Advertisement

“சம்பிரதாயம் எந்தாயாலும் நல்ல மனசோடு நிங்கள் தரண கிப்ட் ஆயது கொண்டு மறுக்குனில்லா…”
அவள் வாங்கியதும் சந்தோஷமாய் சிரித்தவர், “உன்னைப் போல நல்ல மனசுள்ள பெண் எனக்கு மருமகளாய் வந்தாலும் சந்தோசம் தான்…” என நினைத்துக் கொண்டார்.
மாலையில் குந்தவை அவளுக்காய் கேக் வாங்கி வந்து வெட்ட சொல்ல மூன்று பெண்களுமாய் கொண்டாடினர். சுந்தரமும், அருள்மொழி வர்மனும் வேலை முடிந்து வீட்டுக்கு வர இரவாகிவிட்டது.
சோர்வுடன் உள்ளே நுழைந்த சுந்தரம், “சாப்பிட்டு அந்த கொட்டேஷன்க்கு வொர்க் அவுட் பண்ணிடு… நாளைக்கு கண்டிப்பா சப்மிட் பண்ணியாகனும்… அடுத்தடுத்து ஆர்டர் கிடைக்கறது பெரிய விஷயம்… பார்த்து கோட் பண்ணு… கை நழுவ விட்டுடாதே…” என்றார் மகனிடம்.
“ம்ம்… சரிப்பா…” என்றவன் குளித்து சாப்பிட வந்தான். சுந்தரம் களைப்பாய் இருக்கிறதென்று ஒரு கிளாஸ் பால் மட்டும் குடித்துவிட்டு படுக்க சென்றார்.
“எந்தா ஆன்ட்டி, அங்கிள் சாப்பிடலியா…” வானதி கேட்க,
“அவருக்கு கால் மூட்டு வலி இருக்கு மா… ரொம்ப நேரம் வெளியே அலைஞ்சா நைட்டு வலிக்கத் தொடங்கிரும்…”
“ஓ…” என்றவள் “கஸ்தூரி மஞ்சள் உண்டோ இவிடே…” என்றதும், “இருக்கு மா… எதுக்கு…” என்றார் சகுந்தலா.
“கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு மூணும் சம அளவிலு எடுத்து வாட்டர் விட்டு அரைச்சு சூடாக்கி, இளம் சூடோடே குறைச்சு கற்பூரம் கலந்து வலி உள்ள ஸ்தலத்து தடவியா மூட்டு வேதன போகும் ஆன்ட்டி…” என்றவள் சாப்பிட்டு முடித்த கையோடு அதைத் தயார் செய்தாள்.
அவள் செய்வதை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்த குந்தவை, “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் வானதி…” என்றாள்.
“என்டே அச்சனு மூட்டு வேதன வரும்போ அம்ம செய்யும்…”
“ஓ…” என்றவள் சகுந்தலாவை இளக்காரமாய் பார்த்துவிட்டு, “ஹூம், என் அம்மாக்கு, யாரு கதை எப்ப வரும்… எப்ப படிக்கலாம்… புக் எப்ப வரும், வாங்கலாம்… இதுதான் தெரியும்…” கிண்டலாய் சொல்ல மகளை முறைத்தார்.
“நீ போடி… சொல்லிக் கொடுத்தா மட்டும் அப்படியே செய்து கிழிச்சிருவ… போ, போ பத்துக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு… போயி படுக்கைய ரெடி பண்ணு…” கடுப்புடன் அவர் சொல்ல குந்தவை முறைத்தாள்.
“முறைச்சா கண்ணை நோண்டிருவேன்… இப்ப வானதி செய்யறதைப் பார்த்துட்டல்ல… நாளைக்கு நீ செய்…” என்றதும்,
“ஹூக்கும்… நீ புக்கைப் படிச்சுக்கோ… பிச்சுத் தின்னக் கூட செய்துக்கோ… நான் எதுவும் பார்க்கவும் இல்லை, சொல்லவும் இல்லை…” என்ற மகள் சிலிர்த்துக் கொண்டு அறைக்கு செல்ல வானதி பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.
“ஹாஹா… ரெண்டு பேரும் இங்கனே அடி கூடுந்த… எப்பழும் இங்கனயா ஆன்ட்டி…”
“ஹாஹா… என்னைப் பத்தி எதைக் கிண்டல் பண்ணாலும் சகிச்சுக்குவேன்… ஆனா மூணு நேரமும் இவங்களுக்கு ஆக்கிக் கொட்டி, எல்லா வேலையும் மாங்கு மாங்குன்னு செய்துட்டு, கிடைக்குற கொஞ்சம் கேப்புல நான் புக்கு படிக்கிறதைக் கிண்டல் பண்ணா மட்டும் தாங்க முடியாது…”
“ஹாஹா… ரீடிங் அத்தர இஷ்டமானோ…”
“பின்ன… ஒரு காலத்துல பேப்பர்ல விளம்பரம் கூட விடாமப் படிப்பேன்… இப்ப ஒரு கதை படிக்க இவங்களை வச்சுகிட்டுப் போராட்டமா இருக்கு… நான் பெத்ததுங்க எல்லாம் எனைக் கலாய்க்குதுங்க… வாசிக்கறது ஒரு கலை… படிச்சு அந்த உணர்வை மனசுக்குள்ள கடத்தி கற்பனையா அந்தக் காட்சியை கண்ணுல பாக்குற சுகம் இருக்கே… அடாடா… அதெல்லாம் யூ டியூப் பார்த்துட்டுத் திரியுற இவங்களுக்கு எங்க புரியப் போகுது…” பெருமூச்சுடன் சொல்லி முடித்தார்.
அதற்குள் அந்தக் கலவை இளம் சூட்டுக்கு வந்திருக்க கற்பூரத்தை எடுத்துக் கலந்தாள் வானதி.
“இதை அங்கிள்ட காலில் தேச்சு விட்டால் நல்ல சமாதானம் உண்டாகும்… ராவிலே ஒரு மருந்து உண்டாக்கித் தராம்… அதும் குடிச்சா மூட்டு வேதன பம்ப கடக்கும்…”
“பம்பயா… அப்படின்னா…”
“ஹாஹா… மூட்டு வேதன பறந்து போவும்ந்து…”
“ஓ… சரி, நீயே இதை அவர் காலில் பக்குவமா தடவி விடேன் மா…” சகுந்தலா சொல்ல, “சரி ஆன்ட்டி… நிங்கள் அங்கிள் உறங்கியோ நோக்கு… நான் வராம்…” என்றதும் சகுந்தலா முன்னில் சென்று கணவரை நோக்க அவர் வலியில் உறங்க முடியாமல் எழுந்து அமர்ந்திருந்தார். அவரிடம் சொல்ல, “ஏதேதோ மருந்து குடிச்சாச்சு… தேச்சாச்சு… இதுவா கேக்கப் போகுது…” முகத்தை சுளித்தபடி சொல்ல வானதி உள்ளே வந்தாள்.
“இல்ல அங்கிள்… எண்டே அச்சனு நல்ல சமாதானம் உண்டு… ஒண்ணு டிரை செய்து நோக்கால்லோ…”
“ம்ம்…” என்றவர் “நான் படுத்துக்கறேன்…” என்று காலை நீட்டிப் படுக்க, கட்டிலுக்கு அருகே நிலத்தில் முட்டியிட்டு அமர்ந்த வானதி, இளம் சூட்டில் இருந்த அந்தக் கலவையை அவர் மூட்டில் தேய்த்து விட சுகமாய் உணர்ந்தார்.
நன்றாகப் பிரட்டியவள் தந்தைக்கு பிடிப்பது போல் அவர் காலையும் பிடித்துவிட சிறிது நேரத்தில் உறங்கியிருந்தார்.
அவள் செய்வதை அதிசயமாய் பார்த்த சகுந்தலா, மத்தவங்களுக்கு “இப்படிலாம் பண்ண உனக்கு கஷ்டமா இல்லியாம்மா… எப்படி முகம் சுளிக்காமப் பண்ணற…”
“ஆன்ட்டி… நர்ஸிங் என்டே தொழில்… அதில் பேஷண்டினோடு அரப்பு நோக்கான் பாடில்ல… இது, பின்னே… அங்கிளும் என்டே அச்சனைப் போலல்லே… இங்கனே செய்யுந்ததில் சந்தோஷமே உள்ளூ…”
அவள் சொல்லவும் அவர் மனம் நெகிழ்ந்தது.
“சரி, டைம் ஆச்சு… நீ போயி படும்மா…” என்றதும், அவள் அடுக்களைக்கு செல்ல அங்கே அருள் மொபைலை நோண்டிக் கொண்டே அடுப்பில் பாலை வைத்திருந்தான்.
இவளைக் கண்டதும், “எனக்கு ஒரு காபி போட்டுத் தர முடியுமா… தல வலிக்குது, ஒரு முக்கியமான வொர்க் வேற முடிக்கணும்…” என்றான் அருள்.
அவள் மறுக்காமல் தலையசைக்க, “தேங்க்ஸ்…” என்றுவிட்டு அலைபேசியில் வந்த மெயிலைப் பார்த்தபடி வேகமாய் தனது அறைக்கு சென்று விட்டான். பாலைக் காய்ச்சி காபி கலந்து எடுத்துக் கொண்டு வெளியே வர நேரம் பதினொன்று என்றது சுவர் கடிகாரம். அருளைத் தேட மாடியில் இருப்பது அங்கிருந்து வந்த வெளிச்சத்தில் புரிந்தது. மொட்டை மாடிக்கு குந்தவையுடன் சென்றிருந்தாலும் இதுவரை அருளின் அறைக்கு செல்லாததால் தயக்கத்துடன் நின்றவள், “காபி ஆறிவிடுமோ…” நினைத்து படியேறினாள்.
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து லாப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு தலையணையில் சாய்ந்திருந்தவன் கண்ணை மூடி அமர்ந்திருக்க, அறை வாசலில் நின்று தொண்டையை செருமினாள் வானதி.
அசதியுடன் கண்ணைத் திறந்தவன், “வாங்க…” என்றதும் தயங்கிக் கொண்டே உள்ளே சென்றாள். அவனிடம் கோப்பையை நீட்ட, “ஒரு நிமிஷம், குடிச்சிட்டு தந்திடறேன்…” என்றவன் காபியை வாயில் வைக்க அதன் சுவை கண்ணை மூடி லயிப்புடன் குடிக்க வைத்தது.
அதற்குள் அவளது பார்வை அறையை நோட்டமிட விசாலமாய் பெரிதாய் இருந்தாலும் பொருட்கள் அதனதன் இடத்தில் இருக்க அறை நீட்டாய் இருந்தது.
“தேங்க்ஸ்…” குடித்துவிட்டு கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டவளிடம், “தலை ரொம்ப வலிச்சுது… அதான் காபி கேட்டேன்… சாரி டு டிஸ்டர்பிங் யூ…” என்றான் அருள்.
“இட்ஸ் ஓகே.. டேப்லட் வேணமா…” 
“இல்ல, நோ தேங்க்ஸ்… நவ் பீலிங் பெட்டர்…” என்றதும், “ஓகே,,, குட் நைட்…” என்றவள் கீழே செல்ல அவன் தலையை குலுக்கிக் கொண்டு லாப்டாப்பில் ஆழ்ந்தான்.
அவளையும் அறியாமல் தனது செயலால் வீட்டில் எல்லார் மனதிலும் இடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
காலையில் உற்சாகமாய் எழுந்து வந்த சுந்தரத்தின் மூட்டு வலி நிஜமாலுமே குறைந்திருக்க வாக்கிங் கிளம்பினார்.
“என்னங்க, கால் வலி பரவால்லியா… நடக்க கிளம்பிட்டிங்க…”
“ம்ம்… அந்தப் பொண்ணு செய்த கைவைத்தியம் பரவால்ல… காபி தறியா…” அவர் கேட்க வானதி ஒரு கப்பை நீட்டினாள்.
“எந்தா அங்கிள், என்டே கை வைத்தியம் எங்கனே…”
“ம்ம்… சூப்பர் மோளே… இதென்ன…” என்றார் சிரிப்புடன்.
“இது நிங்கள்க்கு ஒரு கஷாயம்…”
“கஷாயமோ… அதென்னா…”
“குறச்சு விளக்கெண்ண அடுப்பில் வச்சு சூடாக்கி ஒரு கப் ஆரஞ்சு ஜூஸில் கலந்து திவசம் ராவிலே குடிச்சால் மூட்டுவலிக்கு நல்ல சமாதானம் கிட்டும்…”
“ஓ… என்னமோ சொல்லற… குடு, குடிக்கறேன்…” என்றவர் வாங்கிக் குடித்துவிட்டு கிளம்ப அதை உலக அதிசயம் போல நோக்கி நின்றார் சகுந்தலா.
“எந்தா ஆன்ட்டி, இங்கனே நோக்குந்த…”
“மூட்டு வலி வந்தா காலைல எழுந்து வரும்போதே மூஞ்சத் தூக்கி வச்சிட்டு சிடுசிடுக்குற என் புருஷன் இப்போ உன்கிட்ட சிரிச்சுப் பேசிட்டு, அதும் மலையாளம் எல்லாம் பேசிட்டுப் போறாரே…” என்றார் வியப்புடன்.
“ஹாஹா, அதொக்கே மாஜிக்கானு ஆன்ட்டி…” சிரித்தாள்.
“ஹாஹா… எப்படியோ, இந்த சிடுமூஞ்சி சுந்தரத்தை சிரிப்பு மூஞ்சி சுந்தரமாப் பாக்குறது கூட நல்லாத்தான் இருக்கு…” என்றவர், “இந்த அருளு இன்னும் எழுந்திருக்கக் காணோமே… ஒரு எட்டு அவன் ரூம்ல பார்த்திட்டு வரியா… நான் குந்தவையை எழுப்பிட்டு வரேன்…” என்றார்.
“சரி ஆன்ட்டி…” என்றவள் மாடிக்கு சென்று தாளிடாமல் வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறக்க அதிர்ந்தாள்.
ஒருவரை நேசிக்க
காரணம் தேவையில்லை…
அன்பான உள்ளம்
மட்டுமே போதுமாகிறது…
தென்றலென வீசும்
அன்பின்முன் கோபமும்
பனியாய் கரைந்து
காணாமல் போகிறது…

Advertisement