Advertisement

“ம்ம்… எஸ் டாக்டர்… எங்க மூத்த பையனைப் பத்தி அவளுக்கு ரொம்ப கவலை… இப்பக் கூட அவனைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது தான் இப்படி ஆச்சு…”
“ம்ம்… ஐ தின்க் பானிக் அட்டாக் ஆக இருக்க சான்ஸ் இருக்கு…” டாக்டர் சொல்லவும் புரியாமல் பார்த்தார்.
“புரியல டாக்டர்… ஹார்ட் அட்டாக் மாதிரியா…”
“இல்லை… இது ஒரு மாதிரி மன அழுத்தத்துல, பயத்துல வர்ற அட்டாக். மிதமிஞ்சிய கவலை இருக்கும் போது நம்ம உடம்புல ரசாயன மற்றும் நியூரோடிரான்ஸ்மிட்டர் சமநிலை குறையலாம்… அந்த சமயத்துல நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், அதிகமான வேர்வைன்னு ஹார்ட் அட்டாக்குக்கு உள்ள சிம்டம்ஸ் சிலது வரும்…”
“ஓ… என் ஒயிப்க்கு இப்ப அந்த பிராப்ளம் தானா டாக்டர்…”
“மே பீ இருக்கலாம்… எதுக்கும் டெஸ்ட் ரிசல்ட் வந்திடட்டும்… அப்புறம் அதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்… இப்ப அவங்க நல்லாத் தூங்கறாங்க… யாராச்சும் ஒருத்தர் கூட இருந்தாப் போதும்… நீங்க கூட வீட்டுக்குப் போயிட்டு காலைல வாங்க…”
“இதுல வேற எதுவும் பிரச்சனை இல்லையே டாக்டர்…” அவர் மீண்டும் கேட்கவும், “இல்லைன்னு சொல்ல முடியாது… கொஞ்சம் கேர் எடுத்துகிட்டா சரியாகக் கூடிய பிரச்சனை தான்… டோன்ட் வொர்ரி…” என்றவர் அங்கிருந்து செல்ல வானதியிடம் வந்தார் சுந்தரம்.
“டாக்டர் என்னமா சொல்லிட்டுப் போனார்… பானிக் அட்டாக் னா என்ன, எனக்கு சரியாப் புரியலை…”
“ஆன்ட்டி ரொம்ப நாளா மனசுல எதையோ விசாரிச்சு கவலைப்பட்டுட்டு இருந்திருக்காங்க அங்கிள்… அந்த மன அழுத்தம் தான் இப்படி வரக் காரணம்னு சொல்லிருக்கார்… நல்ல மருந்தும், ரெஸ்டும் இருந்தா சரியாகிடும்… சிலருக்கு சைக்யாட்ரிஸ்ட் ட்ரீட்மென்ட், மெடிடேஷன் தேவைப்படும்..”
“அப்படின்னா அம்மா பழைய மாதிரி இருக்க மாட்டாங்களா…” என்றாள் குந்தவை பயத்துடன்.
“ஹேய், அங்கனே ஒண்ணும் இல்ல… சரியாகிடும்…”
அவள் சொன்னாலும் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி பரவி இருக்க கவலையுடன் அமர்ந்தார் சுந்தரம். அருள் கண்ணாடிக் கதவின் வழியே அன்னையைப் பார்த்துவிட்டு சோகமாய் நின்று கொண்டிருக்க குந்தவையின் கண்ணில் கண்ணீர் தேங்கிக் கிடந்தது.
அன்றைய நாளில் நிறைந்திருந்த சந்தோஷம் அனைவரின் முகத்திலும் காணாமல் போயிருக்க கவலையும் பயமும் மனதில் நிறைந்து கிடந்தது.
வானதி நந்தினியின் தங்கை என்பதை சகுந்தலாவிடம் அவர்கள் இன்னும் சொல்லி இருக்கவில்லை. அது தெரிந்தால் மிகவும் சந்தோஷப் படுவார் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று அன்னைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“அருள்… நீ இவங்களைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ… நான் இங்கே இருக்கேன்…” சுந்தரம் சொல்லவும், “இல்ல அங்கிள் நான் இருக்கேன்… நிங்கள் போய்க்கோ…” என்றாள் வானதி.
“இல்லப்பா, நானும் போகலை… அம்மா கண் விழிச்சுப் பார்க்காம என்னால எப்படி வீட்ல இருக்க முடியும்…” என்று குந்தவையும் மறுத்துவிட்டாள்.
அனைவரின் உறக்கத்தையும் கெடுத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் எல்லாம் மறந்து உறங்கிக் கொண்டிருந்தார் சகுந்தலா. எத்தனையோ நாட்கள் அவரது உறக்கம் கெடுத்த கவலைகள் எல்லாம் எங்கோ ஒளிந்து கொண்டிருக்க தனை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
சுந்தரம் நண்பனை அழைத்து நடந்ததை சொல்லி அழவும் அவர்களும் பயந்து போயினர். விடிந்ததும் அவர்களும் குடும்பத்துடன் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்க காலையில் தான் சகுந்தலாவுக்கு முழிப்பு வந்தது.
“ரெண்டு பேரா அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்திட்டு வாங்க…” நர்ஸ் சொல்லவும் முதலில் சுந்தரமும் குந்தவையும் உள்ளே சென்றனர். உறங்காமல் சோர்ந்து   கலங்கி நின்ற கணவனைக் கண்டதும் கஷ்டப்பட்டு புன்னகைக்க, அழுதழுது கண்கள் சிவந்து அன்னையைக் கண்டதும் தேம்பிய மகளைக் கண்டதும் நெகிழ்ச்சியாய் இருந்தது.
“அம்மா… ஏன் மா இப்படி… உனக்கு எதுவும் ஆச்சுன்னா நாங்க என்னமா பண்ணுவோம்…” அவரது கைகளைப் பற்றிக் கொண்டு மீண்டும் அழத் தொடங்க தட்டிக் கொடுத்தவர் சிரமப்பட்டு பேசினார்.
“அச..டு… அழா…த, அப்படி…ல்லாம் அம்மா விட்டுட்டுப் போயிரு…வேனா… போனா என் க…ட்டை தான் வே..குமா…”
“சகு, என்னம்மா இது, உனக்கு எதுவும் ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது… இப்ப எப்படி இருக்கு…” என்ற கணவரின் கையைப் பற்றி ஆறுதலாய் தட்டிக் கொடுத்தார்.
“ம்ம்… மூச்சு விட..தான் கொஞ்ச..ம் கஷ்டமா இரு..க்கு…”
“ம்ம்… டாக்டர் வந்திருவாங்க… தைரியமா இரு…”
“ராஜ் பாமிலியோட உன்னைப் பார்க்க வந்திருக்கான்… வர சொல்லறேன்…” என்றவர், வெளியே சென்று அவர்களை அனுப்ப அடுத்து அருளும் வானதியும் சென்று பார்த்தனர்.
“அம்மா… இப்ப எப்படி இருக்கு மா… எங்களை பயப்படுத்தி விட்டுட்டீங்களே…” கண்ணீருடன் கையைப் பற்றிய மகனை நோக்கிப் புன்னகைத்தவர், “அப்படி…ல்லாம்… உங்களுக்கு ஒரு நல..லது பண்ணாம போயிட மாட்…டேன்… என்..ன வானதி, நீயும் கண்ணைக் கசக்கி…ட்டு நிக்கற… என..க்கு எதுவும் ஆச்சு…ன்னாலும் என் புள்ளய நீ பார்த்..துக்க மாட்டியா…” என்று அவர் கேட்கவும், “ஆன்ட்டி…” என்று அவர் கையைப் பற்றி அழ அருள் நெகிழ்ச்சியுடன் பார்த்து நின்றான்.
“அம்மா, ஏன்மா இப்படிப் பேசறீங்க… எங்களுக்கு நீங்க எப்பவும் வேணும்மா…” என்ற மகனை நோக்கி சிரித்தார். அப்போது உள்ளே வந்த நர்ஸ் அவருக்கு பிரஷர் பரிசோதித்து ஊசி போட்டுவிட்டு, “ரொம்ப அவங்களைப் பேச வைக்க வேண்டாம்… ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று சொல்ல அவர்களும் வெளியே சென்றனர்.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து அவரைப் பரிசோதித்தார். பானிக் அட்டாக் தான் என்பதைக் கூறியவர் இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் ஓய்வில் இருக்கட்டும் என்று மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அடுத்தநாள் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ஒருவரும் அவரைப் பரிசோதிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
சகுந்தலாவைப் பரிசோதித்தவர் வெகு நாட்களாய் மனதில் பூட்டி வைத்திருந்த கவலையும், அது சரியாகாமல் போய்விடுமோ என்ற பயமும் தான் இப்படி சம்பவிக்கக் காரணம் என்றவர், எளிதான சில மூச்சுப் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து அதை செய்யும்படி கூறினார்.
சுந்தரத்திடம், அவருக்கு கவலை கொடுக்கும் விஷயங்களை நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறியவர், இது போல அடிக்கடி வந்தால் சகுந்தலாவுக்கு மன அழுத்தம் கூடவும் வாய்ப்பிருப்பதாய் கூற அவருக்கு சற்று பயமாய் இருந்தது. முடிந்தவரை அவரது மனதை அச்சுறுத்தும் விஷயத்தை சரி செய்யுமாறு டாக்டர் கூறவே ராஜும், தேவிகாவும் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
“டேய், தங்கச்சி மனசுல உள்ள கவலை என்னன்னு உனக்குத் தெரியாதா… அவ ஆரோக்கியத்தை விட உனக்கு உன் வீணாப் போன பிடிவாதம் பெருசா… உன்னோட சுக, துக்கத்துல இத்தனை வருஷம் ஒண்ணா இருந்தவளுக்காக இந்த விஷயத்துல நீ கொஞ்சம் இறங்கி வரக் கூடாதா…” என்று ராஜ் மோகன் ஒரு பக்கம் அவரைக் குற்றம் சொல்ல மறுபக்கம் தேவிகா பிடித்துக் கொண்டார்.
“பாவம், புள்ள நினைப்பு தான் அவளை இப்படி படுக்கப் போட்டிருச்சு… அவளோட கவலை எல்லாம் ஆதியை நினைச்சு தான்… அவளுக்காக நீங்க கொஞ்சம் யோசிக்கக் கூடாதா அண்ணா…” என்று அவர் பங்குக்கு கூறினார்.
அவர்கள் சொன்னது மனதுக்குள் ஒரு பக்கம் இருக்க மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் ஜெயந்தி டாக்டரிடம் சொல்லி வானதியை சகுந்தலாவைப் பார்த்துக் கொள்ள வீட்டோடு இருக்க சொல்லிவிட்டார் சுந்தரம். அருளும், குந்தவையும் அன்னையைச் சுற்றியே இருக்க வீட்டின் சந்தோசம் எல்லாம் மாறிப் போயிருந்தது.
சகுந்தலா உடல்நிலை தேறினாலும் எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல யோசனையிலேயே இருக்க அருள் தந்தையிடம் கூறினான்.
“அப்பா, இப்பவும் யாரும் பக்கத்துல இல்லேன்னா அம்மா அண்ணனை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்காங்க… இப்படியே போனா அண்ணனோட அம்மாவையும் இழக்க வேண்டி வருமோன்னு பயமா இருக்கு… அம்மாவுக்காக நீங்க அண்ணனை ஏத்துக்கக் கூடாதா… கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கப்பா…” தானாய் எதுவுமே சொல்லாத இளைய மகன் கண்ணீரோடு கேட்ட வார்த்தைகள் அவர் மனதுக்குள் அறைந்து கொண்டிருந்தன.
கல்யாண சந்தோஷம் எதுவுமின்றி வீடு முடங்கிப் போக குந்தவையின் முகமும் சந்தோஷத்தை தொலைத்திருந்தது. வானதி அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டாலும் இப்போதைய சூழலில் அக்காவின் கல்யாணத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பதே சரி என்று அமைதியாய் இருந்தாள்.
ஆனால் யாருக்காகவும் காத்திராமல் அடுத்த சில நாளிலேயே காலம் ஒரு மாற்றத்தைக் கொடுத்தது. அன்னையின் உடல்நிலை பற்றி அறிந்த ஆதித்யன் அவரைக் காணப் பறந்து வந்தான்.
நான் என்ற கர்வம்
எல்லாம் தகர்ந்திட
நமக்கானவர்களை
இழந்திடுவோமோ
என்று துடிக்கும்
ஓர் நொடி போதும்…
எதற்காக அழுது
தீர்த்தோமோ
அதை நினைத்தே
ஓர் நாள்
சிரித்திடவும் வைக்கும்
இந்த வாழ்க்கை 
விசித்திரமானது…

Advertisement