Advertisement

அத்தியாயம் – 4
தாம்பரம் வரும் வரையில் குந்தவை ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வானதி. குந்தவை அவள் சொல்வதைப் புரிந்து கொண்டதால் பேசுவதற்கு எளிதாய் இருந்தது.
“அச்சோ, ஜெயந்தி டாக்டர் இல்லாததால வேற கிளினிக்ல ஜாப் கிடைக்குமான்னு டிரை பண்ணறீங்களா… தாம்பரத்துல யாரைப் பார்க்கப் போறீங்க…”
“அவிடே ஒரு கிளினிக்கில் நர்ஸ் வேணம்னு பரஞ்சு இருந்துவத்ரே… சோதிச்சு நோக்காமெந்து போவுந்து…” (அங்கே ஒரு கிளினிக்கில் நர்ஸ் வேணும்னு சொல்லி இருந்தாங்கலாம்… கேட்டுப் பார்க்கலாம்னு போறேன்…)
“ம்ம்… ஆல் தி பெஸ்ட்… ஜாப் ஓகே ஆயிட்டா எங்கே தங்குவிங்க வானதி… இருட்டத் தொடங்கிருச்சே…” என்றாள் சிறு கவலையுடன்.
“நோக்கட்டே, அவிடே ஓகே ஆயால் ஏதெங்கிலும் ஹாஸ்டலில் சோதிச்சு நோக்கணம்… இல்லெங்கில் நல்ல லாட்ஜ் ஏதெங்கிலும்…. இத்தரயும் வலிய லோகத்து எனிக்கு கிடக்கான் தெய்வம் ஒரு ஸ்தலம் தரில்லே…” (பார்க்கலாம், அங்கே ஓகே ஆயிட்டா ஏதாவது ஹாஸ்டலில் கேக்கணும்… இல்லேன்னா நல்ல லாட்ஜ் எதாச்சும்… இவ்ளோ பெரிய உலகத்துல எனக்கு ஒரு ராத்திரி தங்க தெய்வம் ஒரு இடம் தராதா என்ன…) என்று சிரித்தவளின் நம்பிக்கை குந்தவைக்கு வியப்பைக் கொடுத்தது.
“உங்க நம்பிக்கை எனக்குப் பிடிச்சிருக்கு… ஆனா லாட்ஜில் எல்லாம் தங்க நினைச்சு ரிஸ்க் எடுக்காதிங்க… சப்போஸ் எங்கயும் சரியாகலைன்னா எனக்கு கால் பண்ணி சொல்லுங்க… என் பிரண்டு தங்கி இருக்கிற ஹாஸ்டலில் நீங்களும் ராத்திரி தங்க ஏற்பாடு பண்ணறேன்… நாளைக்கு வேற ஹாஸ்டல் பார்த்துக்கலாம்…” குந்தவை சொல்லவும் வானதியின் கண்கள் பனித்தன.
அவள் கையைப் பிடித்துக் கொண்டவள் குரல் நடுங்கியது.
“தேங்க்ஸ் குந்தவை… இத்தரயும் வலிய நாட்டில் எங்கனே ஒற்றைக்கு கழியான் போவுந்து எந்த பேடி உண்டாயிருந்து… பக்ஷே ராவிலே இவிடே காலு குத்தியது முதல் நான் கண்டவரெல்லாம் நல்லவரானு… பட் என்டே கூடே பஸ்ஸில் வந்த ஒருத்தன் மாத்ரம் மற்றவரே சகாய்க்கான் மனசு காணிச்சில்ல… இவிடே எல்லாரும் அது போலே தண்ட காரியம் மாத்திரம் நோக்குந்தவர் ஆயிரிக்குமெந்து நான் விசாரிச்சு… பட் அங்கனே அல்லாந்து ராவிலே கண்ட ஒரு அம்மயும் நீயும் மனசிலாக்கித் தந்து…” (இவ்ளோ பெரிய ஊருல எப்படி தனியா இருக்கப் போறேன்னு பயமா இருந்துச்சு… ஆனா காலைல இங்கே வந்து இறங்கியதில் இருந்து நான் பார்த்தவங்க எல்லாம் நல்லவங்க… பட் என் கூட பஸ்ல வந்த ஒருத்தனுக்கு மட்டும் மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணற மனசு இல்ல… இங்க எல்லாரும் அது மாதிரி தன் காரியம் மட்டும் பாக்குறவங்களா இருப்பாங்கன்னு நான் நினைச்சேன்… ஆனா அப்படி இல்லன்னு நீயும் காலைல நான் பார்த்த ஒரு அம்மாவும் புரிய வச்சுட்டிங்க…) என்றவளின் கண்கள் கலங்கியது.
“என்ன வானதி, இதுக்குப் போயி கண் கலங்கிட்டு… சக மனுஷங்களுக்கு சின்ன உதவி கூட செய்யாம வாழ்ந்து என்ன பண்ணப் போறோம்… உங்களை எங்க வீட்டுக்கு கூட அழைச்சிட்டுப் போயிருவேன்… பட் எங்கப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்… ஏதாச்சும் சொல்லிட்டார்னா சங்கடமாப் போயிரும்… அதான்…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தாள்.
“இப்ப நோக்கிப் பழகிய ஒருத்திய வீட்டிலேக்கு கூட்டிப் போயால் ஏது அச்சனும் சீத்த பரயும்…” (இப்ப பார்த்துப் பழகின ஒருத்திய உடனே வீட்டுக்கு கூட்டிட்டுப் போனா எந்த அப்பாவும் திட்ட தான் செய்வாங்க…) புன்னகைத்தாள்.
“அது சரி, நீ எங்க அப்பாவுக்கு சப்போர்ட்டா… அவருக்கு என்னவோ தான் ஹிட்லர்க்கு பினாமின்னு மனசுல ஒரு நினைப்பு போலருக்கு… சரி, அவர் நினைப்பை நாம ஏன் கெடுக்கனும்னு நாங்க எல்லாரும் பயப்படற போலவே நடிச்சிட்டு இருக்கோம்…” குந்தவை சிரிப்புடன் சொல்லவும் வானதிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சரி நெக்ஸ்ட் ஸ்டாப்புல இறங்கணும்… உன் மொபைல் நம்பர் சொல்லு…” என்றவள் அவள் சொல்ல தனது மொபைலில் அழுத்தி மிஸ் கால் விட்டாள்.
“சேவ் பண்ணி வச்சுக்க…” என்றதும் அவளும் குந்தவை என்று பெயர் போட்டு பதிந்து கொண்டாள். காலையில் சந்தித்த பெண்மணியின் நம்பர் பதியாமல் மிஸ் காலில் காட்ட அவளுக்குப் பெயர் மறந்து போயிருக்க, “அம்மா…” என்று அதையும் பதிவு செய்து கொண்டாள்.
இருவரும் ஸ்டாப்பில் இறங்கி சங்கீதா கிளினிக் நோக்கி நடந்தனர். அவளை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் ரிசப்ஷனில் விசாரிக்க டாக்டர் இன்னும் வரவில்லை என்றதால் விவரம் தெரிந்தபின்பு அழைக்க சொல்லிவிட்டு குந்தவை விடை பெற்றாள். அவள் அருகில் இருக்கையில் மனதில் ஒரு பலத்தை உணர்ந்த வானதி மீண்டும் தனியே டாக்டர் வரவுக்கு காத்திருந்தாள். ஆனால் மீண்டும் அவள் மனதில் உற்சாகத்தை உணரும் வண்ணம் சகுந்தலா கணவருடன் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்டதும் வேகமாய் எழுந்தவள், “ஆன்ட்டி… எந்தா இவிடே… பின்னயும் சுகமில்லே…” என்று பதட்டமாய் கேட்க அவளை மீண்டும் கண்ட சந்தோஷத்தில் புன்னகைத்தார் சகுந்தலா. அவள் பின்னே வந்த சுந்தரம், “இதென்ன, இந்தப் பொண்ணு விடாது கருப்பு போல இங்கயும் வந்து நிக்குது…” என நினைத்துக் கொண்டே புன்னகைத்தார்.
“ஒண்ணும் இல்லம்மா, காலைல மயங்கி விழுந்தேன்ல… அதான் ஒரு செக் அப் பண்ணிக்கலாம்னு என்னைப் பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டார்…” என்றபடி பெருமையாய் கணவரை நோக்கிப் புன்னகைத்தார் சகுந்தலா. “என்ன இருந்தாலும் என் புருஷனுக்கு என் மேல அக்கறை இருக்கு…” என்பது போல் அந்தப் புன்னகை இருக்க சுந்தரமும் சிரித்தார்.
“ஹூக்கும், உடம்புக்கு முடியாம எங்காச்சும் விழுந்து வச்சு மண்டை, கை கால் உடைஞ்சு படுக்கைல விழுந்துட்டா யாரு எங்களுக்கு சமைச்சுப் போடுவா… அதுக்குதானே செக் அப் கூட்டிட்டு வந்தேன்… அது புரியாம இந்த லூசு பெருமையா லுக் விடுதே…” என மைன்ட் வாய்ஸ் கேட்டது.
அதை உணராத சகுந்தலா வானதியின் கையைப் பிடித்துக் கொண்டு புன்னகையுடன் விசாரித்துக் கொண்டிருந்தார்.
“ஆமா, நீ என்ன இங்கே… ஓ, இங்க வேலை சரியாகிடுச்சா…”
“இல்ல ஆன்ட்டி… டாக்டர்க்கு வெயிட்டிங்…”
“ம்ம்… சரி, சரி… இந்த டாக்டர் கூட எங்களுக்கு நல்ல பழக்கம் தான்… நானும் வேணும்னா சொல்லிப் பாக்கறேன்…”
“ஓ… தேங்க் யூ ஆன்ட்டி…” என்றாள் நெஞ்சில் கை வைத்து நன்றியுடன்.
“கவலைப் படாதம்மா… உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்…” என்ற மனைவியை “இவ லூசே தான், கன்பர்ம்…” என்பது போல் பார்த்தார் சுந்தரம்.
“காலைல இவ கீழ விழாம தாங்கிப் பிடிச்சுட்டதால அந்தப் பொண்ணுக்கு நல்ல மனசுன்னு இவங்க கண்டு பிடிச்சுட்டாங்களாம்… பெரிய ஜேம்ஸ் பாண்டு…”
அவர் கடுப்புடன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே டாக்டர் சங்கீதா உள்ளே வர இவர்களைக் கண்டதும் புன்னகைத்தார். வானதி அவரைக் கண்டு எழுந்திருக்க, யோசனையுடன் பார்த்தவர் நின்றார்.
“நீதான் வானதியா…”
“எஸ் டாக்டர்…” அவள் சொல்லவும், “ஓகே வெயிட் பண்ணு…” என்றவர் தனது அறைக்கு சென்றார்.
சுந்தரம் முன்னமே போனில் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்ததால் இரண்டு பேஷண்டுகளை பரிசோதித்து அனுப்பியதுமே இவர்களை உள்ளே அழைத்தார். வானதி அமைதியாய் வெளியே காத்திருந்தாள்.
சகுந்தலாவைப் பரிசோதித்தவர், “வாங்கம்மா, ஜெயந்தி ஊருக்குப் போனதால இங்கே செக் அப் வந்திங்களா…” கேட்டுக் கொண்டே ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டிக் கொண்டு அவரது இதயத்துடிப்பை ஆராய்ந்தார்.
அது வழக்கத்திற்கு மாறாய் வேகம் கூடியிருந்தது. அவரைத் திரும்ப சொல்லி முதுகிலும் வைத்து ஆழமாய் மூச்சை இழுத்து விடச் சொன்னார். அடுத்து பிரஷரை நோக்க அதுவும் கூடியிருந்தது.
“என்னாச்சு மா… எல்லாமே கொஞ்சம் கூடுதலா தான் இருக்கு… பிரஷர், கொலஸ்ட்ரால் டேப்லட் எல்லாம் சரியா போடறதில்லையா… மனசை ப்ரீயா வச்சுக்கோங்க… அப்புறம் இன்னொண்ணு… அதிகமா மொபைல் யூஸ் பண்ணாதிங்க…”
“எங்க டாக்டர், சொன்னா கேட்டா தானே… எப்பப் பார்த்தாலும் மொபைலும் கண்ணுமா தான்… எல்லாக் கதையும் விடாமப் படிக்க வேண்டியது… அதையே பார்த்து கண்ணு குருடாப் போச்சுன்னா தனியா அவார்டு எதுவும் குடுக்கப் போறாங்களா தெரியல… நான் சொல்லறதே கேக்கறதில்ல…” சுந்தரம் குற்ற அறிக்கை வாசித்தார்.
அதைக் கேட்டு டாக்டர் சிரிப்புடன் சகுந்தலாவை நோக்க அவர் அமைதியாய் இருந்தார்.
“என்ன மா, சார் இவ்ளோ சொல்லுறார்… அமைதியா இருக்கீங்க…” என்றவர் எழுதிக் கொண்டே கேட்க, “அவருக்கு என்ன டாக்டர்… என்ன வேணும்னாலும் சொல்லுவார்… எல்லாரும் வெளிய கிளம்பின பின்னாடி வீட்ல தனியா இருந்தா மனசு கண்டதையும் யோசிக்குது… அதான் நான் கதை படிச்சு என் கவனத்தை திருப்பிக்கறேன்… அதும் இல்லேன்னா என்னைப் பைத்தியக்கார ஆசுபத்திரியில் தான் செக் அப் கூட்டிட்டுப் போகணும்…” என்றார் கோபத்துடன்.
“அட, என்ன சகுந்தலாம்மா, இப்படி கோவிச்சுக்கறிங்க… சார் உங்க நல்லதுக்கு தானே சொல்லுறார்…” என்றவர், “இந்த மாத்திரையை ரெகுலராப் போடுங்க… சார், அவங்க மறந்தாலும் நீங்க யாராச்சும் சரியா மாத்திரை போடறாங்களான்னு கவனிச்சுக்கோங்க… அவங்க சரியா தன்னைக் கவனிச்சுக்காத்து தான் பிராப்ளம்…” என்றதும் அமைதியாய் அந்த சீட்டை வாங்கிக் கொண்டார் சுந்தரம்.
“டாக்டர், வெளியே வானதின்னு ஒரு பொண்ணு நர்ஸ் வேலைக்கு வந்திருக்கா… நல்ல பொண்ணு… காலைல நான் தலை சுத்தி விழப் போனப்போ அவ தான் ஓடிவந்து தாங்கிகிட்டா… பாவம், ஜெயந்தி டாக்டர் வர சொல்லி இருப்பாங்க போலருக்கு… அவங்க இல்லாததால வேற கிளினிக்ல வேலை தேடுது… உங்க கிளினிக்ல சேர்த்துக்க முடியுமா…” என்றார் சகுந்தலா.

Advertisement