Advertisement

ஒருவருடத்திற்குப் பிறகு நந்தினிக்கு செயற்கைக் கால் பொருத்த தேவையான தொகையுடன் வந்து சேர்ந்தான். அதற்கு லட்சக் கணக்கில் பணம் செலவாகும் என்பதால் வேண்டாம் என்று மறுத்தவளிடம் ஆதித்யன் போராடியே சம்மதிக்க வைத்தான். செயற்கைக் கால் பொருத்திய பிறகு முதலில் நடக்கத் தடுமாறியவள் அவனது உதவியுடன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டாள்.
அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவள் முகத்தில் புதிதாய் தெரிந்த சந்தோஷமும், நம்பிக்கையும் அவன் மனதுக்கும் நிம்மதியைக் கொடுக்க சந்தோஷமாய் அமெரிக்கா கிளம்பி சென்றான் ஆதித்யன். எத்தனை தவிர்த்தாலும் வெளிநாடு சென்றாலும் தன்னையே சுற்றி வருபவனை அதற்கு மேல் விலக்கி வைக்க முடியாமல் அவனிடம் சகஜமாய் பேசத் தொடங்கினாள் நந்தினி. ஆனால் கல்யாணம் மட்டும் தந்தையின் சம்மதத்தோடு என்ற முடிவில் மாறாமல் இருந்தாள். அவளது தேவைகளை செய்து கொள்ள முடிந்ததும், குழந்தைகளுக்கு வீட்டிலேயே டியூஷன் எடுக்கத் தொடங்கினாள். சிவராமன் அருகில் இருந்த மில் ஒன்றுக்கு கணக்கெழுத சென்றார். கஷ்டப்பட்டு நாட்கள் நகர வானதி படித்து முடித்திருந்தாள்.
பழைய நினைவுகளின் அலைக்கழிப்பில் உறங்காமல் புரண்டு கொண்டே இருந்த சகுந்தலா மகனைப் பற்றிய நினைவில் கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு தண்ணியைக் குடித்துவிட்டு மீண்டும் படுத்தார்.
ஆதியின் மீது சுந்தரத்தின் கோபம் இத்தனை நாளாகியும் மாறவில்லை… இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சகுந்தலாவிடம் மகனைப் பற்றி குத்திக் கொண்டே தான் இருக்கிறார். ஆதியும் தந்தையுடன் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நான்கு வருடங்களுக்கு மேலாகி விட்டது… ஆதித்யன் இன்னும் சில மாதங்களில் திரும்பி வரப் போகிறான். நடுவில் நந்தினியின் செயற்கைக் கால் பொருத்தும் சிகிச்சைக்காய் விடுமுறையில் வந்திருந்தாலும் வீட்டுக்கு வரவில்லை. அன்னையிடம் யாருக்கும் தெரியாமல் போனில் நலம் விசாரித்ததுடன் சரி. காலம் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொடுத்திருந்தாலும் மிகப்பெரிய மாற்றம் எதுவுமின்றி அப்படியே தான் இருந்தது.
காலையில் எழுந்த குந்தவை அன்னை சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்தாள்.
“என்னமா சொல்லறிங்க… இன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வராங்களா…”
“ம்ம்… அப்பா பிரண்டு ராஜ்மோகன் அங்கிளோட பையனுக்கு உன்னைக் கேட்டாங்களாம்… அவங்க பையன் ஜாதகத்துல சீக்கிரம் பொண்ணை முடிவு பண்ணி நிச்சயம் வைக்கணும்னு சொன்னாங்க போல… அவங்களுக்கு உன் நினைவு வந்து இவர்கிட்ட கேட்டிருக்காங்க… அவங்க  குடும்பத்துல பொண்ணு கொடுக்க கசக்கவா செய்யும்… இவர் உடனே ஓகே சொல்லி இன்னைக்கே பொண்ணு பார்க்கவும் வர சொல்லிட்டார்…” என்று விளக்கமாய் சொல்லி முடித்தார்.
“அதுக்காக, இன்னும் படிச்சே முடிக்கல, உடனே கல்யாணம்னு சொன்னா… எப்படிம்மா…” என்றவளின் மனதுக்குள் அழகாய் கண் சிமிட்டினான் தேவ். முன்தினம் தான் “என்னைப் பிடிக்கவில்லையா” என்ற அவனது கேள்விக்கு, “பிடிக்காமல் இல்லை” என்று மறைமுகமாய் தனது விருப்பத்தை சொல்லி இருந்தாள். இன்று வேறு ஒருவனுடன் சம்மந்தம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
காதலிக்கிறேன் என்று சொன்னால் தந்தை நிச்சயம் சம்மதிக்கப் போவதில்லை… படித்து முடித்ததும் ஒரு வருடமாவது வேலைக்கு செல்ல வேண்டும்… அதற்குள் தேவ் மனதை நன்றாய் புரிந்து கொண்டு அவன் குடும்பத்திடம் இவளைப் பெண் கேட்டு வருவது போல் சொல்லித்தான் தனது கல்யாணத்திற்கு தந்தையை சம்மதிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் அவள் பிளான் செய்து கொண்டிருந்தாள்.
“இதென்ன புதுக்குழப்பம்… இதை எப்படி சமாளிப்பது என்று திகைப்பாய் இருந்தது.
“அம்மா ப்ளீஸ்… இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் மா… நான் இன்னும் அதுக்கெல்லாம் தயாராகலை… அப்பாகிட்ட சொல்லி வேண்டாம்னு சொல்லுங்கம்மா…” சங்கடத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன மகளை யோசனையுடன் பார்த்தார் சகுந்தலா.
“குந்தவை, அப்பா திடீர்னு கல்யாணம்னு சொன்னது வேணும்னா சரியில்லாம இருக்கலாம்… ஆனா இந்த சம்மந்தம் சரியில்லைன்னு சொல்ல முடியாது… ரொம்ப நல்ல குடும்பம்… ராஜ் அண்ணாவும், அண்ணியும் ரொம்ப நல்ல மாதிரி… உன்னை சொந்த மகளைப் போலப் பார்த்துப்பாங்க… ஒரே பையன், ஐபிஎஸ் வேற… இதை விட நல்ல சம்மந்தம் எங்கே கிடைக்கும் சொல்லு… ஒருவேளை, நீயும் உன் பெரிய அண்ணனைப் போல மனசுக்குள்ள யாரையும் நினைச்சிட்டு வேண்டாம்னு சொல்லறியா…” என்றார் அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கிக் கொண்டு.
அதைக் கேட்டுத் தடுமாறியவள், “அ..அப்படில்லாம் ஒண்ணும் இல்ல மா, திடீர்னு கல்யாணம்னு சொன்னதும் ஒரு குழப்பம்… அவ்ளோதான்…” என்று சமாளித்தாள்.
“அவ்வளவு தானே… கல்யாணம்னு சொன்னதும் எல்லாப் பொண்ணுகளுக்கும் ஒரு தயக்கமும், தடுமாற்றமும் வரத்தான் செய்யும்… நீ என்ன தெரியாதவங்க முன்னாடியா நிக்கப் போற… உனக்குப் பழக்கம் ஆனவங்க தானே… மறுக்காம சாயந்திரம் ரெடியாகிரு… மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… நிச்சயம் உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்காம இருக்காது…” சொல்லிவிட்டு சகுந்தலா செல்ல முகத்தை சுளித்துக் கொண்டே நகத்தைக் கடித்தாள் குந்தவை. அதுவரை அவர்களைப் பேசவிட்டு அமைதியாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வானதி குந்தவையிடம் வந்தாள்.
“என்ன குந்தவை, ஆன்ட்டி இங்கனே பரயனது, அப்ப தேவ்… ”
“அதான் எனக்கும் புரியல வானதி… அப்பா சொன்ன விஷயத்தை மறுத்தால் ஆயிரம் கேள்வி கேப்பார்… அதும் அவங்க தெரிஞ்ச பாமிலி வேற…”
“அந்தப் பையனை நினக்கு தெரியுமே… சம்சாரிச்சு நோக்கு…”
“இல்ல அவனை சின்ன வயசுல பார்த்தது… அப்புறம் அவன் புல்லா ஊட்டி கான்வென்ட்ல ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சான்… பழக்கம் இல்லை… அவன் போலீஸ்னு வேற அம்மா சொல்லறாங்க… கொஞ்சம் கலக்கமா இருக்கு…”
“ம்ம்… சரி பேடிக்காதே… பெண்ணு நோக்கான் அல்லே வரனது… வந்து நோக்கட்டே… பின்னே எங்கனே எங்கிலும் சரியாக்கான் நோக்காம்…
“ம்ம்… வேற வழி… இது தேவ்க்கு தெரிஞ்சா என்ன பண்ணுவான்னு தெரியல… அவன் ரொம்ப சீரியஸா லவ் பண்ணறேன்னு சொல்லறான்…” என்றாள் கலக்கத்துடன்.
“அப்ப நீ… சும்மா களிச்சதானோ… நினக்கு தேவ் இஷ்டமானோ அல்லே… சரிக்கும் பரயு…” என்று வானதி கேட்க, அவள் முகம் வாடியது.
“ம்ம்… பிடிச்சிருக்கு… ஆனா, இப்போ இந்த சிக்கல் எப்படி…”
“அதோக்கே விடு… பர்ஸ்ட் தேவ் விளிச்சு சம்சாரிக்கு… இங்கனே நின்னே பெண்ணு காணான் வரனதைப் பரயு…”
“ஓகே… நீ கதவு கிட்டயே இரு… நான் தேவ் கிட்ட எல்லாத்தையும் பேசிட்டு வரேன்…” குந்தவை சொல்ல வானதி அறைக்கு வெளியே அலைபேசியை நோண்டிக் கொண்டே காவலிருக்க குந்தவை போன் செய்தாள்.
“ஹாய் டார்லிங், என்ன சன்டே சர்ப்ரைஸ்…” உற்சாகத்துடன் கேட்டவனிடம் விஷயத்தை சொல்ல அவன் பொங்கினான்.
“என்னது… என் டார்லிங்கை இன்னொருத்தன் பொண்ணு பார்க்க வரானா… அதெல்லாம் முடியாது… நான் மட்டும் தான் உன்னைப் பார்ப்பேன்… அவங்க ஈவனிங் தானே வரதா சொன்ன… நான் பண்ணற பிரச்சனைல வேற எவனுமே இனி உன்னைப் பொண்ணு பார்க்க வராதமாதிரி செய்யறேன் பாரு…” என்று துள்ளவும் இவள் பயந்து போனாள்.
“அய்யய்யோ தேவ்… எதுவும் பிரச்சனை பண்ணிடாத… நம்ம விஷயம் அப்பாக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்… இதை நானே ஹேண்டில் பண்ணிக்கறேன்… நீ அமைதியா இரு…” என்றதும், “ஓகே டார்லிங், நீ இவ்ளோ பயப்படறதால நான் எதுவும் பண்ணல… நீயே அந்த மாப்பிள்ளை கிட்ட பக்குவமா பேசி விரட்டி விட்டிரு… சரியா…” என்றவன் போனை வைத்துவிட்டு கட்டிலில் உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
“அச்சோ… என் செல்லத் தங்கமே… உனக்கு என்னைப் பிடிக்காம இல்லைன்னு நேத்து பட்டும் படாமலும் சொன்ன… இப்ப வேற ஒருத்தன் பொண்ணு பார்க்க வர்றான்னு நினைச்சு போன் பண்ணிப் புலம்பற… இன்னைக்கு உனக்கு நான் கொடுக்கப் போற சர்ப்ரைஸ் நினைச்சாலே… ஐயோ… செமையா இருக்குதே… என் ஸ்வீட் ஏஞ்சல்க்கு ஏதாச்சும் கிப்ட் வாங்கணுமே…” என யோசித்தவன் உற்சாகத்துடன் வெளியே கிளம்பினான்.
மகனின் சந்தோஷ முகமும் முகத்தில் உறைந்த புன்சிரிப்பும் காணவே நிறைவாய் இருக்க அவன் கிளம்புவதை அன்போடு நோக்கி நின்றார் அன்னை.
நிலவுகள் தொலையலாம்
நீலவானம் தொலைவதில்லை…
நின்னைச் சுமக்கும் என்
நினைவுகளைப் போல
நிரந்தரமானது….

Advertisement