Advertisement

அத்தியாயம் – 7
“உன்னோட அம்மா மட்டும் தான் நம்மோட வாழ முடியும்… வர்றது சித்தியா இருந்தா அவ நம்ம வீட்டை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்…” தனது பொண்ணுக்குத் தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான் அரவிந்த். தமிழ் மதுராவின் எனைக் கொண்டாடப் பிறந்தவளே நாவலை அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தார் சகுந்தலா.
“பாவம் ஸ்ராவணி… குழந்தை மனசுல இப்படி நஞ்சை விதைச்சு வச்சிருக்கானே இந்த நாதன்… அவன் பிள்ளையும் அப்பாக்குத் தப்பாமப் பொறந்திருக்கான்…” மனதுக்குள் வருந்தியபடியே அடுத்த வரியைப் படிக்கத் தொடங்கும் முன் அழைப்பு மணி வீறிட, “ப்ச்… முக்கியமான இடத்துல டிஸ்டர்ப் பண்ணிருவாங்களே…” என யோசிக்கும்போதே மீண்டும் ஒலித்தது. அலைபேசியை மனமில்லாமல் வைத்துவிட்டு அவர் எழுந்து செல்ல வானதி கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.
அருளைக் கண்டதும் அவள் அமைதியாய் அறைக்குள் சென்றுவிட அன்னையிடம் வந்தான் அவன். சுந்தரம் மதிய உணவுக்கு ஏதோ கிளையன்ட்டுடன் வெளியே செல்வதாய் கூற மகன் மட்டும் சாப்பிட வந்தான்.
அந்த அறையைப் பார்த்தவன் கதவு சாத்தியிருப்பதைக் கண்டுவிட்டு, “அம்மா… இதை அந்தப் பொண்ணு கிட்ட கொடுத்திருங்க… காலைல என்னால அந்தப் பொண்ணு சேலைல காபி கொட்டி வீணாப் போயிருச்சு… நான் வாங்கினதா சொல்ல வேண்டாம்… நீங்க கொடுக்கற போல கொடுங்க…” என்ற மகனை நோக்கி புன்னகைத்தார்.
“என்ன அதிசயம்… உனக்கு இப்படிக் கூட யோசிக்கத் தெரியுமா…” கிண்டலுடன் கேட்டவர் அந்தத் துணிப் பையைத் திறந்து சேலையைப் பார்க்க முகம் மலர்ந்தது.
“அட நல்லார்க்கே… காலைல அவ கட்டியிருந்த அதே போல வாங்கிருக்க…” என்றார் வியப்புடன்.
“ம்ம்… என்னால யாரும் சங்கடப்படக் கூடாது… அதும் பிறந்தநாள் அன்னைக்கு… அதான் மனசு கஷ்டமாயிடுச்சு…”
“ம்ம்… எப்படியோ, உனக்குள்ள உன் அப்பா ரத்தம் மட்டும் இல்ல, அம்மா ரத்தமும் ஓடுதுன்னு நிரூபிச்சுட்டே… நீ அவ்ளோ கெட்டவன் எல்லாம் இல்லை…”
“ஆமா, நான் கெட்டவன் இல்லை, கேடு கெட்டவன்… போங்கமா, ஓவரா கிண்டல் பண்ணிட்டு…” என்றதும்,
“டேய் அருளு… ஒரு கதைல கூட இந்த மாதிரி வசனம் வரும் டா…” என்றதும் முறைத்தவன், “நீங்க ஓவரா கதை, படிச்சு கற்பனை உலகத்துலேயே இருக்காம அப்பப்ப நிஜ உலகத்துக்கும் வாங்கம்மா…” என்றான்.
“சரி, அத விடு… நான் சொன்னது வாங்கிட்டு வந்தியா…”
“ம்ம்… வாங்கியாச்சு, வாங்கியாச்சு… வண்டில இருக்கு… சாப்பிட்டு எடுத்துத் தரேன்…” என்றுவிட்டு அவனது அறைக்கு செல்ல வேகமாய் வாசலுக்கு சென்று வண்டி முன் சீட் கவரைத் திறந்து புத்தகத்தை எடுத்தவர் சந்தோஷத்தில் விழிகள் விரிய அதில் முத்தமிட்டார். புத்தகத்தைப் பிரித்து புதிதாய் அச்சிடப்பட்ட தாளை மோந்து பார்த்து, “ஆஹா, புது புக்கோட வாசனையே, வாசனை…” என்றவர் துணிப் பையுடன் சந்தோஷமாய் உள்ளே சென்றார்.
மகனுக்கு சாப்பிட எல்லாவற்றையும் எடுத்து வைத்தவர், “வானதி… நீயும் வாம்மா, சாப்பிடலாம்…” என்று அவளையும் அழைக்க, “இல்ல ஆன்ட்டி… சார் கழிக்கட்டே… நான் பின்னே கழிக்காம்…” என்று மறுத்தாள்.
“அப்படிலாம் சொல்லக் கூடாது… பர்த்டே பேபி தான் முதல்ல சாப்பிடனும்… உனக்காக ஸ்பெஷலா பால் பாயசம் கூட வச்சிருக்கேன்… வா, வா…” என்றதும் கண் கலங்கியது அவளுக்கு.
“எங்கனே ஆன்ட்டி, கண்டு ரெண்டே திவசமாய என்னை நிங்கள்க்கு இத்தர சிநேஹிக்கான் பற்றுந்த…”
“சிநேஹிக்க மனசு தானே வேணும்… அதுக்கு காசு பணம் எல்லாம் வேண்டாமே… அதானே மனுஷன்னு சொல்லுறது… நீ ஓவரா சென்டி அடிக்காம சாப்பிடு வா… உன் வீட்டுல இப்படி தான் இருப்பியா…” என்றதும் வெளியே வந்தாள். உணவு மேசைக்கு வந்த அருள் அங்கே வானதி தயக்கத்துடன் குனிந்து நிற்பதைப் பார்த்துவிட்டு, “அம்மா, நீங்களும் உக்காருங்க… எல்லாரும் ஒண்ணாவே சாப்பிடலாம்…” என்றான் பொதுவாக.
தயங்கி நின்ற வானதியை சகுந்தலா கையைப் பிடித்து அமர்த்தி இருவருக்கும் பரிமாறினார். தனக்கும் பரிமாறிக் கொண்டு அமர்ந்தவர், “ம்ம்… சாப்பிடு…” என்றதும் அவள் மெதுவாய் சாப்பிடத் தொடங்கினாள்.
“அருளு… இன்னைக்கு வானதிக்கு பர்த்டே டா… நீ விஷ் பண்ணியா…” என்ற அன்னையை அவன் முறைக்க, “அதான் காலைலயே காபி அபிஷேகம் பண்ணி வாழ்த்தினானே…” என்பது போல் வானதி அமைதியாய் சாப்பிட்டாள்.
அவள் தட்டில் தடவிக் கொண்டிருப்பதைக் கண்டவன் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருக்க அப்போதுதான் அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் சகுந்தலா பாயாசம் எடுத்து வந்து கொடுத்தார்.
“ஆன்ட்டி… நிங்கள்க்கு சுகர் அல்லே… இதொன்னும் குடிக்கான் பாடில்லா…” என்று பிடுங்கிக் கொண்டவளைப் பரிதாபமாய் பார்த்த சகுந்தலா, “வானதி, ப்ளீஸ்… இப்படி ஏதாச்சும் விசேஷத்துக்கு தான் இனிப்பே சாப்பிடறேன்… குடு மா…” என்று கெஞ்ச கொஞ்சமாய் ஒரு கிளாசில் ஊற்றி, “இது மதி…” என்று நீட்ட உதட்டை சுளித்தார்.
“ஆனைப்பசிக்கு சோளப்பொறி போல, என்னதிது… இனிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்…” என்றார் குழந்தை போல.
“ம்ம்… நிங்கள்க்கு மாத்திரமல்ல… சுகர்க்கும் நிங்களே வளரே இஷ்டமா… அது கொண்டல்லே சுகர் இத்தர கூடியது…” அவளும் கண்டிப்புடன் பேச முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டார்.
“நான் வேணும்னா ஒரு மாத்திரை அதிகம் போட்டுக்கறனே… குடு வானதி…” அடம் பிடித்தார் சகுந்தலா.
“அய்யடா, அதொண்ணும் பாடில்ல ஆன்ட்டி…” என்றவள் இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கொடுக்க வாங்கிக் குடித்தார். அவர்கள் பேசுவது மாடியில் அறைக்கதவு திறந்திருந்ததால் அருளுக்கு நன்றாகவே கேட்க சிரித்துக் கொண்டான்.
“இந்த அம்மா இன்னும் குழந்தை போல அடம் பிடிக்குறாங்க, ம்ம், ஸ்ட்ரிக்டான நர்ஸ் தான் போல…” என நினைத்தபடி புறப்பட்டு கீழே வந்தவன் அன்னையிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் கிளம்பினான்.  
வானதி கொடுத்த மாத்திரையை விழுங்கிவிட்டு சகுந்தலா ஹாலில் புத்தகத்துடன் அமர்ந்திருக்க வானதியும் இருந்தாள்.
“போர் அடிச்சா டீவி பாருமா…” சகுந்தலா சொல்ல டீவியை ஆன் பண்ணி ஆசியாநெட் சானலை வைத்து, மோகன்லால் படம் ஓடிக் கொண்டிருக்க அமர்ந்து பார்க்கத் தொடங்கினாள்.
சகுந்தலா புத்தகத்தில் மூழ்க சற்று நேரத்தில் அவரது அலைபேசி சிணுங்கியது. எடுத்து வந்த வானதி அவரிடம் நீட்ட, “ஏதோ புது நம்பரா இருக்கே…” என்றவர், “நீ டீவி பாரு, நான் ரூமுக்குப் போறேன்…” என்றவர் அறைக்கு சென்றபடி அலைபேசியை அழுத்தி காதுக்குக் கொடுத்தார்.
“ஹலோ, சகுந்தலாம்மா… நான் ஜெயந்தி பேசறேன்…” கரகரவென்ற பின்னணியுடன் ஒலித்த குரலைக் கேட்டதும் திகைத்தார்.
“டாக்டர்… நீங்களா… ஏதோ புது நம்பரா இருக்கே…” இவர் சொல்லிக் கொண்டிருக்க அங்கே ஏதோ டவர் பிரச்சனையாய் இருக்க வேண்டும்… சரியாய் கேட்காமல் டாக்டர் கத்திக் கொண்டிருந்தார்.
“எனக்கு ஒரு பார்சல் கொரியர் வந்துச்சா…” அவர் கேட்க,
“ஆமா டாக்டர், நேத்து வந்துச்சு…” என்று இவர் சொல்வது அவருக்கு சரியாய் புரியாததால் மீண்டும் கேட்டார்.
“பாவம் கேட்கலை போலருக்கே…” என நினைத்தவர் மீண்டும் சொல்ல, “ஹா, ஓகே சகுந்தலாம்மா… நான் வரதுக்கு இன்னும் ஒரு மாசம் மேல ஆகிடும்… உங்ககிட்டயே இருக்கட்டும்…” என்றவர், “இங்க கொஞ்சம் டவர் பிராப்ளமா இருக்கு… அப்புறம் பேசறேன்…” என்று துண்டித்துவிட, “அடடா… வானதியைப் பத்தி சொல்லறதுக்குள்ள வச்சுட்டாங்களே… சரி, மறுபடி கால் பண்ணா சொல்லிக்கலாம்…” என நினைத்தவர் அருள் வாங்கி வந்த துணிப்பையை எடுத்துக் கொண்டு வானதியிடம் சென்றார்.
“வானதி, இது உனக்கு பிடிச்சிருக்கா பாரேன்…” சொல்லிக் கொண்டே புடவையை வெளியே எடுத்து அவளிடம் நீட்ட, “ஆஹான், கசவு சாரியோ, நந்தாயிட்டுண்டு ஆன்ட்டி… குந்தவைக்கா…” என்றாள் புன்னகையுடன்.
“இல்ல, உனக்கு என் பிறந்தநாள் பரிசு…”
“எனிக்கோ… அச்சோ, அதொண்ணும் வேண்டா ஆன்ட்டி…” அவள் வேகமாய் மறுக்க முறைப்பாய் நோக்கினார்.
“ஏன் வேண்டாம்… பிறந்தாளுக்கு பெரியவங்க பரிசு கொடுத்தா வேண்டாம்னு சொல்லக் கூடாது…”
“ஐயோ, அது கொண்டல்ல ஆன்ட்டி… என்டே நாட்டில் சொந்தத்தில் அல்லாதே மற்றவர் கசவு சாரி கொடுத்தா கல்யாணப் பெண்ணினா கொடுக்குக… புடவ கொடுக்குந்தது பறயும்…”
“ஓ… இப்படி எல்லாம் இருக்கா… இது சாதாரண சேலை தானே…” என்றார் திகைப்புடன்.
“இது கசவு சாரி… ராவிலே நான் உடுத்தது சாதாரண கேரளா காட்டன் சாரி… இதுலே பார்டர் கண்டில்லே… இது கல்யாணப் பெண்ணினு கொடுக்கான் உள்ள சாரியா…” அவள் சொல்ல ஆச்சர்யமாய் பார்த்தார் சகுந்தலா.
“ஆஹா, ஆர்வக் கோளாறுல என் பையன் காட்டன் சாரிக்குப் பதிலா கல்யாண சேலையை வாங்கிட்டு வந்துட்டானா… இவ வேற இப்படி சொல்லுறாளே…” அவர் யோசித்தபடி நிற்க,
“இது எப்ப வாங்கியதா… நிங்கள் புறத்து போயில்லல்லோ…”
அவளது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவர், “அ… அது வந்து… நான்…” என முழித்தவர், சமாளிப்பாய் தொடங்கினார்.
“அது ஒண்ணும் இல்லமா, பிறந்தநாள் அதுவுமா காலைல புது சேலைல காபியக் கொட்டிட்டியா… கண்ணெல்லாம் கலங்கி இருந்ததைப் பார்த்ததும் பாவம், நீ ரொம்ப பீல் பண்ணுறன்னு தோணுச்சு… அதான், என் புள்ளைக்கு போன் பண்ணி அதே போல சேலை வாங்கிட்டு வர சொன்னேன்… அந்த மடையன் உன்னோடது போலன்னு நினைச்சு வித்தியாசம் தெரியாம இதை வாங்கிட்டு வந்திருக்கான்… உனக்காக முதன் முதலா நான் வாங்கிக் கொடுத்தது… வேண்டாம்னு சொல்லிடாதம்மா…” அவர் கெஞ்சலாய் கேட்கவும், யோசித்தவள் கையை நீட்டினாள்.

Advertisement