Advertisement

அத்தியாயம் – 5
ஒருவரை ஒருவர் கண்டதும் திகைத்த அருளும், வானதியும் ஒரே சமயத்தில் கேட்டனர்.
“நீங்க இங்கே…”
“நிங்கள் இவிடே…”
அதற்குள் அங்கே வந்த சகுந்தலாவும், குந்தவையும் ஆச்சர்யத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே அறிமுகம் இருக்கா…” என்றவர், “என் புள்ளை அருள்மொழி வர்மன் மா…” அவளுக்கு அறிமுகப் படுத்தினார். “வானதி, என்னைக் கூட இருந்து கவனிச்சுக்க வந்திருக்கும் ஹோம் நர்ஸ் அருளு… அப்பா ஏற்பாடு பண்ணி இருக்கார்…” என்றதும் அவன் அதிர்ச்சியுடன், “ஹோம் நர்ஸா…” என்று அவளை ஆராய்ச்சியாய் பார்க்க தலையைத் தாழ்த்திக் கொண்டவள், “எந்தா என்னைக் கண்டா நர்ஸ் போல் இல்லே…” என்றாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் அன்னையின் கையைப் பிடித்து வேகமாய் அடுக்களைக்கு அழைத்துச் செல்ல நடந்ததை யோசனையாய் பார்த்துக் கொண்டிருந்த குந்தவை அவர்கள் பின்னால் சென்றாள்.
குரலைத் தழைத்துக் கொண்டவன், “அம்மா உங்களுக்கு ஹோம் நர்ஸ் வச்சு பார்த்துக்கற அளவுக்கு அப்படி என்ன உடம்புக்கு முடியல… அப்பா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரே… உங்களுக்கு என்னதான் ஆச்சு… இப்படி முன்னப் பின்னத் தெரியாத ஒரு பொண்ணைக் கொண்டு வந்து வீட்ல வச்சிருக்கீங்க… அதும் வயசுப் பையன் இருக்கற வீட்ல…”
“யாரு நீயு… சுத்த ரசனையில்லாத பையன் ணா நீ… இவ்ளோ அழகா ஒரு பொண்ணை வீட்ல பார்த்தா எல்லாப் பசங்களும் சந்தோஷப் படத்தான் செய்வாங்க… நீதான் இவ்ளோ கேள்வி கேக்கற… உனக்கெல்லாம் கடவுள் கொஞ்சம் கூட ரசனையைக் கொடுக்கவே இல்லையே… இயல்பா இந்த வயசுல வரவேண்டிய உணர்ச்சிகளே இல்லாம இருக்க…” குந்தவை கேலி செய்ய அருள் முறைத்தான்.
“நீ சும்மாருடி… அவனைக் கிண்டல் பண்ணிட்டு… அந்தப் பொண்ணு இங்கே இருக்கறதால உனக்கு என்னப்பா பிரச்சனை… எல்லாரும் கிளம்பிப் போயிட்டா, அம்மா வீட்ல தனியாவே இருக்கேன்… நேத்து கோவில்ல மயங்கி விழுந்த போல இங்க யாரும் இல்லாதப்ப மயங்கி வச்சா… அதான் அப்பா இந்த ஏற்பாடைப் பண்ணி இருக்கார்… அதும் இந்தப் பொண்ணு தான் நேத்து என்னைக் காப்பாத்தின தேவதை…”
“அதுக்காக, அந்தப் பொண்ணைப் பத்தி நமக்கு எதுவுமே தெரியாது… ஏதாச்சும் வில்லங்கம் பிடிச்ச பொண்ணா இருந்தா என்ன பண்ணறது…”
“சேச்சே… அப்படிலாம் ஏதும் இருக்காது டா… அந்தப் பொண்ணு முகத்தைப் பார்த்தியா… பால் போல களங்கமே இல்லாம எவ்ளோ வெள்ளையா இருக்கு… முகத்தைப் பார்த்தா நமக்குத் தெரியாதா… வெள்ளையா இருக்கவங்க பொய் சொல்ல மாட்டாங்கப்பா…” என்றார் சகுந்தலா. அவர் சொன்னதைக் கேட்டு அருளோடு குந்தவையும் விழித்தாள்.
“என்னடா இது, புதுப் புரளியா இருக்கு…” குந்தவை அன்னை சொன்னதைக் கேட்டு திகைத்து நிற்க அருள் கேட்டான்.
“என்னம்மா, நீங்க சின்னக் குழந்தை போல சொல்லறீங்க… எந்தக் காலத்துல இருக்கீங்க… இந்தக் காலத்துல உறவா இருக்கவங்களையே நம்ப முடியல, யாரோ என்னவோ… எதுக்கு வீட்ல சேத்தறிங்க…”
“அடப் போடா… விட்டா நீ என்னையே நம்ப மாட்டன்னு சொல்லுவ… உன் அப்பா கூட சேர்ந்து மனுஷங்க மேல உள்ள நம்பிக்கையே போயிருச்சா… அந்தப் பொண்ணு இங்க இருக்கறதால உனக்கென்ன பிரச்சனை… அது பாட்டுக்கு இருக்கப் போகுது… அழகான பொண்ணு வீட்ல இருக்கே… நம்ம மனசு தடுமாறிடுமோன்னு யோசிக்கறியோ… உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா…” என்று கேட்க,
“அம்மா நான் என்ன சொல்லறேன்… நீங்க என்ன கேக்கறிங்க… என்னமோ பண்ணுங்க…” என்றவன் கடுப்புடன் வெளியே செல்ல அங்கே நின்று கொண்டிருந்த வானதியை முறைத்துக் கொண்டே தனது அறைக்கு சென்று விட்டான்.
“இவன் என்ன இப்படி சிலிர்த்துக்கறான்… அப்பாக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு…” மகளிடம் சொல்லிக் கொண்டே “அந்தப் பொண்ணு ஏதாச்சும் நினைச்சுக்கப் போகுது… நீ அவ கிட்டப் போ… அப்பாவை சாப்பிட வர சொல்லு…” என்றார்.
“சரிம்மா…” என்று வெளியே வந்த குந்தவை வானதியிடம், “உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே அறிமுகம் இருக்கும் போலருக்கே… எங்கே பார்த்திங்க…” என்றாள்.
“அது இந்தலே பஸ்ஸில்…” அவள் சொல்லவும், “ஓ… நீ சொன்ன அந்த ஒருத்தன் இவன் தானா… ஹாஹா… அது சரிதான்… இவன் தன் காரியம் மட்டும்தான் பார்ப்பான்… பக்கத்து வீட்ல கொலையே நடந்தாலும் நான் எதுவும் பார்க்கலைன்னு கண்ணை மூடி உக்கார்ந்துப்பான்… ஆனாலும் என் அண்ணன் பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப நல்லவன்… ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்…”
கிண்டலாய் தொடங்கி பெருமையாய் அவள் முடிக்க, “அதான் எனக்குத் தெரியுமே…” என்பது போல் அமைதியாய் சிரித்தாள் வானதி.
“சரி, அப்பாவை சாப்பிட அழைச்சிட்டு வந்திடறேன்…” என்றவள் தந்தையின் அறைக்கு செல்ல இவளும் தங்கள் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
குந்தவை அவளை சாப்பிட அழைக்க, “இல்லா, பர்ஸ்ட் அவர் கழிக்கட்டே… நான் பின்னே கழிச்சோலாம்…” (முதல்ல அவங்க சாப்பிடட்டும்… நான் அப்புறம் சாப்பிடறேன்…” என்றதும் அவள் தயக்கத்தைப் புரிந்து கொண்டு வற்புறுத்தாமல் சென்றாள்.
சுந்தரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அருளும் வர உர்ரென்று அமர்ந்தவனை நோக்கி புன்னகைத்துக் கொண்டே பரிமாறினார் சகுந்தலா.
“அந்தப் பொண்ணு எங்கே…” சுந்தரம் கேட்க,
“என்னங்க, பொண்ணு பன்னுன்னு… வானதின்னு எவ்ளோ அழகா பேர் வச்சிருக்காங்க… பேர் சொல்லிக் கூப்பிடுங்க…” என்றார் சகுந்தலா.
“அதெல்லாம் நீயே கூப்பிட்டுக்க… அந்தப் பொண்ணு இங்கே வேலைக்கு தான் வந்திருக்கு… அதை மறந்துடாத…” அவர் சொல்லவும் சகுந்தலாவின் முகம் சுருங்கியது.
“ஜெயந்தி டாக்டர் வர வரைக்கும் இருக்கட்டும்… அப்புறம் பகல்ல மட்டும் வர சொல்லிட்டு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடலாம்…” சப்பாத்தியை குருமாவில் வழித்து நக்கிக் கொண்டே சொன்னவர் சாப்பிட்டு எழுந்தார்.
“ஹூக்கும்… இந்த மனுஷனைத் திருத்த முடியாது…” என்ற அன்னையை நோக்கிய அருள், “என்னமோ மா… இதெல்லாம் எனக்கு சரியாத் தோணலை… அந்தப் பொண்ணு பகல்ல உங்களைப் பார்த்துக்க இருந்தாலும் ஈவனிங் ஏதாச்சும் ஹாஸ்டல் பார்த்து தங்க வைக்க வேண்டியது தான… வீட்ல எதுக்குத் தங்கணும்…” என்றான் அருள்.
“உனக்கென்னடா… என்னமோ அவள உன் மடில சுமந்துட்டு இருக்காப்பல சலிச்சுக்கற…” அவர் எரிச்சலுடன் கேட்கவும் வாயை மூடிக் கொண்டவன் சாப்பிட்டு எழுந்தான்.
அவர்கள் சென்றதும் பெண்கள் மூவரும் சாப்பிட அமர வானதியின் முகம் வாடியிருந்தது. யோசனையுடன் அமர்ந்திருந்தவளைக் கண்ட சகுந்தலா, “என்ன வானதி, என்ன யோசிக்கற… சாப்பிடு மா…” என்றார்.
“ம்ம்…” என்றவளிடம் குந்தவை, “ஏன் வானதி, எங்க அம்மா சமையல் பிடிக்கலையா… சாப்பிடாம வச்சிருக்க…” குந்தவை கேட்க, “அச்சோ… அங்கனே ஒண்ணும் இல்லா… சப்பாத்தி நல்ல டேஸ்ட் ஆயிட்டுண்டு…” என்றவள் சாப்பிடத் தொடங்க அவர்களும் சாப்பிட்டனர்.
“வானதி, என் மகன் சொன்னதைக் கேட்டு உன் மனசுல ஏதோ வருத்தம் இருக்குனு நினைக்கறேன்… அவன் சொன்னதை நீ பெரிசா எடுத்துக்காதம்மா…” என்ற சகுந்தலாவைக் கண்ணில் நீருடன் பார்த்தாள்.
“ஐயோ, அங்கனே ஒண்ணும் இல்ல ஆன்ட்டி… நிங்கள் ரெண்டு பேரும் என்னோடு காட்டன சிநேஹம் கண்டப்போ எண்டே வீட்டிலே ஓர்ம வந்து… ராத்திரி எவிடே எங்கனே தாமசிக்குமென்னு கலங்கி நிந்த எனிக்கு இவிடே வந்தப்போ சொந்தம் வீட்டில் எத்திய ஆசுவாசம்… பட் நிங்கள மோன் பரயனதும் சரியல்லே… என்னெப் பற்றி ஒண்ணும் அரயாதே தன்னே வீட்டில் தாமசிப்பிச்சில்லே… நிங்கள்க்கு வலிய மனசானு… நாளே ஒரு ஹாஸ்டல் நோக்கிட்டு நான் மாறிக்கொள்ளாம்…” என்றவளின் குரல் கலங்கியிருந்தது.
(நீங்க ரெண்டு பெரும் என்கிட்ட காட்டற அன்பைப் பார்க்கும் போது எனக்கு வீட்டு நினைவு வந்திருச்சு… ராத்திரி எங்கே தங்கறதுன்னு தவிச்சு நின்ன எனக்கு இங்கே வந்தப்ப சொந்த வீட்டுக்கு வந்தபோல நிம்மதியாருக்கு… ஆனா உங்க மகன் சொல்லறதும் சரிதானே… என்னைப் பத்தி எதுவும் தெரியாமயே உங்க வீட்ல தங்க வச்சிங்களே… உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு… நாளைக்கு நான் ஹாஸ்டல் பார்த்துட்டு மாறிக்கறேன்…)
“அட, என்ன வானதி, இதுக்குப் போயி கலங்கிட்டு… வயசுப் பொண்ணை வீட்ல வச்சிருக்கேன்… இந்த சமூகத்துல ஒரு பொண்ணு தனியா நின்னா எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தெரியாதா… ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம்… நீயும் எனக்கு பொண்ணு போலதான்… உன் வீடு மாதிரி நினைச்சுக்க… தயக்கமில்லாம சந்தோஷமா இரு…” என்றார் சகுந்தலா.
“அடடா, ஒரே சென்டியா இருக்கே… போதும் வானதி… முன்னப் பின்ன தெரியலைனா என்ன, இனி தெரிஞ்சுப்போம்… உன்னைப்பத்தி சுருக்கமா இப்ப சொல்லு… சாப்பிட்டு, தூங்கி ரெஸ்ட் எடுத்திட்டு… நாளைக்கு விரிவா உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கறோம்… இப்ப சாப்பிட்டே சொல்லு…” என்றாள் குந்தவை.
“ஹாஹா, அவளுக்கு பத்து மணியானா தூங்கிடனும்… அதுக்கப்புறம் நீ எது சொன்னாலும் காதுக்குள்ள போகாது… சீக்கிரமா சொல்லிடு…” சகுந்தலா சொல்ல வானதி சிரித்தாள்.
“நான், ரெண்டு காலும் ஆக்சிடன்டில் நடக்கான் பற்றாத போய சேச்சி, சுகமில்லாத அச்சன், எல்லாரையும் தாங்கிப் பிடிக்கன அம்மா… இதானு என்டே குடும்பம்…” அவள் சொல்லி நிறுத்தவும் அதைக் கேட்ட இருவர் மனமும் கனத்துப் போனது.
“என்னமா சொல்லற… உன் அக்காவுக்கு ஆக்சிடன்டில் ரெண்டு காலும் நடக்க முடியாமப் போயிருச்சா…”
“ம்ம்… சேச்சிக்கு இங்கனே சம்பவிச்சது அச்சனு சகிக்கான் பற்றியில்ல… அச்சனும் அட்டாக் வந்து… டாக்டர் பரிசோதிச்சு இனி ஜோலிக்குப் போகான் பாடில்ல, ஹார்ட்டில் ஒரு பிளாக் உண்டெந்து பரஞ்சு… அச்சண்டே வருமானம் மாத்திரம் வந்திருந்த வீட்டில் அதும் நின்னு… நல்ல காலம் என்டே நர்ஸிங் கோர்ஸ் கழிஞ்சிருந்து… கழிஞ்ச மாசம் அவிடே ஒரு மெடிக்கல் காம்பில் ஜெயந்தி டாக்டரும் உண்டாயிருந்து… அவருக்கு என்டே குடும்ப ஸ்திதி அரயாம்… நாட்டில் ஜோலிக்கு நோக்கியப்போ பிரஷ் ஆயது கொண்டு சாலரி வளரே குறச்சு பரஞ்சு… அது எண்டே வீட்டில் மருந்து செலவினு போலும் போறா… அதுகொண்டா இவிடேக்கு வந்தது… இவிடே நல்ல சாலரி கிட்டுமெந்து பரஞ்சு… இனி நானானு குடும்பத்தினே நோக்கேண்டது…” அவள் சொன்னதை மௌனமாய் கேட்டிருந்த குந்தவை, சகுந்தலாவின் உள்ளம் பாரமாய் உணர்ந்தது.
“இந்த சின்ன வயதில் இப்பெண்ணுக்கு இத்தனை பெரிய பொறுப்பா… பாவம் இவள் அக்கா… ஓடியாடி வாழ வேண்டிய வயதில் விபத்தில் காலை இழந்து முடங்கிப் போவதெல்லாம் எத்தனை கஷ்டம்… பிள்ளைகளை இப்படிக் கண்டால் எந்த தந்தைக்கு தான் பொறுக்கும்… அதான் ஹார்ட் அட்டாக்… ஹார்ட்டில் பிளாக் எடுக்கவும் பணம் நிறைய செலவாகுமே… பாவம், இவள் அம்மா எத்தனை வேதனையை சகித்திருப்பார்… தன் குடும்பத்து வருமானத்துக்கு வேண்டிதான் சொந்த ஊரை, உறவுகளை விட்டு வருமானத்துக்காய் இந்த ஊருக்கு வந்திருக்கிறாள் பாவம்…” சகுந்தலா யோசித்துக் கொண்டிருக்க குந்தவையும் அதையே நினைத்திருந்தாள்.
“இவளுக்கும் என் வயது தானே… நான் எத்தனை சுதந்திரமாய் படிப்பு பிரண்ட்ஸ் குடும்பம் என்று சந்தோஷமாய் இருக்கிறேன்… இவளுக்கு எத்தனை கஷ்டம்…” என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தாள்.
“கேக்கவே கஷ்டமாருக்கு மா… ஆண்டவன் இந்த வயசுல இத்தனை பொறுப்புகளை உன் மேல சுமத்தி இருக்க வேண்டாம்… உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்… சாப்பிட்டு முடி…” என்றார் சகுந்தலா.
“ம்ம்… ஆமா வானதி, கடவுள் நல்லவங்களை சோதிச்சுப் பார்ப்பார், கை விட மாட்டாராம்…” என்றாள் குந்தவை.
“ம்ம்… நான் வளரே நல்லவள் ஆயிரிக்கும்… அதானு கூடுதல் சோதிக்குந்தது…” என்றவள் புன்னகைத்தாள்.
“சரி சாப்பிடுங்க, பாத்திரம் தேச்சுட்டு படுக்கலாம்…” சகுந்தலா சொல்லவும் அமைதியாய் சாப்பிடத் தொடங்கினர்.
சாப்பிட்டு எழுந்ததும், “நான் பாத்திரம் தேக்கறேன் ஆன்ட்டி…” என்றவள் அவர் மறுத்தும் கேட்காமல் கோதாவில் இறங்க குந்தவையும் அவளோடு சேர்ந்து கொண்டாள். மூவருமாய் அடுக்களையைக் கிளீன் செய்துவிட்டு ஹாலுக்கு வரவும் அங்கே அருள் டீவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கையிலிருந்த ரிமோட்டைப் பறித்த குந்தவை மியூசிக் சானலை வைக்க, “ஏய் நியூஸ் பார்க்கறேன்ல… ரிமோட்டைக் குடு…” என்றான் அருள்.
“நீ இவ்ளோ நேரம் பார்த்தல்ல, நாங்க கொஞ்ச நேரம் பார்க்கறோம்…” அண்ணனிடம் மல்லுக்கு நின்ற குந்தவை,
“வா வானதி…” என்று அவளையும் இழுத்துச் சென்று சோபாவில் அமர, “ஆன்ட்டிக்கு மாத்திரை கொடுத்திட்டு வராம்… நீ நோக்கு…” என்றவள் நழுவினாள்.
“ஆன்ட்டி, டேப்லட் எவிடே…” கேட்டவளிடம், “அந்த டிராவில் இருக்குமா…” என்று ஓரமாய் இருந்த மேசையைக் காட்டினார் சகுந்தலா. அவருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை டாக்டர் குறிப்பைப் பார்த்து எடுத்துக் கொண்டவள் தண்ணி பாட்டிலுடன் நீட்ட வாயில் போட்டு முழுங்கிக் கொண்டார்.
“சரி, நீ போயி தூங்கு மா… நான் கொஞ்ச நேரம் புக் படிச்சிட்டு படுக்கறேன்… இல்லேன்னா தூக்கம் வராது…” என்ற சகுந்தலா ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்தார்.
“இத்தர வலிய புக்கோ… இந்நேரத்தில் புக் படிச்சால் தலவேதன வரும் ஆன்ட்டி…” என்றாள்.
“இது படிச்சால் வராது மா… என்னோட பாவரிட் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை இது…”
“ஓ… அத்தர இஷ்டமானோ…”
“ம்ம்… மனசு பாரமா இருக்கும்போது இதை விரிச்சு படிக்கத் தொடங்கிருவேன்… கொஞ்ச நேரத்துல என் மனசுல இருந்த சங்கடம் எல்லாம் மாறி இந்தக் கதைல வர்ற கதாபாத்திரங்களோட பயணிக்கத் தொடங்கிருவேன்…” என்றவரை ஆச்சர்யமாய் பார்த்தாள் வானதி.
“ஓ… நிங்கள் பரயும்போ எனிக்கும் வாயிக்கான் தோணுந்து… பக்சே தமிழ் அறயில்லாலோ…” என்றாள் அவள்.
“ஹாஹா… நான் உனக்கு தமிழ் சொல்லித் தரேன்… நீ எனக்கு மலையாளம் சொல்லித்தா…” என்று சிரித்தார்.
அவர்கள் பேசுவதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருள், “ஹூக்கும், ரெண்டு பேரும் மாறி மாறி டியூஷன் எடுத்துக்கப் போறாங்களாம்…” என நினைத்துக் கொண்டே எழுந்து செல்ல குந்தவை மியூசிக் சானலைப் பார்த்துக் கொண்டே கொட்டாவி விட்டுக் கொண்டு கடிகாரத்தைப் பார்த்தாள்.
“ஆஹா, மணி பத்தாகிடுச்சே…” என்றவள் டீவியை அணைத்துவிட்டு எழுந்து அவர்களிடம் வந்தாள்.
“வானதி, எனக்குத் தூக்கம் வருது… வா தூங்கலாம்…”
“இல்ல நீ போயி உறங்கிக்கோ… நான் ஆண்ட்டி உறங்கான் போகும்போ வராம்…” என்றதும், “ம்ம்… சரி…” என்ற குந்தவை கொட்டாவியுடன் நகர சகுந்தலா சிரித்தார்.
“நீயும் போயி படேன் வானதி… காலைல இருந்து ரொம்ப அலைச்சல் உனக்கு… அசதியா இருக்கும்ல…”
“இல்ல ஆன்ட்டி… நிங்கள்ட கூடே இரிக்கும்போ ஒரு சுகம்…”
“ஹாஹா… நல்ல பொண்ணு மா… சரி நானும் நாளைக்குப் படிச்சுக்கறேன்… நீ போயி படு…” என்றவர் அவளுக்காக தனது வாசிப்பை நிறுத்திவிட்டு எழுந்தார்.
“ஓகே குட் நைட் ஆன்ட்டி…” என்றவள் குந்தவையின் அறைக்கு செல்ல அவள் உறக்கத்தைத் தொடங்கியிருந்தாள்.
குழந்தை போல இதழில் ஒரு புன்னகை குடிகொண்டிருக்க காலைக் குறுக்கி ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.
வானதி கீழே படுத்துக் கொள்வதாய் சொல்லியும் சம்மதிக்காமல் தன்னுடைய கட்டிலில் படுக்க சொல்லி இருந்தவளின் நல்ல மனதை எண்ணியபடி அவள் முகத்தைப் பார்த்தவளுக்கு புன்னகை வந்தது.
அவள் அப்படியே அன்னையின் சுபாவத்தை ஒத்திருப்பதாய் தோன்றியது. ஆனால் இவள் அண்ணன் ஏன் இப்படி இருக்கிறான்… தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது தவறில்லை… ஆனால் மற்றவர்களுக்கு சின்ன உதவி கூட செய்ய மறுப்பது சரியில்லையே…
யோசித்துக் கொண்டே கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கொண்டாள். காலையில் சென்னையில் வந்து இறங்கியது முதல் இப்போது இந்த வீட்டில் குந்தவையின் அருகில் படுத்திருப்பது வரை ஒவ்வொரு காட்சியாய் மனதில் வந்து போக வீட்டு நினைவும் கலந்து கொண்டது.
கண்ணை மூடிக் கொண்டவளை அது வரை உணராதிருந்த அசதி வந்து பிடித்துக் கொள்ள, பாதுகாப்பான அன்பான இடத்தில் தஞ்சம் கொண்டது மனதுக்கு நிம்மதியைத் தர சுகமாய் நித்திரைக்கு சென்றாள்.
நல்ல விடியலுக்காய்
காத்திருக்கிறது இரவு…
தனக்குள் சேகரித்த
கனவுகளின் வெளிச்சமாய்
தொலைந்து போன
நிஜங்களின் நிழலாய்
மீண்டுமொரு உதயத்துக்காய்
காத்திருக்கிறது இரவு…

Advertisement