Advertisement

மலர் 16
தன்னுடைய அறைக்குள் சென்று அலமாரியை திறந்தவள் ஜிம்முக்கு  ஏதுவான உடைகள் இருக்கின்றதா என கண்களை ஓடவிட்டவள் கறுப்பு நிற லெகீன்சையும், கட்டையாக இருந்த சாக்லேட் நிற ரொப் ஒன்றையும் எடுத்து வைத்து வைத்து விட்டு தூங்குவதற்கு சென்றாள். 
அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கவும் அதனை நிறுத்திவிட்டு ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றவளை பத்து நிமிடம் கழித்து இன்னுமொரு அலாரம் அடித்து தூக்கத்தை குழப்பவும் எழுந்து அமர்ந்தாள். 
‘தெரியாத்தனமாக ஜிம்முக்கு போகின்றேன் என அப்பாவிடம் கதை விட்டிருக்ககூடாதோ… ! தூக்கம் ஆளை சுழற்றி அடிக்கின்றதே…! பேசாமல் தூங்குவோமா…? என நினைத்து விட்டு, மது அக்கா வேற கூட்டிக்கொண்டு போக வருவதாக சொன்னார்கள்…  எதுக்கும் ஆயத்தமாகி நிற்போம்… ‘ என ஒருவாறு கிளம்பி கீழே வந்தாள். 
கீழே வந்து தந்தையின் அறையை எட்டிப்பார்த்தாள் அவரைக்காணவில்லை எனவும் திக்கென்றது. வெளிக்கதவு திறந்து இருக்கவும் வெளியே போய் எட்டிப்பார்க்கவும்… தந்தை வாக்கிங் பேய் விட்டு அவசரமாக வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது. 
தந்தை அருகில் போனவள் “அப்பா சீக்கிரமாக வந்துவிட்டீர்களே… “
“உன்னை எழுப்பி விடச்சொல்லியிருந்தாய். அதை மறந்து நான் வாக்கிங் போய்விட்டேன். இடையில் தான் ஞாபகம் வந்தது. அது தான் திரும்பி வந்தேன். ஆனால் நீயாகவே கிளம்பி நிற்கின்றாய். நல்லது தான். பணம் எடுத்து வைத்துக்கொண்டாயா… ? நித்யா. “
“பணமா…? எதற்கு …?”
“சும்மா விடுகின்றார்களா ஜிம்முக்கு… பணம் கட்ட வேண்டாமா… ?”
“அட…. ஆமாமில்ல… எனக்கு அப்படியொரு நினைப்பே வரவில்லை…  பாருங்கள் அப்பா… ” என்றவாறு உள்ளே போய் பணத்தை எடுத்துக்கொண்டு வரவும் மதுவும் அவர்களது வீட்டுக்கு முன்னால் வந்து அவளை கூப்பிடவும் “சரி பாய் அப்பா” என்றவாறு கிளம்பினாள்.
“பார்த்து பத்திரமாக போய்விட்டு வாருங்கள்.” என்ற தகப்பன் பார்த்து தலையாட்டி விட்டு அவள் வெளியே சென்றாள். 
வெளியே வந்தவள் சுற்றி முற்றி திரும்பி பார்த்தாள். 
“என்ன?  பார்க்கிறாய் நித்யா… உன்னுடன் வேறு யாரும் வர வேண்டுமா… ?” என மது விசாரிக்கவும் இல்லை என்பது போல் தலையாட்டியவள் ” உங்கள் பைக் எங்கே கொண்டு வரவில்லையா… ” என்றாள். 
“இல்லை…  பைக் எதுக்கு… ?  பிட்நெஸ் பண்ணதானே போகின்றோம் நடக்கிறதும் உடற்பயிற்சி தான், அதனால் நடந்தே போகலாம் வா. பதினைந்து நிமிட நடை அப்படியே… பேசிக்கொண்டே போனால் நடப்பதே தெரியாது… ? வா போகலாம்.” என்றவாறு நடக்க தொடங்கினர் இருவரும். 
அங்கே சென்று பணத்தை கட்டிவிட்டு றிசீப்ட் பெறுவதற்காக இருவரும் ரிசப்ஷன் அருகில் நின்றனர். 
“மதுக்கா… ஜிம்காரன் கொள்ளை விலை எடுக்கின்றான். இவன் வாங்கும் பணத்திற்கு என்னை மூன்று மாதத்திற்குள் பதினைந்து கிலோவாச்சும் குறைக்கின்ற மாதிரி பண்ணி விடனும் அப்போது தான் நான் கொடுத்த காசு இந்த ஜிம்காரன் கையில் நிற்கும்… “
“முந்தியொருகாலத்தில சாப்பாட்டுக்கு செலவு செஞ்சாங்க…  இப்ப என்னடா என்றால் உடம்பை குறைப்பதற்கு செலவு பண்ண வேண்டியதாக இருக்கே… “
அவர்களது கதையை காதில் வாங்கியவாறே… பில்லை கொடுத்த பெண் 
“மேடம் இது இந்த மாதத்திற்குரிய பில். அடுத்த மாத பில்லையும் இதே திகதியில் லேட் பண்ணாமல் கட்டிவிடுங்கள். இனிமேல் நீங்கள் உங்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு போகலாம்.” என்றாள். 
“சரி வா நித்யா…  நாம் உள்ளே போகலாம்.” என்றவாறு அவளை மது உள்ளே இழுத்துக்கொண்டு சென்றாள். 
உள்ளே சென்றவள் அசந்து போய் நின்றாள்.ஏனெனில் அந்த இடம் அவ்வளவு அற்புதமாக இருந்தது.விதவிதமான இயந்திரங்கள் இவை அனைத்தும் உடற்பயிற்சிக்காக இருப்பவையா…! நூறுக்கு மேற்பட்ட இயந்திரங்கள் இருந்தன அதுமட்டுமா…? பளுத்தூக்கும் இயந்திரம், வெயிட் பார், டம்புல்ஸ் என ஒவ்வொரு வகையிலும்,ஒவ்வொரு சைசுகளில் இருந்தது. அது மட்டுமல்லாது யோகா ஒரு இடத்திலும், சால்சா நடனம் ஒரு இடத்திலும் என நடைபெற்றுக்கொண்டிருந்தது. அது மட்டுமல்லாது ஆண்களுக்கு தனியாக பெண்களுக்கு தனியாக என எல்லா செயற்பாடுகளும் நடைபெற்றதோடு,  ட்ரெயனர்சும் இரு பாலாருக்கும் என தனித்தனியே இருந்தார்கள். 
இந்த ஜிம்மை அமைத்தவன் இரத்தம், நாடி,  சதை எல்லாவற்றிலும் பிட்நெஸ் ஊறிப்போனவனாக தான் இருக்க வேண்டும்… அவனுக்கு இன்றிலிருந்து நான் விசிறி என மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 
அந்த ஜிம்மில் இருக்கும் காப்பெட்டில் இருந்து,  ஜன்னல் திரை வரை அத்தனையும் ரசிக்கும் வகையில் இருந்தது. இவள் அந்த இடத்தை சுற்றிப்பார்த்து வாயை பிளந்த படியே… “அக்கா… இந்த இடம் செமையா இருக்கு. ஐ லைக் பிளேஸ்…  இதை வடிவமைத்தவன் பெரிய ரசிகனா தான் இருக்கணும். வந்தா இப்படி ஒரு ஜிம்முக்கு தான் வரணும்…” என்றாள். 
“சரி நித்யா… அப்புறம் இதை பற்றி பேசலாம் வா கோச் கிட்ட போய் உன்னை அவங்களுக்கு இன்ரோ… பண்ணி விடுகின்றேன்.” என்று கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தி விட்டு தான் வழமையாக செய்யும் மிஷின் அருகில் போகின்றேன். போகும் போது ஜொயின் பண்ணலாம் என்றவாறு கோச் நிர்மலாவிடம் அவளை ஒப்படைத்து விட்டு சென்றாள். 
அவளை புன்முறவலோடு பார்த்த கோச் “உன் பெயர் நித்யா தானே… “
“ஆமாம் கோச்…”
“வா வெயிட் பார்க்கலாம்…” என்றவாறு அவளை வெயிட் பார்க்கும் மிஷின் அருகில் கூட்டிச்சென்று மேலே ஏறச்சொல்லி வெயிட் பார்த்தார். அது அறுபத்துநான்கை காட்டியது. 
அவர் அவளைப்பார்த்து “ஏன் திடீரென்று வெயிட்லாஸ் பண்ண காரணம் என்ன?  தெரிந்து கொள்ளலாமா… ?”
“அது கிண்டல் பண்றாங்க கோச்…”
அவர் நம்பாத பார்வை பார்க்க “சத்தியம் கோச்…  குண்டுபூசணிக்கா…, சோத்துமூட்டை…,  எந்தக்கடை அரிசி என்று… இன்னும் நிறைய…. கஸ்ரமாக இருக்காதா… நீங்களே சொல்லுங்க கோச்…” என்றாள். 
“ம்… நீ வருத்தப்படும் அளவிற்கு அவ்வளவு அசிங்கமாக இல்லையே… அப்புறம் உன் இஷ்டம். ” 
“இல்லை கோச் நான் நிச்சயமாக இருபது கிலோ குறைந்து ஸ்லிம்மாக வேண்டும். அதுக்கு நீங்க ஹெல்ப் பண்றீங்களா…? கோச் என்றாள். கெஞ்சல் பார்வையுடன். “
“இதுக்கு நான் ஹெல்ப் பண்ணுவது விட நீ தான் இதுக்கு ஒத்துழைக்க வேண்டும். நீ என்னை ப்ளீஸ் பண்ணுவதை விட உனக்கு நீயே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என உன் மனசை ப்ளீஸ் பண்ணி வை. ஏனென்றால் அது தான் எப்போதும் ஒரே இடத்தில் நிற்காமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்… “
“ஓகே கோச்… நான் எந்த மிஷின் யூஸ் பண்ண வேண்டும். எப்படி? யூஸ் பண்ணுவது என சொல்லிக் கொடுங்கள்.”
“அதற்குள் என்ன அவசரம் நித்யா…  முதலில் யோகா… உடற்பயிற்சி என்பவற்றை செய்து உன் உடம்பை பழக்கு.அதற்கு பின் மிஷின்களை யூஸ் பண்ணலாம் என்றவர் அதன் பின் யோகா,சில வகை உடற்பயிற்சிகளை ஒரு ஒருமணித்தியாலம் வரை சொல்லிக்கொடுத்தார். அவளுக்கு தான் முதல் நாளே கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் இது தமக்கு தேவைதானா… ? என யோசிக்கூட செய்தாள். 
ஆனால் நித்யாவிற்கு தான் என்ன செயல் செய்ய ஆரம்பித்தாலும் முன் வைத்த காலை பின்வைத்து பழக்கமில்லை. என்பதால் எவ்வளவு கஸ்ரமாக இருந்தாலும் தன் கொள்கையை விடப்போவதில்லை… என்பதில் உறுதியாக இருந்தாள். 
அவளை வைத்து ஒருமணித்தியாலம் சக்கை பிழிந்து விட்டே கோச் அவளை விட்டார். அவளுக்கு வியர்த்து வழிந்தது. கை, கால், இடுப்பு என அத்தனை பாகமும் வலித்தது. 
“என்ன… ? நித்யா வலிக்குதா…?”
“ஆமாம்… கோச்…. முடியல்ல… ஆனால் நான் முயற்சி பண்ணுவேன். “
“குட்… உன் முயற்சியும்… .நம்பிக்கையும் கடைசி வரை இருந்தால் வெற்றி நிச்சயம்… குட்லக்… நாளைக்கு மீட் பண்ணலாம்.” என்று கோச் கூறியவாறு ஜிம்முக்கு உள்ளே செல்ல அவள் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள். 
வெளியே வரவும் மது இவளுக்காக காத்து நிற்க அவளருகில் சென்றவள் ” மது அக்கா வாங்க போகலாம் என்றவாறு மறுபடியும் நடக்க ஆரம்பித்தனர். 
“ஏன்… ? நித்யா திடீரென ஜிம்முக்கு எல்லாம்  வரணும் என்று தோன்றியது. செந்தூர் ஏதாவது கிண்டல் பண்ணினானா…?”
“உங்களுக்கு எப்படித்தெரியும்… .” என அவள் கேட்கவும், மது தன் தவறை உணர்ந்து உதட்டை கடித்து சமாளித்தவள் “இல்லை… நீயும், அவனும் தான் எப்போதும் ரொம்ப அன்பா இருப்பீங்களே…” என அவள் சிரித்து சமாளித்தாள். 
“ஆமாக்கா… அவன் தான் ஒரே கிண்டல் பண்றான்.சனியன் பிடிச்சவனுக்கு என்னை கிண்டல் பண்ணாட்டி இராவில நிம்மதியாக தூக்கம் வராது. “
“ஓஓஓ… அப்ப நீ அவனை பிடிச்சு கலாய்ச்சு விட வேண்டியது தானே… “
“அவன் தான் உடம்பை பிட்நெஸ்சாக வைத்து நல்லா ஜிம்பாடியை வைத்து நல்லா சூப்பராக இருக்கின்றானே…”
“சைக்கிள் காப்பில அவனை சைட் அடிச்சிருக்கியா…. நீ… இரு அவன் கிட்ட போட்டுக்குடுக்கின்றேன். “
“இதுக்கு எதுக்கு அவனை சைட் அடிக்கனும்.அவன் என்ன?  என் லவ்வரா…? அவனை நேரே பார்த்தால் இது தெரியாதா… ?”
“ம்… சரி… சரி நான் அவனை பற்றி பேசல்லை விடு… “
“நல்ல நேரத்தில் யாராவது நரியை நினைப்பார்களா… ? நீங்க வேற பேசுங்க அக்கா… “
“அடிப்பாவி அவன் எங்களுடைய  பெஸ்ட் ப்ரண்ட் அவன் தான் எங்களுக்கு  எல்லாமே… அவனையே நரி என்கின்றாயா…? இது கொஞ்சம் கூட சரியில்லை நித்யா இனி அவனை மரியாதை இல்லாமல் பேசாதே… ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது.”
“அவன் என்ன?  உங்களை காக்க வந்த ரட்சகனா…?  விட்டால் உங்களுக்கு அப்பா,  அம்மா இரண்டு பேருமே அவன் தான் என்று சொல்வீங்களே… !”
“நித்யா…  உனக்கு அவனைப்பற்றி சரியாக தெரியவில்லை. நீ வந்ததிலிருந்து அவனோட சண்டை போடுகின்ற மாதிரியே சந்தர்ப்பம் அமைந்து விட்டது. அதனால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாரேன் நீயும் அவனை புரிந்து கொள்கின்ற நாள் வரும்…” என பெருமூச்சொன்றை வெளியிட்டாள். 
“அக்கா… . நீங்களாச்சு… உங்க பிரண்டாச்சு… ஆளை விடுங்க. உங்க பிரண்டை பற்றி கதைச்சு… கதைச்சே வீடு வந்தது கூட தெரியாமல் வந்துவிட்டோம். உன் பிரண்ட் பற்றிய வரலாறுகள் ஏதாவது மிச்சம் மிகுதி இருந்தால் நாளைக்கு காலையில் பேசலாம்… போரடிக்காது.” என்றவாறு உள்ளே சென்றாள். 
உள்ளே போனதும் அவளை தகப்பன் எதிர்கொண்டு, “நித்து எப்படி இருந்தது முதல் நாள் வேக்கவுட்.”
“ம்… பெண்டை கழட்டி கையில கொடுத்துட்டாங்க… என்றவாறு அப்பா எனக்கு ரீ… வேண்டும்.” என்றவாறு உள்ளே போனவள் சிறிது நேரத்தில் ஆபீசுக்கு கிளம்பி வந்தவள், ” அப்பா… ரீ… போட்டுட்டியா… மோர்னிங்பூட் என்ன… ? என்று கேட்டவாறே சாப்பாட்டு மேசை அருகே வந்தமர்ந்தாள். 

Advertisement