Advertisement

அத்தியாயம் – 3
“ஜெயந்தி டாக்டரா…” என்றார் சகுந்தலா திகைப்புடன்.
“ம்ம்… அறயாமோ…” என்றாள் அவள் வியப்புடன்.
“நல்லா அறயாம்… அவங்க எங்க பாமிலி டாக்டர்… எங்க வீட்டுக்கு எதிரே தான் அவங்க வீடு…”
“ஆனோ…” என்றவளின் முகம் மலர்ந்தது.
“ஆனா, அவங்க இப்ப ஊருல இல்லையே…” அவர் சொல்லவும், “எந்தா, ஊற இல்லே… மனசிலாயில்லா ஆன்ட்டி…” என்றவளின் குரல் குழப்பமாய் ஒலித்தது.
“அந்த ஜெயந்தி டாக்டர் அவுட் ஆப் ஸ்டேஷன் மா…” என்றதும் அவள் முகம் வாடியது.
“மிலிட்டரில உள்ள அவங்க புள்ளைக்கு, யுத்தத்துல கால்ல  குண்டு பாஞ்சு காலை எடுத்துட்டாங்க… அதான் கூட  இருந்து கவனிச்சுக்க அஸ்ஸாம் போயிருக்காங்க…”  
வானதிக்கு அவர் சொன்னது முழுமையாய் புரியாவிட்டாலும் அரைகுறையாய் புரிய தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்குப் புரியவில்லையோ என நினைத்த சகுந்தலா மீண்டும் விளக்கினார்.
“ஜெயந்தி டாக்டர் சன் மிலிட்டரில…” காலைக் காண்பித்து, “வார் ஷூட்டிங்… ரிமூவ் லெக்… ஹெல்ப் க்கு டாக்டர் அஸ்ஸாம் போயி…”
“ஐயோ, ஜெயந்தி டாக்டர் அஸாம் போயோ…” என்றவளின் முகத்தில் அதிர்ச்சி தெரிய அவர் கேட்டார்.
“ஆமா, நீ எதுக்கு அவரைக் காண வந்தது…”
“நான் நர்ஸிங் படிச்சு கழிஞ்சு, அவருடே கிளினிக்கில்  சேரான் வந்ததா…” என்றவள் சோர்வுடன் தலையில் கை வைத்து அமர சிவகாமி கவலையாய் பார்த்தார்.
அப்போது சுந்தரம் வாசலில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் வேகமாய் நுழைவதைக் கண்ட சிவகாமி, “என்ன இருந்தாலும் என் புருஷன் பாசக்காரன்தான்… எனக்கு ஒண்ணுன்னு போன் வந்ததும் அலறியடிச்சு வந்திட்டாரே…” என நினைத்துக் கொண்டே, “என்னங்க…” என அழைத்தபடி கையசைக்க அவர்களை நோக்கி வந்தார்.
“என்ன சகு… உன்கிட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன்… வயசான காலத்துல இந்த விரதம் இருக்கற வேலை எல்லாம் விட்டிருன்னு… சொன்னாக் கேக்கறியா…” அவர் கோபமாய் கேட்டதை விட வயசான காலத்துல என்று சொன்ன வார்த்தை மனதை வெகுவாய் சீண்ட, “யாருக்கு வயசாகிடுச்சு… உங்களுக்கு தான் சாமியும், இல்ல ஒண்ணும் இல்ல, எல்லாரும் அப்படியே இருக்க முடியுமா…” என்று கோபமாய் திரும்பவும் மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்க முறைப்புடன் பார்த்தார். அதை கவனித்த சகுந்தலாவும் வாயை மூடிக் கொண்டு அமைதியாக அருகில் எழுந்து நின்ற வானதியை நோக்கினார் சுந்தரம்.
“இந்தப் பொண்ணு தான் உனக்கு ஹெல்ப் பண்ணுச்சா…”
“ஆமாங்க… பேரு வானதி, நர்ஸ்ங்க…” என்றதும் அவள் புன்னகைத்தாள்.
“தேங்க்ஸ் மா… இந்த எரியாக்குப் புதுசா…” அவர் கேட்க வானதி பதில் சொல்லுமுன் சகுந்தலா கூறினார்.
“நம்ம ஜெயந்தி டாக்டரைத் தேடி வந்திருக்கு… அவங்க முந்தாநாள் தானே அஸ்ஸாம் கிளம்பிப் போனாங்க…”
“ஓ… நீ எந்த ஊரு மா…” என்றதும், “கேரளாங்க…” என்ற மனைவியை முறைத்து வாயை மூட வைத்தவர், “அந்தப் பொண்ணு என்ன ஊமையா… நீயே பேசிட்டு இருக்க…” சிடுசிடுப்புடன் கேட்க அவர் அமைதியானார்.
“சென்னை எனக்குப் புதியதானு அங்கிள்… மார்னிங் தான் இவிடே வந்தது… பஸ், டிரெயின் மாறிக் கயறி தாம்பரம் எத்தி… சரி அம்பலம் கண்டப்போ தொழுதிட்டு போகாமெந்து இவிடே வந்து… அப்பலானு ஆன்ட்டி தலை கிறங்கி வீழான் போயது…” (சென்னை எனக்குப் புதுசு அங்கிள்… பஸ், டிரெயின் மாறி தாம்பரம் வந்தேன்… கோவிலைப் பார்த்தப்ப சாமி கும்பிட்டுப் போகலாம்னு உள்ளே வந்தேன்… அப்பதான் ஆன்ட்டி தலை சுத்தி விழப் போனாங்க…) என்றாள் வானதி.
“ஓ… உடம்புல சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் எல்லாம் வச்சுக்கிட்டு விரதம்னு சாப்பிடாம, நேரத்துக்கு மாத்திரை போடாம எங்க உசுரை வாங்க வேண்டியது…” அவர் சிடுசிடுக்க, சகுந்தலாவின் முகம் வாடியது.
“பாவம் அங்கிள், ஆன்ட்டிய சீத்த பரயண்டா…” (திட்டாதிங்க…)
“ம்ம்… சரி கிளம்பலாமா… எனக்கொரு மீட்டிங் இருக்கு…” கடிகாரத்தில் டைம் பார்த்தபடி மனைவியிடம் கேட்க அவர் வானதியைப் பார்த்தார்.
“நீ என்னம்மா செய்வ… டாக்டருக்கு கால் பண்ணிப் பார்த்தியா…” என்றார் கவலையுடன்.
“ம்ம்… டிரை செய்து… நாட் ரீச்சபிள் பரயுனு…”
“பேசி கன்பர்ம் பண்ணாம இப்படிதான் பாஷை தெரியாத ஊருக்கு கிளம்பி வரதா…” என்றார் அங்கலாய்ப்புடன்.
“எந்து செய்யானா ஆன்ட்டி… நாட்டில் நிக்கான் பற்றாத சிச்சுவேஷன்… கழிஞ்ச மாசம் டாக்டர் அவிடே ஒரு மெடிக்கல் காம்பினு வந்தப்போ என்னோடு வரான் பரஞ்சு கார்டு தந்திருந்து… சரி போனில் கிட்டியில்லெங்கிலும் நேரில் போயி காணாம்னு தைரியத்தில் இறங்கிப் போயி… ஹூம்… இனி வேற ஏதெங்கிலும் ஹோஸ்பிடலில் நர்ஸ் வேகன்சி உண்டோ நோக்கணம்…” (என்ன செய்யது… ஊருல இருக்க முடியாத சூழ்நிலை… போன மாசம் டாக்டர் எங்க ஊருல ஒரு மெடிக்கல் காம்புக்கு வந்தப்ப எனை வரசொல்லி அவங்க கார்டு கொடுத்தாங்க… சரி போன் எடுக்கலேன்னாலும் அட்ரஸ் இருக்கே… நேரில் போயி பார்த்துக்கலாம்னு கிளம்பிட்டேன்… இனி வேற எதுவும் ஹாஸ்பிடலில் நர்ஸ் வேகன்சி இருக்கான்னு பார்க்கணும்…) என்றாள் பெருமூச்சுடன்.
“ம்ம்… பாஷை தெரியாத ஊருல வயசுப் பொண்ணு எப்படி தனியா எல்லா இடத்துக்கும் போவ… எங்க தங்குவ… யாரையாச்சும் துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல…”
“கூட்டினு வறன நிலைலு வீட்ல யாருமில்ல ஆன்ட்டி… நிங்கள் போய்க்கோ… நான் டிரை செய்து நோக்காம்…” (துணைக்கு வர்ற நிலைமைல வீட்ல யாருமில்ல ஆன்ட்டி… நீங்க போங்க… நான் டிரை பண்ணிப் பாக்குறேன்…”
“ம்ம்… எங்கேம்மா தங்குவ…” என்றார் வயதுப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கும் கவலையில்.
“ஹாஸ்டல் நோக்கணம் ஆன்ட்டி… நிங்கள் சோதிக்கும்போ எண்ட அம்ம போலத் தோனுந்து…” என்றவள் சிரித்தாள்.
“சரி, உன் மொபைல் நம்பர் சொல்லு…” எனவும் சுந்தரம், “இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை…” என மனதுக்குள் நினைத்தாலும் மனைவிக்கு உதவி செய்தவள் என்பதால் அமைதியாய் இருந்தார்.
வானதி நம்பர் சொல்ல தனது மொபைலில் அழுத்திக் கொண்டவர் அவள் எண்ணுக்கு மிஸ் கால் கொடுத்தார்.
“சேவ் பண்ணி வச்சுக்கமா… எதாச்சும் ஹெல்ப் வேணும்னா தயங்காம சொல்லு… உன்னை இப்படி விட்டுட்டுப் போக மனசுக்கு கஷ்டமா இருக்கு…” என்றார்.
“நீங்கள் பரஞ்சதே வளர சந்தோஷம் ஆன்ட்டி…” என்றவள் அதை சேவ் செய்து கொள்ள, “உன்னை எங்காச்சும் டிராப் பண்ணனுமா மா…” சுந்தரம் கேட்க மறுப்பாய் தலையாட்டியவள் “எவிடே போகனமெந்து அறயாத என்னை எவிடே டிராப் செய்யானா…” என மனதுள் நினைத்துக் கொண்டே “நிங்கள் பொய்க்கோ அங்கிள்… நான் நோக்கிக் கொள்ளாம்…” எனவும், வரோம் மா…” என்ற சுந்தரம் முன்னில் நடக்க அவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே மனசில்லா மனசுடன் சென்றார் சகுந்தலா.
“பாவங்க அந்தப் பொண்ணு… தனியா என்ன பண்ணப் போகுதோ…” சகுந்தலா சொல்ல சுந்தரம் முறைத்தார்.
“யாரு என்னன்னு தெரியாத பொண்ணுகிட்ட நீ எதுக்கு இவ்ளோ பேசிட்டு இருக்க… போன் நம்பர் வேற கொடுக்கிற…” காரை எடுத்துக் கொண்டே அவர் சொல்ல,
“யாரு என்னன்னு தெரியாம தானுங்க அந்தப் பொண்ணு எனக்கு ஓடிவந்து உதவுச்சு… எல்லாத்துலயும் கணக்கா இருந்தா நல்லவங்களக் கூட கண்ணுக்குத் தெரியாது…” கடுப்புடன் கூறிய மனைவியை நோக்கி சுந்தரம் முறைக்க அவர் வாயை மூடிக் கொண்டாலும் மனதுக்குள் ஒரு தவிப்பு அலட்டிக் கொண்டே இருந்தது.
அதற்குள் அவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருக்க வீட்டுக்கு முன்னில் காரை நிறுத்தியவர், “நான் கிளம்பறேன்…” என்று காரைத் திருப்பிக் கொண்டு போய்விட சலிப்புடன் உள்ளே வந்தார் சகுந்தலா.
“இந்த மனுஷனைப் போயி பாசக்காரன்னு நினைச்சேனே… பிஸினஸ், பணம் இதைத்தாண்டி மனுஷங்க மனசைப் பத்தி எப்பதான் யோசிக்கப் போறாரோ…”
“ஹூம்… சுந்தரம்கிற பேரைத் தவிர இவருக்கும் சுந்தர சோழருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லைன்னு ரொம்ப லேட்டா தான புரிஞ்சுகிட்டேன்… சரியான சிடுமூஞ்சி…” தனக்குள் புலம்பிக் கொண்டே மகனின் அறையைத் திறந்து பார்க்க அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
அடுக்களைக்குள் நுழைந்தவர் தனக்கு இட்லியை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு மேசைக்கு வந்தார். ஏனோ சாப்பிட முடியாமல் தொண்டையில் சிக்கியது.
“அந்த வானதி சாப்பிட்டிருப்பாளோ… கள்ளம் கபடமில்லாத அழகான முகம்… அவளைப் போல ஒரு பொண்ணு என் அருள்மொழி வர்மனுக்கு ஜோடியா, அட என்னவொரு பேர் பொருத்தம்… உருவத்துலயும் பொருத்தமா தான் இருப்பாங்க… நடந்தா எவ்ளோ அழகாருக்கும்…” மனதுக்குள் யோசிக்கும்போதே கணவனின் முகம் பத்து தலையுடன் அவளைப் பார்த்து முறைக்க, “ச்சே… மனசுல கூட ஆசைப் பட விடாம இந்தாளு பத்து தலை ராவணன் போல கண்ணை உருட்டிட்டு வந்து நிக்குறாரே…” புலம்பியபடி மொபைலை எடுத்தவர் பாதியில் விட்ட கதை ஒன்றைப்  படித்துக் கொண்டே சாப்பிட்டார்.
காலையிலேயே குழம்பு, பொறியல் மகளுக்கு கொடுத்து விட வேண்டி வைத்து விட்டதால் சாதத்துக்கு அரிசியை ஊற வைத்து அரைக்கீரையுடன் மேசைக்கு வந்தார்.
கை கீரையை ஆய்ந்தாலும் கண்கள் மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்க, “எந்தக் கதை படிக்கலாம்…” என ஆராய்ந்தவர், “சரி, பேஸ்புக்ல செல்வராணி விமர்சனம் பார்த்திட்டு கதையைப் படிப்போம்…” என நினைத்தவர் முகநூலைத் திறந்தார். கை பாட்டுக்கு வேலையைத் தொடர்ந்தது. செல்வராணி என்பவர் அதிக கதைகளையும் படித்து விமர்சனம் செய்யும் சிறந்த விமர்சகி. அவருடைய விமர்சனம் பார்த்து கதை படிக்க பெரிய கூட்டமே இருந்தது. அதில் சகுந்தலாவும் ஒருவர்.

Advertisement