Advertisement

அத்தியாயம் – 24
அன்றைய நாள் முழுதும் நந்தினியின் அழுகையிலும் அவளை மற்றவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் கழிய அடுத்தநாள் அவளிடம் ஒரு தெளிவு தெரிந்தது.
இனி தனக்கான வாழ்க்கை இப்படித்தான் என்ற புரிதல் வந்திருக்க அழுகை குறைந்து முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது. அமைதியாய் இருந்தவளைக் கண்டு பெற்றோரின் மனம் வருந்தினாலும் அவளது அழுகை நின்றதில் அவர்களுக்கும் சிறிய சமாதானம் தோன்றியது.
கீழே விழுந்ததில் நந்தினியின் உடம்பில் அங்கங்கே சின்னச் சின்ன காயம் இருக்க அதில் நர்ஸ் மருந்து வைத்துக் கொண்டிருக்க ஷீலா அருகில் இருந்தார். சிவராமன் ஏதோ மருந்து வாங்குவதற்காய் கீழே சென்றிருந்தார்.
காலையில் அவர்களுக்கான உணவுடன் சகுந்தலா அங்கே சென்றபோது அவரைக் கண்டு சோகமாய் புன்னகைத்தவளை சற்று வியப்புடன் நோக்கினார் அவர். முன்தினம் இரவு, தான் வீட்டுக்குக் கிளம்பும்வரை அழுது கொண்டிருந்தவளிடம் இன்று மாற்றம் வந்திருந்தது கொஞ்சம் கலக்கத்தைப் போக்கியது. அவள் மனது தன் நிலையை உள்வாங்கிக் கொண்டது எனப் புரிந்து கொண்டவர் அருகில் அமர்ந்தார்.
ஆதி அலுவலகம் சென்றுவிட்டு மருத்துவமனைக்கு வருவதாய் சொல்ல அருளுடன் சகுந்தலா வந்திருந்தார்.
“சார் வந்ததும் சொல்லுங்க… இஞ்செக்ஷன் போட வர்றேன்…” என்று சொல்லி நர்ஸ் கிளம்ப சகுந்தலா அவளிடம் கேட்டார். 
“நந்தினி, டிபன் சாப்பிடறியா மா…”
“இல்ல ஆன்ட்டி… அப்புறம் போதும்… ஆதி வரலியா…” என்றவளின் பார்வை வாசலைத் தேடியது.
“ஆபீஸ்க்கு போயிட்டு வந்திடறேன்னு சொன்னான் மா…”
“ம்ம்…” என்றவள் மேலே பேசாமல் அமைதியானாள்.
அவள் கையைப் பிடித்துக் கொண்ட சகுந்தலா, “நந்தினி, கவலைப்படாத மா… நடக்குற எதையும் நம்மால மாத்த முடியாது… நடக்காம தடுக்கவும் முடியாது… ஆனா அதைக் கடந்து வர முயற்சி பண்ணனும்… சரியா…”
“ம்ம்…” என்றவள் கண்ணில் கண்ணீர் நிறைய சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டு சிரித்தாள்.
“புரியுது ஆன்ட்டி… ஆனா மனசு ஏத்துக்க மாட்டிங்குது…”
“சரி, முதல்ல சாப்பிடு… மாத்திரை போடணுமில்லையா…”
“அண்ணி, நீங்களும் சாப்பிடுங்க…” என்றார் ஷீலாவிடம். அவரது அழைப்பு நந்தினியைக் குழப்ப அவரை யோசனையுடன் பார்த்தார்.
அதற்குள் ஷீலாவின் கையிலிருந்த அலைபேசி அலற பார்த்தவர், “சின்னவ கூப்பிடறா… பேசிட்டு வந்திடறேன்…” என்று வெளியே சென்றார்.
“ஆன்ட்டி… நீங்க இங்கே வந்தது ஆதிக்கு ஆறுதலா இருக்கும்… எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்…” என்றவளின் கையைப் பிடித்துக் கொண்டவர், “என்னம்மா, என்ன பேசணும்…” என்றவர் அருளைப் பார்க்க, “நீங்க பேசிட்டு இருங்கம்மா… நான் வெளியே இருக்கேன்…” என்றவன் வெளியே சென்றான்.
“எனக்கு எல்லாம் தெரியும் மா… ஆதி உன்னை ரொம்ப நேசிக்கிறான்… நீயும் அப்படித்தான்னு தெரியும்… கொஞ்சம் பொறுமையா இருங்க… அவரை சமாதானம் செய்து உங்களை சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு…” என்று கூறியவரை பிரமிப்பாய் பார்த்தாள் நந்தினி.
“இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு ஆன்ட்டி… மகனுக்கு பொண்டாட்டியா வரப் போறவ எப்படில்லாம் இருக்கணும்னு ஒவ்வொரு தாய்க்கும் மனசுல ஆசை இருக்கும்… கண்டிப்பா அதுல ஒரு ஊனமான பொண்ணை கற்பனைல கூட மருமகளா நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க… நீங்க இப்படி சொல்லறதே அதிசயம் தான்…”
“நந்தினி, என்னமா பேசற… இந்த விபத்துல உன் கால் போயிருக்கலாம்… அதுக்காக ஆதியோட மனசு மாறிடாது…”
அதைக் கேட்டு மௌனித்தவள், “நான் அதை சொல்லலை ஆன்ட்டி… அங்கிளுக்கு ஒரு வாக்கு கொடுத்திருக்கேன்… எந்த ஊனமும் இல்லாம நல்லா இருந்தப்பவே எங்க காதலை அவர் நிராகரிச்சவர்… அதனால நீங்கதான்…” என்றவள் நிறுத்திவிட்டு அவரைப் பார்க்க, “என்னம்மா சொல்லு…” என்றார் சகுந்தலா.
“நீங்கதான் ஆதிகிட்ட சொல்லிப் புரிய வைக்கணும்… எனக்கு இனி எதிர்காலம்ன்னு எதுவும் இல்ல… இப்ப ஒரு வேகத்துல என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சாலும் அது நாளைக்கு சின்ன சங்கடத்தைக் கூடக் கொடுத்திடக் கூடாது… அவனோட கனவுகள் என்னன்னு தெரிஞ்சவ நான்… அதுக்கு இனி முடமான என்னால உயிர் கொடுக்க முடியாது… அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும், அங்கிளுக்குப் பிடிச்ச நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க…” என்றாள் கண்ணீருடன்.
சகுந்தலா அவளைத் திகைப்புடன் நோக்க, “ப்ளீஸ் ஆன்ட்டி… எனக்காக நீங்கதான் அவன்கிட்டப் பேசி புரிய வைக்கணும்… செய்வீங்களா…” என்றவள் அவர் கையைப் பற்றிக் கொண்டு கெஞ்சுதலாய் பார்க்க கன்னத்தை நனைத்தது கண்ணீர்.
அவள் கையில் தட்டிக் கொடுத்தவர், “அது என்னால முடியாது மா, அவன் காதலுக்கு நீ ரொம்ப ரொம்பத் தகுதியானவ… இப்படி ஒரு பெண்ணை மறந்திடுன்னு என்னால அவன்கிட்ட சொல்ல முடியாது… உனக்கு முடியாத இந்த நிலையிலும் அவனோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கற… உன்னை நான் என்னன்னு நினைக்க…” என்றவர் கலங்கிய கண்களுடன் எழுந்து கொண்டார்.
“அவன் அப்பாவுக்கு உன்னை எப்படிப் பிடிக்காமப் போச்சுன்னு தெரியல… நாளைக்கு எல்லாம் மாறலாம்… ஆனா, ஆதிக்கு உன்மேல உள்ள காதல் மாறும்னு எனக்குத் தோணல… இப்ப அதைப்பத்தி எல்லாம் யோசிச்சு மனசைக் குழப்பிக்காம உடம்பைத் தேத்துற வழியைப் பாரு… டிபன் தர்றேன் சாப்பிடு…” என்றவர் ஷீலா அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே கண்ணீருடன் அங்கே நிற்பதைக் கண்டு புன்னகைத்தார்.
“அண்ணி, நீங்களும் சாப்பிடுங்க…” என்றவர், “என் மனசுல நான் முடிவு பண்ணிட்டேன்… காலம் தான் இனி முடிவை சொல்லணும்…” என்றவர் பிளேட்டில் இட்லியை வைத்தார்.
அதற்குப் பிறகு ஏதேதோ நடந்துவிட்டது. அன்று இரவு சகுந்தலாவும், அருளும் சென்னை கிளம்பிச் சென்றனர்.
கணவரிடம் நந்தினியைப் பற்றி கவலையும் பெருமையுமாய் சகுந்தலா சொல்ல உர்ரென்ற முகத்துடன் கேட்டுக் கொண்ட சுந்தரம், “இங்க பாரு சகு, அந்தப் பொண்ணு மேல எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை… ஆனா உன் மகன் மேல அப்படி இல்லை… அவனை இந்த ஜென்மத்துல நான் மன்னிக்க மாட்டேன்… அந்தப் பொண்ணுக்கு இப்படி ஆனதில் வருத்தப்பட்டு தான் உன்னைப் பார்க்க அனுப்பினேன்… ஆனா இதையே காரணம் வச்சு உன் மூத்த புள்ள கிட்ட உறவு கொண்டாட நினைச்சா என்னைத் தலை முழுகிருங்க…” என்றவர் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த குந்தவை, அருளையும் நோக்கி “உங்க எல்லாருக்கும் தான் சொல்லறேன்… எனக்குத் தெரியாம யாராச்சும் அவனோட பேசினிங்கன்னா அது நான் செத்ததுக்கு சமம்…” என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அதே கோபத்தோடு சொல்லி சென்றார்.
மகனது அழைப்பு வரும்போது எடுக்காமல் தவித்த சகுந்தலா, “அவனை இனி போன் பண்ண வேண்டாம்னு சொல்லறதுக்கு மட்டும் பேசிக்கறேங்க…” என்று கணவரைப் பார்க்க முறைத்துக் கொண்டே “இதுவே கடைசியா இருக்கட்டும்…” என்று சொல்லி சென்றுவிட்டார்.
“ஆதி, உன் அப்பா இப்பவும் அதே கொதிப்புல தான் இருக்கார்… உன்னோட வீட்ல யாரையும் பேசக் கூடாதுன்னு தடா போட்டு வச்சிருக்கார்… நீ கொஞ்ச நாளைக்கு எனக்கு போன் பண்ணாத… எதாச்சும் சொல்லனும்னா மெசேஜ் போட்டு வை… நான் பார்த்துக்கறேன்… நந்தினியை கவனிச்சுக்கடா… அவ இனி உன் பொறுப்பு… உன்னையும் பார்த்துக்க…” என்று வைத்துவிட்டார்.
நந்தினியின் பெற்றோரின் அலைபேசியில் அடிக்கடி பேசிய சகுந்தலா நந்தினியின் உடல்நிலையை விசாரித்துக் கொண்டார். நந்தினிக்கு செயற்கை கால் வைப்பதை பற்றி டாக்டரிடம் விசாரிக்க காலில் காயம் முழுமையாய் ஆறிய பின்னரே அதற்கான முயற்சியை எடுக்க முடியுமென்று கூறிவிட்டனர். காலில் காயம் ஓரளவிற்கு ஆறியதும் நந்தினியின் பெற்றோர் அவளை கேரளா அழைத்துச் செல்வதாக சொல்ல முரண்டு பிடித்த ஆதி அவள் இங்கேயே இருக்கட்டும்… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல நந்தினி முறைத்தாள்.
“விளையாடாத ஆதி, நீ ஆபீஸ் போகாம என்னோடவே இருக்க முடியுமா… நாங்க கிளம்பறோம்…” என்றாள்.
“உன்னைப் பார்த்துக்க ஒரு சர்வன்ட் ஏற்பாடு பண்ணிடறேன்… நீ இங்கயே இரு நந்து, ப்ளீஸ்… என்னோட தனியா இருக்கறது தான் பிரச்சனைன்னா நாம நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றவனைக் கோபத்துடன் முறைத்தாள்.
“ஆதி, எல்லாமே உனக்கு விளையாட்டுதானா… இப்ப நான் இருக்கற மனநிலைக்கு எனக்கு தனிமை தான் தேவை… அது மட்டுமில்லை… நம்ம வீட்டுப் பெரியவங்க சம்மதிக்காம நம்ம கல்யாணம் நடக்காது… நீ இதுவரை எனக்குப் பண்ணின செலவு, உதவி எல்லாம் ரொம்பப் பெருசு… அதுக்கு நன்றி சொல்லி உன் காதலைக் கொச்சைப்படுத்த விரும்பலை… ஆனா இப்ப எனக்கு கல்யாணத்தைப் பத்தி எந்த ஐடியாவும் இல்லை… அங்கிளுக்கு நான் கொடுத்த வாக்கு எப்பவும் மாறாது…” என்றாள் உறுதியாக. அதற்குப் பிறகும் அவன் எத்தனையோ சொல்லியும் அவள் கேட்காமல் பிடிவாதமாய் கிளம்பி விட நொந்து போனவன், சரி கொஞ்ச நாள் போகட்டும் என்று அமைதியானான்.
வண்டி ஏற்பாடு செய்து அவர்களுடன் கேரளா சென்று அவளை வீட்டிலேயே விட்டான்.
அவன் கையைப் பிடித்துக் கொண்ட சிவராமன், “தம்பி, உன்னைப் போல ஒரு பிள்ளை மருமகனாய் வந்தால் அது எங்க பாக்கியம்தான்… ஆனா, அப்பாவை எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க தயாரில்லை… அவர் சம்மதத்துக்கு உங்களோட நாங்களும் காத்திருக்கோம்… போயிட்டு வாங்க…” என்று கண் கலங்க அனுப்பி வைத்தார்.
அதற்குப் பிறகும் தினமும் அவளை அலைபேசியில் அழைக்க முதலில் பேசியவள் பிறகு சிடுசிடுக்கத் தொடங்கினாள். வேலையை கவனிக்காமல் எப்போதும் அழைக்க வேண்டாமென்று சொன்னவள் பேச மறுத்தாள். அவளுக்கு மாதாமாதம் பணம் அனுப்புவதாய் ஆதி சொல்ல நந்தினியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
அவனது கையிருப்பும் கரைந்து போயிருக்க நந்தினிக்கு செயற்கை கால் பொறுத்த நல்ல ஒரு தொகை செலவாகுமே என நினைத்தவன் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். அவளைப் பற்றிய கவலையும் தந்தையின் மீது கொண்ட வெறுப்பும் ஆதிக்கு தனிமையில் மூச்சு முட்டுவது போல் இருக்க வெறுப்போடு நாட்களைக் கழித்தவன், சிறிது நாளிலேயே அலுவலகத்தில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கவும் கிளம்பி விட்டான். நாடு மாறினாலும் அவன் மனது இன்றும் மாறாமல் நந்தினிக்காய் காத்திருந்தது.

Advertisement