Advertisement

அத்தியாயம் – 31
ஒரு வாரம் கழிந்திருந்தது. சகுந்தலா தேறியிருந்தார்.
தந்தை இல்லாத நேரத்தில் குந்தவை அன்னையிடம், வானதி, நந்தினியின் தங்கை என்பதைக் கூற, “எனக்குத் தான் தெரியுமே…” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்லவும் இளையவர் மூவரும் திகைத்துப் போயினர்.
“எங்களுக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்… உங்களுக்கு எப்படிமா தெரியும்…” என்று அவரைத் துளைக்க, “ஹஹா… என் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஒரே வீட்டுல இருந்து தான் மருமகளுங்க வரப் போறாங்கன்னு எனக்குத் தெரியும்…” என்று புன்னகைத்து சென்று விட்டார்.
“குந்தவை… ஒருவேள, நம்ம போலீஸ் மாப்பிள்ள தான் அம்மாட்ட போட்டுக் கொடுத்திருப்பாரோ…” அருள் சொல்ல யோசித்தவள், “ம்ம்… இருக்கும்… அது ஒரு ஓட்டவாயி… சொல்லிருக்கும்…” என்றவள்,
“ச்சே… அம்மாக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சா இப்படி சப்புன்னு போயிடுச்சே… எல்லாம் அந்த முந்திரிக் கொட்டையால வந்தது…” என்று வருங்காலக் கணவனை மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.
“ஹாஹா… சாரமில்ல விடு குந்தவை… தேவ் ஏட்டன் பாவம்… சீத்த பரயாதே… எப்படியோ ஆன்ட்டிக்கு விஷயம் அரஞ்சல்லோ… அது மதி…” வானதி சொல்ல முறைத்தாள்.
“ஹூக்கும்… அண்ணனுக்கு சப்போர்ட்டாக்கும்… நீ எப்பதான் முழுசா தமிழ் பேசப் போறியோ… என் அண்ணன் தான் பாவம்… உனக்காக மலையாளம் படிச்சிட்டு இருக்கான்…”
“ஹா, படிக்கட்டே… அதுவும் நல்லா தானே இருக்கி…”
“ஹஹா… அண்ணா, இவளை அப்படி ஓரமா கூட்டிட்டுப் போயி அந்த இருக்கியை முதல்ல சரி பண்ணி விடு… கேட்கவே ஒரு மாதிரி இருக்கு…” என்று அருளிடம் சொல்லி நகர அவன் வில்லங்கமாய் சிரித்தான்.
“எந்தா, எந்தினு சிரிக்கனது…” என்றவளை எட்டிப் பிடித்து கைக்குள் நிறுத்தியவன், “வானு பேபி, இவ்ளோ இறுக்கினா போதுமா… இல்ல, இறுக்கி அணைச்சு ஒரு உம்மாவும் கொடுக்கணுமா…” என்று இறுக்கமாய் அணைத்துக் கொள்ள அவள் திணறினாள்.
“ஹேய், எந்தா இது, விடு… யாரெங்கும் காணன்டா…” மாடியில் தன் கைகளுக்குள் நின்று சிணுங்கியவளை கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்தே விடுவித்தவன்,
“வானு பேபி, இனி நீ இருக்கினு சொல்லும்போதெல்லாம் இதை நினைச்சுக்கோ… அது இறுக்கி இல்ல… இருக்கு… சொல்லு…”
“வெவ்வவெவ்வே… நான் இருக்கி தன்னே பறயும்…” என்று அவனிடம் பழிப்புக் காட்டி கீழே ஓடிவிட்டாள். அவள் செய்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான் அருள். சகுந்தலா தேறியதும் தான் பிள்ளைகள் சற்று நார்மல் ஆகி இருந்தனர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல மனைவியின் உடல்நிலை குறித்த அச்சமும், பிள்ளைகளின் பரிதவிப்பான முகமும் நண்பனின் வாக்குகளும் சுந்தரத்தின் மனதை கரைத்துக் கொண்டிருந்தன. போதாக் குறைக்கு டாக்டர் சொன்ன “அவங்களை எதையும் யோசிச்சு கவலைப்பட வைக்காதீங்க” என்ற  வார்த்தைகளும் மனதைக் குடைய ஒருவழியாய் மனைவிக்காய் இறங்கி வந்தார்.
குந்தவையும் வானதியும் அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தனர். சகுந்தலா டீவியின் முன்பு கணவர் அருகே அமர்ந்திருந்தாலும் அவரது நினைவுகள் அங்கே இல்லை என்பது சுந்தரத்துக்குப் புரியவே செய்தது. அவரிடம் வந்த அருள், “அப்பா, நாளைக்கு நாம கட்டின கேஆர் கன்ஸ்ட்ரக்ஷன் திறப்பு விழா… நீங்க பங்க்ஷன்க்குப் போறீங்க தானே…” என்றான்.
“இல்லப்பா, நீ போயிட்டு வந்திடு…” என்றவர், “அப்புறம்…” என்று இழுத்துவிட்டு, “உன் அண்ணனுக்குப் போன் பண்ணி அம்மாவைப் பார்க்க வர சொல்லு…” என்றார் கையிலிருந்த ரிமோட்டை உருட்டியபடி. அதைக் கேட்டதும் அவன் திகைத்துப் பார்க்க கணவனின் வார்த்தைகள் காதில் விழுந்ததும் மலர்ச்சியுடன் திரும்பினார் சகுந்தலா.
“எ..என்னங்க சொன்னிங்க… ஆதியை வர சொன்னிங்களா… அவனை மன்னிச்சுட்டீங்களா… நம்ம புள்ளையை மன்னிச்சு ஏத்துகிட்டீங்களா…” கேட்கும்போதே அவரது கண்களில் கண்ணீர் திரண்டு கன்னத்தில் வழிந்தது.
“ம்ம்… உனக்காக, உன் சந்தோஷத்துக்காக அவனை மன்னிச்சுடறேன்… என் ஒருத்தனோட பிடிவாதம் உங்க எல்லார் சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம்… யாருமே இல்லாம இருந்த எனக்கு இந்த சமூகத்துல ஒரு அடையாளத்தைக் கொடுத்து அங்கீகாரத்தைக் கொடுத்தது நீ தான்… உன்னை இழந்துட்டு என்னோட எந்தக் கொள்கையும் ஜெயிக்கறதுல அர்த்தம் இல்லை… ஆதியைப் பத்தின கவலை தான் உன்னை வாட்டுதுன்னு  எனக்குப் புரியாம இல்லை… அவன் வரட்டும்…” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாமல் எழுந்து செல்ல சகுந்தலாவின் கண்கள் ஆனந்தத்தில் கண்ணீரை வெளியிட்டது.
“அருளு… அப்பா சம்மதிச்சிட்டாரு… அண்ணனுக்கு போன் போடு டா… உடனே நான் அவன்கிட்டப் பேசணும்…” என்ற தாயின் வார்த்தையைக் கேட்டவன் அடுத்த நிமிடமே ஆதியை அலைபேசியில் அழைத்திருந்தான்.
“அருள், என்ன அதிசயம்… எனக்கு போன் பண்ணிருக்க… வேற யாருக்கும் கூப்பிட வேண்டியது மாறிக் கூப்பிடலையே…” உற்சாகமாய் ஒலித்த அண்ணனின் குரலைக் கேட்டதும் அருளுக்கும் குரல் தழுதழுத்தது. தந்தையின் வார்த்தைக்குப் மதிப்புக் கொடுத்து அவனும், குந்தவையும் இதுவரை மூத்தவனிடம் பேசவே இல்லை… சகுந்தலா மட்டும் ரகசியமாய் எப்போதாவது மகனிடம் பேசுவதோடு சரி. ஆனாலும் அருளின் எண்ணை அவன் அலைபேசியில் பதிந்து வைத்திருக்கிறான் என்பதை யோசிக்கும்போதே இவனுக்கும் கண் கலங்கியது.
“அ..அண்ணா… எப்படி இருக்க…” என்றவனின் குரலில் இருந்த குழைவு ஆதிக்கும் நெகிழ்வைக் கொடுத்திருக்க வேண்டும்… அவனது குரலும் உடைந்து ஒலித்தது.
அருளின் முகத்தில் தெரிந்த பரவசத்தையும், கண்ணிலிருந்த கண்ணீரையும் சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் சகுந்தலா. அன்னைக்கு உடம்புக்கு முடியாமல் போனதைக் கேட்டவன் ஏன் உடனே சொல்லவில்லை என்று கோபித்துக் கொள்ள அன்னையிடம் போனைக் கொடுத்து பேச சொல்லிவிட்டு அடுக்களைக்கு சென்றான் அருள்.
குந்தவை, வானதியிடமும் விஷயத்தை சொல்ல அவர்களும் சந்தோஷித்து அன்னை பேசுவதைக் கேட்க வந்தனர்.
மாறி மாறி ஆதித்யனிடம் பேசினார்கள்.
“ஆதி ஆண்ணா, சீக்கிரம் வா… இங்கே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு…” என்ற குந்தவை வானதி அங்கே இருப்பதைப் பற்றிக் கூறாமல் விட்டாள்.
வங்கப் புயல் காரணமாக ஒருசில இடங்களில் நாளை மழை பெய்யலாம் என்ற தொலைகாட்சி வானிலை அறிக்கையைப் பொய்யாக்காமல் ஞாயிறு விடியற்காலையிலேயே மழை சாரல் போடத் துவங்கி விட்டிருந்தது.
எப்போதும் போல காலையில் எழுந்த சுந்தரம் தனக்கு முன்னே எழுந்து ஜன்னலை கொஞ்சம் திறந்து வைத்து மழையை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் மனைவியைக் கண்டதும் அவரிடம் சென்றார்.
“என்ன சகு, மழை வருது… ஜன்னலைத் திறந்து வச்சிருக்க…”
“ப்ச்… சும்மா பார்க்கணும் போல இருந்துச்சு…” என்றவர், “காபி தரட்டுமா…” என்று கேட்க, “நீ இப்பவே எழுந்திருக்கணுமா… கொஞ்ச நேரம் படு…” என்று சொல்லவும்,
“தூக்கம் வரலைங்க… எவ்ளோ நேரம் தான் சும்மாவே படுக்கறது…” என்றவரின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.
“என்னமா, உடம்புக்கு எதுவும் பண்ணுதா…” கேட்டபடி அவர் நெற்றியில் கை வைத்துப் பார்க்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல… மனசு தான் ஒரு மாதிரி இருக்குது… அப்பா நினைவு வந்திருச்சு…” என்றார் சகுந்தலா.
“ஓ… அப்பாவை யோசிச்சு தான் வருத்தப்படறியா…”
“அவங்களுக்காக வருத்தப்பட்டாலும் இனி அவங்க திரும்பி வரப் போறதில்லை… ஆனா, எனக்குன்னு  இருக்கற சில உறவுகளும் எட்டித்தான இருக்கு…” என்றார் வருத்தத்துடன். மனைவி, மகனைப் பற்றி சொல்லுகிறாளோ என நினைத்த சுந்தரம், “ஆதி தான் சீக்கிரமே உன்னைப் பார்க்க வர்றேன் சொன்னானே…” என்றார் எங்கோ பார்த்தபடி.
“ம்ம்… என்னோட வருத்தம் அதில்லைங்க… நம்ம குடும்பத்துல ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்… எதுக்காக பெத்த மகனைப் பகைச்சுகிட்டு பகையாளி போல நிக்கணும்… உங்களுக்குப் பிடிக்காத இந்தக் காதல் ஏன் அவன் மனசுக்குள்ள வரணும்… எல்லாத்துக்குப் பின்னாடியும் எதாச்சும் சாபம் இருக்குமோன்னு என் மனசுக்குத் தோணுது…” என்றார் யோசனையுடன்.
“நீ என்ன சொல்லற சகு…” என்ற சுந்தரத்தின் முகமும் யோசனையைக் காட்ட, “ஆமாங்க… இருபத்தேழு வருஷம் முன்னாடி ஒரு காதலுக்கு எதிரா நாம பண்ணின துரோகம் தான் இப்ப நம்ம பிள்ளை மூலமா திருப்பி அடிக்குதோன்னு எனக்குத் தோணுது…” என்றார் மெல்லிய குரலில்.
“நீ சொல்ல வர்றது… உன் அண்ணனைப் பத்தியா…” அவர் யோசனையுடன் கேட்க, தலையாட்டினார்.
“ஆமாங்க… என் அண்ணனுக்கு நீங்க செய்த துரோகம் தான் இப்படி திருப்பி அடிக்குதோன்னு எனக்குத் தோணுது…” மௌனமாய் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் இருந்த அழுத்தம் சுந்தரத்தை யோசிக்க வைத்தது.
சகுந்தலாவின் அண்ணனுக்கு சொந்தத்தில் கல்யாணம் பேசி முடித்திருக்கையில் காதலித்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணி வீட்டுக்குக் கூட்டி வர சகுந்தலாவின் தந்தை கோபத்தில் குதித்தார். அவருக்கு தூபம் போட்டு மறைமுகமாய் மகனின் காதலை ஆதரித்தால் மகளை விட்டுப் போய்விடுவேன் என்று மிரட்டல் விடுத்து வீட்டில் சேர்க்காமல் பார்த்துக் கொண்டார் சுந்தரம்.
அது மட்டுமல்லாமல் அவருக்கு சொத்திலும் அஞ்சு பைசா கூடக் கொடுக்காமல் வீட்டை விட்டே துரத்த வைத்தார்… எத்தனையோ கெஞ்சி மன்றாடிப் பார்த்த அவர் அண்ணனும் வேறு வழியில்லாமல் மனைவியுடன் அவள் வீட்டுக்கு செல்ல அவர்கள் முதலில் கோபப்பட்டாலும் ஏற்றுக் கொண்டனர். அங்கேயே செட்டில் ஆனவர் அதற்குப் பிறகு இவர்களிடம் திரும்பி வரவே இல்லை.
“என் அண்ணனுக்கு நாம பண்ணினது பெரிய துரோகம்… அந்த சாபம் தான் இப்படில்லாம் நம்ம குடும்பத்தை ஆட்டி வைக்குதோன்னு என் மனசுக்குத் தோணுது…” சகுந்தலா சொல்லவும் சுந்தரத்தின் கண்கள் சுருங்க மனதுக்குள் சகுந்தலாவின் அண்ணன் முகமும், அவர் நேசித்து வீட்டினரை எதிர்த்து கை பிடித்த பெண்ணின் அழகான கண்ணீர் முகமும் வந்து போனது. கண்களில் நீர் வழிய கை கூப்பி நின்றவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று விட்டது மனக்கண்ணில் நிழலாடியது.
கணவர் அமைதியாய் யோசித்துக் கொண்டிருக்க, “அப்பா, அம்மாவும் போன பிறகு எனக்குன்னு இருக்கற பிறந்த வீட்டு சொந்தம் அவர் மட்டும் தானே… அவரை இனியும் விலக்கி நிறுத்தணுமா… ஏத்துக்கக் கூடாதா…” என்றார் கண்ணீருடன்.
மனைவியின் மனதை இத்தனை நாளாய் உறுத்திக் கொண்டிருந்த சோகம் மகனைப் பற்றியது மட்டுமல்ல என்பது புரிய பதில் சொல்லாமல் எழுந்தார்.
இந்த சம்பாத்தியம் எல்லாவற்றுக்கும் மூலகாரணம் சகுந்தலாவின் தந்தையின் சொத்து பிரிவினை செய்யாமல் முழுமையாகக் கிடைத்த பலன்தான்… “என்ன இருந்தாலும் நான் மருமகன்… என்னை விட எல்லாவற்றிலும் மகனுக்கு தானே இதில் சகல உரிமையும் இருக்கிறது… அப்போது கூட எதிர்த்துப் பேசாமல், என் தங்கையை சந்தோஷமாப் பார்த்துக்கங்க மாப்பிள்ள…” என்று கண்ணீரோடு சொல்லி சென்றவரை நினைக்கையில் வேதனையாய் இருந்தது.  
“நான் தப்பு பண்ணிட்டேனோ…” முதன்முறையாய் ஒரு குற்றவுணர்வு மனதை அரிக்க அமைதியாய் அமர்ந்து இருந்தார்.
“என்னங்க, நம்ம பையனை மன்னிச்சு ஏத்துகிட்ட போல என் அண்ணனையும் ஏத்துப்பீங்களா…” ஆவலோடு கேட்ட மனைவியிடம் பதில் சொல்லாமல் எழுந்து ஹாலுக்கு சென்று விட்டார் சுந்தரம்.
அடுக்களையில் இருந்து காபியின் மணம் சுகமாய் நாசியை வருட அந்த நேரத்திலேயே குளித்து தலையில் சுற்றிய டவலுடன்  அடுக்களையில் இருந்து காபிக் கோப்பையுடன் வெளியே வந்தாள் வானதி.
“குட்மார்னிங் அங்கிள்… காபி தரட்டுமா…”
“ம்ம்… கொடுமா…” எனவும்,
“இந்த மழைல இவ்ளோ சீக்கிரம் குளிக்கணுமா மா…” என்ற சகுந்தலாவிடம் புன்னகைத்த வானதி இருவருக்குமாய் காபியுடன் வந்தாள்.
அவள் அடுக்களைக்கு செல்ல சற்று நேரத்தில் குந்தவை, அருளும் வந்தனர். அன்று விடுமுறை நாள் என்றாலும் மழை என்பதால் யாருக்கும் வெளியே எங்கும் செல்ல முடியாமல் முடக்கிப் போட்டிருந்தது.
“என்னங்க, நகை, டிரஸ் எல்லாம் எப்ப வாங்கலாம்…” சகுந்தலா கேட்க, “நீயே எப்பன்னு சொல்லு, கடைக்கு போயி ஆர்டர் கொடுத்துட்டு வந்துடலாம்…” என்றார் சுந்தரம்.
“ம்ம்… ஆதியும் வந்திடட்டும்…” அவர் சொல்லவும் சுந்தரம் அமைதியாகிட வாயை மூடிக் கொண்ட சகுந்தலா அடுக்களைக்கு சென்றார். டிபன் முடிந்து நண்பனைக் காண வேண்டுமென்று தோன்றவே சுந்தரம் காரில் கிளம்பினார்.
“வாங்கண்ணே… சகுந்தலா எப்படி இருக்கா…” மலர்ந்த முகத்துடன் வரவேற்ற தேவிகாவிடம் புன்னகைத்தவர், “நல்லாருக்காமா… ராஜ் இல்லியா…” என்றார்.
“இருக்காருண்ணே… இப்பதான் குளிக்கப் போயிருக்கார்… டிபன் சாப்பிடறீங்களா…” என்றார் அன்புடன்.
“இல்லமா, சாப்பிட்டு தான் வந்தேன்… மாப்பிள்ள வீட்ல இல்லையா…” என்றதும், “மழைனால வெளில எங்கயும் போகல, இருக்கான்… கூப்பிடறேன்…” என்றவர், “தேவ்… உன் மாமனார் வந்திருக்கார், கீழ வாடா…” என்று மாடியை நோக்கிக் குரல் கொடுத்தார்.
அடுத்த நிமிடம் கம்பீரமாய் பிரசன்னமானான் தேவ் மோகன்.
ஒட்ட வெட்டிய கிராப், தீர்க்கமான கண்களில் நிரந்தரமாய் குடி கொண்ட ஆராய்ச்சிப் பார்வை…
“வாங்க மாமா…” வரவேற்றுக் கொண்டே இறங்கி வந்தான்.
“கல்யாண வேலைலாம் எப்படிப் போகுதுண்ணா…” கேட்ட தேவிகாவிடம், “எல்லாம் நடந்திட்டு இருக்கு மா… நம்மதான் ஏஜன்சி கிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டோமே… எல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க… மண்டபம் புக் பண்ணி இனிவிடேஷன் அடிக்கக் கொடுத்தாச்சு… நகை, ஜவுளி மட்டும் நீங்க லேடீஸ் முடிவு பண்ணிக்கோங்க… ஒண்ணாவே போயி எடுத்திட்டு வந்திடலாம்…” என்றார்.
“ம்ம்… சரிண்ணா, நான் சகுந்தலாகிட்டப் பேசறேன்…”
“ஆதித்யா எப்ப வர்றார் மாமா…” தேவ் கேட்கவும் சட்டென்று முகம் மாறியவர், “நாளைக்கு அங்கிருந்து கிளம்பறதா சொல்லி இருக்கான்…” என்றார்.
“ம்ம்… இப்பவும் அவர்மேல கோபம் போகலையா மாமா…”
“அப்படி இல்ல மாப்பிள்ள… சட்டுன்னு என்னை மாத்திக்க முடியல, சரியாகிடும் விடுங்க…” அவர் சொல்லும்போதே அங்கு வந்தார் ராஜ் மோகன்.
“வாடா சுந்தரம்… டிபன் எடுத்து வை தேவி…” மனைவியிடம் சொல்லிக் கொண்டே பூஜை அறைக்கு சென்று பிரார்த்தித்து நெற்றியில் விபூதியுடன் வந்தார்.
ஹாட் பாக்ஸில் கொதித்துக் கொண்டிருந்த சூடான கிச்சடியை தட்டில் வைத்து சட்னியை ஊற்றினார் தேவிகா.
“வா, நீயும் சாப்பிடு…” என்று நண்பனை அழைக்க, “நீ சாப்பிடு ராஜ்… நான் சாப்பிட்டு தான் வந்தேன்… காபி மட்டும் போதும்…” என்று சொல்ல இருவருக்கும் காபி எடுக்க சென்றார் தேவிகா. நண்பன் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒன்றாய் பொதுவான கல்யாண விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்தனர்.
“மாப்பிள்ள, உங்களுக்கு போஸ்டிங் எந்த லொகேஷன்னு எதுவும் தெரிஞ்சுதா…”
“இன்னும் இல்ல மாமா… குந்தவைக்கு எக்ஸாம் டேட் சொல்லிட்டங்களா…” என்றான் பதிலுக்கு.
“அதெல்லாம் என் மருமகளுக்கு உங்க மேரேஜ் முன்னாடி எக்ஸாம் முடிஞ்சிரும்டா… கவலைப்படாத…” கிண்டலாய் சொன்ன தேவிகா, “அவனுக்கு அவன் கவலை…” என்றார்.
“ஹாஹா… என் பிள்ளை என்னப் போல தான இருப்பான்… பொண்டாட்டி மேல அவ்ளோ பிரியம்…” ராஜ் சொல்லவும், தேவிகா முகம் சிவக்க அனைவரும் சிரித்தனர்.
பேசியபடி சாப்பிட்டு முடிக்க தேவ் ஒரு போன் வந்ததும் பேசிக் கொண்டே அறைக்கு சென்று விட்டான்.
“வாடா… ஆபீஸ் ரூமுக்குப் போகலாம்…” என்றவர் நண்பனை அழைத்து சென்றார்.
“என்னடா, ஏதாச்சும் முக்கியமான விஷயமா… இந்த மழைல கூட வீட்ல இருக்காம என்னைத் தேடி வந்திருக்க…”
“ப்ச்… மனசு சரியில்லடா… என்னவோ வெயிட்டா அழுத்துற போல ஒரு இறுக்கம்… அதான் உன்னைப் பார்க்க வந்தேன்…”
“ம்ம்… என்ன விஷயம்னு சொல்லுடா…” அவர் நண்பரிடம் கேட்க காலையில் மனைவியுடன் பேசியதைப் பற்றிக் கூறியவர், “நான் தப்பு செய்துட்டனா ராஜ்… அன்னைக்கு எதையும் யோசிக்காம அவரோட காதலைக் காரணமா வச்சு அந்தக் குடும்பத்தை விட்டே பிரிச்சது பாவம் தானோன்னு மனசுல இப்ப தோணுது…” என்றார் வருத்தத்துடன்.
“ம்ம்… நீ இப்படி யோசிக்கறதே நல்ல விஷயம் தான்… அப்பவே நான் சொன்னேன், பொறுமையா இரு… அப்பா, மகன் நடுவுல நீ உன் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதன்னு… நீ கேக்கல… உன் முன் கோபமும், காதல் மேல் இருந்த வெறுப்பும் உன்னை யோசிக்க விடாம இப்படிப் பண்ண வச்சிருச்சு… ஆனா, உன் மனைவியைப் பத்தி யோசிச்சியா… அப்பா, அம்மாக்குப் பிறகு கூடப் பிறந்த உறவு தானே நமக்கு எப்பவும் கூட வரும்… அந்த உறவே அவங்களுக்குள்ள இல்லாமப் போயிருச்சே…”
“ம்ம்… என்னைப் போலவே அவளையும் அனாதை ஆக்கிட்டேன்…” என்றவரின் கண்களில் வருத்தம் இருந்தது.
“சரி, நடந்ததை நினைச்சு வருத்தப்படாத… இனியாச்சும் அதை சரி பண்ண முடியுமான்னு பாரு… சகுந்தலாவோட கவலை ஆதியைப் பத்தி மட்டும் இல்லைன்னு இப்ப எனக்குத் தோணுது…” என்றார் ராஜ் மோகன்.
“ம்ம்… சரி பண்ணனும்… அவ கவலைக்குக் காரணமான எல்லாத்தையும் சரி பண்ணி என் பாவக் கணக்கைக் குறைக்கணும்…” என்றவர் குரலில் ஒரு தீர்மானம் தெரிந்தது.
நமக்கான சரிகள்
எல்லாம் ஏதேனும்
ஒரு புள்ளியில்
பொய்த்துப் போகையில்
மனம் கேள்வி கேட்கத்
தொடங்குகிறது…
முன்னர் சரியானவை
எல்லாம் இப்போதும்
சரிதானா என்று…

Advertisement