Advertisement

அத்தியாயம் – 26
பெண் பார்க்கும் வைபவம் இனிதே நடந்து முடிய அனைவரும் சந்தோஷத்துடன் கிளம்பினர். அனைவரிடமும் விடை பெற்ற தேவ் மோகன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த குந்தவையை நோக்கி கண்களாலேயே விடை பெற, மகள் முகத்தில் இருந்த சந்தோஷமே சம்மதத்தை சொல்ல நிறைவுடன் புன்னகைத்தார் சகுந்தலா.
சுந்தரமும், அருளும் அவர்களுடன் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தனர்.
மகளின் அருகே வந்த சுந்தரம், “குந்தவை… எவ்வளவு பெரிய சம்மந்தம்… அவங்க வீட்டு மருமகளாப் போக நீ கொடுத்து வச்சிருக்கணும்… உனக்கு இந்த சம்மந்தத்துல சந்தோஷம் தானே மா…” என்று ஆவலுடன் கேட்க, அப்போது கூட தனக்கு சம்மதமா என்று கேட்காமல் சந்தோஷமா என்று கேட்கும் தந்தையின் மனநிலையைக் கண்டு சிறிது வருத்தம் தோன்றினாலும், சம்மதமாய் தலையாட்டினாள்.
“ம்ம்… பார்த்தியா சகு, என் பொண்ணோட அதிர்ஷ்டத்தை… என் விருப்பத்துக்கு அவ நிச்சயம் சம்மதிப்பான்னு எனக்குத் தெரியும்…” என்றார் பெருமையுடன்.
“ம்ம்… எனக்கும் சந்தோசம் தாங்க…” என்ற சகுந்தலா, “அதென்னமா, கைல எதோ கிப்ட் கவர் போல இருக்கு…” என்றார் மகள் கையை நோக்கி.
“ம்ம்… அவர் கொடுத்தார் மா…” வெட்கத்துடன் குனிந்து கொண்டு சொன்னவள் தனது அறைக்கு சென்றுவிட்டாள். கட்டிலில் விழுந்தவளுக்கு நடந்ததெல்லாம் கனவு போலத் தோன்றியது. அந்த சின்ன கலர் பேப்பர் சுற்றிய பரிசுப் பொருளை முன்னில் வைத்துக் கொண்டவளுக்கு தேவ் குறும்புடன் அவளை நோக்கி சிரிப்பது போல் இருந்தது.
“தேவ்… இருந்தாலும் உனக்கு ரொம்ப கொழுப்பு… என்னை அவ்வளவு டென்ஷன் பண்ணிட்டு கூலா முன்னாடி வந்து நிக்கற… இதுல என்னவா இருக்கும்…” என யோசித்தபடி பிரிக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளது அலைபேசி சிணுங்கி தேவ் மோகனின் எண்ணைக் காட்ட ஆவலுடன் எடுத்து காதில் வைத்தாள்.
“ஹலோ, இப்பதான கிளம்புனிங்க… அதுக்குள்ள என்னவாம்…” சிணுங்கலாய் ஒலித்த அவள் குரலில் நிறைந்திருந்த சந்தோஷத்தை உணர்ந்து கொண்டவன் புன்னகைத்தான்.
“நான் கொடுத்த கிப்ட் பிரிச்சுப் பார்த்தியா…” உற்சாகமாய் ஒலித்தது அவனது குரல்.
“இன்னும் இல்ல… அதுல என்ன இருக்கு…”
“முதல்ல பிரிச்சுப் பாரு… உனக்குப் பிடிச்சிருந்தா எனக்கு கால் பண்ணு…” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
சகுந்தலாவிற்கு எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்க உதவி செய்து கொண்டிருந்த வானதி குந்தவையைத் தேடி வந்தாள். அவள் பரிசுப் பொருளைக் கையில் வைத்தபடி யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் சிரித்தாள்.
“இல்ல, மாடியில் டிஷ்யூம் டிஷ்யூம் ஒண்ணும் நடந்தில்லே… சவுண்டு கேட்டில்லா…” என்றவளை நோக்கி முறைத்தவள்,
“பின்ன, அவன் பண்ணின வேலைக்கு நான் எவ்வளவு டென்ஷன் ஆனேன்… அதை அப்புறம் சொல்லறேன்… முதல்ல இதுல என்ன இருக்கும்னு யோசிச்சுப் பாரேன்…”
“அதில் எந்தா வெடிகுண்டா வச்சிருக்கான் போனது… ஓபன் செய்து நோக்கு…” என்றவளைத் திரும்பிப் பார்த்தவள், “ம்ம்…” என்று எழுந்து அமர்ந்தாள்.
கத்தரிக்கோலை எடுத்து பொறுமையாய் அந்தக் கவர் கிழியாமல் அழகாய் கத்தரித்தாள்.
உள்ளே ஒரு பெட்டி இருக்க ஆவலுடன் துடிக்கும் இதயத் துடிப்பை ரசித்துக் கொண்டே மெல்லத் திறந்தவள், “ஆஆ…” என்று அலறி அதைக் கீழே போட திடுக்கிட்ட வானதியும் அதை நோக்கிவிட்டு பிறகு கலகலவென்று சிரிக்க பச்சை நிறத்தில் பொம்மைப் பாம்பு பாவமாய் கிடந்தது.
“ஆஆ…” தேவ்…” என்று குந்தவை தலையைக் குலுக்கிக் கொள்ள அவளது சத்தம் கேட்டு ஹாலில் இருந்த சகுந்தலாவும் அருளும் ஓடிவந்து எட்டிப் பார்த்தனர்.
“என்னமா, என்னாச்சு… எதுக்கு கத்தின…” கேட்ட சகுந்தலா மகளது பார்வை போகும் இடத்தை நோக்க முதலில் அதிர்ந்து பிறகு சிரித்தார்.
“அட, மாப்பிள்ளை இதைத்தான் கிப்டா கொடுத்தாரா… விளையாட்டுப் பிள்ளை…” என்றதும் முகத்தை சுளித்தாள். சிரிப்புடன் அந்தப் பெட்டியைக் கையிலெடுத்த வானதி, “குந்தவை… இதில் ஏதோ சாவி இருக்கு…” என்று சொல்ல,
“ஒருவேளை, அந்த கீ கொடுத்தா இந்தப் பாம்பு வந்து கடிக்குமா இருக்கும்…” என்றாள் எரிச்சலுடன்.
“எங்கே…” என்ற அருள் வானதியிடம் இருந்து அதை வாங்கி “வண்டி சாவி போல இருக்கு…” என்று நோக்க, அந்த சாவியில் ஒரு சின்ன பேப்பர் சுத்தப்பட்டிருந்ததைக் கண்டதும் எடுத்துப் பார்க்கையில், “வாசலுக்கு வரவும்…” என்று எழுதி இருந்தது.
“குந்தவை, வாசலுக்கு வர சொல்லி எழுதி இருக்கு… அம்மா, உன் போலீஸ் மாப்பிள்ளை ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஆளுதான் போலருக்கு…” என்று சிரித்தவன் வாசலுக்கு செல்ல மற்றவர்களும் அவன் பின்னில் தொடர்ந்தனர்.
அவர்கள் வீட்டுக்கு வெளியே புத்தம் புதிய பிங்க் வண்ண ஸ்கூட்டி பளபளப்புடன் நின்றது. அதே பிங்க் நிறத்தில் ஒரு ஹெல்மெட்டும் மாட்டி வைத்திருக்க அதைக் கண்ட குந்தவை திகைப்புடன் வாயைப் பிளந்தாள்.
“வாவ்… எனக்குப் பிடிச்ச பிங்க் கலர் ஸ்கூட்டி… இதான் தேவ் கிப்ட்டா…” சந்தோஷத்துடன் கூறியவள் ஆவலுடன் அண்ணனின் கையில் இருந்த சாவியைப் பறித்துக் கொண்டு வண்டிக்கு சென்று சாவியைக் கொடுத்து ஸ்டார்ட் செய்ய அனைவரும் சந்தோஷமாய் பார்த்து நின்றனர்.
“வானதி, வா… ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்…” என்றவள் அவளையும் பின்னில் இருத்தி அந்தத் தெருவை இரண்டு முறை வலம் வந்த பிறகே வீட்டுக்குள் நுழைந்தாள். மனதின் பூரிப்பு முகத்திலும் தெரிந்தது.
“குந்தவை, மாப்பிள்ளை உனக்குப் பிடிச்ச பரிசா கொடுத்து அசத்திட்டாரே…” என்று சகுந்தலா சொல்லிக் கொண்டிருக்க பாத்ரூமில் இருந்து வந்த சுந்தரமும் அசந்து போனார்.
“ம்ம்… நான் காலேஜ் முடிஞ்சு இவளுக்கு வண்டி வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன்… மாப்பிள்ளையே வாங்கிக் கொடுத்துட்டாரா…” என்று சந்தோஷிக்க,
“ஹூக்கும்… நீங்க அப்படியே வாங்கிக் கொடுத்துட்டாலும்…” என்று மனதில் நினைத்தபடியே அன்னையிடம் வந்தவள், “அம்மா,  அவருக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்…” என்று அறைக்கு சென்று அலைபேசியை எடுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தாள்.
அவனுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்தவன், “என்ன டார்லிங், பரிசு பிடிச்சிருக்கா…” என்று கேட்க அவள் அமைதியாய் இருந்தாள்.
“என்னமா, உனக்குப் பிடிக்கலையா… அடிக்கடி பஸ்ல போயி வரும்போது நெரிசல்ல கஷ்டப்படறியேன்னு தான் வண்டி வாங்கலாம்னு யோசிச்சேன்…… நீ பிங்க் கலர் டிரஸ் அதிகமா யூஸ் பண்ணறதைப் பார்த்து உனக்கு பிங்க் பிடிக்கும்னு இதை செலக்ட் பண்ணேன்… பிடிக்கலையா…”  அவனது குரல் ஏமாற்றமாய் ஒலிக்க, “ப்ச்… பிடிக்கலன்னு யாரு சொன்னா… ரொம்பப் பிடிச்சிருக்கு… ஸ்கூட்டியை விட நான் கஷ்டப் படக் கூடாதுன்னு எனக்கு பிடிச்ச கலர்ல ஸ்கூட்டி வாங்கித் தந்த போலீஸ்காரரை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு…”
அவள் சொன்னதில் முகம் மலர்ந்தவன், “லவ் யூ டார்லிங்… எனக்கும் ரொம்ப ஹாப்பியா இருக்கு…” என்றான்.
“ம்ம்… நானும் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்… நம்ம கல்யாணத்துல என் பெரிய அண்ணன் கலந்துக்க அப்பாகிட்ட மாமா பேசி பர்மிஷன் வாங்கிக் கொடுத்துட்டார்னு அம்மா சொன்னாங்க… பாவம் அண்ணா, அவரைப் பார்த்து நாலு வருஷத்துக்கு மேலாச்சு…” என்றாள் வருத்தத்துடன்.
“ம்ம்… ஆமா, ஆதிக்கும், உங்க வீட்டுக்கும் என்ன பிரச்சனை… நான் ஹாஸ்டல்ல இருந்தப்ப ஏதோ பிரச்சனைல ஆதி,  அங்கிள்கிட்ட கோவிச்சுகிட்டு வீட்டை விட்டு வெளிநாடு போயிட்டதா அம்மா சொன்னது நினைவு இருக்கு… அப்புறம் அதைப் பத்தி நான் சரியா கேட்டுக்கலை…” என்றான் தேவ்.
“ம்ம்… அது ஒரு பெரிய கதை… அப்புறம் சொல்லறேன்… இப்ப எல்லாரும் வெளிய இருக்காங்க… நான் வச்சிடறேன்…” என்றவள் பதிலை எதிர்பார்க்காமல் கட் பண்ணி விட்டாள்.
இரவு உணவு முடிந்து அனைவரும் ஒருவித சந்தோஷ மனநிலையிலேயே உறங்க சென்றனர். இன்னும் நடந்து முடிந்த நிகழ்ச்சியின் பிரமிப்பில் இருந்து குந்தவை வெளிவராமல் இருக்க வானதி அவளைப் பிடித்துக் கொண்டாள்.
“குந்தவை சத்யம் பரயு… போலீஸ் நின்டடுத்து சரண்டர் ஆயோ… அல்லெங்கில் நீ போலீஸ் கிட்ட சரண்டர் ஆயிட்டியா… மாடில என்ன நடந்துச்சு…”
“ஹூம்… மாடில என்ன நடந்துச்சுன்னா…” குறும்புடன் சிரித்தவள், “முதல்ல நான் நடந்தேன்… அடுத்து எனக்குப் பின்னாடி அவர் நடந்தார்… அப்புறம் இந்த உலகத்தில் இன்னும் ஏதேதோ நடந்துச்சு…” என்றவள் மீது தலையணையைத் தூக்கி எறிந்தாள் வானதி.
“ஹூம்… போ… பரஞ்சில்லெங்கில் வேண்டா…”
“ஹஹா… சரி கோச்சுக்காத, சொல்லறேன்…” குந்தவை இறங்கி வரவும் வானதி ஆவலுடன் அமர்ந்தாள். குந்தவையின் கண்கள் காதலில் மிதக்க ஒருவிதப் பரவசத்துடன் சொல்லத் தொடங்கினாள்.
“தேவ் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும் முதல்ல எனக்கு கோபம் தான் வந்துச்சு… என்னை அவ்வளவு டென்ஷன் பண்ணதும் இல்லாம எல்லாரும் ஹால்ல இருக்கும்போது இங்க வந்து எங்கிட்டப் பேசிட்டுப் போனான்… நான் வேணும்னா எல்லார் முன்னாடியும் லவ் பண்ணறேன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடட்டுமான்னு கேட்டான்… எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசில நாந்தான் மாப்பிள்ளைனு வந்து நின்னா எப்படி இருக்கும்…”
“எப்படி இருக்கி… ஓங்கி அறையலாமா தான் இருக்கி…”
“ம்ம்… அந்த இருக்கியே தான்… கோபமா அவனை மாடிக்கு அழைச்சிட்டுப் போனேனா…”
“ம்ம்… போயி அறைஞ்சிட்டியா…” வானதி ஆர்வத்துடன் கேட்க, “ப்ச்… எங்க…” என்றவள் நடந்ததை சொல்லத் தொடங்கினாள்.
மாடிக்குப் போனதும் அவள் கையைப் பற்றிக் கொண்ட தேவ், “டார்லிங்… எல்லாம் ஒரு திரில்லுக்கு தான் பண்ணேன்… நீ ரொம்ப டென்ஷனா இருப்பேன்னு தெரியும்… உனக்கு கோபம் இருந்தா யாருக்கும் தெரியாம என்னை நாலு அடி வேணும்னா அடிச்சுக்க… என்ன இருந்தாலும் நான் ஒரு ஐபிஎஸ்… எல்லார் முன்னாடியும் அடிச்சிடாத…” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கேட்க, முறைத்தாள்.
“அதுக்காக எதுல விளையாடறதுன்னு இல்லியா… இப்படியா என்னை டென்ஷன் பண்ணுவிங்க…” என்று அவனை முதுகில் அடிக்க அவள் கையைப் பற்றிக் கொண்டவன்,
“சாரி பேபி… இனி இப்படிப் பண்ண மாட்டேன்…” என்று கூறி அவள் கரத்தில் முத்தமிட திகைத்துப் போனவள், “ஏய், கையை விடு…” என்று திணறியவளை விடாமல் தன்னிடம் இழுத்துக் கொண்டான் தேவ்.
அவனது வலிய கைகளுக்குள் முதலில் திணறினாலும் இவன் எனக்கானவன் என்ற எண்ணம் மனதுக்குள் உரிமைக் குரல் கொடுக்க அமைதியாய் அவன் நெஞ்சில் சாய்ந்தவளின் காதுகளில் “டார்லிங்… ஐ லவ் யூ…” என்று அவனது இதழ்கள் உரச கோபம் மறந்து அவனிடமே சரணடைந்து அவனை இறுக்கிக் கொண்டாள்.
அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டவன், “நான் இப்ப எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா… எனக்கு துணையா வரப் போறவ எப்படி இருக்கணும்னு நான் எதிர்பார்த்தேனோ அதுல கொஞ்சம் கூட மாற்றமில்லாம நீ இருக்க… பெரியவங்க இந்த கல்யாணத்தை முடிவு பண்ணாலும் நமக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கணும்னு ஆசைப்பட்டேன்… அதனால தான் யாரோ ஒருவனா உனக்கு அறிமுகமாகி உன் மனசுல இடம் பிடிச்சேன்… உனக்கும் இப்ப ஹாப்பி தானே…” என்று கேட்டவனின் நெஞ்சில் செல்லமாய் குத்தியவள், “ம்ம்… ஹாப்பி ஆகாமலா இப்படி நின்னுட்டு இருக்காங்க…” என்று சொல்ல புன்னகையுடன் இன்னும் அவளை இறுக்கிக் கொண்டான். “சரி, எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க… கீழ போகலாம்…” சொன்னவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு விலகினான் தேவ்.
“அப்புறம் ரெண்டு பேரும் கீழ வந்துட்டோம்… அவ்ளோதான்…” குந்தவை சொல்லவும், “ம்ம்… உன் தேவ் சரியான கேடி தன்னே… ஒரு ஸ்டன்ட் சீனை இங்கனே ரொமான்ஸ் சீனாய் மாற்றியல்லோ… எனிவே, நின்டே மனசில் உள்ள ஆளு தன்ன நின்னே கெட்டான் போனதில் சந்தோஷம்…” என்றாள்.
“வானதி, உன்னை ஒண்ணு கேட்டா உண்மைய சொல்லணும், சொல்லுவியா…”
“என்ன சொல்லணும்…” கேட்டுக் கொண்டே அவள் அருகில் படுத்துக் கொண்டாள் வானதி.
“நீ யாரையாச்சும் லவ் பண்ணி இருக்கியா…” அவளது கேள்வியில் அதிர்ந்தவள் எழுந்து அமர, “ஏய், எதுக்கு இவ்ளோ ஷாக்… ஆமா, இல்லன்னு சொன்னா போதும்…”
“எ..எந்தினா இப்ப இங்கனே சோதிக்கனது…” என்ற வானதியை நோக்கி சிரித்தவள் “உண்மையை சொல்லு…” என்றாள்.
“இ..இல்ல… எனிக்கு அங்கனே யாரோடும் லவ் தோணியிட்டு இல்லா…” என்ற வானதி முகத்தை துடைத்துக் கொண்டாள்.
“ஓ… ஓகே… ஓகே… அதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டம்…”
“ப்ச்… இப்ப எந்தினா என்னோடு இங்கனே ஒரு சோத்யம்…”
“அது ஒண்ணுமில்ல, வீட்ல கொஞ்ச நாளா ஒரு லவ் ஸ்மெல் வருதோன்னு என் மனசுல தோணுச்சு… அதான் கேட்டேன்…” என்றாள் அவள்.
“ம்ம்… அது நீ லவ் செய்யண ஸ்மெல் ஆயிரிக்கும்…”
“இல்ல வானதி, என் அண்ணன் அருள் மாமுனிவர் இருக்காரே…” அவள் சொல்லவும் வானதிக்குப் பதறியது. “அவர் பிரம்மச்சரிய தவத்தை எந்த மேனகையோ கலைக்க டிரை பண்ணறான்னு நினைக்கறேன்…” என்றவள் சிரிக்க வானதிக்கு அந்த நேரத்திலும் வேர்த்தது.
“அவர் பார்வையும், நடவடிக்கையும் எல்லாம் ஐயா யாரு கிட்டயோ பிளாக் ஆகிட்டாரோன்னு தோணுது… சரி, எனக்கு டயர்டா இருக்கு… நான் தூங்கப் போறேன்…” என்றவள் போர்வையை இழுத்து மூடிப் படுத்துக் கொள்ள வானதிக்கு தூக்கம் என்ற வார்த்தையே மறந்து போக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ஒருவேளை, குந்தவைக்கு சந்தேகம் வந்திருச்சோ… இந்த அருள் என்னை அப்பப்போ உத்து உத்துப் பார்க்கறதை என்னைப் போல இவளும் கவனிச்சிருப்பாளோ… அதெப்படி, ஹால்ல அத்தன பேரு சுத்தியும் உக்கார்ந்திருக்கும் போது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம என்னைப் பார்த்து வச்சானே… அவன் என்னை லவ் பண்ணறது குந்தவைக்குத் தெரிஞ்சா என்னாகும்…” மனம் யோசிக்க, நினைவுகள் அக்காவிடம் சென்றது. “எனக்கு முன்னாடி காதலிச்ச அக்காவோட காதலே கேள்விக்குறியா இருக்கு… இதுல நானும் தெரிஞ்சே இந்தக் காதல்ல விழணுமா…” என தாய் பாஷையில் யோசித்துத் தவித்தது.
“வானதி, அண்ணன் ஒரு மாதிரி டிஸ்டர்பா இருக்கான்னு தான் சொன்னேன்… அவன் தவத்தைக் கலைக்க வந்த மேனகை நீதான்னு நான் சொல்லவே இல்லையே… பேசாம படுத்துத் தூங்கு…” போர்வைக்குள் இருந்து குந்தவையின் குரல் கேட்க அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“கு..குந்தவை, நீ எந்தா பரயனது…”
“ஏன், தமிழ்தான் உனக்கு நல்லாப் புரியுமே…”
“அதல்லா, எந்தினு இங்கனே ஒக்கப் பரயனது…” என்றதும் போர்வையை விலக்கி எழுந்தவள், “உண்மையை சொல்லு… நீ அண்ணாவை லவ் பண்ணறியா…” என்றதும் அதிர்ந்தாள்.
“நான் கூட சரியா கவனிக்கலை… ஆனா தேவ் தான் சொன்னான்… உங்களுக்குள்ள ஏதோ சம்திங் இருக்குன்னு… ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிக்கடி  பார்த்துக்கறீங்க… ஆனா அதை நீங்க உணரலைன்னு தேவ் சொன்னப்ப எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு… அப்புறம் யோசிச்சப்ப தான் புரிஞ்சது… அண்ணாகிட்ட இப்ப நிறைய மாற்றம் இருக்கு… அவன் ரூம்ல மலையாளம் படிக்க, புக் எல்லாம் பார்த்தேன்… நீ முதல்ல இங்கே தங்க வந்தப்ப ஆ ஊன்னு கத்தினவன் இப்ப உன்னோட சாதாரணமாப் பேசிப் பழகறான்… அதான் கேக்கறேன்… நான் உங்க லவ்வை நிச்சயம் எதிர்க்க மாட்டேன்… உங்களுக்கு உதவி செய்ய தான் கேக்கறேன்… ஏன்னா, எங்க வீட்டுல லவ் மேரேஜ் அவ்வளவு சுலபமில்லை…” அவள் சொன்னதைக் கேட்டதும் வானதிக்கு கண்ணீர் திரண்டு நின்றது.
“கு… குந்தவை… அங்கனே எதும் இல்லா…”
“போ… நீ ஒத்துக்கலைனாலும் பரவால்ல… ஆனா பொய் சொல்லாத…” என்றவள் திரும்பிப் படுத்துக் கொள்ள வானதி, “குந்தவை… ஞங்கள் லவ் எல்லாம் பண்ணல… அதைப் பத்தி பேசியதும் இல்லா… வெறுதே நிங்கள்க்கு தோணியதா…” என்றவள் அமைதியாய் படுத்துக் கொண்டாள்.
“ம்ம்.. இப்படில்லாம் கேட்டா இவ சொல்ல மாட்டா… அண்ணா கிட்டயே நாளைக்கு கேட்டுட வேண்டியது தான்…” என நினைத்துக் கொண்ட குந்தவையும் அமைதியாய் யோசித்தாள். வானதிக்கு அதிர்ச்சி கொடுத்து உறக்கத்தைப் போக்கிவிட்டு குந்தவை உறங்கத் தொடங்கினாள்.
உன் வாழ்க்கைக்கான
வழிகாட்டலோ
வருத்தங்களுக்கான
வடிகால்களோ என்னிடம்
இல்லாமலிருக்கலாம்…
ஆனாலும் உன் நினைவுகள்
களைப்படைகையில்
என்னில் சற்று
இளைப்பாறினால்
இதம் தருவேன் நான்…

Advertisement