Advertisement

அத்தியாயம் – 32
“அம்மா, அண்ணா வந்தாச்சு…” வாசலில் கார் சத்தம் கேட்டு குந்தவை அன்னையிடம் ஓடி வந்து சொல்லவும் ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரத்தின் காதில் அந்த வார்த்தைகள் விழ சட்டென்று எழுந்து அறைக்கு சென்று விட்டார்.
அதைக் கண்டதும் சகுந்தலாவின் முகம் சுருங்க, “அம்மா… அப்பாவைப் பத்தி தெரியாதா… வாங்க, பார்த்துக்கலாம்…” என்று வாசலுக்கு அழைத்து செல்ல மகனைக் கண்டதும் அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் நிறைந்தது.
அருளுடன் காரிலிருந்து லக்கேஜை இறக்கி வைத்துக் கொண்டிருந்தவன் அன்னையைக் கண்டு ஓடி வந்தான்.
“ஆ..தி…” அவரது குரல் நெகிழ்ந்து ஒலிக்க கண்ணீருடன் நோக்கியவன், “அம்மா… எப்படிம்மா இருக்கீங்க… உடம்புக்கு முடியலைன்னு ஏன் உடனே சொல்லல… சொல்லிருந்தா முன்னாடியே வந்திருப்பேன்ல… இப்ப ஒண்ணும் பிராப்ளம் இல்லையே…” அவர் கையைப் பற்றிக் கொண்டவனின் கன்னத்தைப் புன்னகையுடன் வருடியவர்,
“ஆதி… எனக்கு ஒண்ணும் இல்லடா… அதான் நீ வந்துட்டியே… இனி எதுவும் இருந்தாலும் ஓடிப் போயிடும்… நீ எப்படிடா கண்ணா இருக்க… உன்னைப் பார்த்து எவ்ளோ வருஷமாச்சு… நீ என் பக்கத்தில் இல்லேன்னாலும் ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்காம எனக்கு விடிஞ்சதே இல்லை…” என்றார் குரல் தழுதழுக்க.
“நானும் ஒவ்வொரு நாளும் உங்களை நினைச்சுட்டே தான்மா இருப்பேன்… எப்ப எல்லாம் சரியாகி பழைய போல உங்க மடில படுத்துப்போம்னு இருக்கும்…” குரல் உடைய கண் கலங்கிய மூத்த மகனை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டார் சகுந்தலா.
“ம்க்கும்… நாங்களும் இங்க தான் இருக்கோம்…” குந்தவை குரல் கொடுக்க, “ஏய் வாலு, எவ்ளோ பெருசாகிட்ட நீ…” தங்கையை அன்புடன் கேட்க அவளும் கலங்கினாள். “அண்ணா, எப்படிண்ணா இருக்க…” என்று கேட்டவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்ணா… அப்பா சொன்ன வார்த்தைக்காக தான் பேசாம இருந்தோம்… ஆனா எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா…” கண்களில் நீர் நிறைய சொன்ன தங்கையின் வார்த்தைகள் நெகிழ்வைக் கொடுத்தது.
“பயணம் எல்லாம் நல்லா இருந்துச்சா ஆதி… நீ அங்கிருந்து கிளம்பின நிமிஷத்தில் இருந்து எப்ப வருவேன்னு காத்துட்டு இருக்கேன்…” என்றவர், “தள்ளுடி… என் புள்ளையைக் கண் நிறையப் பார்த்துக்கறேன்…” என்றார் மகளிடம்.
“எனக்கு நீங்க எல்லாம் என் பக்கத்துல இல்லைங்கறது தான் பெரிய வருத்தம், மத்தபடி நான் நல்லா தான் இருக்கேன் மா… நல்லாருக்கறது உடம்புல மட்டும் இருந்தாப் பத்தாதே… மனசும் சுகமா இருக்கணும் இல்லியா…” என்றவனிடம், “அம்மா… அதெல்லாம் உன் பிள்ளை அமெரிக்கா பளபளப்போட தகதகன்னு தான் இருக்கார்… ஆனாலும் அண்ணாக்கு அந்தத் தாடியும், மீசையும் தான் பிளஸ்… அது இல்லாம சின்னப் பையன் போல இருக்கு…” என்றாள் மகள்.
“ஹாஹா… அதுக்கென்ன, இனி தாடி வச்சிட்டாப் போகுது…” என்றான் தங்கையின் தலையில் செல்லமாய் தட்டி.
உண்மையிலேயே அமெரிக்க வாசம் ஆதித்யனை மேலும் பளபளப்பாக்கி இருந்தது. முன்னர் வைத்திருந்த தாடி, மீசையை எடுத்துவிட்டு டிரிம் செய்திருந்தான். கண்களிலும், முகத்திலும் ஒரு தீவிரம் இருந்தாலும் இதழ்களில் மட்டும் எப்போதும் புன்னகை நிலைத்திருந்தது.
“இதுவும் அழகா தான்ப்பா இருக்கு…” அன்னை சொல்லவும்,
“நான் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் நீங்க மட்டும் தான் குறையாவே நினைக்க மாட்டிங்கமா…” என்றவன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொள்ள, “எந்த சூழ்நிலைலயும் பெத்த புள்ளையை அம்மாவால வெறுக்க முடியாது ஆதி…” நெகிழ்வுடன் கூறியவர்,
“சரி அதை விடு… முதல்ல அப்பாட்ட போயி சாரி சொல்லிடுப்பா…” என்றார்.
“ம்ம்… அப்பா எங்க மா…” என்றவனின் பார்வை சாத்தியிருந்த கதவின் மீது படிந்தது.
“ரூம்ல தான் இருக்கார்… அப்பா மேல உனக்கு கோபம் இல்லையே…” என்றார்.
“இல்லமா, என்னோட சரி எப்படி எனக்குப் பெருசோ, அது போலத்தான் அவருக்கும் அவரோட சரி பெருசுன்னு இத்தனை வருஷத் தனிமை எனக்கு உணர்த்திடுச்சு மா… இப்ப நீங்க கூப்பிடலைன்னாலும் நான் இந்தியா வந்ததும் இங்க வந்து அப்பாகிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தான் நினைச்சிருந்தேன்… என்ன இருந்தாலும் அவர் என் அப்பா மா… அவரோட கொள்கை எனக்குப் பிடிக்காம இருக்கலாம்… ஆனா அவரை எப்பவும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது…” என்றவனின் கண்கள் பனித்திருந்தன.
“ஆதி, ரொம்ப சரியா யோசிச்சிருக்கப்பா… என்னதான் அவர் எனக்காக மனசு மாறி உன்னை வர சொன்னாலும் அவருக்கும் உன்னைப் பார்க்கணும்னு விருப்பம் இல்லாமலா இருக்கும்… நான் சொல்லறதை நீ கேக்கலயே… நான் மட்டும் எதுக்கு உனக்காக விட்டுக் கொடுக்கணும்னு ஒரு ஈகோ தான் அவருக்கு… நீயே போயி பேசிடு…” என்றார்.
“ம்ம்… சரிம்மா…” என்றவன் எழுந்து சுந்தரத்தின் அறைக்கு செல்ல பின்னில் சென்ற மகளிடம்,
“அவன் தனியாப் போயி பேசிட்டு வரட்டும் குந்தவை… நீ இங்க வா…” என்றார். அதற்குள் அருள் எல்லா லக்கேஜையும் உள்ளே கொண்டு வந்து வைத்திருந்தான். வானதி டாக்டர் அழைத்ததால் கிளினிக் சென்றிருந்தாள்.
ஆதித்யன் கதவை மெல்லத் தட்ட உள்ளிருந்த சுந்தரம், “ம்ம்…” என்று குரல் கொடுக்க தயக்கத்துடனே உள்ளே நுழைந்தான் ஆதி.
“அ…அப்பா…” மகனின் குரல் மென்மையாய் ஒலிக்க எதுவும் பதில் சொல்லாமல் முதுகைக் காட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார் சுந்தரம்.
“அப்பா, என்னை மன்னிச்சிருங்கப்பா… கோபத்துல யோசிக்காம உங்களை அப்படிப் பேசினதுக்கு தண்டனையா இத்தனை வருஷம் என்னை குடும்பத்தை விட்டுத் தள்ளி வச்சிருந்தீங்க… இன்னும் உங்க கோபம் போகலையாப்பா…” கேட்டவன் சட்டென்று அவர் காலில் விழுந்தான்.
“ப்ளீஸ், என்னை மன்னிச்சிருங்கப்பா… எனக்கு நீங்க எல்லாரும் வேணும்… இனியும் என்னை தண்டிக்காதீங்க…” என்றவனின் குரல் உடைந்திருக்க, “டேய்… எழுந்திரு… பாசமா இருந்தாலும், கோபமா இருந்தாலும் ஓவராக் காட்டுறதே உன் பொழப்பாப் போயிருச்சு…” என்றார்.
“என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்கப்பா… அப்பதான் எழுந்திருப்பேன்…” என்றவன் காலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, “எழுந்திருடா ராஸ்கல்…” கலங்கிய குரலில் கூறியவர், மகனின் தோளைப் பிடித்து எழுப்ப தன் முன்னில் உணர்ச்சிப் பெருக்குடன் முகம் சிவக்க நின்றவரை நோக்கியவன், “அப்பா…” என்று கண்ணீருடன் அணைத்துக் கொள்ள அதுவரை அவருக்குள் இருந்த இறுக்கமும் நான் என்ற அகந்தையும் எல்லாம் மகனின் கண்ணீரின் முன்னில் கரைந்து போக தன்னை விட உயர்ந்து நின்ற மகனின் நெஞ்சில் சந்தோஷமாய் சாயந்து கொண்டார் சுந்தரம். 
“சாரிப்பா… ஐ ஆம் ரியல்லி சாரிப்பா….” கண்ணீருடன் சொல்லிக் கொண்டே இருந்தவனின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், “போதும்டா… நானும் தப்புப் பண்ணிருக்கேன்… மேல மேல சாரி கேட்டு என்னையும் கேக்க வச்சிராத…” என்றவரின் குரலில் இருந்த குற்றவுணர்ச்சி அவனுக்கு நெகிழ்வைக் கொடுத்தது. 
அவனை விடுவித்தவர் தன்னை விட உயரமாய் முன்னில் வாட்டசாட்டமாய் நிற்பவனைக் கண்ணாரக் கண்டு அவனைத் தடவிக் கொடுத்தார்.
“ஆதி, நீ என் பிள்ளை டா… என் ரத்தம்,  எத்தனை கோபம் வெறுப்பு வந்தாலும் அந்த பந்தம் இல்லாமப் போயிடுமா… நான் எப்பவோ பண்ணின பாவத்துக்கான சாபம் தான் உன்னை எங்கிட்ட இருந்து பிரிச்சிருச்சுன்னு நினைக்கறேன்…” என்றவரின் குரலில் இருந்த வருத்தம் அவனுக்கும் வருத்தத்தைக் கொடுத்தது.
“என் மேல இப்பவும் கோபம் இருக்காப்பா…”
“ப்ச்… முதல்ல இருந்துச்சு… இப்ப இல்ல… ஏதோ ஒரு பிடிவாதத்துல உன்னை உன் அம்மாகிட்ட இருந்து பிரிச்சு வச்சு இந்தக் குடும்பத்துக்கே தண்டனை கொடுத்துட்டேன்…”
“போகட்டும் ப்பா… முடிஞ்சதை நினைச்சு பீல் ப்ண்ணாதீங்க…”
“இல்லப்பா, தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட பிடிவாத்தால நான் உன் அம்மாவுக்கு நிறைய வலியைக் கொடுத்திருக்கேன்… இனி அதை எல்லாம் சரி பண்ணனும்னு நினைக்கறேன்…” என்றார் தவறை உணர்ந்தவராக.
“வா… அம்மாகிட்ட போவோம்…” என்றவர் அவனை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வர, ஒரு சின்ன வாக்குவாதம் ஆவது நடக்கும் என்று எதிர்பார்த்த இளையவர் இருவரும் வியப்புடன் அவர்களை நோக்க சகுந்தலா சந்தோஷத்துடன் கண்ணீர் வடித்தார்.
“சகு, நம்ம பிள்ளை வந்துட்டான்… இப்ப உனக்கு சந்தோஷம் தானே…” என்று கேட்டவரிடம், “ரொம்ப சந்தோஷம்ங்க… அப்படியே அந்தப் பொண்ணையும் ஏத்துகிட்டா…” என்று தயங்கி நிறுத்தி கணவரைப் பார்க்க புன்னகைத்தார்.
“சகு… நான் செய்த நிறைய விஷயங்களை சரி பண்ண வேண்டிருக்கு… அதுல இதுவும் ஒண்ணு…” என்ற தந்தையை எல்லாரும் வியப்புடன் நோக்க சகுந்தலாவுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
“சரி, பேசிட்டே இருக்காம வந்தவனை கவனிங்க…” என்றதும், “ஆதி, குளிச்சிட்டு வாப்பா… உனக்குப் பிடிச்சதை சமைச்சிருக்கேன்… சாப்பிட்டுப் பேசலாம்…” அன்னை சொல்லவும், “சரிம்மா…” என்றவன் மாடிக்கு சென்றான்.
ஆதி குளித்து வரவும் சாப்பிட்டு, குந்தவை கல்யாணக் கதை பேசி நந்தினியை அலைபேசியில் அழைத்து விசாரித்து சீக்கிரமே பார்க்க வருவதாய் சொன்னார் சகுந்தலா.
மாலையில் வீட்டுக்கு வந்த வானதியின் பார்வை ஆதியைத் தேட அவளிடம் வந்த குந்தவை, “ஹலோ மேடம், நீங்க யாரைத் தேடறீங்க… என் சின்ன அண்ணனையா, பெரிய அண்ணனையா…” என்றாள் கிண்டலுடன்.

Advertisement