Advertisement

Episode 16
அருகில் அமர்ந்தவனது கையை பிடித்து முறுக்கி,அவள் தனது கைமுட்டியால் அவனது முதுகில் நாலைந்து குத்துக்களை வழங்கிய பின்னரே ஓய்ந்தாள்.
“ஏய் எதுக்கடி இந்த அடி அடிக்கின்றாய். மனுஷியாடி?” நீ என கூறிக்கொண்டு தனது முதுகை தடவி விட்டான்.
“என்னை பார்த்து மனுஷியா? என்று கேட்கிறாயா? முதலில்  நீ மனுசனா? அதைச்சொல்லடா?” என்று அவள் அவனை பிடித்து பின் பக்கமாக தள்ளி விட, அவனது முதுகு மறுபடியும் சுவரில் இடிபட்டது. “சொல்லாமல் கொள்ளாமல் நேரங்கெட்ட நேரத்தில் திருடன் போல வந்து குதிக்கின்றாயே? சரியான மந்தி.” என்றாள்.
“ஆமாம்….. அப்படியே  சொல்லி வைத்தால் நீ வாசல் கதவை திறந்து வைத்துக்கொண்டு எனக்காக வெயிட் பண்ணுவியோ…..” என்றான்.
“இப்போது மட்டும் உன்னை வரவேற்று, ரீ தந்து உபசாரம் பண்ணுவேன் என்று நினைத்தாயா? நீயாவே கிளம்புகிறாயா? இல்லை கத்தி கலாட்டா பண்ணட்டுமா?” என்றாள்.
“கத்து…. நன்றாக கத்து, அப்படியாவது உன் குரலை அக்கம்பக்கத்து ஆட்கள் கேட்கட்டுமே…..!” என்றவனுக்கு தலை வலித்தது.ஏனெனில் அவள் அவனை மதிலோடு பிடித்து தள்ளியதில் முதுகு மட்டுமல்ல அவன் பின் பக்க தலையும் அடிபட்டிருந்தது.அது இப்போது ‘விண்விண்’ என்று வலித்தது.
அவள் கண்டபடி அவனை திட்டிக்கொண்டிருந்ததில் அவன் வலியில் முகம் சுளித்ததை கவனிக்கவில்லை.
அவன் தலைவலிக்கு அவள் திட்டும் சத்தம் சம்மட்டியால் அடிப்பது போல வலியைக்கொடுக்கவும் தனது தலையை கைகளிரண்டாலும் தாங்கிப்பிடித்து கொண்டான்.
தான் பேசப்பேச இவன் அமைதியாக இருக்கின்றானே…..! என அதற்கும் சேர்த்து ஒரு திட்டை வைக்கவும் அதற்கும் அவன் அமைதியாக இருந்தான். “மவனே இண்டைக்கு நீ தொலைந்தாய்.” எனக்கூறிக்கொண்டு திரும்பி பார்க்கவும் அவன் தலையை கைகளால் தாங்கியிருப்பதை கண்டாள்.
‘இவன் தண்ணியை,கிண்ணியை போட்டு விட்டு  வீடு அடையாளம் தெரியாமல் என் வீட்டு மொட்டைமாடியில் வந்து மட்டையாகி விட்டானா? கிரகம் பிடித்தவன்.எப்போது இவனை பார்த்தேனோ? அன்றிலிருந்து ஏதாவது பிரச்சனையை கிளப்பி விடுவதே இவன் வேலையாக இருக்கின்றது? இன்று புதிதாக என்ன கொண்டு வந்திருக்கின்றானோ? தெரியவில்லையே?’ என மனதினுள் நினைத்தபடி அவனை அசைத்துப்பார்க்கவும்,அவன் வலியால் முனகுவது கேட்டது.அவளுக்கு பயத்தில் என்ன? செய்வது என்று புரியாது நடுங்கிய வண்ணம் “டேய் உனக்கு உடம்புக்கு என்ன? செய்கின்றது.வரும் போது நன்றாக தானே வந்தாய்.இப்போது திடீரென என்னவாகிற்று.”என்றாள் பதட்டத்துடன்.
அவன் பின்பக்க தலையை பிடித்துக்கொண்டு அவளை பார்க்கவும் தான் அவளுக்கு விடயம் புரிந்தது.
அவள் பயத்துடன் போனை உயிர்ப்பித்து அதன் வெளிச்சத்தில் அவனது பின் தலையை பார்க்கவும் அது புடைத்து வீங்கியிருக்கவே உள்ளே ஓடிச்சென்று தைலத்தை எடுத்து வந்து”தலையை காட்டு.” என்றவாறு அவனது முகத்தை இழுத்து தன் மடியில் வைத்தவாறு தைலத்தை தேய்த்து விட்டு முன் நெற்றிக்கும் அதை பூசி மெதுவாக மசாஜ் பண்ணியும் விட்டாள்.அந்த இதமான வருடலில் அவன் விழிகள் தானாக மூடிக்கொள்ள,ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவள் தைலத்தை பூசி முடித்தவுடன் “ ஏய் எழுந்திரு, உள்ளே வா,ஒரு இஞ்சி ரீ போட்டுத்தருகின்றேன் குடித்தாயானால் தலைவலி குறையும்.” என்று கூறி அவனை எழுப்பினாள்.
அவன் எழாது இருக்கவும், “அப்பப்பப்பா…. உன்னோடு பெரும் ரோதனையாகிப் போய் விட்டது.கொஞ்ச இடம் கொடுத்தால் மிச்ச இடத்தையும் நீயே பிடுங்கி விடுவாய் போலிருக்கிறதே.” என மறுபடியும் எழுப்பினாள்.
‘இவன் என்ன? நினைத்து கொண்டிருக்கின்றான் அவன் மனதில்’ என நினைத்த வண்ணம் கீழே குனிந்து அவனது முகத்தை திருப்பி பார்க்கவும்,அவனது மூச்சு சீராக இயங்கிக் கொண்டிருக்க அவன் அவளது மடியில் கவலைகளை மறந்து தூங்கும் மழலை போல உறங்கிக்கொண்டிருந்தான்.
அவளுக்கு மனதிற்குள் சங்கடமாய் இருந்தாலும் அவனை எழுப்ப மனமில்லாது, அவனை மடியிலே தூங்க வைத்தபடி மொட்டைமாடிச்சுவரில் சாய்ந்தவளது எண்ணங்கள் பின்னோக்கி ஓடியது.
‘இப்போது என் பின்னால் என்னை தேடித்தேடி வருகிறாய், என் மடி தான் தஞ்சம் என வந்து நிற்கின்றாய்,ஆனால் நான்,நீ வருவாய்,வருவாய் என எதிர்பார்த்துகிட்டே, பத்து நாளாக என் உயிரை கையில் பிடித்து கொண்டே,ஹொஸ்பிட்டலில் காத்து கிடந்தனே….. நீ வரவில்லை.அதன் பிறகும் என்னை தேடவில்லை. நீ என் வாழ்வில் இருக்கின்றாய் என்பதையே நான் மறந்து போய் என் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர நினைக்கின்றேன். நாய்க்குட்டி போல என் காலடியிலே கிடக்கின்றாயே…..! ஏன்டா நீயும் என்னை வைத்து நன்றாக வாழ மாட்டாய். என்னையும் நிம்மதியாக இருக்க விட மாட்டாய் என்றால் என்ன அர்த்தம் சொல்லுடா…..?’ என மடியில் கிடந்தவனை பார்த்து, மனதுக்குள்ளே பல கேள்விகளை கேட்டுக்கொண்டவளது கண்களில் இருந்து கண்ணீர் அத்து மீறி வழிய அதை துடைப்பதற்கு கூட தோன்றாமல்,தான் சாய்ந்திருந்த சுவரில் தலையை சாயத்த வண்ணம் அவளும் கண்ணயர்ந்தாள்.
நள்ளிரவு ஒரு மணியிருக்கும் அவன் தூக்கம் லேசாக கலையவும், அவன் கண்ணை திறந்து பார்த்தான்.முதலில் இடம் புரிபட மறுத்தாலும், கண்ணை நன்றாக விரித்து பார்த்தவன் தான் எங்கே இருக்கின்றேன் என புரிந்து கொண்டு அவளது மடியை விட்டு எழுந்து அவளருகிலேய சுவரில் சாயந்து கொண்டு,அவளை திரும்பி பாரத்தவன் அவள் அசந்து தூங்குவதனால் குரல் எழுப்பாது அவனது போனை எடுத்து நேரத்தை பார்த்து விட்டு,அவளை திரும்பி பார்க்கவும்,சுவரில் சாய்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளது தலை சரிந்து அவனது தோளில் வந்து விழுந்தது. கை அவனது நெஞ்சில் விழுந்தது.கிட்ட தட்ட அவர்கள் இருந்த ஆங்கிள் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அணைத்த வண்ணம் இருப்பது போலிருந்தது.
அவளை அருகில் நெருக்கமாக காணவும் அவனது உணர்வுகளும் கண்விழித்துக் கொண்டன.
‘நான் சொல்ல வந்தது என்ன? ஆனால் இங்கே என்னென்னமோ? நடந்து விடும் போல இருக்கின்றதே….!’ என மனதுக்குள் நினைத்தவன் அவளை தட்டி எழுப்புவதற்காய் கையெடுத்தவன் என்னவோ தோன்றவும் கையை மடக்கி விட்டு,குனிந்து அவளது முகத்தையே வெகு நேரமாக பர்த்துக்கொண்டிருந்தவன் எப்போது கண்ணயர்ந்தான் என அறியாத வண்ணம் மீண்டும் அவளை தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டு,இருவரும் நல்ல உறக்கத்தில் இருக்க அவள் இன்னும் வாகாக சரிந்து அவனது நெஞ்சில் முகத்தை வைத்துக் கொண்டாள்.
அதிகாலை நான்கு மணியிருக்கும் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த மொட்டைமாடி அருகில் நின்ற பெரிய வேப்பமரத்தில் குடியிருந்த காக்கைகள் விடியலை உணர்த்தும் வகையில் தமது குரல்களை எழுப்பவும் தூக்கம் கலைந்து எழுந்த செந்தூர் மணி பார்த்து விட்டு,அவளை பார்க்கவும், அவள் நல்ல உறக்கத்தில் இருக்கவும், அவன் அவளை மெதுவாக தட்டி “தியா தியா எழுந்திரு விடிந்து விட்டது.” என கூற அவள் தூக்க கலக்கத்துடன் அரைக்கண் விழித்து பார்த்து விட்டு “ என்னை தூக்கத்தில் கூட நிம்மதியாக விட மாட்டாயா? என வாய்பிணாத்தி விட்டு மறுபடியும் அவன் நெஞ்சில் தலையை வைத்து உறங்க ஆரம்பித்தாள்.
‘அவசரப்பட்டு எழுப்பி விட்டோமோ?’ என நினைத்தவன்,சிறிது நேரம் கழித்து மெதுவாக “தியா,தியா எழுந்திரு….. விடியப்போகின்றது.” என எழுப்பவும்,கண்ணை மூடிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தவள், இன்னும் அவளது போனில் செட் பண்ணி வைத்த அலாரம் இன்னும் அடிக்காததை உணர்ந்து, மறுபடியும் தூங்க முயற்சிக்கவும், அவளை வலு கட்டாயமாக கண்ணை திறக்க வைத்தான்.
அவன் அதற்கு அவளைப்பிடித்து உலுக்கியிருந்தான்.அவன் உலுக்கிய உலுக்கலில் முற்றாக தூக்கத்தை முடித்துக்கொண்டு கண்களை திறந்தவள் அதிர்ச்சியானாள்.
“டேய் நீ இங்கே என் மொட்டை மாடியில் என்ன? செய்கின்றாய்.”
“ம் எங்க வீட்டு மொட்டை மாடியில் வற்றல் காயப்போட இடமில்லை.அது தான் உன் வீட்டு மொட்டைமாடியில காயப்போடலாம்  என வந்தேன் என்றான்.”
என்ன? கிண்டலா?
கிண்டலுமில்லை? சுண்டலுமில்லை? என்றவன். “அம்மா….! தாயே….! நான் உன் மொட்டை மாடிக்கு உன்னுடன் ஒரு முக்கியமான விடயம் பேச வந்தேன்.நீ என்னை பேச விட்டால் தானே? நீ உடனே குஸ்தி போட்டியில் இறங்கி, என் மண்டையை பிளந்து
விட்டாய்.”
“ஆமாம் திருடன் போல வந்தால் அப்படித்தான்.” என்றவள், வந்தவன் அப்படியே விசயத்தை சொன்னாயா? அப்படியே தலைவலி தைலத்தை பூசி விட்டவுடன் பஞ்சு மெத்தையில் தூங்குவது போல  எண்ணிக்கொண்டு எங்கே? தூங்குகின்றோம் என்ற நினைப்பு கூட இல்லாமல் என் மடியிலே தூங்கினாயே……?
‘ஆயிரம் பஞ்சு மெத்தை போட்டு படுத்தாலும் இப்படியொரு தூக்கம் இனி அவனுக்கு கிட்டுமோ? என்னவோ…?’ என மனதிற்குள் நினைத்தவன். “தயவு செய்து உன் மடியினை பஞ்சு மெத்தைக்கு ஒப்பிடாதே….! அது எலும்புக்கூடு போலல்லவா? இருந்தது.
“அட ஆமான்டா….. தானம் கொடுக்கிற மாட்டுக்கு பல் இருக்கா? இல்லையா? என பார்க்கும் ஜென்மங்கள் இருக்கும் வரைக்கும் இந்த உலகமே உருப்படாது.என்றவள் நீ இதுவும் பேசுவாய் விட்டால் இதற்கு மேலும் பேசுவாய். இப்போதே நீ இங்கிருந்து கிளம்புகிறாயா?” எனக்கூறிக் கொண்டு அவள் எழுந்து தன் அறைக்குள் செல்ல அவனும் அவள் பின்னால் சென்றான்.
அவள் உள்ளே சென்று லைட் சுவிச்சை போட்டு அறைக்குள் வெளிச்சத்தை பரவவிட்டாள்
“ஏன் தியா ஒரு ரீ கிடைக்குமா?”
“என்ன? உனக்கு நான் தைலம் தடவி விட, ரீ போட்டுத்தர நான் வேலைக்காரியா? அதுக்கு நீ வேற ஆளை போய் பாரு.” என்றாள்.
“ஹலோ உன்னால தான் எனக்கு தலைவலி வந்தது. அப்ப நீ தான் ரீயும் தரனும்.” என்றான்.
“அப்போது நீ இன்னும் போகவில்லையா..?”
“அப்போது நீ ரீ போடவில்லையா….?”
“தலைவலி வந்து ஐந்தாறு மணித்தியாலத்திற்கு பிறகு இஞ்சிரீ குடித்து தலைவலியை ஓட்டுகின்ற ஆள் நீயாகத்தான் இருப்பாய்.இந்தா பிடி.” என அவள் போட்ட ரீயை அவன் கையில் வைத்தாள்.
இவ்வளவு கேவலமான உபசரிப்புடன் இதுவரை அவன் வீட்டிலோ, செல்லுமிடங்களிலோ நடத்தப்படவில்லை.எப்போதும் ராஜ மரியாதை தான். ஆனால் உபசரிப்புக்கள் கடமைக்காக இருக்கும். ஆனால் இங்கே கடமையுமில்லை கட்டாயமுமில்லை. அவள் உதாசீனத்தை அவன் இரசிக்கின்றான்.ஒருவேளை உலகத்தில் உள்ள கணவன் மார் எல்லோரதும் நிலமை இப்படித்தான் இருக்குமோ?
சரி நமக்கதுக்கு மற்ற குடும்பங்களை பற்றி ஆராய்ச்சி.
ரீயை வாங்கி அருந்திய பின் தான் அவனுக்கு  சோம்பல் முறிவது போலிருக்க அவளை கொஞ்சம் வம்புக்கிழுத்தான். “ஏன்? தியா…. எனக்கு பிசினஸ்சில கொஞ்சம் பிரச்சனையாக இருக்கிறது. நீ தானே உன்னிடம் நகை, பணம் எல்லாம் இருக்கின்றது என்று கூறினாேயே ஒரு கொஞ்சம் எனக்ககு தருகிறாயா? கடனாகத்தான் அப்புறம் வட்டியோடு திருப்பி தருகின்றேன்.” என்றான்.
அவன் ஏன்? அப்படிக் கேட்கின்றான் என அவளுக்கு புரிந்தது. இரவு மதில் ஏறி  குதித்து வந்தது அவன் என அறியாது, திருடன் என நினைத்து அவள் ‘பணம்,நகையை எடு என்னை ஒன்றும் பண்ணாதே’ என அவள் பதறியதை வைத்து இவன் கிண்டல் பண்ணுகிறானா? அவளின் பதட்டம் இவனுக்கு பம்பலாக இருக்கிறது. அவளின் மனதை புரிந்திருந்தால் அவன் அவளை ‘விட்டு விட்டு’ போயிருக்க மாட்டானே…..!
“என்னடா? என் பதட்டம் உனக்கு கிண்டலாக இருக்கிறதா…? உன்னிடமில்லாத பணத்தையா? என்னிடம் கேட்கின்றாய்.”
“இல்லடி நீ சொன்னதைப் பார்த்தால், வீட்டுக்குள்ளே ‘பெட்டி பெட்டியாய்’ பணமும் நகையும் வைத்திருக்கின்றாயோ? என நினைத்தேன்.”
“ம்…. அவ்வளவு பணமும், நகையும்  என்னிடம் இருந்தால் நான் எதற்காக உன்னிடம் கைகட்டி வேலை பார்க்க வேண்டும்.”
“பணம்,நகை என்று சும்மா தான் சொன்னாயா? தியா.”
“ஏன்? என் கழுத்தில், கையில், காதில் போட்டிருப்பதை பார்த்தால் நகை போல தெரியவில்லைேயோ? நேற்று வந்த சம்பளப் பணமும் காண்ட்பாக்கில தான் இருக்கு தெரியுமா?
“அ..ஆமாம் இது ரொம்ப பெரிய நகையும், பணமும் தான் போ.”
“உனக்கு வேணும் என்றால் சின்னதாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது உயர்ந்தது தான். அதனால் நீ ஓவரா பேசாதே சரியா?”
“நீங்க சொன்னால் அது சரி தான் மேடம்.” தன் கைகளால் வாயை பொத்தி பணிவு போல காட்டினான்.”
“உன் கிண்டலை உன்கூடவே வைத்துக் கொள். ம்…இவ்வளவு அடக்கமாக நீ ஆபிசில இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.எப்ப பார் எல்லா ஸ்ராபையும் கடுவன் பூனை போல முறைக்கிறாயாம் ஏன்? வரும்போதே சுடு நீரை உன் மேல் தெளித்துக் கொண்டு தான் வருவாயா?” என்று அவனை கேட்டாள் தியா.
“அதுவாடி, ஆபிசில் உன்னைக் கூப்பிட்டால் நீ தான் வரணும்.அதை விட்டு விட்டு உன் நண்பிகளை அனுப்பினால் அப்படித்தான் நடக்கும்.அதனால் இனிமேல் பார்த்து நடந்து கொள்.” என்றான்.
“அடப்பாவி…..! வேணும் என்று தான் இப்படி பண்ணுகிறாயா? நீ எல்லாம் உருப்படுவியா?” என்றாள்.
“ஏன்? என்னைப்பார்த்தால் உருப்பட்ட மாதிரி தெரியவில்லையா உனக்கு. அப்புறம் இன்னொரு விசயம் தியா.இனி உன்னை கூப்பிடும் போது நீ வராமல் உன் நண்பிகள் யாரவது ஃபைலை தூக்கிக் கொண்டு வந்தால் அப்புறம் நீ வருத்தப்படும் அளவிற்கு இருக்கும் உன் நிலைமை. அப்புறம் என்னை குற்றம் சொல்லாதே.”
“ஓ..ஓகோ அவ்வளவு பெரிய ஆளா நீ? அப்படி என்ன? செய்கின்றாய் என்று தான் பார்ப்போமே…! ஒரு வேளை தலையை கொய்து விடுவாயோ? அப்படி என்றால் பார்ப்போம். இனி என்னை கூப்பிட்டால் என் நண்பர்கள் தான் வருவார்கள். பார்ப்போமே உன் கெத்து எப்படி என்பதை.”
“சரி பார். இதனால் ஏற்படும் விளைவுகளிற்கு நீ தான் காரணம்.” என்றான்.
“டேய். திமிர் பிடிச்சவனாடா நீ.”
“இல்லடி திமிருக்கே என்னை பிடிக்கும்.”
“இன்றைக்கு உன் திமிர்பிடித்த முகத்தில் முழித்து விட்டேன் அல்லவா? உன்னோடு சேர்த்து இன்னும் எத்தனை பிரச்சனைகளை சமாளிக்க வேண்டுமோ? தெரியவில்லையே…”
“அதுக்கு ஈஸியான வழி இருக்கிறது தியா.”
“என்ன?”
“அப்படிக்கேள்.என்னை சமாளிக்க பழகு.அப்புறம் பிரச்சனைகளை சமாளிக்க பழகி விடுவாய்.”
“கருங்கல்லில் தலையை கொண்டு போய் மோதுவதும்,உன்னை சமாளிப்பதும் ஒன்று தான்.அது என்னால்  முடியாத காரியம்.” என்றாள்.
“ஏன்? முடியாது என்கிறாய். நீ உளியாக மாறினால் என்னை செதுக்க உன்னால் முடியும் தானே….!”
“நான் உளியாகவும், மாறவில்லை கிளியாகவும் மாறவில்லை.உன்னோடு தெரியாதனமாக கதைத்து விட்டேன்.இப்போதாவது கிளம்புகின்றாயா?”
“என்னை விரட்டுவதிலே குறியாய் இருடி.”
“ஐயா சாமி….. தெய்வமே…! வேண்டுமானால் நீங்கள் இங்கேயே இருங்கள்.நான் வேண்டுமானால் இந்த வீட்டை காலி பண்ணிக்கொண்டு போகட்டுமா?” என்றாள்.
அவள் துடுக்கு தனத்தை ரசித்தவன் “சரி காலி பண்ணிக் கொண்டு என்னோடு என் வீட்டுக்கு வா.”
என்றான்.
“போகிறவர்,வருகின்றவர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் உன் வீட்டில் தங்க வைக்க வீடா? சத்திரமா?” என்றாள்.
“எனக்கு மாளிகை, உனக்கு அந்தப்புரம்.”என்றான்.
“அப்படியா….! உன் அந்தப்புரத்தில் இது வரைக்கும் எத்தனை ராணிகள் இருக்கிறார்களாம்.”
“இதுவரையும் ராணியுமில்லை,பேணியுமில்லை.நீ வருகின்றாய் என்றால் சொல்லு? நீ மட்டும் தான்.இல்லை என்றால் அது வெறும் மாளிகையாவே இருந்து விட்டு போகட்டும்.” என்றான்.
“ஓகே நீ உன் மாளிகையிலேயே ஒற்றை ராஜாவாக இரு. இப்போது நீ கிளம்புகிறாயா? எனக்கு நிறையவேலை இருக்கிறது”.என்றாள்.
“சரி உன்னை மறுபடியும் எப்போது சந்திக்கலாம் என்று சொல்லு போகின்றேன்.” என்றான்.
“நீ என்னை கேட்டு தான் ஒவ்வொரு தடவையும் மதில் ஏறி குதித்து வருகின்றாயா.?”
“ஓ…. அப்பச்சரி. நான் கிளம்புகின்றேன்.”என்றவன் கப்பை வைத்து விட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி மதில் பாய்ந்து வெளியே சென்றான்.

Advertisement