Advertisement

“விக்ரம் வெட்ஸ் சோபியா சிங்” என்ற பெரிய பேனர் மணமக்களின் புன்னகைப் புகைப்படத்தைத் தாங்கி நிற்க கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் அதைச் சுற்றிலும் சிணுங்கி சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது சீரியல் பல்புகள்.
அங்கங்கே அழகான விளக்குகள் பளிச்சிட மண்டபத்தின் முன் அலங்காரம் பிரம்மிக்க வைத்தது. அதைப் பார்த்துக் கொண்டே மணமக்களின் புகைப்பட பேனரை கவனித்த சுந்தரத்தின் முகம் யோசனையில் சுருங்கியது.
“வாங்க சுந்தரம், வாங்கம்மா, நல்லாருக்கீங்களா…” ரிசப்ஷன் ஹாலில் முன்னிலேயே நின்று வரவேற்றுக் கொண்டிருந்தனர் மணமகனின் பெற்றோர். அவர்களுக்கு வணக்கம் சொல்லி புன்னகையைக் கொடுத்து திரும்ப நலம் விசாரித்துவிட்டு இருவரும் உள்ளே சென்றனர். அங்கங்கே தலையில் தொப்பி வைத்து சிங் முகங்கள் தெரிய ஹிந்தியும், பளபள டிரஸ் கூட்டமும் பஞ்சாபி உடைப் பெண்களும் கண்ணில் தென்பட்டது.
மேடையில் மணமக்கள் புன்னகையுடன் தெரிய அவர்களை தங்கள் புகைப்படக்கலையின் மாடலாக்க முயன்று கொண்டிருந்தார் வீடியோகிராபர். பல போஸ்களில் நிற்க வைத்து கிளிக்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒவ்வொருவராய் வரத் தொடங்கியிருந்தனர்.
பரிச்சய முகங்களிடம் சுந்தரம் கையசைத்து புன்னகைத்துக் கொண்டே நலம் விசாரித்து நகர, கணவரைத் தொடர்ந்தார் சகுந்தலா. பார்வையை சுழற்ற ராஜ் மோகன் யாருடனோ அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்த தேவிகா இவரைக் கண்டதும் உற்சாகமாய் கையசைத்தார்.
“என்னங்க, அண்ணனும், அண்ணியும் அங்க இருக்காங்க…” சொல்லிவிட்டு அவர்களிடம் நகர சுந்தரமும் புன்னகையுடன்  நண்பனிடம் வந்தார்.
“அப்புறம் சார், நண்பர்கள் ரெண்டு பேரும் சம்பந்தி ஆகப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்… என்னோட வாழ்த்துகள்… பிசினஸ் எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு…” கேட்ட தொழில் நண்பரிடம் பதில் சொல்லிக் கொண்டே அருகே அமர்ந்தார் சுந்தரம்.
“வாம்மா சகுந்தலா, உக்காரு…” என்ற ராஜ்மோகன் மனைவியின் அருகில் அவரை அமர்த்திவிட்டு சுந்தரத்தின் அருகில் அமர்ந்தார். அதற்குள் அவர்களைக் கண்டு வேறு ஒரு தொழில் புள்ளியும் அருகில் வர நல விசாரிப்போடு தொழில் பற்றியும் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
“அடுத்து உங்க வீட்டுல தான் கல்யாண சாப்பாடு போல… கல்யாண வேலை எல்லாம் தொடங்கியாச்சா…” என்றவரிடம் புன்னகைத்தவர், “தொடங்கிட்டே இருக்கோம்…” என்றார்.
“ம்ம்… மூத்த மகன் வெளிநாட்டுல இருந்து வந்தாச்சா… அவருக்கு எப்ப கல்யாணம் பண்ணப் போறீங்க…” அவர் கேட்கவும் சட்டென்று முகம் மாறினாலும் காட்டிக் கொள்ளாமல், “ம்ம்… பண்ணனும்…” என்று அமைதியானார்.
“ஹாஹா… சீக்கிரம் பண்ணிடுங்க சார்… அப்புறம் லேட் பண்ணறீங்கன்னு அவரே வெளிநாட்டுப் பொண்ணைக் கூட்டிட்டு வந்திடப் போறார்…” என்று கிண்டலாய் சொல்லவும் சுந்தரத்தின் முகம் கோபத்தில் சிவக்க, “என் பசங்களை நான் அப்படி வளர்க்கலை…” என்றார்.
“ஹூம்… பெத்தவங்க எல்லாரும் இப்படி தான் நம்பிட்டு இருக்கோம் சார்… ஆனா, இந்தக் காலத்துப் பிள்ளைங்க பெத்தவங்களுக்கு வரன் பாக்குற சிரமத்தைக் கூடக் கொடுக்கிறதில்லை… இந்தக் கல்யாணமே எடுத்துக்கோங்க… அந்த விக்ரம் டாக்டர் படிப்பை முடிச்சிட்டு வடநாட்டுக்கு ப்ராக்டிஸ் பண்ணப் போன இடத்துல சிங்கு பொண்ணை லவ் பண்ணி அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல இவங்க ஒத்துக்கலைன்னு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கூட்டிட்டு வந்துட்டான்… வேற வழி இல்லாம இவங்களும் ஏத்துக்க வேண்டியதாப் போயிருச்சு…”
அவங்க ஊரு ஸ்டைல்ல கல்யாணம் நம்ம ஊருல ரிசப்ஷன் வச்சு இவங்களே மேரேஜ் பண்ண போல காட்டிக்குறாங்க… இப்ப உள்ள புள்ளைங்களை நம்ப முடியாது சார்…” அவர் சொல்லவும் சுந்தரத்தின் முகம் இறுகிக் கிடந்தது.
“ம்ம்… சரியா சொன்னீங்க ரவீந்தர்… நம்ம காலம் மாதிரி இப்ப இல்ல… பசங்களோட விருப்பத்தைப் புரிஞ்சுகிட்டு அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானிக்கட்டும்னு விடறது தான் நமக்கும் மரியாதை… என் பையனும் இப்படிதான் ஒரு பொண்ணை லவ் பண்ணறேன்னு வந்து நின்னான்… அந்தப் பொண்ணு வீட்ல பேசி நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்… சொக்கத் தங்கம் போல மருமக… நாங்களே தேடி இருந்தாலும் இப்படி ஒரு பொண்ணை எங்க பையனுக்கு பார்த்திருப்பமான்னு சொல்ல முடியாது… காலத்துக்கு தகுந்த போல நாமளும் அப்டேட் ஆகிக்கணும்…”
“என்ன ராஜ், நான் சொல்லறது சரிதானே… உங்க பையன் லவ் மேரேஜா… இல்ல, நீங்களே பிக்ஸ் பண்ணிட்டீங்களா…” என்றதும் சுந்தரம் சரேலென்று நண்பனைப் பார்த்தார்.
“எங்களுக்குப் பிடிச்ச பொண்ணை பையனுக்கும் பிடிச்சுது… கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணிட்டுப் போகட்டுமே… என்ன இப்ப…” என்று அவர் புன்னகைக்க சுந்தரம் புன்னகையுடன் நண்பனைப் பார்த்தார்.
“லவ் மேரேஜோ, அரேஞ்ச்டு மேரேஜோ… வாழப் போறவங்க விருப்பம் ரொம்ப முக்கியம்னு நினைக்குறவன் நான்… அந்தக் காலம் போல இப்பவும் காதலை கட்டுப்பெட்டித் தனம்னு விலகி நிக்க முடியாது… அன்றைய சூழ்நிலை, சந்தர்ப்பம் வேற… இப்ப ஆணும், பெண்ணும் எல்லா இடத்துலயும் சமமா வேலை செய்யறாங்க, பழகறாங்க… ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிறாங்க… பிடிச்சுப் போனா லவ், மேரேஜ்னு அடுத்த ஸ்டேஜுக்கு யோசிக்கறாங்க… நாமளும் கொஞ்சம் பெருந்தன்மையா அவங்க வாழ்க்கையை அவங்களை வாழ விட்டு வழி நடத்தணும்… இதான் என் கருத்து… காதல் ஒண்ணும் தப்பில்லை… எது காதல்ங்கற தெளிவை நம்ம பிள்ளைகளுக்கு நாம உணர்த்திட்டாப் போதும்… அவங்க சாய்ஸ் நிச்சயம் தப்பாகாது…”
“யூ ஆர் ரைட் ராஜ்… நாங்க என் பையன் காதலை எதிர்க்காம ஏத்துகிட்டதால அவனுக்கும் எங்க மேல பிரியம் அதிகம்… மருமகப் பொண்ணும் எங்களை சொந்த அப்பா, அம்மா போலப் பார்த்துக்கறா… இதைவிட நிறைவு வாழ்க்கைல என்ன இருக்க முடியும், சொல்லுங்க…”
“ம்ம்… நீங்க சொல்லறதைப் பார்த்தா நானும் என் பொண்ணு காதலுக்கு ஓகே சொல்லிடலாம் போலத் தோணுதே…” அந்த ரவீந்தர் சொல்லவும் சிரித்தவர், “தப்பே இல்லை… பையன் நல்லவனா பாருங்க… பிடிச்சிருந்தா சந்தோஷமா ஓகே சொல்லுங்க… உங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு… அவ சந்தோசம் தானே முக்கியம்…” என்றார் ராஜ்.
அவர்கள் பேசுவது எதுவும் பிடிக்காததால் எரிச்சலை அடக்கிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தார் சுந்தரம். அது ராஜ்க்குப் புரிந்தாலும் வேண்டுமென்றே நண்பன் முன்னில் காதலுக்கு சப்போர்ட் செய்து பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலாவின் கண்களும் கணவர் முகத்திலேயே இருந்தது.
அவரது மனநிலையைப் புரிந்து கொண்ட தேவிகா சகுந்தலாவின் கையில் ஆறுதலாய் கை வைத்தார்.
“உன் மனசுல என்ன ஓடுதுன்னு புரியுது சகுந்தலா… கவலைப்படாத… சீக்கிரமே எல்லாம் சரி பண்ணுவோம்…” என்று சொல்லவும் கண்ணில் திரண்ட கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டார்.
“சரியானா நல்லா தான் இருக்கும் அண்ணி… ஆனா இந்த விஷயத்துல இவ்வளவு பிடிவாதமா இருக்கறவரை எப்படிக் கரைக்கறதுன்னு தான் எனக்குப் புரியலை…”
“நீ அந்தக் கவலையை விடு… உன் மாப்பிள்ளையும் என் மருமகளும் அதைப் பார்த்துப்பாங்க… நாம அவங்களுக்குத் துணையா நின்னா போதும்…” என்றார் புன்னகையுடன்.  அவரது வார்த்தைகள் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.
“நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு சமையலுக்கு யாரை புக் பண்ணலாம் யோசிச்சியா…” அவர் கேட்க பேச்சு மாறியது.
அருள் வானதியை அழைப்பதற்காய் பைக்கை எடுத்து வெளியே வரவும் அதற்குள் அவளே வந்துவிட முன்னில் நின்றவனைக் கண்டதும் புன்னகைத்தாள்.
“புறத்து கிளம்பியாச்சா…”
“உன்னைக் கூப்பிட தான் கிளம்பினேன்… அதுக்குள்ள நீயே வந்துட்ட…”
“ஓ… நேரத்தே வந்தாச்சா…” என்றவள் களைப்புடன் வீட்டுக்குள் நுழைய அவனும் தொடர்ந்தான். அவர்களைக் கண்ட குந்தவை, “ஆஹான், இப்பதானே அண்ணா கிளம்பின… அதுக்குள்ள வானதியோட நிக்கற…” என்றதும், அவளை நோக்கிப் புன்னகைத்தாள் வானதி.
“எங்கே ஆன்ட்டி… பங்க்ஷன் போயாச்சா…” என்றவளிடம், “ம்ம்… நீ பிரஷ் ஆகிட்டு வா… காபி போடட்டுமா…” குந்தவை கேட்க, “நல்ல பசி… சாப்பிட்டுக்கறேன்…” என, “ஊத்தாப்பம் போதும்னா நானே சுட்டு வைக்கறேன்…” என்றாள் குந்தவை.
“எனக்கு ஓகே தான்… சுட்டு வை…” என்றவள் அருளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.
“அண்ணா, நாம பேசினதை இப்ப வானதிகிட்ட சொல்லாத… அப்பாவும், அம்மாவும் வர்றதுக்கு எப்படியும் 9 மணி ஆகிடும்… அவ குளிச்சு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்… அப்புறம் ப்ரீயாப் பேசுங்க…” என்ற தங்கையை அவன் சந்தோஷத்துடன் பார்க்க அவள் சிரித்தாள். அருள் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான்.
குளித்து வந்த வானதிக்கு சூடான ஊத்தாப்பம், இரண்டு சட்னிகளுடன் குந்தவை நீட்ட வேகமாய் சாப்பிட்டாள். “உச்சைக்கு சரிக்கும் சாப்பிடலை… நல்ல விசப்பு…” என்றவள் சாப்பிட்டு முடிப்பதற்குள் குந்தவைக்கான தோசையும் ரெடியாகி விட அவளும் சாப்பிடத் தொடங்கினாள்.

Advertisement