Advertisement

அத்தியாயம் – 27
காலையில் உற்சாகத்துடன் கல்லூரிக்குக் கிளம்பிய குந்தவை சாப்பிட அமரவும் அன்னை ஏதோ யோசனையாய் இருப்பதைக் கண்டு விசாரித்தாள்.
“அம்மா, காலைலயே ரொம்ப யோசனைல இருக்கற போல இருக்கு… நைட்டு படிச்ச கதை எதையும் யோசிச்சிட்டு இருக்கீங்களா என்ன…” கேட்டுக் கொண்டே அன்னை செய்திருந்த கிச்சடியை சட்னியுடன் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
“போடி, உனக்கு எப்பவும் கிண்டல் தான்… ரெண்டு நாளா புக்கே தொடலை… வேலையே சரியாருக்கு… நேரமே கிடைக்க மாட்டேங்குது…” புலம்பலாய் சொன்னவர்,
“நான் அதை யோசிக்கல… நம்ம ஜெயந்தி டாக்டர் கொஞ்சம் முன்னாடி கால் பண்ணாங்க…” என்றதும் குந்தவையின் முகத்திலும் யோசனை தெரிந்தது.
“என்னவாம் மா… எப்ப வர்றாங்களாம்… அவங்க வந்தா வானதி அவங்க கிளினிக் போயிருவாளா…”
“ம்ம்… அவங்க ரெண்டு நாள்ல வந்திருவாங்களாம்… வானதி இங்கே இருக்கறதைப் பத்தி சொன்னேன்… ரொம்ப சந்தோஷப்பட்டாங்க… கிளினிக் அப்படியே குளோஸ் பண்ணிட்டு போனதால நர்ஸ் எல்லாம் வேற இடத்துல ஜாயின் பண்ணிருப்பாங்க… கையில ஒரு நர்ஸ் இருக்குறது ரொம்ப சந்தோஷம் தான்… வானதி என் கிளினிக் வரட்டும்… ஹாஸ்டல் பீஸ் எல்லாம் நானே பே பண்ணிக்கறேன்னு சொன்னாங்க… அதான் யோசிச்சேன்…”
“ஓ… ஏன்மா, வானதி நம்ம வீட்லயே தங்கிக்கட்டுமே… எதுக்கு ஹாஸ்டல்…” என்றாள் குந்தவை.
“நாம சொல்லலாம்… உன் அப்பா சம்மதிப்பாரா… ஏதோ, என்னைப் பார்த்துக்குறதுக்கு வேண்டி இங்க இருக்க சம்மதிச்சார்… இப்ப வேற இடத்துல வேலைக்குப் போயிட்டு இங்க இருக்க எப்படி சம்மதிப்பார்…” என்றார் கவலையுடன்.
“ம்ம்… ஆனா வானதி இல்லேன்னா போரிங்கா இருக்கும் மா… அவளும் நம்ம வீட்ல ஒருத்தி மாதிரி பழகிட்டா…”
“ஆமாடி, நம்மளோட இருந்து பழகிட்டு வெளிய அனுப்பினா கஷ்டப் படுவாளேன்னு கவலையா இருக்கு…”
“அம்மா, வானதி எங்கே…” என்றாள் குந்தவை.
“அவ மாடில துணி காயப் போடப் போயிருக்கா… அவகிட்ட இன்னும் சொல்லலை…”
“ம்ம்… அவளைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன மா…”
“இப்ப எதுக்கு இதைக் கேக்கற…”
“சொல்லுங்கம்மா…” என்றவள் சட்னியை மீண்டும் தட்டில் ஊற்றிக் கொண்டாள்.
“அவளைப் பத்தி என்ன சொல்லறது… ரொம்ப நல்ல பொண்ணு… எல்லார் கிட்டயும் அன்பா, அக்கறையா, அனுசரிச்சு நடந்துக்குவா… குடும்பக் கஷ்டம் புரிஞ்சு நடந்துக்கற பொண்ணு… மொத்தத்துல உன்னை விட அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்… போதுமா…” அன்னை இறுதியில் சொன்னதைக் கேட்டு முறைத்தாள் குந்தவை.
“என்ன முறைக்கற… நீதான் நான் எதை செய்தாலும் நொட்டை சொல்லுவ… அவ எதுவும் சொல்ல மாட்டா… அப்ப அவளைப் பிடிக்கறது தானே நியாயம்…” என்றார் சிரிப்புடன்.
“ஓஹோ, அப்படின்னா வானதியை உங்க சின்ன மகனுக்கு கட்டி வச்சி மருமகளா ஆக்கிருங்க… அப்ப அவ எங்கேயும் போக வேண்டாம்ல…” என்ற மகளைத் திகைப்புடன் நோக்கினார் அன்னை.
“நீ என்னடி சொல்லற… உன் அப்பா காதுல விழப் போகுது… விளையாடாத…” என்றார் சகுந்தலா.
“நான் விளையாடலை மா… அருள் அண்ணாக்கும் அவ மேல ஒரு அபிப்ராயம் இருக்கும் போலருக்கு… அவளுக்கும் அண்ணாவைப் பிடிச்சிருக்கு… ஆனா, ரெண்டு பேரும் எதுவும் சொல்லிகிட்ட போலத் தெரியலை…” மகள் சொல்லவும் அவர் முகம் மலர்ந்து பின்னர் கவலையானது.
“என்னமா, வானதியை மனசுக்குப் பிடிச்சாலும் மருமகளா ஏத்துக்கப் பிடிக்கலையா…” மகள் கேட்கவும் நிமிர்ந்தார்.
“நாம ஆசைப்பட்டா ஆச்சா… உன் அப்பா இன்னும் பெரியவன் கல்யாணத்துக்கே ஒத்துக்கலையே… அதெல்லாம் சரிப்பட்டு வராது… ஸ்டேடஸ், குலம், கோத்ரம்னு பிடிச்சுக்குவார்… என்னோட முதல் கவலை எப்படியாச்சும் ஆதிக்கு கல்யாணத்தைப் பண்ணிடணும்னு தான்… அதுக்கு அவர் சம்மதிச்சுட்டா இதுக்கு சம்மதம் வாங்குறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை… முதல்ல அவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாம இதைப் பத்திப் பேசறது தப்பு… அவங்க அப்படி எதுவும் எங்க மனசுல இல்லேன்னு சொல்லிட்டா என்ன பண்ணறது… முதல்ல அவங்க என்ன நினைக்கறாங்கன்னு தெரியட்டும்… அப்புறம் பார்க்கலாம்…” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
சரியாய் சுந்தரம் புறப்பட்டு வரவும் மகளுக்கு கண்ணால் ஜாடை காட்டிவிட்டு கணவருக்கு தட்டை வைத்தார்.
“ஏன், இன்னைக்கு இட்லி இல்லியா… கிச்சடி பண்ணிருக்க…” என்றவரிடம், “நேத்து நிறைய வேலை இருந்துச்சு… மாவு அரைக்க முடியலிங்க…” என்றவர், “வருஷம் முழுக்க இட்லி சாப்பிட்டாலும் இந்த மனுஷனுக்கு அலுக்கவே செய்யாது போலருக்கு…” என மனதில் நினைத்தபடியே பரிமாறினார்.
“குந்தவை, இன்னைக்கு ஸ்கூட்டில காலேஜ் போறியா… மெதுவாப் போ… எனக்கு பொண்ணுங்க டூவீலர் ஓட்டுறதே பிடிக்காது… பொண்ணுகளுக்கு கார்தான் சரி… என்ன பண்ணறது… மாப்பிள்ளை இதை வாங்கிக் கொடுத்துட்டார்… வேண்டாம்னு சொன்னா அவருக்கு வருத்தமாப் போயிடும்… ஜாக்கிரதையா போயிட்டு வா… லைசன்ஸ் எடுத்து வச்சுகிட்ட தானே…” என்றார் மகளிடம்.
“ம்ம் வச்சிருக்கேன் ப்பா… நான் பத்திரமா போயிட்டு வந்துக்கறேன்… பயப்படாதிங்கப்பா…” என்றாள்.
காலி பக்கெட்டுடன் வானதி கீழே வர அவளைக் கண்டவர், “வானதி, ஜெயந்தி டாக்டர் போன் பண்ணினாங்க… ரெண்டு நாள்ல இங்க வந்திருவாங்களாம்… உனை ஹாஸ்டல் பார்த்துக்க சொல்லி இருக்காங்க… அவங்களே அதுக்கு பே பண்ணிடுவாங்களாம்… நாங்களும் உன்னைப் பத்தி நல்ல விதமா சொல்லி இருக்கோம்… உனக்கு சந்தோஷம் தானே…” என்றதும் அவள் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி தெரிந்தது.
“ம்ம்… சரி அங்கிள்…” என்றவள் எதுவும் பேசாமல் அறைக்கு சென்றுவிட அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்துக் கொண்டனர்.
“அப்பா, வானதி ஹாஸ்டலுக்கு எல்லாம் போக வேண்டாம்… இங்கயே இருக்கட்டுமே… இனி உங்களுக்கு கல்யாண வேலை எல்லாம் இருக்கும்… பிசியாகிடுவீங்க… அம்மாவும் வேலைல தன்னை சரியா கவனிச்சுக்க மாட்டாங்க… வானதி இங்க இருந்தா துணையா இருக்கும்ல… என் மேரேஜ் முடியுற வரைக்குமாச்சும் இங்க இருக்கட்டும் பா…” என்ற மகளை யோசனையுடன் பார்த்தார் சுந்தரம்.
“நீ சொல்லுறதும் சரியா தான் இருக்கு… ஆனா ஜெயந்தி டாக்டர் இவளை கிளினிக் வர சொல்லும்போது நாம என்ன பண்ண முடியும்… அனுப்பித்தானே ஆகணும்…”
“ப்ளீஸ் அப்பா, என் கல்யாணம் முடியுற வரைக்கும் அவளை அனுப்ப முடியாதுன்னு நீங்க சொல்லிடுங்க… அவங்க வேற நர்ஸ் பாத்துகிட்டும்…” மகள் கெஞ்சலுடன் சொல்ல, இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் முடிந்து அவள் வேறு வீட்டுக்கு செல்லப் போகும் வருத்தமோ, தன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாமல் கல்யாணத்துக்கு சம்மதித்ததின் சந்தோஷமோ அவரை சம்மதிக்க வைத்தது.
“சரி, உன் இஷ்டம் போல இங்கயே இருக்கட்டும்… டாக்டர் கிட்ட நான் சொல்லிக்கறேன்…” என்றவரிடம், “தேங்க் யூ அப்பா…” என்று சந்தோஷத்துடன் சொல்லி சென்றாள் மகள்.
சரியான நேரத்தில் நேக்காக மகள் தந்தையிடம் கேட்டு சம்மதிக்க வைத்ததை நினைத்து சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டார் சகுந்தலா.
“என்ன சகு சிரிக்கற… இன்னும் மூணு மாசம் தானே… இருந்துட்டுப் போகட்டுமே…” என்றார் மனைவியிடம்.
“அவ வானதி கூட பிரண்டு போல நல்லாப் பழகிட்டா… இப்ப கல்யாண நேரத்தில் அவ கிளம்பினா மனசுக்கு வருத்தமா தான் இருக்கும்… நீங்க சம்மதிச்சது சரிதாங்க… என்றார்.
குந்தவை அறைக்கு வர கட்டிலில் யோசனையோடு அமர்ந்திருந்தாள் வானதி.
“என்ன வானதி, பயங்கர யோசனை போலருக்கு…”
“ஒ..ஒண்ணும் இல்ல… ஹாஸ்டல் பார்க்கணம்… நானும் நின்ட கூட வரட்டே…” என்றாள்.
“அதெல்லாம் நீ எங்கயும் போக வேண்டாம்… இங்கயே இரு… அப்பாகிட்ட நான் பேசிட்டேன்…” என்றாள் குந்தவை.
“எதுக்கு… எப்பவா இருந்தாலும் நான் போக தானே வேணம்…” என்றவளின் வாடிய முகமே விருப்பமின்மையை சொன்னது.
“ஹலோ, நீ எங்கயும் போகலை… இப்போதைக்கு என் மேரேஜ் முடியுற வரைக்கும் நீ இங்க இருக்க அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கிருக்கேன்…” குந்தவை சொல்லவும் திகைப்புடன் வானதி நிமிர அவள் கண்ணோடு நோக்கியவள்,  
“அது பர்மனன்ட் ஆனாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை..” என்று சொல்ல புரியாமல் நோக்கியவள், “எது பர்மனன்ட்.. எனக்குப் புரியல…” என்றாள்.
“நீ இங்கயே இருக்கறது தான் பியூட்டி… ஓகே, டைம் ஆச்சு… நான் கிளம்பறேன்…” என்றவள் ஸ்கூட்டி சாவியுடன் கிளம்ப எதிரில் வந்த அருள், “வண்டியை மெதுவா ஓட்டிட்டுப் போ…” என்றவன் அவள் பின்னில் நின்ற வானதியைக் கண்டதும் ஆவலுடன் நோக்க அவனைப் பார்த்திருந்தவள் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மகளை வழியனுப்ப நின்று கொண்டிருந்த சகுந்தலாவின் கண்ணில் இந்தக் காட்சி விழவும் ஆவலுடன் மனம் எதையோ கணக்குப் போடத் தொடங்கியது.
“சகு, நான் கிளம்பறேன்… ஜிஎஸ்டி விஷயமா பதினொரு மணிக்கு ஆடிட்டர் ஆபீஸ்க்கு வர சொல்லிருக்கார்… நீ அங்க போயிட்டு ஆபீஸ் வந்தாப் போதும்…” என்றதும் அருள் தலையாட்டி சாப்பிட செல்ல சுந்தரம் கிளம்பினார்.
“வானதி…” அவர் குரல் கேட்டு அறையிலிருந்து வானதி எட்டிப்பார்க்க, “அருளுக்கு சாப்பிட வை மா… நான் அவரை அனுப்பிட்டு வந்திடறேன்…” என்றவர் வாசலுக்கு செல்ல அவள் அமைதியாய் உணவு மேசைக்கு வந்தாள்.

Advertisement