Advertisement

அத்தியாயம் – 6
ட்ரிங்க்க்…
குந்தவை செட் பண்ணி வைத்திருந்த அலாரம் காலை ஐந்து மணி ஆனதும் அலறத் தொடங்கியது. அந்த நேரத்தில் எழுந்து படிப்பது அவளது வழக்கமாதலால் அதன் ஓசையில் கண்ணைத் திறந்தாள் குந்தவை.
அவளது கண்கள் எதிரில் நின்ற வானதியைக் கண்டதும் விரிந்தன. அந்த நேரத்திலேயே குளித்து ஈரஜடை போட்டு கேரளா ஸ்டைல் சேலை உடுத்து புதுமலராய் நின்று கொண்டிருந்தாள்.
எழுந்து அமர்ந்த குந்தவை கண்ணைக் கசக்கிக் கொண்டாள்.
“வானதி… என்ன, இந்த நேரத்துல எங்க கிளம்பிட்ட…”
அவளை நோக்கிப் புன்னகைத்தவள், “டுடே மை பர்த்டே… அடுத்துள்ள அம்பலத்தில் போயிட்டு வரான் அம்ம பறஞ்சு…”
“என்னது பர்த்டே வா… சொல்லவே இல்ல… ஓகே, மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே…” அவள் வாழ்த்த புன்னகைத்தவள், “தேங்க்ஸ் குந்தவை…” என்றாள்.
“இந்த காஸ்ட்யூம்ல நீ ரொம்ப அழகாருக்க…”
“அதயோ…” கேட்டவள் மறுபடியும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு, “எப்பழும் போலே தன்னே…” என்றுவிட்டு, “இந்து என்டே பர்ஸ்ட் வொர்கிங் டே கூடியானல்லோ… பகவதியைத் தொழுதிட்டு வராம்…” என்று கூற, “வானதி, கோவிலுக்குப் போறது நல்ல விஷயம் தான்… ஆனா இந்த நேரத்துல திறந்திருப்பாங்களா…” என்றதும் முழித்தாள்.
“திறக்கில்லே… ஞங்கட நாட்டிலொக்கே அஞ்சு மணிக்கு திறக்குமல்லோ…” என்றதும், சிரித்துக் கொண்டே எழுந்த குந்தவை, “என்டே கேரளத்துப் பைங்கிளியே… அது கேரளம்… இது தமிழ்நாடு… கொஞ்சம் லேட்டா தான் திறப்பாங்க… ஆறு மணிக்கு போனாப் போதும்…” என்றதும், “ஓ… ஓகே… ஆன்ட்டி எப்பலானு எனிக்குக…” என்றாள்.
“அம்மா எழுந்துக்கற நேரம் தான்… போயி பாரு…” என்றதும், “ம்ம்…” என்றவள் கதவைத் திறந்து ஹாலுக்கு செல்ல அடுக்களையில் லைட் எரிந்து கொண்டிருந்தது.
“ஆன்ட்டிக்கு ஒரு சர்ப்ரைஸ் குட்மார்னிங் பறயாம்…” என நினைத்து கொலுசு சத்தம் கேட்காமல் பூனை நடை நடந்து அடுக்களைக்கு சென்றவள், “குட் மார்னிங் ஆன்ட்டி…” என்றபடி உள்ளே செல்ல அதே நேரத்தில் கையில் சூடான காபிக் கோப்பையுடன் வெளியே வந்த அருள்மொழி வர்மன் அவள் மேல் மோத அவன் கையிலிருந்த காபி அவள் உடையில் சிந்த அதிர்ந்து பதறிப் போனாள் வானதி.
அவளை அங்கு எதிர்பார்க்காமல் அதிர்ந்து அவள் மேல் காபி கொட்டிய பதட்டத்தில் திகைத்து நின்ற அருள் தன் மேல் மோதி கீழே விழப் போனவளை வேகமாய் பிடித்துக் கொண்டான். “உஸ்ஸ்ஸ்… ஆஆ…” சூடான காபி அவள் உடையைத் தாண்டி வயிற்றை நனைக்க கையை உதறியவள் சேலையை உதற அவளது அழகான சேலை காபிக் கறையுடன் கேலியாய் சிரித்தது.
அதிர்ந்து போன அருள் உண்மையான வருத்தத்துடன், “ச…சாரி… எதிர்பார்க்கல… ஐ ஆம் ரியல்லி சாரி…” என்றான்.
நிமிர்ந்து அவனைக் கண்ணீரோடு பார்த்து, “பர்த்டேக்கு நல்ல வெகுமானம் கிட்டி… தேங்க்ஸ்…” என்றவள் திரும்பி அவளது அறைக்கு செல்ல அவன் அதிர்ந்து நின்றான். அப்போதுதான் குளித்து தலையில் டவலுடன் அங்கு வந்த சகுந்தலா, வேகமாய் அறைக்குள் சென்ற வானதியையும் காலை நேரத்தில் பேயறைந்த போல நிற்கும் மகனையும் கீழே கொட்டிக் கிடந்த காபியையும் கண்டவருக்கு விஷயம் அரைகுறையாய் புரிந்தது.
“என்னாச்சு அருளு… காபி கொட்டிட்டியா…” அன்னை கேட்கவும் விழித்தவன், “ம்ம்… அந்தப் பொண்ணு நீங்கன்னு நினைச்சு குட்மார்னிங் சொல்லிட்டு உள்ளே வந்துச்சு… நான் எப்பவும் போல காபி எடுத்திட்டு வெளியே வந்தேன்… பாவம், அவங்க டிரஸ் எல்லாம் கொட்டிடுச்சு…” என்றவனை யோசனையாய் பார்த்தவர், “அச்சோ பாவம்டா… பார்த்து வரக் கூடாதா…” மகனை கடிந்து கொண்டார்.
“பார்த்திருந்தா வருவேனாம்மா… எனக்கே கஷ்டமாப் போயிருச்சு… அதும் இன்னைக்கு அவங்களுக்கு பர்த்டே போலருக்கு… புது டிரஸ் எல்லாம் போட்டிருந்துச்சு… சாரி மா… நான் வேணும்னு பண்ணலை…” என்றவனின் தோளில் தட்டிக் கொடுத்தவர், “ம்ம்… எனக்கு உன்னைத் தெரியாதா… நான் சொல்லிக்கறேன், நீ போ…” என்றதும் அவனது உடையிலும் தெறித்திருந்த காபியைக் கழுவுவதற்காய் தனது அறைக்கு சென்றான் அருள்.
மனது அவனைக் கடிந்து கொண்டது.
“ச்சே… காலைல இப்படி ஆகிருச்சே… அந்தப் பொண்ணு பிறந்தநாள்னு புது டிரஸ் எல்லாம் போட்டுட்டு எங்கயோ கிளம்பிருக்கும் போலருக்கு…” என நினைத்தபடி உடையை மாற்றியவன் காலில் ஷூவை அணிந்து கொண்டு வழக்கம் போல் ஜாகிங் கிளம்பினான். சில நேரம் அவன் செல்வதற்கு முன் சகுந்தலா எழுந்திருக்காவிட்டால் அன்னைக்கு காத்திருக்காமல் அவனே காபி கலந்து குடித்துவிட்டுச் செல்வது வழக்கம்.
சகுந்தலா வானதியைக் காண செல்கையில் குந்தவை பாத்ரூமில் இருக்க வானதி அந்த உடையைப் பார்த்துக் கொண்டே சோகமாய் கட்டிலில் அமர்ந்திருந்தாள். அடிக்கடி கண்கள் கலங்க கட்டுப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். மூக்கு கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க கதவைத் திறக்கும் ஓசையில் வேகமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தவள் சகுந்தலாவைக் கண்டதும் புன்னகைத்தாள்.
“கு..குட்மார்னிங் ஆன்ட்டி…”
“குட்மார்னிங் வானதி… சீக்கிரமே எழுந்துட்ட போலருக்கு…”
“ம்ம்… அதே ஆன்ட்டி…” என்றவள் அவர் காலில் விழுந்தாள்.
“என்னை பிளஸ் செய்யு ஆன்ட்டி… என்டே பிறந்தாள் ஆனு…”
“ஓ… நூறு வயசுக்கு ஆரோக்கியமா, சந்தோஷமா, நல்லாருமா… எதுக்கு கால்ல எல்லாம் விழுந்துட்டு…”
“நிங்களும் என்ட அம்ம போல அல்லே…” என்றவளை நெகிழ்வாய் பார்த்தவர், “இதென்ன, சேலைல காபி கொட்டிடுச்சா…” என்று கேட்கவும்,
“அ…அது வந்திட்டு… அதே ஆன்ட்டி… காபி குடிக்கான் தோணி… உண்டாக்கும்போ மேல தூத்து போயி…” சமாளித்தவளை நோக்கிப் புன்னகைத்தார்.
“ம்ம்… ஏன் கண்ணெல்லாம் கலங்கிருக்கு… அம்மா நினைப்பு வந்திருச்சா…”
“ம்ம்…” மௌனமாய் தலையாட்டியவளின் கையைப் பிடித்துக் கொண்டவர், “நீ ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்… நீ என்னடான்னா அம்மாவை நினைச்சு அழறேன்னு சொல்லற… அப்ப என்னை அம்மா போலன்னு சொன்னது சும்மாவா…” என்று சிரிக்க, “அச்சோ, அங்கனே ஒண்ணும் இல்ல ஆன்ட்டி… நிங்களும் என்டே அம்ம போல தன்னே…” சொன்னவளின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தவர், “சரி, எல்லாரும் கிளம்பினதும் நம்ம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு வரலாம்… சரியா பர்த்டே பேபி…” என்று கேட்க மனதிலுள்ள வருத்தம் நீங்கி புன்னகைத்தாள் வானதி.
“இந்த டிரஸ்ஸை மாத்திட்டு வா… சாமிக்கு இன்னைக்கு நீ விளக்கு வை… நான் வாசல் கூட்டிட்டு வறேன்…” தோளில் ஆறுதலாய் தட்டி சென்றவர் மனது நிறைந்திருந்தது.
“நான் வருத்தப்படக் கூடாதுன்னு என் மகனைக் குத்தம் சொல்லாம பழியை உன் மேலயே போட்டுகிட்டியா… நல்ல பொண்ணுதான்…” என மனதுக்குள் மெச்சிக் கொண்டே அடுக்களைக்கு சென்றார்.
பாத்ரூமில் இருந்து வருவதற்குள் வேறு உடையில் நின்று கொண்டிருந்த வானதியைக் கண்டு திகைத்தாள் குந்தவை.
“என்னாச்சு வானதி, கோவிலுக்குப் போகலையா… ஏன் சுரிதார் போட்டுகிட்ட… அந்த டிரஸ் அழகா இருந்துச்சே…” வானதி அவளை நோக்கிக் கேட்க புன்னகைத்தாள்.
“ஆன்ட்டி இவிட பூஜா ரூமில் விளக்கு வச்சு என்னைப் பிரார்த்திக்கான் பரஞ்சு… பணி கழிஞ்சு ஆன்ட்டியும் என்ட கூடே அம்பலத்திலேக்கு வராமெந்து…”
“ஓ… அதும் நல்லது தான்… சரி, நீ போயி சாமிக்கு விளக்கு வை… எனக்கு முக்கியமான ஒரு டெஸ்ட் இருக்கு… படிச்சிட்டு வரேன்…” என்றவள் புத்தகத்துடன் அமர வானதி வெளியே வந்தாள். சகுந்தலா அதற்குள் வாசல் பெருக்கி தெளித்துவிட்டு முன்னில் இருந்த செம்பருத்தி, அரளிப் பூக்களைப் பறித்து வந்தார்.
“இந்தாம்மா, இந்தப் பூவை சாமிக்கு வச்சிட்டு விளக்கு ஏத்து… கடவுள் உனக்கு எல்லா ஐஸ்வர்யமும் தரட்டும்…” என்றவரிடம் புன்னகைத்து அவர் சொன்னபடியே வைத்து விளக்கேற்றியவள் மனதாரப் பிரார்த்தித்தாள். அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்ட சகுந்தலா, “நல்லா இரும்மா…” என்றுவிட்டு அவரும் பிரார்த்தித்துவிட்டு காபி கலக்க சென்றார். வானதி அங்கே செல்லும்போது சூடாய் காபி காத்திருந்தது.
குந்தவைக்கு ஒரு கப்பைக் கொடுக்க சொல்லிவிட்டு அவளுக்கும் ஒரு கப்பை நீட்டியவர் கணவருக்கு பிளாக் டீயுடன் அறைக்கு சென்றார்.
அதற்குள் வாக்கிங் செல்லத் தயாராய் புறப்பட்டு நின்ற சுந்தரம், “ஒரு பிளாக் டீ கொண்டு வர இவ்ளோ நேரமா…” என்று கடிந்து கொண்டே அந்த நர்ஸ் பொண்ணை உன்கூட வேலை செய்ய கூடமாட வச்சுக்கோ… வேற வேலை எதும் இல்லையே…” என்று சொல்லிக் கொண்டே சத்தத்துடன் டீயை உறிஞ்சியவர் முகத்தை சுளித்தார்.
“ஆறிப் போன டீயைக் கொண்டு வராதேன்னு எத்தன தடவை உனக்கு சொல்லுறது…” அவர் எரிச்சலுடன் கேட்க, “சூடா தாங்க கொண்டு வந்தேன்… காத்துக்கு சீக்கிரம் ஆறிடும் போலிருக்கு…” என்றார் சமாளிப்பாக.
“ஹூம்… இந்த வியாக்யானத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல, நடுவுல மொபைலை நோண்டிட்டு இருந்திருப்ப…” என்றார் கடுப்புடன்.
“அச்சோ, இந்த மனுஷன் பார்த்த மாதிரியே சொல்லுறாரே… FB நோடிபிகேஷன் நிறைய காட்டுதே… எந்த ஸ்டோரி போட்டிருக்காங்கன்னு பார்த்தது ஒரு குத்தமா…” என யோசித்தாலும், அவரிடம் வீறாப்பாய் பேசினார்.
“நாளைக்கு வேணும்னா ஸ்டவ்வை இங்கயே கொண்டு வந்து உங்களுக்கு டீ போட்டுத் தர்றேன்… அப்ப ஆறாதுல்ல…” இளக்காரமாய் கேட்டவரை முறைப்புடன் பார்த்தவர், “பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…” என்றவர் அதற்கு மேல் அவரிடம் பேசினால் வாக்கிங் டைம் குறைந்துவிடும் என்ற நினைப்புடன் அருகில் இருந்த பார்க்குக்கு கிளம்பினார். 
அவர் காலை சமையலைத் தொடங்க வானதியும் வந்து சேர்ந்து கொண்டாள். காய்கறி நறுக்கிக் கொடுப்பது, வெங்காயம் தோலுரித்துக் கொடுப்பது என செய்து கொண்டிருந்தவள், “ஆன்ட்டி… இட்லிக்கு சம்மந்தி எந்தா…” என்றதும் சகுந்தலா முழித்தார்.
“இட்லிக்கு சம்மந்தியா… அப்படின்னா…”
“ஓனியன், தேங்கா சம்மந்தி அரைக்கில்லே…”
“வெங்காயம், தேங்கா சம்மந்தியா… ஒருவேளை சட்டினியை சொல்லுறாளோ…” என நினைத்தவர், “இட்லிக்கு என்ன சட்னின்னு கேக்கறியா வானதி….” என்றார்.
“ம்ம்… அதே ஆன்ட்டி…” என்றதும் சிரிப்பாய் வந்தது.
“நாங்க இங்கே மணமக்களைப் பெத்தவங்களை தான் சம்மந்தின்னு சொல்லுவோம்…” எனவும் முழித்தாள்.
“ஓ… மணமக்கள் பரஞ்சால்…”
“கல்யாணப் பொண்ணு, மாப்பிள்ளை தான் மணமக்கள்… அவங்களைப் பெத்தவங்க தான் சம்பந்தி… இப்போ அது மாறி சம்மந்தியா வந்து நிக்குது… சம்பந்தின்னு சொன்னா சம் பந்தி நல்ல உறவினர்னு அர்த்தமாம்… எங்க அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன்… ஆனா, சம் மந்தி னு சொன்னா நல்ல குரங்குன்னு அர்த்தமாம்… ஹாஹா… நல்ல குரங்குன்னு தான் இப்போ எல்லாம் சம்பந்தியை சொல்லிட்டு இருக்கோம்…” என்று அவர் சிரிக்க அவளும் சிரித்தாள்.
“அய்யடா… நல்ல குரங்கோ… ஹாஹா… சூப்பர் ஆன்ட்டி… தமிழ் ரொம்ப அழகாருக்கு… எனிக்கும் பரஞ்சு தரனே…”
“ம்ம்… இங்கிருந்து நீ கிளம்பறதுக்குள்ளே நிச்சயம் தமிழ் பேசிடுவேன்னு நினைக்கறேன்… நான் மலையாளமும்…”
“ஹாஹா… அதே ஆன்ட்டி…” என்றவள், “நான் குறச்சு உள்ளி சம்மந்தி உண்டாக்கட்டே… என்டே நாட்டிலே ஸ்பெஷலா…”
“ஓ… உண்டாக்கிக்க… உள்ளின்னா என்ன…”
“ஓனியன் சம்மந்தி ஆன்ட்டி…”
“ம்ம்… அதென்ன நாங்க ஆனியன் சொல்லுறதை நீங்க ஓனியன் சொல்லுறிங்க… ஓபீஸ், கோலேஜ், லோரின்னு எங்க ஆ சவுண்டு எல்லாம் ஓ சவுண்டுல சொல்லறிங்க…” என்றார் இட்லியை ஊற்றிக் கொண்டே.
“ஹாஹா… அதிலு ஓ வரனது கொண்டு தன்னே… Onion, Office, College, Lorry… கண்டில்லே… எல்லாற்றிலும் ஓ அல்லே வரனது…” அவள் கேட்கவும், “ஓஓ… அங்கனே ஆக்கும்…” என்றார் சகுந்தலா. அதைக் கேட்டு அவள் சிரிக்க, இருவரும் கலகலவென்று பேசிக் கொண்டே சமையலை முடித்தனர்.
முதலில் சாப்பிட வந்த சுந்தரம், அந்த புதிய ஓனியன் சம்மந்தியைக் கண்டு, “இதென்ன, சிவப்பா ஒரு சட்னி அரைச்சு வச்சிருக்க… இருக்கற மிளகாயை எல்லாம் போட்டுட்டியா…” என்று நக்கலடிக்க, “எதா இருந்தாலும் சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க…” என்றார் சகுந்தலா.
காரமாய் இருந்தாலும் தேங்கா எண்ணெய் மணமும், அதன் சுவையும் ஒரு இட்லியை அதிகமாய் அவரை சாப்பிட வைக்க, அதற்குப் பிறகு பேசாமல் சாப்பிட்டார்.
“என்னங்க பேச்சைக் காணோம்… சம்மந்தி நல்லாருக்கா…” என்றதும் விழித்தவர், “சம்மந்தியா…” என்று கேட்க, “நீங்க சாப்பிட்டீங்களே, அதுக்குப் பேரு கேரளாவுல சம்மந்தியாம்…”
“ஓஹோ… இது நர்ஸ் பொண்ணு செய்ததா…”
“ம்ம்… இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு பிறந்தநாளாம்… நீங்க வாழ்த்து சொன்னா சந்தோஷப்படுவா…” என்றார்.
“ம்ம்…” என்றவர் சாப்பிட்டு கை கழுவ எழுந்தார். வானதி அடுக்களையில் நிற்பதைக் கண்டவர், “ஹாப்பி பர்த்டே மா… உன் சம்மந்தி நல்லாருக்கு…” என்றதும் “தேங்க்ஸ் அங்கிள்…” என்றவள் புன்னகைத்தாள்.
அவர் ஆபீஸ் கிளம்பியதும் குந்தவை புறப்பட்டு வர அருளும் கிளம்பி வந்தான். இருவரும் சாப்பிட அமர குந்தவை வானதியை அழைத்தும் அவள் சகுந்தலாவுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன்… என மறுத்துவிட குந்தவை சாப்பிட வந்தாள். வானதி அறைக்குள்ளேயே இருந்தாள்.
“ஆஹா, சிவப்பு உள்ளி சம்மந்தி… வானதி பண்ணதா மா…” குந்தவை ஆவலுடன் கேட்க, “ஆமாடி, உனக்கெப்படி தெரியும்…” என்றார் சகுந்தலா.
என் காலேஜ்ல பிந்து கொண்டு வருவா… இந்த சம்மந்திக்கு நாங்க எல்லாரும் அடிமைன்னா பார்த்துக்கோங்களேன்…” என்றபடி அவள் இட்லியை சாப்பிட, “தோசை ஊத்தட்டுமா…” என்று சகுந்தலா கேட்டும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
அருள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சாப்பிட்டு எழுந்தான். அவனுடன் கல்லூரிக்கு கிளம்பிய குந்தவை, “வானதி, கிளம்பறேன்…” என்று குரல் கொடுக்க அவள் வெளியே வந்தாள்.
 
அவளிடம் கையசைத்து குந்தவை வாசலுக்கு நடக்க அருளும் ஹெல்மெட்டுடன் தொடர்ந்தான்.
அவர்கள் பின்னால் வந்த சகுந்தலா, “அருளு… வரும்போது அம்மாக்கு ஒண்ணு வாங்கிட்டு வரியா…” என்றதும் நின்றவன், “என்னம்மா வாங்கணும்…” என்று கேட்க, “வர்ற வழியில பெரிய புக் ஸ்டால் இருக்கே… அங்க இன்பாவோட புதிய கதை “ஜென்மம் முழுவதும்” வந்திருச்சான்னு கேட்டுட்டு வரியா…” என்றதும் முறைத்தான்.
“உங்களுக்கு வேற வேலை இல்லையாம்மா… எவ்ளோ தான் புக் படிப்பீங்க…” என்றதும், “என் செல்லம் இல்ல, என் தங்கம் இல்ல…” என்றதும், “தங்கமும் இல்ல, தகரமும் இல்ல… நேரம் காலமில்லாம இப்ப கிடைக்கிற புக் எல்லாத்தையும் படிச்சு தான் தலைவலி, தலை சுத்தல்னு இருக்கீங்க… உங்க நர்ஸ் இதெல்லாம் கவனிக்க மாட்டாங்களா…” என்று கேட்க,
“ஏன்மா கிளம்பற நேரத்துல அலும்பு பண்ணறீங்க… காலேஜ்க்கு டைம் ஆச்சு…” குந்தவை குதிக்க, “போடா, நீ வாங்கிட்டு வரலேன்னா என் தளபதி வானதியை அழைச்சிட்டுப் போயி  நானே நேர்ல வாங்கிக்கறேன்…” அவர் கெத்தாய் சொல்ல முறைத்தான்.
“அம்மா, ஓவரா சீன் போடாதீங்க… அந்தப்பொண்ணு  இங்கிருந்து கிளம்பிட்டா நான்தான் மறுபடி உங்களுக்கு புக் வாங்கிட்டு வரணும்…” என்றவன், “நீங்க எங்கயும் போக வேண்டாம்… நானே வாங்கிட்டு வரேன்…” என்றான். “என்ன இருந்தாலும் என் புள்ள பாசக்காரன்டா…” சகுந்தலா மகனை மெச்சிக் கொள்ள மகள் சிலிர்த்துக் கொண்டாள்.
“ஹூக்கும் வேஷக்காரன்… டைம் ஆச்சு, கிளம்பலாம் அண்ணா…” அவள் சொல்ல பைக்கை கிளப்பினான் அருள்.
அலுவலகம் சென்ற பின்னும் கூட அவளது பிறந்தநாள் அன்று அழ வைத்து விட்டோமே… என்று மனம் உறுத்த… கண்ணீர் நிறைந்த அவளது கண்கள் மனதில் நிழலாடியது. மதியம் உணவுக்கு வீட்டுக்கு வரும் வழியில் அன்னை சொன்ன புத்தகத்தை புக் ஸ்டாலில் வாங்கிக் கொண்டான்.
அருகே ஒரு துணிக் கடையில் வரிசையாய் கேரளா நெசவு சேலைகள் அழகழகாய் தொங்கிக் கொண்டிருக்க அதைக் கண்டதும் வானதி உடுத்தி இருந்தது நினைவு வந்தது. உள்ளே சென்றவன் அதில் மனதுக்குப் பிடித்த ஒன்றை அவளுக்காய் வாங்கிக் கொண்டான்.
“நான் கொடுத்தால் ஒருவேளை வாங்க மறுத்து விடுவாள்… இதை அம்மாவிடம் கொடுத்து கொடுக்க சொல்ல வேண்டும்…” என நினைத்ததும் தான் அவன் மனது சற்று நிம்மதியானது.
முகமூடியாய் சில நேசங்கள்…
முகம் மூட சில வேஷங்கள்…
நேசங்களும் வேஷங்களும்
என்றும் நிரந்தரமில்லை…
நேசம் கொண்ட நெஞ்சில்
நித்தியப் பகையில்லை…
வேஷம் போடும் நெஞ்சில்
சில்லென்ற சிறுதுளியாய்
நேசத்தின் மழை
விழுந்து விட்டால்
கலைவது முகத்தின்
வேஷம் மட்டுமல்ல….
முகத்தை மூடப் போட்ட
பகையின் வேஷமும் தான்…

Advertisement