Advertisement

“ஆதி சேட்டன் எவிடே… காணாணில்லா…”
“ரெண்டு சேட்டன்களும் மாடில தான் இருக்காங்க… வா, ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்…” என்றவள், “அம்மா, நீங்களும் வரீங்களா… உங்க சின்ன மருமகளைப் பார்த்து அண்ணன் எப்படி ரியாக்ட் பண்ணறார் பார்க்கலாம்…” என்றாள்.
“ஹாஹா… நீங்களே போயிட்டு வாங்க…” அவர் சொல்லவும் இருவரும் மெல்ல மாடியேறினர். அருள் லாப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க ஆதி மொபைலை நோண்டியபடி படுத்திருந்தான்.
“அண்ணா, அண்ணி ரொம்பவும் ஹாப்பி ஆகிருப்பாங்கல்ல…”
“ம்ம்… அப்பா என்னை வரச்சொன்னார்னு சொன்னதுமே அவளுக்கு ரொம்ப சந்தோஷம்… அப்ப மாமா சீக்கிரமே என்னையும் ஏத்துப்பாங்க தானன்னு கேட்டா…”
“ம்ம்… இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பொறுமைதான்… உண்மையான காதல் தோற்காதுன்னு சொல்ல நீங்க ரெண்டு பேரும் தான் உதாரணம்…”
“அப்படில்லாம் இல்ல டா… எங்க காதலுக்கு நாங்க நேர்மையா இருந்தோம்… அதற்கான பலன் தான் இது…”
“உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்குண்ணா…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குந்தவை எட்டிப் பார்ப்பதை அருள் கவனித்து விட உதட்டில் விரலை வைத்து “உஷ்ஷ்…” என்றவள், “வானதி வந்துட்டா…” என்று சைகையில் சொல்ல உற்சாகமாய் தலையாட்டினான்.
“அண்ணா, என்ன பண்ணறீங்க….” கேட்டுக் கொண்டே குந்தவை உள்ளே நுழையவும் எழுந்து அமர்ந்தான் ஆதி.
“சும்மா பேசிட்டு இருந்தோம் மா… உனக்கு எப்ப எக்ஸாம்…”
“அடுத்த மாசம்ணா… உனக்கு என் பிரண்டு ஒருத்தியை அறிமுகப்படுத்தலாம்னு வந்தேன்…”
“ஓ… யாருமா… எனக்குத் தெரிஞ்ச பிரண்டா…” அவன் ஆவலுடன் கேட்க, “ம்ம்… நீயே பார்த்து சொல்லு…” என்றவள் வானதியை உள்ளே அழைத்து வர கண்டவன் திகைத்தான்.
“வாவ்… வாட் அ சர்ப்ரைஸ்… வானதி… நீ… நீ எப்படி இங்கே…” ஆதி திகைப்புடன் கேட்க புன்னகைத்தாள் வானதி.
“பரயாம்… நிங்கள்க்கு சுகமானோ ஆதி சேட்டா…”
“ம்ம்… இங்க வந்து அம்மா கையால சாப்பிடற வரைக்கும் கொஞ்சம் சுகக்குறைவு இருந்துச்சு… இப்ப பர்பக்ட் ஓகே… முதல்ல நீ எப்படி இங்கன்னு சொல்லு… குந்தவைக்கு நீ எப்படி பிரண்டான…” என்றான் அவன் பரபரப்புடன்.
“நான் ஜோலிக்கு வேண்டி இவட வந்தேன்… டாக்டர் இல்லாத்த சமயத்தில் ஆன்ட்டியை நோக்கான் வேண்டி அங்கிள் இங்கயே இருக்கி, பரஞ்சு…” என்றவள் சட்டென்று அருளை நோக்க அவன் கண்ணில் தெரிந்த சிரிப்பில் அவள் முகம் சிவக்க அது ஆதியின் கண்ணில் விழுந்தது.
“ம்ம்… ரியல்லி சர்ப்ரைஸ்… நீ சென்னைல ஜாப் போறேன்னு நந்து சொன்னா… ஆனா இங்கன்னு தெரியாது…”
“எங்களுக்கே இவ நந்தினி அண்ணி தங்கைன்னு இப்ப தான் தெரியும் அண்ணா… இன்னும் அப்பாகிட்ட கூட சொல்லலை… நீ வந்தபிறகு அப்பாட்ட சொல்லிக்கலாம்னு அம்மா சொல்லிட்டாங்க…” என்றான் அருள்.
அவன் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்த ஆதித்யன், “ம்ம்… வானதி, அம்மாவை மட்டும் கவனிச்சுகிட்ட போலத் தெரியலையே… அவளைப் பார்த்ததும் உன் முகத்துல ஒரு ஸ்பெஷல் ஒளிவட்டம் தெரியுது….” எனவும்,
“அண்ணா, அது வந்து…” என்று அருள் இழுக்க, வானதி நாணத்துடன் முகம் சிவக்க, குந்தவை சொன்னாள்.
“அண்ணா… இவங்களும் உங்களைப் போல தான்… செம லவ்வு தெரியுமா… அண்ணன் தம்பிக்கு, அக்கா தங்கையைப் பெண்ணெடுக்க அம்மாக்கும் ஓகே தான்…” எனவும், “ஓஹோ… பார்றா…” வியப்புடன் சொன்ன ஆதித்யன் தம்பியை நோக்கி சிரிக்க அவன் அழகாய் வெட்கப்பட்டான்.
சின்னவர்கள் கதை பேசி சிரித்துக் கொண்டிருக்க அழகாய் அந்த நாட்கள் நகர மாலையில் தேவ் குடும்பத்துடன் அங்கே ஹாஜராகி இருந்தான்.
பெரியவர்கள் ஆதியிடம் சந்தோஷமாய் நலம் விசாரித்தனர். சின்னதாய் டிபன் சாப்பிட்டுவிட்டு பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் மாடிக்கு நழுவினர்.
“சுந்தரம், நீ பண்ணினது ரொம்பப் பெரிய விஷயம் டா… என் தங்கை முகத்துல இப்பதான் சந்தோஷம் தெரியுது… நீ ஒருத்தன் விட்டுக் கொடுத்ததால இந்தக் குடும்பத்துல எல்லார் முகத்திலயும் எவ்ளோ சந்தோஷம் பார்த்தியா…” ராஜ் நண்பனைப் பாராட்டி கட்டிக் கொண்டார்.
அவர்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இரவு அவர்களையும் டின்னர் சாப்பிட்டு செல்லும்படி கூறிய சகுந்தலா அதற்கான தயாரெடுப்புக்காய் அடுக்களைக்குள் நுழைய தேவிகாவும் உதவ சென்றார்.
“சகு… நீ நினைச்ச போலவே எல்லாம் நல்லபடியா நடக்குது… இப்ப உனக்கு சந்தோசம் தானே…”
“ரொம்ப சந்தோஷம் அண்ணி… எல்லாம் மாப்பிள்ளை கொடுத்த ஐடியா தானே காரணம்… எனக்கு பிரஷர் கூடி சாதாரணமா உடம்புக்கு முடியாமப் போனதைக் காரணமா வச்சு டாக்டர் மூலமா அவர்கிட்ட பானிக் அட்டாக்னு எதையோ புரியாத ஒண்ணை சொல்லி அவரை மிரள வச்சு எனக்காக என் பிள்ளையை எத்துக்கறேன்னு சொல்ல வச்சு… ரொம்பப் பெரிய விஷயம் அண்ணி… இந்த சின்ன வயசுல நம்ம யாருக்கும் தோணாத ஒண்ணை சூழ்நிலைக்கு தகுந்த போல எவ்வளவு அழகா யோசிச்சிருக்கார்… இந்தப் புண்ணியம் எல்லாம் அவருக்கு தான் சேரும்…” என்றார் கண்கலங்க.
“என்ன சகுந்தலா… அவனும் இனி இந்த வீட்டுப் பிள்ளை தானே… நான் கவலைப்பட்டா அவன் வருத்தப்பட மாட்டானா… அது போல தான அவனுக்கு உன் கவலையும்…”
“ம்ம்… அவரும் எனக்கு பிள்ளை போல தான்… உங்க வீட்டுல பொண்ணைக் கொடுக்க நாங்க உண்மைலேயே ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கணும்…”
“ஹாஹா… அதெல்லாம் ஒண்ணும் இல்ல… நீ என்ன மனசுல குறைஞ்சவளா… உன் நல்ல மனசுக்கு இவ்ளோ நாள் இப்படி எல்லாம் நடந்ததே தப்பு… இனியாச்சும் எல்லாம் உன் மனசுப் படி நடக்கட்டும்… தேவ் சொன்னான், வானதி, நந்தினியோட தங்கை… அவளும், அருளும் லவ் பண்ணறாங்கன்னு… அவளும் தங்கமான பொண்ணுதான்…”
“ம்ம்… ஆமாம் அண்ணி, ஆதி காதலை அவர் ஏத்துகிட்டா இவங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் வராது… என் மூணு பிள்ளைகளுக்கும் ஒரே மேடைல கல்யாணம் பண்ணி வச்சு கண் குளிரப் பார்த்திடுவேன்…” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“கவலைப்படாத சகுந்தலா… உன் நல்ல மனசுக்கு இனி எல்லாம் நல்லதே நடக்கும்…” என்றார் தேவிகா.
“ம்ம்… என் அண்ணன் குடும்பத்தையும் அவர் ஏத்துகிட்டா என்னோட கவலை எல்லாம் தீர்ந்திடும் அண்ணி…”
“நிச்சயம் ஏத்துப்பார்…” அவர் சொல்லவும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் சமையலை கவனித்தார் சகுந்தலா.
மாடிக்கு சென்ற இளையவர்கள் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன வானதி சொல்லற, எல்லாமே பிளானா…” ஆதி திகைப்புடன் கேட்க மற்றவர்கள் புன்னகையுடன் நின்றனர்.
“ஆமா மச்சான்… அத்தைக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்தது தெரிஞ்சதுமே மாமாவோட உறுதியைக் குலைக்க நான் கண்டு பிடிச்ச உபாயம் இது… அப்போதைக்கு டாக்டர், வானதி தவிர அத்தைக்கு கூட இந்த விஷயம் தெரியாது… முதல்ல ஹார்ட் அட்டாக்னு சொல்லதான் பிளான்… அப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்கனு வானதிதான் இப்படி ஒரு விஷயம் இருக்கறதை சொல்லி பானிக் அட்டாக்னு சொல்ல வச்சிடலாம்… பெருசா பிராப்ளம் இல்லேன்னு சொன்னா… நானும் என் ஆபீசர் மூலமா டாக்டரை அணுகி  சொல்ல வச்சிட்டேன்…” 
“அடப்பாவி, என்கிட்டகூட சொல்லலையே…” குந்தவை ஆத்திரத்துடன் அவன் முதுகில் ஒன்று வைக்க, “டார்லிங், பப்ளிக்ல இப்படியா புருஷனை அடிக்கறது… எதுவா இருந்தாலும் தனியா இருக்கும்போது பார்த்துக்கலாம்… ஓகே…” என்று சொல்ல அவள் முறைத்தாள்.
“இவளும் தான் என்கிட்ட சொல்லலை…” அருள் வானதியை முறைக்க அவள் சிரித்தாள்.
“நிங்கள்ட்ட ஆத்யமே பரஞ்சிருந்தால் இங்கனே பேடிக்கோ… ஒரு ஒரிஜினாலிட்டி உண்டாவில்லா… அது கொண்டானு பரயாதிருந்தது, இப்ப எல்லாம் விசாரிச்ச போல நடந்து எல்லாரும் ஹாப்பியா இருக்கி…” அருளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே வானதி சொல்ல அவன் பார்வை மாறி காதலாய் வழிந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ள… நான் கூட உங்களை இவ்ளோ எதிர்பார்க்கல… எங்க குந்தவையை சமாளிக்க சரியான ஆளுதான் நீங்க… மை அட்வான்ஸ் விஷஸ்…” ஆதித்யன் சொல்ல, “தேங்க்ஸ் மச்சான்…” என்ற தேவ் காதலுடன் குந்தவையை நோக்க அவள் கண்ணில் தீ பறந்தது.
“அண்ணா, அப்படின்னா நான் என்ன, ராட்சசின்னு சொல்ல வர்றியா… நீ அதுக்கு தேங்க்ஸ் சொல்லுவியா…” என்று மீண்டும் அவள் கண்ணாளனைத் துரத்த,
“டார்லிங்… நோ, நோ வன்முறை… உன் புருஷனா இருந்தாலும் நான் ஒரு போலீஸ்காரன்… கொஞ்சம் கருணை காட்டேன்…” என்று கெஞ்சிக் கொண்டே ஓட அவர்களை நோக்கி மற்ற மூவரும் சந்தோஷமாய் சிரித்துக் கொண்டிருந்தனர்.
வீட்டில் அனைவரின் மனமும் வெகு நாட்களுக்குப் பிறகு சந்தோஷத்தால் நிறைந்திருந்தது.
வானத்துக்குள் ஒளிந்திருக்கும்
மேகமாய் நமக்குள் தான்
ஒளிந்து கொண்டிருக்கிறது
நமக்கான சந்தோஷம்…
கண்கட்டு வித்தை போல்
கண் முன்னே இருந்தாலும்
கவலை மேகத்தின் மறைவில்
கருத்தில் பதியாமல் போய்விடுகிறது…
சில மின்னல் வெளிச்சங்கள்
அதை மீட்டுத் தரலாம்…
மனதின் நம்பிக்கை பொய்த்துப்
போகாமல் காத்திருப்போம்…

Advertisement