Advertisement

அத்தியாயம் – 34
எதிர்பார்ப்பும், உற்சாகமுமாய் வந்தவர்களை மன நிறைவும், மகிழ்வுமாய் சுமந்து கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது டிராவலர்.
உணர்ந்து கேட்ட மன்னிப்பும், மனம் திறந்து பேசிய பேச்சுகளும், என்றோ விட்டுப் போன பழைய சொந்தங்களின் பந்தத்தை மீண்டும் புதுப்பித்திருக்க, புதிதாய் முடிவு செய்த உறவுகளும் மனதை வெகுவாய் நிறைத்திருந்தது.
இரண்டு மணி நேரத்தில் தனது ஒற்றைப் பட்டுப் போன குடும்ப வாழ்க்கை மீண்டும் துளிர்த்ததை எண்ணி சகுந்தலாவுக்கு பெரும் ஆனந்தமாய் இருந்தது.
என்னதான் கணவன், குழந்தைகள் என்று சந்தோஷமாய் வாழ்ந்தாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உடன்பிறப்பும், பிறந்த வீடும் பெரும் சந்தோஷத்தைக் கொடுப்பவை. இழந்த உறவுகள் திரும்பக் கிடைத்த சந்தோஷம் அவருக்கு.
வெளியில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தாலும் மனதுக்குள் மிகவும் பிரகாசமாய் உணர்ந்தார் சகுந்தலா. என்றும் மனதில் நிசப்தமாய் தான் உரையாடிக் கொண்டிருந்த மௌன பாஷைகளுக்கு இன்று பலவிதத்திலும் சந்தோஷமான பதில்கள் கிடைத்திருந்தன.
வேண்டாம் என்றதும் விட்டுப் போவதா சொந்தம்… தூக்கி எறிந்தால் உடைந்து போகும் கண்ணாடியா உறவு… அது ஒரு உணர்வு… உறவுகளில் உண்மையும் புரிதலும் இருந்தால் எத்தனை விலகி இருந்தாலும் அது பட்டுப் போவதில்லை. சின்னதாய் சந்தர்ப்பம் கிடைத்தாலும் மனதுக்குள் நிசப்தமாய் உறங்கிக் கொண்டிருக்கும் அன்பின் விதை சட்டென்று தனக்கான பாஷையை உணர்ந்து வளரத் தொடங்குகிறது.
நேரம் இரவு பதினொரு மணியைத் தாண்டியிருக்க சாத்தியிருந்த கண்ணாடி ஜன்னலைத் தாண்டி குளிர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. தன் அருகில் ஒருவித அமைதியுடன் சீட்டில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருக்கும் கணவரை அன்போடு நோக்கினார் சகுந்தலா.
ராஜ் மோகனும் தேவிகாவும் ஒருவர் தலை மீது மற்றொருவர் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருக்க அவர்களை நோக்கிப் புன்னகைத்தவர், தேவ் தோளில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த மகளைக் கனிவோடு நோக்கினார். ஆதித்யன் மட்டும் உறங்காமல் டிரைவர் அருகே அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.
அநேகமாய் அதற்குக் காரணம் நந்தினியாய் இருக்கலாம்… யோசித்தவரின் இதழில் புன்னகை நெளிந்தது.
“கடவுளே… என் மனதிலுள்ள குறைகளை எல்லாம் போக்கி நினைத்த போல எல்லாவற்றையும் நல்லபடியாய் முடித்துக் கொடுத்துவிட்டாய்…” கடவுளுக்கு நன்றி கூறிய மனது சற்று நேரத்திற்கு முன் கணவர் கேட்டதை நினைத்து வருந்தியது.
“சகு… நந்தினி அப்பாதான் உன் அண்ணன்னு உனக்குத் தெரிஞ்சிருந்தும் ஏன் என்கிட்டே சொல்லாம மறைச்சுட்ட… உனக்கு கூட நம்பிக்கையான புருஷனா நான் இல்லியா…”
தழுதழுக்கும் குரலில் மிகுந்த வருத்தத்துடன் குற்ற உணர்வோடு கணவன் கேட்கவும் அவர் தவித்துப் போனார்.
“ஐயோ, அப்படி எல்லாம் இல்லங்க… உங்க மனசுல காதல் மேல உள்ள வெறுப்பு கொஞ்சம் கூட குறையலைன்னு நீங்க நம்ம ஆதிகிட்ட காட்டின கோபமே உணர்த்திடுச்சு… அந்த வெறுப்பைப் போக்காம நந்தினி அப்பா தான் என் அண்ணன்னு சொன்னா உங்க கோபம் இன்னும் அதிகம் ஆகுமோன்னு பயப்பட்டேன்… அதான் சொல்லலை…” அவர் சொல்லவும் அது சரிதானோ என்பது போல் சுந்தரம் அமைதியாய் யோசிக்க சகுந்தலா தொடர்ந்தார்.
“நந்தினிக்கு ஆக்சிடன்ட் ஆனப்ப நான் அவர ஹாஸ்பிடலில் பார்த்ததும் முதல்ல ஷாக் ஆகிட்டேன்… அண்ணியை இருபத்தஞ்சு வருஷம் முன்னால ஒரு தடவை தான் பார்த்திருக்கேன்… அதனால அடையாளம் தெரியல… அவங்களுக்கும் என்னை எங்கயோ பார்த்த போல இருந்தாலும் நான்னு தெரியலை போலருக்கு… அன்னைக்கு இருந்ததுக்கு இப்ப உடம்புல ரொம்ப மாற்றம் வந்திருச்சு இல்லியா… ஆனா அண்ணன் ரொம்ப மெலிஞ்சு அடையாளமே மாறி இருந்தாலும் பார்த்ததும் புரிஞ்சிடுச்சு… அவருக்கு என்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோசம்… எனக்கு முன்னாடி அவர் என்னைக் கண்டுகிட்டார்… சகும்மா, எப்படி இருக்கே… மாப்பிள்ள இனியும் எங்கள மன்னிக்கலையான்னு அழுது புலம்பினார்… பாவம், ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க… அண்ணனுக்கு ஹார்ட்ல பிராப்ளம்… பிளாக் இருக்கு, சரி பண்ணனும்னு சொல்லிருக்காங்க… ஏதோ அண்ணி பிறந்த வீடு கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கவும் சமாளிச்சுட்டாங்க போலருக்கு… இதெல்லாம் சொல்லி அழுதார்… நாம இங்கே நல்ல வசதியா இருக்கும்போது இந்த சொத்துல பங்கு உள்ள அவங்களோட நிலமை மனசுக்கு உறுத்தலா இருந்துச்சு… அதுக்கு உங்க வறட்டுப் பிடிவாதம் தானே காரணம்னு கோபம் கூட வந்துச்சு…” நிறுத்தி கணவனைப் பார்த்தார்.
“ம்ம்… நான் தப்புப் பண்ணிட்டேன் சகு… அவங்களோட நியாயமான உரிமையைக் கூட கொடுக்காம பறிச்சுகிட்டு துரோகம் பண்ணிருக்கேன்… என்னை நினைச்சு எனக்கே ரொம்ப வெறுப்பாருக்கு…” அவர் வேதனையுடன் சொல்ல ஆறுதலாய் கையைப் பற்றிக் கொண்டார் சகுந்தலா.
“முடிஞ்சதை நினைச்சு கவலைப்படாதீங்க… இப்ப நீங்க செய்தது பெரிய விஷயம்… நம்ம ரெண்டு பிள்ளைகளை அண்ணனோட ரெண்டு பொண்ணுகளுக்கும் கட்டி வச்சிட்டா எல்லாம் அவங்களுக்கும் கிடைச்சிரும்…”
“ம்ம்… இருந்தாலும் அவருக்கு உரிமையான சொத்தை இத்தனை நாள் நான் வச்சிருக்கறதை நினைச்சா வருத்தமா இருக்கு… எத்தனை கம்பீரமா, அழகா இருந்த உன் அண்ணன் இப்ப பார்க்கவே எவ்வளவு மெலிஞ்சு பாவமா இருக்கார்…”
“விடுங்க… இனி அவங்க சந்தோஷமா இருக்க என்ன பண்ணணுமோ அதைப் பண்ணி சரி பண்ணிடுவோம்…”  
“ம்ம்… பண்ணனும்…” என்றவர், “சரி, உன் அண்ணனைப் பார்த்த பின்னாடியும் இத்தனை வருஷம் எப்படி யாருக்கும் சொல்லாம இருந்த…” என்றார் யோசனையுடன்.
“காதலிச்சான்னு பிள்ளையே ஒதுக்கி வச்ச உங்ககிட்ட என் அண்ணனைப் பத்தி சொன்னா கண்டிப்பா ஏத்துக்க மாட்டிங்கன்னு எனக்குத் தோணுச்சு… காதலிக்கறவங்க மேல உள்ள உங்க கண்மூடித்தனமான வெறுப்பை முதல்ல போக்கணும்… அப்பதான் அவங்களை ஏத்துக்குவீங்கன்னு மனசுக்குள்ளேயே வச்சிருந்தேன்… அண்ணனயும் யாரு கிட்டயும் இதைப் பத்தி சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்… நந்தினிக்கு, அண்ணனுக்கு வேண்டிய உதவிகளை ஆதியே செய்து கொடுத்துட்டதால பொறுமையா காத்திருந்தேன்… இப்பதான் நீங்க அவங்களை ஏத்துக்கிற சந்தர்ப்பம் வந்துச்சு… அண்ணனை தேடணும்னு நீங்க சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்… உங்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்னு தான் இங்க வரும் போது கூட சொல்லாம இருந்தேன்…”
“ம்ம்… அதும் சரிதான்… நாம பேசிட்டு இருக்கும்போது சிவராமன் வரவும் சட்டுன்னு அடையாளமே தெரியலை… என் முன்னாடி வந்து கை கூப்பி நின்னு, “நல்லாருக்கீங்களா மாப்பிள்ள… என்னை அடையாளம் தெரியுதான்னு கேக்கவும் தான் கவனிச்சவன் ஷாக் ஆயிட்டேன்… அவரோட இந்த நிலமைக்கு நான்தானே காரணம்… இப்ப என்னதான் மன்னிப்பு கேட்டாலும் இத்தனை வருஷம் அவர் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களை எல்லாம் என் கைல வச்சிட்டு இருந்தேனே…” என்றவரின் கண்கள் கலங்கி இருந்தன.
அந்தக் காட்சி மனதில் நிழலாடியது. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நந்தினியின் தந்தை எழுந்து அங்கே வர, அவரைக் கண்டதும் சட்டென்று சுந்தரத்திற்கு அடையாளம் தெரியவில்லை. பிறகு அவர் அனைவருக்கும் வணக்கம் சொல்லி, “என்னை அடையாளம் தெரியவில்லையா மாப்பிள்ளை…” என்றதும் தான் கவனித்தவர் அதிர்ந்து சட்டென்று எழுந்து நின்றார்.
அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்க, “விடுங்க மாப்பிள்ள… இனி முடிந்த எதையும் பேச வேண்டாம்… என் தங்கை மேல உயிரா இருந்தேன்… அவளைப் பிரிஞ்சதைத்தான் என்னால தாங்கிக்க முடியல… காலம் எல்லாத்துக்கும் மருந்துன்னு சொல்லுவாங்க… எனக்கும் அப்படிதான்… என் மகளை உங்க மகனுக்கு கல்யாணம் பண்ண மனப்பூர்வமா சம்மதிக்கறிங்க தானே…” என்று ஈரம் படர்ந்த விழிகளுடன் சிவராமன் கேட்கவும் குற்றவுணர்வில் தவித்துப் போனார் சுந்தரம்.
“சாரி மச்சான்… என்னை மன்னிச்சிருங்க… இனி எந்தக் காதலுக்கும் நான் எதிரி இல்லை… இன்னைக்கே வேணும்னாலும் நந்தினியை ஆதிக்கு கல்யாணம் பண்ணி கையோட என் மருமகளைக் கூட்டிட்டுப் போயிடறேன்…” சுந்தரம் சொல்லவும் அனைவரும் சிரித்தனர்.
நந்தினிக்கும், ஆதிக்கும் கூட இது இனிய அதிர்ச்சியாய் இருந்தது. அனைவரும் சகுந்தலாவை யோசனையுடன் நோக்க, “இப்படி எல்லாமே சுபமா முடியணும்னு தான் முன்னயே யாருக்கும் சொல்லாம இருந்தேன்… எல்லாரும் மன்னிச்சிருங்க…” என்றவர், “அண்ணா, இப்ப உடம்புக்கு பரவால்லியா…” என்று சிவராமனின் கையைப் பிடித்துக் கொள்ள, அவர் ஆதரவாய் கையில் தட்டிக் கொடுத்தார்.
சங்கடமான நிமிடங்கள் மெல்ல நகர சூழ்நிலை சிறிது நேரத்தில் அப்படியே சந்தோஷமாய் மாறியது. அனைவரும் கலகலப்புடன் ஒருவரை ஒருவர் விசாரிக்க, “மச்சான்… உங்க இளைய பொண்ணு எங்கே…” என்றார் சுந்தரம். 
“அதைக் கேட்ட குந்தவை, “அப்பா… உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் சொல்லட்டுமா… வானதி தான் நம்ம நந்தினி அண்ணியோட தங்கை…” என்றதும் திகைத்தார்.
“ஓ… இது எப்படி…” என்றார் வியப்புடன் ராஜ்மோகன்.
“ஆமா, மாமா… இப்ப தான் எனக்கும் தெரிஞ்சது…” குந்தவை சொல்லவும் மகளை முறைத்த சகுந்தலா,
“வானதியைப் பற்றி இப்போது சொல்லவேண்டாம் என்று மகளிடம் சொல்லியும் இப்படி சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில் மகளை நோக்க அவள் சுவரில் தொங்கிய குடும்ப போட்டோவைக் கை நீட்டிக் காட்டவும் திகைப்புடன் பார்த்தார் சுந்தரம்.
“வானதி, உங்க ரெண்டாவது பொண்ணா…” அதிசயமாய் கேட்ட சகுந்தலாவைப் பார்த்து சிரித்த ஷீலா, “ஆமாம்… வானதியை உங்களுக்குத் தெரியுமா…” என்று திகைப்புடன் கேட்க, சந்தோஷமாய் தலையாட்டினார்.
“ஆமா அண்ணி, வானதி நம்ம வீட்டுல தான் தங்கிருக்கா…”
“அட, அவ சொல்லுற ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் நீங்க தானா… எப்பவும் உங்களைப் பத்தி சொல்லுவா…”
“அவ நம்ம வீட்டுப் பொண்ணுன்னு தெரியாமலே விதி, நம்ம வீட்ல அவளை சேர்த்திருக்கு…” என்றார் புன்னகையுடன்.
“வானதி, நந்தினி தங்கையா… எனக்கும் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு சகு… இப்படிக் கூட அதிசயம் நடக்குமா… இங்க பொறந்து வளர்ந்து வேலைக்காக அங்க வந்த பொண்ணு டாக்டர் இல்லேன்னு நம்ம வீட்டுலே தங்கி… என்ன ஒரு அதிசயம் பாரு…” என்ற சுந்தரம், “மச்சான்… உங்களுக்கு விருப்பம்னா, வானதியை நம்ம அருளுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்… நான் பண்ணின பாவத்துக்குப் பரிகாரமா ரெண்டு மருமகளையும் என் பொண்ணுங்களைப் போலப் பார்த்துக்கறேன்…” என்றார்.
“என்ன மாப்பிள, பரிகாரம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு… அவளோட முறைப் பையனுக்கு கட்டி வைக்கணும்னு உரிமையோட சொல்லுங்க…” சிவராமன் சொல்லவும் சந்தோஷத்துடன் அணைத்துக் கொண்டார்.
“அப்ப நானு…” நந்தினியின் அருகில் நின்ற குந்தவை சோகமாய் முகத்தை வைத்துக் கேட்க, “நீ எங்க வீட்டு மகாலட்சுமி மா… உன்னை நான் பார்த்துக்குவேன்…” என்றார் ராஜ் மோகன்.
“அதுசரி, எல்லாரும் பொண்ணுங்களை மட்டும் பார்த்துகிட்டா பையனாப் பொறந்த எங்களை எல்லாம் யாரு பார்த்துப்பா… நாங்க என்ன தக்காளித் தொக்கா…” தேவ் கேட்கவும், “உங்களைப் பார்த்துக்க தான் எங்க மருமகளுங்க இருக்காங்களே…” என்றார் தேவிகா. 
“ஆஆ, அம்மா… மகளா, மருமகளா… தெளிவா சொல்லுங்க…”
“வேணும்னா, மகளா வந்த மருமகள்னு வச்சுக்க…” எனவும், “வெவ்வெவ்வே…” என்று பழிப்புக் காட்டிய குந்தவையைக் கண்ணை உருட்டிக் காட்டி மிரட்டியவன் சிரித்தான். பெரியவர்கள் விட்டுப் போன குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் சேர்ந்து கொண்டனர்.

Advertisement