Advertisement

குனிந்தபடி தட்டில் பரிமாறியவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட அருள், “என்ன வானதி… உடம்புக்கு எதுவும் சரியில்லையா… சோர்வா இருக்க…” கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க பதறியவள் சட்டென்று கையைத் தட்டி விட அவன் அதிர்ந்து போனான்.
“உனக்கு என்னாச்சு வானதி… பீவர் இருக்கான்னு தானே பார்த்தேன்… எதுக்கு இவ்ளோ கோபம்…” அவன் கேட்க அவள் முறைப்புடன் நின்றாலும் கண்ணில் நீர் நிறைந்தது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லா… உண்டெங்கிலும் செத்து ஒந்தும் போவில்லா…” என்று சொல்ல புரியாமல் பார்த்தான்.
“வானு… எதுக்கு இப்படிப் பேசற… நானும் சில நாளா கவனிக்கறேன்… நீ முன்னப் போல என் கிட்ட சரியாப் பேச மாட்டேங்கற… நான் பேச வந்தாலும் விலகிப் போற… நான் எதுவும் தப்புப் பண்ணிட்டேனா…” புரியாமல் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனைப் பார்க்கவே அவளுக்கு சங்கடமாய் இருந்தது.
முன்தினம் இரவு குந்தவை அவளிடம் தங்களைப் பற்றிப் பேசியதை அவனுக்கு சொல்லாமல் புரியாது என்று தோன்றவே “நீங்க சாப்பிட்டு கிளம்புங்க… நான் பின்ன பறயாம்… ஆன்ட்டி வரும்…” என்றவள் அடுக்களைக்கு சென்று விட யோசித்தபடி அமர்ந்திருந்தான் அருள்.
வானதிக்கு தன் மீதே கோபமாய் வந்தது. அருளை வேண்டாம் என்று வெறுக்கவும் முடியவில்லை. கிடைக்காத விஷயத்துக்கு ஆசைப்படக் கூடாதென்ற மூளையின் எச்சரிக்கையை ஏற்கவும் முடியவில்லை. மனம் இரண்டும் கெட்டானாய் தவிக்க, அருள் வாய்விட்டு சொல்லா விட்டாலும் அவனது பார்வையும், அக்கறையும் தன் மீதுள்ள பிடித்தத்தை உணர்த்தினாலும் எதையும் வெளிப்படையாய் பேசாததால் மூச்சு முட்டுவது போல் தோன்றியது.
“எங்களுக்குள்ளேயே இன்னும் தீர்மானமாக காதலை அதற்குள் இந்த தேவ் எப்படி மோப்பம் பிடித்தானோ… குந்தவையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நான் திணறிட்டு இருக்கேன்… இவன் என்னடான்னா எனக்கு பீவரான்னு தொட்டுப் பார்க்கிறானாம்…” கடுப்புடன் தனக்குள் சொல்லிக் கொண்டவள், “இப்படி மனசுக்குள்ளேயே தவிச்சிட்டு இருக்கறதுக்கு பேசாம ஹாஸ்டலுக்கே போயிடலாமா… குந்தவை கல்யாணத்துக்கு மட்டும் வந்துக்க வேண்டியது தான்…” என முடிவுக்கு வந்தாள்.
கணவரை அனுப்பிவிட்டு வந்த சகுந்தலா, மகன் தனியே அமர்ந்து சாப்பிடாமல் யோசனையுடன் இருப்பதைக் கண்டவர் அருகில் வந்து அமர்ந்தார்.
“அருளு… என்னப்பா, சாப்பிடாம அப்படியே வச்சிருக்க…” என்றதும் வேகமாய் சாப்பிடத் தொடங்கினான்.
“டேய் பார்த்துடா, அதுக்குன்னு ஒண்ணாத் திணிக்காத.. விக்கிக்கப் போகுது…” சகுந்தலா சொல்லும்போதே அவனுக்குத் தொண்டையில் விக்கிக் கொள்ள வானதி வேகமாய் தண்ணி கிளாசை எடுத்து அவனிடம் நீட்டி    தலையில் தட்டினாள்.
“மெல்ல சாப்பிடலாம்ல…” என்றவளை கண்ணில் நிறைந்த நீருடன் நோக்க அமைதியாய் விலகி நின்றாள்.
நடப்பதை கவனிக்காதது போல் கவனித்த சகுந்தலா, “மெதுவா சாப்பிடுப்பா… வாம்மா வானதி… நாமளும் சாப்பிட்டிருவோம்…” என்று சொல்ல அவளும் அமர்ந்தாள்.
“ஆன்ட்டி… நான் வெளிய போயிட்டு வராம்… அங்கிள் பரஞ்ச போல ஹாஸ்டல் நோக்கி வைக்கணம்… ஜெயந்தி டாக்டர் வந்ததும் மாறால்லோ…”
“என்னமா, யாருக்கு ஹாஸ்டல்… ஜெயந்தி டாக்டர் எப்ப வராங்களாம்…” என்றான் அருள் புரியாமல். விஷயத்தை சகுந்தலா சொல்லவும் அவன் முகம் சுருங்கிப் போனது. வானதியை மனம் எப்போது ஏற்றுக் கொண்டதோ அது முதல் அவளையும் வீட்டில் ஒருத்தியாய் கண்டிருந்தான். அவள் மீது ஈடுபாடு கூடவே மனம் தனக்குள் அவளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்க இப்போது அவள் ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டுமென்றதும் சுணங்கியது.
“அம்மா, ஹாஸ்டல் எல்லாம் சரிவருமா, ஜெயந்தி டாக்டர் கிட்ட நாம சொல்லிக்கலாம்… இங்கயே இருக்கட்டுமே…”
வானதியை இங்கே தங்க வைக்கலாம் என்று முதலில் சொன்னபோது வேண்டாம் என்று குதித்தவன் இப்போது இப்படி சொல்வதைக் கேட்டு அவருக்கு சிரிப்பு வந்தது.
“இல்ல ஆன்ட்டி, எப்பவா இருந்தாலும் நான் ஹாஸ்டல் போகண்டே… இப்ப தன்னே போயிக்கறேன்…” அவனை மறுத்து வானதி சொல்லவும் முறைத்தான் அருள்.
“போதும் மா…” என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சாப்பிடாமல் எழுந்து செல்ல, “டேய்… அதுக்கு ஏண்டா பாதில எழுந்திருச்சுப் போற…” எனவும், அவன் பதில் பேசாமல் கை கழுவி மாடிக்கு செல்ல வானதிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
“அட, நீ ஏன்மா கண் கலங்கற… அவன் இப்படிதான்… முதல்ல வேண்டாம்னு சொல்லுவான்… அப்புறம், மனசுக்குப் பிடிச்சுட்டா விட்டுக் கொடுக்க மாட்டான்… நீ சாப்பிடு…” என்றதும் எப்படியோ விழுங்கி முடித்து எழுந்தாள்.
“அவனும் உன்னை இந்த வீட்டுல ஒருத்தியா ஏத்துகிட்டான்… அதான் போறேன்னு சொன்னதும் கோபம் வந்திருச்சு… குந்தவை தான் உன்னை கல்யாணம் வரைக்கும் எங்கயும் போக விட மாட்டேன்னு சொல்லி இருக்காளே… அப்புறம் எதுக்கு இப்ப நீ ஹாஸ்டல் எல்லாம் பார்க்கணும்… வேண்டாம் மா… இங்கயே இரு… உன்னை வேற எங்க அனுப்பவும் எனக்கும் மனசில்லை… அவனுக்கு ஒரு காபி போட்டு கொண்டு போயி கொடுத்துட்டு நான் எங்கயும் போகலைன்னு சொல்லிட்டு வா… அப்பதான் சரியாவான்… டயர்டா இருக்கு… நான் கொஞ்சம் படுக்கறேன்…” என்றார்.
“டாப்லட் போட்டுட்டு படுங்க ஆன்ட்டி…” என்றவள் மாத்திரையை எடுத்து நீட்ட புன்னகைத்துக் கொண்டவர் அதை விழுங்கி விட்டு அறைக்கு எழுந்து சென்றார்.
“ஹோ, எந்தொரு தேஷ்யம்… ஆன்ட்டி எந்து விசாரிக்கும்…” என நினைத்தபடி காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்ல அருள் கட்டிலில் படுத்திருந்தான்.
திறந்திருந்த கதவில் மெல்லத் தட்ட முகத்தின் மீதிருந்த கையை விலக்கிப் பார்த்தவன் கோபமாய் “என்ன…” என்றான்.
“காபி…” அவள் தயக்கத்துடன் சொல்ல, “அங்க வச்சிரு…” என்றதும் உள்ளே வந்து மேசை மீது வைத்தவள், அவன் அப்படியே கிடப்பதைப் பார்த்ததும், “ப்ச்… இப்ப நிங்கள்க்கு எந்தா பிரஸ்னம்… எனிச்சு காபி குடிக்கு…” என்றதும் எழுந்து அமர்ந்தவன், “நீ யாரு…” என்றதும் திகைத்தாள்.
“சொல்லு, நீ யாரு… நீ சொன்னதும் நான் குடிக்கணுமா…”
“ஆஹா,, நான் யாருன்னு அரஞ்சில்லெங்கில் எந்தினு என்னை ஹாஸ்டல் போக வேண்டா சொல்லறது…”
“தப்புதான்… நான் யாரு, உன்னைப் போக வேண்டாம்னு சொல்ல எனக்கென்ன உரிமை இருக்கு… உனக்கு நான் யாரோ தான…” என்றதும் அவளுக்கு கோபம் வந்தது.
“நான் அப்படி ஒண்ணும் பரஞ்சில்லா…”
“பரஞ்சில்லே… பின்ன நான் போகவேண்டாம்னு சொல்லியும் ஹாஸ்டல் போறேன்னு சொல்லற… அப்ப நான் உனக்கு யாரோ தான…” அவன் மீண்டும் கேட்கவும் கண்ணில் முணுக்கென்று கண்ணீர் துளிர்க்க சட்டென்று அவன் வாயைப் பொத்தினாள் வானதி.
“ப்ளீஸ், அங்கனே பறயல்லே… இன்னைக்கு போகலைனாலும் நாளைக்கு போகண்டே… அது கொண்டு பரஞ்சதா…”
தன் உதட்டின் மீதிருந்த அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவனின் மனம் அவளது தவிப்பான செய்கையில் நெகிழ்ந்திருந்தது.
முகம் சிவக்க கண்களில் நீர் தேங்கி நிற்க குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியவன், “வானதி… உன்னால என்னை விட்டுப் போக முடியுமா…” என்று அவள் கண்களுக்குள் ஊடுருவிக் கேட்க அவன் விழிகளில் தேங்கி வழிந்த காதலில் தனது உறுதியைத் தொலைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு விசும்பினாள்.
“எ..என்னால வேற என்ன பண்ண முடியும்… ஜீவிக்கான் வழி தேடி வந்த இடத்துல வழி காட்டிய வீட்டுக்கு துரோகம் செய்ய முடியுமா… நான் ஒரு கதி இல்லாதவள் தானே…” அவனை அணைத்துக் கொண்டு கரைந்தவளின் முதுகில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான் அருள். அவன் மனதில் அந்த நேரத்தில் தன் தந்தையின் எதிர்ப்பும் குடும்பமும் எல்லாம் மறந்திருக்க வானதியின் கண்ணீரும் காதலும் மட்டுமே மனதில் நிறைந்திருந்தது.
“வானு… மனசுக்குப் பிடிக்க கதி தேவையில்லை… இத்தனை நாளா மனசுக்குள்ளே வச்சு தவிச்சிட்டு இருந்தேன்… இனியும் என்னால என்னை மறைக்க முடியல… உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சும் என் காதலை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது… லவ் யூ வானு… லவ் யூ…” உணர்ச்சி வேகத்தில் அவள் காதுகளை உரசிய அவன் வார்த்தைகள் அவளது மனதை உடைத்தது.
“நானும் லவ் யூ அருள்… ஞானும் நின்னே பிரேமிக்குந்து…” என்றவள் அவன் இதயத்தில் ஒட்டிக் கொண்டாள்.
வானுக்குள் மேகமாய்
மறைத்திட்ட காதலை
எத்தனை நாள்
ஒளித்திட்டாலும் சிறு
பெண்மையின் உருகலில்
கரைந்து பொழிவதை
நிறுத்திட முடியாது…

Advertisement