பு பண்ணிட்டேன் நான். யாரோ முன்பின் தெரியாத ஒருத்தனை பார்க்க போகல இல்ல. எனக்கு நிச்சயம் பண்ணி இருக்க என்னோட மாமாவை பார்க்கத்தான் போனேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமே நடக்காது மீனு. நீ உன் மனசுல எதையும் யோசிக்காத. இந்த கல்யாணம் நிச்சயமா நடக்காது”

“ஏன் நடக்காது? நிச்சயம் பண்ணிக்கிட்ட நானோ, சக்தி மாமாவோ வேண்டாம்னு சொல்லவே இல்லையே. அப்புறம் எப்படி நடக்காம போகும்?”

“ஐயோ மீனும்மா புரிஞ்சிக்கோ. என்னால உன்னை அந்த வீட்டுக்கு மருமகளா அனுப்ப முடியாது. என் மக நித்தம் உசுருக்கு பயந்து வாழுறதை என்னால பார்க்க முடியாது”

“நான் ஏன் உயிருக்கு பயந்து வாழனும். அப்படி என்ன ஆபத்து வந்திடும். எதுவா இருந்தாலும், சக்தி மாமாவைத் தாண்டி தான் என்கிட்டே வரும். இதுக்காகவெல்லாம் நீங்க பயப்பட வேண்டாம்”

“அவனை மீறி தான் உன்னை வெட்டி போட்டுட்டு போனாங்க. ஞாபகம் இருக்கா. இனி ஒருமுறை என் மகளுக்கு ஒன்னுன்னா என் உடம்புல உசுரு தாங்காது. என்னால முடியாது மீனு”

“நீங்க ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்கமா. ஒருமுறை ஏதோ தவறி நடந்துடுச்சு. அதுக்காக எப்பவும் அதே நடக்கும்னு எப்படி சொல்ல முடியும்? அதோட, இதுக்கெல்லாம் பயந்து நான் சக்தி மாமாவை விட்டு விலகிடுவேன்னு நினைக்கிறீங்களா நீங்க?”

“ஏன்? உனக்கு என்ன? உன் அப்பாவுக்காக தான கல்யாணத்துக்கு சம்மதிச்ச. நாங்க சொல்றவனை கட்டிக்கிறேன்னு தான சொன்ன.”

“இப்பவும் நீங்க சொன்னவனை தான் கட்டிக்கணும்னு சொல்றேன்.”

“அது நடக்காது மீனு. நானே தான் சொல்றேன். உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்”

“அது முடியாதும்மா. உங்க விருப்பத்துக்காக நான் என் மனசை மாத்திட்டே இருக்க முடியுமா? அதுவும் இல்லாம, நான் உங்ககிட்ட எப்போ சம்மதம் சொன்னேனோ, அப்போவே அவரை மனசார ஏத்துக்கிட்டேன். இப்போ நீங்க மாறினாலும், நான் மாற முடியாது”

“இந்த கல்யாணம் நடக்காது. நடக்கவே நடக்காது”

“அப்போ உங்க மகளுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது”

“மீனு. நான் சொல்றதை கேட்கவே மாட்டியா நீ?”

“இந்த விஷயத்துல கேட்க மாட்டேன். இது என்னோட வாழ்க்கை மட்டும் இல்ல. சக்தி மாமாவோட வாழ்க்கையும் கூட. ஏற்கனவே ஒருமுறை நிச்சயம் நின்னு போயிருக்கு. இப்போ இதுவும் இல்லன்னு ஆனா, அவர் என்ன ஆவார். அதை யோசிச்சீங்களா?

“எனக்கு என் மகளைத் தாண்டி எதுவும் முக்கியம் இல்ல?”

“ஆனா, எனக்கு என் குடும்பம் முக்கியம். இந்த கல்யாணம் நின்னு போனா, சக்தி மாமாவும், நானும் மட்டுமில்ல. நம்ம மொத்த குடும்பமும் சிதைஞ்சு போகும். அது புரியவே இல்லையா உங்களுக்கு. நீங்க ஏன் யாரையும் யோசிக்கல.”

“ம்ம்ம். அதுதான் நீ அத்தனைப் பேரையும் யோசிக்கிறீயே. பரவாயில்ல. நீ உன் விருப்பபடி என்னவோ செஞ்சுக்கோ. ஆனா, நான் உயிரோட இருக்கமாட்டேன். என் மக வாழ்க்கை அந்தரத்துல ஆடுறதை என்னால பார்க்க முடியாது. நிச்சயமா நான் இருக்கமாட்டேன்” என்று வள்ளியம்மை முகத்தை மூடிக்கொண்டு கதற,

“இதே வார்த்தையை நான் சொல்லிட்டா…” என்று அவரை அதிர வைத்தாள் மீனு.

“மீனு” என்று வள்ளியம்மை கத்த,

“சக்தி மாமாவோட என் கல்யாணம் நடக்காம போனா, நான் உயிரோடவே இருக்கமாட்டேன்னு நான் உன்னை மிரட்டினா?” என்று நிதானமாக கேட்டாள் மகள்.

வள்ளியம்மை வாயடைத்து நிற்க, “நான் அப்படியெல்லாம் எதுவும் பண்றதா இல்ல. என் அப்பா என்னை மட்டுமே யோசிக்கிற சுயநலவாதியா என்னை வளர்க்கவும் இல்ல”

“ஆனா, ஒரு விஷயம்… நான் சக்தி மாமாவைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதையும் மறந்துடாதீங்க” என்று மகள் அழுத்ததுடன் கூற, அவள் அழுத்தம் கொடுத்த ஆத்திரத்தில் மகளை கைநீட்டி அறைந்துவிட்டார் வள்ளியம்மை.

மீனாட்சி பயப்படுவாள் என்றோ, அழுவாள் என்றோ எதிர்பார்த்து இருந்தால், நிச்சயம் ஏமாந்துதான் போனார் வள்ளியம்மை.

மீனாட்சி தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் ஒரு வெற்று புன்னகையுடன் கடந்துவிட்டாள் அவரை.

வள்ளியம்மையின் நிலைதான் பரிதாபமாக இருந்தது இப்போது. யாருக்காக யோசித்து, அவர் சக்தியை மறுக்கிறாரோ, கடைசியில் அவளே அவரை புரிந்துகொள்ள வில்லையே என்று மருகி நின்றார் அவர்.

வேறு எதுவும் செய்ய தோன்றாமல், அருகில் இருந்த தூணில் சாய்ந்து அவர் அமர்ந்துவிட, இங்கே அறைக்கு வந்தவளோ, அழுதே கரைந்தாள்.

கடைசியாக வள்ளியம்மை எப்போது அவளை அடித்தார் என்பது நினைவில் கூட இல்லை அவளுக்கு. அப்படிப்பட்டவர் இன்று உடம்பு முடியாதவள் என்றும் பாராமல் அடித்து வைத்திருக்க, தாங்க முடியாத கோபமும்,  வருத்தமும் தான்.

சிறுபிள்ளை போல், “அப்பா வரட்டும்” என்று முனகியபடியே அழுது கொண்டிருந்தாள் அவள்.

அன்றைக்குப் பார்த்து முத்தையனும் ஐந்து மணிக்கு எல்லாம் வீடு வந்து சேர, அவர் மனைவியிடம் விசாரிக்கும் முன்பே மகளைப் பற்றி குறைபாட தொடங்கிவிட்டார் வள்ளியம்மை.

முத்தையன் அன்று காலையில் தான் மாமனாரிடம் பேசி வந்ததும். இப்போது மனைவி சொன்னது மொத்தமும் கேட்டுக் கொண்டவர், “நீ சக்திகிட்ட என்ன பேசுன” என்றார் முதல்முறையாக.

“இல்ல. நான்… நான் என்ன பேசினேன். நான் எதுவும் பேசலையே” என்று வள்ளியம்மை திணற,

“நீ ஹாஸ்பிடல்ல என்கிட்டே சொல்லும்போதே எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சு வள்ளி. அப்போ மீனு கவலையில எனக்கு வேற எதுவும் புரியல. ஆனா, நிதானமா யோசிச்சு பார்த்தா, எல்லாமே தப்பா இருக்கு. நிச்சயம் பண்ண கல்யாணத்தை நிறுத்துறதா சொல்ற நீ. இதை நான் அவங்ககிட்ட சொல்ல முடியுமா? உன் அப்பாவும், அண்ணனும் என்னை பஞ்சாயத்துல நிற்க வச்சா என்ன பதில் சொல்ல முடியும் என்னால? அதோட மீனு, அவளை யோசிச்சியா நீ? அவளுக்கு என்ன சொல்வேன் நான்?” என்றவருக்கு காலையில் சக்தியின் நாற்காலியில் அமர்ந்திருந்த மீனாட்சி தான் கண்முன் தோன்றினாள்.

வள்ளியம்மை அவரின் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனியாகத் தான் நின்றார் அந்த நேரம். முத்தையன் சில நொடிகள் பொறுத்தவர், “எனக்கு பதில் சொல்லு வள்ளி. நீ சக்திகிட்ட என்ன சொல்லி வச்ச?” என்று மீண்டும் கேட்க,

“என்னை எதுவும் கேட்காதீங்க. நீங்க சொல்றது அத்தனையும் எனக்கும் புரியுது தான். ஆனா, இது எல்லாத்துக்கும் மேலானது என் மகளோட உயிர். அவளுக்காக எதை செய்யவும் நான் தயாரா இருக்கேன்.”

 “என்ன ஊர் பஞ்சாயத்து காரங்க கால்ல விழணுமா? இல்ல, இந்த ஊரை விட்டே போகணுமா? என்ன செய்யனும்” என்று ஆவேசமாக வள்ளியம்மை கேட்க,

“உன் மகளோட மனசை கொல்லணும். அப்போதான் அவ உன் அண்ணன்மகனை மறப்பா. முடியுமா உன்னால?” என்றார் முத்தையா.

வள்ளியம்மை பதில் இல்லாமல் அழுகையில் கரைய, “நீ இன்னைக்கு அவளை பார்த்திருந்தா, இந்த கல்யாணத்தை நிறுத்தணும்ங்கிற எண்ணமே உனக்கு வந்திருக்காது வள்ளியம்மை. அவ பேருக்கேத்தபடி மீனாட்சி தான். அவ சொல்றதுக்கு தான் நீயும் நானும் ஆடும்படி இருக்கும். அவ ஆட்டிவைக்கத்தான் போறா உன்னை.” என்று முடித்துவிட்டார்.

“என்னங்க”

“நீ என்கிட்டே எதுவும் பேசாத. உன்னால முடிஞ்சா உன் மககிட்ட பேசு. அவ எடுக்கிறது தான் முடிவு. நான் நிச்சயமா என் மக பக்கம் தான் நிற்பேன். அவ சக்தியை கட்டி வைன்னு சொன்னா, ஏன் எதுக்குன்னு ஒரு வார்த்தைக்கூட நான் பேசமாட்டேன்” என்றவர் துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு எழுந்து சென்றுவிட்டார்.