Advertisement

அத்தியாயம் – 29
சாப்பிட்டு முடித்த குந்தவை, “எனக்கு எழுதற வேலை இருக்கு… நீ அண்ணாக்கு தோசை ஊத்திக் கொடுத்திடு… நான் ரூமுக்குப் போறேன்…” என்று நழுவிவிட்டாள்.
அருளிடம் வந்த வானதி, “தோசை ஊத்தட்டுமா…” என்று கேட்க, “ம்ம்…” என்றவன் அவள் பின்னிலேயே அடுக்களைக்கு வந்தான்.
“ப்ச்… இவிடே எந்தினு வந்தது… ஹாலுக்குப் போ… நான் கொண்டு வந்து தராம்…” குந்தவையின் அறையை எட்டிப் பார்த்துக் கொண்டே அவள் தவிப்புடன் மெல்ல சொல்ல அவன் சிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான்.
“ஹேய், எந்தா செய்யன… குந்தவை கண்டால் எந்து விசாரிக்கும்…” என்றவளை சுவரோடு சேர்த்து நிறுத்தி இரண்டு புறமும் கைகளை ஊன்றிக் கொள்ள அவளது இதயத்தின் படபடப்பை விழிகள் சொல்லின.  
அவனது விழிகளில் வழிந்த காதலில் பேச்சை மறந்தவள் ஆவலுடன் அவனை நோக்க அவள் கன்னத்தில் விரலால் கோலமிட கூச்சத்தில் நெளிந்தவள் அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ள அசையாமல் நின்றவன் அவளை இழுத்து  தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“வானு பேபி…” அவள் காதில் உரசிய அவன் இதழ்களின் உச்சரிப்பில் நெகிழ்ந்தாலும் மனதுக்குள் அந்த இதத்தைத் தாண்டிப் பரவிய பயம், “எந்தா இது, ப்ளீஸ் விடு… அனியத்தி காணண்டா…” என்று அவனை விலக முயல அவனது இரும்புக் கரங்கள் மேலும் அவளை இறுக்கிக் கொள்ள சுகமான அவஸ்தையில் தவித்தாள்.
“அவள் கண்டால் என்ன…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “களிக்கல்லே… விடு…” என்று திமிர, “ஓகே, ஒரு உம்மா குடு… உன்னை சும்மா விடறேன்…” என்றான் அவன் வம்பாக.
“அய்யடா, அதொண்ணும் எனிக்கு பற்றில்லா…” அவள் மறுக்க, “அப்ப நான் கொடுக்கறேன்…” என்றவன் அவள் இதழை நோக்கிக் குனிய, “ஹேய் வேண்டா…” என்று இதழ்கள் மறுத்தாலும் எதிர்பார்ப்பில் கண்கள் மூடிக் கொள்ள ஒருவித மோன நிலையில் கண்மூடி தன் கைகளுக்குள் ஓவியமாய் நின்றவளை கண்ணார ரசித்துவிட்டு இதழைத் தவிர்த்து நெற்றியில் முத்தமிட கண்ணைத் திறந்தவளின் விழிகளில் அவன் நிறைந்து நின்றான்.
“கல்லு ரொம்ப சூடாயிருச்சு பாரு…” என்றவன் அவளை விட்டு விலகி நிற்க அவளது விழிகள் சந்தோஷத்தில் கலங்கி இருந்தன.
“நீ என் நெற்றியில் முத்தம் கொடுக்கும்போது எனக்கு என் அப்பா நினைவு வருகிறதென்று…” இதற்கு முன் ஒரு முறை அருள் நெற்றியில் முத்தமிட்டபோது சொல்லியிருந்தாள். அவள் தனது குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணுகிறாள் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
காமத்தின்
கலப்படமில்லா
நேசத்தின் வெளிப்பாடு
நுதல் முத்தம்…
உனக்கு நான்
இருக்கிறேன் என்ற
உள்ளன்பின்
நிலைபாடு…
அவள் அவனையே ஈரம் பளபளக்கும் விழிகளுடன் பார்த்து நிற்க, “வானு, சீக்கிரம் சாப்பிடக் குடு… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றவன் ஹாலுக்கு செல்ல அவள் தோசையை ஊற்றி, கொண்டு போய்க் கொடுக்க சாப்பிட்டு முடித்தான். “வானு மாடிக்கு வா…” என்று சொல்ல, “ஐயோ, ஞான் மாட்டேன்…” என்றவள் குந்தவையின் சாத்தியிருந்த கதவைக் காண்பிக்க, “நான் பார்த்துக்கறேன், வா…” என்றவன் மாடிப் படியேற தயக்கத்துடனே தொடர்ந்தாள் வானதி.
இரவு நேர பனிவாடைக் காற்று தேகத்தை சிலிர்க்க வைக்க வானத்து நிலவு சாந்தமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது. சின்ன நட்சத்திரங்களோ உற்சாகமாய் கண் சிமிட்டி மேகப் போர்வைக்குள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.
“எந்தா, ஸ்டார்ஸ் எண்ணிக் கழிஞ்சோ…” அவனையே பார்த்துக் கொண்டிருந்த வானதி கேட்கவும் திரும்பினான் அருள். “வானம் எவ்வளவு அழகையும் அதிசயங்களையும் உள்ளடக்கி வச்சிருக்கு வானு… எத்தனை பார்த்தாலும் திகட்டவே மாட்டேங்குது…” அவன் சொல்ல சிரித்தாள்.
“ம்ம்.. இதே வானத்தில் தன்னே இடி, மின்னலும் இருக்கி… நல்லதும் கெட்டதும் நம்மள் நோக்குந்த விதத்தில் தன்னே…”
“ம்ம்… சரியா சொன்ன… நம்ம மனசு நல்லா இருக்கும்போது பார்க்குற எல்லாம் அழகா இருக்கு… அதுவே துயரமா இருந்தா பார்க்கறது எல்லாம் சோகமா இருக்கு… நம்ம மனநிலை தான் எல்லாத்துக்கும் காரணம்…”
“ம்ம்… சரி, எந்தா சம்சாரிக்கணம் பரஞ்சது… ஆன்ட்டி வரும் முன்னே எனிக்கு பணி தீர்க்கணம்… சொல்லு…” என்றவளின் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன், “வானு, நம்ம காதல் அம்மா, குந்தவைக்கு தெரிஞ்சிடுச்சு…” என்றதும் அதிர்ந்தவள் கையை இழுத்துக் கொண்டு,
“ஐயோ, என்ன சொல்லறீங்க…” என்று கேட்க, “ஹூம்… உண்மை சொல்லறேங்க…” என்றவன், “பயப்படாத… அவங்க எல்லாம் நமக்கு சப்போர்ட் தான்… தேவ்க்கு கூட நம்ம காதல் தெரிஞ்சிருக்கு போல… அவ்வளவு வெளிப்படையாவா ரெண்டு பேரும் சைட் அடிச்சுக்கறோம்…” என்றான் அருள்.
அவன் முதுகில் செல்லமாய் அடித்தவள், “ப்ச்… விளையாடாம விஷயம் எந்தான்னு பறயு…” என்றாள் வானதி. அவளிடம் குந்தவை சொன்னதை எல்லாம் சொல்லி முடிக்க வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆன்ட்டி, குந்தவைக்கு தெரியுமா… பரஞ்சது சத்யமானோ…”
“ம்ம்… என்டே ஓமனக்குட்டிக்கு இனியும் டவுட் தீரலையா… சத்யம்… சத்யம்… சத்யம் மாத்திரமே சொன்னேன்… சோ, அப்பாவை மட்டும் சரி கட்டினா நம்ம லவ் சக்ஸஸ்… அதுக்கு முன்னாடி என் அண்ணன் லவ்வை சக்ஸஸ் பண்ணனும்…” என்றான் யோசனையுடன்.
“ஓ… ஏட்டன் வெளிநாடு போயதல்லே… அவர்க்கும் லவ் பிராப்ளமா… அன்னைக்கே சோதிக்கணம் விசாரிச்சு… சமயம் கிட்டியில்லா…” என்றாள் வானதி.
“ம்ம்… அவர் லவ்வுக்கு முன்னாடி நாம எல்லாம் தூசி… சாதாரண லவ் இல்லமா, லவ்வுன்னா லவ்வு… அப்படியொரு லவ்வு… அவரைப் பத்தி யோசிக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கும்… இப்படியும் ஒரு பொண்ணை நேசிக்க முடியுமான்னு… ஆனா, உன் மேல லவ் வந்த பின்னால தான் காதலோட பவர் என்னன்னு எனக்கும் புரிஞ்சது…” என்றவனை வியப்புடன் பார்த்தவள்,
“ஹோ… என்டே சேச்சிக்கும் உண்டு, இங்கனே ஒரு பியூட்டிபுல் லவ் ஸ்டோரி… ஏட்டன் பேரேந்தா… எவிடயா உள்ளது…” என்றாள் ஆர்வத்துடன்.
“ஆதித்யன், இப்ப அமெரிக்காவில் இருக்கார்…” என்றதும் அவள் தேகம் சிலிர்க்க காதில் கேட்டது உன்மைதானா என்பது போல் திகைப்புடன் நோக்கியவள்,
“ஆதி சேட்டன், பங்களூரில் நந்தினி சேச்சி… ஆக்சிடன்ட்…” என்று வார்த்தைகளைத் துண்டாக்கி சொல்ல அவள் கைகளை ஆர்வத்துடன் பற்றிக் கொண்டவன், “வானு… நீ என்ன சொல்லற… உனக்கு எப்படித் தெரியும்… நந்தினி உன் அக்காவா… ஓ காட்…” என்றான் நெஞ்சில் கை வைத்து.
பேச்சு வராமல் திகைத்துப் போய் நின்றிருந்த வானதிக்கும் ஒருவித சந்தோஷமும், பயமும் ஒரு சேர மனதுக்குள் வர “ஆதியின் தம்பி தான் அருளா… நானும், சேச்சியும் ஒரே வீட்டுப் பிள்ளைகளையா லவ் பண்ணினோம்… அக்கா எப்பவும் பெருமையா சொல்லுற ஆதியோட அம்மா சகுந்தலா ஆன்ட்டி தானா… சுந்தரம் அங்கிள் தான் அவங்க காதலைப் போல எங்க காதலுக்கும் வில்லனா… கடவுளே… இதுக்கு நான் சந்தோஷப்படணுமா… வருத்தப்படணுமா…” என யோசித்தபடி சிலையாய் நின்றிருந்தாள்.
“வானு, அம்மா சொன்ன போல அண்ணாவையும் நந்தினி அண்ணியையும் எப்படியாச்சும் சேர்த்து வச்சிடணும்… இனியும் அவங்களைப் பிரிச்சு வச்சு தவிக்க விடக் கூடாது… அவங்க காதல் ஜெயிச்சுட்டா கண்டிப்பா நம்ம காதலும் ஜெயிச்சிடும்…” என்று வேறு போக்கில் யோசித்து சொல்லிக் கொண்டிருந்தான் அருள்மொழி வர்மன். “வானு, வா… இதை குந்தவை கிட்ட சொன்னா அவளும் சந்தோஷப்படுவா…” என்றவன் கீழே செல்ல அவளும் தொடர்ந்தாள்.
குந்தவையிடம் சொல்ல அவள் சந்தோஷத்தில் குதித்தாள்.
“என்னால நம்பவே முடியலைண்ணா… வானதி, நந்தினி அண்ணியோட தங்கச்சியா… இவ்ளோ நாள் நமக்குத் தெரியலையே… ரெண்டு அண்ணன்களுக்கும் ஒரே வீட்டுல பொண்ணு எடுத்தா சூப்பரா இருக்கும்… கடவுளே… என் அப்பாவுக்கு நீதான் நல்ல புத்தியைக் கொடுக்கணும்… எல்லாம் நல்லபடியா முடிஞ்சா என் சின்ன அண்ணனுக்கு மொட்டை அடிக்கிறேன்…” என்றவள் கண்ணை சிமிட்ட,
“அடிப்பாவி, அதுக்கு என் தலைல எதுக்கு கை வைக்கற…” என்றான் அவன் அலறிக் கொண்டு.
“பின்ன… சாமியை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சா தான என் வேண்டுதலை நிறைவேத்தி வைக்கும்… உனக்கு உன் காதலை விட, வெட்டினா முளைக்கப் போற முடி பெருசா என்ன… மறுத்துப் பேசாத… தெய்வக் குத்தம் ஆயிடப் போகுது…” என்று அவள் சொல்ல, “சரி, சரி… எல்லாம் நல்லா நடந்தா நானே மொட்டை அடிச்சுக்கறேன்…” என்றான் அருள்.
“ம்ம்… வானதி, நீயும் மலையாள பகவதி கிட்ட வேண்டிக்க… அண்ணனுக்கு நாக்குல இந்த அலகு குத்த வேண்டறதா இருந்தாலும் ஓகே தான்… அண்ணன் சம்மதிக்கும்…” என்று சொல்ல அருள் முழிக்க வானதி சிரித்தாள். “எங்க பகவதிக்கு அந்த மாதிரி வேண்டுதல் எல்லாம் இல்லா… குடும்பத்தோட கோவிலுக்கு வந்து தாலி கொடுக்க வேண்டிக்கறேன்…” என்றாள் வானதி.
“அப்பாடி தப்பிச்சேன்…” என்று அவன் சமாதானமாக பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
இரண்டு கைகள் கூடினாலே
இமயமும் பக்கத்தில்…
பல கைகள் கூடினால்
மலையும் தான்
அசைந்திடாதோ…
மரமும் தான் வீழ்ந்திடாதோ…
மனமிருந்தால் மார்கமுண்டு…

Advertisement