Advertisement

“நம்மளை நம்பி அல்லே ஆன்ட்டி தனியே விட்டு போயது… இங்கனே ஒக்கே செய்யான் பாடில்லா…”
“ஏன் என்ன தப்பு… முதல்ல கூட நம்ம காதல் என்னாகுமோன்னு பயம் இருந்துச்சு… இப்பதான் அப்பாவே அண்ணன் காதலை ஏத்துகிட்டாரே… அப்ப நம்ம காதலுக்கும் பச்சைக் கொடிதான்…” என்றான் சந்தோஷத்துடன்.
“ம்ம்… அதினு… இப்ப எந்து வேணம்…” கண்களில் ஆயிரம் அபிநயத்துடன் ஆவலை மறைத்துக் கேட்டவளை ஏதேதோ செய்யும் ஆவல் இருந்தாலும் அடக்கிக் கொண்டவன்,
“பெருசா, ஒண்ணும் வேண்டாம்… இதமா ஒரு ஹக்… சும்மா ஒரு உம்மா…” என்றான் ஆவலுடன்.
அதைக் கேட்டதும் நாணத்துடன் குனிந்து கொண்டவளின் முக சிவப்பு அவனைக் கிறங்கடிக்க அவனது கைகள் அவள் இடையை வளைக்க கூச்சத்தில் நெளிந்தவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் அருள்.
அவன் நெஞ்சத்தில் முகம் பதித்து தன் அடையாளத்தை இதயத்தில் பதிய வைத்துக் கொண்டிருந்தவளின் இதழ் நோக்கி அவன் ஆவலுடன் குனியவும் சட்டென்று அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விலகி ஓடினாள் வானதி.
“ம்ஹூம்… அதொக்கே கல்யாணத்தினு சேஷம்…” என்றவளை எட்டிப் பிடிக்கும் ஆவலில் அவனும் துரத்த கைக்கு சிக்காமல் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
“ப்ச்… வானு… ப்ளீஸ், கதவை ஓப்பன் பண்ணு…” அவன் தட்ட,
“ம்ஹூம்… ஆபீஸ் போகான் நோக்கு… எனிக்கு கிளினிக் போவான் சமயமாயி…” அவள் சொல்லவும், “ப்ச்… ஆசையா வந்தா ஏமாத்திட்டல்ல… என்னோட பேசாத…” என்றவன் கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டான். சிறிது நேரத்தில் அவள் புறப்பட்டு வெளியே வரவும் ஹாலில் அருளைக் காணவில்லை.
“எவிடே போயி…” என்றவள் அவனைத் தேடி மாடிக்கு செல்ல அவன் கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்தான்.
“என்னாச்சு… சுகமில்லே…” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவள் முகத்தை மூடியிருந்த அவன் கையைத் தொட தட்டி விட்டான்.
எழுந்து அமர்ந்தவன், “எப்பப் பார்த்தாலும் நர்ஸ் மாதிரியே நடந்துக்க… எப்பவாச்சும் எனக்கு லவ்வர் மாதிரி நடந்துக்கறியா…” என்றான் முகத்தைத் தூக்கி வைத்து.
“ஓஹோ, லவ்வராயிட்டு நான் எந்து செய்யணம்…” கண்களை சிமிட்டிப் புன்னகையுடன் கேட்டவள் அடுத்த நிமிடம் அவன் மடியில் இருந்தாள்.
அவனது வலிய இதழ்கள் அவளது மெல்லிய இதழ்களை மென்மையாய் தண்டித்து விடுவித்தது.
கண் மூடிக் கிறக்கமாய் மடியில் அமர்ந்திருந்தவளின் காதில், “ஐ லவ் யூ வானு…” கிசுகிசுப்பாய் அவனது இதழ்கள் உரச கண் திறந்தவளின் மயங்கிய விழிகள் அவள் காதலை சொல்ல, விடுவித்தவன், “ம்ம்… சரி போ…” என்று சொல்ல,
“ம்ஹூம்… மாட்டேன்…” என்றவள் அவனது கழுத்தை சுற்றிக் கைகளைக் கோர்த்து அணைத்துக் கொண்டு, “நானும் லவ் யூ அருள்…” என்றாள் அவன் இதயத்தில்.
அவள் மூக்கை உரசியவன், “இப்படியே உக்கார்ந்திருக்கப் போறியா…’ என்றதும் நாணத்துடன் விலகினாள். சந்தோஷ மனநிலையிலேயே இருவரும் சாப்பிட்டுக் கிளம்பினர்.
டிராவலர் சீரான வேகத்தில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருக்க கலகலவென்று பேசிக் கொண்டிருந்தனர். வண்டியில் இனிமையாய் தவழ்ந்து கொண்டிருந்த இசையை யாரும் ரசிக்கும் மனநிலையில் இல்லை. சந்தோஷம் இதம் தரும் இசையையும் மறக்க வைத்திருந்தது.
சுந்தரம் ராஜ் ஒரு சீட்டிலும், சகுந்தலா தேவிகா ஒரு சீட்டிலும் அமர்ந்திருக்க, டிரைவர் சீட் அருகே ஆதித்யன் அமர்ந்திருந்தான். அவனுடைய மனமும், நினைவும் நந்தினியை சுற்றிக் கொண்டிருக்க அவளைக் காணப் போகும் ஆவலில் தவிப்பை மறைக்க தனியே முன்னில் அமர்ந்து கொண்டான்.
தேவ், குந்தவை தனித்தனியே ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்திருக்க தேவிகாதான் மகனிடம் கூறினார்.
“டேய் தேவ்… என் மருமக பாவம், தனியா உக்கார்ந்து போரடிக்கும்… அவளுக்கு கம்பெனி கொடு…” என்று சொல்ல அதற்குப் பின் அவனுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன…
அவள் அருகில் அமர்ந்து  சன்னமாய் அவர்களுக்குள் பேசிக் கொண்டு மென்மையாய் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு சின்ன சில்மிஷங்களுடன் இதமாய் நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பயணம்.
ஒன்பது மணிக்கு இட்லியைத் தட்டில் வைத்து சட்னியுடன் அன்னையர் அனைவருக்கும் கொடுக்க சாப்பிட்டு முடித்தனர். தந்தையர் கல்யாண விஷயம், பிசினஸ் என்று பேசிக் கொண்டிருக்க அன்னையர் நகை, கல்யாண ஜவுளி எடுப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
தேவ் குந்தவையின் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமர்ந்து பயணிக்கும் சுகமே குந்தவைக்குப் பேரானந்தமாய் இருக்க சந்தோஷமாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
சின்னச் சின்ன சில்மிஷங்களும், ரகசியக் கிசுகிசுப்புகளும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க மதியம் ஒரு ஹோட்டலில் எளிமையாய் உணவை முடித்துக் கொண்டு நந்தினியின் வீட்டுக்கு பூ, ஸ்வீட், பழங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினர். உணவு உண்ட மயக்கமும், காற்றின் தாலாட்டுமாய் பெரியவர்கள் மெல்லக் கண் சொருக இளையவர்களுக்கு குஷியானது.
மாலை நான்கு மணிக்கு திருச்சூரை நெருங்கியதும் ஆதி, “இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்குப் போயிடலாம்… என்று சொல்லி டிரைவருக்கு ரூட் சொல்லிக் கொடுத்தான்.
தேவிகாவும், சகுந்தலாவும் கொண்டு வந்திருந்த பெரிய தாளத்தை எடுத்து அதில் அழகாய் பழம், பூ, இனிப்பை அடுக்கி வைத்தனர்.
“அம்மா இந்த ஊரு எவ்வளவு பச்சைப் பசேல்னு இருக்கு… நிறைய தென்னை மரம்… வீடெல்லாம் பெருசு பெருசா அழகா கட்டிருக்காங்க…” குந்தவை கண்களை விரித்து சந்தோஷமாய் சொல்லவும், “ஆமாம் குந்தவை… இந்த ஊரு மக்கள் கைல காசு இல்லேன்னாலும் லோன் வாங்கியாச்சும் பெரிய வீடு கட்டிருவாங்க… அப்புறம் லோன் அடைக்கறதுக்கு வேண்டி குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் போயி கஷ்டப்பட்டு சம்பாதிப்பாங்க…” என்றான் ஆதித்யன்.
“ஓ இருந்தாலும் நைஸ் ஹவுசஸ்…” என்றாள் ஆர்வத்துடன்.
“டேய் மவனே… பார்த்து வச்சுக்கடா… என் மருமகளுக்குப் பிடிச்ச போல நாமளும் ஊருல ஒரு வீட்டைக் கட்டுவோம்…” என்றார் தேவிகா.
“ஓ… தாராளமா கட்டிடலாம் மா… கல்கி பில்டர்ஸ் ஓனர், பொண்ணுக்கு சீதனமா ஒரு வீடு கட்டிக் கொடுக்க மாட்டாரா என்ன…” தேவ் சொல்லவும் முறைத்தாள் குந்தவை.
“ஹாஹா… அதுக்கென்ன மாப்பிள்ளை… என் பொண்ணையே கொடுக்கறேன்… வீடா பெருசு…” என்றார் சுந்தரம்.
“என் மருமகளுக்கு நான் அரண்மனை போல வீடு கட்டி வச்சிருக்கேன்… இந்த துக்கடா வீடு தான் வேணுமாக்கும்…” என்றார் ராஜ் மோகன்.
“அப்படி சொல்லுங்க மாமா…” என்று மாமனாருக்கு குடை பிடித்த குந்தவை தேவ் பக்கம் திரும்பி பழிப்பு காட்டினாள்.
சற்று நேரத்தில் “அடுத்த தெருதான்…” ஆதி டிரைவரிடம் சொல்லவும் இறங்கத் தயாராயினர்.
கேரளப் பாரம்பர்யத்தைப் பறை சாற்றும் பெரிய பழைய வீட்டின் முன்னில் விரிந்து கிடந்த காலி இடத்திற்குள் வண்டி நுழைந்தது. வண்டியிலிருந்து இறங்கியவர்களை வாசலில் காத்து நின்ற நந்தினியின் அன்னையும், மாமா, அத்தையும் புன்னகையுடன் வரவேற்றனர்.
“சுகமானோ…” கேட்ட சகுந்தலாவின் கையைப் பற்றிய ஷீலா, “பரமசுகம்… வாங்க…” என்று உள்ளே அழைத்துச் செல்ல மற்றவர்களும் தொடர்ந்தனர்.
“உக்காருங்க…” என்றவர் அண்ணியிடம் கண் காட்ட, உள்ளே சென்றவர் அழகான கண்ணாடிக் கப்பில் காபியும், கண்ணாடித் தட்டில் பலகாரமும் கொண்டு வந்து வைத்தார்.
“தமிழ் புரியுமா…” ராஜ் தொடங்க புன்னகைத்த ஷீலா,
“நல்லாவே புரியும்… தமிழ்லயே சொல்லுங்க…” என்றார்.
“நந்தினியும், அவ அப்பாவும் இல்லியா…” சுந்தரம் கேட்கவும், “உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தார்… கொஞ்சம் பிரஷர் கூடிருச்சு… அதான் டாப்லட் போட்டு படுத்திருக்கார்… நந்தினி அவரோட தான் இருக்கா… கொஞ்ச நேரத்துல வந்திருவார்…” என்றார் ஷீலா.
“அண்ணாக்கு என்னாச்சு… எதுவும் பிரச்சனை இல்லையே…” சகுந்தலா அவசரமாய் கேட்க சுந்தரம் மனைவியை நோக்கினார். “நல்ல விஷயம் பேச வந்திருக்கோம்… அதான் அவருக்கு முடியலைன்னு சொல்லவும் கேட்டேன்…” என்றார் கணவரிடம்.
“அவர் வந்த பிறகு வேணும்னாலும் பேசிக்கலாம்… வெயிட் பண்ணறோம்…” என்றார் ராஜ் மோகன்.
“இல்ல, பரவால்ல… ஆதி தம்பி எல்லா விஷயத்தையும் போன்ல சொல்லுச்சு… அதைக் கேட்டதுல இருந்தே அவருக்கு கொஞ்சம் டென்ஷனா படபடப்பா இருந்தார்… ஒரு அரை மணி நேரத்துல வந்திருவார்… கவலைப்படாதீங்க…” என்றவர், “ஏடத்தி, (அண்ணி) நந்துவினே கூட்டிட்டு வரின்…” என்றதும் அவர் உள்ளே செல்ல ஆதி அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் நந்தினியுடன் வந்தார்.
செயற்கைக் கால் உதவியுடன் மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தவளைக் கண்டு சுந்தரத்துக்கே மனம் கலங்கியது. அமர்ந்திருந்த ஆதி அவளைக் கண்டதும் வேகமாய் ஓடிச் சென்று ஒரு பக்கம் பிடித்துக் கொள்ள மென்மையாய் அவனிடம் புன்னகைத்தாள்.
“எத்தனை துறுதுறுப்பாய் ஓடியாடி வேலைக்கு சென்ற பெண்… இப்படி முடங்கிப் போனதன் வலிதான் மகனை தன்னிடம் அப்படிப் பேச வைத்திருக்கும்…” என தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்.
புன்னகையுடன் அவர்கள் முன்னில் நின்ற நந்தினி கை கூப்பி, “வணக்கம்…” என்று பொதுவாய் சொல்ல எழுந்த சகுந்தலா அவள் கையைப் பற்றி, “நல்லாருக்கியா மா…” என்று கேட்க,
“ம்ம்… இருக்கேன் ஆன்ட்டி… நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க…” என்று நலம் விசாரிக்க அவளை அணைத்துக் கொண்டவர் கண் கலங்கினார்.
நடப்பதை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, “இப்படி உக்காருமா…” என்று மருமகளைக் கை பிடித்து அமர வைத்து அருகில் அமர்ந்து கொண்டார்.
சுந்தரம் என்ன பேசுவதென்று புரியாமல் தவிப்புடன் தலை குனிந்து அமர்ந்திருக்க, “எப்படி இருக்கீங்க அங்கிள்…” என்ற அவளது குரலில் நிமிர்ந்தவர் கண்கள் கலங்கி இருந்தன.
எல்லாருக்கும்
அவரவர் நியாயங்களே
பெருதாகிறது…
மற்றவர் நிலையில்
இருந்து யோசிக்கும்
நியாயங்களே என்றும்
நடுநிலையாகிறது…
இல்லாவிட்டால்
தன் நியாயமே சில நேரம்
தன்னைச் சுடுவதைத்
தவிர்க்க முடிவதில்லை…

Advertisement