Advertisement

அத்தியாயம் – 9
“அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல…” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள்.
“ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி…” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும் சேர்ந்து அந்த இடத்தையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
“ஏய், நாம மூணு பேரும் ஒரே மாதிரி டாப் எடுக்கலாமா…” குந்தவை கேட்க, “சூப்பர், எடுக்கலாம்டி…” என்றாள் மேகலை.
“ஹேய், எனிக்கு வேண்டா… நிங்கள்க்கு எடுத்தோ…” வானதி சொல்ல, “சும்மாரு வானதி, எதைக் கேட்டாலும் வேண்டாம்னு சொல்லிட்டு… நாங்க முடிவு பண்ணிட்டா, எங்களாலயே அதை மாத்த முடியாது…” என்று பன்ச் சொல்லிய குந்தவை ஒரே கலர் டிஸைனில் மூவருக்கும் பார்க்க, “மேகி, இந்த டாப் உனக்கு என் பர்த்டே கிப்ட்…” என்று அவளிடம் சொல்ல, “ஹேய் சூப்பர்டி… அப்ப நான் என் பணத்துல வேற எடுத்துக்கவா…” என்றாள் அவள் ஆவலுடன்.
“எடுத்துக்கடி…” என்று குந்தவை சொல்ல, “தேங்க்ஸ்டி…” என்று அங்கேயே தோழியின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
“பார்த்தியா, இதான் பிரண்ட்ஷிப்… நான் எடுத்துக் கொடுத்தா நீ வேண்டாம்னு சொல்லக் கூடாது… சந்தோஷப் படணும்… நட்புன்னு வந்துட்டா உன் செலவு, என் செலவுன்னு பார்மாலிட்டி எல்லாம் பார்க்கக் கூடாது…” என்ற குந்தவையை நோக்கிப் புன்னகைத்த வானதி, “அது ஓகே, பட் இப்ப எனிக்கு எந்தினு ஆவஸ்யம் இல்லாதே…” எனவும் குந்தவை முறைக்க, வாயை மூடிக் கொண்டாள்.
மூவருக்கும் பொருந்தும் வகையில் பர்ப்பிள் வண்ணத்தில் எம்பிராய்டரி செய்த டாப்பைத் தேர்வு செய்தாள்.
கல்லூரிக்கு அணியும் வகையில் சில குர்திகளை குந்தவை பார்த்துக் கொண்டிருக்க, மேகலையும் ஒரு புல் பிராக் தேர்வு செய்ய, வானதி அபிப்ராயம் சொல்லி உதவி செய்ய எல்லாவற்றையும் எடுத்து முடித்து பில்லுக்குக் கொடுத்தனர்.
“ஏய் அங்க பாருடி, எதிர்த்தாப்புல உள்ள ஐஸ்க்ரீம் ஷாப்புல இருந்து சில பசங்க நம்மளையே பார்த்துட்டு இருக்காங்க…” மணிமேகலை தோழியின் காதைக் கடிக்க, “அதே குந்தவை… நானும் ஸ்ரத்திச்சு…” வானதி சொல்லவும் புன்னகைத்த குந்தவை, “உங்க கவனத்துக்கு வந்தது என் கண்ணுல மட்டும் சிக்காமயா போகும்… அந்த பிளாக் டீஷர்ட் போட்டிருக்கானே, அந்தப் பையன் கொஞ்ச நாளாவே என்னை பாலோ பண்ணிட்டு இருக்கான்…”
“ஓ… நீ எப்பவும் ஒருத்தன் பின்னாடியே வரான்னு சொன்னது இவனைத்தானா, ஆள் நல்லா அம்சமா, ஒட்ட வெட்டின கிராப், கட்டி மீசைன்னு அழகா தாண்டி இருக்கான்…” என்றாள் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் கவனித்த மணிமேகலை.
“ம்ம்… அழகா இருந்தா மட்டும் போதுமா… இவ்ளோ நாளா என் பின்னாடி வர்றானே ஒழிய இதுவரைக்கும் என்கிட்ட பேசக் கூட முயற்சி பண்ணல… சரியான தொடைநடுங்கி போலருக்கு…” குந்தவை சொல்ல மற்ற இருவரும் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு களுக்கென்று சிரித்தனர்.
அதற்குள் பில் போட்டு முடிந்திருக்க கார்டைத் தேய்த்து பொருளை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
“நாம அவன்கிட்ட கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமா…” குந்தவை கேட்க, “அய்யோ, அதொண்ணும் வேண்டா, வெறுதே எந்தினு வேண்டாத்த பணி…” வானதி கேட்க,
“பார்த்தியா, இவ ஒரு தொடை நடுங்கி… அவனுக்கு அக்காவா இருப்பா போலருக்கு…” குந்தவை சொல்ல, “வானதி, இதெல்லாம் ஒரு என்ஜாய்மென்ட் தானே… ஒண்ணும் பிராப்ளம் ஆகாது, பயப்படாத…” மேகலை சொல்லவும், “அப்படி சொல்லுடி, இப்ப நாம கேக்குறதுல அவன் இனி என் பின்னால வர யோசிக்கணும்…”
குந்தவை சொல்ல விருப்பமில்லா முகத்துடன் நின்றவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த ஐஸ்க்ரீம் ஷாப்புக்குள் நுழைய இவர்களை எதிர்பார்க்காத அந்த இளைஞர்கள் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டு தங்களுக்கும் ஏதோ பேசிக் கொண்டனர்.
மூவருக்கும் வேண்டிய பிளாவரில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துவிட்டு அவர்களுக்கு அருகில் இருந்த டேபிளை சுற்றி அமர்ந்தனர்.
“என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்தப் பாவை…”
குந்தவை பாட்டை சன்னமாய் பாடிக் கொண்டே அமர அதைக் கேட்டவன் பார்வை ஆவலுடன் அவளிடம் திரும்ப அதுக்காய் காத்திருந்தவள் இரு புருவத்தையும் தூக்கி என்னவென்று கேட்க, அதை எதிர்பாராமல் திணறிப் போனவன் சட்டென்று திரும்பிக் கொண்டான்.
ஒரு பெண் தனியாய் இருக்கும்போது அமைதியும் அடக்கமும் அதிகமாய் இருந்தாலும், நான்கு பெண்கள்  சேரும்போது பசங்களைக் கிண்டல் செய்யும் தைரியமும், அவர்களை வம்பிழுக்கும் துணிச்சலும் தானே வந்து விடும்.   ஐஸ்க்ரீம் வந்திருக்க சாப்பிடக் கூடத் தோணாமல் வானதி பயத்துடன் குந்தவையைப் பார்க்க அவளது பார்வை அந்தப் பையன் மீதே இருந்தது.
“என்னடி மேகி, ஒரு லுக்குக்கே அரண்டுட்ட மாதிரி இருக்கு… சரியான தொடை நடுங்கி காளையா இருக்குமோ…”
“ம்ம்… ஆமாண்டி, பசுத்தோல் போர்த்தின புலி போல இது காளைத் தோல் போர்த்தின பசு போலருக்கு…”
“ஹாஹா… ஆனா மீசை எல்லாம் கட்டியா விறைப்பா தான் இருக்கு… எதுக்குன்னு தான் தெரியல…” அவள் சொல்லி முடிக்கும் முன் அந்தப் பையன் எழுந்து இவர்கள் மேசையில் இருந்த நான்காவது நாற்காலியில் அமர மூவருக்கும் திக்கென்று ஆனது.
“ஹாய், நான் தேவ்… தேவ் மோகன்…” அவனது குரல் கம்பீரமாய் பிசிறின்றி ஒலிக்க திறந்த வாயுடன் அதிர்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர் பெண்கள் மூவரும்.
“நீங்க என்னைப் பத்தி தான் கேலி பண்ணிப் பேசிட்டு இருந்தீங்கன்னு தெரியும்… நேரடியாவே பேசலாமா…” என்றான். வானதி பயத்துடன் முழிக்க குந்தவையின் கண்ணில் இருந்த குறும்பும் கேலியும் மறைந்து அச்சமும், கவலையும் எட்டிப் பார்த்தது. மணிமேகலை அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டே ஐஸ்க்ரீமை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
“அ..அதுவந்து… நாங்க சும்மா…” குந்தவைக்கு வார்த்தை தந்தியடிக்க அவளது கண்களை ஆழ்ந்து நோக்கினான் தேவ். அந்தப் பார்வையை சந்திக்க முடியாமல் அவள் பார்வை தழைந்து கொண்டது.
“குந்தவை, எனிக்கு… நமக்குப் போகாம்…” வானதி அவளிடம் அவசரப்படுத்த அவன் புன்னகைத்தான்.
“டோன்ட் வொர்ரி… நான் ஏதும் வம்பு பண்ண மாட்டேன்… ட்ரஸ்ட் மீ…” என்றதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“குந்தவை… எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்… படிக்கிற பொண்ணுகிட்ட பிரபோஸ் பண்ணி டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான் ஒரு ஓரமா நின்னு உங்களைப் பார்த்துட்டு மட்டும் போயிட்டு இருக்கேன்… அது தப்புன்னு இப்பப் புரியுது… கண்டிப்பா உங்க மனசுலயும் என் மேல ஒரு ஒபினியன் இருக்கும்னு நினைக்கறேன்…” தெளிவாய் அவன் சொல்ல திகைத்தவள் வேகமாய் மறுத்தாள்.
“எ..என்ன ஒபினியன்… அப்படில்லாம் ஏதும் இல்லை… எப்பவும் என் பின்னாடி வரிங்களேன்னு எரிச்சல்ல அப்படி சொல்லிட்டேன்… சாரி… ஏய், வாடி போகலாம்…” என்றவள் எழுந்து கொள்ள ஐஸ்க்ரீமை பாதி மட்டுமே சாப்பிட்டிருந்த மணிமேகலை மனமில்லாமல் எழுந்து கொண்டாள்.
“ஓ… ஓகே… இப்ப இல்லன்னாலும் அப்புறம் வரலாம்… யோசிச்சு மெதுவா சொல்லுங்க…” என்றான் தேவ்.
அவர்கள் கிளம்ப நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் சிரித்தனர்.
“ஏண்டா, ஒரு போலீஸ்காரன் பண்ணுற வேலையா இது… இன்னும் நாலு மாசத்துல நமக்கு ஐபிஎஸ் போஸ்டிங் வந்திரும்… இப்படி பொண்ணை பாலோ பண்ணறது எல்லாம் நமக்கு நல்லாவா இருக்கு… சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கன்னு வீட்ல பேசி முடிவு பண்ணிட்டுப் போவியா…” அவனது நண்பன் பார்த்திபன் சொல்ல சிரித்தான்.
“அப்படி எடுத்ததும் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணா இந்த திரில் கிடைக்குமா… அவளும் என்னை திருட்டுத் தனமா நோட் பண்ணிட்டு தான் இருந்திருக்கான்னு இப்பப் புரிஞ்சிருச்சா… இதுவரைக்கும் யோசிக்கலைன்னாலும் இனி அவளால என்னை யோசிக்காம இருக்க முடியாதுல்ல…”
“டேய், ஏண்டா அலும்பு பண்ணற… அவ அப்பாவும், உன் அப்பாவும் தான் அவ படிப்பு முடிஞ்சதும் உங்களுக்கு கல்யாணம் பண்ணனும்னு பேசி வச்சிருக்காங்களே…”
“ஆமா, அது அவங்க ரூட்டு… அப்பா சொல்லுறாரேன்னு எல்லாம் என்னால எந்தப் பொண்ணுக்கும் ஓகே சொல்ல முடியாது… சரி, அவர் பிரண்டு பொண்ணுன்னு சொல்லுறார்… பார்த்து பிடிச்சிருந்தா ஓகே சொல்லுவோம்னு நினைச்சு தான் பார்க்க வந்தேன்… ஆனா குந்தவையைப் பார்த்ததுமே எனக்குப் பிடிச்சிருச்சு… எப்பவும் அவளைப் பார்த்துட்டே இருக்கணும்னு மனசு தவிக்குது…” அவன் உணர்ச்சிகரமாய் பேசிக் கொண்டிருக்க நண்பர்கள் சலித்துக் கொண்டனர்.
“டேய் போதும் டா… எவ்ளோ டைம் தான் இதையே சொல்லி எங்களை போர் அடிக்க வைப்ப…”
“டேய் தேவ்… உங்க ரெண்டு பேர் அப்பாவும் குளோஸ் பிரண்ட்ஸ்னு சொல்லறீங்க… ஆனா நீங்க ரெண்டு பேரும் முன்னப் பின்னப் பார்த்துகிட்டதே இல்லையா…”

Advertisement