Advertisement

“வெல்கம் டு அவர் கல்கி பாமிலி…” என்று நந்தினியிடம் தேவ் கை நீட்ட புன்னகையுடன் பற்றிக் குலுக்கினாள்.
“நாங்க எல்லாம் சீனியர் தம்பி… நீங்க தான் புதுவரவு…” வெகு நாட்களுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் நந்தினி சொல்லவும் ஆதித்யன் காதலுடன் அவளைப் பார்க்க ஜாடை செய்த தேவ் குந்தவையை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.
“நந்து, இப்ப உனக்கு ஹாப்பியா…” என்ற ஆதித்யனிடம், “ம்ம்… ரொம்ப ஹாப்பி ஆதி… ஆனா உன் கெட் அப் தான் எனக்குப் பிடிக்கல…” என்றாள் அவனைக் காதலுடன் நோக்கி.
“உனக்குப் பிடிச்ச மாதிரியே மாத்திருவோம்…” என்றவன் அவளை விழுங்கி விடுவது போலப் பார்க்க கூச்சத்துடன் அவன் விலாவில் இடித்தாள் நந்தினி.
“ஆதி, என்ன இது… எல்லாரும் இருக்கும்போது இப்படி முழுங்குற போலப் பாக்குற…” அவளது சிணுங்கல், அவனுக்கு உற்சாகத்தைக் கொடுக்க, “என் பொண்டாட்டியை நான் பாக்கறேன்… இனி யாரும் தடை சொல்ல முடியாதுல்ல… அடுத்த மாசம் கல்யாணம் முடியட்டும்… இத்தனை வருஷம் எனைத் தவிக்க விட்டதுக்கு அப்புறம் இருக்குடி உனக்கு…” அவளது ஈர இதழ்களில் படிந்த அவனது பார்வை சிலிர்ப்புடன் இதயத்தை ஊடுருவியது.
“ஓஹோ, என்ன பண்ணுவிங்க…” என்றாள் வேண்டுமென்றே.
அருகில் யாரும் இல்லை என்பதை கண்ணைச் சுழற்றி உறுதிபடுத்திக் கொண்டவன், “ம்ம்… ஒரே அட்டம்ப்ட்ல உன்னை அம்மா ஆக்கல, நான் ஆதித்யன் இல்லை…” என்றான் இல்லாத மீசையைத் தடவிக் கொண்டு.
அவன் சொன்னதைக் கேட்டு சிவந்து போனவள், “ஹூக்கும்… ரொம்பப் பெரிய வீரன் தான்…” என்று விட்டு குந்தவை அவளை நோக்கி வரவும் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
அவள் ஏதோ கேட்க பேசிக் கொண்டே நகர்ந்தாள். எல்லாம் நல்லபடியாய் முடிய ஷீலாவுடன் மற்ற பெண்களும் சேர்ந்து இரவு உணவுக்கு புட்டு, கடலைக்கறி தயார் செய்ய அண்ணன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு சென்னை கிளம்பி இருந்தனர்.
சுகமான நினைவுகளும் சில நேரம் உறக்கத்தைக் கெடுக்கும் என்பது போல் சகுந்தலா உறக்கம் வராமல் காலையிலிருந்து நடந்ததை அசை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அங்கே வீட்டில் தனித்திருந்த வானதி, அருளுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. அருள் விவரம் தெரிந்து கொள்வதற்காய் அன்னையை போனில் அழைக்க, “வீட்டுக்கு வந்து எல்லாம் விவரமாய் பேசிக் கொள்ளலாம்…” என்றவர் கிளம்பும்போது மட்டும் அழைத்து சொல்லி இருந்தார்.
வானதி குந்தவையை அழைக்க சோகமாய் பேசியவள், “இப்ப என்னால எதையும் சொல்ல முடியாது வானதி… ப்ச்… எதிர்பாராம ஏதேதோ நடந்திருச்சு… வந்து சொல்லறேன்…” என்று வைத்துவிட இருவரும் குழம்பிப் போயினர்.
சோபாவில் சோகமாய் அமர்ந்திருந்த வானதியின் அருகில் அமர்ந்த அருள் அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொள்ள, “பச்…” என்று உருவிக் கொண்டாள் அவள்.
“என்னாச்சு வானு… எதுக்கு மூட் அவுட்…”
“ப்ச்… மனசினு ஒரு விஷமம்… அவிடே எந்தெங்கிலும் பிராப்ளம் ஆயிருக்குமோ…”
“அப்படில்லாம் எதுவும் ஆயிருக்காது… அப்பா இங்கிருந்து போகும் போதே எல்லாத்துக்கும் சம்மதிச்சு தானே கிளம்பினார்… தேவையில்லாம பீல் பண்ணாத…” என்றவன் அவளைச் சுற்றிக் கையிட்டு வளைத்து தன் தோளில் சாய்த்துக் கொள்ள அவளுக்கும் அது ஆறுதலாய் இருந்ததோ என்னவோ அவன் கையைக் கட்டிக் கொண்டு தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.
“வானு, நான் உன்கிட்ட ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன்… நந்தினி அண்ணி நல்லாத் தமிழ் பேசறாங்க… உன் அம்மா, அப்பாவும் தமிழ் நல்லாப் பேசறாங்க… உனக்கு மட்டும் ஏன் தமிழ் தெரியலை…”
“அது…” என்றவள், “நான் சின்ன வயசில இருந்து என் மாமா வீட்ல தான் வளர்ந்தேன்… அப்பாக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும்… நான் சின்னப் பொண்ணு… என்னைப் பார்த்துக்க முடியாதுன்னு மாமா வீட்ல விட்டுட்டாங்க… அங்க எல்லாரும் மலையாளம் தான்… நான் படிச்சதும் மலையாளம்… பின்ன பெருசானதும் வீட்டுக்கு வந்துட்டேன்… அப்புறம் நர்சிங் படிக்க ஹாஸ்டல்… எனிக்கு தமிழ் மனசிலாவும்… பக்ஷே திரிச்சு பதில் பரயான் அரயில்ல… சேச்சி காலேஜ் ஒக்க தமிழ்நாட்டில் ஹாஸ்டலில் தங்கி தான் படிச்சது… அதுகொண்டு அவளுக்கு நல்லாத் தமிழ் தெரியும்…” இரண்டு பாஷையும் கலந்து சொல்லி முடித்தாள்.
“ஏன்… நான் பேசற மலையாளம் மனசிலாகலையா…”
“அப்படில்லாம் இல்ல வானு…  மலையாளமோ, தமிழோ காதலுக்கு தான் பாஷையே தேவை இல்லையே…”
“ஹோ, எப்படி…” வானதி கேட்கவும், அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தியவன் கண்களுக்குள் ஊடுருவிப் பார்க்க, நாணத்துடன்  அவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
“இப்படிதான் வானு… ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்பத் தொடங்கிட்டா நம்ம இதழ்கள் நிஷப்தமாகிடும்… மனசு ரெண்டும் காதல் மொழி பேசத் தொடங்கிடும்…” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட, அவன் நெஞ்சில் முகத்தை வைத்துக் கொண்டவள் புன்னகைத்தாள்.
“ம்ம்… ஆளொரு கவியானல்லோ… எனிக்கு இத்தர திவசம் அரஞ்சில்லா…”
“நான் கவிஞன் எல்லாம் இல்ல…”
“அய்யடா, பின்னே…”
“நீ பக்கத்துல இருக்கும்போது இப்படில்லாம் தானா வருது… உனக்குத் தெரியாதது இன்னும் நிறைய இருக்கு வானு… எல்லாத்தையும் கல்யாணத்துக்குப் பின்னாடி பொறுமையா சொல்லித்தரேன்…” என்று குறும்புடன் சொல்ல சிவந்தவள் சட்டென்று அவனிடமிருந்து விலகி எழுந்து கொண்டாள்.
“ச்சீ போ…”
“என்ன ச்சீ… கல்யாணமே ஒருத்தரை ஒருத்தர் லவ்வோ லவ்வுன்னு லவ்வறதுக்கு பெரியவங்க பார்த்து கொடுக்கிற லைசன்ஸ் தானே… எல்லாம் கத்துத் தரேன்…” என்று கண்ணடிக்க, அவள் நாணத்துடன் சிணுங்கினாள்.
“இங்கனே ஒக்கே பரஞ்சா நான் ரூமிலேக்கு போகும்…”
“சரி, சரி பரயலை… இங்க வந்து உக்காரு… நான் உனக்கு ராமாயணம், மகாபாரதம் சொல்லித்தரேன்…” என்று இழுக்க,
“ராமாயணம், மகாபாரதமா… எந்தினு…” என்றாள் புரியாமல்.
“அதுல ராமன் சீதையை எப்படி கரக்ட் பண்ணார்… கிருஷ்ணன் எப்படி ருக்மணியைக் கரக்ட் பண்ணார்னு நிறைய விஷயம் இருக்கு தெரியுமா…” என்று சொல்ல, “ச்சீ… போ… நீ வளர மோசம்… போயி உறங்கான் நோக்கு… குட் நைட்…” என்றவள் எழுந்து அவள் அறைக்கு ஓடிவிட சிரித்துக் கொண்டான் அருள்மொழி வர்மன்.
“ச்ச்சே… கொஞ்ச நேரம் ரொமான்ஸ் சொல்லிக் கொடுக்கலாம்னு பார்த்தா ஓடிட்டாளே…” என நினைத்தவன் சோபாவில் அப்படியே படுத்து உறங்கியும் விட்டான்.
அதிகாலையில் அழைப்பு மணி சத்தம் கேட்டு எழுந்தவன் தன் மீது போர்த்தியிருந்த போர்வையைக் கண்டதும், வானதி போர்த்தி விட்டிருப்பாள் எனப் புரிய புன்னகையுடன் அவளைத் தேட அவள் கதவைத் திறந்து கொண்டிருந்தாள். அந்த நேரத்திலும் குளித்து தலைக்கு சுற்றிய டவலுடன் மங்களகரமாய் நின்றவளைக் கண்டு புன்னகைத்தான்.
அனைவரும் சோர்வுடன் உள்ளே நுழைய, “எல்லாரும் உக்காருங்க… காபி ரெடியா இருக்கி… கொண்டு வராம்…” என்று அடுக்களைக்கு ஓடினாள்.
காபியுடன் வந்தவள், சகுந்தலாவின் முகத்தைப் பார்க்க சோகமாய் இருந்தார். குந்தவையும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க மற்றவர்கள் காபி குடித்தனர்.
அதற்குள் முகம் கழுவி வந்த அருள், “என்னமா, போன விஷயம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா… அண்ணனுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டிங்களா…” என்று கேட்க, “ம்ம்… உன் அண்ணனோட உனக்கும் சேர்த்தே மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு…” என்று அன்னை சொல்ல அதைக் கேட்டவன் முகம் ஆயிரம் வாட்சாய் மிளிர சந்தோஷத்துடன் வானதியை நோக்கினான்.
“என் அண்ணனோட இளைய பொண்ணை தான் உனக்கு பிக்ஸ் பண்ணிருக்கோம் அருளு…” என்றதும் இருவரும் அதிர்ச்சியுடன் சகுந்தலாவை நோக்கினர்.
“எ..என்னம்மா சொல்லறிங்க… உ…ங்க அண்ணன் பொண்ணா… அவரை எங்கே பார்த்திங்க…” என்றான் நம்ப முடியாமல்.
“ஆமா மச்சான்… போன இடத்துல எதிர்பாராம உங்க மாமாவை சந்திச்சோம்… அவரோட இளைய பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியவும் இத்தனை நாள் விட்டுப் போன சொந்தத்தைப் புதுப்பிக்கனும்னு அவர் பொண்ணை உனக்குப் பேசி முடிச்சுட்டாங்க…” சோகமாய் சொல்ல அருள் அதிர்ந்து நோக்க வானதி கண்ணில் பொங்கிய கண்ணீரை யாருக்கும் காட்டாமல் அடுக்களைக்கு ஓடிவிட்டாள்.
“ஆமாடா அருள், என் மூணு பிள்ளைகளுக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணி அசத்தப் போறேன்…” சுந்தரம் சொல்லவும் நொந்து போனவன் அன்னையை பரிதாபமாய் நோக்க அவர் உதட்டை சுளித்து, என்ன பண்ணுவேன்… என்று கையை விரிக்க நொந்து போனான் அருள்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கி குந்தவை தேவ் முகத்தைப் பார்க்க அவளை நோக்கிக் கண்ணடித்தவன் தொடர்ந்தான்.
“மச்சான்… உன் மாமா பொண்ணை நீ பார்க்க வேண்டாமா… இதுல இருக்காங்க பாரு…” என்று ஒரு கவரை நீட்ட அவன் எங்கோ வெறித்தபடி வாங்காமல் நின்றான்.
“அருள்… மாப்பிள்ளை, போட்டோ கொடுக்கிறார்… வாங்காம என்ன யோசிக்கற… ஏன், நீயும் யாரையாச்சும் லவ் பண்ணறியா என்ன…” என்று தந்தை கேட்க, “அ…அது… வந்துப்பா… நா..நான்…” என்று மீதியை சொல்லாமல் வார்த்தையை முழுங்கினான்.
“என்ன நான்… போனாப் போகட்டும்னு உன் அண்ணன் காதலுக்கு சம்மதிச்சா, உன் காதலுக்கும் சம்மதிப்பேன்னு தப்புக் கணக்கு போடாத… இதுதான் உனக்கு நாங்க பார்த்திருக்கிற பொண்ணு… நீ இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்…” என்றவர் தேவ் கையிலிருந்த கவரை வாங்கி மகன் கையில் திணித்துவிட்டு நகர இப்படி ஒரு சூழலை எதிர்பார்க்காதவன் அதிர்ந்து நின்றான்.
“அ..அம்மா, என்னம்மா இது… உங்களை நம்பி தானே நான்…”
வார்த்தையை முடிக்கும் முன்பு கண்கள் நிறைய, “நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்… முடியல அருளு… நீ என் அண்ணன் மகளைத்தான் கட்டிக்கணும்னு விதி இருந்தா எப்படி மாத்த முடியும்… அந்தப் பொண்ணும் ரொம்ப அழகா இருக்கா… நீ போட்டோவைப் பாரு… உனக்கே பிடிக்கும்…”
“ப்ச்… பாருங்க மச்சான், எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு…” தேவ் சொல்ல, “ஆமாண்ணா, பாரு… எனக்கும் சின்ன அண்ணியை ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்று குந்தவையும் சொல்ல கோபமாய் பார்த்தவன், “எல்லாம் தெரிஞ்சிருந்தும்  என்னை ஏமாத்திட்டிங்கல்ல…” அவன் கோபமாய் கேட்க. அதுவரை அமைதியாய் இருந்த ஆதி வாய் திறந்தான்.
“டேய், ரொம்ப அலட்டிக்காம கவரைத் திறந்து பொண்ணு யாருன்னு தான் பாரேன்… எல்லாம் உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு தான்…” என்று சொல்ல எல்லாரின் முகமும் சட்டென்று மாற கலகலவென்று சிரித்தனர்.
“சும்மா உன்னை வெறுப்பேத்தினோம் அண்ணா… பாரு…”
“ஆமாடா அருளு… என் அண்ணனோட இளைய பொண்ணு வேற யாரும் இல்ல, உன் மனசுக்குப் பிடிச்ச அதே வானதி தான்…” சகுந்தலா சிரித்துக் கொண்டே சொல்ல, அவசரமாய் கவரைப் பிரிக்க வானதியும், நந்தினியும் பெற்றோருடன் குடும்ப போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தனர்.
பிடித்தும் இம்சையாய்
விலகியும் விலகாமலாய்
எனைத் தொடரும் உன் ஈர
நினைவுகளில் எப்போதும்
சிலிர்ப்புடனே நான்…
இந்த சுக வேதனையே
காதலின் உயிர் நாடி…
உதடுகள் உறங்கினாலும்
உள்ளங்கள் உறங்காமல்
நிசப்தமாய் சப்தித்துக்
கொண்டிருப்பதே
காதலின் புதுபாஷையோ…

Advertisement