Advertisement

“ஹாஹா… புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே… தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்… கவலைப் படாம கிளம்புங்க…” என்றார் டாக்டர்.
“தேங்க்ஸ் டாக்டர்…” என்றவர் எழுந்து வெளியே நடக்க, “சார், ஒரு நிமிஷம்…” என்றார் சுந்தரத்திடம்.
“அவங்களை ரொம்ப தனிமைல இல்லாமப் பார்த்துக்கங்க… இப்படியே போனா அவங்க உடம்பு இன்னும் மோசமாயிடும்…” டாக்டர் சொல்லவும் தலையாட்டியவர் யோசனையுடன் வெளியே செல்ல அங்கே சகுந்தலா வானதியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“வானதி, கவலைப்படாத மா… கண்டிப்பா இங்க உனக்கு வேலை கிடைக்கும்… நானும் டாக்டர் கிட்ட சொல்லிருக்கேன்… இவங்க ஜெயந்தி டாக்டர் பிரண்டு தான்… சோ அவங்களுக்காக கண்டிப்பா உன்னை சேர்த்துப்பாங்க…”
“ஓ சந்தோஷம் ஆன்ட்டி… நிங்கள்க்கு செக் செய்திட்டு டாக்டர் எந்து பரஞ்சு… ஒண்ணும் பிராப்ளம் இல்லல்லலோ…”
“உடம்புன்னு ஒண்ணு இருந்தா ஏதாச்சும் வந்துட்டு தானே இருக்கும்… அது கிடக்குது மா… நீ அப்பப்போ எனக்கு கால் பண்ணு… எதுவும் ஹெல்ப் வேணும்னாலும் கேக்கத் தயங்காத… சரியா…”
“ஓ… சரி…” என்றவளை டாக்டர் அழைப்பதாய் சொல்ல “டேக் கேர் ஆன்ட்டி… காணாம்…” என்றவள் உள்ளே செல்ல அவளைத் திரும்பிப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே வாசலை நோக்கி நடந்தார் சகுந்தலா. அப்போதும் யோசித்துக் கொண்டே இருந்த சுந்தரம் காருக்கு வந்ததும், “சகு… நீ உள்ள உக்காரு… நான் உனக்கு மருந்து வாங்கிட்டு வந்துடறேன்…” என்று மீண்டும் கிளினிக் உள்ளே செல்ல, “அதை வெளியே வாங்கினா போதாதா… அங்கயே வாங்கணுமா…” என யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த சுந்தரத்துடன் வானதியும் இருக்க புரியாமல் அவர்களை ஏறிட்டார்.
கதவைத் திறந்து இறங்கியவர், “என்னாச்சு மா… டாக்டர் உன்னை வேலைக்கு சேர்த்துக்கலையா…” என்று கேட்க, “சேர்த்து ஆன்ட்டி… நிங்கள்ட கூட இருந்து நோக்குந்தது ஆனு என் புல் டைம் டியூட்டி… ஜெயந்தி டாக்டர் வறன வரைக்கும் நிங்கள கூட இருந்து கரக்ட் டைமினு மருந்து கொடுக்கான், ஹெல்த் நோக்கான் சார் பறஞ்சு…” என்றதும் திகைப்பில் அவர் கண்கள் விரிந்தன.
“என்னது, எங்க வீட்ல வந்து இருக்கப் போறியா… நிசமாலுமா… எட்டாவது உலக அதிசயமா இருக்கே… ஏங்க, நான் கனவேதும் காணலையே… நீங்களா இது…” கேட்டுக் கொண்டே அவர் கையில் கிள்ள அவர் அலறினார்.
“எப்பப் பார்த்தாலும் தனியா இருக்கேன், தனியா இருக்கேன்னு புலம்பறியேன்னு தான் இந்த ஏற்பாட்டைப் பண்ணேன்… உனக்குத் துணையும் ஆச்சு… நேரத்துக்கு மருந்து, மாத்திரை கொடுக்க நர்ஸும் ஆச்சு… அதுக்காக ஓவரா சந்தோஷப் பட வேண்டாம்…” அவர் சொல்ல,
“என்ன இருந்தாலும் கல்யாணம் பண்ண பின்னாடி எனக்காக நீங்க செய்த உருப்படியான ஒரே காரியம் இதுதான்… எங்க, வானதியை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்னு நான் சொன்னா நீங்க திட்டுவீங்களோன்னு தான் நான் கேக்காம இருந்தேன்… எப்படியோ என் மனசைப் புரிஞ்சுகிட்டு இப்படி ஒரு நல்ல காரியத்தைப் பண்ணிங்களே… இதுக்காகவே உங்களுக்கு சொர்கத்துல இடம் கன்பர்ம்…” சந்தோஷத்தில் அவர் பேசிக்கொண்டே இருக்க, “சரி, கார்ல ஏறுங்க… இல்லேன்னா ரெண்டு பேரும் பேசிட்டே வீடு வந்து சேருங்கன்னு கிளம்பிப் போயிருவேன்…” அவர் மிரட்டலாய் சொல்ல, “ஹூக்கும்… நல்லது செஞ்சீங்கன்னு பாராட்டவும் கூடாதே…” என்றபடி பின்னில் அமர்ந்தார் சகுந்தலா.
“வாம்மா, வானதி…” அவள் கையிலிருந்த பாகை அவர் வாங்கிக் கொள்ள அருகில் அமர்ந்தாள். அந்தத் தாயின் அருகாமையும் அன்பும் ஒருவித நிம்மதியை தந்தது.
பத்து நிமிடத்தில் வீட்டை அடைய கேட் திறந்திருந்ததால் நேராய் வீட்டு வாசலில் காரை நிறுத்தினார் சுந்தரம். முதலில் இறங்கிய சகுந்தலா “வா வானதி…” அன்போடு அழைக்க சுற்றிலும் நோக்கிக் கொண்டே கையில் பாகுடன் புன்னகையுடன் இறங்கினாள் அவள்.
கதவு தாளிடப்பட்டிருக்க அழைப்பு மணியை அழுத்தினார். கதவைத் திறந்த குந்தவை திகைத்து ஆச்சர்யத்துடன், “ஹேய் வானதி, வாட் அ சர்ப்ரைஸ்… நீ எப்படி இங்கே…” என்று கேட்டுக் கொண்டே அவளை அணைத்துக் கொண்ட வானதியை சகுந்தலா புரியாமல் பார்த்தார்.
காரை நிறுத்திவிட்டு வந்த சுந்தரத்தின் அலைபேசி சிணுங்க எடுத்துப் பார்த்துக் கொண்டே அவர் உள்ளே வரவும் வேகமாய் வானதியை விட்டு விலகி நின்றாள் குந்தவை.
அருளின் அழைப்பைக் காதுக்குக் கொடுத்தவர், “ம்ம்.. சொல்லு…” என்றதும் அவன் என்ன சொன்னானோ அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் லைட்டின் வெளிச்சம் தெரிந்தது.
“அப்படியா… அந்த ஆர்டர் நமக்கு கன்பர்ம் ஆகிடுச்சா… சிவா பில்டர்ஸ் இதுல இருந்து விலகிட்டாங்களா… சூப்பர்… ரொம்ப நாளா நான் எதிர்பார்த்த ஆர்டர்… கை விட்டுப் போயிருச்சுன்னு நினைச்சேன்… மறுபடி கைக்கு வந்திருக்கு… ஓகே, மத்த பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திரு…” என்றவர் சந்தோஷத்துடன் அழைப்பைத் துண்டிக்க சகுந்தலா அவரிடம் கேட்டாள்.
“என்ன விஷயங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க…”
“நம்ம கை விட்டுப் போன ரெண்டு கோடி புரோஜக்ட் ஒண்ணு மறுபடி கைக்கு வந்திருக்கு சகு… நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு… பசிக்குது…” என்றார் சந்தோஷத்துடன்.
“ஓ… வானதி இந்த வீட்டுக்கு வந்த நேரம் பெரிய ஆர்டர் கன்பர்ம் ஆகிருக்கே…” சகுந்தலா சொல்ல ஏனோ அவருக்கு மறுக்கத் தோணாமல், “ம்ம்… சரி, அந்தப் பொண்ணுக்கு தங்கறதுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணிக் கொடு…” என்றுவிட்டு அவரது அறைக்கு செல்ல குந்தவை மீண்டும் வானதியைக் கட்டிக் கொண்டாள்.
“இங்க என்ன நடக்குது… எனக்கு எதுவுமே புரியலையே…” அவள் கேட்க சகுந்தலா நடந்ததை சொன்னார்.
“பார்றா… அப்பா எங்க கிட்ட ஹிட்லர் மாறி காட்டிகிட்டாலும் பொண்டாட்டி மேல எவ்ளோ கேர் எடுத்துக்கறார்…” என்று குந்தவை அன்னையைக் கிண்டல் செய்ய “சரி, உங்களுக்கு எப்படிப் பழக்கம்… அதை சொல்லு…” என்றார் சகுந்தலா.
“அதென்னவோ வானதிக்கும், நம்ம குடும்பத்துக்கும் விட்ட குறை தொட்ட குறை எதுவும் இருக்கான்னு தெரியல… லாஸ்ட்ல நம்ம வீட்டுக்கே வந்துட்டா…” என்றவள் அவர்கள் சந்தித்ததை சொல்ல திகைப்புடன் கேட்டிருந்தார் சகுந்தலா.
அவர்கள் பேசுவதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த வானதி, “குந்தவை, நீ பரஞ்ச ஹிட்லர்க்கு பினாமி… நிண்டே அச்சன் ஆனோ… சேச்சே… சார் அத்தர ஒந்தும் மோசமில்ல… பாவமானு…” வானதி சொல்ல, “அச்சோ, அவர் காதுல விழப் போகுது…” என்று அவள் வாயைப் பொத்தினாள் குந்தவை.
“சரி, வானதியை எங்க தங்க வைக்கலாம்…” சகுந்தலா கேட்க, “என்னோட ரூம்லயே தங்கிக்கட்டும் மா… எனக்கும் துணையாச்சு…” குந்தவை சொல்ல, “சரி… கூட்டிட்டுப் போ, காலைல இருந்து ரொம்ப அலைஞ்சு களைச்சுப் போயிருப்பா… குளிச்சிட்டு வரட்டும்… நானும் குளிச்சிட்டு டிபன் ரெடி பண்ணறேன்…” என்றவர் உற்சாகமாய் அறைக்கு செல்ல, குந்தவை வானதியை அழைத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்றாள்.
“குந்தவை, நீ விஜாரிக்கன போல அங்கிள் அத்தர ஒண்ணும் மோசமில்ல… ஆன்ட்டி மேல் வளரே இஷ்டம்… அதோண்டா முன்னே பின்னே அரயாத்த என்னை நோக்கான் கொண்டு வந்தது…” என்றாள் வானதி.
“ம்ம்… அவர் அம்மாவைப் பொறுத்தவரை ரொம்ப சாப்ட் தான்… ரெண்டுபேரும் பேசறதைக் கேட்டா எப்ப வேணும்னாலும் அடிச்சுப்பாங்கன்னு தோணும், ஆனா அம்மாக்கு ஒண்ணுன்னா ரொம்ப கலங்கிப் போயிருவார்… அவரோட பலமே அம்மாதான்னு வச்சுக்கோயேன்… ஆனா வெளிய காட்டிக்க மாட்டார்… அவர் ஒரு புலித்தோல் போர்த்திய ஆடுன்னு வச்சுக்கோயேன்…” என்று சிரிக்க அதைக் கேட்டு வானதியும் சிரித்தாள்.
“நீ பயங்கர காமெடியானல்லோ…”
“அப்படில்லாம் இல்ல… சிலரைப் பார்க்கும்போது மனசு விட்டுப் பேச, சிரிக்கத் தோணும்… உன்னைப் பார்க்கறப்போ மனசுக்கு ரொம்ப நெருக்கமா ஒரு உணர்வு வருது… அதான் இப்படிப் பேசறேன்… மத்தபடி நான் ரொம்ப சீரியசாக்கும்…”
“அய்யடா… நான் கண்டல்லோ… அச்சனைக் கண்டப்போ வேகம் மாறி பதுங்கியது…” (நான் பார்த்தேனே… அப்பாவைப் பார்த்ததும் வேகமாய் விலகி நின்னது).
“ம்ம்… அப்பா வீட்ல இருந்தா நாங்க அப்படிதான்… சத்தமா பேசவோ, சிரிக்கவோ கூட பயந்துப்போம்… டீவி கூட சத்தமா வைக்க முடியாது… அவ்ளோ பயம்… இல்லேன்னா  கத்துவார், முறைப்பார்… சின்ன பிள்ளையா இருக்கும்போது சில நேரம் அடி கூட விழும்… எங்களுக்கு எதுவும் வேணும்னா கூட அம்மா கிட்ட சொல்லி தான் அப்பாட்ட கேப்போம்… அப்பத் தொடங்கின பழக்கம், இப்பவும் தொடருது…” என்றாள் பெருமூச்சுடன்.
“ஓ… அச்சனைக் கண்டு இத்தர பேடியோ… மூப்பரும் கலகலன்னு சிரிச்சு சம்சாரிக்குக ஒண்ணும் இல்லே…” (அப்பாவைப் பார்த்து இவ்ளோ பயமா… அவரும் கலகலன்னு சிரிக்கவோ, பேசவோ ஒண்ணும் செய்ய மாட்டேங்கறாரே…)
“ம்ம்… அவருக்குன்னு பிரண்ட்ஸ் எல்லாம் கிடையாது… இந்த வீடும் ஆபீஸும் தான் அவர் உலகம்… அப்புறம் கொஞ்சம் தான்ங்கற நினைப்பும் அவருக்கு ஜாஸ்தி… எங்களுக்கு எல்லாம் பழகிருச்சு… சரி குளிச்சிட்டு வா… சாப்பிடலாம்…” என்றதும் வானதி பாகைத் திறந்தாள்.
மாற்று உடை, டவல் சோப்பு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் பளிச்சென்று வெளியே வர குந்தவையை அறையில் காணவில்லை. தலையைத் துவட்டி தளர்வாய் ஈர ஜடை பின்னிக் கொண்டு ஹாலுக்கு வந்தவள் உள்ளே நுழைந்து கொண்டிருந்த அருளைக் கண்டதும் திகைத்தாள்.  
மண்ணை முத்தமிடும்
மழைத்துளிகள்
தட்டி உணர்த்துகின்றன…
நிசப்தமாய் மனதுக்குள்
என்றோ பூட்டி வைத்த
எண்ணங்களை…
புதிதாய் ஒரு
பாஷை கொண்டு
எழுத்துகளாய்
எண்ணங்களை
உருமாரச் செய்கின்றன…

Advertisement