Advertisement

அத்தியாயம் – 35
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸூபகே
த்வம ஜீவ சரதஸ் சதம்…
மந்திரத்தைத் தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க தங்கள் இணையின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தனர் ஆதித்யன், அருள்மொழிவர்மன் மற்றும் தேவ் மோகன்.
இனி தங்கள் வாழ்வின் சுக, துக்கம் யாவிலும் பங்கேற்று இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று துணைவியை வாழ்த்தி திருமாங்கல்யத்தை கழுத்தில் அணிவிப்பதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.
அடுத்து மூன்று ஜோடிகளும் மாலை மாற்றிக் கொள்ள பிள்ளைகளின் திருமணத்தை மன நிறைவுடன் கண்கலங்க நோக்கி நின்றனர் பெற்றோரும் சுற்றாரும்.
சந்தோஷத்துடன் கண்ணைத் துடைத்துக் கொண்ட சகுந்தலா தன் அருகில் நின்ற அண்ணனை நோக்க அவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். மகள்களைப் பற்றிய கனவுகள் இத்தனை காலமும் கேள்விக்குறியாய் இருக்க சட்டென்று அவர்களின் வாழ்வு அழகிய ஆச்சர்யக் குறியாய் மாறிப் போன சந்தோசம் அவர் கண்ணில் தெரிந்தது. ஷீலா அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொள்ள, கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் அப்படியே பார்த்திருந்த அண்ணனின் கையில் ஆதரவாய் சகுந்தலா தட்டிக் கொடுக்க தங்கையின் கைகளை நன்றியுடன் பற்றிக் கொண்டார் சிவராமன்.
மூத்த மகனின் காதலை மனைவிக்காய் சம்மதித்தாலும் நந்தினி அவனது மாமன் மகள், முறைப்பெண் முறை என்று தெரிந்ததும் சுந்தரத்துக்கு இரட்டிப்பு சந்தோஷம்… அவருக்கு அருள், வானதியின் காதலைத் தெரிவிக்காமல் இருப்பதே அவரது நிமிர்வைக் குலைக்காமல் இருக்கும் என்பதால் அதைப்பற்றி யாரும் சொல்ல வேண்டாமென்று சகுந்தலா கேட்டுக் கொண்டார்.
மனமும், முகமும் சந்தோஷத்தில் நிறைந்திருக்க மகன், மருமகளைப் பூரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்த தேவிகா சகுந்தலாவை நோக்கி சந்தோஷமா என்பது போல் புருவத்தைத் தூக்க நெஞ்சில் கை வைத்து கண்ணை மூடி ரொம்ப சந்தோஷம்… என்று சைகை செய்தார் சகுந்தலா.
“பரவால்லியே, எப்பவோ தொடர்பு விட்டுப் போன உன் அண்ணனைக் கண்டுபிடிச்சு அவர் பொண்ணுங்களையே பசங்களுக்கு கட்டி வச்சிட்டியே… நல்ல விஷயம்… உறவு விட்டுப் போகாது பாரு…” என்று வந்த உறவுகள் சிலர் சொல்ல, ஆதியின் கல்யாணம் காதல் கல்யாணம் என்று யாருக்கும் தெரியாமலே போக சுந்தரத்துக்கும் மகிழ்ச்சி.  
அவரது நண்பர்கள் சிலரும், “ஒவ்வொரு தகப்பனுக்கும் பிள்ளைங்களோட எதிர்காலதைப் பத்தி நிறைய கனவுகள் இருக்கும்… அதைப் புரிஞ்சுக்காம தன் விருப்பம் தான் முக்கியம்னு இருக்குற இந்தக்காலப் பசங்களுக்கு மத்தியில  உங்க பிள்ளைகளை ரொம்ப கட்டுப்பாடா வளர்த்திருக்கீங்க மிஸ்டர் சுந்தரம்… காதல், கத்தரிக்காய்னு வந்து நிக்காம உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நீங்க ஏற்பாடு பண்ணின பொண்ணு, மாப்பிள்ளையையே கட்டிகிட்டாங்களே… ரொம்ப பெருமைப்பட வேண்டிய விஷயம்…” என்று சொல்லவும் சுந்தரம் ராஜ்மோகனை நோக்க, “அதனால தான நானும் இவனை சம்மந்தி ஆக்கிகிட்டேன்…” என்று அவரும் பாராட்ட சுந்தரம் கூச்சமாய் உணர்ந்தாலும் அமைதியாய் இருந்தார்.
தேவ்க்கு புனேயில் டியூட்டியில் சேர ஆர்டர் வந்திருக்கவே குந்தவையின் எக்ஸாம் முடிந்து நான்காவது நாள் கல்யாணம் முடிவு செய்திருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் புனே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். ஆதி மீண்டும் பெங்களூர் கிளையில் அதே கம்பெனியில் தொடர சம்மதித்திருக்க அவனுடன் நந்தினியும் பெங்களூர் கிளம்பத் தயாராயிருந்தாள்.
அடுத்தடுத்து சடங்குகள், புகைப்படம், விருந்து என்று ஒவ்வொன்றாய் முடிய மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆதியும், அருளும் தங்கள் துணைகளுடன் அவர்கள் வீட்டுக்கும், குந்தவை தேவ் வீட்டுக்கும் கிளம்ப மகளைப் பிரியும் நேரத்தில் ஒரு தகப்பனாய் கண் கலங்க நின்ற கணவரைக் கண்டு சகுந்தலாவின் தாயுள்ளம் பூரித்தது.
முதலில் வீட்டுக்குள் நுழைந்த ஆதித்யன், நந்தினிக்கும் அடுத்து அருள் வானதிக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றனர். இரு மருமகள்களையும் பூஜை அறையில் விளக்கேற்ற வைக்க, காலில் விழுந்து வணங்கியவர்களை சந்தோஷத்துடன் வாழ்த்தினர். சிவராமனும், ஷீலாவும் மகள்களை புகுந்த வீட்டில் விட்டு அன்றே வீட்டுக்குக் கிளம்புவதாக சொல்ல சகுந்தலா சம்மதிக்கவில்லை.
“அண்ணா, இது எங்க வீடு மட்டுமில்லை… இதுல உன் பங்கும் இருக்கு… இனி நீங்க இங்க தான் இருக்கணும்…”
“ஆமா, மச்சான்… எங்களோடவே இருந்திருங்க… எதுக்கு மாப்பிள்ளை வீடுன்னு நினைக்கணும்… இப்ப இது உங்க பொண்ணுங்க வீடும்தான்…” சுந்தரமும் சொல்ல அமைதியாய் புன்னகைத்த சிவராமன் மறுப்பாய் தலையாட்டினார்.
“மாப்பிள்ள, இந்த சொத்து எல்லாம் என்னால அனுபவிக்க முடியலையேன்னு நான் எப்பவுமே வருத்தப்பட்டதில்லை… என்னோட தங்கையைப் பிரிஞ்ச வருத்தம் தான் இவ்ளோ நாளும் மனசை அரிச்சிட்டு இருந்துச்சு… இப்ப எனக்கு என் தங்கை கிடைச்சுட்டா… எப்ப வேணும்னாலும் அவளோட பேசலாம்… நினைச்சா வந்து பார்க்கலாம்… எனக்கு இந்த சந்தோஷம் போதும்…” என்றார் மன நிறைவுடன்.
சகுந்தலா அண்ணனைக் கண் கலங்க நோக்க சுந்தரத்தின் மனமும் கலங்கியது. இப்படிப்பட்ட உறவை இத்தனை காலம் பிரித்து வைத்தோமே என்ற வருத்தமும் தோன்ற சிவராமனின் கையைப் பற்றிக் கொண்டார்.
“மச்சான், என்னோட வெட்டி வீறாப்புல உங்க அன்பைப் புரிஞ்சுக்காம இத்தனை நாள் பிரிச்சு வச்சுட்டேன்… இது உங்க வீடு… உங்க தங்கையோட நீங்களும் இங்கயே இருந்திருங்களேன்…” என்றார் குரல் கமற.
“அப்பா, உங்க தங்கை கிடைச்சதும் எங்களை எல்லாம் மறந்துட்டிங்க பார்த்திங்களா…” நந்தினி கேட்கவும், மகளைப் புன்னகையுடன் நோக்கியவர், “என்னமா பண்ணறது… நீங்க எல்லாம் பிறக்கறதுக்கு முன்னாடியே என் மகளைப் போல அவளைத் தான நினைச்சிருந்தேன்… அவளுக்குப் பிறகு தான் நீங்க எல்லாம்…” எனவும், “அண்ணா…” என்று நெகிழ்ச்சியுடன் அவர் தோளில் சாய்ந்து கொண்ட தங்கையை தட்டிக் கொடுத்தவர், “நான் சொன்னது சரிதானடா சகும்மா…” என்றார் ஆனந்தக் கண்ணீருடன்.
“ஹா, இந்தப் பாசமலருங்க தொல்ல தாங்க முடியலியே…” நந்து அலுத்துக் கொள்ள, “அவங்க அங்க பாசமலர் படம் ஓட்டிட்டு இருக்கட்டும்… நான் உனக்கு காதல் பாடம் கத்துக் கொடுக்கறேன் வா…” என்றான் ஆதித்யன் கிசுகிசுப்பாய்.
சட்டென்று முகம் சிவந்தவள் அவனைக் காதலுடன் நோக்க, தன் அருகில் நின்ற வானதியின் விலாவில் இடித்த அருள், “அங்க பாரு…” என்று ஜாடை காட்ட அவர்களை நோக்கிய வானதி நாணத்துடன் தலை குனிந்து கொள்ள, “கொஞ்சம் அப்படி வா…” என்றான் அவள் கணவன் கண்ணிலேயே.
மறுப்பாய் கண்ணிலேயே பதில் சொன்ன வானதி சகுந்தலா கவனிக்கவும் தலையைக் குனிந்து கொண்டாள். அவர்களைப் புன்னகையுடன் நோக்கியவர், “இப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… அண்ணா, நீங்க இங்கயே இருக்கலேன்னாலும் பரவால்ல… ரெண்டு நாள் இருந்திட்டு கிளம்பலாம்… சொல்லுங்க அண்ணி…” என்று ஷீலாவிடம் சிபாரிசுக்கு அழைக்க, “விருப்பப்பட்டு கேக்கறாங்க… சரின்னு சொல்லுங்க…” என்றார் அவரும்.
“சரிம்மா… ரெண்டு நாள் இருந்து உன் கையால சாப்பிட்டுட்டு ஊருக்குக் கிளம்பறேன்…” என்றார் அவர். அதைக் கேட்டதும் பெரிதும் மகிழ்ந்தார் சகுந்தலா.
மாடியில் அருளுக்காய் புதிதாய் ஒரு அறையைக் கட்டியிருந்தனர். அங்கே சகோதரிகளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சகோதரர்களை ஒரு அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார். சகுந்தலாவின் சொந்தங்கள் எல்லாம் உள்ளூரிலேயே இருந்ததால் கல்யாணம் முடிந்து மண்டபத்திலேயே விடைபெற்று சென்றிருக்க வீட்டினர் மட்டுமே இருந்தனர்.
முன்தினம் ரிசப்ஷன், காலையில் கல்யாணம், சடங்கு என்று பெரியவர்களும் ஓடியாடி ஒவ்வொன்றையும் கவனித்ததில் அவர்களும் சோர்ந்திருந்தனர். எனவே அவர்களையும் குந்தவையின் அறையில் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு, சுந்தரமும் அறைக்கு செல்லவும் சோபாவில் ஓய்வாய் அமர்ந்த சகுந்தலாவின் மனம் நிறைந்திருந்தது.
மூன்று ஜோடிகளுக்கும் ராஜ்மோகன் அவருடைய பீச் வில்லாவில் சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஏகாந்தமான சூழ்நிலையும், தனிமையும் அவர்களுக்கு இனிய அனுபவத்தைக் கொடுக்குமென்பதால் அங்கே இரண்டு நாட்கள் தங்குவது போல் ஏற்பாடு செய்திருந்தார்.
சுற்றிலும் அழகான மரம், செடி கொடிகள், முன்னில் நீச்சல் குளத்துடன் அழகிய சூழலில் இருந்த வில்லா கம்பீரமாய் அவர்களை வரவேற்க அதைக் கண்டதுமே தேவ் தவிர மற்றவரின் கண்கள் வியப்பில் விரிந்தன.
“வாட் அ பியூட்டிபுல் பிளேஸ்…” ஆதி சொல்ல அதே மலர்ச்சியைக் கண்களில் தேக்கி கண்கள் மலர பார்த்து நின்றனர் நந்தினியும் வானதியும்.
“வாவ்… சூப்பரா இருக்கு தேவ்… மாமா சாய்ஸ் எப்பவுமே சூப்பர்தான்…” என்று குந்தவை பாராட்ட, “டார்லிங், ரொம்ப உன் மாமனாரை மெச்சிக்காதே… அவர்ட்ட இங்க நம்ம சாந்தி முகூர்த்தம் கொண்டாட அப்ளிகேஷன் போட்டதே உன் புருஷன் தான்…” தேவ் புன்னகையுடன் சொல்ல அவனது கையைக் கோர்த்துக் கொண்டவள், “ம்ம்… போலீஸ்காரனா இருந்தாலும் உனக்கும் ரசனை இருக்கு…” சிரிப்புடன் சொல்ல, “இல்லாமலா உங்களை செலக்ட் பண்ணோம்…” என்றவனின் பார்வை ஆவலுடன் நோக்க சிணுங்கினாள்.
ஜோடி நம்பர் ஒன்
ஆதித்யனும், நந்தினியும் அவர்களுக்கான அறையில் அமர்ந்திருக்க மிதமான விளக்கு வெளிச்சம் அறையை நிறைத்திருக்க அங்கங்கே சரமாய் சரமாய் தொங்கிய பூ அலங்காரத்தின் மணம் அறையோடு மனதையும் நிறைத்தது.
மூன்று பக்கமும் சுவரும், ஒரு பக்கம் கண்ணாடியால் ஆன தடுப்புச் சுவரும் இருக்க, அதன் வழியே வானத்து நிலவை கண்களாலும், அருகிலிருந்த பெண்ணிலவைக் கைகளாலும் தழுவிக் கொண்டிருந்தான் ஆதித்யன். நிலவைப் பார்த்தபடி அமர்ந்திருந்த நந்தினியின் பின்னில் அவளைப் பின் பக்கமாய் அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“நந்து… இன்னும் எத்தனை நேரம் தான் நிலவையே பார்த்திட்டு இருக்கப் போற…” அவனது குரல் செவியைத் தீண்ட அவனது கை வளைவுக்குள் இருந்தவள் இன்னும் வசதியாய் அவனில் சாய்ந்து கொண்டாள். அவனது கை விரல்களைக் கோர்த்து முறுக்கி விடுவித்து விளையாடியபடி நிலவின் மேல் கண் பதித்திருந்தாள்.
“ஆதி… அழகான நிலவு, புருஷன் பொண்டாட்டிங்கற உரிமையோட நாம, உன் கை அணைப்புக்குள்ள நான்… ஹூம், நடக்கறதெல்லாம் நிஜம்தானான்னு இப்பவும் என்னால நம்ப முடியல… சட்டுன்னு எல்லாம் கனவா கலைஞ்சிடக் கூடாதேன்னு பயமா இருக்கு…” உருக்கமாய் நந்தினி சொல்ல அவள் காதை மெல்லக் கடித்தான் ஆதித்யன்.
“ஆஆ… எதுக்குடா கடிச்ச… வலிக்குது…”
“ம்ம்… வலிக்குதா… அப்ப இதெல்லாம் கனவில்ல தானே…”
“அதை சொல்ல இப்படி கடிச்சு வைப்பியா…” சொல்லிக் கொண்டே காதை நீவிக் கொண்டவளை கைகளுக்குள் இறுக்கிக் கொண்டவன், “உன் வலி எல்லாம் ஒரே நிமிஷத்துல காணாமப் போக வைக்கட்டுமா…” என்றான்.
“ஓ… நீ எப்ப மாஜிக் எல்லாம் படிச்ச… எனக்குத் தெரியாதே…”
“ப்ச்… போடி… ரொம்பத்தான் பண்ணற…” என்றவன் அவளை சுற்றியிருந்த கைகளை கோபத்துடன் விடுவிக்க,
“அதுக்கு எதுக்கு கையை எடுக்கற…” என்றவள் மீண்டும் அவன் கையைத் தன்னைச் சுற்றி போட்டுக் கொண்டு அவன் கன்னத்தில் மூக்கால் உரசி,
“சரி, அது என்ன மாஜிக்னு சொல்லு…” என்றதும் மீண்டும் பழைய பார்ம்க்கு திரும்பிய ஆதி அவள் காது மடலில் முத்தமிட்டு முகத்துக்கு நகர கூச்சத்தில் குழைந்து அவன் மீதே சரிந்தாள் அவனது நந்தினி. அவளது கட்டைக் காலை முன்னமே அவிழ்த்து வைத்திருந்தான்.
அவளது கூச்சங்கள் எல்லாம் அவனில் காணாமல் போக அவளுக்குத் தெரியாத பல மாஜிக்குகளை மென்மையாய் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான் அவளவன். அவளும் முடிந்தவரையில் அவனை திருப்திப் படுத்த ஒத்துழைத்தாள்.

Advertisement