Advertisement

Episode 13
வீட்டுக்குள்ளே  உறக்கம் வராது ‘புரண்டு புரண்டு’,படுத்தும் தூக்கம் வராது எழுந்து உட்கார்ந்து இருட்டை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்த தியாவின் மனம் ‘படபட’ என்று இருந்தது.மறுபடியும் அவள் வாழ்வில் ஏதோ குழப்பம் நடைபெறப்போவது போல இருந்தது. செந்தூர் அவளது வாழ்வில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடுமோ? என நினைத்து அவள் மனம் நிலை கொள்ளாது தவித்தது.
அவன் வைத்தியசாலையில் அவளுக்கு செய்தது,மனிதாபிமானம் உள்ள எவரும் செய்வதே….! ஆயினும் மதில் பாய்ந்து அவளை பார்க்க அவனது அண்ணாவை கூட்டிக்கொண்டு வருவதும்,அவளுக்கு உணவு கொண்டு அவனுடைய அண்ணியார் வருவதும் தான் அவளுக்கு உள்ளூர உதைப்பாக இருந்தது. அவளது வீட்டுக்காரம்மா அவளை ஏதாவது விசாரித்தால், அவள் என்ன? சொல்லி சமாளிப்பது, வேறு யாராவது அவளது அறைக்கு, அவன் மதில் பாய்ந்து வருவதனை பார்த்தால் தவறாக நினைக்ககூடும். ஏற்கனவே அவளுக்கு குடும்ப வாழ்க்கை என்பது இல்லை. இனி இருக்கும் காலத்தை மானம்,மரியாதையோடு கழிக்கலாம் என்றால் இவன் விட மாட்டான் போலிருக்கிறதே….!
இவன் செயற்பாடுகளில் குறை கூற முடியாது. ஆனால் இவன் பார்வை அவளை ஆழ் மனது வரை சென்று உதைக்கிறதே…..!’ என பல யோசனைகட்கு மத்தியிலும் தனது மனதின் கேள்விகட்கு தன்னிடம் எந்த விடையுமில்லாது கண்களை மூடிக்கொண்டவள், தன்னை மீறி தனது மானம், மரியாதை,சுயகௌரவம் இழக்கப்படுமெனில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியது தான் என மனதுக்கள்ளே நினைத்தவள் அன்புக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தையை போல சுருண்டு கிடந்தவளுக்கு ஆதரவாக சாய்ந்து கொள்ள ஒரு நெஞ்சம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அந்த கொடுப்பினை தான அவளுக்கு இல்லையே…….!
அன்று வழமைக்கு மாறாக அவனது இதயம் எகிறிக்குதித்து ரெரஸ் வழியாக அவள் றூம் வாசல் வரை சென்று நின்று குதித்து கும்மாளமிட்டது.  என்றுமில்லாத இந்த உணர்வு கூட இன்பமாக இருக்கின்றதே…….! இந்த நிலை அப்படியே இருந்து விடாதா? என நினைத்த செந்தூருக்கு உள்ளூர உற்சாகம் குமிழியிட்டது.
இவனை எங்கேயோ பார்த்தது போல நினைவு இருக்கின்றது. ஆனால் எவ்வளவு யோசித்தும் தியாவினால் நினைவு படுத்த முடியவில்லை தலைவலி வந்தது தான் மிச்சம். எனவே அவளும் இனிமேல் அவனுடன் தேவையில்லாமல் சகவாசம் வைத்தக்கொள்ள கூடாது என தனக்குள்ளே ஒரு சபதத்தை போட்டுக் கொண்டாள்.
‘விதியது கொடியது’ என்ற வார்த்தைக்கிணங்க  செந்தூரையும், அண்ணியாரையும் காலையில் அந்த வழியாக காரினில் ஒரு முக்கியமான அலுவலாக  வந்த செந்தூரின் அக்கா கவிமதி அவர்களை கண்டவள் அவசர வேலை என்பதனால் என்ன? விடயமாக இங்கே நிற்கிறார்கள் என்று விசாரிக்க முடியவில்லை.இப்போது எல்லா வேலையும் முடிந்து மறுபடியும் அதே வீதியால் வரும் போது காலையில் கண்ட காட்சி நினைவு வர என்ன விடயமாக இருக்கும்.ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? என நினைத்து மனதை  குழப்பிக்கொண்டவள், ‘சரி வீட்டுக்கு போய் என்ன விசயம் என கேட்போம்.’ என காரை வேகமாக வீட்டை நோக்கி செலுத்தினாள்.
வீட்டுக்குள்ளே நுழைந்து காரை நிறுத்திய கவிமதி நேரடியாக  அருகிலுள்ள தாய் வீட்டுக்கு சென்றவள், உள்ளே நுழையவும், அவர்களது நடு ஹோலில் உள்ள ஷோபாவில்  உட்கார்ந்து ரிவி சனல்களை ‘மாற்றி மாற்றி’ பார்த்துக் கொண்டிருந்த செந்தூர் தமக்கையின் கண்களில் தென்பட ‘விறுவிறு’ என சென்று அவனருகில் அமர்ந்தாள்.
அவனருகே அசைவை உணர்ந்தவன், நிமிர்ந்து பார்த்து விட்டு புன்னகையுடன் “வா அக்கா” என்றான்.
அவளும் சுற்றி வளைக்காது “என்ன? தம்பி இன்று காலை உன்னை நமது வீட்டுக்கு பின் வீதியில் பார்த்தேன்.கூட அண்ணியும் நிற்பதை பார்த்தேன். ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.
“அப்படியா?”
“நான் என்ன? கேட்கிறேன் நீ என்னவோ ஊர் புதினம் விசாரிப்பது போல் அப்படியா? நொப்படியா? என்றால் என்ன? அர்த்தம்டா?” என்றாள் தமக்கை.
“சரி அக்கா கோபப்படாதே…..! ஒரு அலுவலாக அங்கே போனது உண்மை தான்.” என்றான்.
என்னடா? ஏதும் பிரச்சனையா? அண்ணியும் வந்திருந்தாரே.” என்றாள்.
இவ என்ன? மாட்டர் என்று அறியாமல் விடமாட்டா போல என நினைத்த வண்ணம். “அது அண்ணிக்கு தெரிந்தவர்கள் வீடு அவர்கள் அண்ணா இல்லாத காரணத்தால், என்னை கூட்டிக்கொண்டு போய் விடச்சொன்னார்கள்.” என்றான்.
“ஓஓ அவ்வளவு தானா நானும் என்னவோ பிரச்சனை என்று நினைத்தேன்.” என்றவள் குனிந்து கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு “நேரமாகிறது அத்தான்  வந்திருப்பார்.” என்று கிளம்பினாள்.
‘கேட்க வந்த விடயத்தை கேட்டு முடித்தாயிற்று. அதனால் கிளம்புகிறாள்.இல்லை என்றால் இரவானாலும் கிளம்ப மாட்டாள்.’என நினைத்தவன் நினைத்த எதையும் சொல்லாது, “சரி அக்கா வா நானும் உன்னோடு உன் வீட்டுக்கு வந்து பிள்ளைகளையும், அத்தானையும் பாரத்து விட்டு செல்கின்றேன்.” என்று கூறிக்கொண்டு கொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தமக்கையை பார்த்தான்.
“டேய்…. தம்பி….. நிஜமாய்த்தான் சொல்கிறாயா?” என்றவள் அவனின் கையை கிள்ளினாள்.
“ஏய்….அக்கா…. ஏன்டி கிள்ளுகின்றாய்.
வலிக்கிறது.”என்று கையை தடவினான்.
“உனக்கு வலிக்கிறது என்றால் என் வீட்டுக்கு வரப்போகின்றாய் என்று நீ சொன்னது நிஜம் தான்.” என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்.
“அதுக்கு என்னை ஏன்? கிள்ளுவான். உன் கையை கிள்ள வேண்டியது தானே…..”
“அது எனக்கு வலிக்கும்” என்ற தமக்கையின் தலையில் செல்லமாக தட்டியவன, “சரி வா போகலாம்” என அவளையும் அழைத்துக் கொண்டு தமக்கையின் வீட்டுக்கு சென்றான்.இரண்டு பேரும் வீட்டுக்குள்ளே நுழையும் போதே கவியின் கணவன் திலீபன் இருவரையும் எதிர்க்கொண்டவன் செந்தூரை இறுக அணைத்து “வா மச்சான் என்னடா ரொம்ப பிசியா இருக்கிறாய் போல ஆளை கண்ணில் காண முடியவில்லையே” என திலீபன் கூறிக்கொண்டு செந்தூரை அழைத்துச் சென்று ஷோபாவில் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தனர்.
“சரி நீங்க இரண்டு பேரும் பேசிக்கொண்டிருங்கள் நான் போய் ரீ போட்டுக்கொண்டு வருகின்றேன்.” என அவரகளது பதிலை எதிர் பாராது  சமயலறைக்கு சென்று மறைந்தாள்.
“ஏன் மச்சான் நான் கட்டிக்கிட்ட கொடுமைக்கு உன் அக்கா போடுகின்ற ரீயை ஒவ்வொரு நாளும் குடிக்கின்றேன்……. நீ கூட பிறந்த பாவத்திற்கு இன்று என் கஸ்ரத்தில் பங்கெடுத்து கொள்ளுடா……!” என்ற அத்தானை பாரத்து சிரித்துக் கொண்ட செந்தூர், “ஏன் அத்தான் இந்த விசயம் அக்காவிற்கு தெரியுமா? இல்லை தெரியப்படுத்த வேணுமா?” என்றான்.
அடப்போடா……! அவளுக்கே அது தெரியும். இருந்தாலும் இஸ்ரப்பட்டு கஸ்ரப்படுகின்றேன்டா…!” என்றான் திலீபன்.
“நீங்க உங்க பொண்டாட்டியை விட்டுக்கொடுக்க மாட்டீர்களே…. அத்தான்.இப்படி அக்காவை மற்றவர்கள் முன்னிலையில் பேசுகிறது நியாயம் தான்…. ஆனால் என் முன்னாடியே ஏன்…..? அத்தான்.அக்காவைப்பற்றி எனக்கு தெரியாதா….? அஆஆ….. கண்டு பிடித்துவிட்டேன்.அக்காவை பற்றி புகழ்ந்து பேசவில்லை என்றால் அக்கா உங்களை உள்ளே கூட்டிச்சென்று ஊமைக்குத்தாய் குத்துவாளோ?”
“ஆமாண்டா…. அவளை கல்யாணம் பண்ணி வரும் போதே அவளிற்கு ரெயினிங் கொடுத்து அனுப்பிய குடும்பமடா….. உங்கள் குடும்பம்.என சிரித்த திலீப், ஆமாம் மச்சான் உன் பொண்டாட்டி கூட உன் அக்காக்கு சளைத்தவள் இல்லை போலவே….. உன் கையை கண்ணாடி கிளாசால பதம் பார்த்துட்டா போல……”
செந்தூர் சமையல்கட்டை எச்சரிக்கையுடன் பாரக்கவும்
“டோன்ட் வொறி மச்சான் விடயம் எனக்கு மட்டும் தான் தெரியும்.உன் அக்காக்கு தெரியாது.” என்றான் திலீபன்.
“எல்லா விடயமும் உடனுக்குடன் அப்டேற் ஆகிவிடும் போல.” என்ற செந்தூரைப்பார்த்து புன்னகைத்த திலீபன் “ஆல் டீற்ரெயில் ஐ நோ மச்சான். என்றவன் என்ன? செந்தூர் நடு ராத்திரியில் மதில் பாயுற அளவிற்கு உன் காதல் முத்திடுச்சா….. அதுக்கும் உன் அண்ணனை காவலுக்கு கூட்டிக்கொண்டு போய் கால் கடுக்க நிற்க வைத்தாயாம் என்று நடந்த விசயங்களை சொல்லி கழுவி ஊற்றிய அத்தான்காரன் டேய்….. மச்சான்….. அடுத்து உன் லவ் பிளானுக்கு நான் தான் பலிக்கடாவாடா…..?” எனக் கேட்டான்.
“கட்டாயம் அத்தான் எனக்காக உங்கள் ரைமை அலக்கேட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சேவை எனக்கு தேவை அத்தான்…” என்றவனது முதுகில் பொத் என்று விழுந்த தலையணையை கீழே விழவிடாதவாறு பிடித்த வண்ணம் ஸ்ரைலாக சிரித்தான் செந்தூர்.
“இந்தச் சிரிப்பால தான் பொண்ணுங்க எல்லோரும் உன் பின்னால் நான் நீ என்று போட்டி போட்டுக்கிட்டு வர்றாங்க போல…. ஆனா நீ பிடி கொடுக்காமல் எஸ்கேப் ஆகிடுறியே மச்சான். நீ ஓகே என்று சொன்னால் உன் அக்காவே ஒரு தொகை பொண்ணுங்களை லிஸ்ற் போட்டு வைச்சிருக்கா? எல்லாரையும் லைன்ல நிற்க வைத்து விடுவாள். ஆனால் நீ தியா தான் உன் லைஃப் என்று பிக்ஸ்ட் ஆகியது மட்டும் தெரிஞ்சுது என்று வை மச்சான் அப்புறம் உன் டப்பா டான்ஸ் ஆடிடும் பரவாயில்லையா? ஏன்டா உங்க அக்கா எல்லா விடயத்திலும் தேவதையாக இருக்கிறாள். பட் தியா பற்றி தெரிந்தால் என்ன கெட்அப் சேஞ் பண்ணி எந்த புளிய மரத்து மேல் ஏறுவாளோ…..! தெரியல்லியே என்று புலம்பிய திலீபனை பார்த்து “அது உங்களது பிரச்சனை அத்தான் அக்காவை அடக்கி வைக்கிறது உங்க பொறுப்பு.” என்றான்.
“என்னடா என்னை பேயோட்ட சொல்லுகிறாயாடா?”
“என்ன? அத்தான் என் அக்காவை என் முன்னாலேயே பேய் என்கிறீர்களா? இருங்கள் அக்காவிடம் போட்டுக்கொடுக்கின்றேன் என்றவன் சமயலறையை நோக்கி  அக்கா,அக்கா” என்று கூப்பிட்டான்.
“நன்றாக கூப்பிடு என்ற திலீப் என்ன? மச்சான் என் உதவி உனக்கு வேண்டாமா?” எனவும், தமக்கையும் “என்னடா கூப்பிட்டியா?” என சமயலறையில் இருந்து குரல் கேட்கவும், அது தான் உன் அக்கா கேட்கிறா பதிலைச் சொல்லுடா.என் பாசக்கார மச்சான்” என அவன் சிரித்தான்.
“ஒன்றுமில்லை அக்கா என்றவன்,அத்தானைப்பார்த்து ஐயா சாமி ஆளை விடுங்கள் என தலையில் அடித்துக் கொண்ட செந்தூர் சரியான லூசுக்குடும்பத்திடம் வந்து நானாக மாட்டிக் கொண்டு விட்டேனே…..! என வாய் விட்டு புலம்பியவன்.நான் கிளம்புகின்றேன் அக்கா.” என கூறிக்கொண்டெழுந்தவன் வழியை ரீக்கப்புகளுடனான ஒரு கை வழி மறித்தது.நிமிர்ந்து அவன் பார்க்கவும் தமக்கை ரீயுடன் நின்றிருந்தாள்.
“என்னடா ரீ போடுகிறேன் என்று சொல்லி விட்டுத்தானே போனேன். அதற்குள்ளே நீ கிளம்பினால் என்ன? அர்த்தம்? இந்தா ரீயை எடு என்றவள்,உட்கார்ந்து குடி.” என பணித்து விட்டு கணவனுக்கும் கொடுத்தாள்.
“ரீயை கையில் வைத்து அழகு பார்த்தது போதும் மச்சான். உன் அக்கா உனக்காக போட்டதாலோ என்னவோ? வழமையை விட நல்லாவே ரீ போட்டிருப்பா…… அதனால் பயப்படாமல் ரீ குடி.” என்றான் திலீபன்.
ரீயை வாயில் வைத்தவன் நாக்கு பயங்கர சூட்டினால் வெந்து போயிற்று.அவனது முகம் மாறிய வேகத்தை கவனித்த திலீப் “என்னடா என்னாச்சு உன் முகமே சரியில்லையே என வினவும், நாக்கு வெந்ததன் காரணத்தால் செந்தூருக்கு கண்களும்  கலங்கியது. அவன் பதில் சொல்ல தடுமாறவும், டேய்…. மச்சான் செந்தூர்…. என்றவாறு அவன் முகத்தை பார்க்க செந்தூர் அவன் கைகளால் வாயை மூடியிருந்தான்.
“ஏய்…. கவி கவி…. சீக்கிரமாக வா.” என திலீப் கத்திய வேகத்தில் சமயலறையில் இருந்து ஓடி வந்த கவி “என்ன திலீப் என்னாச்சு…” என்றவளை முறைத்தவன் “போ போய் ஐஸ்கியூபை எடுத்துக்கொண்டு சீக்கிரமாக வாடி…..” என்று கத்தின கத்தலில் அவள் ஓடிப்போய் ஐஸ்கியூபை எடுத்து வந்தாள்.
“சிறிய ஐஸ்கட்டியை எடுத்து நாக்கில் வை மச்சான்.” என  திலீப் ஐஸ்கட்டிகளை கொடுத்தான். அதை வாங்கி செந்தூர் நாக்கில் வைக்க நாக்கு சூட்டில் வெந்து போயிருந்ததால் ஐசைக்கூட உணரமுடியாது நாக்கு மரத்து போயிருந்தது.தமக்கையை முறைத்தவன் ‘இப்படித்தான் அத்தானுக்கு தினமும் ரீ போட்டுக் கொடுத்து கொல்லுகிறாயா? ராட்சசி.’ என பார்வையால் கேட்டவன் எழுந்து தமக்கையின் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு தான் போவதாக சொல்லி சைகை செய்து விட்டு, ‘நீ போட்டுக் கொடுத்த ரீக்கு கோடி நன்றி’ என சைகை செய்து  தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டவன் வீட்டை விட்டு வெளியேறினான்.
வீட்டுக்குள் வந்தவன் வாயை திறக்காது றூமிற்குள் போய் விழுந்தான். ‘அக்காவாடி நீ.ஒரு ரீ மனுசன் குடிக்கிற மாதிரி போடத் தெரியவில்லை. பத்து வருசமாக என்னத்தை குடும்பம் நடாத்துகிறாளோ? இவளுக்கு தியாவே பரவாயில்லை.’ என தமக்கையை மனதுக்குள் திட்டிக்கொண்டான். வாயை திறக்க முடியாது வலித்தது.வலியால் இரவு முழுவதும் தூக்கமில்லாது தவித்தவன் எப்போது தூங்கினான் என்றே தெரியாதவாறு தூங்கிக் கொண்டிருந்தவனை வழமையான அலாரம் விடாது அடித்தெழுப்பியது. ‘ச்சை… கருமம் இது வேற’ என நினைத்துக்கொண்டு, கண்ணை மூடியவாறு மணிக்கூட்டின் தலையை தட்டினான்.அது தனது சத்தத்தை நிறத்தவும் அவன் புரண்டு படுத்தவன் தூங்கி விட்டான்.
ஆறு மணியளவில் தனது தூக்கம் கலையவும்,எழுந்து உட்கார்ந்த தியா தனது காலை ப்ரேயரை மனதுக்குள் முடித்துக் கொண்டவள்,எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு குளித்து ரெடியாகி வந்தவள், தனது கையிலிருந்த கட்டை அவிழ்த்தவள் தனது கைக்கு மறுபடி பன்டேஜை கட்ட முடியாது காயத்தை பார்த்துக் கொண்டிருக்கவும்,அவளது அறைக்கதவு தட்டப்பட எழுந்து சென்று கதவை திறக்கவும்,வெளியே செந்தூரின் அண்ணி கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாள்.
“உள்ளே வாருங்கள் அக்கா” என்றவள் வழிவிட்டு தள்ளி நின்றாள்.
உள்ளே வந்த சிந்துஜா “இப்போது எப்படி இருக்கின்றது. என் செல்ல தங்கையின் உடல் நிலை” என்றாள்.
“ம்ம்….இப்போது வலி குறைந்து விட்டது. காயம் தான் ஆறுவதற்கு கொஞ்ச நாளாகும் என நினைக்கிறேன் அக்கா. என்று புன்னகைத்தவவள், என்னக்கா இன்றும் இந்த தடிமாடு உங்களை அனுப்பி விட்டு வெளியே  நிற்கிறதா?என்றாள்.
“இல்லை காலையிலே  அவன் அண்ணணுக்கு ஃபோன் பண்ணி சொல்லியாச்சு…..” அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என முதல் நாள் நடந்த விடயங்களை கூற அவள் சிரித்து விட்டு, “ஏன் அக்கா இவன் முன்னே,பின்னே ரீயை காணதவனா? மாடு களணித்தண்ணியை குடிக்கிற மாதிரி குடிச்சா அப்படித்தான் இருக்கும்.” என்றவள் சிரிப்பை நிறுத்தவில்லை.
“ஏய் உலக வாயாடி…. என் மச்சினனையே குறை சொல்லுகிறாயா?” என காதை பிடித்து திருகிய சிந்துவிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சரி சரி நான் ஒன்றும் உங்கள் மச்சினனை  குறை சொல்லவில்லை.ஆனால் என்னுடைய பாஸ் செந்தூரைப்பற்றி பேசுகின்றேன்.” என்றாள்.
“அது சரி அக்கா அவருக்கு நாக்கு ரொம்ப வெந்து போய்விட்டதா?”
“இப்போது தான் ஏதேதா சொல்லி அவனை கிண்டல் பண்ணினாய். அதற்குள் இந்த கரிசனம் எங்கிருந்து வந்ததது.நான் ஒரு தகவலும் சொல்லுவதற்கில்லை.வேணும் என்றால் நீயே அவனைக்கேட்டு தெரிந்து கொள்.”என்றாள் சிந்து.
“ஹஹ…. நான்….. அவனை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமா?அதற்கு வாய்ப்பே இல்லை. நான் சும்மா தகவல் அறியத்தான் கேட்டேன்.மற்றபடி ஒன்றும் அவசியமில்லை.” எனக் கூறி சமாளித்தாள்.
“தியா…. நீ சொன்னது உண்மை என்று நான் நம்பீட்டன்….. இப்போது  வா சாப்பிடலாம்.”
“நீங்க நம்பினால் நம்புங்கள்.இல்லையென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.” எனக் கூறிக்கொண்டு,சிந்து அருகில் அமர்ந்தவள் அவள் கொடுத்த உணவை வாங்கி உண்ணத்தொடங்கினாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிந்துவிற்க ‘இவ நம்ம செந்தூருக்கு பொருத்தமாக இருப்பா இரண்டு பேருக்கும் செம ஜோடிப்பொருத்தம்.” என  தன் மனதிற்குள்ளே கற்பனைக்கோட்டை ஒன்றை கட்டி விட்டாள்.
“என்னக்கா என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என் முகத்தில் ஏதாவது ஒட்டிக் கொண்டுள்ளதா?” என கேட்டுக் கொண்டே முகத்தை கையால் தடவிப்பார்த்துக் கொண்டாள்.
நான்  ஒரு கேள்வி கேட்கின்றன்.உன் மனதிலுள்ளதை மறைக்காமல் சொல்ல வேண்டும் என்றாள் சிந்து.
சிந்து என்ன? கேட்கப் போகின்றாள்……!
தியாவின்  பதில் என்னவாக இருக்கும்….!
தியா,சிந்து உறவு நிலைக்குமா?

Advertisement