Advertisement

அத்தியாயம் – 33
“உறவுகளை மன்னிக்கறது, விட்டுக் குடுக்கறதுல இத்தனை சந்தோசம் இருக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரியலை சகு… மனசுக்கு ரொம்ப நிம்மதியாருக்கு…” அறையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சகு, கணவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளில் மிகவும் சந்தோஷப்பட்டார்.
“ஆமாங்க, விட்டுக் குடுக்கறவங்க எப்பவும் தாழ்ந்தவங்க இல்லை… மனசால உயர்ந்தவங்க… உங்களை நினைச்சு எனக்கும் சந்தோஷமா இருக்குங்க…”
“ம்ம்… உன்னை நான் நிறைய வேதனைப் படுத்திட்டேன் சகு… உன் அண்ணனைப் பிரிச்சு… இப்ப பிள்ளையைப் பிரிச்சு,   ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்… எல்லாம் சரி பண்ணனும்…”
“நீங்க இப்படி சொல்லுறதைக் கேக்கவே சந்தோஷமா இருக்குங்க… வீண் பிடிவாதமும், வறட்டு கௌரவமும் நமக்கு என்ன கொடுக்கப் போகுது… நம்ம உறவுகளைத் தண்டிச்சு நமக்கு என்ன கிடைக்கப் போகுது… மனுஷ வாழ்க்கைல எதுவுமே நிரந்தரம் இல்லங்க… யாருக்கும் எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாம்… இருக்கற வரைக்கும் கூட உள்ள உறவுகளை நேசிச்சுகிட்டு, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, முடிஞ்சவரை மத்தவங்களுக்கு உதவி செய்து சந்தோஷமா போயி சேர்ந்துடணும்…” சகுந்தலா நெகிழ்ச்சியுடன் சொல்ல அமைதியாய் கேட்டிருந்தார்.
“ம்ம்… நான் வளர்ந்த விதமும், எனக்குக் கிடைத்த உதாசீனமும் என்னை மனசளவுல ரொம்ப இறுக்கிடுச்சு சகு…” என்றவர் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு, “உண்மைலயே மனசுல உள்ள பாரமெல்லாம் இறங்கின போல ரொம்ப லேசாருக்கு சகு… இனி உன் அண்ணன் எங்க இருக்கார்னு தேடிப் பிடிச்சு அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு உன்னோட சேர்த்து வைக்கணும்…” என்றார் சந்தோஷத்துடன்.
“ம்ம்… ரொம்ப சந்தோஷங்க, அதுக்கு முன்னாடி நாம ஆதி பிரச்சனையை சரி பண்ணனும்… நந்தினி வீட்டுக்கு…” இழுத்தவர் மேலே சொல்லாமல் அப்படியே நிறுத்த, சுந்தரத்தின் முகம் யோசனையைக் காட்டியது.
“நீ சொல்லுறதும் சரிதான்… ஆதியை ஒதுக்கி வைக்கக் காரணமே அந்தப் பொண்ணு மேலிருந்த காதல் தான்… அவனை ஏத்துகிட்டா அந்தப் பொண்ணையும் ஏத்துகிட்டதா தானே அர்த்தம்… நாளைக்கு நல்ல நாளான்னு பாரு… போயி பேசிட்டு வந்துடலாம்…” என்றார்.
“இதோ இப்பவே பார்க்கறேங்க…” என்றவர் உற்சாகத்துடன் எழுந்து செல்ல, “சகு… பார்த்து… சந்தோஷத்துல வயசு கம்மி ஆகிட்டதா நினைச்சு ஓடி காலை உடைச்சுக்காதே…” என்று சொல்லிவிட்டு பெரிய நகைச்சுவை சொன்னதுபோல் தானே சிரித்தும் கொண்டார் சுந்தரம்.
அடுத்தநாளே நல்ல நாளாக அமைய நந்தினியின் வீட்டுக்கு சென்று கல்யாணம் பேசத் தீர்மானித்தனர். ஆதித்யனிடம் விவரம் சொல்லி நந்தினியின் வீட்டுக்குத் தெரிவித்து அவர்கள் விருப்பத்தையும் கேட்டுக் கொள்ள அவர்கள் சந்தோஷமாய் அன்றே வரும்படி கூறினர். உடனே ராஜ் மோகனுக்கு அழைத்த சுந்தரம் அவர்களையும் வரவேண்டும் என்று சொல்ல அவரும் சம்மதித்தார்.
காலையில் நேரமே கிளம்பினால்தான் மாலைக்குள் நந்தினியின் வீடு செல்ல முடியுமென்பதால் சுந்தரம், சகுந்தலா, ஆதி மூவரும் செல்வது என்று முடிவு செய்ய குந்தவை சிணுங்கினாள்.
“எனக்கும் நந்தினி அண்ணியைப் பார்க்கணும் போலருக்கு மா… நான் கேரளாவே போனதில்லை… நானும் வரேன்மா… ப்ளீஸ்…” என்று கெஞ்சவும், “அவளும் வரட்டும் மா…” என்றான் ஆதித்யன்.
“அண்ணா, வானதி கூட அதே ஊருதான… அவளையும் நம்மோட கூட்டிக்கலாமா… முடிஞ்சா அவ வீட்டுக்கும் போயி ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம்…” என்று சொல்ல ஆதியும், அருளும் வானதியை நோக்க அவளை நோக்கிக் கண்ணடித்தாள் குந்தவை.
“சரி, அவளையும் கூட்டிக்க…” ஆதி சொல்லவும், “டேய், இத்தனை பேரு எப்படி காருல போறது…” என்றார் சுந்தரம்.
அவர்களை யோசனையுடன் பார்த்த சகுந்தலா, “இல்ல, வானதிக்கு நாளைக்கு கிளினிக்ல ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னா… அப்படிதானே வானதி…” என்றவர் அவளை ஒரு அர்த்தப் பார்வை பார்க்க புரிந்து கொண்டவள், “ஹா… அதே ஆன்ட்டி… நிங்கள் போயிட்டு வரு… எனிக்கு வொர்க் இருக்கு…” புன்னகையுடன் சொல்லவும் அருள் பாவமாய் அவளைப் பார்க்க அவனுக்கு மட்டும் தெரியும் விதத்தில் கண் சிமிட்டி தலையாட்டினாள்.
“அப்போ ஒரு டிராவலர் புக் பண்ணிடட்டுமா… ராஜ் அங்கிள் குடும்பத்தையும் நம்மளோடவே வர சொல்லிடலாம்… ஒரு டூர் போன என்ஜாய்மென்ட் கிடைக்கும்…” ஆதித்யன் சொல்ல,
“ஆமாங்க, இது கூட நல்ல ஐடியாவா இருக்கு… எதுக்கு அவ்ளோ தூரம் டிரைவ் பண்ணி கஷ்டப்படணும்… டிராவலர்னா எல்லாரும் போகலாம்…” என்றார் சகுந்தலா.
“நாளைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு… சின்னவன் அங்கே போகட்டும்…” சுந்தரம் சொல்ல அருள்,
“ஆமாம் மா… நீங்க அவங்களைப் பார்த்து எல்லாம் பேசிட்டு வாங்க…” என்று அவனும் நழுவினான். வானதி இல்லாமல் அவளது வீட்டுக்கு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை… அவள் இங்கே தனியாக இருப்பாள் என்ற எண்ணமும் குதூகலத்தைக் கொடுக்க சந்தர்பத்தைத் தவற விட அந்தக் கள்வன் விரும்பவில்லை.
“என்னங்க வேலை, ஒரு நாள் தள்ளிப் போனா ஒண்ணும் ஆகிடாது… நாம குடும்பமா வெளிய போயி எத்தனை வருஷம் ஆகிடுச்சு… அவனும் வரட்டும்…” சகுந்தலா சொல்லவும் “இல்ல, சகு… முக்கியமான வேலை… இப்ப நாம போயி பேசிட்டு வந்திடலாம்… அப்புறம் கல்யாணத்துக்கு எல்லாரும் ஜமாய்ச்சிடுவோம்…” சுந்தரம் சொல்லவும், “தெய்வமே… தெய்வமே… நன்றி சொல்வேன் தெய்வமே…” மனதுக்குள் பாடிக் கொண்டிருந்தான் அருள்.
அடுத்தநாள் விடியல் அழகுடன் விடிய நான்கு மணிக்கே எழுந்து காலை டிபனுக்கு மட்டும் இட்லியை ஊற்றி பெரிய இரண்டு ஹாட்பாக்ஸில் போட்டு இரண்டு சட்னியையும் வானதியின் உதவியுடன் தயார் செய்துவிட்டார் சகுந்தலா.
ஒவ்வொருவரும் மனதுக்குள் வெவ்வேறு விதமாக அந்த நீண்ட பயணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் சரியாக உறங்கி இருக்கவில்லை. ஆறு மணிக்கு டிராவலர் வாசலில் வந்து நிற்க அதற்குள் தேவ் குடும்பத்தினரும் அங்கே வந்து விட்டிருந்தனர்.
முதலில் தான் அவசியமா என யோசித்த தேவ் குந்தவையும் வருகிறாள் என்றதும் சந்தோஷமாய் கிளம்பி வந்திருந்தான்.
அனைவருக்கும் காபியை மட்டும் கொடுத்துவிட்டு டிபன், சட்னி, தண்ணி கேன், டிஸ்போசபிள் தட்டு, டம்ளர் என்று எல்லாவற்றையும் வண்டியில் எடுத்து வைக்கக் கொடுக்க, “டூர் போற மாதிரியே எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களே மா…” ஆதித்யன் கேட்க, “ஹாஹா போடா, போற வழியில டிபன் சாப்பிட வண்டிய நிறுத்த வேண்டாம் பாரு… மதியம் லஞ்ச் மட்டும் நிறுத்தினாப் போதும்…” என்றார் சிரிப்புடன்.
“ஹாஹா… மருமகளைப் பார்க்க உன் அம்மாக்கு அவ்ளோ அவசரம்…” தேவிகா சொல்லவும் அனைவரும் சிரித்தனர்.
“போங்க அண்ணி, கிண்டல் பண்ணிட்டு…” சகுந்தலா சொல்லவும் வெகு நாட்களுக்குப் பிறகு காணும் மனைவியின் மலர்ந்த, உற்சாக முகத்தை ரசித்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.
“டேய் படவா… என் தங்கையை சைட் அடிக்கறியா…” ராஜ் கேட்டுக் கொண்டே நண்பனின் விலாவில் இடிக்க, “ஹஹா… அதுல என்ன தப்பு… என் சகுவை இப்படி சந்தோஷமாப் பார்த்து எத்தனை நாளாகிருச்சு…” என்றார் நெகிழ்ந்த குரலில்.
அனைவரும் புறப்பட்டு வர வானதியின் கையைப் பிடித்துக் கொண்ட சகுந்தலா, “போயிட்டு வரோம் மா… பத்திரமா இருங்க…” என்றவர், “டேய் அருளு, வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வந்திடுடா… வானதி தனியா இருப்பா…” என்று சொல்ல சுந்தரம், “அவங்க என்ன சின்ன குழந்தையா… எல்லாம் பார்த்துக்குவாங்க வா…” என்று முன்னில் சென்று வண்டியில் ஏறினார்.
“அண்ணா, அம்மா உன்னை வானதியைப் பார்த்துக்க சொன்னாங்கன்னு ரொம்பப் பார்த்துடாத… அப்புறம் தேஞ்சு போயிடப் போறா…” குந்தவை சொல்லவும் வானதி நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
“ஏய் வாலு… எங்களை ரொம்ப ஓட்டாம நீ ஒழுங்காப் போயிட்டு வா… போலீசு மாப்பிள வேற நீ இன்னும் வரலேன்னு வண்டில ஏறாம நின்னு பார்த்திட்டு இருக்கார் பாரு…” என்று தங்கையை விரட்டினான் அருள்.
“சரி, சரி… தனியா இருக்கோம்னு ஓவரா வாலாட்டாம நல்ல புள்ளையா இருங்க…” என்று அவள் சிரித்துக் கொண்டே சொல்லவும், “குந்தவை, சீக்கிரம் வா… டைம் ஆகுது…” என்று வண்டியின் அருகே இருந்து குரல் கொடுத்தார் சகுந்தலா.
“வந்துட்டேன் மா…” என்றவள், “டாட்டா, பை பை…” என்று விட்டு வண்டியை நோக்கி சென்றாள்.
வீட்டுக்கு சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வண்டி கிளம்பவும், முன்னில் அமர்ந்திருந்த ஆதி இவர்களை நோக்கி கட்டை விரலைக் காட்டி கையசைக்க, இவர்களும் அனைவருக்கும் கையசைத்து விடை கொடுத்தனர்.
புன்னகையுடன் உள்ளே நடந்தவளின் பின்னில் வந்த அருள், “ஏன் வானு… நீ அம்மாகிட்ட வரலேன்னு சொன்ன… போயிருந்தா உன் வீட்டுல எல்லாரயும் பார்த்திருக்கலாம்ல…” அருள் கேட்கவும் புன்னகைத்தாள்.
“ஆன்ட்டி சொன்னா எதுவும் அர்த்தம் இருக்கும்… எல்லாம் சம்சாரிச்சு சரி பண்ணிட்டு வரட்டும்… பின்ன எப்ப வேணமெங்கிலும் போகலாமே…” என்றாள் வானதி.
“ம்ம்… அதும் சரிதான்… மை டியர் வானு…” என்று அழைத்துக் கொண்டே அருள் அவள் பின்னில் வர, “ஆபீஸ்ல வேலை இருக்குன்னு பரஞ்சில்லே… சீக்கிரம் ரெடியாகு…” என்று அவள் சொல்லவும் முகம் சுருங்கினான் அருள்.
“ஹூக்கும்.. கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா….” பாடிக் கொண்டே அவள் கையைப் பிடிக்கவும் நாணத்தில் முகம் சிவந்தவள் சிணுங்கினாள்.
“ப்ச்… எந்தா இது… போயி புறப்படான் நோக்கு…” என்றவளை இழுத்து கைக்குள் வளைத்துக் கொண்டான். சிவந்திருந்த அவள் முகத்தை ஆவலுடன் நோக்கியவன், “கண்டிப்பா போகத்தான் வேணுமா வானு…” என்று மனதில் உள்ள காதல் முழுதையும் குரலில் தேக்கிக் கேட்க மெல்ல நிமிர்ந்தவள் விழிகளிலும் காதல் வழிந்தது.

Advertisement