Advertisement

அத்தியாயம் – 30
ரிசப்ஷன் முடிந்து வீடு திரும்பிய சுந்தரம் கட்டிலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சகுந்தலா பாத்ரூமில் இருந்தார்.
“ஆன்ட்டி…” சாத்தியிருந்த கதவின் வெளியே வானதியின் குரலைத் தொடர்ந்து மெதுவாய் கதவு தட்டப்பட்டது.
“சும்மா தான் சாத்திருக்கு… உள்ள வாம்மா…” என்றார்.
“சாரி அங்கிள்… இந்த சமயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்… இந்த ஜுவல்ஸ் ஹால் போன் ஸ்டாண்ட்ல இருந்தது… அதானு ஆன்ட்டி கிட்டே கொடுக்கான் வந்தது…” அவள் சொல்லும்போதே டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தார் சகுந்தலா.
“அட, ரிசப்ஷன் கிளம்பும்போது இவ்ளோ நகை வேண்டாம்னு குந்தவை சொன்னான்னு அவகிட்ட கழற்றி கொடுத்து, எடுத்து வைக்க சொல்லிட்டுப் போனேன்… பொறுப்பில்லாம அதை அங்கயே போட்டுட்டு போயிட்டாளா…” என்றவர், “தேங்க்ஸ் மா…” என்று வாங்கிக் கொண்டார்.
“மறந்து தோணுந்து ஆன்ட்டி… உங்களுக்கு பால் எதுவும் கொண்டு வரட்டே…”
“இல்லமா வேண்டாம்… அங்க சாப்பிட்டதே நெஞ்சு கரிக்குற மாதிரி இருக்கு… ஒரு சுக்குக் காப்பி குடிச்சாப் பரவால்லன்னு தோணுது… ஏங்க, உங்களுக்குப் பால் வேணுமா…” என்றார் கணவரிடம்.
“இல்ல, எனக்கும் காப்பியே குடு…” என்றவரின் முகம் யோசனையாகவே இருந்தது. சிறிது நேரத்தில் வானதி காபியுடன் வரவே வாங்கிக் குடித்தனர்.
“நீ போயி தூங்கு மா… உனக்கும் அலுப்பா இருக்கும்ல…” அவர் சொல்லவும், “குட் நைட் ஆன்ட்டி…” என்றவள் அவர்களின் அறைக்கு சென்றாள். மனதுக்குள் சகுந்தலாவுக்கு விஷயம் தெரிந்ததில் சந்தோஷமும் சுந்தரத்தை நினைத்து பயமும் ஒரு சேரப் படுத்தி எடுத்தது. இப்போது தொடங்கிய தனது காதலின் வெற்றியைப் பற்றி யோசிக்காமல் அக்காவின் காதலை முதலில் கல்யாணத்தில் முடிக்க வேண்டும்… என்று மனது அடித்துக் கொண்டது.
குந்தவை தேவ் மோகனிடம் அலை பேசிக் கொண்டிருந்தாள். அவனுக்கும் நந்தினி, வானதியின் அக்கா என்றதும் வியப்பாய் இருந்தது. கூடிய சீக்கிரமே அவர்களின் கல்யாண விஷயத்தில் தன் தந்தையிடம் சொல்லி ஒரு முடிவுக்கு வருவதாய் சொன்னான்.
வானதி சென்றதும் கணவனின் அருகில் வந்து அமர்ந்தார் சகுந்தலா. “என்னங்க, நானும் வந்ததுல இருந்து பாக்கறேன்… ஏதோ யோசனையாவே இருக்கீங்க…” என்றார் கரிசனத்துடன்.
“ஒண்ணுமில்ல சகு, மண்டபத்துல அவங்க எல்லாம் பிள்ளைங்க கல்யாணத்தைப் பத்தி பேசினதைத் தான் யோசிக்கறேன்… ராஜ் கூட அவங்க சொன்னதுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினது மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு…”
“அண்ணா பேசினதுல என்னங்க தப்பிருக்கு… இந்தக் காலத்துல எந்தப் பிள்ளைங்க லவ் பண்ணாம இருக்காங்க… அவங்க விருப்பத்தை மறுக்காம அதுல உள்ள நல்லது கெட்டதைப் பார்த்து நடத்திக் கொடுக்கறது தானே சரி…”
“ஓஹோ, அவங்க யாரையாச்சும் லவ் பண்ணினா உடனே நடத்திக் கொடுத்துடணும்… இல்லேன்னா நம்மள மதிக்க மாட்டாங்கன்னு சொல்ல வர்றியோ…”
“என்ன தப்புன்னு கேக்கறேன்… எல்லாப் பிள்ளைகளும் என் பிள்ளை மாதிரி அப்பா சம்மதத்துக்கு காத்திருப்பாங்களா… இல்ல, என் மருமக மாதிரி மாமா சம்மதிக்காம கல்யாணம் நடக்காதுன்னுதான் பிடிவாதம் பிடிப்பாங்களா… ஹூம்… அவங்க வாழ்க்கையைத் தொலைச்சிட்டு உங்க சம்மதத்துக்கு காத்திருக்காங்க… இந்த மாதிரி பெத்தவங்க நேசத்தை மதிக்கத் தெரிஞ்ச பிள்ளைகளோட எதிர்காலத்தை விட உங்களோட வறட்டுப் பிடிவாதம் தானே உங்களுக்கு முக்கியமாப் போயிருச்சு… கொஞ்சம் இறங்கி வந்து பாருங்க, அவங்க உங்களை எப்படிக் கொண்டாடுவாங்கன்னு…”
“சகு… என்ன, ரொம்பப் பேசற… நான் அவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு தான் சொன்னேன்… அவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வாழ வேண்டாம்னு சொல்லவே இல்லையே… இப்பவும் உன் புள்ளை தானே அந்தப் பொண்ணுக்கு எல்லாம் பண்ணறான்… எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா…” என்றார் கோபத்துடன்.
“என்னங்க பிரயோசனம்… தெரிஞ்சு என்ன பிரயோசனம்… அவங்களா கல்யாணம் பண்ணிக்கறதுன்னா நாலஞ்சு வருஷம் முன்னாடியே பண்ணிருப்பாங்களே… அதை ஏன் நீங்க யோசிக்கவே மாட்டேங்கறீங்க… தலைப் புள்ளையைப் பிரிஞ்சு அவனைப் பத்தின கவலைல என் நெஞ்சு எப்ப துடிக்கறத நிறுத்திக்கப் போகுதுன்னு தெரியல… அதுக்குள்ள அவனுக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்த்துட மாட்டமான்னு பெத்த மனசு கிடந்து அடிச்சுக்குது… கொஞ்சம் அவனுக்காக இறங்கி வந்தா என்னங்க… நம்ம பிள்ளைங்க… உங்க மாருலயும் தோள்ளயும் போட்டு வளர்த்தின நம்ம பிள்ளை… அவனை ஒரு எதிரி போலப் பா…க்குறீங்களே…” சொல்லும்போதே கண்ணீர் கன்னம் தாண்டி அவரது நெஞ்சை நனைக்க படபடப்புடன் மூச்சுத் திணறப் பேசினார் சகுந்தலா. ஒருமாதிரி முகத்தை சுளித்தவர் நெஞ்சைப் பிடித்துக் கொள்ள பதறிப் போனார் சுந்தரம்.
“சகு… என்ன பண்ணுது மா… என்னாச்சு…”
“நெஞ்..சு வலிக்குற போல இருக்…குங்க…” அவர் சொல்லவும் கலங்கியவர் வேகமாய் தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்.
“இந்தா… இதைக் குடி…” என்றவர் கட்டிலில் சாய்ந்தவாறு படுக்க வைத்து கதவைத் திறந்து பிள்ளைகளை அழைத்தார்.
“வானதி… குந்தவை…” என்று கதவைத் தட்ட உறங்காமல் பேசிக் கொண்டிருந்த இருவரும் பதறி ஓடி வந்தனர்.
“என்ன அங்கிள், என்னாச்சு…” என்ற வானதியிடம்,
“சகுவைப் பாரு மா…” என்று சொல்ல அறைக்கு ஓடினாள்.
“ஐயோ, அம்மாக்கு என்னாச்சுப்பா…” என்ற குந்தவை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஏசியில் வேர்வை வழிய அமர்ந்திருந்தவரைக் கண்டு அழத் தொடங்கினாள்.
“ஐயோ, அம்மா… என்னம்மா பண்ணுது…” கதறியவளிடம், “குந்தவை, சீக்கிரம் அண்ணனைக் கூப்பிட்டு காரை எடுக்க சொல்லு… ஹாஸ்பிடல் போகலாம்…” சகுந்தலாவுக்கு முடியவில்லை என்றதும் சுந்தரத்துக்கு கை கால் எல்லாம் உதற மயக்கம் வருவது போல இருந்தது.
வானதி, வேகமாய் சகுந்தலாவின் பிரஷர் பரிசோதிக்க அது தாறுமாறாய் காட்டியது.
“ஆன்ட்டி… எங்க வலிக்குது… நெஞ்சுல மட்டுமா, ஷோல்டர் எல்லாம் வலிக்குதா…” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க, “வானதி… முதல்ல ஹாஸ்பிடல் போயிடலாம் மா…” என்று அவசரப்படுத்தினார் சுந்தரம்.
அதற்குள் அருளும் வந்திருக்க காரில் கிளம்பினர்.
சகுந்தலா அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஈஸிஜி, பிளட், பிரஷர், சுகர் என்று அனைத்தும் பரிசோதிக்கப்பட அன்றைய இரவு அனைவருக்கும் இமைக்கா நொடிகளாய் மாறிக் கொண்டிருக்க பதட்டத்துடன் காத்திருந்தனர்.
சுந்தரத்திடம் டாக்டர் எந்த சூழ்நிலையில் இப்படி வலி வந்தது, என்ன சாப்பிட்டார் என்றெல்லாம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டு சிகிச்சையை செய்து கொண்டிருந்தனர். 
அனைவரும் சோகமாய் அமர்ந்திருக்க சுந்தரத்தின் மனதில் இறுதியாய் சகுந்தலா கூறிய வார்த்தைகளே மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. “எதிரி போலப் பா…க்குறீங்களே…”
“சகு… நீயே என்னை இப்படி நினைக்கலாமா… நான் நம்ம புள்ளையை எதிரியா நினைப்பேனா… அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே காதலுக்கு தடையா இருந்தேன்… அதுவே அவன் வாழ்க்கையைக் கெடுக்குதுன்னு நினைச்சுட்டியா… நான் தப்புப் பண்ணிட்டனா… என்னை விட்டுப் போயிடாத சகு…” மனதுள் அரட்டிக் கொண்டிருந்தார்.
என்னதான் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும், மனைவியிடம் சிடுசிடுப்பைக் காட்டினாலும் அவர் மனதிலும் மனைவி மேல் தனிப் பிரியம் இருந்தது… தனக்கு இந்த சமூகத்தில் ஒரு அடையாளத்தைத் தந்தவள்… தன்னை அநாதை என்ற வாக்கிலிருந்து காப்பாற்றி தனக்காய் ஒரு குடும்பத்தைத் தந்தவள் என்ற நேசம் இருந்தது.
“சகு, என்னை விட்டுப் போயிடாத மா… சீக்கிரம் எழுந்து வந்திரு… யாருக்காக இல்லன்னாலும் உன் சந்தோஷத்துக்கு நான் என்ன வேணும்னாலும் பண்ணறேன்… என்னைத் தனியா மட்டும் விட்டுட்டுப் போயிடாதம்மா… நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது… நீதானே அச்சாணி… நீ இல்லேன்னா நம்ம குடும்பமே சிதறிப் போயிடும் மா… நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்… சீக்கிரம் எழுந்திரு மா… கடவுளே… என் சகுவைக் காப்பாத்திரு… அவளை என்கிட்டே இருந்து பிரிச்சு என்னைத் தண்டிச்சுடாத…” என்று தனியே நின்று மனம் கலங்க வேண்டிக் கொண்டிருந்தார்.
அறைக்கதவைத் திறந்து டாக்டர் வரவும் அருள், “டாக்டர், அம்மாக்கு எப்படி இருக்கு…” என்றான் கவலையுடன். அதைக் கேட்டு சுந்தரமும் அவரிடம் ஓடி வந்தார்.
“ம்ம்… இப்போதைக்கு பயப்படத் தேவையில்லை… ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கோம்… மூச்சு விட ரொம்ப சிரமப்பட்டாங்க… ஊசி போட்டிருக்கோம்… கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்… மத்த பரிசோதனை முடிவு வந்ததும் தான் என்ன பிராப்ளம்னு சரியா சொல்ல முடியும்…” என்றார்.
“மிஸ்டர் சுந்தரம்… அவங்க ரொம்ப பதட்டமா இருந்தாங்க… ஏதாச்சும் விஷயத்தை யோசிச்சு கவலைப்பட்டுட்டு இருந்தாங்களா… அவங்களுக்குப் பிடிச்ச யாராவதைப் பத்தி யோசிச்சுட்டு, அவங்களை நினைச்சு கவலைப்பட்டுட்டு இப்படி…” என்றதும் சுந்தரம் அதிர்ச்சியுடன் நோக்கினார்.

Advertisement